வியாழன், 17 ஜூலை, 2025

தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வழங்கப்பட்ட பல்வேறு பொருள்கள்

தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் முன்னிலையில் எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தங்கம் இதர பொருள்கள் வழங்கப்பட்டன

ஆசிரியருக்கு திருச்செங்கோட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. இதில் 103 வயது நிறைந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் ஆத்தூர் தங்கவேலு, பொத்தனூர் க.சண்முகம் போன்றோர் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். ஆசிரியர் அவர்களுக்கு இவ்வாறு எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தானியம், தங்கம் உள்ளிட்ட இதர பொருள்களை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், பெரியார் உலகத்திற்கும் வழங்கிவிடுவார்.

தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்றும், என்றும் ஆசிரியர் பயணிக்கிறார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை வெள்ளி

கட்டுரை, ஞாயிறு மலர்

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம்

துலாபாரம் கண்ட தொண்டு பழம்
தந்தை பெரியார்!!

வணக்கம் நண்பர்களே!

பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் அவர்களுக்கு அவரது தொண்டர்கள் அன்பால் பாசத்தால் பகுத்தறிவினால் அவருக்கு வழங்கிய அன்பு பரிசுகள்….

3.11.57 தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி

24.9.63 அய்யாவின் 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடியில் எடைக்கு எடை நவதானியங்கள்.

5.10.63 தஞ்சை சில்லறை வெற்றிலை வியாபாரிகளால் 35 கவுளி வெற்றிலை, ஆறு இலைக்கட்டு வழங்கப்பட்டது.

24.09.63 அன்று புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய் துவரை, கொத்துக் கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயிறு கோதுமை, அரிசி, ரூபாய் 21 கொண்ட பண முடிப்பு, கழக கொடி போட்ட 3/4 பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, அரிசி, உளுந்து, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச் சோளம், எருமை மாடு,  1000 செங்கல்,  விறகு 5 எடை (லோடு).

10.6.64 பெருவளப்பூரில் எடைக்கு எடை மிளகாய் .

11.9.64 எடப்பாடியில் எடைக்கு எடை எண்ணெய்.

3.10.64. மஞ்சள் மாநகராம் நமது ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள்

17.10.64 திருச்செங்கோட்டில் எடைக்கு எடை  துவரம்பருப்பு .

21.10.64 திருவள்ளூர் எடைக்கு எடை காய்கறிகள் அன்பளிப்பு

25.10.64. கரூரில் பெரியாரின்  எடைக்கு ஒன்றரை பங்கு பெட்சீட்

15.11.64 பெங்களூரில் எடைக்கு எடை திராட்சைப்பழம்

16.11.04 பெங்களூரில் எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள்

1.12.64 திருவாரூரில் எடைக்கு எடை அரிசி

10.12.64 பெரியாரின் எடைக்கு நிகராக பால் வழங்கப்பட்டது

13.12.64 திருப்பத்தூர் எடைக்கு எடை இரண்டு காசு நாணயங்கள்

14.12.64 திருக்கழுக்குன்றம் எடைக்கு எடை சர்க்கரை அன்பளிப்பு

10.1.65 குளித்தலையில் எடைக்கு எடை பெட்ரோல் வழங்கப்பட்டது

16.1.65 சிதம்பரத்தில் எடைக்கு எடை காப்பிக் கொட்டை வழங்குதல்

18.1.65 பண்ருட்டியில் எடைக்கு எடை பிஸ்கட் வழங்கப்பட்டது

19.1.65 அரசாங்க நல்லூரில் எடைக்கு எடை மணிலா (பாமாயில்) எண்ணெய் வழங்கப்பட்டது

21.1.65 குடியாத்தத்தில் எடைக்கு எடை கைத்தறி நூல் வழங்கப்பட்டது.

22.1.65 செங்கம் –  எடைக்கு எடை நெல் வழங்கியது.

23.1.65 அனந்தபுரம் எடைக்கு எடை நெல்

1.5.65 வள்ளியூரில் பெரியாரின் எடைக்கு இரு மடங்கு வாழைக்காய்.

2.5.65 தூத்துக்குடி எடைக்கு எடை பருப்பு, மற்றும் எடைக்கு எடை உப்பு.

16.2.70 அலங்காநல்லூர் எடைக்கு எடை சர்க்கரை பரிசளிக்கப் பட்டது.

21.9.70 பெண்ணாடம் எடைக்கு எடை நெல் வெங்காயம் உப்பு வழங்கப்பட்டது

8.7.72 இளந்தங்குழி – எடைக்கு எடை நெல் வழங்கப்பட்டது

தொடர்ந்து பேசுவோம். நன்றி வணக்கம்

அன்புடன்,

– பெரியசாமி பி என் எம்.

வெள்ளி, 23 மே, 2025

எது உண்மை மதம்?- தந்தை பெரியார்

 

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை, தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

இன்றைய இந்தக் கூட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு போற்றற்குரிய புனிதமான நாளில் கூட்டப்பட்டதாகும். உலகத்தில் உள்ள சுமார் 60 கோடி மக்களுக்கு மேலாகவே மத சம்பந்தமான வழிகாட்டியாயும், ஒப்பற்ற மத குருவாகவும் உள்ள ஒரு பேரறிஞர், பொதுநலத் தியாகி, நல்லதொரு தீர்க்கதரிசி என்று கொண்டாடப்பட்ட ஓர் உண்மைப் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்ட நாளாகும்.

இப்படிப்பட்ட இந்த மத சம்பந்தமான நாளில் அந்த மதத்தை சேர்ந்தவனல்லாதவன் என்றும், பொதுவாகவே மதங்களுக் கெல்லாமுமே விரோதி என்றும், கடவுளையே மறுப்பவன் என்றும் பலரால் சொல்லப்படுகிற என்னை அழைப்பதும், இந்தக் கொண்டாட்ட விழாவில் பங்கு கொண்டு மக்களுக்குச் சொற்பொழிவாற்ற விரும்புவதுமான காரியத்தைக்குறித்து எவரும் அதிசயப்படாமல் இருக்கமுடியாது;

இந்த அதிசயப்படத்தக்க காரியத்திற்கு உண்டான பெருமை யாருக்குச் சேரும் என்று பார்த்தால் அது இஸ்லாத்துக்கே சேரும்.
மத சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக்கொண்டால் இஸ்லாம் மதம் என்பது தான் தாராளமான நோக்கத்தைக் கொண்டு இருக்கிறது. ஒரு மதம் என்பது மக்களுக்குள் என்ன கருத்தை உண்டாக்க வேண்டுமோ அந்தக் கருத்தையும் மக்களுக்கு என்ன தொண்டு செய்யவேண்டுமோ அந்தத் தொண்டையும் ஒரு நல்ல அளவுக்கு உண்டாக்கி இருக்கிறது.

மனிதனுக்கு மட்டும் மதம் ஏன்?
தெளிவுபடச் சொல்லவேண்டுமானால் மதம் என்பது மனித ஜீவன்களுக்குத்தான் இருந்து வருகின்றது. உலகில் எத்தனையோவித ஜீவராசிகள் இருக்கும்போது மனிதனுக்கு மாத்திரம் ஏன் மதம்? என்றால் மனிதனுக்கு மதம் வேண்டி இருக்கிறது என்று சொல்லலாம். மனிதன் கூடிவாழும் பிராணி, மனிதன் அதிகச் சிந்தனையாளி என்பதோடு அதற்கேற்ற பகுத்தறிவு அதிகம் உடையவன் ஆதலால், மனித சமுதாய கூட்டுவாழ்வுக்கு ஒரு நியதி – திட்டம் – விதி கொள்கை என்பதான ஏதாவது ஒன்று தேவை இருக்கிறது. அதைத்தான் மக்கள் எப்படியோ மதம் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் மதம் என்பதை மார்க்கம் என்றுதான் (இஸ்லாம் மார்க்கம்) அழைக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கிறார்கள். சைவ – வைணவ மார்க்க வினா விடை என்றுதான் நூல்களுக்குப் பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழர் பெரிதும் மதத்தைச் சமயம் என்றே சொல்லுகிறார்கள். ஆரியமும் வேதமார்க்கம் என்றுதான் சொல்லப்படுகின்றது. எனவே மதம் என்கின்ற சொல் எந்தமொழி? எப்படி வந்தது? அதற்கு மூல இடம் எது? என்பனவாகிய ஒன்றும் பெரும்பாலோருக்குப் புரிவதற்கில்லாத சொல்லாகவே இருக்கிறது.
ஆனால் சிலர் மதம் என்பது “கடவுளையும் மனிதனையும் சம்பந்தப்படுத்துவது; கடவுளை மனிதன் அடையச் செய்வது” என்றெல்லாம் என்ன என்னவோ கட்டுக் கட்டுகிறார்கள். இது மகா பயித்தியக்காரத்தனம் அல்லது பித்தலாட்டம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் மாத்திரம் சம்பந்தம் ஏற்படுவானேன்? ஆடு, மாடு, நாய், கழுதை, குதிரை, ஈ, எறும்பு, தேள்,பாம்பு, மீன், பூச்சி, புழு இவைகளுக்குக் கடவுள் சம்பந்தம் வேண்டாமா? கடவுளை அடையவேண்டாமா? அவை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை அல்லவா? அல்லது மதமில்லாமலே கடவுளை அடையத்தக்க அவ்வளவு அறிவுள்ளவைகளா? மனிதனுக்கு மாத்திரம் ஏன் இந்தத்தொல்லை? என்று நன்றாய்ச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனுக்கு மதம் மற்ற மனிதனிடம் நடந்துகொள்ள வேண்டிய தன்மைக்கு வழிகாட்டுவது, கொள்கை விதிப்பது ஆகியவற்றிற்கே மதம் என்பதும் நன்றாய் விளங்கும்.அதை விட்டுவிட்டு, மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை அலட்சியப்படுத்திவிட்டு, தனக்கும் கடவுளுக்கும் மாத்திரம் என்றும், தன்னுடைய நலனுக்கு மாத்திரமே அதாவது, தான் மோட்சம் போகவும், தான் நல்லகதி அடையவும், தனக்கு நல்ல பிறவி, நல்ல செல்வம் ஏற்படவும் என்றும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இது மாயா உலகம், இதுபொய்யான உலகம், இது அநித்தியமான உலகம் இதைப்பற்றிக் கவலை இல்லை; மெய்யான நித்தியமான பயனளிக்கக்கூடிய உலகம் வேறு இருக்கிறது; அதில் மேனிலை அடையவே மனிதன் பிறக்கிறான், இருக்கிறான், இறக்கிறான் என்ற கற்பனைகளைப் புகுத்தி இதற்குஆக இயக்கத்தில் என்ன காரியத்தையானாலும் செய்து பரத்தில் இடம் பிடித்து வை என்கின்ற மதம், மடமையும் கொடுமையும், பித்தலாட்டமும் நிறைந்த மதம் என்று சொல்லுவேன். அப்படி நான் சொல்லுவதால்தான் என்னை மத விரோதி என்று சில மதவாதிகள் சொல்லுகிறார்கள். மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று நான் சொல்லுவதும் இப்படிப்பட்ட மதங்களைத்தானே ஒழிய மனிதனிடம் மனிதன் அன்பாய், உபகாரியாய், சமுதாயத்திற்கு ஏற்ற ஒழுக்கமாய், நாணயமாய், பிறர் நலத்தில் பற்றுள்ள அன்பனாய், மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாதவனாய் நடந்துகொள்ளும் தன்மையை மதம் என்றால் அதைப் போற்றுகிறவனேயாவேன். நானும் கூடுமானவரை அப்படிப்பட்ட மதவாதியேயாவேன். ஆனால், இன்று மதங்கள் அப்படிப் பெரிதும் காணப்படுகின்றனவா? நீங்கள் தனித்தனியே மதவாதிகள் நடத்தையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஒழிக்கப்பட வேண்டாமா?
முதலாவதாக,
என்பேரில் சுமத்தப்பட்ட (இந்து மதம் என்னும்) ஆரிய மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நான் மேலே சொன்ன குணங்களில் எது காணப்படுகிறது? அல்லது காரியத்தில் நடைபெறுகிறது? ஆரிய மதத்தில் பிராமணன், சூத்திரன், சண்டாளன், தேவடியாள் உண்டு. ஆரிய மதத்தில் மோட்சத்திற்காகத் திருடலாம்; விபசாரித்தனம் செய்யலாம், கொலை செய்யலாம், பாட்டாளி மக்களை வஞ்சித்து அவர்கள் உழைப்பைக் கொள்ளை கொள்ளலாம், கொடுமைப்படுத்தலாம். பிறவி இழிவு கற்பித்து, மக்களைப் பிரித்துவைத்துச் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தலாம். இன்னும் எத்தனையோ இழிவு கொடுமை அக்கிரமம் செய்யலாம். இவை மததர்ம சாஸ்திரங்களின்படி என்றும் சொல்லலாம். இது எப்படி மக்களுக்குப் பயன்படும்படியாக, வாழ்க்கைக்கு நலந்தரும்படியாக ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்பட்ட மதமாகும் என்றும் இப்படிப்பட்ட மதங்கள் ஒழிக்கப்படவேண்டாமா? என்றும் மதவாதிகளைக் கேட்கின்றேன். ஆகவே இப்போ தாவது நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் ஏன் மதம் ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பதை.
மதம் மக்களிடம் அன்பு செலுத்த என்று இருக்குமானால் இன்று இந்தநாடு இமயமலைமுதல் குமரிவரை குழப்பத்தில், கொள்ளையில், கொலையில், படுநாசவேலையில் அல்லல்படுவதின் காரணம் என்ன? அரசியல் குழப்பம் என்று சொல்லி மக்களை வஞ்சித்து மதவெறியைக் கிளப்பிவிட்டு, மதத்திற்காகவென்று, மதவெறி கொண்டு, போராடிக்கொள்வதல்லாமல் வேறு எதற்காக என்று யாராவது சொல்லமுடியுமா?
சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இன்றைய கலவரம் ஆரியத்துக்கும் ஆரியமல்லாததற்கும் என்பதல்லாமல் வேறு என்ன? தெளிவாய்ச்சொல்கிறேன், இந்து – முஸ்லிம் என்றால் என்ன? ஆரியர்-அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? “பிராமணர்-பிராமணரல்லாதார்’ அல்லது ஆரியர் – திராவிடர் என்றால் ஆரியர் அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? ஜாதி இந்துக்கள், ஷெடியூல் வகுப்பார் சண்டை என்றால் என்ன? ஆரியமதக் கொள்கைப்படி மேல் ஜாதியார் ஆரியமதக் கொள்கை ஏற்றுக்கொள்ளாத கீழ் ஜாதியார் எனப்படும் ஆரியரல்லாதார் என்பதல்லாமல் வேறு என்ன? இதுபோலவே சீக்கியர் கூப்பாட்டுக்கும், பார்சி கூப்பாட்டுக்கும், கிறிஸ்தவர் கூப்பாட்டுக்கும், ஆரிய-அனாரிய மதச்சண்டை என்பதல்லாமல் வேறு என்ன? இந்த இலட்சணத்தில் இவர்கள் ஒவ்வொருவரும் சண்டையிடக் காரணம் அவரவர்கள் மதப்(கலாச்சாரத்தின்)படி நாடு ஆளப்படவேண்டும் என்பதுதானே முன்னணியில் இருக்கிறது?

கலகத்தை கிளப்புவானேன்?
காங்கிரஸ் ராமராஜ்யப்படி, முஸ்லிம் லீக் இஸ்லாம் போதனைப்படி, சீக்சிரந்தாசாஹிப்படி, திராவிடர் கழகம், ஷெடியூல்டு வகுப்பு மனித தர்ம (சமதர்ம)ப்படி திராவிட கலாச்சாரக் கொள்கைப்படி, கிறிஸ்தவர் பைபிள்படி அந்தந்த மதத்தினரே அந்தந்த மதத் தத்துவத்தின்படி ஆளவேண்டும் என்று சொல்லித்தானே கலகம் கிளப்பப் படுகின்றது?

ஆகவே, அரசியல் போராட்டத்துக்கும் சமுதாயப் போராட்டத்திற்கும் மதம் காரணமல்லாமல் திட்டம் காரணம் என்று எதைச் சொல்லமுடியும்? திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை மதம் காரணமாக முஸ்லிம் களிடத்தில் யாதொரு தகராறும் இல்லை என்று சொல் லுவேன். இஸ்லாத்துக்கும் திராவிடத்துவத்திற்கும் வேஷம்தான் பேதமே தவிர மதத்துவத்தில் பேதமில்லை. திராவிடர் கழகம் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை. இஸ்லாமும் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை.இரு மார்க்கங்களும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு பேதம் இல்லை என்கின்றன. நம் திராவிடநாட்டை பொறுத்தவரை பேசப்போனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், திராவிடர் ஆகிய முப்பிரிவாரும் ஒரே இனத்தவர், ஒரே வழிவந்தவர்கள் என்று சொல்லலாம், இப்படிப்பட்ட நாட்டில் இன்று குழப்பமும், கொள்ளையும், கொலையும், கொடுமையும் நடைபெறவும் நடக்குமோ என்று பயப்படவுமான நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் ஆரிய மதத் தூண்டுதல் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கமுடியும்? ஒரு இஸ்லாம் திராவிடனும், கிறிஸ்துவ திராவிடனும், முஸ்லிம் கிறிஸ்துவ அல்லாத திராவிடனும்; இந்தநாட்டு இனத்தவன், இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நாட்டில் வாழ்கிறவன், இந்த நாட்டில் சாகிறவன், இந்த நாட்டில் தேடிய பொருளையும், வேறு நாட்டில் தேடிய பொருளையும் இந்த நாட்டிலேயே வைத்துவிட்டுச் சாகிறவன். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த நாட்டின் பூரண சுதந்திரத்திற்கோ விடுதலைக்கோ விரோதமாக இருக்கவும் இந்தநாட்டு மக்களை வெறுக்கவும் என்ன காரணம் இருக்கமுடியும்? ஆரிய மதத்தில், உழைக்க ஒரு ஜாதி, ஊரார் உழைப்பிலேயே உண்டு பாடுபடாமல் வாழ ஒரு ஜாதி என்று ஏற்பட்டுவிட்டதால் இந்தத் தத்துவத்துக்கு மாறான மதங்களோடு சதா போர் தொடுத்துக் கலகமூட்டித் தங்கள் நலனைப் பாதுகாக்கவேண்டி இருப்பதால் இப்படிப்பட்ட சமுதாய சமதர்ம மக்களும் மதமும் 100-க்கு 95 பேர் இருக்கும் நாட்டில் இந்த மதப்போராட்டக் கொடுமை இருந்து வருகிறது.

மதம் மக்களுக்குத் தொண்டு செய்ய, அன்பு செலுத்த ஏற்பட்டது என்றும், மதம் மக்களை ஒன்று சேர்த்து சமத்துவமாய் நடத்தவே ஒழிய, வேறுபடுத்தி மேல்கீழ் பிறப்பாய், வகுப்பாய் நடத்த அல்ல என்றும் ஆரிய மதம் உணருமானால் இன்று இந்த நாட்டில் கலவரத்துக்கு, மதப்போராட்டத்திற்கு இடமே இருக்காது. நானும் பார்க்கிறேன் “மதத்துக்காக உயிர்விடுங்கள்! மதத்தைக் காப்பாற்றுங்கள்! மதத்தைப் பழிக்காதீர்கள்!” என்றெல்லாம் காட்டுமிராண்டிப் பிரசாரம் தான் மதத்தின்பேரால் மகான்கள் என்பவர்கள் எல்லாம் பிரசாரம் செய்கிறார்களே தவிர இந்தக் கொள்கைகளால்தான் மதம், காப்பாற்றப்படமுடியும் என்று கருதப்படுகின்றதே தவிர மதத்தில் அன்பு, உபச்சாரம், மற்றவன் மனம் நோகாமல் நடத்தல் ஆகிய காரியங்கள் எங்கே கற்பிக்கப்படுகின்றன என்று கேட்கிறேன்.

எதற்காக உயிரை விட வேண்டும்?
மதத்துக்காக உயிரைவிடுங்கள் என்று உபதேசித்த உபதேசம்தான் காலித்தனத்துக்கும் கயவாளித்தனத்துக்கும் பெரிதும் காரணம் என்று சொல்லுவேன்.

மதத்தைக் காப்பாற்ற உயிர் விடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?
உன் மனைவியைக் காக்க உயிர்விடு என்றால் என்ன அர்த்தம்?

உன் மனைவியை ஒருவன் தொட்டால் அவனைக் கொல்லு, அவனை உதை, அந்தக்காரியத்தில் உன் உயிர் போவதாய் இருந்தாலும் அதற்குத் துணிந்து அவன்மீது பாய்வாயாக என்பதல்லாமல் அதில் தத்துவார்த்தம் என்ன சொல்லமுடியும்? இந்த உபதேச மதத்தால் மக்களுக்கு மூர்க்கத்தனம் உண்டாகுமா? அன்புணர்ச்சித் தன்மை உண்டாகுமா? என்று கேட்கிறேன்.

“என் மதம் அன்பு மதம், அன்பே கடவுள், கடவுளே அன்பு. ஆனால் என் மதத்தையோ, கடவுளையோ எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் ஒரே பாய்ச்சல், ஒரே குத்து ஒன்று அவன் சாவது அல்லது அந்த வேலையில் நான் சாவது” என்பது எப்பேர்ப்பட்ட அன்பு மதம் என்று யோசித்துப்பாருங்கள்

.
மதத்துக்கு உள்ள இந்த கருத்து, இந்த தத்துவம் மாறினாலொழிய நம்நாட்டில் மக்களுக்குள் சாந்தி, சமாதானம் ஒருநாளும் நிலவாது என்று தைரியமாய்ச் சொல்லலாம். மதத் தத்துவம் என்றால் என்ன? மதம் எதற்காக என்பதை மக்களுக்குச் சரியானபடி போதிக்க வேண்டும். அந்த மாதிரி உண்மையாகவும் உறுதியாகவும் போதிக்கப்படுமானால் திராவிடநாட்டில் இஸ்லாம் திராவிடர்கள் என்றும், இஸ்லாம் அல்லாத திராவிடர்கள் என்றும் பிரிவு உணர்ச்சி இருக்க இடமே இருக்காது. மதத்துக்கும் நடத்தைக்கும் எண்ணத்துக்கும்தான் சம்பந்தமே ஒழிய, வேஷத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதப்படுமானால் திராவிடர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களே ஆவார்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் திராவிடர்களே ஆவார்கள். உண்மையில் இருவருக்கும் பேதம் இல்லை. ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணவும், ஒருவர் வீட்டில் மற்றவர் சம்பந்தம் செய்துகொள்ளவும் தடையில்லை என்று ஆகிவிட்டால் மற்றபடி மதப்பேதத்துக்கு வேலை என்ன இருக்கமுடியும்? ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக்கூடாது, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, ஒருவருக்குள் ஒருவர் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை வைத்துக்கொண்டு யாரும் ஒரே மதமாய் இருந்தாலும் இது பித்தலாட்டம் அல்லது சிலர் சுயநல வஞ்சகம் என்பதல்லாமல் ஒரு மதம் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

உண்மையிலேயே நம்மைப் பொறுத்தவரையில், அதாவது திராவிட நாட்டில் உள்ள திராவிடர்களைப் பொறுத்தவரையில் மதச்சம்பந்தமாகப் பேசவேண்டு மானால் இங்குள்ள திராவிடர்களுக்குள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்பவர்களைத் தவிர மற்ற மக்களுக்கு மதம் என்பதாக ஒரு குறிப்பிட்ட கொள்கையோ கருத்தோ ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

உயர்வு – தாழ்வு ஏன்?
பொதுவாகச் சொல்லவேண்டுமானால் கிறிஸ்தவர், இஸ்லாமியர் நீங்கின திராவிடர்களுக்கு மதம் என்கின்ற பெயரால் தங்களுக்குள் பல பிரிவாகப் பிரிந்து ஜாதி வகுப்புப் பேர்கள் சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் இழிவாக நடத்துவதும், இழிவாகக் கருதுவதும், அதற்காக என்று ஏதோ ஒரு உயர்வு தாழ்வான பெயர்களைச் சொல்லிக் கொள்ளுவதும், அதற்கென்று நடத்தையில் அர்த்தமற்ற வேஷத்தையும் குறிப்பையும் அணிந்து கொள்வதல்லாமல், வேறு பொதுவான கொள்கையோ காரியமோ கருத்தோ இருப்பதாகச் சொல்லுவதற்கு சரியான ஆதாரமோ அத்தாட்சியோ இல்லை என்றே சொல்லுவேன்.

இஸ்லாம், கிறிஸ்தவர் அற்ற மக்களைப் பொதுவாக “இந்துக்கள்” என்று பெயரளவில் சொல்லுவதைத் தவிர அந்த “இந்து” என்பது சமுதாயப் பெயரா? இனப்பெயரா? மதப்பெயரா? என்பதற்கு யாதொரு விளக்கமும் இல்லை. இந்து என்றால் இந்தியன் என்ற வார்த்தையின் சுருக்கச்சொல் என்பதல்லாமல் அதற்கு வேறு கருத்து எதுவும் இருக்க இடமில்லை. அரபு தேசத்தவனை அரப் அல்லது அரபு என்பது போலவும், ரஷ்யனை ரஷ்ஷி என்பது போலவும், ஒரு சிந்தியனை அதாவது சிந்து மாகாணத்தவனைச் சிந்தி அல்லது சிந்து என்பது போலவும், இந்திய நாட்டவனை அதாவது இந்தியனை இந்து என்று அழைக்கப்படுகிறது என்பதல்லாமல், இந்து என்கிற சொல்லில் மத சம்பந்தம் இருப்பதற்கு இடமே இல்லை அன்றியும் இந்து என்கின்ற ஒரு சொல்லுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல கருத்து சொல்லுகிறார்களே தவிர மதம் என்பதில்லை. இந்து என்பது ஒரு மதத்திற்கு என்று சொல்லப்படுமானால் அதற்கு ஏதாவது ஆதாரமோ அல்லது மத சம்பந்தமான இலட்சணமோ இருந்திருக்கவேண்டும், அல்லது இருந்தாகவேண்டும். அந்த முறையில் இந்து மதம் என்பதற்கு எவ்விதமான மத இலட்சணமும் இல்லை, பவுத்த, கிறிஸ்து, மகமது முதலிய மதங்களுக்கு மதக் கர்த்தாக்களின் பெயர்கள் இருக்கின்றன. சைவம், வைணவம் என்னும் மதங்களுக்குச் சிவன், விஷ்ணு என்ற மதக்கடவுள்கள் பெயர்கள் இருக்கின்றன. வைதிக மதம், ஸ்மார்த்த மதம் என்பவற்றிற்கு வேதம், ஸ்மிருதி என்ற நூல்கள் இருக்கின்றன. மதக்கர்த்தாக்கள் பெயர் இல்லாமல் கடவுள்கள் பெயர் இல்லாமல், சம்பந்தப்பட்ட நூல்கள் இல்லாமல் குறிப்பிடத்தகுந்த ஆதாரங்களுமில்லாமல் ஒரு மதம் இருக்கிறது என்றால் அதுதான் இந்துமதம் என்றால் இந்த இந்து என்கின்ற சொல் மதத்தைக் குறிப்பது என்று யார்தான் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆதாரம் உண்டா?
தவிரவும், இந்து மதம் என்ற சொல் எந்த மத ஆதாரங் களிலும் காணப்படுவதே இல்லை. இந்து மதத்தின் கொள்கை இன்னதென்று சொல்வதற்கும் ஆதாரங்கள் கிடையா. சரியாகவோ, தப்பாகவோ, சூழ்ச்சியாகவோ, முட்டாள்தனமாகவோ ஏற்பட்டுப் பழக்கவழக்கத்தில் தந்திர சாலிகளுக்கு அனுகூலமாகவும், அறியாத பாமரமக்களுக்குக் கேடாயும் இழிவாயும் தலையெடுக்க வசதி இல்லாததாயும் இருக்கிற ஒரு நடவடிக்கைக்கு இந்துமதம் என்ற பெயர் இருக்கிறது என்று சொல்லுவதற்கு அல்லாமல் வேறு என்ன பொருளில் என்ன பயனுக்கு இந்துமதம் இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? இந்து மதத்தால் மேன்மையும் பயனும் அடைகின்ற பிராமணர்கள் என்னும் பார்ப்பனர்கள் ‘இந்துமதம் என்பதாக ஒரு மதம் கிடையாது, ஆரியர் கொள்கைகளும் பழக்க வழக்கங்களும்தான் இந்து மதம் என்பது; ஆகையால் ஆரியமதமே இந்துமதம்’ என்று தைரியமாய் சொல்லுகிறார்கள்.

மற்றொரு பார்ப்பனசாரார் ‘வேதமும் ஸ்மிருதிகளும் புராணங்களும்தான் இந்துமதம் என்பதோடு மனுதர்ம சாஸ்திரம்தான் இந்து மதத்திற்குச் சாஸ்திரம் (சட்டம்)’ என்றும் சொல்லி அதை நடப்பாக்கி வருகிறார்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வருணாசிரமதர்மம் என்பதாக ஒருமுறை இல்லாவிட்டால் மற்றபடி இந்துமதம் என்று சொல்ல இடம் இல்லை என்றே சொல்லலாம். அம்மதத்தில் கடவுளைப்பற்றிய கவலையோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்பதோடு ஆச்சார அனுஷ்டான பழக்க வழக்க நடைஉடை பாவனை என்பவைகளுக்கும் எவ்வித நிர்ணயமோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்றும் சொல்லலாம்.

உதாரணமாக, எதை வணங்குபவனும், எதை வணங்காதவனும் ஒரு கடவுள்காரனும், பலகடவுள்காரனும், தானே கடவுள் என்கின்ற ஸ்மார்த்தனும் கடவுளே கிடையாது என்கின்ற நிரீச்சுவரவாதியும் சுவர்க்க நரகம் பாவபுண்ணியம் இல்லை என்கின்ற லோகாயுதவாதியும், எல்லாம் பொய் என்கின்ற மாயாவாதியும் ஆண் பெண் குறிகளே கடவுள் என்கின்ற சக்திவாதியும் மற்றும் மதச்சம்பந்தமாய் எந்தவிதமான கொள்கை கொண்டவனும் (அதாவது தான் கிறிஸ்தவனல்ல; மகமதியனுமல்ல என்று சொல்ல விடுவானேயானால்) எவனும் இந்துவே ஆவான். அதனால்தான் நான்மேலே இல்லாமல் கிறிஸ்தவன் அல்லாத மக்களைக் குறிப்பிடும் சொல் இந்து என்ற சொல்லாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்டேன். இப்படிப்பட்ட இந்து என்கிற பதம் இருக்கும் காரணத்தாலேயே நாட்டில் மதச்சண்டை நடக்கின்றது என்பதல்லாமல் மற்றபடி இந்த நாட்டில் இந்தியாவில் மதச்சண்டை ஏற்படச் சிறிதும் இடமே இல்லை. ஆகையாலேயே இந்துக்கள் என்றழைக்கப்படும் திராவிடமக்கள் இந்நாட்டின் நலங்கருதி நாட்டின் விடுதலையும், மக்கள் சுயமரியாதையும் கருதியும் பெரும்பாலான மக்களுக்குப் பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்படவேண்டும் என்பது கருதியும் முதலாவதாகச் செய்யப்படவேண்டிய வேலை இந்துமதம் என்கின்ற புரட்டை விளக்கி மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி அந்தச் சிறையிலிருந்து வெளியேறும்படி செய்வதேயாகும்.

ஏதாவது இடம் உண்டா?
இன்று இந்திய மனிதச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் திராவிடநாட்டிற்கும், திராவிட சமுதாயத்திற்கும் இருந்து வரும் பெருநோய் இந்துமதம் என்பதேயாகும். இந்த இந்து மதம் என்ற பெருநோய் திராவிடர்களுக்கு சயரோகம் என்றும் குஷ்டநோய் என்றும் உறுதியாய் சொல்லலாம். இந்துமதம் இல்லாவிட்டால் 4ஆம் 5ஆம் ஜாதி (பிறவி) மக்களும், அவற்றால் ஏற்பட்டுவந்த – வருகிற வரும்படியான கேடுகளும் – நடக்க ஏற்பட இடம் உண்டா? என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

இப்படி நான் சொல்லுவதால்தான் இதைச் சுமார் 25 வருடகாலமாக முரட்டுத்தனமாக அச்சமின்றி பிரசாரம் செய்து வருவதால்தான் மத விரோதி, மதங்களை ஒழிப்பவன், கடவுள் விரோதி, கடவுள் இல்லை என்பவன் என்றெல்லாம் என்மீது பழி சுமத்துகிறார்கள், மதமும் கடவுளும் இல்லை என்று ஒருவன் உண்மையாகவே சொல்லுவதனாலும் அதனால் உலகத்துக்கு எப்படிப்பட்ட கேடும் வந்துவிடாது.

மதம் தோன்றிய காலம் முதல் மதப்போராட்டமும், கடவுள் கண்ட கால முதல் கடவுள் மறுப்பும் நடந்துதான் வந்திருக்கின்றன. அதனால் உலகம் அழிந்து மறைந்து எங்கும் நாத்திகமும் பொதுவுடைமையும் ஏற்பட்டு விட வில்லை. ஆனால் சில பித்தலாட்டங்கள் சில வஞ்சகங்கள் ஒரு அளவுக்காவது பலமற்று வருகின்றன என்பது மாத்திரம் உண்மை. ஆதலால் ஏமாற்றுதலில் வஞ்சகத்தில் பிழைக்கும் மக்களுக்கு நம்மீது ஆத்திரம் வந்து அவர்கள் பாமர மக்களையும் மூடர்களையும் கிளப்பி விட்டு நம் பிரசாரத்தை அடக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

(04.02.1947 அன்று ராமநாதபுரம் ஜில்லா கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு – சொற்பொழிவு – 15.02.1947 & 22.02.1947

வியாழன், 15 மே, 2025

மனிதனே சிந்தித்துப் பார்!

 

விடுதலை நாளேடு


கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மை யுடைய வனாக ஆகவேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும்,

சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,

கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.

  1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
  2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
  3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
  4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
  5. அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
  6. பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
  7. இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
  8. இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
  9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
  10. இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
  11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
  12. இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
  13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப்பார்!

(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 10.10.1967).

 

செவ்வாய், 13 மே, 2025

பார்ப்பனியம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

 

விடுதலை நாளேடு



தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.

சத்தியமூர்த்தியால் சொல்ல முடிந்ததா?

வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப்பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்தியமூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு காலமாகியும் இந்தத் தீண்டாமை யானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சியின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந்நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்பதோடு அவனை வரவேற்க வேண்டியது நம் கடமை என் கின்றோம்.

இழி மகனாக இருப்பதன்றி என்ன பயன்?

அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக் கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப்பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லியிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச் சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல்லாமல் காரியம் நடக்கும்; அப்படியில்லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.

அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள்,  உத்தியோ கங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

நன்மை என்ன என்று பாருங்கள்!

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்டவன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதேயாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சியால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மையான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுப விக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரிமைகள் வழங்க முன் வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும்பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.

இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப் பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.

நீதி கெட்டதற்கு நீதிமன்றங்களே காரணம்

நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமானதற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப்பது, மக்களுக்குப் பெரிய அசவு கரியமாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவையாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

ஏழைகளால் முடியுமா?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்காரனுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவானாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்னவென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒருவனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழைகளால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக்கின்றேன்.

இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.

உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.

மனிதன் எப்படி பயப்படுவான்?

குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட்டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, “கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதை யெல்லாம் இப்போது வந்திருக்கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

1.5.1969  அன்று சென்னை – திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு