வியாழன், 15 மே, 2025

மனிதனே சிந்தித்துப் பார்!

 

விடுதலை நாளேடு


கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மை யுடைய வனாக ஆகவேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும்,

சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,

கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.

  1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
  2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
  3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
  4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
  5. அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
  6. பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
  7. இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
  8. இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
  9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
  10. இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
  11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
  12. இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
  13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப்பார்!

(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 10.10.1967).

 

செவ்வாய், 13 மே, 2025

பார்ப்பனியம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

 

விடுதலை நாளேடு



தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.

சத்தியமூர்த்தியால் சொல்ல முடிந்ததா?

வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப்பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்தியமூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு காலமாகியும் இந்தத் தீண்டாமை யானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சியின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந்நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்பதோடு அவனை வரவேற்க வேண்டியது நம் கடமை என் கின்றோம்.

இழி மகனாக இருப்பதன்றி என்ன பயன்?

அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக் கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப்பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லியிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச் சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல்லாமல் காரியம் நடக்கும்; அப்படியில்லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.

அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள்,  உத்தியோ கங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

நன்மை என்ன என்று பாருங்கள்!

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்டவன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதேயாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சியால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மையான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுப விக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரிமைகள் வழங்க முன் வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும்பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.

இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப் பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.

நீதி கெட்டதற்கு நீதிமன்றங்களே காரணம்

நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமானதற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப்பது, மக்களுக்குப் பெரிய அசவு கரியமாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவையாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

ஏழைகளால் முடியுமா?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்காரனுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவானாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்னவென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒருவனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழைகளால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக்கின்றேன்.

இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.

உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.

மனிதன் எப்படி பயப்படுவான்?

குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட்டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, “கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதை யெல்லாம் இப்போது வந்திருக்கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

1.5.1969  அன்று சென்னை – திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

புதன், 7 மே, 2025

திராவிடமே! தமிழ்நாடே


விடுதலை நாளேடு
தந்தை பெரியார் அறிவுரை

 திராவிடமே! தமிழ்நாடே! நீ எந்தப் பெயரையோ வைத்துத் தொலைத்துக்கொள். இன்று நீ அனாதியாய், அழுவாரற்ற பிணமாய் இருக்கின்றாய். உன்னை ஏன் என்று கேட்க ஆளில்லை.

பார்ப்பனர் இல்லாத இடம் எது?

இத்திராவிடநாட்டில் 30இல் ஒரு பங்கு வீதம் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்கள் நிலையை நீயே பார். அவர்கள் இல்லாத இடம் எது? இந்திய ராஷ்டிரபதி, இந்திய முதல் மந்திரி, திராவிட முதல்மந்திரி மற்றும் என்ன என்ன எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள், சர்வம் பார்ப்பன மயம். பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் நல்ல செல்வாக்குடனும் உயர்தர வாழ்க்கையோடும் இருக்கிறார்கள். மற்றும் இந்தத் திராவிடநாட்டுக்குப் பிழைக்கவந்த “யாதும் ஊரே” என்கின்ற வடநாட்டு மக்கள் கூட்டத்தின் தன்மையைப் பார். அவன் உண்டு கழித்தது (மீதி) தான் உனக்கு மிச்சம் என்கின்ற தன்மையில் இருக்கிறது.

இந்த நிலையில் நீ, தமிழனா? தெலுங்கனா? கன்னடியனா? மலையாளியா? யார்? யாராய் இருந்தாலும் சரி. சென்னை மாகாணத்தவனான திராவிடனான அல்லது தமிழனே ஆன நீ என்ன நிலையில் இருக்கிறாய்? தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கரைகண்டாய், தமிழின் மூலத்தையும் தொன்மை நிலையையும் தோண்டி எடுத்தாய்; “தமிழ்த் தெய்வமாகிய முருகனாகவே” ஆகித் தமிழில் இணையற்ற வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து தமிழனின் உயர்தன்மையைக் கண்டு பிடித்தாய்; இயற்கையோடு இயைந்தாய்; எண்ணில்லாத புத்தகம் பதிப்பித்தாய்; எங்கும் தமிழ்மயம், எங்கும் தமிழ் முழக்கம் என்கிறாய். ஆனால் இந்த(உன்)நாட்டில் உன் நிலை என்ன? உன் பங்கு என்ன? உன் உரிமை என்ன? என்பதைச் சிந்தித்துப்பார்.

காரணம் என்ன?

சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், வாழ்வில், சட்டத் தில், சாஸ்திரத்தில், கடவுள் சன்னிதானத்தில், உன் நிலை என்ன என்பதை யோசித்துப்பார். இவற்றில் நீ மற்றவரிலும் தாழ் நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன?

நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக்கொண்டு விலகித் தனியாய் நிற்கிறாய். “ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின்றானே ஒழிய, வாழவேண்டுமே ஒழிய தனித்தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ்கின்றானா? எண்ணுகின்றானா? திராவிடத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்மகனே! நீயே எண்ணிப்பார். இப்போது தெரிகிறதா, திராவிடன் ஏன் கீழ் நிலையில் இருக்கிறான் என்பதற்கு உள்ள காரணம்?

வெள்ளையன் ஆதிக்கம் பொழுது சாய்ந்துவிட்டது. ஆரியன் ஆதிக்கம் பொழுது புலர்ந்துவிட்டது. ஏற்கனவே ஆரியன் ஆதிக்கமே பல்லாற்றானும் இருந்துவந்தது என்றாலும் அது வெள்ளையன் முத்திரையின் கீழ் நடந்துவந்ததாகும். இனி ஆரியன் ஆதிக்கம் வெளிப்படையாகவே ஆரியன் முத்திரையின் கீழ் நடந்து வரப்போகிறது. இன்று ஆரியர்களது ஏகபோக ஆட்சிக்கு உள்ள ஒரு சிறு தடையெல்லாம் முஸ்லிம்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய இருவர்களிடமும் ஒரு ஒப்பந்தம் (ஒற்றுமை) ஏற்படவேண்டும் என்கின்ற ஒரு சாக்குதானே தவிர திராவிடன் (தமிழன்) நிலையைத் தன்மையைப் பற்றிய சங்கதி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது.

நீ யார் என்பது உனக்குத் தெரியாது. யார் என்றோ நினைத்துக் கொண்டு விலகித் தனியாய் நிற்கிறாய். “ஒற்றுமை, கூட்டு லட்சியம், பொது நலம் ஆகியவற்றுடன் தமிழன் (திராவிடன்) எவன் வாழ்ந்தாலும் அவ்வாழ்வு நான் வாழ்கின்ற மாதிரிதான்; தமிழனுக்காகத் தமிழன் வாழ்கின்றானே ஒழிய, வாழ வேண்டுமே ஒழிய தனித் தனித் தமிழனின் சுயநல வாழ்வுக்காக அல்ல என்பதாக எதாவது ஒரு தமிழன் (திராவிடன்) வாழ் கின்றானா? எண்ணுகின்றானா?

அருகதை அற்றவர்களா?

அரசியல் நிர்ணயசபை  என்பது பயனற்ற,  பித்தலாட்ட, ஒரு கூட்டத்தாரின்  நலனுக்கு  மாத்திரம் ஏற்பட்ட ஒரு மாயாஜால  மந்திரசபை  என்றாலும்  அந்தப்படி சொல்ல முஸ்லிம்கள்தான் உரிமையுள்ளவர்களாய் இருக்கிறார்களே தவிர திராவிடர்கள் அதைப்பற்றி நினைக்கவும் அருகதை அற்றவர்களாக ஆகிக்கொண்டார்கள்.  ஏன் என்றால் திராவிடர்கள்  சிலர் அரசியல் நிர்ணயசபையில் இருக்கிறார்கள், அவர்கள் திராவிட சமுதாயப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும் ஆரியர்கள்  அவர்களைத் திராவிடர்களின் பிரதிநிதிகள்  என்றே பிரிட்டிஷாரிடம் கணக்குக்  (லிஸ்ட்டு) கொடுத்து  இருக்கிறார்கள்.   ஆனால்  இந்தத் திராவிடர்கள்  அரசியல் நிர்ணய சபையில் ஆரியர் – திராவிடர் என்கின்ற  பேச்சே  பேசக் கூடாது என்கின்ற  ஒப்பந்தத்தின் மீது ஆரியர்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர்களாவார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

எனவே, இப்போதைய  அரசியல் மாறுதலில் திராவிடர்கள்  அல்லது தமிழர்கள் திராவிட நாடு  அல்லது தமிழ்நாடு என்பதைப் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு  என்ன செய்ய வேண்டும்?  அரசியல் நிர்ணய  சபையில் இல்லாவிட்டாலும் ஒரு தனி சபையாகத் திராவிடர் அல்லது  தமிழர் கூடி ஒரு முகப்பட்ட அபிப்பிராயத்தை – கருத்தை – தேவையை  வலியுறுத்தி அதை வைத்து ஒரு பொதுக்கிளர்ச்சி அல்லது சிலர் லண்டன் சென்று  வலியுறுத்திவிட்டு வந்து கிளர்ச்சி செய்வது  என்கின்றதான  ஒரு தீவிரப்பணியில்  அவசரமாய் ஈடுபடவேண்டியது இன்று மிகமிக அவசியமான காரியம் என்று கருதுகிறோம். திராவிடமே!  தமிழ்நாடே!  என்ன சொல்லுகிறாய்?  திராவிடத்தின் வரலாற்றுச் சுவடியையும், புதைபொருளையும் பற்றிப் பிரசங்க மாரி பொழிவதும், கம்யூனிசம், சோஷலிசம், தேசியம்  என்று  மக்களைத் தொல்லைப்படுத்தி நாசவேலை செய்வதும் முதலிய  பணியோடு  உன் வாழ்வு,  தொண்டு, கடமை  முடிந்ததா?  மற்ற  சமுதாயத்தைப் பார்!  பார்! பார்!

‘குடிஅரசு’ – தலையங்கம் – 08.03.1947

 

தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை தேடித் தந்தது திராவிடர் கழகமே!

 

விடுதலை நாளேடு

இரங்கல் அறிக்கை

தந்தை பெரியார்

திராவிடர் கழகத்தினுடைய கொள்கையை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பண்டைக் காலத்தில் எப்படி நடந்தன? அப்படி நடந்த இடத்தில் இரத்தம் சிந்தாமலும், ஒரு கலவரமும் இல்லாமல் நடந்து இருக்கின்றனவா? ஆனால் நாங்கள் இந்த 20, 30- ஆண்டுகளில் செய்கின்ற கிளர்ச்சிகளில் – காரியங்களில் – செயல்களில் எங்காவது சிறிது இரத்தம் சிந்தியது உண்டா? கலவரம் ஆனது உண்டா? எங்கள் காரியங்களால் மற்றவர்களுக்குத் தொல்லைகள் இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? என்று பார்த்தால், ஒன்றும் இருக்காது. கூறுவார்கள், “காந்தி சத்தியாக்கிரகம் – அகிம்சையில் நடந்தது” என்று. அவர் நடத்தியதில் எத்தனை பேர் சாவு – எவ்வளவு பேர்களுக்குச் சொத்து நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டது – பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

இழப்பு இல்லாத போராட்டமா?

மற்ற மற்ற அரசியல் கட்சிகள் கூட, பெரிய பெரிய கிளர்ச்சிகள் என்று நடத்துகிறார்களே – அவர்களால் சொத்துக்குச் சேதம் இல்லாமல் அடிதடி கலவரம் இல்லாமல் நடத்த முடிந்ததா? யாராவது நடத்தினார்களா?

தாசி ஒழிப்புப்பற்றி சட்டசபையிலே சட்டம் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், “பொட்டுக் கட்டுவது என்பது கடவுள் காரியம் – புண்ணிய காரியம். இதிலே பிரவேசிக்கக் கூடாது, இதை ஒழிக்கக் கூடாது” என்று எதிர்த்துப் பேசினார். அப்போது முத்து லெட்சுமி ரெட்டி என்ற அம்மையார் எழுந்து, “இது புண்ணிய காரியம்தான் – கடவுள் காரியம்தான். இத்தனை நாள்தான் நாங்கள் (திராவிடர்) செய்து வந்தோம். இனி இந்தக் கடவுள் காரியத்தை நீங்கள் (பார்ப்பனர்) பொட்டுக் கட்டிக் கொண்டு செய்யுங்களேன்” என்று சுடச்சுடப் பதில் கூறினார்.

ஒரு கொடி பிடிக்க எத்தனை பேர் அடிவாங்கினார்கள்! இரயில் சங்கிலியை இழுக்கப் போய் எத்தனை பேர் செத்தனர். யாரோ இழுக்க, சம்பந்தம் இல்லாதவன் செத்தான்! கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ் இவர்கள் நடத்தியது ஒன்றிலாவது பொருட்சேதம், அடிதடி இல்லாமல் நடந்ததா?   கொடிபிடிக்கப் போகிறேன் என்று போனான்; எழுந்திருக்க முடியாமல் படுக்க வைத்து நன்றாக முதுகில் அடித்தான். டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி எனப் பெயர் மாற்றப் போகிறேன் என்று போய் 5- பேர் செத்தானே தவிர, பெயர் மாற்றவில்லை. இந்தப்படி 5, 6- பேர்கள் செத்தார்களே என்று கூடக் கவலை இல்லை. தூத்துக்குடியில் சங்கிலியை இழுத்து அடி, உதை வாங்கினார்கள். சிலர் செத்தார்கள். கம்யூனிஸ்ட் வேலை நிறுத்தம், அறுவடைக் கூலிப் போராட்டம் செய்கிறான் என்றால், அதிலும் அடி, உதை, கலவரம் எல்லாம் ஏற்படுகின்றன. இல்லை என்று கூற முடியுமா? காங்கிரஸ்காரர்களின் கிளர்ச்சியிலும் அப்படியே.

நாங்களும்தான் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் செய்கிறோம். அடிதடி கலவரம் ஏற்பட்டது உண்டா? எங்காவது – யாருக்காவது சொத்து நாசம் உண்டா? விளையாட்டாக நம் திராவிடர் கழகத்தைக் கருத முடியாது. அப்படி நடத்தியதன் பலனாக நல்ல வெற்றி அடைந்து வருகிறோம். பலர் எவ்வளவு பேசியும் என்ன பலன்? நாங்கள் தோன்றிய பிறகு இந்த 10, 20- ஆண்டுகளில் தானே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களிடையே ஒரு உணர்ச்சி தோன்றியிருக்கிறது. பார்ப்பான் நிலை முன்பு எப்படியிருந்தது? இன்று அவன் நிலை என்ன? ஒரேயடியாக அவன் ஒழிந்து போகவில்லை நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை என்றாலும் நாட்டில் 20-ஆண்டுகட்குமுன் பார்ப்பானின் நிலை எப்படி இருந்தது. இன்று அவனது நிலைமை எப்படி உள்ளது என்று பார்த்தாலே தெரியும். சுத்தமாக ஈனம் இல்லாதவன் – மானங்கெட்டவன்தான் இன்றும் பார்ப்பானைச் சாமி என்கின்றான். ஓட்டு (தேர்தலில் வாக்கு) வாங்க வேண்டும் என்பவன்தான் பிராமணன் என்று கூறுகிறான். மற்றவர்கள் எல்லாரும் அவர்களை அய்யரே என்றுதான் கூப்பிடுகிறார்கள்; அவனும் கோபித்துக் கொள்வதில்லை.

அரசர்கள் சாதித்தது என்ன?

மற்றும் கோயில் நிலைதான் என்ன வாழுது? சாமி போகிறது என்றால் பிணம் போகிற மாதிரி போகுது. கூட்டம் சேருவதில்லை. தோழர் டி.கே. சண்முகம் நடத்திய இராசராச சோழன் என்ற நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பேசும்படி நேரிட்டது. அந்தக் கதை சப்பையானது. ஆனால், நடித்தது – உடுப்பு – சீன் (காட்சி) பேச்சு எல்லாம் திறமையாகவும், ஆடம்பரமாகவும் இருந்தன. ஆனால், அறிவு உணர்ச்சியில்லை. நான் பேசும்போது, நடிப்பு – ஆடை அலங்காரம் பற்றிப் பாராட்டிவிட்டு, “இந்தக் கதை சுத்த உபயோகமில்லாதது; இதைத் தோழர்கள் (டி.கே.எஸ். கம்பெனி) நடித்ததால் பாராட்டத்தக்க மாதிரி நடித்திருக்கிறார்கள். இந்த அரசர்களைப் பற்றிப் பேசவே தகுதியில்லை; அவன் எந்தக் காரியமும் நமக்கு நல்லதாகச் செய்தான் நாம் அனுபவிக்கிறோம் என்று கூறமுடியாது” என்றேன். தோழர் டி.கே. சணமுகம் பேசுகையில் நான் கூறியதைக் கூறிச் சமாதானம் கூறுகையில், “அப்படிக் கூறக் கூடாது. தஞ்சையில் அருமையான கோயில் இருக்கிறது. இதைக் கட்டியவன் இராசராசன்தான்” என்றார். நான் வழிமறித்துக் கேட்டேன். கோயில் பெரியதுதான், இன்று அதனால் யாருக்குப் பிரயோசனம். வவ்வால் தானே அடைகிறது. குச்சிக்காரிகளும், காலிகளும் தானே அங்குக் குடியிருக்கின்றனர்?” என்று.

அடுத்தபடியாக குன்றக்குடி அடிகளார் பேச எழுந்தார். அவர், “பெரியாரிடம் எனக்குப் பற்றும் பாசமும் உண்டு. அவர் கூறினார், கோயிலில் வவ்வால் அடைகிறது என்று. நான் கேட்டேன், யாரால் வவ்வால் அடையும்? கோயிலை இந்நிலைக்குக் கொண்டு வந்தது யார்” என்று கூற ஆரம்பித்தார். (அதாவது நான் தான் அதற்குக் காரணம் என்றும், என் பிரச்சாரத்தின் பயனால்தான் என்பதாகவும் கூறினார்) இதில் அவரே ஒத்துக் கொண்டார், கோயில் வவ்வால் அடையும் நிலைக்கு வந்துவிட்டது என்று.

இங்குத் தலை மயிரைக் காணிக்கையாக வாங்கும் சாமிகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் பிரசித்தமானது சிறீரங்கம் ஆகும். சிறீரங்கம் (பெருமாள்) கோயிலில் மொட்டை அடிக்க என்று ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி மொட்டை அடித்து விடுவதை 1938-ஆம் ஆண்டில் 1,500-ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஆண்டிலேயே 15-ஆயிரம் பேர்களுக்கு மேல் மொட்டை அடித்துக் கொண்டனர். அது இருக்கும் போது குறுகி வந்து 1959-லே கணக்குப் பார்த்தால் 3,000- பேர்தான் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 57, 58, 59- ஆகிய மூன்று ஆண்டுகளிலே இந்தக் கணக்கு. ஏலம் எடுத்தவருக்கு 900-ரூபாய் நஷ்டம் (இழப்பு) ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒரு தலை மொட்டை அடிக்க அரை அணா – ஒரு அணா என்றால், இப்போது ஆறு அணா – எட்டு அணா என்று ரேட் (கட்டணம்) இருக்கிறது. இப்படி வாங்கியும் ரூ.900- நஷ்டம். இப்போது இதைவிட இன்னும் குறைவு. யாரும் மொட்டை அடித்துக் கொள்வதில்லை – சிறிது கத்திரித்துக் கொள்கிறார்கள். இதற்குப் பூமுடி என்று பெயர் கூறுகிறார்கள். இம்மாதிரி ஒவ்வொரு திட்டமும் குறைந்துதானே வருகிறது. “உங்களால்தான் (பெரியாரால் தான்) எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. மொட்டை அடிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது” என்று அதை ஏலத்திற்கு எடுத்த காண்டிராக்டர் இந்தக் கணக்கை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார்.

சாமி கும்பிடவா போகிறார்கள்?

இன்று பொம்பளையைப் பார்க்க ஆண்களும் ஆண்களைப் பார்க்கப் பெண்களும் கோயிலுக்குப் போகிறார்களே தவிர வேறு சாமி கும்பிடப் போகிறார்கள் என்று கூற முடியுமா?

இந்நிலைக்குக் காரணம் நம் இயக்கம்தான். ஆச்சாரியார் சுதந்திராக் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றால் எதற்காக? “இன்னும் 10- வருடத்திற்குள் திராவிடர் கழகம் போகும் போக்கை மாற்றாவிட்டால், கூடவே காமராசர் மந்திரி சபையை மாற்றாவிட்டால், பார்ப்பான் மண்வெட்டி எடுத்துக் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். பார்ப்பனத்திகள் களை எடுக்க நேரிடும். இதுதான் ஆச்சாரியாரின் கண்டுப்பிடிப்பு ஆகும். பார்ப்பான், கடவுள், சாஸ்திரம், சாதி, மதம் இவற்றைக் காப்பாற்றி ஆகவேண்டும். அதற்கு இந்த நாட்டிலே கட்சி இல்லை. இந்த அரசாங்கமும் அதற்கேற்றாற்போல், பார்ப்பானை – சாதியை ஒழிக்கும் காரியங்களைச் செய்கிறது. திராவிடர் கழகம் வேறு மக்களைத் தன் பக்கம் திருப்பி நம்மை (பார்ப்பனர்களை) ஒழிக்கப் பாடுபடுகிறது. இவை இரண்டையும் ஒழிக்காவிட்டால் நாம் செத்தோம், தப்பினோம். இன்று பார்ப்பன ஆட்சியாக இருந்தும் நமக்குப் (பார்ப்பனருக்கு) பாதுகாப்பு இல்லை என்பதால்தான், இந்தப் புதிய கட்சி தோன்றியிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. பச்சையாக – தர்மம் கெட்டுப் போச்சு, மைனாரிட்டியாருக்குப் பாதுகாப்பு இல்லை, தனியார் சுதந்தரம் பறிக்கப்படுகிறது.”

நம்மால் முடியாதா?

தர்மம் என்றால் என்ன? வருணாஸ்ரம தர்மம்தானே! சூத்திரனுக்கு எதுக்குப் படிப்பு? அவன் தகப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதுதானே அது. மைனாரிட்டி (சிறுபான்மை) வகுப்பார் என்பவர்கள்தானே கல்வி – உத்தியோகம் பூராவிலும் நிறைந்திருக்கின்றனர். நம்மாள் 100-க்கு 10, 15- பேருக்குக்கூடப் படிப்பு இல்லை அவர்கள் (பார்ப்பனர்) 100-க்கு 100- மொட்டு, முளை, குஞ்சு முதல் படித்து விட்டிருக்கின்றனர்.

மற்ற எந்தக் காரியமும் நம்மால் முடியாவிட்டாலும், இந்த 5, 6 வருடங்களாக காமராசர் மந்திரி சபையைக் காப்பாற்றி இருக்கிறோம். அதனால் இன்று கல்வித் துறையிலே பெரிய புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டு, நம்மக்கள் அதிக அளவில் கல்வி கற்று, உத்தியோகம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பானுடைய பிழைப்பு – கோயில் மணி அடிப்பது, புரோகிதம் செய்வது, உத்தியோகம் செய்வது இவை தான். இப்போது மணி அடிப்பதும் ஒழிந்து, புரோகிதமும் இல்லை என்று ஏற்பட்டு, உத்தியோகத்திற்கும் ஆபத்து என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு அணை போட வேண்டும் என்று கருதித்தான் நம் ஆள்களில் சில துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு தங்களுடைய கட்சிக்கும் ஆதரவு இருக்கிறது என்று கூறிக்கொண்டு காமராசர் ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிலர், என்ன இது? பெரியாரும் திராவிடர் கழகமும் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதித்தார்கள். இப்போது காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று பெரியார் சொல்லுகிறாரே என்று கருதுகிறார்கள். நான் ஒன்றும் இரகசியமாகக் கூறவில்லை. நாளைக்கு வரப் போகிற தேர்தலில் காங்கிரசை ஆதரித்து ஓட்டுப் போடணும் என்றுதான் கூறுவேன். அதற்காக நான் வெட்கப்படுவதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் ஆச்சாரியமாக இருக்கலாம். காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அதை விட்டு வந்தவன் நான். இன்றுநான் காங்கிரசில் இருந்தால் மந்திரியாகியிருப்பேன். நான் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியபோது – அது பார்ப்பானுடைய நலத்திற்காகவே இருப்பதால் ஒழிக்க வேண்டும் என்றேன். அப்போது பார்ப்பனர்கள் காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி வேலை செய்தனர். காங்கிரசில் பார்ப்பானை அசைக்க முடியாத நிலை அப்போது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கிற நம் பிரச்சாரத்தாலே நம் வசத்திற்கு அது வந்துவிட்டது. காங்கிரசைக் காப்பாற்றணும் என்று பார்ப்பான் கூற வேண்டியது போய், நாம் காப்பாற்றணும் என்றும், அவன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறியும், அதற்காகப் படையெடுக்கும்படியும் ஆகிவிட்டது.

ஆச்சாரியார், “காந்தி காங்கிரசை ஆதரிக்கிறேன். காந்தியார் இருந்தால் இப்படி ஆகியிருக்காது” என்கிறார். அதாவது காந்தி இருந்தபோது காங்கிரஸ் முழுக்க முழுக்க ஜாதி, மதம், கடவுள், புராணம் இவற்றைப் பாதுகாத்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ் இன்று ஜாதி, மதம், கடவுள், புராணம் ஆகியவற்றைக் கவனிக்கமாட்டேன் என்கிறது.

எப்படியென்றால் இராமசாமி (நான்) சொல்கிறபடிதான் நடக்கிறது என்கிறார்கள்.

படிக்க முடியாதா?

காந்தி கண்ட இராமராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து “எல்லோரும் படித்தால் வேலைக்கு எங்கே போவது? தகப்பன் தொழிலை மகன் செய்யட்டும் – இரண்டு நேரம் படிப்பு எதற்கு? ஒரு நேரம் படித்தால் போதும்” என்றார். சாதிகளில் பார்ப்பன  ஜாதி மைனாரிட்டியாக (சிறுபான்மையானதாக) இருந்தும் அவரை அசைக்க முடியவில்லை. 6,000 பள்ளிகளை மூடினார். ஹைஸ்கூலே (உயர்நிலைப் பள்ளியே) இனி வேண்டாம் என்றார். காலேஜில் (கல்லூரியில்) இண்டர்வியூ மார்க் (நேர்முகத் தேர்வு மதிப்பெண்) மூலம் நம் மாணவர்கள் சேர முடியாமல் செய்தார்.

பிறகு நம்முடைய நல்வாய்ப்பாக காமராசர் (முதலமைச்சராக) வந்தார். உடனே குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினார். அவர் மூடிய 6000- பள்ளிகளைத் திறந்ததோடு மேற்கொண்டும் 6000- பள்ளிகளைத் திறந்தார். ஹைகூஸ்லே வேண்டாம் என்று ஆச்சாரியார் எழுதி வைத்தார். இவர் பல ஹைஸ்கூல்களைப் புதிதாகத் திறந்தார். 12- கல்லூரிகளைத் திறந்து “எங்கள் காலேஜில் இடம் இருக்கிறது விண்ணப்பிக்கலாம்” என்று விளம்பரம் வரும்படியாகச் செய்தார்.

எங்கள் இயக்கத்தின் பலன் இன்னும் என்ன என்று கேட்டால், இந்தக் குடந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். 5, 6- கோயில்கள் இருக்கின்றன. அங்குப் பக்தியோடு இப்போது யாராவது போகிறார்களா? இங்கே இந்தக் கூட்டத்தில் 6- ஆயிரம் பேர்களுக்குமேல் இருக்கிறீர்கள். யாருடைய நெற்றியிலாவது நாமம் – விபூதி – பட்டை இருக்கிறதா? இல்லை. தப்பித்தவறி ஒருவர் இருவர்களுக்கு இருந்தால் அவர்களும் கடைசியில் மறைவாக இருக்கிறார்கள். சிலர் துணிவாக தைரியத்துடன் அழித்துவிட்டு முன்னாடி வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

தமிழர்களாகிய நாம் காமராசருக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் பிள்ளைகளுக்குச் சம்பளம் இல்லை – சோறு – புத்தகம், உடைகள் இலவசம் என்று இப்படிப் பல நன்மைகள் செய்து வருகிறார்கள். தமிழர்கள் என்பவர்கள் இவற்றுக்கெல்லாம் நன்றி கூறாமல் – மாறாக இப்படிச் செய்தவரையும் திட்டிக்கொண்டு, இதன் மூலம் வயிறு வளர்க்கிறார்கள். தமிழர்களுடைய தற்குறித் தன்மையை நீக்க – அவர்கள் முன்னேற – நீ என்ன செய்தாய் என்றால், ஒன்றும் இல்லை. காமராசர் தான் செய்கிறார். அவருடைய அருமையான பொற்காலத்தில் – (தங்க ஆட்சிக் காலத்தில்) நாம் இருக்கிறோம் இப்படிப்பட்ட காலம் இதற்கு முன் இருந்ததில்லை. காமராசர் (ஆட்சியிலிருந்து) ஒழிந்தால் பிறகும் இருக்காது.

வேலை கிடைக்குமா?

உத்தியோகத்தை எடுத்துக்கொண்டால் நமக்கு 100-க்கு 100- பியூன் வேலை – மசால்ஜி வேலை கட்டுவது இதுதான். மேலே எல்லா உத்தியோகமும் பார்ப்பானுக்கே. இந்த வேலை தான் நம் (திராவிட) இனத்திற்கு முத்திரை போட்டதாகும். இதில் ஒருவனையாவது பார்ப்பான் இருக்கின்றான் என்று காட்ட முடியுமா?

1927-இல் சுயமரியாதைச் சங்கம் இருந்த காலம். அப்போது பஞ்சாயத்து போர்டு (ஊராட்சி மன்ற) உறுப்பினர்களை ஜில்லாபோர்டே (மாவட்டக் கழகம்) நியமிக்கும். பட்டுக்கோட்டைப் பகுதியில் ஓர் ஆதிதிராவிடரை உள்ளே உட்கார வைக்க மறுத்துவிட்டார் தலைவராக இருந்த நாடிமுத்துப் பிள்ளை. வெளியில் உட்கார வைத்து அந்த ஆதிதிராவிட உறுப்பினரிடம் கையெழுத்து வாங்கி வந்தார். இந்தக் கொடுமையை எதிர்த்து – திராவிடர் கழகத் தோழர்கள் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும்போது – அந்த அரிஜன மெம்பரை (உறுப்பினர்) வலுக்கட்டாயமாக உள்ளே இட்டுச் சென்று நாற்காலியில் அமர்த்தினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால். அந்த ஊர் திராவிடர் கழகக் கோட்டை என்பதால் – நம் கழகக் கோட்டை என்பதால் – நம் தோழர்கள் துணிந்து செய்தனர். இன்று அந்த அரிஜனனுடைய நிலை என்ன? கலெக்டராகவும் (மாவட்ட ஆட்சியராகவும்), மந்திரியாகவும் (அமைச்சராகவும்), பெரிய உத்தியோகங்களிலும் ஆதிதிராவிடன் இருக்கிறான். கோயிலில் அவனுக்குப் பூரண கும்ப மரியாதை செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கிறதைவிட இன்னும் அதிசயமாக ஆதிதிராவிடன் மேலே வந்துவிடுவான் போல் இருக்கிறதே என்று பார்ப்பான் நடுங்குகிறான்.

தாசி ஒழிப்புப்பற்றி சட்டசபையிலே சட்டம் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், “பொட்டுக் கட்டுவது என்பது கடவுள் காரியம் – புண்ணிய காரியம். இதிலே பிரவேசிக்கக் கூடாது, இதை ஒழிக்கக் கூடாது” என்று எதிர்த்துப் பேசினார். அப்போது முத்து லெட்சுமி ரெட்டி என்ற அம்மையார் எழுந்து, “இது புண்ணிய காரியம்தான் – கடவுள் காரியம்தான். இத்தனை நாள்தான் நாங்கள் (திராவிடர்) செய்து வந்தோம். இனி இந்தக் கடவுள் காரியத்தை நீங்கள் (பார்ப்பனர்) பொட்டுக் கட்டிக் கொண்டு செய்யுங்களேன்” என்று சுடச்சுடப் பதில் கூறினார்.

30.01.1960- அன்று குடந்தையில் பெரியார்
ஈ.வெ.ரா. சொற்பொழிவு- “விடுதலை” 19.02.1960