சமூகநீதிப் புரட்சி செய்த இயக்கம்!
வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது.
அதி தீவிர காங்கிரஸ்வாதி யாகவும், அதி தீவிர தேசிய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும். அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால் அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.
இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரச்சாரத்துக்கும் ஆளாக வேண்டியதாய் இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது, பார்ப்பனரல்லாதாருக் குள்ளும் பிரிவினையையும் கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.
எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது.
இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது. பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் குறைவாக இருக்கின்றது. என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய் விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியே ஆகும்.
அய்க்கோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாகாக்களில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை கையாளப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து, அக்கட்சித் தலைவர்கள் பொது நலத்தைவிட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார் களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, அய்க்கோர்ட் இலாகாவிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை அமுலுக்கு வந்திருக்கும்.
கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், அய்க்கோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது.
என்றாலும் இப்போது பொது ஜனங்களுடய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டு விட்டதாலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், இனி அதை யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்டதாலும், இப்போது அய்க்கோர்ட் டாரையும், இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது.
அதாவது “தென் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டி இருக்கிறது. அவற்றுள்: பார்ப்பனரல்லாதார் 42, முகமதியர் 17, இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர், அய்ரோப்பியர் ஆகியவர்கள் 17, தீண்டப்படாத வகுப்பார் உள்பட மற்ற வகுப்பார் 8. ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது” என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
(இது 11.06.1935-ந் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)”
‘ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுமயரியாதை இயக்கம் என்ன செய்தது?’ என்று கேட்டவர்கள், இதைச் சிறிது கவனித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டுமென்று ஆசைப்படுகிறோம்.
(‘குடிஅரசு’ – தலையங்கம் – 23.06.1935)
- விடுதலை நாளேடு,20.11.25
‘டி.எம்.நாயர் – தியாகராயர் – நான்’ நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டது எப்படி?
தோழர்களே! நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளைஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலுவலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இரயிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக்கின்றன?’ என்று கேட்கவும், தனக்குக் காவலாக ஓர் இரகசிய போலிஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் – பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம்பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.
ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914-இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே ‘இராட்சதர்களாக’ ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர்களா’க்கப்பட்டோம்.
பிறகுதான் அவர்கள் எங்களை விட்டுவிட்டு வேறு விபிஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.
காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915-இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.
ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் – வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான் – காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய, அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.
( ‘விடுதலை’ – 14.12.1950)
விடுதலை’ – 20.11.25