புதன், 21 ஜனவரி, 2026

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தி கேடானதே!

 


இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விவரம் தெரியாது இருந்த குழந்தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் இந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டு மென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூற வேண்டு மானால், இக்காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக் கிடமான தன்மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப் பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப் பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, “இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதி யாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது” என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன் டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார். “இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் “இது வெறும் வீம்புதானே, இந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்துவிடுவது தானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

“இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா” என்று கேட்டார். அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டு விடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுக்கப்படா விட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜ கோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச்சாரியாரும் “தாளமுத்துவுக் கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலே யிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்து விட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர் களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண் டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சே பிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாய மாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று இவ்வுத்தரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டு மென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக் குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்………

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக் கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது ‘ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்தி இஷ்டப் பாடமாக்கப்பட்டது’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

“வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபனை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக “இந்தியும் கட்டாய பாடமும்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட்சேபனை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபனையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, “இந்தி கட்டாயமாகத் தேவை” என்று சுதேச மித்திரன் ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக உத்தரவில் சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்கவில்லை என்று கூறியிருப்பதைக் காட்டி கட்டாய இந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டி ருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்ப வர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா? நல்லகாரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆட்சேபனை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபனையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆட் சேபனையைக் கண்டதும், உடனே தம் உத்தரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம்” நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்ல வில்லையே” என்பது தான். சர்க்கார் உத்தரவிலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் – எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் இந்தியை எங்கு கட்டாயம் என்றோம். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத் தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்? இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல் லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!

சாகசப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்தி ருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவ சியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்று எழுதியிருக்கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் “அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா” என்று மந்திரியார் கேட்கிறார். “நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே” என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

சிறுவர்களின் மீது திணிப்பதா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. இந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக் கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் இந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர்களைக் கொடுமைப் படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 – தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ்நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமே யல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங்கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி இந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 14.08.1948

-விடுதலை நாளேடு,18.01.26

ஏன் பெரியார் என்கிறோம்? – ப.திருமாவேலன் ஆசிரியர், கலைஞர் தொலைக்காட்சி

 


தமிழ்நாடு

தமிழ்நாட்டுப் பெண்கள் கூடி, ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோமா? இல்லை. பெரியாராய் நடந்து கொண்டார். பெரியாராய் சிந்தித்தார். பெரியாராய் செயல்பட்டார். தனது மிக வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரியாராய் மிளிர்ந்தார். அவர் வாழ்ந்த காலக்கட்டத்து பெரிய மனிதர்கள் அனைவராலும் பெரியாராய் போற்றப்பட்டார். மதிக்கப்பட்டார். அதனால் இன்றும் பெரியாராய் அழைக்கப்படுகிறார்.

இது சிறுமதியாளர்களுக்கு, கெடுமதியாளர்களுக்கு, கேவலமாய் வாழ்பவர்களுக்கு, மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டியது இல்லை. இந்தக் கழிசடைகள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தவரல்ல பெரியார்.

பெரியாரின் பெருவெற்றி என்பது தமிழைச் சுற்றி இருந்த களைகளை நீக்கியதில் அடங்கி இருக்கிறது.

“தமிழுக்குத் துரோகமும்
– ஹிந்தி மொழியின் இரகசியமும்’

‘தமிழுக்குத் துரோகமும் ஹிந்தி மொழியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை 1926ஆம் ஆண்டே எழுதி, ஹிந்தி எதிர்ப்பு கொள்கையை வடிவமைத்தார் பெரியார். ஹிந்தி எதிர்ப்பு, சமற்கிருத எதிர்ப்புக் கருவிகளை அவர் 1930களில் தயாரித்து வழங்கி இருக்காவிட்டால் இன்று தமிழின் கதி என்ன? ஹிந்தியே இங்கு ஆட்சி மொழியாக ஆகி அரை நூற்றாண்டு ஆகி இருக்கும். ஹிந்தித் திணிப்பை தமிழுக்கும் தமிழர் தம் பண்பாட்டுக்குமான ஆபத்தாக முதலிலேயே அடையாளம் கண்டார் பெரியார். ‘தமிழை ஹிந்தி அழிக்காது. எந்த மொழியாலும் அழிக்க முடியாது. ஆனால் தமிழர் தம் பண்பாடு அழிந்து போகும்’ என்று 1938 ஆம் ஆண்டு சொன்னார் பெரியார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சொன்னதில் தான் முழுப்பெரியார் பெரும் பேரொளி என வெளிப்பட்டார். ‘தமிழ்நாடு தனிநாடு’ என்று சொல்லி தமிழைக் காத்தார். அன்றைய போராட்ட வழித்தடத்தில் தான் 100 ஆண்டு கால தமிழ்க் காப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு வரை ஹிந்தி திணிக்கப்படுகிறதே தவிர ஆட்சி செலுத்த முடியாமைக்குக் காரணம் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே. அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.

இன்றைய பராசக்தி வரை!

“ஓ தமிழனே, தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவித்து விடும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும் தாய்ப்பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?” என்று கேட்டார் பெரியார்.
(‘குடிஅரசு’ 29.8.1937) அதுதான் இன்றைய ‘பராசக்தி’யின் வெற்றி வரை தொடர்கிறது.

தமிழ்த்தாயின் துகிலை இராஜாஜி உருவுவது மாதிரியும், ஒரு கையில் தொல்காப்பியத்தையும் இன்னொரு கையில் திருக்குறளையும் வைத்துள்ள பெண்ணை இராஜாஜி கத்தியால் குத்துவது மாதிரியும், ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தாயை ஹிந்தி பாம்பு கடிப்பதாகவும் கருத்துப்படங்களை 80 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டவர் பெரியார்.அதுதான் இன்றைய ‘பராசக்தி’யின் வெற்றி வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தை மய்யமாகக் கொண்டு ‘பராசக்தி’ என்ற படம் இப்போது வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வரும் இளைய தலைமுறையினர், ‘தமிழ்நாட்டில் மொழிக்காக எப்படிப்பட்ட போராட்டம் எல்லாம் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்’ என்கிறார்கள். இத்தகைய மொழிப் போராட்டத்துக்கான விதையை விதைத்தவர் என்பதால் அவரைப் பெரியார் என்கிறோம்.

ஆரியர் உற்சவங்களால்
தமிழர் பெருமை மறைக்கப்பட்டது

மொழிக்கு அடுத்ததாக தமிழனை தலைநிமிர வைத்தது அடுத்த சாதனை ஆகும். ஈரோட்டில் தான் தொடங்கிய அச்சகத்துக்கு தமிழன் அச்சகம், தமிழன் பிரஸ் என்று பெயர் சூட்டினார் பெரியார். (‘விடுதலை’ 29.12.1939) ஈரோடு தமிழ்த்திருநாள் விழாவில் பேசிய பெரியார், தமிழர் பெருமையை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஆரியர் உற்சவங்களால் தமிழர் பெருமை மறைக்கப்பட்டது, தமிழர் வீழ்ச்சிக்கு கம்பனின் இனத்துரோகமே காரணம் என்ற பெரியார், சேர சோழ பாண்டியர் ஆட்சி வரலாறு எங்கே என்று கேட்டார்.

“இன்று எல்லை என்று குறிப்பிடப்படும் திராவிடநாடு மாத்திரமல்லாமல் இமயம் முதல் கன்னியாகுமாரி தெற்கு வடக்காக மேல் கடலும் கீழ்க்கடலும் கிழக்கு மேற்காக உள்ள எல்லை பூராவும் திராவிட நாடாகவும் திராவிட மக்களாகவும் திராவிட மொழியாகவுமே இருந்திருக்கிறது” என்று பெரியார் பேசினார். (‘விடுதலை’ 22.1.1942) தமிழின ஒற்றுமை, தமிழ்நாட்டின் பெருமையை அரசியல் மேடைகளில் விதைத்தார் பெரியார். அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.

ஆங்கில ஆய்வாளர் பெர்னாட்
என்ன கூறுகிறார்?

திராவிட இயக்கச்  சாதனைகள் குறித்து மிக முக்கியமான ஆங்கில ஆய்வாளர் பெர்னாட் எழுதும் போது,  ”பல நூற்றாண்டுகளாக சமூக அமைப்பில் உயரடுக்கில் ஞானம், மேற்கத்திய கல்வியின் மூலம் பெறப்பட்ட பரந்த அறிவின் காரணமாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து ஏராளமான உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் அனுபவித்தனர். பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பங்கேற்கும் இந்தியர்கள் என்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்கள். பார்ப்பனர்களின் ஆதரவுடன் இந்தியர்களை பிரிட்டிஷார் சுரண்டினார்கள். பார்ப்பனர்களும் ஜாதி இந்துக்களும் சேர்ந்து அட்டவணை ஜாதியினர் மற்றும் நலிந்த பிரிவினரைச் சுரண்டினார்கள்.இதுதான் காலனிய காலத்து நிலைமையாக இருந்தது. 1900 களின் தொடக்க காலத்தில் ஏழைகளின் மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி போன்ற அரசியல் அமைப்புகளால் எடுக்கப்பட்டன. இதைத்தான் திராவிடக் கட்சியினர் ‘சுயமரியாதை’ என்பார்கள்” என்கிறார் பெர்னட்.

பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைத்து சமூகங்களும் தமிழ்நாட்டில் ‘சூத்திர’ப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன.இந்த பிரிவினையானது அவர்களுக்கு அரசியல் ரீதியாக பயன்பட்டது என்றும் சொல்கிறார். ”பார்ப்பனரல்லாதார் என்பது ஜாதி இல்லை, அது அரசியல்மயமாக்கப்பட்ட சொல்” என்கிறார்.

அனைத்து இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். அதிகாரமிக்க பதவிகள் முதல் சாதாரணப் பொறுப்புகள் வரை அனைத்தும் அவாள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த ஆதிக்கத்தை அடித்து நொறுக்க சமூகநீதி என்ற சம்மட்டியைத் தூக்கினார் பெரியார். நீதிக்கட்சி காலத்தில் போடப்பட்ட விதையை, அந்தக் காலத்திலேயே பட்டுப் போக வைக்க பல முயற்சிகள் நடந்தன. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் அதனை முறையாக அமல்படுத்த சட்டம் இயற்ற வைத்து, அந்த ஆட்சியையும் காப்பாற்றி, அந்தக் கட்சியையும் காப்பாற்றினார் பெரியார். சமூகநீதி என்ற ஒற்றைத் தத்துவத்துக்காகவே நீதிக்கட்சியைக் காத்தார் பெரியார்.

சமூகநீதியை சேதாரம் இல்லாமல்
காத்தவர் பெரியார்

அதே சமூகநீதியை காங்கிரஸ் ஆட்சியாளர்களான ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி, காமராசர், பக்தவத்சலம் ஆட்சியிலும் சேதாரம் ஏற்படாமல் காத்தவர் பெரியார். நீதிமன்றங்களால் அதற்கு ஆபத்து வந்த போது பெரும் போராட்டம் நடத்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்ய வைத்தார் பெரியார். 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏறிய அந்தச் சொற்கள் தான், இன்று தமிழன் தலைநிமிர்ந்து வாழ, ஆள, பதவிகளைப் பெற, பொறுப்புகளுக்கு வரக் காரணம். சட்டத்தின் மூலமாக தமிழனுக்கு அதிகாரம் மிக்க பதவிகளைப் பெற்றுத் தந்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.

தமிழ்நாட்டு  மக்களை மொழி – இன அடிப்படையில் இணைத்ததே பெரியாரின் பெரும் பணியாகும். பார்ப்பானைத் திட்டினார், கடவுளைப் பழித்தார் என்பது என்பது எல்லாம் அவரது ஒரு சில கூறுகள். இவற்றை எல்லாம் செய்வதற்கு அடிநாதமாக இருந்தது எது? மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக தமிழினத்தை ஆக்குவது தான். ‘தமிழா, இன உணர்வு கொள்’, ‘தமிழா, ஆரியத்துக்கு அடிமை ஆகாதே’ என்ற முழக்கத்தின் கிளைகள் தான் மற்றவை அனைத்தும்.

கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்து

தமிழ்ப் பண்பாடு என்ற பொதுப்பண்பாட்டை திராவிட இயக்கம் நிறுவியதை அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அடையாளப்படுத்துகிறார்.

“தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு ‘பொதுமைப் பரப்பினை’ சமயச் சார்பற்றதாக்கியமையே.  சமயச் சார்பற்ற ஒரு ‘தமிழ்ப் பண்பாட்டு’ இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.

திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக  தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம்.

இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், ‘உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்’  ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின; தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின. அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.

தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.

திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்துநிலைப் போக்கின் ஒரு முக்கிய பெரும்பேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும். தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வு பற்றிய அரசியல் பிரக்ஞை கொள்வதில் திராவிட இயக்கத்தின் பங்கு கணிசமானதாகும். இத்துறையில் ம.பொ.சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சியும் ஓரளவு தொழிற்பட்டதுண்மையெனினும், தமிழ் மக்கள் தாங்கள் ஓர் அரசியற்குழுமம் என்ற உணர்வைப் பெறுவதில் இவ்வியக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்” என்று சிவத்தம்பி எழுதுகிறார்.

பெரியாரைக் கேவலமாக விமர்சிப்பதன் பின்னணி

இன்று வரை ஆரியர்களால், ஆரிய அடிவருடிகளால், பார்ப்பனர்களால், பார்ப்பன தாசர்களால், பார்ப்பன கைக்கூலிகளால் பெரியார் மிகக் கேவலமாக விமர்சிக்கப் படக் காரணம், தமிழனைத் தமிழன் ஆக்கிவிட்டாரே என்பதுதான். பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் எதையோ பேசிவிட்டுப் போயிருந்தால் இவர்களே ‘பாலாபிஷேகம்’ செய்து கொண்டாடி இருப்பார்கள். ஆனால் பெரியார், விதைத்துவிட்டுச் சென்று விட்டார். அது இன்று விருட்சமாக ஆகி விட்டது. பெரியார் காலத்தை விட பெரிதாகி விட்டது. பெரியார் காலத்தை விட அதிகமாகி விட்டது. அது தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

”இன்று பேசும் நான் கிழவனாக இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் இளைஞர்கள் வருவார்கள்” என்றார் பெரியார். இளைஞர்கள் வந்தார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆரியமும் அடிவருடிகளும் தோற்ற இடம் இதுதான்.இதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.

ஜாதி வேற்றுமை எதிர்ப்பு, மத ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, மொழி உணர்வு, இனப்பற்று, பெண் விடுதலை,விதவை மறுமணம், குழந்தை திருமணம் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, எல்லோர்க்கும் எல்லாம், தொழிலாளர்க்கு வியாபாரத்தில் பங்கு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு,   – ஆகிய அனைத்தையும் இன்று நாம் பேசி வருகிறோம். இவை அனைத்தையும் இம்மண்ணில் விதைத்தவர் அவர் தான். அதனால் தான் அவரைப் பெரியார் என்கிறோம்.

பெரியார் என்பது உடல் அல்ல!

பெரியார் என்பது உடல் அல்ல. தாடியும் மீசையும் வளர்த்து வயதான காலத்தில் செத்துப் போன ஓர் உடல் அல்ல. பெரியார் என்பது ஒரு கொள்கை. கோட்பாடு. முழக்கம். அந்தக் கொள்கைக்கான தேவை இருக்கும் வரை அவர் பெரியாராகவே இருப்பார். சிலையை இடிக்கலாம். அவர் படத்தைக் கிழிக்கலாம். அல்லது வாயால் கனைக்கலாம். குரைக்கலாம். இது எதுவும் அவரை துளிகூட சேதாரம் செய்யாது. ஏனெனில் அவர் பெரியார்!

 - விடுதலை நாளேடு,14.01.26

தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் – குறள் மாநாடு ஒரு வரலாற்று ஆவணத் தொகுப்பு – கலி.பூங்குன்றன்



இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியாரும் – திராவிடர் கழகமுமேயாகும்.

புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 15.01.1949 அன்று திருவள்ளுவர் – குறள் மாநாடு கூட்டப்பட்டது.

பெரியார் வேண்டுகோள்!

“திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமையையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.

திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு; தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரச்சாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கட்டுரை, கவிஞர் கலி.பூங்குன்றன்

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது” என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.

ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையேயாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.

எனவே, குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஈ.வெ.ரா (விடுதலை 10.01.1949)

திருவள்ளுவர் குறள் மாநாடு

காரியக் கூட்டம் மவுண்ட்ரோடு மீரான் சாயபு தெரு கட்டடத்தில் 8.1.1949 அன்று நடந்தது. பெரியார் உட்பட சுமார் 100 பேர் வந்திருந்தனர். சப்-கமிட்டிகளும், தொண்டர் பதிவுகளும் நடந்தன.

1) கொட்டகை சம்பந்தமான காரியங்களும், அணி விரிப்பு, தண்ணீர் வசதி முதலியவைகளும் பொறுப்பேற்க சப்-கமிட்டியாக தோழர்கள் பாவலர் எஸ்.எஸ். அப்துல்காதர், எஸ்.எம். ஜக்ரியா, வீரராகவன், துரைராஜ், எம்.கே.சாமு,
எம்.கே.எஸ். சாயபு தம்பி, வி. முனுசாமி ஆகியோரும்,

2) லைட் (விளக்கு), ரேடியோ, லைட் அணி முதலிய பொறுப்பு ஏற்க தோழர்கள் கூத்தரசன், தலைவர் பரமசிவன், எ.ஆர். சேசாசலம் ஆகியோரும்,

3) வெளியூரிலிருந்து மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு இடம் முதலிய வசதிக்குப் பொறுப்பேற்க தோழர்கள்
பி.வீரராகவன், எ.ஆர்.சேசாசலம் ஆகியோரும்,

4) விளம்பரம், கடிதப் போக்குவரத்து, அழைப்பு, நிகழ்ச்சிக்குறிப்பு ஆகியவை பொறுப்பேற்க புலவர் பு.செல்வராஜ், லிங்கராசு ஆகியோரும்,

இக்காரியங்களைக் காரியக் கவனிப்பு செய்து அடிக்கடி அறிக்கை வெளியிட, தோழர் கள் டாக்டர் கணேசன், கே.கோவிந்தசாமி ஆகியோரும் கேட்டுக் கொண்டு யாவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

குறள் மாநாட்டுத் தொண்டர்கள்

தொண்டர்களாக அந்த இடத்திலேயே சுமார் 50 பேர் அதாவது, தணிகாசலம், வெ.கண்ணன், எம்.குப்புசாமி, தா.வேணுகோபால், லிங்கராசு, எஸ்.பி.டி. திராவிடமணி, சுந்தரவதனம், டி.தாமஸ், சி.கணேசன், எஸ். பழநிவேலு, தெ. அண்ணாமலை, டி.சி.முருகேசன், டி.ராமலிங்கம், பி.ஆர். இராமச்சந்திரன், பி.எஸ். பழநி, சி.எஸ். மோகன சுந்தரம், எஸ்.வி. சீனிவாசன், சி.பிரசாரம், எஸ்எஸ். ராசவேலு, சி.ஆர்.சின்னப்பன், அனந்தசயனம், ரா.சண்முகம், ச.ப.சிவன், கே.மாணிக்கசாமி, எம்.டி.செல்வராசன், ஊ.கு.ராமநாதன், தி.ரா.பழநி, இராமானுஜம், மோகனரங்கம், காசிராசன், எ.இ. சுப்பிரமணியம், டி.எம்.வி. ராஜன், எஸ்.கணேசன், எம்.பி. பாண்டுரங்கம், சி.என்.சண் முகம், என்.கே.குப்புசாமி, எம்.ராஜூ, பெண் தொண்டர்கள் அமைப்புக்கு தோழியர் அலர்மேலம்மாள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

மற்ற காரியங்களைக் கவனிக்க, 10.01.1949 மாலை 5 மணிக்கு பவழக்காரத் தெரு, பாவலர் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்கள் கட்டடத்தில் கூட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் தோழர் மணிமொழியார் நன்றி கூற, கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது.

மேலும் குறள் மாநாட்டு
பெண் தொண்டர்கள்:

  1. அலமேலு அப்பாதுரை அம்மாள், 2. சுசீலா முத்துக்கிருட்டிணன், 3. டி.பாப்பம்மாள், 4.எம்.எம்.லட்சுமி அம்மாள். மேலும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள்; து. குப்புசாமி, அப்துல் அஜீஸ், டி.கே.க. ராஜன், பி.சோமசுந்தரம், ம.கு. நெடுமாறன், ஏ.தாஸ் , வி. சங்கரன், மகிமை தாஸ், கி.பா.அய்யன், சி.என். கிருட்டிணசாமி, கே.இராமு, பி.டி.ஜனநாயகம், ம. ராஜேசுவரன், ச.வீ.வரதன், எம்.கண்ணன், கொ.பெருமாள், ச.தங்கவேல், ச. சோமசுந்தரம், கே.நடேசன், கே.பி. சந்திரன், மு.சடகோபன், ஆ.சம்பந்தன், ஜி.கணேசன், செ.ஆரோக்கிய தாஸ், ஆர்.சி.சுந்தரராஜி, எம்.சிவஞானம், நா.ரா. பத்மநாபன், ச. சந்திரபாபு, நாகையன், சி.எம்.சுவாமி, ம.இராவணதாஸ், பி.டி.டி. தேவராஜூலு, எஸ்.வி. சண்முகம், பி.எஸ்.பழனி, இ.ஆர்.கோவிந்தசாமி, எம்.எஸ்.சாமிநாதன், கோதண்டன், டி.ஜம்புலிங்கம், சாளை கபீர், ராவணன், துரைக் கண்ணம்மாள்.

நாளை 12.1.1949 மாலை மீரான் சாயபு வீதி மாநாடு காரியாலயக் கட்டடத்தில் தேர்வு நடத்திய பின் கடமை உரை, பயிற்சி நடைபெறும்.

திருவள்ளுவர் குறள் மாநாடு
அறிக்கை (12.1.1949)

மாநாட்டு ஏற்பாடுகள் அதற்குரிய தனித்தனி உட்கழக உறுப்பினர்களால் விரைந்து செய்யப்பட்டு வருகின்றன. பந்தல் வேலை பெரும்பாலும் முடிவு பெற்றுவிட்டது. கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கத்தக்க அளவு பந்தல் போடப்பட்டிருக்கிறது. பந்தலுக்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.

நேற்று பெரியார் அவர்களுடன் தளபதி அண்ணா அவர்களும் நகரசபை உறுப்பினர் வி.முனுசாமி அவர்களும் மற்றும் பல பெரியார்களும் வந்து பந்தலையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பந்தலைப் பார்த்துச் செல்கின்றனர். சென்னை முழுவதும் குறள் மாநாட்டைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மாநாட்டு நுழைவுச் சீட்டுகள் இப்போதிருந்தே விற்பனையாகத் தொடங்கிவிட்டன.

தேவையான அளவுக்கு மேல் 100 தொண்டர்கள் வரை பதிவு பெற்றுள்ளனர். தொண்டு செய்வதில் உண்மையான ஆக்கமும், பற்றும் உள்ள இளைஞர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். மாநாட்டைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர்: செயலாளர், திருவள்ளுவர் குறள் மாநாடு, 1. மீரான் சாயுபு தெரு,மவுண்ட் ரோடு, சென்னை என்ற முகவரிக்கு எழுதுங்கள். இதுவரை நடைபெறாத முறையில் சென்னையில் குறள் மாநாடு நடப்பதற்கான முறையில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஆராய்ச்சிமிக்க சொற்பொழிவுகளை ஆற்ற பேரறிஞர்கள், புலவர் பெருமக்கள் பலர் இசைந்துள்ளார்கள். மாநாடு வெற்றிகரமாகவும், பயனுடையதாகவும், நடைபெற தங்கள் அனைவருடைய கருத்துகளையும் முன்னதாகத் தெரிவிப்பின் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்படும். புலவர்கட்கு அழைப்பிதழ்கள் தலைமைத் தமிழாசிரியர் பேருக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற புலவர்கள் அவர்களிடம் பெற்று கொள்வார்களாக.

-சி.டி.அரசு,காஞ்சி மணிமொழியார், செயலாளர்கள்.

முதல்நாள் மாநாடு (15.01.1949)

மாநாட்டில் கட்சி கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும், உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர். காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும்ப ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 9.45 மணிக்கு நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கை அளித்து உபசரித்தார்கள்.

அனைவரையும் வரவேற்றார் பெரியார்!

சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர்
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் மாநாட்டுப் பந்தலை அடையவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ். கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலையடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன், அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார். மாநாட்டுச் செயலாளர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இயற்கையானது குறளை
பெரியாரிடம் ஒப்படைத்துள்ளது

-பேராசிரியார் சி. இலக்குவனார்

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக் கூறினார் பேராசிரியர் இலக்குவனார். ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்குக் கதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடையதல்லவென்றும், கம்பனையும் வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும், பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும், ‘உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல்’ என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்சியத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்சியக் கொள்கைகளை விளக்க திரு. லெனின் தோன்றியது போல், வள்ளுவருடைய கருத்துகளுக்கு விரிவுரை வழங்க நம் பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும், அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.

2 ஆம் நாள் மாநாடு

16.1.1949 காலை 9.30 மணிக்கு திரு. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்.

சரியாக 10 மணிக்கு கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் கூறி சக்ரவர்த்தி நயினார் அவர்களை பெரியார் அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வழி மொழிய ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைதட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார். பின்னர் பெரியார் அவர்கள் சிறிது நேரம் பேசிய பின், தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

பெரியார் குறளை ஏந்தியது ஏன்?
வரவேற்புரையில் திரு.வி.க.விளக்கம்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திருக்குறளே. திருக்குறளைப் பயின்று பயின்று அதன் உள்ளுரையை உணர உணர திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு மேலும் மேலும் விளங்குவதாகும்.

திருவள்ளுவர் தமிழர். திருக்குறளைத் தமிழில் எழுதினார். இது உறுதி. மிக உறுதி. முழு உறுதி. அய்யமில்லை. இது உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், குறள் தமிழ் நூலன்று. தமிழர் நூலன்று. உலக நூல். உலகப் பொது நூல், சமதர்ம நூல்.

குறளைப் படிக்கும் முன்னர், படிப்பவர் (Sexual Science) பால் அறிவு பெற்ற வராதல் வேண்டும். ஆண்-பெண் சேர்க்கை பற்றிய விஞ்ஞான அறிவின்றி திருக் குறளைப் பயின்றால் குறளின் முழு உண்மையையும் உணர்தல் அரிது. அரிது. குறளைப் பயிலும் முன் மார்க்சிசமும் (Marxism) அறிந்திருத்தல் வேண்டும். மார்க்சிசம் அறியாமல் குறளைப் பயின்றால் பயனில்லை. மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். பிரிந்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். இதுதான் மார்க்ஸ் தத்து வத்தின் அடிப்படை. குறள் நூலின் அடிப்படையும் இதுதான்.

தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் அவர்களே ஆவார். இந்த மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவர் பெரியார் அவர்களே தான். என்னைச் செயற்கை வரவேற்புத் தலைவராக்கிற்று.

சில சமயங்களில் நான் தத்துவம் (Thesis) ஆக இருந்திருக்கிறேன்; அவர் எதிர்த் தத்துவமாக இருந்திருக்கிறார். சில சமயங்களில் நான் (Anti Thesis) ஆக இருந்திருக்கிறேன். அவர் Thesis  ஆக இருந்திருக்கிறார். ஆனால், இது போதோ தத்துவம்(Thesis)  எதிர் தத்துவம் (Anti – Thesis) இரண்டும் மறைந்து Synthesis (ஒருமைப்பாடு) ஏற்பட்டிருக்கிறது.

பெரியாருடைய அறிவியக்கம் புரட்சி இயக்கம் ; பகுத்தறிவு இயக்கம் தோன்றியது, வளர்ந்தது. எப்படி எப்படியோ சென்றது. நானும் பெரியாரும் பலமுறை போரிட்டோம். ஆனால், அக் காலத்திலேயே நான் சொல்லியது உண்டு. இத்தகைய ஒருமைப்பாடு Synthesis ஏற்படப் போவது உறுதி, உறுதி என்று!

யார் என்ன கூறினாலும் கூறுக. பெரியாருடைய இயக்கம் – அறிவியக்கம், நாடுகளின் எல்லையை, மொழிகளின் எல்லையை, சமயங்களின் எல்லையை, சாதிகளின் எல்லையை, இனங்களின் எல்லையை எல்லா எல்லைகளையும் கடந்தது. அது உலகப் பொது இயக்கம்.

பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.

யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி! உறுதி! என்று உரையாற்றினார் திரு.வி.க.

(விடுதலை, 15.1.1949)

பெரியார் பேருரை:
ஆரியத்தை ஒழிக்கும் ஒப்பற்ற
ஆயுதம் திருக்குறளே!

சொற்பொழிவின் தொடக்கத்திலேயே, தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும். அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்ட போதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக் கொண்டமை, தான் நடந்து கொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத் தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக் கொடுக்கும் வரை சற்று சங்கடம் ஏற்படினும் அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துகள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமே அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை நம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே நமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள் வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாள்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும் இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கி நாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரசாரம் வெற்றி பெற்றுவிட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்து விட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு
வாழ்க்கையை நிர்ணயிப்போம்!

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டதென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிகமிக மலிந்துவிட்ட தென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும், மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும் அவருக்கே பயன்படாது போய் விட்டமை காரணமாகவேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற விசாரத்தையெயல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டு விட்டோம். குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின் படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.

அண்ணாவின் நாடகம்

16.1.1949 இரவு 10 மணிக்குத் அண்ணா அவர்கள் குழுவினரால் ‘சந்திரமோகன்’ என்கிற நாடகம் வள்ளுவர் மாநாட்டுப் பந்தலில் இனிது நடிக்கப் பெற்றது. நாடகத்தைக் காண வேண்டி மக்கள் 7.30 மணி முதற்கொண்டே சூழ்ந்திட ஆரம்பித்து விட்டனர். 9 மணிக்குள்ளாகவே பந்தல் நிறைந்துவிட்டது. இதுவரை இம் மாதிரி பெருந்திரளான மக்களிடையே சென்னையில் நாடகம் நடைபெற்றிருக்க முடியாது என்பது வெளிப்படை. நாடகம் சுமார் 2 மணிக்கு முடிந்தது.

தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில்
திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.அப்பாதுரையார், இலக்குவனார், அ.சக்கரவர்த்தியார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், திருக்குறள் முனுசாமி, பெரும்புலவர் கந்தசாமி (முதலியார்), எஸ்.முத்தையா (முதலியார்), புலவர் குழந்தை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சி.டி.டி.அரசு காஞ்சி மணிமொழியார், டி.கே.சண்முகம், நாவலர் இரா.நெடுஞ்செழியன் முதலியோர் பங்கேற்று உரையாற்றினர்.

பிறகு நடிகர் டி.கே.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்.

இறுதியாக தோழர் க. அன்பழகன் நன்றி கூறினார். மாநாடு நள்ளிரவு 2.30 மணிக்கு முடிவுற்றது.

- விடுதலை நாளேடு, 14.01.26