வியாழன், 20 ஏப்ரல், 2017

என்கருத்தும்அம்பேத்கர்கருத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும்!

தந்தை பெரியார் அவர்களுக்கு 15-2-1959 ஞாயிறு காலை சுமார்

10-30 மணியளவில் டெல்லி பகார்கஞ்சில் எம்.எம்.ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவன் சார்பாக சிறப் பானதொரு வரவேற்பு வழங்கப் பட்டது.

பேரன்புமிக்கத் தாய்மார்களே! அம்பேத்கர் பவன் உறுப்பினர்களே! நண்பர்களே!

உங்கள் அனைவரையும் காணு வதிலும், உங்களது பேரன்பை பெறு வதிலும் நான் உள்ளபடியே பெரு மகிழ்ச் சியடைகின்றேன். சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிற என்னைப் பாராட்டு முகத்தான் நீங்கள் அன்புடன் அளித்த நல்வரவேற்பிற்காக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம் பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட் களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல. பலவிஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல. அவைகளைப்பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பல மாகவும் எனது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதி யாகவும் பலமாகவும் லட்சியங்களைக் கடைப் பிடித்தார். உதாரணமாக பார்ப்பனர் போற்றி பிரச்சாரம் செய்யும் கீதை என்பதை முட்டாளின் உளறல் என்று சொன்னவர்!

இப்படி சில விஷயங்களில் மாத்திரமல்ல. பலவிஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயம்தான் எனக்கும் இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப் பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுவதும் உண்டு.

உதாரணமாக, பர்மாவில் நடந்த உலக புத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி! இப்படி நாம் பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன பலன் ஏற்பட முடியும் வா நாம் இரண்டுபேரும் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிடுவோம்என்றார். நான் சொன்னேன் ரொம்ப சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது ஜாதி ஒழிப்பைப்பற்றித் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றேன். இந்து கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும் எரித்தும் இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் இப்போது எடுத்துச் சொல்லி மக்களிடையே எடுத்துசொல்லி பிரசாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக்கூடாது என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே நான் வெளியில் இருந்துகொண்டே புத்த மார்க்கத்தை பிரசாரம் செய்து வருகிறேன் என்பதாகச் சொன்னேன்.

என் பிரச்சாரத்தில் ஜாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படை ஜாதி, மதம் ஆதாரம் ஒழியவேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்த மார்க்கத்தில் சேரும்போது என்னென்ன பிரமாணம் எடுத்துப் படித்தாரோ (இராம னையும், கிருஷ்ணனையும் கடவுள்களாக வணங்கமாட்டேன் என்பன போன்றவை) அவைகளைத்தான் நான் எங்கள் நாட்டில் சுமார் 20, 25 வருடகாலமாகச் சொல்லிவருகிறேன். அதனால்தான் எங்கள் நாட்டில் பத்தாயிரக்கணக்கான மக்கள் ராமனையும் பிள்ளையாரையும் கொளுத்தியும் உடைத்தார்கள். இந்த பிரமாணத்தில் உள்ள பல விஷயங்கள் எனக்கு பல வருஷங்களுக்கு முன்பே தோன்றியதுதான் அவைகளை எங்கள் பிரச்சாரமாகவே செய்து வருகிறோம். இதைப் படித்துவிட்டு நான் சொல்லவில்லை. எப்படியோ எங்களுக்கு அப்படித்தான் அபிப்பிராயம் தோன்றுகிறது.

புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.

நேற்று நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பார்ப்பன நிருபர் என்னை வந்து சந்தித்தார். அவர் கேட்டார் நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல் லுகிறாயே அதுவும் ஒரு மதம்தானே  என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அப்படி பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் பார்ப்பனர்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்! அதற்கு அவர் சொன்னார். ஏன் அதில் புத்தர் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.

புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்று மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கி யதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண் டிருக்கிறாயோ அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.

தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக துருவித்துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியைக் குறிப்பதேயாகும்.

அது போலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள் நீ ஏற்றுக் கொண்டுள்ள தர்மங்களை கொள்கை களை றிக்ஷீவீஸீநீவீஜீறீமீs உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப்பிடித்து வரவேண்டும். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நடக்கக்கூடாது.  உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது நீ நல்லபடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத்தின் பெருமையை நீ கருதவேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.

ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம்.

நீ உன் தலைவனை மதி!

உனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!

உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா! என்பதாகும்.

நீங்களெல்லாம் உங்கள் புத்திக்கு மரியாதை கொடுத்து அது கூறும் கொள்கைகளை ஏற்று புத்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றக் கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக்கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உங்களை அறியாமல் உள்ளே புகவிடக் கூடாது.

எல்லோரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மற்றெல்லா பிற்பட்ட மக்களும் இந்த மாதிரியான நிலைக்கு வருவதற்காக மிகவும் பாடுபட வேண்டும்.

நீங்கள் இந்த மாதிரி இருப்பதற்காக பார்ப்பாறும் இந்த அரசாங்கமும் உங்களுக்கு மிகவும் தொந்தரவு, தொல்லைகள் தரக்கூடும். அதெல்லாவற் றையும் நீங்கள் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய அரசாங்கம் இந்துமத பார்ப்பன ஆட்சியாகும்.

உங்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அரசாங்கம் கொடுமைக்கு தியாகம் செய்தாவது இந்தக் கொள்கைகளைப் பரப்ப நாம் உறுதியோடு பாடுபட முன் வரவேண்டும்.

நம்மிடையே பல ஜாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பல ஜாதிகள் கிடையாது: நாம் இரண்டே ஜாதிகள். ஒன்று பார்ப்பனர்கள் இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான் மதப்படியும் சாஸ்திரங்கள்படியும். நாம் இரண்டு பிரிவினர் கள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்கு ஆக தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி ஜாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக, உணரவேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே ஜாதிதான்.

இப்படிப்பட்ட நாம் இப்படி நமது இழிவைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள்.

ஆசையால் பார்ப்பனர்களுக்கு பதவி அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்பப் போகிறவர் களைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துத்தான் எனது கவலை எல்லாம்.

எனக்கு இப்போது 80 வயது ஆகிறது. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? ஆச்சு முதல்மணி (திவீக்ஷீst ஙிமீறீறீ) அடித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்க முடியும்? எனக்கு இனி வாழ்க்கையில் இதைவிட வேறு இலட்சியம் இருக்க முடியாது!

எங்கள் நாட்டைப் பொறுத்த வரை பார்ப்பனர்கள் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக எந்தவித செல்வாக்கும் பெறமுடியாத அளவுக்கு நாங்கள் அங்கே ஆக்கி வைத்து விட்டோம். இங்கே அவர்கள் தன்மைபற்றி தக்க ஆதாரம் இல்லாததால் லக்னோவில் பார்ப்பனர்கள் கலவரம் செய்யக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால் எங்கள் பக்கத்தில் அவர்கள் எங்களைக் கண்டு நடுங்குகிற நிலையில் இருக்கிறார்கள். பல இடங்களில் பார்ப்பனர்கள் தனியாக நடக்க தயங்கு வார்கள்.

பார்ப்பனர்கள் கொஞ்சப் பேர்தான் என்றாலும் கட்டுப்பாடாக நம்மீது தப்புப்பிரச்சாரம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில் எங்கள் கட்சியை பார்ப்பானை எதிர்க்கிறகட்சி (கிஸீtவீ ஙிக்ஷீணீலீனீவீஸீ னீஷீஸ்மீனீமீஸீt) என்றே அழைக்கிறார்கள்.

அந்த அளவுக்கு நாங்கள் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறோம்.

எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களில் ஒன்று பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் யாரும் பார்ப்பான் கடைக்கு சென்று எதுவும் வாங்கக்கூடாது என்பதாகும். (பலத்த கைத்தட்டல்)

எந்தவித சடங்குகளுக்கும் நாங்கள் பார்ப்பானை அழைப்பதில்லை. அதனால்தான் ரொம்ப பார்ப்பனர்கள் எங்கள் நாட்டைவிட்டு இங்கு வந்து விட்டார்கள். மேலும் வர வாய்ப்புத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். (கைத்தட்டலும் சிரிப்பு) நான் உங்களுக்குச் சொல்லுவதும் இதுதான் நீங்கள் கூடுமானவரை எல்லா விதத்திலும் பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டும்.

பசி உயிர் போகிறது என்றாலும்கூட பார்ப்பான் கடையிலிருந்து எதையும் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் நமக்கு உறுதிவேண்டும். பார்ப்பன பகிஷ்காரத்தை தீவிரப்படுத்துவதே எனது அடுத்த திட்டமாக இருக்கும்.

உங்களுக்கும் சொல்லவேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறாக நினைக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்லவென்றும்! இது மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம் பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும் பண வினியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளை யாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும் நீங்கள் வேறு என்றும் எண்ணக் கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதி பல இனம் ஆக ஆக்கிவிட்டார்கள்.

ஆகவே இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப் பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறில்லை. இதையெல்லாம் உண்மை என்று நீங்கள் நம்பவேண்டாம்.

பார்ப்பான் எதை எதைச் செய் கிறானோ அதையெல்லாம் இவன் அவனைப் பார்த்து அதேபோல் இவனும் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே அவன் (பார்ப்பான்) அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.

ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பார பெண் வந்தால் அவள் கையில் ஒரு சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்த குழாய்க்கு மேல் ஊற்றி கழுவிவிட்டு பிறகு தான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப்பார்த்து நம்மவன் வீட்டுப்பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி விட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்துவீட்டு (முஸ்லிம்) சாயபு பொம்பளையும் வந்து சொம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து குழாய்மேல் ஊற்றி கழுவிவிட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

முதலாவது பார்ப்பார பொம்பளை தண்ணீர் ஊற்றுவது மற்ற ஜாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே தீட்டுப் பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள்.

இதைப்பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பொம் பளைகளுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அது போலத்தான் பார்ப்பனரல்லாதாரில் ஜாதி வெறியும் பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர்கள் நிலைமை அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம் அறியாமையும் பார்ப்பானைப் பார்த்து காப்பி அடிப்பதுமே தவிர அகம்பாவம் (பார்ப்பனர்களைப்போல) கிடையாது. சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மாணவன் தானே சரிப்பட்டு விடுவான். ஆகவே இதற்காக நீங்கள் பெரும் அளவு உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி; பார்ப்பன மதம் பார்ப்பனப் புரா ணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள். இவைகள்தான் நமக்கு எதிரிகளே ஒழிய வேறில்லை. பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

ஆகவே நீங்கள் இவைகளை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இதற்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும் என்று கூறி இந்த வரவேற்புக்காக உங்களது அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து முடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறி முடித்தார்கள்.

- விடுதலை 22.09.1959

-விடுதலை 16.04.17

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்


அய்யாவின் அடிச்சுவட்டில்....137

தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
20.8.1978 அன்று தஞ்சையில் தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மண்டலச் செயலாளர் (தற்பொழுது திராவிடர் கழக சட்டத்துறைச் செயலாளர்)  வழக்குரைஞர் இன்பலாதன்_மலர்க்கண்ணி மணவிழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் முகவை மாவட்ட தி.க. தலைவர்  ஆர்.சண்முகநாதன்  பி.ஏ., பி.எல்., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில், நான் தலைமை உரையாற்றும் போது, இந்த விழாவானது ராகுகால மணவிழா மணவிழாவிலே எல்லோரும் நேரத்தை மிக முக்கியமாகக் கருதுவார்கள். மணவிழா 4 மணியிலிருந்து 6 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மணிக்குள் இந்த விழா நடைபெற வேண்டும் என்பதிலே நண்பர் இன்பலாதன் அவர்களும் அய்யா சண்முகநாதன் அவர்களும் மிகுந்த ஆவலாக இருந்தனர்.
இப்படி எல்லாம் புதியதாக நடக்கப் போகும் போது நாம் ஏன் எமகண்டம், ராகுகாலம் பார்க்க வேண்டும்? எல்லா நேரமும் நல்ல நேரம்தானே. இருதயத்தை மாற்றிக்கூட மனிதனை வாழ வைக்கிறார்கள். இக்காட்சியை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தோம். இன்றைக்கு மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு செயற்கை சிறுநீரகத்தின் மூலமாக சிறுநீர் வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் ஏன் நல்லது கெட்டது பார்க்க வேண்டும்.
நாடு புதிது புதிதாக முன்னேறி வந்த காரணமே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பிரச்சாரம்தான். பெண்களுக்கு இருக்கும் தொல்லை மகப்பேறு தான். இதனால் வெளியேகூட வரமுடியாமல் இருக்கிறார்கள். வெளிவே வராமல் இருப்பதைக் கண்டு எங்கே அவர்கள் என்று கேட்டால் ‘She is Family way’  என்று கூறிவிடுகிறார்கள். காரணம் அவர்கள் மகப்பேறு தொல்லைதான். இவர்களுக்கு மதிப்பும் இல்லையாம். ஆண்களுக்கு வரமுடியாத நிலை உண்டா? இல்லை ஆணும், பெண்ணும் சேர்ந்துதானே வாழ்க்கை நடத்துகிறார்கள் ஆணுக்கு மட்டும் ஏன் ‘Family Way’ இல்லை. இனிமேல் ஆணும் பெண்ணும் இருவரும் வெளியே எப்போதும் வரும் நிலை வரும் என்று குறிப்பிட்டேன்.
``திட்டமிட்டு வாழுங்கள் உறுதி மனப்பான்மையுடன் வாழுங்கள். இப்படி நடக்கும் திருமணங்களில் மணமக்களுக்கு ஒரு குறையும் வராது. பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள் என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.
விழாவில் கழகப் பொறுப்பாளர் கா.மா. குப்புசாமி, தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ, தஞ்சை நடராசன், முன்னாள் நகரத் தந்தை பெத்தண்ணன், முகவை மாவட்ட தி.க. செயலாளர் என்.ஆர். சாமி, மாரிமுத்து, சிதம்பரம், வக்கீல் சண்முகம், சுப்ரமணியம், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மணமகன் இன்பலாதன் நன்றியுரை ஆற்ற விழா முடிவடைந்தது. விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டில் வரலாற்றுப் பிரகடனமாக அய்யா அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, இனி, அரசாங்க அலுவலகங்களில் இந்த எழுத்துச் சீர்திருத்த முறைதான் பின்பற்றப்படும் என்று அறிவித்தது  குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் கவனத்திற்கு அறிக்கை வாயிலாகவும்,  திராவிடர் கழகம் பலமுறை வலியுறுத்தி வந்ததை முன்பே நாம் பார்த்தோம்.
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று தமிழ்நாடு அரசு பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பின் முழுவிவரம் இங்கு தரப்படுகிறது.
தமிழ்நாடு அரசு
பொது (செய்தி, மக்கள்_தொடர்பு)த் துறை
செய்தி வெளியிடு எண்:449 நாள்:19.10.1978
பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
தமிழ்நாடு அரசு அமலாக்குகிறது
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்று, அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்மொழி எழுத்துத் தொகுதி எளிதில் கையாளமுடியாதபடி அதிகமாக உள்ளதால், அச்சிடுதல், தட்டச்சு செய்தல் போன்றவற்றில் அதிக நேரம், விரயம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ் எழுத்துத் தொகுதிகளில் சீர்திருத்தம் தேவை என பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள், தமது வாழ்நாளில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கையாண்டு வந்ததுடன் அது அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று மிகவும் வலியுறுத்தி வந்தார். அதனை நடைமுறைப்படுத்தத் தக்க ஆணை வெளியிட வேண்டி பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவினர் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு விழாவினை 18.9.1978 அன்று ஈரோட்டில் தொடங்கிவைத்து, பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு செயற்படுத்துமென தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பரிந்துரை செய்துள்ளார்.
தமிழக முதல்வர் அறிவிப்பிற்கிணங்கவும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்றும், சீர்திருத்திய எழுத்துக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், உள்ளாட்சித்துறை வரம்பிற்குட்பட்ட நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும், தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ்களும் பருவ ஏடுகளும், தமிழ்ப் புத்தகம் வெளியிடுவோரும், அச்சிடுவோரும் சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்களைக் கையாள வேண்டுமென அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு வெளியீடுகளிலும், அரசிதழ்களிலும் மற்றும் தமிழில் அச்சிடப்படும் எல்லா இனங்களிலும் சீர்திருத்திய எழுத்து வடிவங்கள் கையாளப்படும் என அரசு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைக்கு தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் எழுத்துச் சீர்திருத்த முறையை ஆரம்பகாலம் முதல் நடைமுறைப்படுத்தி வரும் ஒரே ஏடு விடுதலை! விடுதலை ஏடு இந்த இடைவிடாத முயற்சியினால், எழுத்துச் சீர்திருத்த முறை தங்குதடையின்றி இன்று எல்லோரும் எழுதும், படிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகளிலும் இந்த எழுத்து முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அந்த நூல்களை வாங்கிப் படித்து வருவதால், இந்த எழுத்துச் சீர்திருத்த முறை தமிழகத்தில் மிகவும் வழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தமிழக அரசின் பாராட்டத்தக்க சாதனையாக, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் கடந்த நாற்பது ஆண்டுகளாகவும் அதற்கு மேலாகவும் உருவாக்கப்பட்டு, கடைபிடித்து நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நூற்றாண்டு விழாவின்போது அறிவித்தபடி, செயல்படுத்த முன்வந்து ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் அதன் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கட்கும், நமது இயக்கத்தின் சார்பாகவும், லட்சோபலட்சம் பெரியார் தொண்டர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று 30.10.1978 அன்று விடுதலை இதழின் இரண்டாவது பக்கத்தில் எழுதியிருந்தேன், அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.
``இந்தக் காரியம் மிகப் பெரிய சரித்திர சாதனையாகும். அ.தி.மு.க. ஆட்சியின் கிரீடத்தில் ஜொலிக்கும் ஒரு வரலாற்றுப் புகழ்வாய்ந்த வைரம் ஆகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் போன்றே, கலைஞர் கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கடுமையான சட்டம் போன்றே, இதுவும் திராவிட இயக்க சரித்திரத்திலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும், தமிழ்மொழியின் வரலாற்றிலும் முக்கிய திருப்பமானதோர் அரிய சரித்திரச் சாதனையாகும்.
தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறையும் கவலையும், பற்றும் உள்ள எவரும் இதனை இருகரம் நீட்டி வரவேற்கவே செய்திடுவர் என்பது பாராட்டத்தக்கது.
தமிழக அரசு விளம்பர வாசகங்களில் இந்தச் சீர்திருத்த எழுத்து மாற்றங்கள் உடனடியாக இடம் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பள்ளிப்பாட நூல்களில் இவை உடனடியாக இடம் பெற வேண்டுமென்று ஆணை பிறப்பித்த அரசும் கல்வி அமைச்சரும் பாராட்டத்தக்கவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை இம்முறையில் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அ.தி.மு.க. நடத்தும் ஏடுகளிலும் இது உடனடியாக இடம்பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே இம்மாற்றம் நடைபெற்றிருக்க வேண்டும், அது எப்படியோ தவறிவிட்டது! என்றாலும் இப்போது இதை அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது என்பதால் இதனை எவரும் கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்பது நமது அன்பு வேண்டுகோள்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்பதோடு அவரவர்கள் நடத்தும் ஏடுகளில் இம்முறையை உடனடியாக புகுத்திக் காட்டவேண்டும். அது தந்தை பெரியாருக்கு மரியாதை செய்வது மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கரீதியான தொண்டாற்றுவதும் ஆகும்.
எல்லா ஏடுகளிலும் கடைபிடிப்பது மிகவும் அவசியம் ஆகும் என எல்லா தலைவர்களையும், எழுத்துத் துறையாளர்களையும், ஏடு நடத்துவோர்களையும் இயக்கத்தின் சார்பில் விரும்பிக் கேட்டுக்கொள்வதுடன் தமிழ்மொழி உள்ளவரை இச்சீர்திருத்தச் சாதனை இருக்கும் என்பதால் அரசும், முதல்வரும் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள், என்றும் நம் இயக்கத்தின் சார்பாக தெரிவித்து அன்று இவ்வாறு எழுதினேன் என்பது குறிப்பிடத்தக்கது.

-       (தொடரும்)
-உண்மை இதழ்,1-15.9.15

மகாமகம்


தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டுத் தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்தானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்து தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள் அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் கும்பகோணத்திலே, தென்கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும் என்று சொன்னார்.  அதற்கு 9 கன்னிகைகளும் கும்பகோணம் எங்கே இருக்கின்றது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களை கும்பகோணத்திற்கு அழைத்துப் போகின்றேன் என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர்களை காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த  கன்னிகைகளும் கும்பகோணத் திலேயே கோவில் கொண்டு விட்டார்கள். ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வபாவமும் தொலைந்து சர்வ மங்களமும் உண்டாகும் என்று கண்டிருக்கின்றது.
தோழர்களே! இதுதான் கும்பகோணஸ்தலமகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.
இந்தக்கதையை ஆதாரமாக வைத்த இந்தமகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள் எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?
இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடைகளிலும், பட்டிக்காடுகளிலும், குப்பைமேடுகளிலும் உள்ள குழவிக் கல்லுகளுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங்களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இதுபோன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில் தான் அடங்கி இருக்கின்றன. அதாவது, 1. சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி விடும். 2. வேண்டியதெல்லாம் அடையலாம். என்கின்றவைகளேயாகும். இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரியமா யிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாப காரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
மனிதனுக்கு வேண்டிய - அவன் ஆசைப்படும் படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறுகாரியங்களால் கை கூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையரையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்தானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக்கொண்ட மகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்தக் குளத்தில் போய் குளிப்பது என்பதை யும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக்குளத்துக்குப் போய் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவப் புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.
மற்றும் அந்தப் புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும் நடுமத்தியில் 660000000 அறுபத்தி ஆறுகோடி தீர்த்தம் இருப்பதகாவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்றும் பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்னவென்றால் இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.
தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஒடை அல்லது நீர்ப்போக்காகும்.

குளம் என்றால் இந்தமாதிரி ஒடையில் இருந்து வழி வைத்து தண்ணீர் நிரப்புவதோ, அல்லது மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டுவந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதேதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்றம் போன்ற ஊற்றேயாகும். இந்தத்தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன் செய்யும் பாவம் என்பதைப்போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா? என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டுவெறும் அடிவண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேறானது கருப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடிசதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான்.
பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறித்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம். மிஸ் மேயோ நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப் பற்றியும் எழுதியதைப் பார்த்து கோபித்துக் கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள் தனமான பேராசைக்காக நாம் வெட்கப் படுவதில்லை. என்றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறிவாளிகள், யோக்கியர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லட்ச ரூபாய் இரயில்காரன் கொள்ளையடிக்கப் போகிறான்? எத்தனை லட்ச ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ்வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்பகோணத்தில் - காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காக கொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய்விட்டது. பிளேக்குக்கும் கொட்டகையும் போட்டாகி விட்டது. அதுவும்தான் தன் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குழிகளும் தயாராய் முனிசிபாலிடியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும் விட எத்தனையோ பங்கு மோசமானவைகள் என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களைவிட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றன. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப்போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தா லொழியதீராது. இந்த நிலையில் உள்ளமகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

- குடிஅரசு - தலையங்கம் - 12.02.1933
-உண்மை இதழ்,1-15.9.15

சமஸ்கிருத இந்தித் திணிப்பை அகற்ற அனைவரும் போராட வேண்டும்!




இந்தியென்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்விதஉண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.  இந்திய நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரிகம், பல நடை உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்கமுடியாது அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும் போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.

இந்த  நிலைமையிலுள்ள சமுகங்களைப் பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித்தனமாய் எல்லோரையும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும்? என்று கேட்கின்றோம்.  இந்தி என்பது அநேகமாக வடமொழியின்  சார்போ அல்லது திரிபோ ஆகும்.  இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்க பல  வழிகளிலும் சூழ்ச்சி  செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய அவ்  வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாக தமிழ்மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்.
இப்போது  மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரிகம் சமயக்கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும்  இந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப்பார்ப்பது எவ்வளவு வஞ்சமான  காரியம் என்பதை நமது சோணகிரிகள் அநேகர் இன்னும் உணரவே இல்லை.  தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடுபோட்டதுபோல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ,சிவ,சிவ என்பதற்கும் ராம, ராம,ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனாவசியமான ஒரு பாஷை சூழ்ச்சித் திறத்தில் சுமத்தப்படுகின்றதே என்கின்ற அறிவும், கவலையும்  சிறிதும் கிடையாது என்றே சொல்ல  வேண்டியிருக்கின்றது.  இன்றைய தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரியவேண்டுமானால் அது இங்கீலிஷ் பாஷை என்றே நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

உலகமே தங்கள் கிராமம்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப்பரப்பு, நீர்பரப்பு முழுவதும் தெரிந்து 200 கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலக செலாவணி பாஷை எதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தாஸ் இராமாயணத்தைப் படிக்க வேண்டிய இந்தி பாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளில் வரவேண்டியிருப்பதை இந்தியின் ஆதிக்கமும் இனியும் அதிகமாய் வலியுறுத்துகின்றது என்றே சொல்லுவோம். தமிழ் பாஷை  பாண்டியத்தியம்  என்பது இப்போதே அநேகமாய் பார்ப்பனர்களிடமே யிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்பனர்கள்  தமிழர்களை இந்தி  படிக்கக் கட்டாயப் படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின்  சுயமரியாதை எவ்வளவு  என்பதை தமிழர்களே உணர்வார்களாக.
அரசியல் தத்துவத்தின் பயனாய் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள்  பார்ப்பனரல்லாதார் பணத்தில் இந்தி கற்று இந்தியத் தலைவர்களாகிய வடநாட்டுத் தலைவர்கள் இடமெல்லாமல் பார்ப்பனர்களே போய் காரியதரிசிகளாய்  அமர்ந்து அவர்களே தென்னாட்டு பிரதிநிதிகளாகி அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசியலைத் திருப்பி பயன்படுத்திக்கொண்டு வருகின்றார்கள்.

ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந் தாலும் அதை பார்ப்பனர்களுக்குத் தக்க விலைக்கு விற்றுவிட்டார்கள் என்றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்க வழியில் உபயோகிக்கத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
- ‘குடிஅரசு’, துணைத் தலையங்கம், 10.05.1931

***

இந்நாட்டில் பார்ப்பனியம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனியங் களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன.  உலக வழக்கில் ஒரு சின்னக் காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும் அதற்கெனவே பல ஏற்பாடும் செலவும், மெனக்கேடும் பார்ப்பனியத்தைப் பரப்பவே செய்யப் பட்டு வருகின்றன.  சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருத பாடசாலை மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடைபெற்று வருகின்றன.  இது இந்த நாட்டு மக்களின் சுயமரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும்.  இதைத் தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரி சபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சு விடவும் ஆள்கள் இல்லை.  போதாக்குறைக்கு இன்று இந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்தியமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது.  இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கும் ஒரு உதாரணமாகும்.

தமிழ்நாட்டுக்கு இந்தி என்ன அவசியத்திற்கு? என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசிய வாழ்வில் இல்லை . தேசபக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர் களாலேயே நிரப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும், பார்ப்பனர் களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர்களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசிய மந்திரத்தை உருப்போட்டு, ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.

இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், மனிதத் தன்மைக்கும். சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம்.  இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ள,  தமிழ் மக்களால் சுட்டுப் பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும்.

தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளு கின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகிவிட்டது.  இன்றைய தினம் தமிழ் படித்து, தமிழ் பாஷையில் பற்றுக்கொண்டு, தமிழைத் தாய் பாஷையாய் கொண்ட ஒருவனாவது  தன்னுடைய தமிழ்த்தாய் வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டி ருக்கின்றாளா? இல்லையாவென்றும், பிள்ளைகளையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப்போலவே பெற்றுக் கொண்டு மிருக்கின்றாளா? இல்லையாவென்றும் அப்படிச் சோரத்தனம் செய்ததில், முதல் தரப்பிள்ளைகளாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும் இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு, இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமையடைவதன் மூலமே தமிழ்ப் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா வென்றும் கேட்கின்றோம்.

- ‘குடிஅரசு’, தலையங்கம் -_ 14.06.1931
-உண்மை இதழ், 1-15.7.16

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நீதிக்கட்சி சமதர்மக்கட்சி!


- தந்தை பெரியார்
தமிழர்களா? ஆந்திரர்களா?
பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார்கள் என்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது - வெறுக்கத்தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக, வெட்டிப் புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள், - தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்திவிட்டு அந்தச் சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும்  அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமுகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தமிழர்-களைவிட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது.
உதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகல் ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திரர் பனகல் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.
மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகல், 2. ஒரு சர். பாத்ரோ, 3. ஒரு சர். கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய அய்ந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1. ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர் சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம் அய்யர், 6. ஒரு பி. டி. ராஜன், 7. ஒரு குமாரசாமி செட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில்கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு  சர். கே. வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு சர். உஸ்மான், 3. ஒரு சர். சி. பி. ராமசாமி அய்யர், 4. ஒரு கே. ஆர். வெட்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ண நாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக்-கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக்கொண்டாலும் சரி. மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிடவில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர்கூட கார்ப்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை.
மேலும் இன்று எந்தத் தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் ஆந்திரக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத் துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக் கொள்கையைப் பொருத்த வரையில்கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று, ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கை களையாவது ஒப்புக்கொள்ளு-கின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன் வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது, ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம்.
ஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடை-யாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றிபெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
(பெரியார் களஞ்சியம், - குடிஅரசு, - தொகுதி 17, பக்கம் 412
* * *
நீதிக்கட்சி சமதர்ம கட்சியே!
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்ஜியம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகிறது. அதனா-லேயே, நாம் அதை சமதர்ம ராஜ்ஜியம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள், ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை.  தாங்களாகவே ஆசைப்-பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு, போய் அமர ஆசைப்-படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே! எஜமானே! என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ்கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்-பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தை-யாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆகாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கிறேன். (27.12.1936 அன்று சென்னை _- கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க நான்காவது ஆண்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை) -குடிஅரசு - சொற்பொழிவு - 10.01.1937

(பெரியார் களஞ்சியம் - குடிஅரசு - தொகுதி 22, பக்கம் 42)
-உண்மை இதழ்,16-30.11.15

மார்கழி மடமைகள்! சொர்க்கவாசல் மகிமை? - 

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் ஸ்ரீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே _- அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் _- சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் -_ அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
* * *
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை?
பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றான். அதற்கு பத்மாசூரன், நான் யார் தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும் என்றானாம்.
சிவனும், அவ்வளவுதானே! அளித்தேன் போ! என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங்களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அதற்கு விஷ்ணுவானவன், அதுதானா பிரமாதம், இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன் என்று கூறி, அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்துப் பத்மாசூரன் முன் சென்று நின்றான்.
அந்த மோகினிப் பெண்ணைக் கண்ட அசுரன், அவளைக் கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள், நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கிறாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டு வா என்று கூறினான்.
அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும்போது, தம் தலையில் கை வைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான்.  அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான்.
விஷ்ணு சிவனிடம் சென்று, பயத்தை விடுத்து வெளியே வாருங்கள்! நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்றுவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.
அதற்கு சிவன், எப்படிப் பெண் வேடம் போட்டுச் சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள் என்றான். விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான். அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டே ஓட, இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட, இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.
இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு.
எனவே, இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம் கூட வெட்கப்பட வேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன். இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.
-உண்மை இதழ்,16-31.12.15

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்


 
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு ஸ்ரீமுகம் வெளியிட்டிருக்கின்றார். அதை சுதேசமித்திரன் பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டி ருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்திய மூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.
திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லி விடலாமானாலும் அவருக்கு இம்மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே அதாவது தேசிய அரசியல் இயக்கம் என்று சொல்லப் படுவதில் ஒரு குறிப்பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யுனிவர்சிட்டி பிரதி நிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத் தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட் டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும், மதம், சமூகம் முதலியவைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.
எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தா திருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமுகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்துப் போராடவந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்பந்தமான ஆட்சேபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல், மற்றும் இது போன்ற பல சீர்திருத்தங்களையும், மதத்தைச் சாக்காகக் கொண்டே ஆட்சேபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமிபேரால் விபச்சாரத்திற்குப் பொட்டுகட் டும் வழக்கத்தடுப்பு மசோதாவையும் மதத்தைச் சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்தச் சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆட்சேபனை, என்ன வென்றால் பொட்டுகட்டுகின்ற வழக்கம், கேட்டைத் தரத்தக்கதானாலும், அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப் பதாகும் என்றும், இன்று பொட்டுகட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற் றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆத லால் அதற்குச் சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.
பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபச்சாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைக்கல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், விபச்சாரிகள் எவ்வளவு தான் ஒழுக்க ஈனமாக நடந்துகொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபச்சாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள் என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.
இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத் தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் ஆட்சேபித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்குக் கதிமோட்சம் ஏற்படக் கூடும்? அன்றியும் பராசரர் ஸ்மிருதியும் மனுஸ் மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட் கின்றோம். இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட் பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஆகமங்கள் என்பவைகளும், நமது மோட்ச சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக் கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளிவந்திருக்கும் வீரர்கள், சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது. வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்றவர்களே இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் சம்பந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலை தான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்ளுவாயா? மாட்டாயா  ராமன் கடவுளா மனிதனா? ராவணன் யோக்கியனா? ராமன் யோக் கியனா? சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா? விஷ்ணுவுக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா? சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா? பதினாறு குதிரையா? விதி பெரியதா மதி பெரியதா? இதுபோன்ற விசயங் களில் மதபக்தியையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு சமயத் தொண்டையும், தெய்வத் தொண் டையும் செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதை தெய்வவாக்கு என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்த வித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்து கொண்டும் பாமர மக்களை மிருகங் களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லி விரட்டியடிக்கப் பார்க்கின்றார்களேயொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டுவதே கிடையாது.
தவிர திரு. சத்தியமூர்த்தி, பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் வரும் கெடுதியையும் நான் அறிவேன் என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்கொள்ளு கின்றார்.
ஆனால் கூடவே அதன் கீழ் 12 வயதுக்குள் பெண் களுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் பாவம் வரும் என்று பராசர ஸ்மிருதியில் சொல்லி இருக்கின்றது என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும் நீக்குவது பாவமாகுமானால் அந்தப் பாவத்திற்குப் பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.
அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், 8 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண் டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்ம லோகத் தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரவுரவதி நரகத்தை அடைகிறான் என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், திரு. சத்தியமூர்த்தி 10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது என்று சொல்லுகின்றார். இந்தப்படி பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரவுரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும். எனவே இனி 16 வயதில் கல்யாணம் செய்பவர்களுக்குப் புதிதாகப் பாவம் ஏது என்று கேட்கின்றோம்.
தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர ஸ்மிருதியின் யோக்கியதையைக் கவனிப்போம்.
10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் ரவுரவாதி நரகத்தை அடைய வேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதியானது அதே ஸ்திரிகள் விஷயத்தில் சொல்லுவது என்ன என்றால், ஸ்திரிகள் பூமிக்குச் சமமானவர்கள். அவர்கள் குற்றம் செய்தால் தூக்ஷிக்கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கிவிடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படிச் சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அதுபோல் ஸ்திரிகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் அவர்களைச் சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போமானால் அதாவது ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள் என்று சொல்லியிருக் கின்றது. இது பராசர ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகம்.
சாந்திராயண கிருச்சிரம் என்பது கிருஷ்ண பட்சம் முதல் அமாவாசை வரை யில் தினம் ஒரு பிடிசாதமாகக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது இது 7ஆவது காண்டம் 2ஆவது சுலோகம்.
ஒரு பிராமண ஸ்திரீ பாவ சீலர்களான சூத்தி ரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின்றாள் என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24ஆவது சுலோகம்)
பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததைப் புசித்து 3 நாள் உபவாசமிருத்தல் (இது பராசர ஸ்மிருதி 7ஆவது காண்டத்தில் 9ஆவது அத்தியாத்தில் சொல்லப்படுகின்றது.)
இதுவும் செய்வதற்குக் கஷ்டமாயிருக்கு மானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டால் போதும் (இதுவும் மேற்படி அத்தியாயம்.)
இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும் படியான குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் (மேற்படி காண்டம் அத்தி யாயம் சுலோகம் 13)
இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிரா மணனுக்குக் கொடுப்பதுமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகின்றது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவைப் பிரா மணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் என்று சொல்லுகிறது.
(மேற்படி அத்தியாம் 14ஆவது சுலோகம்)
எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக் கெல்லாம் எவ்வளவு சுலபமாக பிராயச் சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆன பிறகு பிறந்து கல்யாணம் செய்வதால் ஏற்படும் பாவத் திற்கு மிகவும் சுலபமான பிராயசித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத் தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்கவேண்டும் என்று தான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும் அவசியமானதுமான சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 21.10.1928
-விடுதலை,2.4.17