ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கோயில்களில் இருக்கும் சிலையை நம் மக்கள் தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள்தானே!

தந்தை பெரியார்



இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன வென்றால், பகுத்தறிவிற்கு ஏற்ற கருத்துகளைப் பரப்ப வேண்டியதும் பகுத்தறி விற்கு  மாறானதை ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும்.

பகுத்தறிவிற்கு விரோதமாக மனித சமுதாயத்திற்குக் கேடாக இருப்பவை நம் கடவுள், மதம், சாஸ்திர, புராண, இதி காசங்கள் என்பவை ஆகும். அவை நம் இழிவை நிலை நிறுத்துவனவாக இருப்ப தோடு, நம்மை அறிவு பெற முடியாமல் முட்டாள்தனம், மூடநம்பிக்கை ஆகிய வற்றை வளர்ப்பனவாகவும் இருப்பதோடு, இவை யாவற்றையும் ஒழித்து மக்கள் பகுத்தறிவு பெறவும், இழிவு நீங்கவுமான தொண்டினைச் செய்கின்றோம். நாம் அறிவு பூர்வமாக ஏற்பட்ட சாதனங்களை ஒழிக்க முற்பட்ட  மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து தாய் - அக்காள் - தங் கையைப் புணர்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கை என்பதே இன்னது என்று தெரியாமல் வாழ்ந்த காலத்தில், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்களையும்,  மதங் களையும், புராணங்களையும் ஒழிக்க வேண்டும் என்று, செய்கிறோம்.  இதை நாம் எப்போதோ  ஒழித்திருக்க வேண்டும். அறிவுக் காலத்தில் ஏற்பட்டவற்றை அழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை அதற்கு முன் காட்டு மிராண்டித் தன்மையுள்ள கடவுள்- மதம்-சாஸ்திரம் புராணம் போன்ற இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதைக் கடுகு அளவு அறிவுள்ளவனும் எதிர்க்க மாட்டானே; இவற்றைத் தன் பகுத்தறிவற்ற மடமையால் தன் சுயநலத்திற்காக, அயோக்கியத்தனத்திற்காகப் பாதுகாக்கின்றான் என்பதைத் தவிர வேறு காரணம் அவசியம் எதுவும் கிடையாது. தாயோடு, அக்காள், தங்கையோடு, மிருகத்தோடு புணர்ந்தவன் எல்லாம் உயர்ந்த ஜாதி. ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன், கீழ்ஜாதி என்று எதற்காக இப்படி இருக்க வேண்டும்?  நம் நாட்டில் தோன்றிய மகான், மகாத்மா, ரிஷி, எவனும் இதைப்பற்றிக் கவலைப்பட வில்லையே!

எதற்காக  இந்த நாட்டில் கோயில்கள்? எந்தக் கடவுள் யோக்கியன்? எந்தக் கடவுளின் மனைவி யோக்கியமாக இருந் தாள்? கடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இவற்றை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் கடவுளைப் போல உன் மனைவியையும் பிறனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்க வேண்டும். கடவுளை- மதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிற எவன் இதற்குச் சம்மதிப்பான்? இதைக் காப்பாற்றிய சுத்தக் களிமண் மண்டைக் காரனெல்லாம் மகான், மகாத்மாவாகிவிட்டான்.  இவற்றை ஒழித்தாக வேண்டும். எந்தவித தாட்சண்யத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. மடமையால் ஏற்படுத்தப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டவை தான் இவை ஆகும்.

மதங்கள் என்பவை- எந்த மதங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் மூட நம்பிக்கை நிரம்பியவையே ஆகும். மதத் தலைவர்கள் அத்தனை பேர்களும் அயோக்கியர்களே ஆவார்கள். மதத்திற்கு ஆதாரம் என்னவென்றால் வேதம் என்கின்றான், வேதம் எப்போது உண்டாகி யது? யாரால் உண்டாக்கப்பட்டது? என்பதற்கு ஆதாரமே இல்லை. முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கை யையும் புகுத்தித் தான் மதத்தை உண்டாக்கி இருக்கின்றான். வேத- மதத்தை உண்டாக்கியவன்  மனிதனுக்குப் பிறக்க வில்லை, மனிதத் தன்மையோடு இருக்கவில்லை. நாய்க்கும், மானுக்கும், மீனுக்கும் பிறந்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்பவன் சுத்த மடையனாக இருக்க வேண்டும். ஒத்துக் கொள்ள வேண்டும், நம்பவேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது என்று சொல்லித் தான் ஒத்துக் கொள்ளச் செய்கிறான். கிறிஸ்தவ மதத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால், கிறிஸ்து, அப்பன் இல்லாமல் பிறந்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; இப்படி ஏதாவது முட்டாள்தனத்தை வைத் துத்தான் எந்த மதத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும். அறிவிற்கு ஏற்ற மதம் எதுவும் கிடையாது.

மனிதன் பாரதத்தை, இராமாயணத்தை, ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அதிலுள்ள முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கைகளை ஒத்துக் கொண்டாக வேண்டும்; மனிதன் 60 ஆயிரம் வருஷங்களாக வாழ்ந்தான்; 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டான் என்பதை நம்பியாக வேண்டும்; இவற்றை எல்லாம், அவன் ஒத்துக் கொண்டால் தான் இராமனைக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும். கடவுள் எதற்காகத் தம் மனைவியை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் இந்தக் காட்டுமிராண்டித் தன்மையை உடையவற்றைத் தான் ஒழிக்க வேண்டும் என்கின்றோம். மனிதனை மடையனாக்கும் முட்டாள்தன, மூடநம்பிக்கைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

நம்மை ஏய்ப்பதற்குக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், காட்டுகின் றானே ஒழிய, சொல்கின்றானே ஒழிய, அதன்படி அவன் நடப்பது கிடையாது. அதில் உள்ள எதையும் அவன் கடைப் பிடிப்பது கிடையாது, நம்புவதும் கிடையாது. அவன் (பார்ப்பான்) உழைக்காமல் உயர்ந்த சாதிக்காரனாக, உயர்வாழ்வு வாழ வேண் டும் என்பதற்காக நாம் இழிமக்களாக, மடையர்களாக வாழ வேண்டுமா? திருடர்கள் ஏமாந்து போய் விடுவார்களே என்று, நாம் கதவைத்திறந்து வைத்துக் கொண்டு படுத்துக்கொள்ள முடியுமா? இது அறிவு மடை மையாகுமா என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

அயோக்கியத்தனங்களை, மடமைகளை, முட்டாள் தனங்களை ஒழிக்க வேண் டும் என்றால், துணிய வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக, சுயநலத்திற்காக, ஒவ் வொருவன் துணிந்து காரியம் செய்யும் போது, நாம் நம் சமுதாய இழிவைப் போக்கிக் கொள்வதற்காகப் போராடுவது தவறில்லையே! பார்ப்பானை விட நாம் எதில் குறைந் தவர்கள். பார்ப்பான் நம்மை விட எதில் உயர்ந்தவன்? அவன் மட்டும் கோவில் சிலைக்கருகில் போகலாம் என்கிற போது நாம் மட்டும் போகக்கூடாது? போனால் என்ன கெட்டுவிடும்? உண்மை யான கடவுள் என்றால் அதற்கு எதற்காகப் பேதம்? எதற்காக சாமிக்குக் கதவு? அரச மரத்தடியில் இருக்கிற சிலையை நாய் நக்கி விட்டுச் செல்கிறது, கேட்க நாதியில்லை. அதே சிலையைக் கோவிலுக்குள் வைத்தால் மட்டும் தீட்டு- தொடக்கூடாது என்றால், என்ன அர்த்தம்? கோயிலிலிருக்கிற சிலைக்கு என்னென்ன சடங்கு நடக்கிறதோ, அத்தனையும் தான் மரத் தடியில் இருக்கிற சிலைக்கும் நடக்கிறது. மரத்தடியிலிருக்கிற, எந்த சாமிக்கும் மனிதன் தொட்டதால், நாய் நக்கியதால் சக்திபோய்விட்டதாக சொல்லப்படுவது இல்லையே! பார்ப்பான் தன் பிழைப்பிற்காக நாம் தொடக்கூடாது என்றாக்கி வைத்திருக்கின்றானே ஒழிய, மற்றப்படி அதில் ஒன்று மில்லையே. மனிதனுக்கு அறிவு வரும், அவனே உள்ளே செல்வான் - சிலையைத் தொடுவான் என்று எதிர்பார்த்தோம். இதுவரை வரவில்லை. எனவே நாம் தான் செய்யவேண்டும். சாமியைப் பற்றிச் சொன்ன எவனும் அதைத் தொட்டால் தீட்டு என்று சொல்லவில்லை. அதைக் கொண்டு பிழைக்கிறவன், அதனால் உயர் வாழ்வு வாழ்கின்றவன் தான் சொல் கின்றான், நாம் தொட்டால் சாமி  தீட்டாகி விடும்- சூத்திரன் தொடக்கூடாது என்று. எது வரையில் இந்தக் கோயிலும், நாம் அங்குப் போனால் தீட்டு என்பதும் இருக்கின்றதோ அதுவரையில் நாம் சூத்திரர்கள் தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! நம்மில் சில மடையர்கள் இருக் கின்றார்கள். மானம் போனாலும் சரி யென்றும், வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வருகின்றார்கள். இவர்களைப் போன்ற மானமற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அவர்கள் வரு வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு நாம் காரியத்தில் இறங்கியாக வேண்டும்; அவனவன் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, சொந்த சுயநலத்திற்காகப் போராடுகின் றான், கிளர்ச்சி செய்கின்றான். நாம் போராடப் போவது நாமக்காகவோ, நம் சொந்த சுயநலத்திற்காகவோ அல்லவே! இந்நாட்டிலிருக்கிற, நம் சமுதாய மக்கள் அனைவரின் இழிவு, சூத்திரத்தன்மை, மானமற்றத் தன்மை, அறிவற்ற, முட்டாள் தன, மூடநம்பிக்கைளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே போராடப் போகின் றோம்.  இதற்கு நாமெல்லாம் தயாராக இருந்தால் தானே முடியும்? விரைவில் இதற்கான போராட்டத்தைத் துவக்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு நீங்களெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் வதற்காகவே, இது போன்ற மாநாடுகள் கூட்டி மக்களுக்கு விளக்கம் செய்கின்றோம்.

முன்னேற்றக் கழகத்தில் கலவரம் வரும் என்று கருதினேன். கட்சி ஒழிந்து போய் விடுமோ, என்று கூடப் பயந்தேன். ஆனால் நம் நல்வாய்ப்பாகத் தலைவர் தேர்தலில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட கருணாநிதி அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதோடு, நாவலர் அவர்களும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இப்போது கருணாநிதி கட்சிக்கு, ஆட்சிக்கு, இயக்கத்திற்குத் தலைவர்.

20 வருஷமாகத் தலைவர் இல்லாமலிருந்தது, அந்த கட்சி. ஏனில்லாமல் இருந்தது என்றால், அண்ணா அந்தக் கட்சியை ஆரம்பித்த போதே இந்தக் கட்சிக்குத் தலைவர் பெரியார் தான், அவர் வருகிற வரை இந்தத் தலைவர் பதவி யாருக்கும் கிடையாது. அவர் வந்து அமருகிறவரை தலைவர் நாற்காலி காலியாகவே  இருக்கும், என்று சொல்லிப் பொதுச் செயலாளர் என்கின்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு வந்தார். இன்றைக்குத் தான் இந்தத் தலைவர் நாற்காலி பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலைக்குத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட நாவலர் அவர்களையும், கலைஞர் அவர்களையும், பாராட்டு கின்றேன். கட்சி இனி எவ்விதக் கலகம் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது. நம்முடைய வாழ்வும், நம் எதிர் காலமும் இந்த ஆட்சியிடமே இருக்கின்றது. இவர்களால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர மற்ற எவராலும் நம் மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்ய முடியாது.

குணம் குடி கொண்டார் உயிருக்கு உயிர்தான், இல்லாவிட்டால் என்று சொல்லி, அதை ஒப்பிட்டுக்காட்ட மிக அசிங்கமானதைச் சொன்னான். அது போல் நம் கொள்கைக்கு ஆதரவு காட்டுகிற வரை நாம் உயிருக்கு உயிராக இருப்போம். நம் கொள்கைக்குக் கேடு விளையுமானால், நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நம் சமுதா யத்திற்கு நன்மை செய்கின்ற இந்த ஆட் சிக்கு நம்மாலான ஆதரவைக் கொடுக்க வேண்டும். எதிரிகளால், அவர்களுக்குத் தொல்லை வராமல் பாதுகாக்க வேண்டும்.

கடவுள் என்பது மடையர்களால், முட்டாள் தனத்தால் உண்டாக்கப்பட்டதே ஆகும். மதம் என்பது சோதாப் பசங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக, உண்டாக்கப்பட் டதே அல்லாமல் அறிவுடைய மக்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும். இனிமேல், எவனும் கோயிலுக்குப் போகக் கூடாது. சாம்பல், மண் பூசக்கூடாது. பெண் களைக் கோயில்களுக்கு அனுப்பக் கூடாது, மத விழாக்கள் கொண்டாடக் கூடாது.

இந்தக் கடவுள்-மதத்தால் தான் நம்நாடு இழிநிலைக்கு வந்தது. கிறிஸ்துவ நாடு கிறிஸ்துவ மதத்தால் முன்னுக்கு வரவில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தாக்கியதால் அதன் ஆபாசங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தியதால் தான் அறிவுபெற்று பல அதிசய, அற்புதங்களை  அறிவின் பயனால் செய்கின்றனர். அதைப் போன்று நம்நாட்டு மக்களும் அறிவு பெற்று முன்னேற்றமடைய வேண்டும்.

27.7.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

(விடுதலை,  4.8.1969.)
- விடுதலை நாளேடு,10.12.17

புதன், 6 டிசம்பர், 2017

எது நிஜம்?  - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

-விடுதலை,19.9.14

மதுவிலக்குப் பிரச்சாரக் கமிட்டி: தந்தை பெரியார்



சென்னை மாகாணத்தில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வற்குச் சென்னை அரசாங்கத்தாரைச் சம்மதிக்கும் படியான நிலைமைக்குக் கொண்டு வந்த பெருமை நமது கலால் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர் களுக்கே உரியதாகும். அதுபோலவே, அப்பிரச்சாரக் திட்டத்திற்கு வேண்டுமென்றே துர் எண்ணம் கற்பித்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தால் மதுபானம் அதிக மாகுமென்று சொல்லி அதை நிறைவேறாமல் செய்ய முயற்சித்த புண்ணிய கைங்கர்யத்தின் பெருமை காங் கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும் தேசியக் கட்சிக்குமே முழு வதும் போய்ச்சேர வேண்டிய தாகும் அது போலவே இவ்விஷம முயற்சியை வெற்றி பெற வொட்டாது தலை யிலடித்து ஒழித்து மந்திரியின் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஜஸ்டிஸ் கட்சியாருக்கே உரித்தான தாகும்.

கலால் மந்திரி கனம் திரு.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அப் பிரச்சாரத்திற் கென்று மத்திய கமிட்டியைத் தாமாகவே ஏற்படுத்தியிருந்தாலும் அக் கமிட்டி நியமனத்தில் மிக்க கவலையுடனும் பொறுப் புடனும் நடுநிலைமை வகித்து உண்மையான பொறுப் புள்ள கனவான்களாகவும், பொதுநலத்திற்குழைக்கும் சகல ஸ்தாபனங்களுக்கும் வகுப்பு களுக்கும் பிரதி நிதித்துவம் உள்ளதாகவும், யாராலும் எவரை பற்றியும் ஆட்சேபனை சொல்ல முடியாததாகவும் பார்த்து நியமித்தவுடன் அவர்கள் வசத்திலேயே பூரா பணத் தையும் சகல அதிகாரத்தையும் ஒப்புவித்துவிட்டார். மற்றும் கனம் மந்திரியின் நல்ல எண்ணத்திற்கும் மாகாண நிர்வாக கமிட்டியின் நேர்மைக்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் இக்கமிட்டியினால் நியமிக்கப்பட்ட ஜில்லா கமிட்டிகளில் இத்திட்டத்தை அடியோடு எதிர்த் தவர்களும் இத்திட்டத்திற்கு துர் எண்ணம் கற்பித்தவர் களுமான சுயராஜ்யக் கட்சிக்காரரும், சுயேச்சைக் கட்சிக்காரரும், சகல வித தேசியக் கட்சிக்காரரும், ஒத்து ழையாதாரும் அங்கம் பெற ஆசைப்பட்டதும் நிய மனத்தை ஏற்று, கமிட்டியின் தத்துவத்தை நிறைவேற்ற வேலை செய்ய சம்மதித்திருப்பதுமான காரியம் ஒன்றே போதுமானதாகும். மாகாண மதுவிலக்குப் பிரச்சார போர்டிலும் அதன் நிர்வாக சபையிலும் அங்கம் பெற்ற திவான்பகதூர் எம்.ராமச்சந்திரராவ் எம்.எல்.ஏ. அவர்கள் எல்லா இந்திய மதுவிலக்குக் கமிட்டி காரியதரிசி ஆவார். அது மாத்திரமல்லாமல் எல்லா இந்திய காங்கிரஸ் மதுவிலக்கு கமிட்டியிலும் அங்கத்தினராவார் மற்றும் திருவாளர்கள் கே.ஆர். வெங்கிட்டராமய்யர். எம்.எல்.சி, சூரியநாராயணராவ் மற்றும் இரண்டு மூன்று பார்ப்பனர் களும் அதாவது வருணாச்சிரமதர்மம் பார்ப்பன ஆதிக் கம் சீர்திருத்தம் ஆகியசபைகளின் பிரதிநிதிகள் என்றே சொல்ல வேண்டும். என்றாலும் இப்படிப்பட்டவர்களாகவே கமிட்டியில் 100-க்கு 20 வீதத்திற்கு குறையாமல் பார்ப்பன பிரதிநிதித்துவம் கொடுத்தே கமிட்டி நியமிக்கப்பட் டிருப்பதையும் அதுவும் சரியான பார்ப்பன ஆதிக்கத்தில் கவலை யுள்ளவர்களாகவே மிகுதியும் நியமிக்கப்பட்டிருப் பதும் காணலாம். மற்றபடி ஜில்லா பிரச்சார கமிட்டி நியமன விஷயத்திலும் கனம் மந்திரி தாம் எவ்வித எதேச்சதிகாரமும் எடுத்துக் கொள்ளாமல் அதையும் ஒரு சப்-கமிட்டிக்கு விட்டு அக்கமிட்டியிலும் திரு.எம். ராம சந்திரராவ் உள்பட பார்ப்பனர் இரண்டு பேரும், பார்ப்பனர்களுக்கு அனுகூலமான அதாவது பார்ப் பனியத்தில் மிகுந்தப் பற்றும் பார்ப்பனர் அல்லதார் கட்சிக்கும் விபரிதமான மனப் பான்மையும் கொண்ட திரு.வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களையும் திரு.குழந்தைவேல் முதலியார் அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக காங்கிரசுக்காரான திரு.முனுசாமி நாயுடு அவர்களையும் சேர்த்து இவ்வைந்து கனவான்கள் வசமேவிட்டு அவர்களால் பொறுக்கி எடுத்து சிபாரிசு செய்யப்பட்ட கனவான்களையே மிகச் சிறிய திருத் தத்துடன் நியமனம் செய்யச் செய்திருக்கிறார்.

இந்நியமனங்களிலும் மிக்க ஜாக்கிரதையாய் கூடிய வரையில் ஒரு பார்ப்பனர் ஒரு கிறிஸ்தவர் ஒரு மகமதியர் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் (இவர் பெரும்பாலும் பார்ப்பனரே) இருக்கிறார்களா? எனப் பார்த்துவிட்டு பிறகு தான் மீதி நான்கு பேர்களைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்னும் வகுப்பு பிரதி நிதித்துவம் ஒவ்வொரு கமிட்டியிலும் கட்சி பிரதிநிதித் துவமும் முக்கியக் கொள்கையால் வைத்துக் கவனித்து போடப்பட்டு இருக்கிறதா? என்பதையும் கவனித்து இருக்கிறார். இந்தப்படி சிபாரிசு செய்யப்பட்ட கனவான் களின் பெயர்கள் எல்லாம் ஓட்டு எடுக்காமல் ஏகமனதாக தெரிந்து எடுக்கப்பட்டதேயொழிய மாகாணம் முழு மைக்கும் ஒட்டு மொத்தம் சுமார் 300  கனவான்கள் நிய மிக்கப்பட்டதில் ஒன்று, இரண்டு கனவான்கள் பெயர்கூட ஓட்டுக்கு விட்டிருக்கப்பட்டிருக்காது என்று உறுதி கூற லாம். தவிர ஜில்லா கமிட்டிகளில் சுயராஜ்யக் கட்சியார் பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதைப் பார்த்த கனவான் ஒருவர் அந்தப் பெயர்களை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு விரோதமான மனப்பான்மையைக் காட்டினவர்கள் என்றும் அவர் களை நியமித்தால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றும் ஒப்புக் கொண்ட போதிலும் திட்டத்தின் தோல்விக்கு உதவியைக் கருதுவார்களே ஒழிய வெற்றிக்கு உதவி செய்யமாட்டார்கள் என்றும் எடுத்து சொன்ன காலையில் சப்கமிட்டியில் இருந்து ஒரு முக்கியமான பார்ப்பன அங்கத்தினர் சுயராஜ்யக்காரர்கள் இக் கமிட்டியில் இருக்க ஆசைப்பட்டதாகவும் தான் இரண்டொருவருடன் கலந்து பேசியதில் அவர்கள் இக்கமிட்டியுடன் ஒத்து ழைத்து இத்திட்டத்தை நிறைவேற்றச் சம்மதித்ததாகவும் வாக்குக் கொடுத்து அக்கனவான்களின் பெயர்களைக் கமிட்டியில் இருக்கச் செய்ததாக தெரிகின்றது. கடைசியாக ஒத்துழையாதார் என்பவரும் எல்லா இந்தியக் காங்கிரஸ் மது விலக்கு சங்கத்தின் தலைவருமான திரு.சி.ராஜ கோபாலாச்சாரியாருடைய பெயரை ஜில்லா கமிட்டியில் பிரேரேபித்த போதும் விளம்பரக் கமிட்டியில் பிரே ரேபித்த போதும் இதேபோல் கேள்விகள் கேட்கப்பட்டதில் அவரும் சம்மதித்திருப்பதாகச் சொன்னதின் பேரிலேயே விளம்பரக் கமிட்டியில் அவர்களைப்போட கமிட்டி சம்மதித்திருப்பதாகத் தெரிகின்றது. ஆகவே மது இலாகா மந்திரி மதுவிலக்கு விஷயத்தில் செய்திருக்கும் வேலையானது இந்தியாவில் இதுவரை எந்த சர்க்காரும் மந்திரியும் செய்யாத ஒரு பெரிய காரியத்தை செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

இவரது ஆட்சியில் சர்க்கார் உத்தியோகத்தில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உத்திரவும் சர்க்காரின் மதுவிலக்கு பிரச்சாரத்திட்டமும் சென்னை மாகாண அரசியல் சரித் திரத்தில் ஒரு முக்கியமான பாகத்தை பெற வேண்டிய வைகள் என்றே சொல்லுவோம்.

ஜில்லா கமிட்டிக்கு

ஒரு விண்ணப்பம்

இத்திட்டத்தை ஏற்பாடு செய்த கனம் மந்திரி அவர் களும் இவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக் கமிட்டியும் கூடியவரையில் அவர்களது கடமையைச் செய்து விட்டார்களென்றே சொல்லலாம். ஆனாலும் இத் திட்டத்தின் வெற்றியும், பலமும் இனிஜில்லா பிரச்சாரக் கமிட்டியிடம்தான் அதிகமாய் இருக்கின்றதென்று சொல் லுவோம். என்னவென்றால் இத்திட்டத்திற்கு ஒதுக்கி வைத்த பணம் பெரும்பாகம் ஜில்லா கமிட்டியாரிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது. ஆதலால் அவர்கள்தான் தக்கபடி அதைச் செலவு செய்து பிரச்சாரம் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இதற்குக் கமிட்டியில் அங்கத்தினர்கள் கூட்டுறவுடன் சரியான பிரச்சாரகர்களை நியமித்து ஒழுங்கான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்களென்பது மிகை யாகாது. பிரச்சாரகர்களை முதலில் தக்கபடி கமிட்டியார் தர்ப்பத்  செய்யவேண்டும். பிரச்சாரத்தின்போது வார்த் தைகளை அளந்து பேசும்படியும், குடிப்பவர்களையோ கடைக்காரர்களையோ மதுபான வியாபாரிகளையோ, மரம் வைத்திருப்பவர்களையோ அதிக்கிரம வார்த்தை களால் பேசாமலிருக்கும்படியும் திட்டம் செய்ய வேண்டும் மறியல் செய்ய வேண்டிய விஷயம் சில சமயங்களில் அவசிய மானாலும் முதலிலேயே அதாவது எடுத்த எடுப்பிலேயே அதை ஆரம்பித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் கள் சாராயக்கடைகள் சர்க்கார் சட்டப்படி நடைபெறுகின்றதா? காலாகாலங்களில் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் இருக்கின்றதா? என்பதைக் கவனித்துப் பார்த்து அப்போதைக்கப்போது சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கும், மாகாண பிரச்சார காரியால யத்திற்கும் அறிக்கை செய்ய வேண்டும் மற்றும் உரிமை இல்லாத இடங்களில் விற்கப்படுகின்றதா? என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். உரிமை இல்லாமல் உற்பத்தி செய்யப்படுகின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். இவைகளினால் மதுவிலக்கு லட்சியத்திற்கு அதிக நன்மையுண்டு என்பது நமது அபிப்பிராயம். இவை சரிவர கவனித்துப் பிரசாரம் செய்த பிறகே மறியல் செய்யவேண்டும். தவிரவும் மது விலக்குக்காக முழுவதும் சம்பளப் பிரசாரகர்களாகவே இல்லாமல் கௌரவ பிரச்சாரகர்களையும் நியமித்து அவர்களுக்குச் செலவு மாத்திரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்பிரச்சாரத்தில் பெண்களை அதிகமாகக் கவுரவப் பிரச்சாரகர்களாக நியமிக்க வேண்டும். முனிசிபாலிடி, தாலுகா போர்டு ஆகியவைகளிலுள்ள பெண் உபாத்தி யாயர்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் பிரச் சாரம் செய்யக் கேட்டுக்கொண்டு கிராமங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு வழிச் செலவு கொடுத்துப் பிரச் சாரம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். மது இலாகா அதிகாரிகளால் ஏதாவது இடையூறு நேரிடுமானால் பிரச் சாரகர்கள் அவர்களிடம் நேரில் எவ்வித வர்த்தமானங் களும் வைத்துக் கொள்ளாமல் சாட்சிகளுடன் ஜில்லா கமிட்டி மூலம் மாகாண சபை காரியாலயத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

ஜில்லா கமிட்டியார்களும் தங்கள் பிரச்சாரகர்கள் பெயர்களைச் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் மது இலாகா அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட வேண்டும். ஆகவே, இவை முதலாகிய அநேக விஷயங்கள் பிரச்சாரக் கமிட்டியார் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த முறையில் ஒரு அய்ந்து வரு ஷங்களுக்குக் கட்டுப்பாடாகவும், கட்சிப் பிரதிகட்சி இல்லாமலும் மதுவிலக்குப் பிரச்சாரம் நடைபெறுமானால் சென்னை மாகாணத்தில் மதுபானத்தில் ஒரு பகுதி பாகத்தையாவது ஒழித்து விடலாமென்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே ஜில்லா கமிட்டி யார்களும், பொதுஜனங்களும் நமது மந்திரி கனம் முத்தையா முதலி யாரவர்களின் இவ்வரிய முயற்சிக்குத் தக்க உதவி செய்வார்களாக.

‘குடிஅரசு',  தலையங்கம் - 18.08.1929

- விடுதலை நாளேடு,3.12.17

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி


- தந்தை பெரியார்



நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு  வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கி யனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லு கிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜனநாயக ஆட்சி? இது ஒரு சாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் சாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான்.

இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் - இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம் தான்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.

முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை  மாத்திரம் கொல்லக்கூடாது  என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகாணங்களில் சட்டம் செய்து வைத்திருக்கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்யா, சைனா, போன்ற நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது. அதைக் கொல்வது  தவறு கிடையாது. ஆட்டிறைச்சியைவிட  விலைமிகக் குறைவு. மாட்டி றைச்சி ஏழைகள் சுலபமாக  வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை  அறுத்தால் தண்டனை என்றால் இது வருணாசிரம முறைப்படி  நடக்கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?

அடுத்தப்படி பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்? என்று கேட்கிறார்கள் சிலமடையர்கள். 100 க்கு 97 பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3 பேர்தானே இருக்கின்றான்? அந்த 3 பேருக்காவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண்டானே ஏன் என்று எவனாவது கேட்கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்ககளும் 50 பேர் இங்கிருந்தால் அதில் 26  பேர் சொல்லுகிறபடி மற்ற 24 பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10 பேர் இருந்தால் 6 உறுப்பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர்  வருவார். இங்கே நாம் 100க்கு 97 பேர் இருக்கின்றோம். 100க்கு 3 பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97 பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன்னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிரநாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந் தால் இது விளங்கிவிடும். அதாவது ஒன்று: பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்ப் பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப் பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறான்.

இரண்டு: பார்ப்பான் ஆட்சித் தலைவனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப்பந்தியாக கீழே இருக்க வேண் டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும்.

பிராமணன் சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும் படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன் என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான்  வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங்களேன்; வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக  வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக் கூடாது என்பதற்காகவே. சூத்திரனைச் சோற்றுக் குத் திண்டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித்துத்தான் நமக்கு வரி.

சாதி ஒழியக்கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக்கூடாது; சூத்திரன்  வயிறாரக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத்திருக்கிறான். இதுதான்  மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும் ஆதாரமும், அடிப்படையும் ஆகும். இதனால் தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000 பேருக்குத் தண்டனை.  பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகி விட்டது? திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5, 6  பேருந்துகளைக் கொளுத்தினார்கள். 12 பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்க வில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1 வருடம், 2 வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங்கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்யவில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடு தாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! அதற்கு மாத்திரம் ஏன் 2, வருடம், 3 வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந்ததா?அதில் சாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே! நேற்றுதான் இந்த இராமனையும் பிள்ளையாரையும் எரித்தோம். வீதிக்கு விதி போட்டு உடைத்தோம்.  யாரும் கேட்கவில்லையே ஏன்? சாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2 வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம்வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப் பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97 பேருக்கு யோக்கியமான முறையில் ஓட்டுக் கொடுத்திருந்தால் 97 பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3 பேராக உள்ள வர்களிடத்திலிருந்து தான்  பிரசிடெண்ட் பார்ப்பார பிரசிடெண்டு - என்றால் என்ன அர்த்தம்? இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் சாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப்போடுகிறவர்களில் 100க்கு 95 பேர் முட்டாள். பாக்கி 3 பேர் அயோக்கியன். 2 பேர் பார்ப்பான்! அவன் செலவு செய்கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக் கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறிவைத்து எலியைப் பிடிக்கிறார்களோ அதுபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ணமுடியாது. கீழ்சாதிக் காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமுதாய இழிவு ஒழிய ஜனநாயகம் மூலம் செய்யமுடியாது. சட்ட சபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்?

சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம்தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம் முடியும். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறுவழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.

பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று  அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண்டிலே ஒன்று பார்த்துக்கொள்கிறான் என்று தான் அர்த்தம். நீங்கள் பத்திரிகையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலை களில் 100க்கு 75கூட கொலை செய்கிற வனும் தன்னை மாய்த்துக்கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு  மாற்றிக் கொள்ள வேண் டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கினார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!

ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார்? காந்தியார் சொன்னார் என் பிணம் கடலில் மிதந்தபிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு என்று! பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கையின் தத்துவமே அப்படித்தான் வரிசையாகப் போகும். முடிய வில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8 மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று?

இப்போ இங்கே பார்ப்பார நாயகம். சாதிநாயகம். மத நாயகம், அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவ தற்கு  முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிப்படுத்தி ஒழுங்கு முறை கைக்கொள்ள வேண்டும்.

சாதி, மதம், இவையெல்லாம் ஒழிந்தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். சாதிக்கு முதல் முட்டு கடவுள். இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எல்லாம் தீர்ந்தது. மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம். இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால்  அதுதானே சாய்ந்து விடும்! பொத்தென்று விழுந்துவிடும்; அது சாய்ந்தால் நாம் உருப்படியாக ஆகிவிடுவோம்.

14-11-1958 அன்று மண்ணச்சநல்லூரில்

பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு

(விடுதலை 27-11-1958)

- விடுதலை நாளேடு, 19.11.17