செவ்வாய், 8 அக்டோபர், 2019

சமரசம் அடைய வேண்டுமெனில்...



தந்தை பெரியார்


சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக் கின்றது. இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன் மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.

ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக் கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்த மாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட் டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத்தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத் திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள். சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவாதவர்களை காவல்  காக்கப் போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்கு வரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகி யவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவு படுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சவுகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள்? யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.  இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?  முதலாவது உங்களைக் கேட்கிறேன். நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள் கின்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல் கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண் டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெ னில், இன்னும்  அநேக நாடுகள் இருக் கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை. சகோ தரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருது கின்றீர்களா? இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?  இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்கு வதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது. ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.  அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள்

சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா. இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப்போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக் குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல் கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல் களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களே யானால் வந்து விட்டது. அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியி ருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள். அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்.

எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமா னாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.  ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத் தனமுமான விஷயமாகும்.

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப் பட்டிருக்கின்றது.  ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாய கர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.  உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல் லுங்கள் என்றும் சொல்ல வரு வார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கலியாணம் செய்து கொள்ளுவதே அடிமைப் பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக் கியனாகவில்லை.  ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்ட மில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும், பயப்படக்கூடாது.

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி  கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள். இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட் டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத்தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள். எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல் வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற்காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக் காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.

(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)

‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931

 -விடுதலை நாளேடு, 29. 9. 19

 


வெள்ளி, 4 அக்டோபர், 2019

ஓர் ஆராய்ச்சி

 சித்திரபுத்திரன் -


20.09.1947 - குடிஅரசிலிருந்து...

இராட்சதர்கள் தபசு செய்தார்கள், வரம் பெற்றார்கள். அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் என்பனவெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும் அவர்கள் தலைவர்களையும் இராட் சதர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்குக் கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர் கொண்ட ஆரியர்கள் வழி தேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யார்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டா னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. அதுபோலவே தேவர்கள் யார்? எப்படி உண்டா னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? உலகிற்கு அவர்களால் என்ன பயன்? என்பதற்கும் ஆதாரம் கிடையாது.

இவர்கள் எல்லாம் இமய மலைக்கு இப்புறம்தான், அதாவது இந்தியா கண்டம் என்னும் பிரதேசத்தில் இருந்தார்களே ஒழிய மற்ற இந்தியாவுக்கு அப்பாற்பட்ட அய்ந்து கண்டங்களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி இவர்கள் ஏதாவது தெரிந்திருந்ததாகவோ சரியான தகவல்களைக் காணோம்.

கீழ் ஏழு லோகம், மேல் ஏழு லோகம் கண்டு பிடித்தவர்கள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, அய் ரோப்பாக்களைப் பற்றி ஒன்றையும் கண்டு பிடித்ததாகவோ அல்லது அங்குள்ளவர்கள் இந்தி யாவையும் சிவ, விஷ்ணு, தேவர், அசுரர், ராட்சதர், சூரன் ஆகியவர்களை அறிந்தி ருந்ததாகவோ தகவல்களையும் காண முடியவில்லை.

அவதாரங்களில் கூட அக்கடவுள்களின் ஆட்சியில் அவர்களது பிள்ளை, குட்டி மனைவி முதலியவர்கள் வாழ்க்கையில் உள்ள இடம்,  மலை, ஆறு, கடல், ஊர், வீடு, வாசல் எல்லாம் இந்தியாவில் இருப்பவை களைத்தான் சொல்லப்படுகின்றனவே ஒழிய மற்ற நாட்டு மலை, காடு, வனம், நதி, சமுத்திரம் எதுவும் சொல்லப்படவில்லை. கடவுள்கள் தேவர்கள் வாழ்க் கைகளில் காணப்படும் பூலோகமே இந்தியாவாகத்தான் கருதப்பட்டிருக் கின்றதே தவிர வேறு ஒன்றும் சேர்க்கப்படவில்லை .

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்து, இந்தியக் கண்டத்தின் பூர்வநிலை அதாவது ஆரியர் வருவ தற்குமுன் இருந்த நிலையும் யோசித்துப் பார்த்தால் சிவன், விஷ்ணு அல்லது சேயோன், மாயோன் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றில் வரும் உலகம் முதலியவை பெரும்பாலும் இந்தியாவுக்குள் ஆரியர் வந்தபிறகு ஏற்பட்டவைகள்தான் என்பதும் அவை இந்தியாவைப் பொருத்தவைகள்தான் என்பதும் சாதாரணமாய் விளங் கும். அவைகளைப் பற்றித்தான் மற்ற வேறு ஆதாரங்களும் விளங்குகின்றன.

சிந்து நதி தீரத்தைப் பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய கண்டுபிடிக்கப்பட்ட  பூர்வ சின்னங்களைப் பற்றியும் பேசுவதில் ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும் இந்தியாக் கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும் தான் சொல்லப்படுகிறது. ஆனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருஷ காலத்துக்கு முந்தியது என்று சொல்லப்படுகிறது. ஆரியர்களுக்கு  முன்பே இந்த இடங்கள் நாகரிகமாய் இருந்திருந்தால் ஆரியர் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? இந்தியக் கண்டம் முழுவதும் சமயம், சமுதாயம், கலை, பழக்க வழக்கம் முதலிய  யாவும் ஆரியமயமாய் அதில் ஆகமம், ஆரிய ஆச்சாரம், தர்மம், ஆரியக்கதை ஆகியவைகளே கொண்ட இலக்கணம்,  இலக்கியம், சரித்திரம், காவியம் ஆகியவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?

கோவில்கள் எல்லாம் தமிழர்களுடையதா? ஆரியர் களுடையதா? என்று பார்த்தாலும் அவற்றிற்குப் பணம் செய்தவனும், கட்டிடம் கட்டியவனும், அதற்கு மான்யம், மடப்பள்ளி விட்டவனும் தமிழனாக இருக்கலாம், சந்தேகமேயில்லை. ஆனால் சொந்தக் காரனும் கோவில் ஆகமக்காரனும் கடவுள் தன்மைக் காரனும் ஆரியனாகத்தானே இருக்கிறான்? கோவில் களில் உள்ள உருவங்கள், அதன் தோற்றத்துக்கு ஆன கதைகள், பூஜை உற்சவ முறைகள், நைவேத்திய சாதனங்கள் ஆகியவை ஆரியர்களுடையதாகத்தானே இருந்து வருகின்றன? அந்தக் கோவில்கள் கட்டப்பட்ட காலத்திலும் அப்போதுள்ள அரசர்கள் ஆட்சியிலும் ஆரிய ஆதிக்கம் தலைசிறந்து உச்ச ஸ்தானத்தில் இருந்தது என்பதற்கு முதல் இடை கடைச்சங்கங்களும் அப்போதிருந்த புலவர்களும், அரசர்களும், அரச நீதியும் அவர்கள் கைக் கொண்டிருந்த சமயங்களும் உதாரணமாக இல்லையா?

இந்த நிலையில் அசுரர்கள் இராட்சதர்கள் என்பவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? அவர்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? அதுவும் இந்தியா விற்குள் உள்ள அயோத்தி, மதுரை, டெல்லி, மிதிலை, காந்தாரம், விராடம், விதர்ப்பம், தண்ட காரண்யம், கோதாவரி, சித்திர கூடம் ஆகிய இடங்களும் அங்கும் அதற்குப் பக்கத்திலுமே தாடகை, கரன், சூர்ப்பநகை, மாரிசன் முதலியவர்களும் இருந்தார்கள் என்றால் இவர்கள் யாராக இருந்திருக்க முடியும்? இதைக் கண்டு பிடிக்க பெரிய பெரிய புராண சரித்திர இலக்கிய காவிய நூல் ஆராய்ச்சி ஏன் வேண்டும்?

இவை பொய்க்கதை, கற்பனைக் கதைகளாக இருந்தால் கவலை வேண்டாம். மெய்க்கதை சிறிதாவது நடந்த கதை என்றால் கோதாவரி நதிக்குப் பக்கத்திய தேசத்தில் தான் இராவணன் தங்கை சூர்ப்பநகை, இராவணன் தம்பிகரன் முதலியவர்களும் இருந்திருக் கிறார்கள். அவர்களைப் பார்த்து  உங்களைக்  கொல் லவே நான் வந்தேன் என்று இராமன் சொல்கிறான். முனிவர்களும்  பக்கத்தில்  ஜனஸ் தானம் இருக்கிறது, அங்கு இராட்சதர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்திய கண்டத்தின் பாகத்தைக் கடல் கொண்ட காலம் பதினாயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது என் கிறார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது 6000-வருஷத் துக்கு உட்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பே தமிழர்கள் இந்திய கண்டம் பூராவும் பரவி இருந்ததோடு தமிழர் ஆட்சியும் அங்கெல்லாம் பரவி இருந்தது என்றும் சொல்லி அஸ்ஸாம் கண்டு பிடிப்புகளையும். சிந்து கண்டு பிடிப்புகளையும் உதாரணம் காட்டுகிறார்கள்.

மீனக்கொடியோனாகிய தெற்கத்திய சம்பாரன் என்னும்   அசுர  அரசனுடன் தசரதன் சண்டை போட்ட தாகவும் வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது. சம்பாரன் என்று ஒரு பாண்டிய மன்னன் இருந்ததாகவும் இலக்கியம் கூறுகிறது. கதையை வளர்த்துவதற்காக இராமன் சீதையை அங்கு போய்த் தேடினான் என்று சொல்லப்பட்டிருக்கிறதே அல் லாமல், சீதை காணாமல் போன சிறிது காலத்திற் குள்ளாகவே இராவணன்தான் தூக்கிக் கொண்டு போனான் என்பதும், அவன் தெற்கே போனான் என்பதும் தெரிந்து போய்விட்டதாகக் காணப்படுகிறது.

அன்றியும் இராவணன் சீதையின் பக்கத் திலேயே இருந்து லட்சுமணன் வெளியில் சென்றவுடன் தூக்கி வந்து இருக்கிறான். மாரிசன், தாடகையின் மகள் பக்கத்திலேயே வசித்திருக்கிறான். சூர்ப்பநகை தனது மூக்கறுபட்ட உடனே இராவணனிடம் சென்று இரத்த ஒழுகலோடு முறையிட்டிருக்கிறாள். இரா வணன் உடனே மாரிசனோடு அதைப்பற்றிப் பேசு கிறான். விஸ்வாமித்திரன் யாகம் செய்ததும் தாடகை கெடுத்ததும் இந்தியாவில் இன்னும் வடக்கில் என்றாலும் சமீபமாகத்தான் காணப்படுகின்றன. சுக்ரீவன், அனுமார் முதலியவர்களையும் பர்ண சாலைக்கு சமீபத்திலேயே சந்திக்கிறான். ஜடாயு இரத்தம் காயாமல் உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கும்போதே இராம லட்சுமணர்கள் காண் கிறார்கள். இராமன் நான் புத்தியில்லாமல் இராட்சதர் களை விரோதித்துக் கொண்டேன் என்று வருந்து கிறான்.

ஆகையால், வால்மீகி கதைப்படி இராட்சதர்கள் இராட்சத அரசர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் திராவிட நாட்டிற்குள் அல்லது நமக்கு சமீபத்திற்குள்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய அவர்கள் வெளிநாட்டார் என்றோ, வேறு இனத்தார் என்றோ சொல்லுவதற்குத் தக்க ஆதாரம் எதுவும் அதில் காணப்படவில்லை. வால்மீகி இராமாயணத்தை வால்மீகி கதை முகமாய் எழுதியதால் வர்ணனைக்கு ஆகவும், கவர்ச்சிக்கு ஆகவும் சில கற்பனைகள் சேர்க்க வேண்டியதாக ஆகி, அவை ஒன்றுக்கொன்று முரண் படத்தக்கதாகவும் ஆகிவிட்டதால் பண்டி தர்கள் வக்கீல்களைப் போல் உண்மையைப் பற்றிய லட்சியமில்லாமல் தங்கள் வெற்றியையே குறி வைத்தும் சில அற்பக் குறிப்புகளை எடுத்துக்கொண்டும் மனசாட்சிக்கு விரோதமாய் கூச்சல் போட்டுத் தேவ அசுரர்களை உறுதிப் படுத்துகிறார்கள், என்பதல்லாமல் வேறு உண்மை என்ன இருக்கிறது. புராணங்கள், இதிகாசங்கள், வேத சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் என்பவைகள் உள்பட ஆரியர்கள் தங்கள் உயர்வுக்கும் திராவிடர்களை இழிவு படுத்தவும் செய்து கொண் டவைகளே தவிர வேறில்லை.

அக்காலத் தமிழர்கள் ஒரு சமயம் பாமர மக்களாக இருந்திருக்கலாம். ஆதலால் சமய சரித்திர ஆதாரங்களைக் கொண்டு நாம் நம்மைக் கவனிக்காமல் தற்கால அறிவைக் கொண்டு நிலையைக் கொண்டு பார்ப்பதுதான் பயன்தரக் கூடியதாகும்.

-  விடுதலை நாளேடு, 4 .10 .19