ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பொங்கல் வாழ்த்தும் - குறள் வாழ்த்தும்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

திராவிடரும் ஆரியரும்

சொர்க்கவாசல் என்னும் படுகொலை - தந்தை பெரியார்


மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங் கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறி யாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத் தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிர கத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

சனி, 24 டிசம்பர், 2022

நான்யார்?

சனி, 10 டிசம்பர், 2022

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்


-தந்தை பெரியார்

அன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக்கூட்டம் நாளை இச்சென்னையில் நடைபெற இருக்கும் ஹிந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும். இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் ஹிந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது விபரம் தெரியாது இருந்த குந்தைகளுக்கும்தான் சற்று விளக்கம் கூறவேண்டியிருக்குமே ஒழிய, மற்றையோருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்கமாக அன்று நாம் ஹிந்தி எதிர்ப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால்தான். சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி, இதே ஹிந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடர் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னை யில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற் பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப்பற்றிக் கூறவேண்டுமானால், இக் காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூர மான, வேகமான, ஆபத்துக்கிடமான தன்மையில் வந் துள்ளது என்று கூறுவார்கள். அதே போல் நமது கலாச்சாரத் திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னை விடச் சற்று கடினமான, சற்று தொந்தரவான தன்மையில் வந்துள்ளது.

பழைய ஹிந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன்மந்திரியாய் இருந்த காலத்தில், இதே ஹிந்தி கட்டாய பாடமாகக்கூட அல்ல, இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப்பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். 

நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், ஹிந்தியை இஷ்டப்பட்டுப் படிப்பவர்கள் கூட, இஷ்டப்பட்டாலொழிய பரீட்சைக்குப் போக வேண்டாம், சென்றாலும் தேற வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர வளர ஏதோ 100-வார்த்தைகளாவது ஹிந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக, “இவ்வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந்திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்கமாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப்பட்ட அவர், முதல் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்டபோது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன்மந்திரி. மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ளவன். நான் உத்தரவிடுகிறேன் என்றால், மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்தரவிடுகிறேன் என்று பொருள். அப்படியிருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு ராமசாமி நாயக்கரும், ஒரு சோமசுந்தர பாரதியாரும் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக் கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது” என்று ஆணவத் தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் ஹிந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டு பேராதரவு அளிக்க ஆரம் பித்து விட்டார்கள்.

ராஜி பேசிய படலம்

அதைக்கண்டு அன்று ஆணவத்தோடு சவால்விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜிபேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜிபேச வந்தவர் ஜெயில் சூப்ரன்டெண்ட் முன்னிலையில்தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் யார் என்பதையும்தான் தெரிவித்து விடுகிறேனே! வேறு யாருமில்லை. இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியாயுள்ள 

தோழர் சண்முகம் செட்டியார்தான் என்னுடன் ராஜிபேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார் “இப்போது ஹிந்தி புகுத்தப்பட்டுள்ள நாற்பது பள்ளிகளோடு ஹிந்தி நுழைப்பை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதம் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் “இது வெறும் வீம்புதானே, ஹிந்தி தேவையில்லையென்று அவர் உணருவதாயிருந்தால் இந்த 40 பள்ளிகளில் கூட எடுத்து விடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறினேன். அதற்கு அவர் சொன்னார்.

“இந்த 40 பள்ளிகளில் கூட ஹிந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதம்தானா” என்று கேட்டார். “அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் ஹிந்தி மொழி எடுக்கப்பட்டுவிடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள், எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. 

அந்தத் தேதிக்குள் எடுக்கப்படாவிட்டால் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச் சென்றார்.

வேகமும் வீம்பும்

“இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்குக் காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்தபோது இங்கு ஹிந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேகமாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய் சர்க்காருக்கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்ரின்டெண்ட் கொஞ்சம் பயந்துவிட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே ராஜகோபாலாச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன்னார். ராஜகோபாலாச் சாரியாரும் “தாளமுத்துவுக்கும், நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்ரண்டென்டு அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு ஹிந்தி எதிர்ப்புக்காக சிறை சென்றவர்களை, அவர்கள் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம், கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி ஹிந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்! வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலேயிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டார்கள். இதுதான் பழைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.

இன்றைய ஹிந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள் இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்திர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அன்னிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையைவிட சற்றுக் கடினமான முறையிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது போராட்டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவானதாகவே அமையும். உத்தரவு பிறப்பித்தவர்களும், திடீரென்று ஹிந்தியை இந்நாட்டில் கட்டாய பாடமாக்கிவிடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஹிந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்தரவைப் பிறப்பிக்க வில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப் பட்டது, தமிழ் நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப் பகுதியில் ஹிந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆட்சே பிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாயமாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

“ஹிந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்து விட்டார்கள் போல் இருக்கிறது” என்று இவ்வுத்தரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக்குப் போவானேன், இஷ்டப்பட்டவர்கள் வேண்டுமானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெரிந்தால்.........

தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெச்சலை உண்டாக் கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்தபோது “ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஹிந்தி இஷ்டப்பாட மாக்கப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா?

“வேண்டுமென்று தான் நாங்கள் இந்நாட்டில் ஹிந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் ஹிந்தி மொழியை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் அப்படிச் செய்தோம். அந்த உத்தரவிற்கு ஆட்சேபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்சேதி 24.06.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.06.1948இல் மந்திரியார் பேசியதாக “ஹிந்தியும் கட்டாய பாடமும்” என்கிற தலைப்பில் வெளி வந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். “வேண்டுமென்றுதான் ஹிந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்பட வில்லை. பொது மக்கள் இவ்வுத்தரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்தரவு பிறப்பித்தோம். இரண்டொரு இடத்தைத் தவிர இவ்வுத்தரவிற்கு ஆட் சேபணை வரவில்லையே. அப்படி இருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி ஹிந்தியைக் கட்டாயப்படுத்துவது” என்று பதில் கூறியிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆட்சேபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார். அதே 24.6.1948 தேதியில் இந்தச் சேதியையும் வெளியிட்டு விட்டு, “ஹிந்தி கட்டாயமாகத் தேவை” என்று “சுதேசமித்திரன்” ஒரு தலை யங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறிவிட்டது. அதற்கு ஆதாரமாக 

உத்தரவில் “சிலர் ஆட்சேபிப்பதால் கட்டாயமாக்க வில்லை” என்று கூறியிருப்பதைக் காட்டி “கட்டாய ஹிந்தியை ஆட்சேபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது” அந்த ஒரு சிலருக்காக இஷ்ட பாடமாக்குவதா? என்று கேட்டிருப்பதோடு சர்க்காரை எப்போதும் எதிர்ப்பவர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டுவிடுவதா? நல்லகாரி யத்திற்குக்கூட ஒருசிலர் ஆட்சேபணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி மது விலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்க வில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.

கட்டாய உத்தரவு

ஆட்சேபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், “சுதேசமித்திரனுடைய” ஆட் சேபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றி விட்டார். மாற்றும் போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ்நாட்டி லும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக் கிறார். முந்திய உத்திரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டி ருக்கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம் “நாங்கள் ஹிந்தி கட்டாயம் என்று சொல்லவில்லையே” என்பது தான். சர்க்கார் உத்திரவிலும், மந்திரிகள் பேச்சுக்களி லும் கட்டாயம் என்கிற வார்த்தை பலமுறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாய பாடமாக்கவில்லை என்றுகூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள் - எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால் ‘ஹிந்தியை எங்கு கட்டாயம் என்றோம்’. ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு ஹிந்திய மொழி ஒன்றைத்தானே கட்டாயமாக்கியிருக்கிறோம். இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய ஹிந்தியல்லவே என்கிறார்கள். ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவ தொன்றை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, ஹிந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப் படும், சர்க்கார் சலுகை அளிக்கப்படும் என்றால், ஹிந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுப வர்கள் ஹிந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? ஹிந்தி வாத்தியார்களை உற்பத்தி செய்யமட்டும் பணம் ஒதுக்கி வைப்பானேன்? ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க்காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா? இதுதான் போகட்டும்.

சர்க்கார் பத்திரிகை இது!
சாகஸப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு அவரது போட்டோவுடனும், கையெழுத்துடனும் வெளிவந்துள்ளது. என்ன வென்று கவனியுங்கள் 01.08.1948இல் வெளியாகி 02.08.1948இல் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இப் பத்திரிகையில் (பத்திரிகையும் போட்டோவையும் காட்டி) ஹிந்தியைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டு “இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம். எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு பிறப்பித் துள்ளார்கள்” என்று எழுதியிருக் கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே ஹிந்தியை கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதையெல் லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும் அவர்கள் சொன்னதையே தான் திரும்பித்திரும்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப் பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்லமார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளைகள் எப்படி ஹிந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிக கஷ்டமாயிருக்குமே என்று கூறினால் ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். ‘நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே’ என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்படவேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கில் நுழையுமா என்று, நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார். நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழையாது என்கிறாயே, அதைக் கூறிக் கொள்வது அவமானமில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு ஹிந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரோடு ஹிந்திப் போட்டி பலிக்குமா?

பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படித்தவர்களின் சந்ததி யார்கள். சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 சப்தங்கள் உண்டு. ஹிந்திக்கும் அப்படியேதான். நாலு சப்தங்களுக்கேற்ப எழுத்துருவங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் அப்படிக்கில்லை. சப்தத்தில் மாறுதல் இருந்தாலும் எழுத்து உருவத்தில் மாறுதல் இல்லை. தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதும் வெகுசுலபம். தமிழ் எழுத்துக்களையே உச்சரித்துப் பண்பட்ட தமிழன் நாக்கால் ஹிந்திச் சப்தத்தைச் சரிவர உச்சரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு மொழியை நமது சிறுவர்களின் மீது திணித்து அவர் களைக் கொடுமைப்படுத்தலாமா? என்பது தான் எங்கள் கேள்வி.

தெலுங்கு ரெட்டியார்தான் ஆனால் தெலுங்கைச் சரியாகப் பேசுவாரா?

நான் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதற்காக நண்பர் ரெட்டியாரும் என் மீது கோபித்துக் கொள்ளமாட்டார் என்று கருதுகிறேன். ரெட்டியார் ஒரு தெலுங்கரானாலும் அவருக்குச் சரியாகத் தெலுங்குப் பேசத் தெரியாது. நான் ஒரு கன்னடியன் என்றாலும் எனக்குச் சரியாகக் கன்னடம் பேசத் தெரியாது. ஏன்? ரெட்டியாரின் மூதாதையர் தமிழ்நாட்டில் வந்து குடியேறி சுமார் 600 ஆண்டுகள் சுமார் 10 - தலைமுறைகள் ஆகியிருக்கும். அதற்கும் பல ஆண்டுகள் முந்தித்தான் எனது மூதாதையரும் தமிழ் நாட்டை அடைந்திருக்க வேண்டும். 10 தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே எங்கள் குடும்பத்தினர் வாழநேரிட்ட காரணத்தால், எங்கள் சொந்தமொழி எங்களுக்குச் சரியாகத் தெரியாது போய்விட்டது. நான் பேசும் கன்னடமும், ரெட்டியார் பேசும் தெலுங்கும் ஒரு தமிழனுக்குத்தான் புரியுமேயல்லாது ஒரு கன்னடியனுக்கோ, ஒரு தெலுங் கனுக்கோ சரியாகப் புரியாது. காரணம் தமிழ்நாட்டிலேயே பலகாலம் இருந்து தமிழர்களிடையே பழகித் தமிழே பேசிவந்ததுதான். தமிழ் திரிந்த தெலுங்கே, பழக்கத்தால் ரெட்டியாருக்கு, மறந்து போய்விட்டதென்றால், சரிவர கற்க, சரிவரப் பேசமுடியாது போய்விட்டது என்றால், தமிழ் மாணவர்களால் எப்படி ஹிந்தி படிக்கமுடியும் என்று நண்பர் ரெட்டியார் சிந்திக்க வேண்டாமா?

(09.08.1948 அன்று பெத்துநாயக்கன்பேட்டை சிவஞானம் பார்க்கில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.08.1948

ஹிந்தியைப் புகுத்த சூழ்ச்சி...

 

தந்தை பெரியார்

“என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரி யானால் இந்தியர்களை (ஹிந்தியை மாத்திரமல்லாமல்) சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகப் படிக்கும்படி செய்வேன்” என தோழர் எஸ்.சத்தியமூர்த்தி சாஸ் திரிகள் சென்னை லயோலா காலேஜில் மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அதோடு நிற்காமல் அவர் "அதேசமயத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் ஏற்படுத்தி விடுவேன்” என்று கூறி இருக்கிறார். இவ்வள வோடு அவர் திருப்தியடைந்தாரா? இல்லை இல்லை.

“காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தி யாவில் ராமராஜ்ஜியமேற்பட்டு விடவேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்” என்றும் பேசி இருக்கிறார். ஏனென்றால், மக்கள் சமஸ்கிருதம் படித்தால் பிறகு ராமராஜ்ஜியம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் அதுதான். ஆங்கிலம் படித்ததால் ஆங்கில நாகரிகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதுபோல் ஆரியம் படித்தால் ஆரிய நாகரிகம் தானாகவே ஏற்பட்டுவிடுமல்லவா? ராமராஜ்ஜியம் என்பது ஆரிய நாகரிகம்தானே. அதனால் அவர் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட்டவுடன் ராம ராஜ்ஜியம் ஏற்பட்டுவிடுமென்று கருதுகிறார். இந்தப்படி கருதி பேசிவிட்டு உடனே, ராமராஜ்ஜியத்திற்கு வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்து “ராமராஜ்ஜியம் என்பது வர்ணாசிரமமுறைப்படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்துகொள்ள வேண்டி யது தான்” என்றும் ராமர் காலத்தில் மக்கள் இந்த வருணாசிரம முறைப்படியே அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்துகொண்டு திருப்தியாய் இருந்தா னென்றும், அதனால் யார் மீதும் யாரும் வருத்தப்பட வில்லை என்றும், யாருக்கும் கெடுதி ஏற்பட்டு விடவில்லை என்றும் சொல்லுகிறார்.

மேலும், அவர் பேசும்போது “ஒரு திராவிட கவியாகிய கம்பர் இதை ஒப்புக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்” என்பதாகவும் சொல்லி தமிழ் மக்களை அந்த ராமராஜ்ஜியத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

(இது 25.7.1939ஆம் தேதி மெயில் பத்திரிகையில் வெளியாயிருக்கிறது)

நமது கருத்து

எனவே, பார்ப்பன ஆட்சி நமக்கு கூடவே கூடாது என்றும் ராமராஜ்ஜியம் என்னும் ஆரிய வருணாசிரம ராஜ்ஜியம் நமக்கு கூடவே கூடாது என்றும் நாம் சொல்லி வந்ததின் கருத்து என்ன என்பது இப்போதாவது உண்மைத் தமிழர்களுக்கு விளங்கி இருக்குமென்று கருதுகிறோம்.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற 4 ஜாதிகளுக்கும் குறித்திருக்கும் யோக்கியதையும், விதித்திருக்கும் கடமையும் யாரும் அறியாததல்ல என்பதோடு பார்ப்பனர் ஒழிந்த மற்ற வகுப்பு மக்கள் எல்லோரும் சூத்திரன் என்ற தலைப்பில்தான் வருகிறார்கள் என்பதை நாம் சொல்லி யாரும் அறிந்துகொள்ள வேண்டிய நிலையில் இல்லை.

நிற்க, ஹிந்தி பாஷையென்பதே ஆரிய பாஷை என்றும், அது சமஸ்கிருதத்தின் மற்றொரு ரூபம் என்றும், அப்பாஷையும் அப்பாஷைகளாலான வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் ஆகியவைகள் தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயமாய் புகுத்தப்படுவதன் மூலம் பரப்பப்பட்டு செல்வாக்கு பெறப்படுமானால் தமிழ் மக்களின் சுதந்திரத்தன்மை வாய்ந்த தமிழும், தமிழ்க் கலைகளும் அழிய நேரிடுவதோடு தமிழரின் சுதந்திரமும், தன்மானமும் அடியோடு இழக்க நேரிட்டு தமிழர்கள் ஆரியர்களுக்கு பரம்பரை அடிமையாக இருக்க நேரிட்டு விடுமென்று கருதியே நாம் ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இதை பார்ப்பனர் களுக்கு அடிமையான பல தமிழ் மக்கள் அதாவது பார்ப்பன கலைகளை நம்பி அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக்கொண்ட தமிழர்களும் அப்படி  எண்ணிக் கொண்டவர் களுமான தமிழர் களும் ஹிந்தியைப் புகுத்துவதால் தமிழ் கெடாது என்றும் தமிழ் கலை அழியாது, ஒழியாது என்றும், தமிழனின் தன்மானத்துக்கும், சுதந்திரத்துக்கும் கேடுவராது என்றும் சொல்லி எதிர்ப்பு பிரசாரம் செய்கிறார்கள். இந்த எதிர் பிரசாரம் செய்பவர்கள் தாங்கள் யார், தாங்கள் எந்நிலையிலிருக்கிறோம், தங்களுக்கு இப்போது எம்மாதிரி சுதந்திரமும் மான உணர்ச்சியும் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பார்களேயானால், நாம் சொல்வது சரியோ தாங்கள் மறுப்பது சரியோ என்பது அவர்களுக்கே நன்கு விளங்கிவிடும்.

எவ்வளவு கேவலமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்?

ஹிந்தியின் நிலையே இப்படி இருக்கும்போது “இந்தியர்களுக்கு ஹிந்தி மாத்திரமே போதாது; இது ஆச்சாரியார் பங்குக்கு சரியாய் போய்விட்டது; இனி என் பங்குக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்க வேண்டும். நான் சர்வாதிகாரி ஆன உடன் அதைத்தான் செய்யப் போகிறேன். அப்போதுதான் ராமராஜ்ஜியம் சீக்கிரத்தில் ஏற்படுத்த முடியும்” என்று தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சொல்வாரேயானால் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் இவர் எவ்வளவு கேவலமாய் கருதிக் கொண்டிருக்கிறார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கின்றோம்.

இந்திய நாட்டில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் இந்திய நாட்டில் சமஸ்கிருதம் எத்தனை மக்கள் படிக்கிறார்கள் என்றும், சமஸ்கிருதத்தினால் இந்திய நாட்டில் எத்தகைய மக்களுக்கு மாத்திரம் உயர்வு கிடைக்கும் என்றும், இதனால் மக்களின் வாழ்வுக்கோ, ஒழுக்கத்திற்கோ, வீரத்திற்கோ, மானத்திற்கோ ஏதாவது பயன் உண்டா என்றும் ஆலோசிப் போமேயானால் சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் 1000இல் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என்பதும் அதனால் மேன்மை அடைகிறவர்கள் 100-க்கு 3 பேர்களுக்கும் குறைவான வர்களாகவே இருப்பார்கள் என்பதும் அது பார்ப்பனர் தவிர, மற்றவர்களை மிருகத்திலும் கேடான தன் மையில் இழிவுபடுத்துவது என்பதும் தெள்ளென விளங்கிவிடும்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு அவசியமில்லாததும், கேடுதரக்கூடியதும், செத்துப்பட்டுப் போனதும், யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் உயர்வளிக்கக் கூடியதாய் இருக்கிற ஒரு பாஷையை தனக்கு சர்வாதிகாரம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு கட்டாயப் பாடமாக ஆக்குவேன் என்று சொல்லுவாரேயானால் இதிலிருந்து தோழர் சத்தியமூர்த்தி அவர்களை மகா தைரியசாலி என்று சொல்லுவதா அல்லது இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற தமிழ் மக்களை தோழர் சத்தியமூர்த்தி சொல்லுவதுபோல் உண்மையான சூத்திரத்தன்மை பொருந்திய இழிகுலமக்கள் என்று சொல்லுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை.

எப்படி பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்?

பாஷையாலும், கலையாலும், இயற்கையாலும் வீரம் பொருந்திய சுதந்திரமுள்ள தன்மானக்காரர் களாகிய தமிழ்மக்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற ஒரு கூட்டத்தார் இதை எப்படி பொறுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி அய்யருக்கு பூர்ண ஆதிக்கம் வரும் படியான சுயராஜ்ஜியத்துக்கு எப்படி பாடுபடத் துணி கிறார்கள் என்பதும், அவர் பின்னால் சூத்திரர் களாய் திரிந்து வயிறு வளர்க்கிறார்கள் என் பதும் நமக்கு மிக மிக அதிசயமாக இருக்கிறது.

எந்த முறையில் இந்நாட்டில் சமஸ்கிருதம் புகுத்தப்பட்டாலும் அது கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு கேட்டையும் இழிவையுமே உண்டாக்குமென்பதற்கு எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

சமஸ்கிருதப் புராணங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு இருக்காவிட்டால், நமது பண்டிதர்கள் அந்தப் புராணங்களை தமிழர்களின் இடையில் பிரசாரம் செய்து ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கா விட்டால் தமிழ்நாட்டில் இந்த தன்மான எழுச்சியான இக்காலத்தில் ஆரிய சமயத்துக்கும், ஆரியக் கடவுள்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் இவ்வளவு மதிப்பும் இவ்வளவு தமிழர் அடிமைகளும் ஏற்பட்டு இருக்கமுடியுமா? என்று கேட்பதோடு ஆரிய பாஷை, ஆரியக் கலை வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ப் பண்டிதர்கள், உண்மைத் தமிழர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள், ஆரிய கலைகளை தங்கள் கலைகள் என்றும், ஆரியக் கடவுள்களை தங்கள் கடவுள்கள் என்றும், இவற்றை ஆரியர்கள் திருடிக் கொண்டார்கள் என்றும் சொல்லிக் கொண்டாடி இராவிட்டால் இப்படிப்பட்ட இழிவுநிலை ஏற்பட்டிருக்குமா என்றும் கேட்கின்றோம்.

மற்றும் ஆரிய புராணக் கதைகளை கம்பனைப் போன்ற சில குலத்துரோகப் பண்டிதர்கள் தமிழில் மொழிபெயர்த்து, அதன் மூலம் ஆரியர்களுக்கு தங்களை சற்சூத்திரராக ஆக்கிக்கொண்டு வயிறுவளர்க்க ஆசைப்பட்ட இழி தன்மையே தோழர் சத்தியமூர்த்தியாரை அவ்வளவு தெளிவாகப் பேசச் செய்தது என்று சொல்லுவோம்.

சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கினால்?

ஆகவே, இப்பண்டிதர்கள் செய்து கொடுத்த புராண மொழிபெயர்ப்புகளே இன்று தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் இவ்வளவு கேடுகளை உண்டாக்கி இருக்கும் போது இனி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சொல்வதுபோல் சமஸ்கிருதத்தை அதாவது அவற்றின் மூலத்தையே இந்தியர்களுக்கு கட்டாயப் பாடமாக ஆக்கிவிட்டால் எல்லா தமிழனும் தங்கள் முன்னோர்கள் ஆரியர்கள் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைய ஆசைப்படுவான் என்பது மாத்திரமல்லாமல் இந்தி யர்கள் என்கின்ற முறையில் முஸ்லிம்களுங்கூட “எங்கள் முன்னோர் களும்கூட ஆரியர்கள்தான்” என்று சொல்லிப் பெருமை அடையவேண்டிய அள வுக்கு வந்து விடக்கூடும் என்பதில் அதிசயமொன்றும் இருக்காது.

தமிழ்நாடு தமிழருக்கு என்கின்ற வீரச் சொல்லானது காரியத்தில் வெற்றி பெறவேண்டுமானால் பார்ப் பனர்களின் இந்த உள் எண்ணத்தை அறிந்த பிறகாவது சமஸ்கிருத சம்பந்தத்தையும் அதற்கு வழிகோலியான ஹிந்தியையும் இவ்விரண்டையும் கட்டாயமாகப் புகுத்த சூழ்ச்சி செய்யும் ஆரிய சமய சம்பந்தத்தையும் ஆட்சியையும் அடியோடு வெறுத்து ஒதுக்கி தள்ளி உண்மைத் தமிழர்களாக வாழ ஆசைப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தோழர் ஆச்சாரியார் ஹிந்தியை புகுத்துவதற்குச் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று - ஹிந்தி படித்தால் சமஸ்கிருதம் சுலபமாகப் படிக்க வரும் என்று சொன்னது யாவருக்கும் ஞாபகமிருக்கும்.

இப்பொழுது தோழர் சத்தியமூர்த்தியார், ஆச் சாரியார் சர்வாதிகாரத்தில் ஹிந்தியைப் படியுங்கள்; என் சர்வாதி காரத்தில் சமஸ்கிருதத்தைப் படியுங்கள் என்று சொல்லத் துணிந்துவிட்டார். தமிழர்களுடைய கோழைத்தனமும் எதை விற்றும் வயிறு வளர்த்தால் போதும், பதவி பெற்றால் போதும், விளம்பரம் பெற்றால் போதும் என்கின்ற சூத்திரத் தன்மையான இழி தன்மையும்தான் தமிழுக்கு, தமிழர்களுக்கு இந்த நிலையை கொண்டுவந்து விட்டது என்பதைக் கூசாமல் கூறுவோம்.

 குடிஅரசு - தலையங்கம் - 30.07.1939

வெள்ளி, 9 டிசம்பர், 2022

தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்!


தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் (தந்தை பெரியார்) எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியை படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு. சைவர்கள் என்பவர்கள்கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு. எல்லோருமே இதைப் பார்க்கட்டும்!                       (ஆ-ர்).

டேவிஸ்: டேய், ராமானுஜம்... எங்கடா போகிறாய்?

ராமானுஜம்: எங்குமில்லை பிரின்ஸ் பாலைப் பார்த்து எனக்கு இரண்டு நாள் லீவ் கேட்கப் போகிறேன்.

டேவிஸ்: எதற்கு லீவு?

ராமா: 21ஆம் தேதி பண்டிகை லீவு, 22ஆம் தேதி சனிக்கிழமை 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலேஜ் இல்லை. இன்னும் ஒரு இரண்டு நாள் அதையொட்டி லீவு கிடைத்தால் ஊருக்குப் போய் 5 நாள் சாவகாசமாய் இருந்துவிட்டு வரலாம் என்று கருதி இன்னும் இரண்டு நாள் லீவு கேட்கிறேன்.

டேவிஸ்: என்ன பண்டிகை?

ராமா: தீபாவளிப் பண்டிகை

டேவிஸ்: தீபாவளி என்றால் அது ஒரு பண்டிகையா?

ராமா: ஆம்.

டேவிஸ்: அதற்காக எதற்கு?

ராமா: பண்டிகை கொண்டாடு வதற்கு.

டேவிஸ்: எப்படிக் கொண்டாடுவது?

ராமா: அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகி புதிய உடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு பட்டாசு சுடுவது.

டேவிஸ்: குளித்து முழுகி புதிய உடை அணிந்து பட்டாசு சுடுவது ஒரு பண்டிகையா? இதற்காக நீ ஊருக்கு போக வேண்டுமா அதை அனுசரித்து சனி, ஞாயிறு வருவது போதாமல் மேற்கொண்டு இரண்டு நாள் தேவையா? இதென்னப்பா, நாட் களைக் கொலை செய்யும் பண்டிகை யாக இருக்கிறதே? லீவுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா?

வாரத்துக்கு சனி, ஞாயிறு லீவு; வருடத்தில் 2,3 மாதம் வெயில் கால லீவு. வருடத்தில் 15 நாள் ஜனவரி லீவு. பிறகு காஷுவல் லீவு. இவை போன்று என்னென்னமோ லீவு. இந்த 2,3 மாதத்தில் பல லீவுகள்! போதாக் குறைக்கு நாணயமாற்று லீவு! இப்படியே நாட்கள் பாழாகின்றன. நமக்கு படிக்கும் நேரமோ ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தான் தேறுகிறது. அப்படித் தேறும் நாட்களில் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் நாட்கள் பாழாகின்றன அன்னிய ஆட்சி போய் சுய ஆட்சி வந்துகூடவா இந்தத் தொல்லை? நாட்களெல்லாம் இப்படி லீவு ஆகிவிட்டால் அப்புறம் படிப்புத் தான் எப்படி வரும்?

ராமா: நீ என்னப்பா! தீபாவளி வருஷத் துக்கு ஒரு நாள் பண்டிகையாக வருகிறது. அதுகூடஉனக்குப் பொறுக்க வில்லையா? மனிதனுக்கு ஓய்வு வேண்டாமா?

டேவிஸ்: வருஷத்துக்கு ஒரு நாளாக ஒவ்வொரு நாளும்தான் வருகிறது; அதற்காக எல்லா நாளும் லீவு விடுவதா? ஓய்வுக்கு என்ன குறை; சனி ஞாயிறு போதாதா?

ராமா: சனி ஞாயிறு நமக்குப் போதும். வீட்டிலே குடும்பத்துடன் கொண்டாட ஒரு ஓய்வு நாள் வேண்டாமோ? சனி ஞாயிறு களில் வீட்டில் உள்ளவர்கட்கு ஓய்வு ஏது?

டேவிஸ்: என்ன ஓய்வோ, என்ன கொண்டாட்டமோ, எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்தப் பண்டிகைகளின் பேரால் வேலை நாட்கள் பாழாகின்றன.

ராமா: நீ என்ன கருப்புச் சட்டைக் காரன்போல் தோன்றுகிறது. பண்டிகை களை இப்படி வெறுக்கிறாயே!

டேவிஸ்: கருப்புச் சட்டை இல்லை; ஒரு இழவும் இல்லை. என்ன பண்டிகை இது? நாசமாய்ப் போன பண்டிகைகள், இப்படி மாதா மாதம் வந்து உயிரை வாங்கு கின்றனவே.

ராமா: அப்படிச் சொல்லாதே; பண்டி கைகள் எல்லாம் மத சம்பந்தமானவைகள். நாம் மதத்தைச் சார்ந்தவர் களாகவும், கடவுள் நம்பிக்கை உடையவர் களாகவும் இருந்தால் இந்த மாதிரி பண்டிகைகளைக் குறை கூறக் கூடாது. மனிதனுக்கு மதமும் கடவுளுந்தான் முக்கி யமே ஒழிய இந்தக் கல்லூரிப் படிப்பு முக்கியமான தல்ல. இந்தப் படிப்பு என்பதெல்லாம் மதத்தை சரிவர பின்பற்றி கடவுளை சரிவர அறிந்து பக்தி செய்யத்தான். ஆதலால் இப்படி எல்லாம் பேசாதே.

டேவிஸ்: என்னப்பா பூச் சாண்டி காட்டுகிறாய்? பண் டிகை எதற்கு என்றால் லீவுக்கு என்கிறாய்! லீவு எதற்கு என்றால் குடும்பத்தோடு ஓய்வுபெறத்தான் என் கிறாய்! படிப்பு கெட்டு விடுகிறதே என்றால் மதத்துக்காகவும், கடவுளுக்காகவும் பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு, இதைத் தவறு என்று சொன் னால் என்னைக் கருப்புச் சட்டைக்காரன் என்கிறாய்! முடிவாக படிப்பைவிட மதம் கடவுள்தான் பெரிது அதற்காகத்தான் படிக்கிறது என்கிறாய்! இது என்ன சமாதானம்? மேலும் ஒரு மனிதன் பிறக்கும் போதே மதம் அவன் கூடவே பிறக்கிறது கடவுளும் ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பு இருந்தே அவன்கூடவே இருந்து அவன் சாகும்வரை அவனை நடத்துகிறது இந்த இரண்டு கெட்டியான சங்கதிக்கு ஒரு மனிதன் படிக்க வேண்டியது எதற்கு? அதுவும் காலேஜில் படிக்க வேண்டியது எதற்கு? அப்படியானால் காலேஜிலே படிக்காதவர்களுக்கெல்லாம் மதம் கடவுள் அறிவும்பக்தியும் இல்லை என்றும் வராது என்றுமா சொல்லுகிறாய்?

ராமா: நீ கருப்புச் சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை உன்னோடு பேசிப் பயனில்லை!

டேவிஸ்: கோபித்துக் கொள்ளாதே. உன் பண்டிகையை அறிய வேண்டுமென்று தான் கேட்டேன். சங்கதி எங்கேயோ போய் விட்டதே தீபாவளி என்ன பண்டிகை? எதற்காகக் கொண்டாடுவது? மதத்தை எப்படி அறிந்திருக்கிறாய்? அதில் கடவுள் பக்தி எப்படி ஏற்படுகிறது? சொல் பார்ப்போம்.

ராமா: அப்படிக் கேள் சொல்கிறேன்.

தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர்களை யும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்ய வில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டேவிஸ்: பொறு! பொறு! ஓடாதே இங்கே எனக்கு ஒரு மயக்கம்!

ராமா: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாக சொல்லு கிறேனே!

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று. 

டேவிஸ்: சரி! அது அருத்தமாச்சுது.

ராமா: பின்னை எது அருத்தமாக வில்லை? சும்மா தொல்லை கொடுக் கிறாயே!

டேவிஸ்: தொல்லை ஒன்றுமில்லை, உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது. தலை சுற்றுகிறது அதாவது ஒரு இராட்சதன் அப்படியின்னா என்ன? அது கிடக் கட்டும். அவன் பெயர் இரண்யாட் சதன். அதுவும் போகட்டும். அவன் கதையை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படி சுருட் டினான்? பூமிதான் பந்து போல இருக் கிறதே? அவன் அதை சுருட்டுவ தானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே தவிர சுருட்ட முடியாதே? அதுவும் போகட்டும் சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம்.

சுருட்டினானே அவன் சுருட்டும் போதுதான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டியிருக்கலாம். ஆகாயத்தில் பறந்து கொண்டே ஓடியி ருக்கலாம். கருடன் மகாவிஷ்ணு வையும், அவன் பொண்டாட்டியையும் தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் பறந்திருக்கலாம்.

ஆனால் அவன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்த சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின்மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போய் இருக்காதா? அப் போது அடியில் ஒளிந்துகொண்டிருப் பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரிய வேயில்லையே? இதை எனக்கு புரிய வைக்க வேண்டும். நானும் நீயும் பி.ஏ. 2ஆவது வருஷம் பூகோளம், வான நூல், சைன்ஸ் படித்தவர்கள். ஆதலால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை; சற்று விளங்கச் சொல் பார்ப்போம்.

ராமா: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம் சாஸ்திரங்களில் உள்ள விஷயம், மத தத்துவம்! ஆனால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக் கூடாது. நாஸ்திகர்கள் தான் இப்படிக் கேட்பார்கள் கருப்புச் சட்டைக் காரர் கள்தான் இப்படிக் கேட்பார்கள் இத்தனை ஆயிரம் காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்களே ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா?

இந்து மகாசபையில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? இந்திய கம்யூனிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய் நீ கருப்புச் சட்டைக்காரன் தான் சந்தேகமில்லை.

டேவிஸ்: நீ என்னப்பா இப்படி பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லையே! பூமிக்குப் பிறந்தான் என்கிறாய் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய், எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படி போனான் என்றால் கோபித்துக் கொள்கிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்து கோடிக் கணக்கான மக்கள் கொண் டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதை விட்டு தெரு சுற்றுகிறதுகள்! இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னை கருப்புச் சட்டை என்கிறாய்.

கருப்புச்சட்டை போடாதவனுக்கு புத்தியே இருக்கக் கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி! அதிருக் கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத் திரத்தில் ஒளிந்து கொண்டான்! அப்புறம்?

ராமா: ஒளிந்து கொண்டதும் பூமியில் இருந்தவர்க ளெல்லாம் போய் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

டேவிஸ்: இரு! இரு! பூமியைச் சுருட்டின போது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட் டார்களா? நோட்டீஸ் கொடுத்து விட்டுத் தான் சுருட்டினானோ?

ராமா: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே; ஓடிப் போய் முறையிட்டார்கள் என்றால் எப்படிப் போனார்கள், வெங்காயம் வீசை என்ன விலை, கருவாடும் கத்தரிக்காயும் குழம் புக்கு நல்லாயிருக்குமோ? என்பது போன்ற அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட்கிறாயே?

டேவிஸ்: இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே சரி! சொல்லித் தொலை! முறையிட்டார்கள்! அப்புறம்?

ராமா: முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகா விஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத் தினிடம் வந்தார்.

பார்த்தார் சுற்றி. எடுத்தார் பன்றி அவதாரம், குதித்தார் தண்ணீரில். பாய்ந்தார் நிலத்துக்கு, கண்டார் பூமியை தன் கொம்பில் அதை குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித் தார் பூமிப் பாயை; புரிஞ்சுதா.

டேவிஸ்: புரியாட்டா கோபித்துக் கொள்கிறாய் அதிகப் பிரசங்கி என்கிறாய் சரி புரிந்தது. விரித்தார் பூமியை பிறகு என்ன நடந்தது?

ராமா: பிறகா; பூமியை விரித்தவுடன் அந்த பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்து விட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா, கலந்தார்கள் பிறந்தது பிள்ளை.

டேவிஸ்: சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே.

ராமா: சரி கேள்.

டேவிஸ்: வராகம் என்பது பன்றி அது ஒரு மிருகரூபம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: பூமி கல் மண் உருவம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?

ராமா: பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?

டேவிஸ்: என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாயபுமாதிரி பாத்தியா கொடுக்கிறே! இது பெரிய ஒரு சைன்ஸ்! ஸெக்சுவல் சையன்சு சங்கதி; இதைக் கேட்டால் போக்கிரிதனமான கேள்வி என்கிறாய். சரி. இதைபற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராமா: அந்தப் பிள்ளைதான் நரகாசுரன்.

டேவிஸ்: இந்தப் பெயர் அதற்கு யார்? இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராமா: யாரோ அன்னக்காவடிகள் இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய், எனக்கு அவசரம் நான் போக வேண்டும் என்னைவிடு.

டேவிஸ்: சரி போகலாம் சீக்கிரம் முடி அப்புறம்?

ராமா: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

டேவிஸ்: அடபாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர் களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர் கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராமா: இல்லேப்பா. இந்த நரகா சூரனின் பொல்லாத வேளை, தேவர்கள் கிட்டே இவன் வாலாட்டினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?

டேவிஸ்: அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடி யாகக் கொன்றுவிடுவதா?

ராமர்: அது இவர் இஷ்டம், அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர்கயவர் அவருந்தான் மேவன செய்தொழுக லான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம் அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

டேவிஸ்: சரி கொன்றார் அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராமா: அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது என்பதுதான்.

டேவிஸ்: தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராமா: வானதேவர்கள் வானத்தில் (மேல் உலகத்தில்) இருக்கிறார்கள்; பூ தேவர்கள் இந்தப் பூமியிலே இருக் கிறார்கள்.

டேவிஸ்: இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராமா: அட முட்டாள்! அது கூடவா தெரியாது? அது தான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே? அகராதியைப் பார்.

டேவிஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ராமர்: என்ன வகுப்பா நாங்கள் தான்!

டேவிஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார், அய்யங்கார் தாசனா?

ராமா: நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலி யோர்கள்.

டேவிஸ்: அப்படியெனில் பார்பனர்கள் யாவருமே பூதேவர்கள் என்கிறாய்?

ராமா: ஆமாம்! ஆமாம்! கல்லாட்டமா ஆமாம்!

டேவிஸ்: சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களைப் பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டுமா?

ராமா: இங்கேயா அசுரர், ராட்சதர் இல்லை என்கிறாய்? இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள், சு.ம.-க்கள், திராவிடர் கழகத்தார்கள் என்கிறார்களே அவர்களெல்லாம் வேறு யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படு கிறவர்கள், குறை கூறுபவர்கள்; அவர் களைப் போலவே வாழ வேண்டு மென்பவர்கள் வேத சாஸ்திர புராண இதிகாசங்களை பகுத்தறிவால் ஆராய்ச்சி செய்பவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராட்சதர்கள்! இரக்கமே இல்லாத அரக்கதர்கள்தாம்! தெரிந்ததா? அவர்களுக்கு பயம் உண் டாவதற்காக தேவர்களுக்கு இடையூறு செய் தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற் காகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும். இது தான் இரகசியம், மற்ற மூன்று கதை எப்படி இருந்தால் என்ன?

டேவிஸ்: அப்படியா நீங்கள் நூற் றுக்கு மூன்று பேர்; நீங்கள் அல்லாத வர்கள் நூற்றுக்கு 97 பேர். இப்படி எத்தனை நாளைக்கு மிரட்ட முடியும்?

ராமா: அதைப்பற்றிக் கவலைப்படாதே? காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூற்றேழு பேர் களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டறவும் எதிரிகளை ஒழிக்க பயன்படுத்து வதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்யோகத் துக்கு காத்துக் கிடக்கும் கூட்டம், கோவில் மனுதர்ம ஸ்தாப னத்தில் இருக்கும் கூட்டம், புத்தக நடைக் கூட்டம் பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம் பாதிரிக் கூட்டம், உயர் பதவி வகிக்கும் உத்தி யோகஸ்தர் கூட்டம் தாசிக் கூட்டம், சினிமா கூட்டம், நாடகப் பிழைப்புக் காரக் கூட்டம், அரசியல் பிழைப்புக் காரக்கூட்டம் இப்படியாக இடறி விழுந்தால் அவர்கள்மீது விழும்படி சர்வம் பிராமண அடிமையா என்பது போல இருக்கும்போது நூற்றுக்கு மூன்று, நூற்றுக்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

டேவிஸ்: ஓஹோ! அப்படியா? சரி, சரி. தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்.

ராமா: நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

சித்திரபுத்திரன் என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. ‘விடுதலை’ 28.10.1956)