ஞாயிறு, 19 மார்ச், 2023

நேர்மையின் குறியீடு:பெரியார்

 செல்லரித்துப்போன செல்போன் புளுகுகள்!

நேர்மையின் குறியீடு:பெரியார்

கி.தளபதிராஜ்

காங்கிரசின் கதர் நிதியை களவாடி விட்டாராம் பெரியார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவாள் பாட்டனும் பூட்டனும் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டையை மீண்டும் இப்போது சந்தைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் ஒரு பேர்வழி.

1935 ஆம் ஆண்டு பூனாவிலிருந்து வெளிவந்த ‘மராட்டா’ என்ற பத்திரிகை திலகர் சுயராஜ்ய நிதியை திருடியதாக ஒரு சில காங்கிரஸ்காரர்களின் பட்டியலை வெளி யிட்டு இருந்தது.

ராஜகோபாலாச்சாரியார் அட்வான்ஸ் தொகையாக வாங்கிய 19,000 ரூபாய் ஸ்வாஹா! பிரகாசம் பந்துலுக்கு கொடுக்கப் பட்ட 10,000 கடன் தொகை அபேஷ்! என ஏழு குற்றச்சாட்டுகளை அது அடுக்கியிருந்தது.

பெரும்பாலான குற்றச்சாட்டுகளில்  பார்ப் பனர்களுக்கு தொடர்பு இருந்ததால் அவா ளுக்கு ஆதரவாக வேட்டியை வரிந்து கட்டி பதில் அளிக்க முனைந்தது தினமணி. 

“ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செல விட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்ப கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகிவிட்டதால் மூழ்கிப் போவது ஒன்றுமில்லை” என்று எழுதியது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அநேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜனோ, ‘சுயநலக் கடலில் மூழ்கி மறைந்தது ஒரு கோடி ரூபாய்!’ என்று விளக்கமளித்திருந்தார். அதையும் குடிஅரசு எடுத்து வெளியிட்டது.

‘ஆச்சாரியார் தம்மிடம் கொடுக்கப்பட்டு உள்ள பணத்திற்கு கணக்கு விவரங்களையும், மீதப் பணத்தையும் திரும்ப கொடுத்து விட் டதை ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்‘ இதில் ஊழல் ஒன்றுமில்லை என்பதாக தினமணி எழுதியது.

அப்படி ‘ரிப்போர்ட்’ எதுவும் எழுதப்பட வில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு! ரிப்போர்ட்டுகள் எழுதப்பட்டது உண்மையானால், அந்த ரிப்போர்ட்டுகளை தினமணி பிரசவிக்கட்டும்! என சவால் விட்டது குடிஅரசு.

“முட்டாள்களின் பணத்தை மோசக்காரர் கள், வஞ்சகர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும், அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரியவர்களுக்கும் இடையூறாக இருக்குமா னால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக் காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மை யான ஊழியர்களின் கடமை அல்லவா?” என்றும் குடிஅரசு எழுதியது.

1922, 23, 24, 25ல் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களான டாக்டர் ராஜன் சாஸ்திரி யார், எம்.கே.ஆச்சாரியார், சந்தானம் அய்யங் கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும் தாங்கள் வாங்கிய பணத்திற்கு சரியான கணக்கு கொடுத் தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வரவு வைத்து செலவு எழுதப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த கூட்டத் தில் சேராமல் இன்று எந்த காங்கிரஸ் பார்ப் பனராவது யோக்கியமாய் இருக்கிறார்களா? என்றும் கேட்டது.

மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்க்கடையில் இருந்து பணம் பச்சையாக திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக் கிறது என்பது பொய்யா? என்று குடிஅரசு கேள்வி எழுப்பியது.

குடிஅரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு காங்கிரஸ் பத்திரிகை பெரியார் கதர்நிதியை சரிவர ஒப்படைக்கவில்லை என்றும், ஆதிநாராய ணன் எழுதிய கணக்கு அறிக்கையை பார்த் தால் ஈ.வெ.ரா யோக்கியதை வெளியாகும் என்றும் எழுதியது.

இதைத்தான்  இப்போது இணையதளத்தில் மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு பேர் வழி. கதர்நிதியில் ஊழல் செய்ததால் தான் காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றப் பட்டதாக உளறியிருக்கிறார்.

ஆதிநாராயணன் பெரியார் மீது குற்றம் சுமத்தி அறிக்கை விட்ட பிறகுதான் பெரியார் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசியா கவும், காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், மாகாண கான்ஃபரன்ஸ், ஜில்லா கான்ஃபரன் ஸுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கான்ஃப ரன்ஸுகளுக்கு தலைவராகவும், கதர் போர் டுக்கு 5 வருட தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்பதெல்லாம் இந்த பேர் வழிக்குத் தெரியுமா?

பெரியார்மீது குற்றம் சுமத்திய அந்த ஆதி நாராயணன் யார்?

“ஈரோட்டைப் பொறுத்தவரை கதர் நிதி தொடர்பாக 500 ரூபாய் விஷயமாக  எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரை காரியதரிசியாக இருந்த சந்தானம் அய்யங் காரே பல தடவை நேரில் சந்தித்து பகுதி வசூல் செய்து, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டுவிட்டார்” என்று நடந்த விஷயத்தை உண்மை நிலவரத்தை எடுத்து ரைத்தது. இந்த 500 ரூபாயைத்தான் இணை யக் காணொளியில் ஏழாயிரத்து அய்நூறு என்று இப்போது கயிறு திரித்திருக்கிறார் இந்த ஆசாமி.

வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து பெரியார் கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சத்தியாகிரக பணத்திற்கு அவர் முறையான கணக்கு காட்டவில்லை என்ற இதே புரளியை சில பார்ப்பனர்களின் தூண்டுதலால்  அப்போதும் கிளப்பினர்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு அட்வான் சாக பெறப்பட்ட ஆயிரம் ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாகிரக காரியதரிசியி டம் கொடுத்ததையும், மீதம் 300 ரூபாயில் பாலக்காடு சவுதி ஆசிரமத்திற்கு கதருக்கு பஞ்சு வாங்கி அனுப்பியதையும், அது போக மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோர்ட்டார் சத்தியாகிரகத்திற்கு கொடுக்கப்பட்டதையும் ரசீதுகளோடு, தான் காங்கிரஸ் காரியால யத்திற்கு அனுப்பியதையும், அதை அவர்கள் தவற விட்டு விட்டு மீண்டும் கணக்கு கேட் டதால் தான் மறுபடியும் ஒருமுறை கணக்கு களை ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பியதையும் விளக்கி பொய்யர்களின் வாயை அப்போதே அடைத்தார் பெரியார்.

கதர் நிதி 500அய் இந்த ஆசாமி ஏழா யிரத்து அய்நூறு என்று திரித்ததுபோல் அன்றைக்கிருந்தவர்கள் சத்தியாகிரக அட் வான்ஸ் பணம் ஆயிரத்தை பத்தொன்பதா யிரம் என்று சொன்னார்கள்.    

“தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுவரும் கதர் இயக்கம் ஈ.வெ.ரா வினாலேயே பலம டைந்தது. அவர்தாம் கதரை காங்கிரசோடு பிணைத்தார். காங்கிரஸ் கதர் வஸ்திரால யங்கள் அவரால்தான் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை தனிப்பட்ட வியாபாரிகள் கொள் ளையடித்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார்!” என்று நவசக்தியில் எழுதினார் திரு.வி.க.

பார்ப்பனர்களின் கொள்ளையைத் தட் டிக்கேட்ட பெரியார் மீது ஊழல் குற்றச் சாட்டை ஏவிவிட்டது பார்ப்பனீயம். அவர்க ளது பாச்சா அன்று பலிக்கவில்லை. பெரியார் மீது குற்றச்சாட்டை வைத்த ஆதிநாராயணன் தான் பின்னாளில் அந்தப் பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார்.

அன்றைக்கே செல்லுபடியாகாத அந்த அண்டப் புளுகை மீண்டும் செல்போன்களில் உலவவிட்டு நோட்டம் பார்க்கிறார்கள்.    

பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்த போது எந்தக் கட்சியில் இருந்தார்? வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் அளிக்கப்பட்டதுதான் சேர்மன் பதவி என்றெல்லாம் வாய்க்கு வந்ததை  உளறிக்கொண்டிருக்கிறார்.

நீதிக்கட்சிக்கு போட்டியாக காங்கிரஸில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை மாகாண சங் கத்தின் துணைத்தலைவராக1917ஆம் ஆண் டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார்!

அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதி ராக இராஜகோபாலாச்சாரியாரும்  விஜயராக வாச்சாரியும் சென்னையில் உருவாக்கிய நேஷனல் அசோசியேஷன் அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக இருந்தவர் பெரியார்!

ஈரோடு நகரசபைக்கு தலைவராக மக் களால்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார். பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்தபோது ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தார். பெரியாருக்கு வெள் ளைக்காரர்களால் பதவி வழங்கப்பட்டது என்றால் ராஜாஜிக்கு பதவி யாரால் கிடைத் தது? பெரியார் ஒருபோதும் பதவியை நாடி சென்றவரில்லை. தன்னைத் தேடிவந்த பதவி களை எல்லாம் துச்சமாக நினைத்தவர் பெரியார்.

“ஒத்துழையாமை சட்டவிரோதமானது. அதை அடியோடு ஒழித்துவிட வேண்டும்!” என்று வெள்ளைக்காரனுக்கு யோசனை சொன்ன சீனிவாச அய்யங்கார் போன்ற கங்காணி பரம்பரையில் பிறந்தவரல்ல எம் பெரியார். 

ஒத்துழையாமை இயக்கத்தில் பணிபுரிய வேண்டி ஈரோடு சேர்மன் பதவியிலிருந்து பெரியார் விலகிய போது ‘ராவ்பகதூர் பட்டம்‘ சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் சேர்மன் பதவியை விட்டு விலகவேண்டாம் எனவும் ராஜாஜி கேட்டுக்கொண்டும் அதற்கு இணங் காமல் பதவியை விட்டு விலகியவர் பெரியார். 

கொண்ட கொள்கையில் நேர்மையாக பணியாற்றியவர். கள்ளுக்கடை மறியலின் போது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர். 

சீனிவாச அய்யங்காரைப் போல காங்கிரஸில் இருந்துகொண்டே கோர்ட்டை புறக்கணிக்காமல் வழக்காடி பணம் சேகரித்த வரில்லை.

தன் குடும்பத்திற்கு வரவேண்டிய 50,000 ரூபாய் சொந்த பணத்தை இழந்தவர். இருபத் தெட்டாயிரம் ரூபாய்க்கு இருந்த ஒரு அட மான பத்திரத்தை ஒத்துழையாமை காரண மாய் கோர்ட்டுக்கு போய் வசூலிக்க பெரியார் விரும்பவில்லை. காங்கிரசுக்கு தலைவராய் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் இதைக் கேள்விப்பட்டு, “இந்த பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உங்களுக்கு இஷ்டம் இல்லையானால் நீங்கள் அதை எனக்கு மேடோவர் செய்து கொடுத்து விடுங்கள். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தை அடைய உங்களுக்கு இஷ்டம் இல்லை யானால் வசூல் செய்ததும் அதை திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடலாம்.” என்று பெரியாரிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார்.  

“நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான் இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல! கொள்கையே பெரிது! பணம் பெரிதல்ல!” என்று விஜயராகவாச்சாரியிடம் மறுத்தவர் பெரியார்!

பெரியாருக்கு முதலமைச்சர் பதவி கூட ஒரு கட்டத்தில் தேடி வந்தது. அனைத்தையும் ஒதுக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். தன் சொத்துகள் முழுமையும் இந்த இயக்கத்திற்கு பயன்படவேண்டி அதற்கான ஏற்பாட்டை செய்தவர் பெரியார். 

பார்ப்பனர்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை  மீண்டும் சந்தையில் உருட்ட இப்பேர்வழிகள் பெற்ற  கூலி நிர்ணயம்தான் என்னவோ? பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்க இந்த கேடுகெட்ட பிழைப்பு ஏனோ?

நாகாக்க வேண்டும்!

காமராசர் பற்றி தந்தை பெரியார்!

 

எங்களது சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான் ‘தாழ்ந்த ஜாதி என்று பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் வந்த காமராசர் இந்த நாட்டின் முதலமைச்சராகவும், இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் வர முடிந்தது.

(‘விடுதலை’ 15.1.1965 உடுமலை உரை)

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.

மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)

திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்க ளுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்தியோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி, ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள், அவரை எப்படியாவது ஒழித்துக் கூட்டத் திட்ட மிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு. காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வரமுடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத் திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகு மென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டு மானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.

(2.10.1956 அயன்புரத்தில் திரு.வி.க. நினைவு நாள்-_ தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 9.10.1956)

ஆச்சாரியாரின் இனநலன் புத்தி 

நமக்கும் வரவேண்டும்

ஆச்சாரியார் செய்தது என்ன? முதலில் காங்கிரஸ்தான் உயிர் மூச்சு என்று கூறினார். அதற்காக சேர்மன் பதவி, வக்கீல் வேலை இவைகளையெல்லாம் விட்டுவிட்டு காங் கிரசிற்குள் வந்தார். உழைத்தார். இதெல் லாம் எதற்காக? காங்கிரஸ் அவர்களுடைய இனத்திற்காக இருந்தது. பார்ப்பனர்கள் (அதாவது தன் இனம்) வாழ வேண்டுமானால் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டு உயிர் வாழ வேண்டும் என்று கருதி காங்கிரஸைக் காப்பாற்றப் பாடுபட்டார்.

அன்று அப்படிக் கூறிய ஆச்சாரியார் இன்று காங்கிரசை ஒழித்தே ஆக வேண் டும், அது தன்னால்தான் முடியும் என்று கூறிப் புதிய கட்சி துவக்கினார் என்றால் அது அவருக்கு புத்திக் கோளாறு ஏற் பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. அதாவது காங்கிரஸ் இன்று பார்ப்பனர் களுடைய நலத்திற்காக இல்லை. அது தமிழர்களுடைய நலன் கருதும் கட்சியாக ஆகிவிட்டது. இனி அதனால் தன் இனத் திற்கு நன்மையில்லை என்ற நிலை ஏற் பட்டுவிட்டது என்று கருதித்தான் ஆச்சாரி யார் தன் இனத்திற்கு உதவாமல் ஆபத்தைத் தரும் காங்கிரசை ஒழிக்க, நம் இனத் துரோகிகளை கூட்டுச் சேர்க்க வலை போட்டுப் பண பேரம் பேசுகிறார். அந்த இன நலன் புத்தி நமக்கு வரவேண்டும். காமராசர் ஒழிந்தால் அந்த இடத்திற்குப் பார்ப்பான்தான் வருவான். காமராசர் ஒழியாது காப்பாற்றுவது மட்டும் அல்ல; காங்கிரசும் ஒழியாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி காமராசர் ஒழிந்து பார்ப்பான் வந்தால் காங்கிரஸ் ஒழிக என்று கூறணும்; அப்போதுதான் நம் கைக்கு காங்கிரஸ் வரும்.

இன்று காமராசரது நேர்மையான ஆட்சியே!

தமிழன் படிக்க வசதியும் வாய்ப்பும் வேண்டும். தமிழனுக்கு உத்தியோகம் வேண்டும் என்று கூறி ஜஸ்டீஸ் கட்சி பாடுபட்டது. இந்தக் கொள்கைக்காக நானும் 35 ஆண்டுகளாய்ப் பாடுபட்டு வந்தேன். இன்று காமராசர் ஆட்சியில் இந்த நன்மைகள் ஏராளமாய்க் கிடைக்கிறது. அன்று ஜஸ்டீஸ் கட்சி மந்திரி சபை ஒழுக்கம் நாணயத்துடன் இருந்தது. இன்றும் காம ராசர் மந்திரிசபையில் ஏதாவது கோளாறு, தகராறு என்றோ ஒழுக்கம் நாணயம் குறைவு என்றோ யாராவது கூற முடியுமா? அவ்வளவு நல்ல நிருவாகத்துடன் பாடு படும் மாநிலம் இந்தியாவிலேயே சென்னை ராஜ்யம் ஒன்றுதான். எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும்.

சுயமரியாதையை- ஜஸ்டீஸ் கொள்கையைக் காப்பாற்றுகிறோம்

தோழர்களே! நண்பர் ஆச்சாரியார் கூறுகிறார் - இன்று நடப்பது காந்தி காங் கிரஸ் அல்ல;தமிழன் சுயமரியாதை காங் கிரஸ் தான் நடக்கிறது என்று. காமராசரைக் காப்பாற்றுவது சுயமரியாதைக் கொள்கை யைக் காப்பதாகும். தமிழர்கள் நன்மையை, ஜஸ்டீஸ் கட்சியைக் காப்பாற்றுவது போன் றதாகும். இந்த எண்ணம் நம் ஒவ்வொரு வருக்கும் ஏற்பட வேண்டும். நமக்குள்ள சூத்திரத் தன்மையை ஒழிக்கப் பாடுபடுவது நாங்கள்தான். வேறு யாரும் இல்லை.

(20.6.1961 அரகண்டநல்லூரில் தந்தை பெரியார் உரை (‘விடுதலை’ 5.7.1961)

பார்ப்பான் கையில் மண் வெட்டி!

பாப்பாத்தி கையில்’ களைக் கொத்தி!

இன்றைய ஆட்சியானது ஏதோ தமி ழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக இருப்பதனால் நாங்கள் காங்கிரஸ்காரன் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வலியச்சென்று ஆதரிக்கின்றோம். பெரும் பான்மையான காங்கிரஸ்காரர்களுக்கு எங்களைப் பிடிக்காது. எங்கள் நிகழ்ச்சி களில் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றே முடிவு பண்ணிக் கொண்டு உள்ளார்கள். எங்கள் பத்திரிகை அரசாங்க சம்பந்தமான வாசகசாலைக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டது.

நன்றியோ பிரதிபலனோ இல்லா உழைப்பு!

காங்கிரஸ்காரர்கள் நன்றி செலுத்து வார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் ஆதரிக்க முற்படவில்லை. சமுதாயத்தில் இன்றைய ஆட்சியின் காரணமாக ஏற்பட்டு உள்ள நன்மையினை உத்தேசித்தே ஆதரிக்கிறோம்.

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குக் காமராஜரையே பதவியில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பனர் கைக்கு மண் வெட்டியும் பாப்பாத்தி கைக்குக் களைக் கொத்தும் வந்துவிடும். இது உறுதியாகும்.

இதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகின்றார்கள். மற்றவர்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் காமராசர் ஆட்சியினை ஒழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். காமராசர் ஒழிந்தால் பழையபடியும் வீதிக்கு ஒதுக்குப் புறத்தில் அனுப்பிவிடுவார்கள். தோழர் களே, நாங்கள் தோன்றுகின்ற வரையிலும் ஜாதியினை ஒழிக்க எவனும் தோன்ற வில்லை.

புத்தருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புப்பற்றிப் பேசவும் அதற்காகப் பாடுபடவும் நாங்கள் தான் உள்ளோம்.

(25.4.1963) கொறுக்கையில் உரை)

காங்கிரஸ் 1885-இல் தோன்றி 1964 வரை 78 வருஷம் ஆகிறது. இதற்கிடையில் 68 மகாசபைக்  கூட்டம் நடந்திருக்கிறது. இதில் நம்முடையவர்கள் மாமிசப் பிண்டங்களா கவே இருந்தனரே தவிர, மனிதத் தன்மை யோடு ஒருவரும் இல்லை. இன்றுதான் ஊசியில் ஒட்டகம் நுழைந்ததுபோல ஒரு தமிழர் நுழைந்திருக்கிறார். பத்திரிகைக் காரன் எல்லாம் மூன்று தமிழன் என்று சொல்லுவான். அது சுத்தப் பொய். 1920 இல் விஜயராகவ ஆச்சாரி என்ற பார்ப்பானும் 1927 இல் சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப் பானும்தான் தலைவர்களாக இருந்தார்கள். இப்பொழுதுதான் தமிழன் ஒருவர் வந் திருக்கிறார். அவரை இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டுகிற மாதிரியான ஒரு மரியாதை வந்திருக்கிறது. அதுவும் நேரு வுக்கு அடுத்தபடியாக காமராசர் இருக் கிறார். இவருடைய முயற்சியால் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘சோஷ் யலிச பாலிசி” என்று சொன்னார்கள்.

இப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் ‘சோஷ்யலிச கொள்கை’ என்று சொல்லி விட்டார்கள். இதைச் செயலில் கொண்டு வந்துவிட்டால் பார்ப்பான் தொலைந்தான். நம் மக்கள் வாழ்வு நாளுக்கு நாள் முன் னேறும். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்யவேண்டும்.

(10.1.1964 ஈரோட்டு உரை, ‘விடுதலை’ 17.1.1964)

டாக்டர் நாயர் - தியாகராயர் - நான் / ஆரியர்கள் அயோக்கியத்தனம்

 

டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளை ஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலு வலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இர யிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக் கின்றன?’ என்று கேட்கவும் தனக்குக் காவ லாக ஓர் இரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்த தாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் - பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம் பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத் தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்த வன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரிய தரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற் றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங் களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர் களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடி மைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர் களா’க்கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டு விட்டு வேறு விபீஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங் கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடு களில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பிய தற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தி யோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம் பித்த பிறகுதான் - வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான்- காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய,  அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.

(திருச்சியில், 3.12.1950இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

 ‘விடுதலை’ 14.12.1950)

ஆரியர்கள் அயோக்கியத்தனம்

ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நம் நாட்டில் பிழைக்கவந்த -  குடியேறிய ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதையும் நம்மை மனிதத் தன்மை யோடு வாழவிடாமல் செய்து, அவ்வளவு கொடுமையும், அட்டூழியமும் செய்திருக் கிறார்கள் என்பதையும் உணரவேண்டு மானால் அவர்களால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

வேதத்திலும் சாஸ்திர உபநிஷதங்களி லும் ஏராளமான அயோக்கியத்தனங்களும், கொலைபாதகங்களும் இருந்தாலும் அவைகளைச் சரியானபடி ஆதாரத்தோடு வெளிப்படுத்துவது என்பது என் போன்ற வர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்றாலும், புராண இதிகாசங்கள் என்பவைகளைக் கொண்டு தக்க ஆதா ரங்களோடு வெளிப்படுத்துவது எளிதான காரியமேயாகும்.

புராணம் என்றால் பழைய கதை என்பது அகராதியில் பொருள். என்றாலும் புராணங்கள் என்றால் பழைய கதை என்று திரு.முன்ஷியே பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார்.

சாதாரணமாக ‘புராண’ என்கின்ற சொல்லுக்கே பழையது என்பது பொருள். இந்தியில் ஆனாலும், உருதுவில் ஆனாலும், நவா என்றால் புதியது; புராணம் என்றால் பழையது. இது சாதாரணச் சொல்! ஆகவே, அப்படிப்பட்ட பழங்கதை என் னும் பேரால் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் கருத் துகள் சிலவற்றை, எடுத்துச் சொல்லுவோம். அதில் இருந்து ஆரியர்களின் மத ஆதா ரங்களின் அக்கிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணத்தில் ஓர் இடத்தில் அதாவது ஓர் அத்தியாயத்தில் காணப்படு வதாவது:

தேவர்கள் எல்லாம் விஷ்ணுவிடம் சென்று, “மகாவிஷ்ணுவே! பூலோகத்தில் அசுரர்கள், ராட்சதர்கள் எல்லோரும் ஜப, தபங்கள், தானதர்மங்கள் செய்து ஒழுக்கத் தோடு நடந்து வருகின்றார்கள். இதனால்  தேவர்களாகிய - பிராமணர்களாகிய எங் களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடு கிறது. எங்களை மக்கள் மதிப்பதில்லை. தேவர்கள், பிராமணர்கள் என்பதற்காகவே நாங்கள் அடைந்துவந்த பெருமைகளையும் உரிமைகளையும் அடைய முடிவதில்லை. அவற்றில் அவர்களும் உரிமையும் பங்கும் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்குக் குறைந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் எங்கள் பெருமையை இழக்கவேண்டி இருக்கின்றது. ஆதலால் எங்களைக் காப் பாற்றி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு விஷ்ணு பகவான் சொல்லு கிறார்: ‘நான் என் உடலில் இருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்குகின்றேன்; அவன் மக்களிடம் சென்று “தான தர்ம, ஜபதபம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் ஒழுங்காக அறிவின்படி நடந்தால் போதும்’’ என்று சொல்லிவிடுவான். அப் பொழுது நான் அவர்களை “நீங்கள் எல் லோரும் வேத சாஸ்திரப்படி நடவாமல் அறிவின்படி நடந்தவர்கள், விஞ்ஞானத்தை பிரதானமாய்க் கொண்டவர் கள். ஆதலால் நரகத்தில் இருக்கத் தகுந்த வர்கள்’’ என்று சொல்லி நரகத்தில் போட்டு அழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டார்.

அதன்மீது அந்த மாயாமோகன் மக்க ளுக்குப் பகுத்தறிவைப் போதித்து, எல்லோ ரையும் வேத மார்க்கத்தைவிட்டு பகுத்தறி வுப்படியே நடந்து, எல்லா மக்களும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அதன் பயனாய் உலக போக போக்கியங்கள் யாவும் ஆரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமே கிடைத்து அவர்கள் சுகவாசியாக வாழ்ந்தார்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பு: அந்த மாயாமோகன் போதித்த கொள்கைகள் புத்தியைப் பொறுத்த கொள்கை. ஆனதனால் அந்த மாயா மோகனுக்குப் புத்தன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் அதிலே இருக்கின்றது. இது விஷ்ணு புராணத்தில் உள்ளபடி தொகுக்கப்பட்டது.

- தந்தை பெரியார்

ஞாயிறு, 5 மார்ச், 2023

நான் விரும்பும் தன்மை - தந்தை பெரியார்

 

நம் கழகமும் நமது முயற்சியும் பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி இருக்கிறது? மிகமிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமை யானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிகமிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது, நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும் படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக் கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால், நாம் மாத்திரம் காட்டு மிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படி இருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணர வேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-க்கு 10-பேருக்குக்கூடக் கல்வி இல்லை. நாம் 100-க்கு 

90-பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம். காரணம் என்ன? 

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும், கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்படவேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்த விதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித் தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. 

நம்வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக் கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வதுதான் நம்மை தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டது. நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடான வையாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம், நம்மை என்றைக்குமே முன்னேற்றாத தாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடைஜாதியாக இருக்கிறோம். நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவைகளாக, நம்மைச் சுரண்டுபவைகளாக, நம்மை மடையர்களாக ஆகும் படியாக ஆக்கிவருகிறது. நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன. ஆகையால் நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களை அடையவேண்டும். 

கடவுள் தன்மையிலுள்ள கேடு

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்னவென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்காக வீடு வாசல், (கோவில்) பெண்டுபிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேற்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள்  நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக்கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றத் தனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத் துக்கள்? அவைகளுக்கு எவ்வளவு பூசை, உற்சவ போகபோக்கியங்கள்? இவைகள் யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால் அவைகள் மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும் நட்டமும் அடைகின்றவர்கள் யார்? நீங்கள் உண்மையாய்க் கருதிப்பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக் காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்து வரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா? நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈனஜாதி, இழி ஜாதி, நாலாம் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடைஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளைக் கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித் தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாமும், நம் கடவுள், மதம் முதலியனவும் 

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப் பட்டதற்குக் காரணம் இந்தக்கடவுள்கள்தான் என் பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆன தற்குக் காரணம் இந்த கடவுள்களுக்குக் கட்டடம், சொத்து, போகபோக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா? இல்லையா? அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்துமதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானை, பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா? இல்லையா?

அதுபோலவேதான், நம் தர்மங்கள் என்று சொல் லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா? ஆகவே, நமது இழிவுக்கும், ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவைகள் அல்லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல் வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாக வேண்டும். 

நமக்கு வேண்டிய கடவுளும், மதமும்

நமது கடவுள்கள் காட்டுமிராண்டி காலத்தில் கற்பிக்கப்பட்டவைகள், அல்லது கண்டு பிடிக்கப் பட்டவைகள், அல்லது நமக்குத் தெரியவந்தவைகள். நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்ட தாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவைகளாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கைகூட மாறி விட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறி விட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டது. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000, 5000ஆம் ஆண்டு களுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே, இன்றைக்கு ஏற்றபடியாக இவைகள் மாற்றப்பட்டாக வேண்டும்.

இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க் கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட  அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத் தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? 

நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித் தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின் மீது கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், இன்று அப்படிப்பட்ட காலத்தில் அப் படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக் கப்பட்டவைகளாகும், காட்டிக் கொடுக்கப் பட்டவைகளாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத் தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய் வப்பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்கிறதான அந்த மகான்களே இன்று இருப்பார் களேயானால், உடனே மாற்றிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வரவெட்கப் படுவார்கள். 

இவை சரிதானா? 

உதாரணமாக, இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு, ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள், மாடு, பருந்து முதலிய வாகனங்கள். பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள். மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி; இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பை சுரண் டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர் களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும். 

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருமாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனுநீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் விதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அக்காலத்திய கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

காலம் கருதிக் காரியம் கொள்ளுமின்! 

பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெக்ட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா? கட்டை வண்டிப் பிரயாணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிரயாணத்தை நீங்கள் விரும்பவில்லையா? ஆகையால் ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளுங்கள். காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

குடிஅரசு - கட்டுரை - 15.01.1949 


செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

வைதிகர்களின் முட்டுக்கட்டை

 

தந்தை பெரியார்

உலகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக் கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சியினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணா சிரமத் தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவு குண்டுகளால் அடியோடு பெயர்த்தெறியப் படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதிகப்  பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளை யும், பழைய பஞ்சாங்க கட்டுகளையும், சாஸ்திரக் குப்பை களையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதிகப் பிடுங்கல்களின் போக்கையும், மனப்பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20 - 06 - 1932ல் தஞ்சை ஜில்லா திருவிடை மருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டி ருக்கும் தீர்மானங்களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதிக மக்களின் போக்கையும் கவனிப் போம்.

பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளை யெல்லாம் கண்டித்தும், பெண்கள் மகாநாடுகளெல்லாம் மேல்நாட்டு கல்விகற்ற பெண்களால் கூட்டப்படுகின்ற தென்றும்  அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமுக பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களுடைய அபிப்பிராயங்கள் இந்திய பெண்களின் அபிப்பிராயம் அல்லவென்றும், ஜன சமுகத்திற்கும் அரசாங் கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதிகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந் திரமும், சொத்துரிமையும் கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்தபின் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ளும் உரிமையும் விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனுடைய கொடுமையையோ நடத்தையையோ சகிக்கமுடியாதபோது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்திரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைகளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண் டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல பெண்களை மணம் செய்வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள் தங்கள் இயற்கை உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத்தனமாக அந்நிய புருஷருடன் இன்பம் அனுபவித்து கர்ப்பமாகி குழந்தை பிறந்த பின் அதை கழுத்தை முறித்து கள்ளிக் காட்டிலோ, சாக்கடையிலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரிமையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாப கரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ் செய்யும் காரியந்தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? மதம், பழக்கவழக்கம் என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக்கும் அறிவிலிகளால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிறதென்பதைப் பகுத்தறி வாளர் மறுக்க முடி யுமா? இவற்றையுணராத வைதிகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங் களும் போய்விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்துகிறார்கள்?

அடுத்தப்படியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானத்தில் குருவாயூர் முதலிய இடங்களில் நடைபெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் சனாதன தர்மமும் இந்துமத சம்பிரதாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமுகத்தில் கலகமும் வேற்றுமைகளும் உண்டாகுமென்றும் ஆகை யால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதெனவும் எச்சரிக்கை செய்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள் இதைக் கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள் தனத்தை போக்க பாடுபடவேண்டிய கஷ்டத்தையும் ஆலோசித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிர வேசத்திற்காகப் பாடுபடுவதைவிட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக்கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காக செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன்தரக் கூடிய தென்பதே நமது அபிப்பிராயமாகும். ஜனங்கள் கோயில் களுக்குப் போவதையும் அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப்பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில்களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத் திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் கோயில்களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங்களுக் குக் கேடும், சோம்பேறி வைதிகர்களுக்கும், பார்ப்பனர் களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும் ஆகையால் கோயில்களை ஒழிப்பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்களாகட்டும்; மற்ற எந்த பொது ஸ்தலங்களாகட்டும்; அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனத்துடன் ஆதரிக்கின்றோம் பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற்றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக்கின்றோம்.

அடுத்தப்படியாக, 'மத உரிமை' பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்த கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும் மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும் சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதிகர் களின் மனப்போக்கின்படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங்களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங் கத்தின் முக்கிய கடமை யாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம் இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அந்நிய மதத்தினரையெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒரு மத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவியையும் கஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களை பொட்டுக்கட்டி விட்டு விபசாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும் நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டி ருக்கும் சோம்பேறிகள் ஆதிக்கம் செலுத்தும் மதவுரிமைக்கு, அக்கிரமத்திற்கு அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? ஆகையால் தேசம் நன்மையடைய வேண்டுமானால், மதவுரிமை, ஜாதிஉரிமை, பழக்க வழக்கம் என்பவற்றையெல் லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவ தாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ்காரர்கள் கேட் கின்றபடியும், மதபாதுகாப்புள்ள சீர்திருத்தம் எதுவந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும் படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமுக சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் அய்யமில்லை. ஆதலால், வைதிகர்கள் வேண்டும் மதப் பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

அடுத்தப்படியாக சாரதா சட்டத்தைக் கண்டித்தும், இச்சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங் களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோதமென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய் யவோ, ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித் திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத்திலேயே சாரதா சட்டத்தை இந்து சமுகத்திலுள்ள பலரும், பல ஸ்தாப னங்களும் ஆதரிப்பதாக குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதிகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச் சட்டம் உண்மையிலேயே ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதென்பதை அறிந்துதானே பலரும் ஆதரிக்கின் றார்கள், அப்படி இருக்க ஏன் இவ்வைதிகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? மதம் என்ற குருட்டுத்தனம் தானே இவர்களுடைய அறிவை நன்மைதீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர் களுடையத்தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.

கடைசியாக மற்றொருத் தீர்மானம் நிறைவேற்றி இருக் கின்றார்கள். அதாவது வேதம் ஆகமம் முதலிய வைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர் கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதிகக் காரியங் களுக்கு அழிவுவராமல் காப்பாற்றுவதற்கும் வருணாசிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும் இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும் மாணாக்கர்களிடம் வைதிக ஒழுக்கங்கள் உண்டாவதற்காக சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் தர்ம ஊழியர் சங்கம் என்னும் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமுகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுக்களையும், அர்ச்சகர்களின் அயோக்கியத்தனங் களையும், வருணாசிரம தர்ம அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில் நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். உண்மையில் இவர்களுக்குத் தேசத்தின் மீது கவனமோ, ஏழைகளின்மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப்போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டி பிற்போக்கானத் தீர்மானங்களைச் செய்வார்களா? என்றுதான் கேட்கிறோம்.

பணபலமும், பத்திரிகை பலமும், செல்வாக்குப் பலமும் படைத்த வைதிகப் பார்ப்பனர்கள் இப்போழுது தீர்மானிக் கிறபடி, பலதுறைகளிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும் பார்ப்பனர்களை இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும் கூடும்.

ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்நிலையில் பார்ப்பனர்களின் வைதிகப் பிரசாரம் ஒரே முறையில் செய்யப்படும் சுயமரி யாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம். ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடுதலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றி கொண்டிருக்க நினைப்பதும் அதற்காக மகாநாடு கூட்டுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத்தகைய அழுக்குமூட்டை வைதிகர்களைக் கண்டித்ததைத் தேசியப் புலிகள் நம்மைத் 'தேசியத்துரோகிகள்' என்றும் 'சுயராஜ்ய விரோதிகள்' என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தன மல்லவா? இனியேனும் யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர்களென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு கிறோம்.

- 'குடிஅரசு' - துணைத்தலையங்கம் - 26. 06. 1932

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

மக்களால் சேரும் பணத்தைப் பின் மக்களுக்காகச் செலவிடப் படவேண்டிய நேரத்தில், மக்கள் ஆட்சி அதில் தலையிடுவதா அக்கிரமக்குறுக்கீடு?

வியாழன், 16 பிப்ரவரி, 2023

கடவுள் - மத குழப்பம் - தந்தை பெரியார்