ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!

 

பெரியார் பேசுகிறார் : தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!

மே 1-15,2022

தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்ட-வேயாகும்.
இதைத் தவிர, எங்களுக்குப் பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்து விட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசியலிஸ்ட், தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடிதடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றைய தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக் கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டு வருவதன் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலைத் திட்டங்-களுமாகும்.

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? _ சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடிய-வில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும்? அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி, -பட்டம், ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?
சமுதாயம் வேறு; அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால், நமது மதமிருக்கிறதே, அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே, நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்கு வதில் தீவிரப் பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்விதத் தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்ட்களும், சோஷியலிஸ்ட்களும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக் கொள்கைக் கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்ட்களும், சோசியலிஸ்ட்களும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
(22.5.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய பேருரையிலிருந்து…)

சனி, 15 ஏப்ரல், 2023

இந்தி ஏன் வேண்டாம்? ஆங்கிலம் ஏன் வேண்டும்?

 

 

ஏப்ரல் 16-31,2022

தந்தை பெரியார்

மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்-பட்டு, மாகாண சுயாட்சி முறையும் ஏற்படுவது நிச்சயமாயிருக்கும்போது, இந்தியாவுக்குப் பொதுமொழி ஒன்று அவசியந்தான் என்பதே விவாதத்திற்குரிய விஷயம். தென்னிந்தியாவுக்கு வியாபாரத்திற்கும், வேறு வேலைகளுக்கும் வருகின்ற வடநாட்டார் எவ்வாறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களோ அதேபோல், வட நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய திராவிடர்களும், அங்கே வேலைக்குச் செல்லவேண்டியவர்களும் இந்தியைக் கற்றுக்கொண்டாலே போதும். இதைத் தவிர, உலகமொழியாகிய ஆங்கிலத்தை அறவே ஒழிப்பதென்பது முடியவே முடியாது. அப்படி ஒழித்தால், நாம் உலகிலேயே மிகப் பிற்போக்கான மனித சமுதாயமாகி விடுவோம் என்பது முக்காலும் உறுதி.

ஏனெனில், உலகில் சுமார் 26 கோடி மக்கள், அதாவது உலக மக்களில் எட்டில் ஒரு பங்குப்பேர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்; உலகிலுள்ள பத்திரிகை-களில் சரிபாதிக்கு மேற்பட்டவை ஆங்கிலத்தில் வெளிவருகின்றன; உலகிலுள்ள ரேடியோ நிலையங்களில் 5இல் 3 பங்குக்குமேல் ஆங்கிலத்தில் செய்திகள் ஒலிபரப்பப்-படுகின்றன. இதைத்தவிர, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பல இலட்சக்கணக்கான மக்கள் அறிவு, ஆராய்ச்சி, இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் விரைவில் முன்னேறுவதற்காக ஆங்கிலத்தைப் பயின்று வருகின்றனர்.

எனவே, ஆங்கிலத்தை அறவே புறக்கணிக்க முடியாதென்பது நிச்சயம். உலக மொழியாகிய ஆங்கிலத்துடன் இந்தியப் பொதுமொழி என்று கூறப்படும் இந்தியையும் கற்றுக்கொண்டு, அவர்கள் தாய்மொழியையும் கற்கவேண்டு-மென்றால், மொழிகளைத் தவிர்த்த, இதர கலை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது முடியக்கூடிய காரியமா? யோசித்துப் பாருங்கள்

– தந்தை பெரியார், விடுதலை, 20.9.1946

«««

இந்தியாவுக்கு பொது மொழி ஆங்கிலம்!

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டு-மானாலும், அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து, அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டு-மேயல்லாமல், வேறு மொழியைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்.

ஆங்கிலம் உலக மொழி; உலக வர்த்தக விஞ்ஞான மொழி; இந்திய அரசாங்க மொழி; அதுமாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும், பார்ப்பனியமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வாசகமாகப் பெற்ற மொழியாகும்.

– தந்தை பெரியார், குடிஅரசு, 20.1.1929

«««

ஆரிய கலாச்சாரத்தைப்

புகுத்தவே சமஸ்கிருதம்!

சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமைகொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை _- அத் தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் – ஈனப்பிறவி ஆக்கினர். அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சட்டம் செய்துகொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி அதன்மூலம் ஆரியர் கருத்துகளைப் புகுத்தி – அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்-கிறார்கள். ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துகளை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்-திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறிவந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில் கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக்-கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரி-களில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காகப் போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துகள்தாம் வளர்ச்சியடையுமேயொழிய, ஆபாச அறிவுதான் வளர்ச்சியடையுமேயொழிய. பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப் படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய் விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில்.  உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துகளை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு) – ‘விடுதலை’, 16.1.1950

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

சபாஷ் அம்பேத்கர்!

 

பெரியார் பேசுகிறார் : சபாஷ் அம்பேத்கர்!

ஏப்ரல் 1-15,2022

 தந்தை பெரியார்

தோழர் டாக்டர் அம்பேத்கர் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,

“மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்-பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான். நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்பந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக்-கொள்வது கூடாது. அதனால் தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்குத் துணிவு இருக்காது. “எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்-பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் போதே நான் தீண்டப்-படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல. ஆனால், இறக்கும் போது நான் தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஓர் இந்துவாய் இறக்கப் போவதில்லை’’ என்று பேசி இருக்கிறார்.

இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடியுள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

அதாவது, “ஆதி இந்துக்கள் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்” என்பதாகும்.

இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், “வருணாசிரமமும், கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்” என்றும், “இந்து மதமே நானாய் இருக்கிறேன்’’ என்றும் சொல்லும் காந்தியாரும்,

மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழைய கலைகளையும் பழைய பழக்க வழக்கம், தொழில்முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும், இந்துக்களுக்கும் வருணாசிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் சமதர்ம காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசியிருக்கும் பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல. அல்லது அவர்களே முதன் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.

ஏனெனில், இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டு விட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்கநாதம் செய்து வருகிறது.

சென்ற ஜன கணிதத்தில் அநேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தீண்டப்-படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவரல்ல என்று சொல்லப்-படுபவரானாலும், தான் சாகும் போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.

அதுமாத்திரமல்லாமல் “இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச் செய்து இருக்கிறார். இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் மனு நூலையும், இராமாயணத் தையும் சுட்டெரிக்க வேண்டும்” என்று, 1922இல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.

அந்தப்படியே பல சுயமரியாதை மகாநாட்டில் இராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டும் இருக்கின்றன. மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத்தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும், பல தீர்மானங்கள் இந்த 6,7 வருஷகாலமாகவே 10000க்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.

கடைசியாக 1933இல் கூட்டப்பட்ட எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும், பெரிய செல்வவானும், சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர்சி. கிருஷ்ணன், பி.ஏ., பி.எல்., அவர்களது தலைமையில், “ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்றும் யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆகவே, பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும் தலைவர் அம்பேத்கர் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல.

இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசாரும் வருணாசிரமிகளும், பார்ப்பனர் களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படிக் கருதினார்களோ அப்படியேதான் இதையும் கருதுவார்கள். இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும், ஜாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.

கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் தெய்வத்தன்மையில் இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றது. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன. ராம் மோகன் ராய், மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.

இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்-படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மேற்கண்ட பெரியார்களுக்கு, சிஷ்யர்களாக 100 பேர்களோ, பதினாயிரம் பேர்களோ, ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.

அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லட்சம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றபடி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழைய நிலைமையேதான் சட்டதிட்டங்கள் மூலம், வருணாசிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆகவே, இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல் கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது, இவர்களைப் பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும், தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக் கூடும்.

எனவே, தோழர் அம்பேத்கர் அவர்களின் கர்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவு-தான் வெறுக்கப்பட்ட போதிலும், அவர் எவ்வளவுதான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திர-மல்லாமல் இந்தியாவிலுள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாசாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவியாகப் போகிறது.

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 20.10.1935

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

 

சிந்தனை : ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

ஏப்ரல் 1-15,2022

மதத்திற்கு எதிராகக் கருத்து சொன்ன பகத்சிங், தீண்டாமை மற்றும் ஜாதிக்  கொடுமைகளுக்கு  எதிராகவும்,  தெளிவான திட்டவட்டமான கருத்துகளைச் சொன்னார். 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கீர்த்தி இதழில் ஒரு கட்டுரையில் இவற்றை நுட்பமாகச் சொல்லி உள்ளார்.

1917-ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் சமத்துவம் வந்துவிட்டது. பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்கப் புரட்சியின் மூலம் அங்கும் சமத்துவம் என்று அறிவிக்கப்-பட்டுவிட்டது. ஆனால் நாமோ, காலமெல்லாம் ஆத்மா, பரமாத்மா ஆராய்ச்சியில் மூழ்கி, தீண்டத்தகாதார் பூணூல் போடலாமா? படிக்கலாமா? என்பன போன்ற அற்பமான விவாதங்களை இன்னும் நடத்திக் கொண்டிருக்-கிறோம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மைச் சமமாக நடத்தவில்லை என்று நாம் குற்றம் சாட்டு-கிறோம். ஆனால், நாம் நம் மக்களைச் சமமாக நடத்துகின்றோமா?

மக்கள் மதம் மாறும்போது ஆத்திரப்-படுகிறார்கள். அவர்களை நீங்கள் விலங்குகளை விடக் கேவலமாக நடத்தினால், அவர்கள் எங்கு மனிதர்களாக மதிக்கப்படுகிறார்களோ அந்த மதத்திற்குப் போகத்தானே செய்வார்கள்?

நாம் ஒரு நாயைக் கட்டியணைக்கலாம். அது எவ்விதத் தடையுமின்றி நம் சமையலறை வரையில் வரலாம். ஆனால், ஒரு மனிதன் நம்மைத் தொட்டு விட்டால், நமது மதத்தின் புனிதம் கெட்டு விடுகிறது.

மாளவியா போன்ற இக்கால சீர்திருத்தவாதி-களுக்குத் தீண்டத்தகாதவர்கள் மீது திடீரென்று பாசம் பிறந்துள்ளது. அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளி அணிவிக்கும் மாலையை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், தன் ஆடைகளோடு குளித்து முடிக்கும் வரை தன்மீது தீட்டு உள்ளதாகவே அவர் உணர்கிறார்! என்ன ஒரு தந்திரமான ஏமாற்று வேலை! அனைவரையும் நேசிப்பவர் என்று நம்பப்படும் கடவுளை வழிபடுவதற்காகக் கோயில்கள் கட்டப்-படுகின்றன. ஆனால், அவற்றுள் தீண்டத்தகாத-வர்கள் நுழைந்துவிட்டால், புனிதத் தன்மை அங்கே போய்விட்டது என்கிறார்கள்!

கீழான வேலைகள் அனைத்தையும் செய்து, நமது வாழ்க்கையை எளிதாக்க உதவியவர்களை இகழ்ந்து ஒதுக்கி வருகிறோம். விலங்குகளை வணங்குகிறோம். ஆனால், நம்முடன் உள்ள மனிதர்களை நம்மோடு உட்கார வைக்க மறுக்கிறோம்!

தீண்டத்  தகாதவர்களைத்  தங்கள்  பக்கம் இழுக்க  மதங்கள் போட்டி போடுகின்றன. தீண்டாமையைப் போதிக்கும் _ கடைப்பிடிக்கும் மதம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதனால் மோதல்.

இவைகளுக்கு என்ன தீர்வு?

அனைத்து மக்களும் சமம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு நபரும் அவரது பிறப்பின் அடிப்படையிலோ அல்லது அவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலோ சமமற்றவராகக் கருதப்படக்கூடாது. துப்புரவு செய்யும் ஜாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து விட்டதற்காக, ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க கழிவுகளைச் சுத்தம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வேறெந்த தொழிலையும் அவர் செய்யக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது. நமது ஆரிய முன்னோர்கள் அவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டனர். கீழான வேலைகளைச் செய்வதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி வைத்துவிட்டனர். இவர்கள் விழிப்புற்று போராடிவிடக் கூடாது என்பதற்காக, பூர்வஜென்மம், மறுஜென்மம் பற்றிப் போதித்து வருகின்றனர். இப்பிறவி இழிவுக்குப் போன பிறவி பாவம் என்கின்ற மோசடிக்கு மாற்று வழி உண்டா?

எனவே, நாம் தீண்டாதவர்களாக அவர்களை நடத்த மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். இன்று வரையில் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்-பட்டவர்களிடம், அவ்வாறு அவர்களை நடத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இனி அவர்களைச் சரி நிகர் சமானமாக நடத்த வேண்டும். அவர்கள் தரும் தண்ணீர், உணவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் சுத்தமில்லாமல் இருக்கிறார்கள் என்று எப்போதும் வாதிடப்படுகிறது. இதற்கான பதில் மிகவும் எளிமையானது – அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மையைப் போக்குங்கள். உயர் ஜாதி ஏழைகளும் இவர்களைப் போல் சுத்தமில்லாமல்தான் உள்ளனர்.

கீழ் வேலையைச் செய்வதால் ஒருவன் கீழானவன் அல்ல. குழந்தையின் மலத்தைத் தாய் அள்ளுகிறாள். அதற்காக அவளைக் கீழாகவோ, தீண்டத்தகாதவளாகவோ நடத்தவில்லையே?

பள்ளிகள், கல்லூரிகள், கிணறுகள் மற்றும் சாலைகளைத் தீண்டத்தகாதார் பயன்படுத்த முழு உரிமை வழங்கப்பட வேண்டும். உதட்டளவில் அல்ல. உளப்பூர்வமாக நடைமுறையில் செய்யப்பட வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் தங்களின் உரிமை-களுக்காகப் போராட, தங்களின் சொந்தப் பிரதிநிதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விழித்தெழுங்கள்! உங்கள் வலிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். அணி திரளுங்கள். யாருக்கு விடுதலை வேண்டுமோ அவர்களே தங்கள் விலங்குகளை உடைக்க வேண்டும்… என்று செல்வி மேயோ கூறுவதைப் பின்பற்றுங்கள்.

அதிகார வர்க்கத்திடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள். உங்களைப் பகடைக்கா-யாகப் பயன்படுத்துவார்கள். நீங்கள் சுதந்திர-மில்லாமல் இருப்பதற்கும், உங்கள் வறுமைக்கும் மூலகாரணம் இந்த ஆதிக்க வர்க்கமும், அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமும்தான்! எனவே, அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்!

நீங்களே  உண்மையான  பாட்டாளி  வர்க்கம். உங்களிடம் இழப்பதற்கு அடிமை விலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. தற்போது நிலவும் சமுதாய அமைப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுங்கள். மெல்ல வரும் சீர்திருத்தங்கள் உங்களுக்குப் பயன்படாது. மக்களின் பேரியக்கம் மூலம் புரட்சியை வளர்த்தெடுங்கள். அரசியல் – பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராய் இருங்கள். நீங்களே நாட்டின் உண்மையான முதுகெலும்பு. நீங்களே நாட்டின் உண்மையான வலிமை. உறங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்களே விழித்தெழுங்கள்! புரட்சி செய்யுங்கள்!

«««

மதமும் தேசிய அரசியலும்

இருபத்து நான்கு வயதுக்குள்ளாகவே பகத்சிங் எல்லா சிக்கல்கள் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துகளைக் கூறி உள்ளார். அதே வகையில்  மதமும் அரசியலும் குறித்தும் விரிவாக 1928 மே மாத ‘கீர்த்தி’ இதழில் எழுதியுள்ளார்.

மதம் மக்களிடையே கெட்ட இரத்தத்தைப் பாய்ச்சவில்லையா? முழுமையான சுதந்திரத்தை நோக்கி நாம் போவதை மதம் தடுக்கவில்லையா?

எல்லாம் வல்லவர் கடவுள் என்றும், நாம் ஒன்றுமில்லையென்றும் குழந்தைகளிடம் சொல்லப்படுவது அவர்களைப் பலவீன-மாக்குமல்லவா? அதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை கெடும் அல்லவா? என்று அறிவுசார்ந்த வினாக்களை எழுப்பினார்.

மதம் நம்முடைய பாதையில் தடைக்-கல்லாகவே உள்ளது. நமது மக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்ல. அனைவரும் சமமாக இருக்க விரும்புகிறோம். தீண்டாமை கூடாது; உயர்வு தாழ்வு கூடாது என்று விரும்புகிறோம். இதற்கு மதம் ஒத்து வருகிறதா? இந்து மதம் வேறுபாடுகளைக் கற்பிக்கிறது.

சுவாமி தயானந்தர் தீண்டாமையைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரும் நான்கு வர்ணங்களைத் தாண்டிச் செல்லவில்லை.

குருத்வாராக்களில் சீக்கியர்கள் கல்சா ராஜ்யத்தைப் பற்றி பேசுகின்றனர். வெளியே வரும்போது அவர்கள் பஞ்சாயத்து ராஜ்யத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த இரு பார்வைக் கோளாறுகளுக்கு  இடையில்  எப்படி  நாம்  இணக்கம்  காண முடியும்?

இஸ்லாத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்-களை (கபீர்) கொன்றுவிடு என்று மதம் சொல்கிறது. ஆனால், நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்!

மதம் என்னும் மலை நம் பாதையைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு இராணுவங்களும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக நின்று போர் துவங்கும் நேரத்தில், முகமது கோரியின் கதையில் வருவது போல, யாராவது பசுக்கள், பன்றிகள், கிரந்தம், வேதங்கள், குரான் முதலானவற்றை நம் முன்னால் கொண்டு வந்தால், நாம் உண்மையான மதவாதிகளாய் இருந்தால், பின்வாங்கி வீட்டிற்குப் போய்விடுவோம்.

ஹிந்துக்களால் ஒரு பசுவைச் சுட முடியாது; முஸ்லிம்களாலும், சீக்கியர்களாலும் ஒரு பன்றியைச் சுட முடியாது. இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மதத்திற்கு எதிராகச் சிந்திப்பதற்கு நாம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளோம் என்பதுதானே அந்த முடிவு? மதக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்-பட்டாக வேண்டும் என்பதுதானே உண்மை?

மதம் இல்லாவிட்டால் உலகத்தில் கேடுகள் குழப்பங்கள் மலியும் என்கின்றனர். ஆனால், உண்மையில் கேடுகளும், குழப்பங்களும் மதங்களாலேயே உருவாகின்றன.

இந்துவும் இஸ்லாமியரும் பிரச்சினைகளை விவாதிக்கும்போது, கோபத்தோடும், வேகத்-தோடும் மோதிக் கொள்கின்றனர். இரண்டு தரப்பினரும் தங்களது அறிவுக்-கூர்மையையும், புரிந்துகொள்ளும் திறனையும் வீட்டில் பூட்டி வைத்து-விட்டுத்தான், விவாதத்திற்கே வருகின்றனர்.

ஒரு மசூதியின் முன்பாக இசை முழங்கப்-படக்கூடாது என்று இஸ்லாமில் இருக்கிறது. நாம் என்ன செய்வது? இசை முழக்கத்துடன் அப்பாதையைக் கடந்து செல்ல மக்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், மதம் கூடாது என்கிறது.

ஒரு மதத்தில் பசுவைப் பலியிடுவது முக்கியம். இன்னொரு மதம் கூடாது என்கிறது; பசுவை வணங்குகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

மதத் தத்துவங்களும், சடங்குகளுமே நாட்டின் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட  தேச  விடுதலைக்கான  போராட்டத்தையும்   சீர்குலைக்-கின்றன.

வேற்றுமையையும், குழப்பத்தையும், குருட்டு நம்பிக்கையையும் வளர்ப்பதுதான் மதம் என்றால் அந்த மதம் எதற்கு?

இந்த நாட்டின் விடுதலைக்கு ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றாலும், முதலாளி-களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொழிலாளர்-கள் திரண்டெழுந்து சமதர்ம நிலையை, சம உரிமை நிலையைப் பெற வேண்டும் என்றாலும், மதத் தடைகளைத் தகர்த்தெறிந்து, அறிவுப்பூர்வமான மனிதப்பற்றுடன் கூடிய சிந்தனை மற்றும் செயல்பாடுகளுமே கட்டாயம்! என்று தனது அறிவுப்பூர்வமான தீர்வுகளைச் சொன்னார்.

சீர்திருத்தத் துறையில் பெண்களுக்கே முக்கிய பங்கு

 

பெரியார் பேசுகிறார் : சீர்திருத்தத் துறையில் பெண்களுக்கே முக்கிய பங்கு

மார்ச் 1-15 2022

தந்தை பெரியார்

நாங்கள் கூறுவதெல்லாம், உன்னை எந்தக் கடவுள், எந்த மதம், எந்த சாஸ்திரம், எந்தப் புராணம் இழி ஜாதியாகப் படைத்துக் காட்டி இருக்கிறதோ அவற்றை வேண்டாம் என்று தள்ளிவிடு; அவை நம்முடையதல்ல என்று வெறுத்துவிடு என்கிறோம். இதில் யாருக்கு அபிப்பிராயப் பேதம் இருக்க முடியும்?

ஒவ்வொருவரும் இதைத்தான் நினைக்க வேண்டும். அதாவது எனக்கும்,- ஜாதிக்கும் – மதத்துக்கும் – கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என்பதை மட்டும் உண்மையாக – இதயப் பூர்வமாகச் சொன்னால் போதும்.

இவ்வளவு இருந்தால், ஜாதியை உண்டாக்காத மதம் எத்தனையோ இருக்கின்றன. ஜாதியை உண்டாக்காத கடவுள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒன்றை வேண்டுமானால் எடுத்துக் கொள்; இல்லாவிட்டால் தைரியசாலியாக இருப்பதானால் ஒன்றும் வேண்டாம் என்று சொல்வது நல்லது.

ஜாதி இல்லாவிட்டால் நம் நாட்டிலே என்ன கெட்டுப் போகும்? ஜாதி இல்லாத நாடுகள் நம் நாட்டை விட எந்த முறையில் கெட்டுப் போனதாகக் கூறமுடியும்? ஜாதி இல்லாத மதம் என்று சொல்வதாய் இருந்தால் கூட அதனால் என்ன  நஷ்டம் வந்துவிடப் போகிறது?  ஜாதி இல்லாமல் இருக்கிற நாட்டிலே உள்ளவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று கூறமுடியுமா? அல்லது ஜாதி இருக்கிற நம் நாட்டினர்கள்தான் யோக்கியர்கள் என்று கூறமுடியுமா? அல்லது, மதமும், ஜாதியும் இருப்பதனால்தான் மக்கள் யோக்கியர்களாக வாழ முடியும் என்று சொல்ல முடியுமா?

எனவே தோழர்களே! நான் சொல்லுவதெல்லாம் கண்டிப்பாக நம்முடைய மதம் ஒழிந்தாகவேண்டும் என்றும், மீண்டும் வற்புறுத்திச் சொல்கிறேன். இது முடியாதா என்றும் கேட்டால் இந்த வேலையை விட்டு விட்டு உடனே வெளியே வந்து விடுவது மிகவும் நல்லது.

எனக்கு முன்னால் பேசிய சில தோழர்கள் சொன்னார்கள் – ஏதோ கலியாணம் (கலப்பு மணம்) செய்து கொண்டால் ஜாதி ஒழிந்து போகும் என்று. கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழிந்து போகும் என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. அதை ஒரு ஜாதியாக ஆக்கிவிடுவார்கள்! எப்படி என்றால் கலப்பு மண ஜாதி என்றுதான் கடைசிக்குச் சொல்ல முடியுமே தவிர, ஜாதி அடியோடு போய்த் தொலைய முடியாது. அதுவும் சமஜாதியில்தான் கலப்பு மணம் நடைபெறும். பறையன், சக்கிலி பள்ளன் முதலிய ஜாதிகளில் மேல் ஜாதியான் லேசில் மணம் செய்யமாட்டான்.

நம் நாட்டிலே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்; நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம், இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே.  அந்த ஜாதிக்குள் கூட ஜாதி போவதில்லையே! அதையும் பல ஜாதிகளாக ஆக்குகிறோமே! அவர்களும் மேல்ஜாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்? பட்டிக்காட்டு தாசிகள் ஜாதி பார்த்துத்தான் புழங்குகிறார்கள். இதனால் கலப்பு மணத்தால் ஜாதி போய்விட்டதென்று கூற முடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறேன். தோழர் சாமி சிதம்பரனார், தோழர் குருசாமி, தோழர்கள் எஸ். ராமநாதன் முதலியவர்களும்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறோம். அதனால் ஜாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் சும்மா இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், எங்களுக்குக் குழந்தைகள் இருந்து அவர்களுக்குக் கலியாணம் ஆகவேண்டுமானால் அப்போது தகராறுதான். ‘கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள்’ என்று கூறி கலப்பு ஜாதியார்கள் தாம் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுவார்கள். அன்றியும் எங்களுக்கு மதம் கடவுள் ஜாதி என்ற மூன்றைப் பற்றியும் கவலை இல்லை. அதனால்தான் மறுஜாதி மணம் செய்து கொள்ளவும், அதனால் தைரியமாக இருக்கவும் முடிகிறது.

எனவே, இந்தக் கொள்கையையும் பரிட்சை செய்து பார்க்க வேண்டுமானால் செய்யலாம். நம்மிடம் அரசாங்கம் வந்த பிறகு ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது சட்டம் செய்யலாம். மத சாஸ்திரங்களை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிப்பது கஷ்டம்.

திருவிழா கொண்டாடுவதும், நல்ல நாள் – கெட்ட நாள் – பண்டிகை கொண்டாடுவதும் எதற்காக? மதத்தினால் ஏற்பட்ட ஜாதியை – புராணத்தினால் புகுத்தப்பட்ட ஜாதியை, ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தால் வருவதற்காக தனித்தனியாக பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள் மூலம் பிரச்சாரம் செய்வதே தவிர, அதனால் எந்த விதமான பலனும் இருப்பதாகக் கூற முடியுமா?

மதுரை, ராமேஸ்வரம், பழனி, திருப்பதி ஆகிய இடங்களில் பெரும் பண்டிகைகள் நடக்கின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன?  பத்து வருடத்திற்கு முன் அந்தக் கல்லைக் கழுவிய குடும்பமே இன்னும்  கழுவுகிறது. இதுவரை ஒரு மாற்றமும் இல்லை. என்றாலும் கூட அங்கே போய் வருவதன் நோக்கம் என்ன? அங்கே போய் வருவதன் மூலம் மதப் பிரச்சாரம்தான் நடக்கிறதே தவிர வேறு என்ன?

எனவே, இந்த மாதிரி சூரசம்ஹாரம், இராமன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, கந்தர் ஷஷ்டி அது இது என்று வருகிற அநேக பண்டிகைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்.

ஏன் இத்தனை தூரம் பலவந்தமாகக் கூறுகிறேன் என்றால், தோழர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் கூறியதைப் போல பார்ப்பனியமாகிய ஜாதியானது மதமானது எந்த விதத்தில் நம்மை அடிமை கொண்டிருக்கிறது என்றால், ஆயுத பலத்தினாலோ _- துப்பாக்கிக் குண்டு பீரங்கியாலோ அல்ல. நான் இதற்கு முன் எதை எதை ஒழிக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறி இருக்கிறேனோ அவைகளால் தான் நம்மை அடிமையாக்க நேர்ந்தது.

ஆகையால், இத்தனை பேரும் இன்றைய தினம் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று கூறிவிட்டு சும்மா இருந்து விடுவதனால் ஒரு பலனும் இந்த மாநாட்டால் ஏற்படமுடியாது. இந்த மாநாடு நல்ல முறையிலே கூட்டப்பட்டு இருக்கிறது. அந்த முறையிலே இன்றிலிருந்து நம்முடைய ஒவ்வொரு மக்களும் தங்கள்  தங்களுடைய ஜாதி இழிவைப் போக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு பெண்களும் இம் முயற்சியில் முன் வருவார்கள். ஆனால், கண்டிப்பாக ஜாதி ஒழிந்தே போகும் என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், ஜாதியைப் பற்றி கெட்ட நம்பிக்கைகள் அவர்களிடம்தான் சீக்கிரத்தில் குடி புகுந்து கொள்கிறது.

எனவே, பெண்கள் அந்த நம்பிக்கை எல்லாம் அடியோடு விட்டு விடவேண்டும். இந்த மாதிரி நடக்கும் மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் தாங்கள் வருவதோடு அல்லாமல், தங்கள் புருஷனையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.

சில ஆண்கள் பெண்கள் பேரிலே குறை கூறுவது. அதாவது, நான் சீர்திருத்தக்காரன் ஆகிவிட்டேன்; ஆனால், என் வீட்டிலே உள்ளவர்கள் சரியில்லை என்று கூறுவது. இது நியாயமா?

நான் கூறுகிறேன். உண்மையில் இவர்களே பெண்களை ‘பிசாசாக்கி’ விடுகிறார்கள். இவர்கள் மாத்திரம் தனியாக கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் போய் கருத்துகளை அறிந்து கொண்டு வருவது பழக்கமாக இருக்கின்றதே அன்றி, தங்களுடன் தங்கள் மனைவிமார்களையும் அழைத்துக் கொண்டு வந்து இந்த மாதிரியான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் பெண்களுடைய பழைய மூட நம்பிக்கைகளை மாற்ற வழி காண்பது கிடையாது.

சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறி வேலை செய்து வருவதன் பயனாக இன்றைய தினம் ஓரளவு பயன் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் யாராலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.

உதாரணமாக, இப்போது நடக்கின்ற திருவிழாக்களைப் பார்த்தாலே புரியும். தெருவிலே ‘சாமி’ ஊர்வலம் போகிறது என்றால் ஒரு ‘பிணம்’ சுடுகாட்டுக்குப் போவதற்கும், சாமி ஊர்வலம் போவதற்கும் வித்தியாசம் காணமுடியாத அளவு நிலைமை மாறிவிட்டது.  வாகனத்தின் மேல் உட்கார்ந்து இருக்கும் ஒரு குருக்களையும், கோவிலினால் பிழைக்கும் ஒரு சிலரையும், குருட்டு நம்பிக்கைக்காரர்களையும் தவிர முன்னைப் போல மக்கள் திரளையோ, பிரமாண்டமான தாளமேளங்களோ, காணமுடியாத அளவில் திருவிழாக்கள் நடக்கின்றன.

இதிலிருந்து மக்களுடைய மனது ஓரளவு மாறிக் கொண்டே வருகிறது. ஆகையால் இந்த எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே வரவேண்டியது நமது கடமையாகும். இன்னும் கொஞ்சநாள் போகப் போக நம்முடைய பிரச்சாரத்தால் அவற்றுக்குக் கெட்ட காலம் வருவது நிச்சயம்.

பல தோழர்கள் சொன்ன மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிடர் கழகமும் தங்கள் தங்களுடைய வேலை முறைகளை கலந்து வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது என்று ஆரம்பித்தால்  ஒரு வருட காலத்திலே நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்து விடும். அதனாலே ஒரு கஷ்டமும் இல்லை.

(30.1.1952இல் சென்னை _- திருவொற்றியூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

(`விடுதலை, 2.2.1952).

தந்தை பெரியார் – வினோபா சந்திப்பு (ஒரு வரலாற்றுப் பதிவு) (வரலாற்றுச் சுவடு)

 

வரலாற்றுச் சுவடு : தந்தை பெரியார் – வினோபா சந்திப்பு (ஒரு வரலாற்றுப் பதிவு)

பிப்ரவரி 1-15,2022

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

பேராசிரியர், திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005

வாக்கு அரசியல் வேண்டாம் என இவர் ஒதுங்கியதுபோல், வாழவைப்போம் உழவர்-களை, எஞ்சிய நிலத்தைப் பெற்றுக் கஞ்சியின்றி வயிறு காய்ந்தவருக்கு பூதானம், கிராமதானம் என்று நேர்வழி நேர்மை வழியாகக் கண்டவர் வினோபா. அதற்கும் மேலே ஜாதி ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியாரின் தன்னிகரில்லாக் கொள்கையைப் பேசியும் வந்தவர்.

அவர் போலவே வாக்கு வங்கியைத் தேடிச் செல்லாத, காந்தியின் அடிப்படைக் கோட்பாடு-களாம் தன்மதிப்பு எனும் சுயமரியாதை, அகிம்சை எனும் வன்முறையற்ற புரட்சி இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்ட முரட்டு காந்தி பக்தர் தந்தை பெரியார்.

எண்ணிப் பார்த்தால், இப்படி ஓர் அற்புதத் தலைவரா! என தந்தை பெரியாரை வியக்கிறோம். எத்தனை எத்தனை போராட்டங்கள், எத்தனை முறை சிறைக்கொட்டடி!

1957லே நடத்தினாரே மாபெரும் ஜாதி ஒழிப்பு அறப்போர். நாலாயிரம் பேர் குறைந்தது மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறையேகினரே! பதினெட்டு இன்னுயிர்கள் பலியாகினவே!

காந்தியின் சீடர் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்தார். திருச்சியில் தேசியக் கல்லூரியில் தங்கியிருந்தார். தந்தை பெரியாரைச் சந்திக்க விழைந்தார். சங்கராச்சாரியார் அழைத்தும் செல்லாத தந்தை பெரியார், தானே வந்து சந்திக்கிறேன் என்று புறப்பட்டார். காரணம், தந்தை பெரியார் காலமெல்லாம் வலியுறுத்தி வந்த ஜாதி ஒழிப்பை ஆச்சாரியார் _ அன்பு நண்பர் ஏற்காத போதும், இந்த ‘ஆச்சாரியா’ என அழைக்கப்பெற்ற வினோபாவோ ஜாதி ஒழிப்புக் கொள்கையைக் கொண்டவர். அதனால்தான் தந்தை பெரியார் தானே சென்று அவரைச் சந்தித்தார்.

“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால், மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்’’ என்று சொன்னதோடு 14 ஆண்டுகள் 70,000 கிலோ மீட்டர் நடந்து, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம்  இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 1940இல் காந்தி தனிநபர் அறப்போர் நடத்தியபோது அதில் முதல் அறப்போர் மறவர் வினோபா பாவே. தந்தை பெரியார் போலவே ஏறக்குறைய 97 ஆண்டுகள் வாழ்ந்தவர். காந்தி சொன்ன ‘பயமின்மை இல்லாவிடில் அகிம்சை இருக்க முடியாது’ என்பது வினோபா பாவை ஈர்த்தது போல் தந்தை பெரியாரையும் ஈர்த்ததால் மதம், ஜாதி, பணம், செல்வாக்கு எதைக் கண்டும் அஞ்சவில்லை. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு  _ வினோபா பார்ப்பனர்; தந்தை பெரியார் பார்ப்பனரல்லாதார்.

19.1.1957 காலை 10:00 மணிக்கு பூமிதானக் குழு அமைப்பாளர் பழனிச்சாமி, திருச்சி மாளிகைக்கு ஜீப் கொண்டு வந்து தந்தை பெரியாரை அழைத்துச் செல்ல வந்தார். தந்தை பெரியார் தனது வாகனத்திலேயே வருவதாகக் கூறி தனது ஊர்தியிலேயே சென்றார். அன்னை மணியம்மையாரும் உடன் சென்றார். குறித்த நேரத்தில் தந்தை பெரியார் திருச்சி தேசியக் கல்லூரி சேர்ந்தார். வினோபா, தயிர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், தந்தை பெரியாரை மகிழ்ச்சியுடன வரவேற்றார்.

வினோபா வேட்டி மட்டும் அணிந்திருந்தார். அவரைப் பார்த்ததும், “வணக்கம்’’ என்று தந்தை பெரியார் சொன்னார். வினோபா பாவே கைகளைக் கூப்பிப் பதில் வணக்கம் தெரிவித்தார்.

“இவர்தான் பெரியாரின் மனைவி மணியம்மை’’ என்று பூமிதானப் பணியாளர்கள் அன்னையாரை அறிமுகம் செய்து வைத்தனர்.

மணியம்மையாரை அமரும்படி வினோபா கேட்டுக் கொண்டார்.

“உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?’’ என்று தந்தை பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார்.

அதை மொழிபெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், “எனக்கு 78 வயது’’ எனத் தமிழில் பதில் கூறினார்.

78 வயது என அய்யா சொன்னதும், “அப்படியா! நூறுக்கு இன்னும் 22 பாக்கி’’ என பாவே சொன்னார்.

இச்சந்திப்பு இப்படி நிகழ்ந்தது.

சந்திக்கும் செய்தியறிந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும், திராவிடர் கழகத் தோழர்களும், ஊடக நண்பர்களும் வந்திருந்தனர்.

தந்தை பெரியார் வினோபா பாவேயுடன் உட்கார்ந்ததும் புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு பல கோணங்களில் நிழல்படம் எடுத்துத் தள்ளினர்.

கல்லூரி மாடியில் இருவரும் உரையாடினர். உரையாடலின்போது பத்திரிகை நிருபர்களும் மற்றவர்களும் அருகிலிருக்க அனுமதிக்கப்பட-வில்லை. வினோபா பாவே, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், மொழி-பெயர்ப்பாளர் ஆக நால்வர் மட்டுமே.

காலை 10:40 மணிக்குத் தொடங்கி பகல் 12:30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவரும் மனம் விட்டுச் சுமுகமான சூழலில் உரையாடினர்.

பிறகு தந்தை பெரியாரும் மணியம்மையாரும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

“என்ன பேசினீர்கள்?’’ என்று  பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “எல்லாம் அப்புறம்’’ என்று மட்டும் கூறிக் கொண்டே தந்தை பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.

“ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’’ என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர்.

“ஒன்றும் இல்லை’’ என்ற வினோபா தலையை ஆட்டினார்.

இருவரும் என்ன பேசினார்கள் என்பது ஒன்றும் ரகசியமாக இல்லை. ஆனால், 19.1.1957 ‘விடுதலை’யில்,

“திராவிடர் தலைவர் பெரியாரும், ஆச்சார்யா வினோபா பாவேயும் சந்தித்தனர்’’

“ஜாதியொழிப்புப் பணியில் மனமொத்த பேச்சு!

புராண இதிகாசங்களைப் பற்றிச் சுவைமிக்க உரையாடல்

திருச்சி கல்லூரியில் இருவரும் தனித்து அளவளாவினர்’’

என்று முழுச் செய்தியும் வெளிவந்தது.

வினோபா பாவேவுக்குத் தமிழ் தெரியு-மென்றாலும் அவ்வளவு தெளிவாகப் பேச வராது என்பதால் அவர் இந்தியில் பேசினார். இருவருக்குமிடையேயான உரையாடலை ஒருவர் மொழிபெயர்த்துச் சொன்னார்.

வினோபா பாவே, “ஜாதி ஒழிப்பு என்னுடைய முக்கியக் கொள்கையில் ஒன்று. தேர்தல் சண்டையில் கலந்து கொள்ளாமல் நீங்கள் சமுதாயப் பணி செய்து வருவதைப் பாராட்டுகிறேன்’’ என்றார்.

இராமாயணத்தைப் பற்றிப் பேசியவர், “நான் எந்த நூலையும் பிரமாதமாகக் கொள்வதில்லை. தவறான கருத்துகள் இருந்தால் ஒரு சில நல்ல கருத்துகளும் இருக்கின்றன. தவறான கருத்துகளை விட்டுவிட்டு நல்ல கருத்துகளை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

மேலும் அவர் இராமாயணத்தைப் பற்றி, “ராமாயணத்தை நான் சாதாரண நீதி நூலாகவே கருதுகிறேன். ஜாதியை ஒழிக்கும் பணியில் உள்ளவர்கள், இதுபோன்ற நூல்-களையும், கடவுள்களையும் ஒழிக்கிறேன் என்கிறீர்கள். நமக்கு முக்கியமான கருத்துகளை மட்டும் வற்புறுத்தி மற்றவைகளில் தளர்த்திக் கொடுப்பதன் மூலம் அதிகக் கூட்டமான மக்கள் நம் பக்கம் திரும்பக் கூடும். நமது குறிக்கோள் ஜாதியை ஒழிப்பது. அதை மாத்திரம் வற்புறுத்தினால் போதும். கடவுள்-களையும் புராண ஆதாரங்களையும் ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக ஒழிக்கக் கிளம்பினால், புராண ஒழிப்பு, கடவுள் ஒழிப்பு வேலையாகவே-தான் இருக்க வேண்டும். புராண, இதிகாசங்களில் உள்ள நல்ல கருத்துகளை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்கலாம்’’ என்றார் வினோபா பாவே-.

மேலே கண்ட வினோபாவின் கருத்திலிருந்து ஜாதியை ஒழிக்க வேண்டும் எனும் கருத்தில் மாற்றமில்லை.

எனவே, வினோபா பாவேக்குத் தக்க பதில் தரவேண்டியவரானார் தந்தை பெரியார். தம் கருத்தை வெளியிட்டார்.

“இராமாயணம் நீதி நூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. நீதி கற்பிக்கக் கூடிய தன்மையில் அதில் ஒன்றுமே கிடையாது. நல்ல கருத்துகள் இருப்பதாக ஒன்றும் இல்லை. இரண்டொருவர்களுக்கு வேண்டுமானால் நல்ல நல்ல கருத்துகள் மாத்திரம் எடுத்துக் கொள்ளலாம். நாம் பொதுமக்கள் என்பவர்-களை மனதில் வைத்துப் பார்க்க வேண்டும்.

விஷத்தின் மீது சர்க்கரை பூசிக் கொடுத்தால் எத்தனை பேருக்கு சர்க்கரையை மட்டும் சப்பி விட்டு விஷத்தைத் துப்பி விடக் கூடிய சக்தி இருக்கும்? மக்களுக்கு நீதி நூல் தேவையென்றால் பாவே போன்றவர்கள் புதிதாக எழுதித் தரலாம். அந்த இதிகாசங்களை எழுதியவர்களும் பாவே போன்ற மனிதர்கள்தானே? அதுவும் அந்தக் காலத்து மனிதர்கள்’’.

ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இராமாயணம், பாரதம், மனு போன்ற புராண இதிகாசங்கள், கடவுள் எல்லாம் ஒழிந்தே தீர வேண்டும். ஒரே ஆண்டவன் என்பவன் கூட ஜாதிக்கு ஆதாரமாயிருந்தால் ஒழித்தே தீரவேண்டும்.

இராமாயணம், பாரதம் போன்ற கடவுள்களிடத்திலும் மற்றும் பதிவிரதை என்று சொல்லப்படுகிறவர்களிடத்திலும் கொஞ்சம் கூட யோக்கியத் தன்மையோ, நாணயமோ காணப்படவில்லை. அதைப் படிக்கிற மக்களுக்கும், அதிலிருந்து நாணயமோ, ஒழுக்கமோ வந்ததாகவும் இல்லை. நான் கடவுள் என்று ஒன்று உண்டு என்று புரிந்து-கொள்ளவும், அந்த ஒரு கடவுள் நம்பவும் முடியாவிட்டாலும், இல்லையென்று மறுத்துப் பேச வரவில்லை. ஆனால், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கிற மனுதர்மம் போன்ற சாஸ்திரங்-களையும் ஜாதிக்கு ஆதாரமாயிருக்கிற சாத்திரங்கள் ஜாதிக்கு ஆதாரமாயிருக்கிற ராமன், கிருஷ்ணன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்களையும் வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது. நான் வால்மீகி, கம்ப ராமாயணம் போன்ற நூல்களைப் படித்தே கூறுகிறேன்’’ என நீண்ட பதில் கூறினார்.

இவ்வாறு ராமாயணத்தில் உள்ள ஆதாரங்களைத் தந்தை பெரியார் எடுத்துக் காட்டியபோது, வினோபா பாவே குறுக்கிட்டு, “நான் துளசி ராமாயணமும், மராட்டி ராமாயணமும்தான் படித்திருக்கிறேன். அவற்றில் அப்படியில்லை’’ என்று கூறினார்.

அதற்குத் தந்தை பெரியார், “நீங்கள் ஏழெட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில் எனது சமுதாய மக்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பத்திரிகைக்காரர்-கள் போடுவதே இல்லை. ஜாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தை மறைக்கவே பார்க்கிறார்கள். அவரவர்களுக்கு வேண்டிய சங்கதி மாத்திரம் போடுகிறார்கள். நான்தான் எனது பத்திரிகை-யில் நீங்கள் சொல்லும் ஜாதி ஒழிப்பு வேண்டுமென்ற கருத்துகளைப் போடுகிறேன்’’ என்றார்.

வினோபா பாவே, “தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்ய வேண்டும். அதிக நிலதானம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குத் தந்தை பெரியார், “என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் கொண்டுள்ள வேலை அதாவது ஜாதி ஒழிப்பு முக்கியமானது.’’

இவை மட்டுமல்லாது கல்வி நிலை குறித்தும், பல்வேறு கருத்துகள் குறித்தும் உரையாடினர்.

உரையாடல் முடிந்ததும் வணக்கம் தெரிவித்து விட்டு, தந்தை பெரியார் புறப்பட்டார்.

தேசியக் கல்லூரி பார்ப்பனர் கல்லூரி என்ற போதிலும் அக்கல்லூரி முதல்வர் வரதாச்சாரி தந்தை பெரியார் தங்கள் கல்லூரிக்கு வருகை புரிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, தந்தை பெரியாரை வரவேற்று, தேநீர் அளித்துள்ளார்.

‘தந்தை பெரியார் வாழ்க!’ எனும் பேரொலிக்கிடையே தந்தை பெரியார் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தந்தை பெரியாரைப் பாவே சந்தித்ததன் தாக்கம் 19.1.1957 அன்று மாலையே வெளிப்பட்டதையும் இங்கே பதிவு செய்வோம்.

அன்று மாலை திருவரங்கத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில், “கோயில் தேவஸ்தானங்களின் உடைமையாக ஏராளமாகச் செல்வமிருந்து வருவதை என்னால் ஆதரிக்க முடியாது. இவ்வாறு கோயில்களில் பெருஞ்செல்வம் முடங்கிக் கிடப்பது பக்திப் பிரச்சாரத்திற்கே பெரும் முட்டுக் கட்டையாகும். பண்டரிபுரத்தைப் போல ஸ்ரீரங்கமும் வைணவ ஆச்சாரியார்-களுக்குப் பிறப்பிடமாக விளங்கி வருகிறது. இவ்வாச்சாரியார்களும் இந்து மதத் தலைவர்-களும் தோன்றி எவ்வளவோ உபதேசங்கள் செய்து வந்தும் நாட்டில் இருந்து வரும் கேடுகளை எவராலும் களைய முடியவில்லை. சமூகத்திலுள்ள கேடுகள் அப்படியே இருந்து வருகின்றன’’ என்று பேசியுள்ளார் வினோபா பாவே.

நாட்டிலே நாத்திகம் இவ்வளவு தூரம் பரவி வருவதற்குக் காரணம் ஆத்திகர்களின் ஒழுக்கக் குறைவுதான் என பாவே இடித்துரைத்தார் எனில், உண்மையான காரியங்கள் செய்வதற்குப் பணம் தேவை இல்லையென்றும், பணமில்லாத ராமானுஜர் எவ்வளவு நன்மைகளைச் செய்தார் என்றும், பணம் வைத்துள்ள தேவஸ்தானங்கள் என்ன நன்மை செய்திருக்கின்றன என்றும் கேட்டார்.

அதுபோலவே சங்கராச்சாரியார் மடங்-களால் இன்று என்ன நன்மை செய்ய முடிகிறது? என்று பாவே கேட்டார். கேட்டவர் பெரியார் அல்ல; இறை நம்பிக்கையுடைய பார்ப்பனரான பாவே.

இறுதியாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சேர்ந்த மக்களிடம் அன்பாகவும் அனுதாபத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறவும் தவறவில்லை.