செவ்வாய், 9 மே, 2023

நமது நாடு மனுதர்மம் ஆண்ட நாடு; ஆளும் நாடு

 

 டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்ட அமைப்பின் இடத்தை மனுதர்மம் பிடிக்க முயலும் நாடு;

அதில் உள்ள மனுதர்மம் என்பது சமூக அநீதி மட்டுமல்ல;

பொருளாதார அநீதி மட்டுமல்ல;

அரசியல் அநீதி மட்டுமல்ல -

அதற்கும் கீழான மோசமான  நிலையில்

மனித உரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் -

கொடுமையான கொடுமைகள் பாதிப்பும் ஆகும்.

வர்க்கம் என்பது மேலை நாடுகளில் தனி;

வருணம் கிடையாது

(இப்போது சில நாடுகளில் தொற்று நோய் போல் புலம் பெயர்ந்து  வந்தும் குடியேறியவர்களும் பரப்பும் நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது.)

ஆனால்

இந்தியாவில் -

மனுதர்மப்படி நடக்கும் ஆட்சியில்,

ஜாதி தர்மம் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது.

ஒருவன் பொருள் சேர்க்கவோ சம்பாதிக்கவோ கூட உரிமையற்றவனாக்கிய நாடுஅவன் சேர்த்த பணத்தை வன்முறையால் பயன்படுத்திக் கூட உயர்ஜாதியான் பறித்துக் கொள்ளலாம் என்பதே தர்மம்.

கீழேவுள்ள மனுதர்ம வாக்கியங்களே இதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

சூத்திரனுக்கு தர்மம் - பணி செய்வதே!

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதனால் அவனுக்கு தானம் முதலியவை யுண்டென்று தோன்றுகிறது.

சம்பளம் கொடுத்தும்கொடுக்காமலும் வேலைவாங்கலாம்...

பிராமணன் சம்பளம் கொடுத்தேனுங் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.

ஏனெனில்அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா!

சூத்திரன் யஜமானால் வேலையினின்று நீங்கப்பட்டிருந்தாலும் அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது.

இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன்தான் நீக்குவான்?

ஆதலால்அவன் மறுமைக்காகவும்பிராமண சிசுருஷை செய்ய வேண்டியது.

சூத்திரன் என்றால் பெருமையா?

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,

பக்தியினால் வேலை செய்கிறவன்,

தன்னுடைய தேவடியாள் மகன்,

விலைக்கு வாங்கப்பட்டவன்,

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்,

குற்றத்திற்காக வேலை செய்கிறவன்,

எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

 

சூத்திரனுக்கு எதுவும் சொந்தமில்லை

மனையாள் பிள்ளை வேலைக்காரன்இவர்களுக்கு பொருளில் சுவாதீனமில்லைஇவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவை அவர்களின் எஜமானையே சாரும்.

அதாவது எஜமான உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாதென்று கருத்து.

சூத்திரன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழு வகைத் தொழிலாளியான சூத்திரடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்.

யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

பிராமணனையே தொழ வேண்டும்

சூத்திரன் சுவர்கத்திற்காவதுஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவதுபிராமணனையே தொழ வேண்டும்இவன் பிராமணனையடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.

ஆதலால்பிராமணனை உபசரிப்பதே சூத்திரனுக்கு எல்லாத் தொழிலையும் விட மேலான தருமமென்றும்மற்றவையெல்லாம் பயனில்லாதவை யென்றும் கரும காண்டத்திற்கு சொல்லியிருக்கிறதுஆனால்இங்கு அவனுக்குப் பிராமண சிசுருஷையை துதி செய்த விஷயமேயன்றி மற்றதை நிந்திக்கிற விஷயமன்று.

பிராமணனும் தனக்கு வேலை செய்கிற சூத்திரன் சக்தியையும் அவன் செய்யும் பணிவுடைமையையும் அவன் காப்பாற்ற வேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவனத்திற்குத் தக்கபடி கூலியேற்படுத்த வேண்டும்.

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கப்படக்கூடாது.

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குபயோகமானதை விட மிகவுமதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாதுஅப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்.

மேலே காட்டியவைபொருளாதாரத்தில் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கீழ்ஜாதியான் ஆட்பட மூலகாரணமே - வர்ணாசிரம தர்மப்படியேதான்வர்க்கத்தை கூட வருணம்தான் நிர்ணயிக்க முக்கியக் காரணியாக இருந்தது என்பது விளங்குகிறது அல்லவா?

நூல்தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுதி 1

.பழநிசாமிதெ.புதுப்பட்டி

வெள்ளி, 5 மே, 2023

சமூக மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? - தந்தை பெரியார்

 

 2

சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே! இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசார பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடை கிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.

தோழர்களே! உங்கள் உபசாரம் பத்திரத்தின் தலைப்பில் புரட்சி வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டி ருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன் னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதுவும் அவ்வார்த்தையில் அடங்கியிருப்பதாய் நான் கருதவில்லை.

ஆனால், அவ்வார்த்தையானது, பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்பட்டு விட்டது. எது போலென்றால் "பூச்சாண்டி" என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்திருப் பதைப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அர்த்தம் என்ன? பயன் என்ன? என்கின்ற விஷயம் உணராமல் பயப்படும் படி செய்யப்பட்டாய் விட்டது.

புரட்சி 

புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றி சற்றுயோசித்துப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு, பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும். இந்தப் படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1 மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடை யிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான். 

ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோத மாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால், அதனால் அனுகூலம் அடைக் கின்ற வர்கள் காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச்  செய்வார்கள். ஆனால், மனித சமுகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனி தனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும். புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவ தாகும். அந்தப்படி  இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு  புரட்சியிலும் எந்தெந்த  தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமுகம் பூண்டற்றுப் போய் விட்டது மாறுதலேற்படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜந் தானே. 

சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள் அம்சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா?  கடவுள் கடாட்சம் பெற்றவர்களல்லவா? இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள் என்பவைகளிலும், புராணங்கள் என்பன வகையிலும் சொல்லப்பட்ட சத்திய வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்கவில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக் கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமுகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ இருப்பது எங்கள் சுயமரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல் லையா? ராஜபக்தி ராஜ வாழ்த்து அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப் படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல் லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன். 

இந்த புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது யார் வாய்வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது, அரசர்கள் ஒழிக் கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா? அல்லது பாலைவனமாகி விட் டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ மாற்றவோ நம் நாட்டில் யாராவது கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாத்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்னதாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். 

இது போலவே மக்களில் ஒரு சாராரை "பூதேவர்கள்" (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண் ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத சாத்திர புராண ஆதாரங் கள் கடவுள் வாக்குகள் இருக் கின்றது என்று சொல்லி "பூதேவர்கள்" காலில் விழுந்து கும்பிட்டும் "சண்டாளர்களை" தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக் குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லு கின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் "மகாத்மா" என்று அழைக்கப்படுகிறார்களா இல்லையா?

"மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள்" கண்ணுக்கே தென் படக் கூடாது, கிட்டவே வரக் கூடாது என்று இருந்த தெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்கார், சாத்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த தானங் களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா? சமுக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்கள் "நரகத்துக்குப்" போய் விடுவார்கள். பெண்ணும் விபசார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாத்திரங்களையும் "ரிஷிகள்" வாக்கியங்களை யும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லா விட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா?

எனவே, இவைகள் எல்லாம் சமுகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?

ஆகவே அரசியல் துறையிலும் சமுகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம். செய்து விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும், அறிவுடைமை யாகவும், மக்கள் சமுகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப் படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மற்றும் "உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள் விஷயம்" இன்று உலகில், நம் நாட்டில் என்ன பாடு படுகின்றது? அக்கடவுளையடையும் மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள் புரட்சி மதப் புரட்சியல்லவா? இதனால் மக்களுக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? ஆகவே இவ்விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப் படுவதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் அவற்றால் யார் யார் நன்மை அடைந்து வந்தார்களோ அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப்படுகின்றதே அல்லாமல் வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள் சமுகத்தில் 100க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் லட்சியம் செய்யக் கூடிய அளவா என்பது விளங்கும். ஆகவே அரசியல், சமுக இயல் அறிவியல் ஆகியவற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு அதை சாதாரணமாய் நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே, மேற்கண்ட புரட்சிகள் போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன், அடிமை ஏன் என்று கேட்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கிறோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.

பட்டாளம் பீரங்கி ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி விஷப்புகை, வெடி முதலிய பலமும் 'கடவுள் அவதாரமும்' உள்ள அரசனே, நீ வேண்டாம் மூட்டை கட்டிக் கொள், என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டு அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப் பட்டும் போன பிறகு, அதை விட கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான காரியமா இந்த பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்று தான் கேட்கிறேன். முன்னையதைவிட இதற்கு என்ன அதிக தைரியம் வேண்டும்? என்ன அதிக பலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய பாவமான காரியமாகும்? அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவை யெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களே யொழிய இவர்கள் இயற்கையா? காற்றைப் போன்று இன்றிய மையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து காணாமல் போவது போல், மறைவுபட வேண்டியது தானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக்கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்? இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம் தானே? இதை வெளியில் சொல்லுவது  தப்பு சட்ட விரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில் சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம் சிலர் இது சாத்தியப்படுமா? என்று கேட்கலாம். இப்படி கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா தப்பா என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதை பற்றி யோசிக்க வேண்டும்.

சாத்தியப்படுமா?

அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு  உள்ள படை, பட்டாளம், வெடிகுண்டு, பீரங்கிகளை யெல்லாம் விட, இந்த பணக்காரனுக்கும் முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனை விட பணக்காரனுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத, சாத்திர, புராணப் பாதுகாப்புகள் இருக் கிறது? அவர்கள் நிலைமையே  இப்போது காற்றாய்ப் பறக்கின்றது. பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பளுவு இருக்கிறது? வரிசைக்கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியது தானே? சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பது தான் சுயமரியாதைக் கட்சியின் லட்சியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப் படுகின்றதோ அவைகளை யெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாகப் பார்ப் பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனை பட்டத்தில் வைப்பதும், ஒரு நாளும் சுயமரியாதையாகாது இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.

அன்றியும், அரசன் வேண்டாம் என்றாலும் பார்ப்பான் வேண்டாம் என்றாலும் பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேருக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளியின் கடமை? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவகாருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலை கீழாக கொண்டு போகப் படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும், ஜீவகாருண்யம் என்று எண்ண மாட்டார்கள். பெரும் பான்மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுய நலத்தால் எவ்வளவு கஷ்டப் படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.

"அய்யோ இந்த புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே" என்று ஒரு அறிவாளியும் கருத மாட்டான் எப்படியெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால் திருடன் பாடுபட்டினிதான். அதனால் திருடன் மனம் பதறுமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் இதை ஜீவகாருண்ய மென்று நீங்கள் ஒப்பு கொள்ளுவீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கபட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய  நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர் களும் சில சமயங்களில் மனக் கஷ்டப்படத் தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர்கள் போவதனால் எத்தனை  சங்கராச்சாரிகள் மனம் பதறுகிறது? இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ இருக்க முடியுமா? இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும் என்பது நமது கருத்தல்ல. ஆனால், பலாத்காரத்துக்குப் பல வந்தமாய் வருபவர் களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்குத் தயாராய்த் தான் இருக்க வேண்டும். இதற்காக எந்த பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது. யாரும் பட்டினிகிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக்காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படு கிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதைவிட, கவலைப் படுவதைவிட அதிகமாகவே அதை காப்பாற்றுவ திலும் கவலைப்படுகிறான். லாப நஷ்டம் வரும் காலை யிலும், அதிக லாபம் வர வில்லையே என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப் படுகிறான். எவ்வளவு இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது. எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங் கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால் உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கப் வழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப் பட்டே பணக்காரனாக ஆசைப்படுகிறான்.  ஆகவே பணக்காரத் தன்மை என்பது போய் விடுவதால் மனித சமுகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்து விடாது பணக்காரத் தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையை பொருத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமுகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஒப்பற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும்.

மனிதப் பிறவி உயர்ந்ததென்றும், அருமையான தென்றும், மற்ற ஜீவராசிகளை விட மேம் பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. 

இன்றைய மனித சமுகத் திட்டம் சரியென்று ஒப்புக் கொள்வதனால் "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது" என்பது சோம்பேறிகள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர் களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு நான் இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு என்றுதான் சொல்லுவேன். மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத் திற்கும் அவனது இன்றைய வாழ்க்கைத் திட்டமே காரண மாய் இருக்கிறது. மனிதனை விட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக அபூர்வமேயாகும்.

மனிதனை விட மற்ற ஜீவ  பிராணிகளில்  நாளைக்கு என் கதி என்ன? என் பிள்ளை குட்டி பேத்தி பிதிர் ஆகியவர்களுக்கு என்ன கதி? உலகம் உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்குக்கெல்லாம் மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி தன் சமுகத்தையோ சகல வித அயோக்கியத்தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக அருமையாகவே இருக்கும். மனித சமுகத்தாலேயே எதை எதை இழிவான கொடுமையான குணம் என்று கருதுகின்றோமோ அவை யெல்லாம் உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதை விட மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு தேள் ஆகியவை மேல் பாம்பு தேள் சவாரி செய்கின்றதா? ஆனால் மனிதன் மேல் மனிதன் செய்கின்றானா இல்லையா! ஆகவே மனி தனிடம் என்ன உயர்வான  குணங்கள் இருக்கக் காண் கின்றோம்?

அரசன், ஜாதி, மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம் மேல் கண்ட இழி தன்மைக்கும் அக்கிரமத் தன்மைக்கும் மனித ஜீவகாருண்ய மற்றத் தன்மைகக்கும் அனுகூலமாய் இருக்கிறதா? இல்லையா?

மனிதன் தனது சமுகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்து "பகுத்தறிவுள்ள" தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஆனால் மிருகம், பட்சி ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்த வுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும் படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்கின்றோம். இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது. மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப் பும் கடவுளால் தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும் கடவுளால் தான் நடைபெறுகின்றது என்று சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியது போலவே தான் கவலையும் கொடுமையும் நிறைத்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுள் காரண மாக்குகின்றவர்கள். இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மை படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம் பேறியாயிருந்து வாழ உரிமையு டையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லை யானால் கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும் அரசனுக் கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். 

'குடிஅரசு' - சொற்பொழிவு - 18.12.1932


"அய்யோ இந்த புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே" என்று ஒரு அறிவாளியும் கருத மாட்டான் எப்படியெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால் திருடன் பாடுபட்டினிதான். அதனால் திருடன் மனம் பதறுமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் இதை ஜீவகாருண்ய மென்று நீங்கள் ஒப்பு கொள்ளுவீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கபட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய  நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர் களும் சில சமயங்களில் மனக் கஷ்டப்படத் தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர்கள் போவதனால் எத்தனை  சங்கராச்சாரிகள் மனம் பதறுகிறது? இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ இருக்க முடியுமா? இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும் என்பது நமது கருத்தல்ல.

பார்ப்பனர் சூழ்ச்சி தமிழன் படித்தால் தரம் குறையுமா?

 

 *தந்தை பெரியார் 

4

நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங் குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி - இழி மக்களான சில பார்ப்பனரல்லாத, பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் - ஆதரவாளர்களின் ஆதிக்கமும், ஒரு அளவுக்கு ஒழிக் கப்பட்ட பின்பே சிறிது மான உணர்ச்சி பெற்று, ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததன் பயனாய் நாம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம், மூன்றே கால் கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாறு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள் இன்று (64 இலட்சம்) அறுபத்து நான்கு இலட்சம் மக்கள் படிக்கும்படியாகவும், மற்றொரு கணக்குப்படி, ஜனத்தொகையில் 100க்கு 10 விகிதமே (நூற்றுக்கு பத்து விகிதமே) படித்திருந்த மக்கள் இன்று 100க்கு 40 விகித (நூற்றுக்கு நாற்பது விகித)த்திற்கு மேல் படித்திருக்கிறவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன் இனி அய்ந்து வருட காலத்திற்குள் 100க்கு 100 மக்களையும் எழுத, படிக்க கற்பித்த பிறகே உறங் குவேன் என்று நம் இரட்சகர் காமராஜர் திட்டம் வகுத்த பின், நம் நாட்டுக்குள் குஷ்டரோகம் போல் புகுந்து இருக்கிற பார்ப்பனர்கள் பலர் வயிறெரிந்து அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யய்யோ!! கல்வித்தரம் குறைந்து போய்விட்டதே என்று கட்டுப்பாடாக மக்கள் காதடையும்படி ஊளையிடுகிறார்கள்.

தமிழன் படித்தால் தரம் குறையுமோ?

இப்படி இந்தப் பார்ப்பனர்கள் ஊளை இடுவதை தமிழர் சமுதாயம் இனியும் பொறுத்துக் கொண்டிருப்பது தமிழர் களுக்கு மாபெரும் மானக்கேடேயாகும். ஏனென் றால் இப் போது தமிழர் பிள்ளைகள் படித்திருக்கும் படிப்பெல்லாம் தரம் குறைந்த படிப்பு என்று தானே பொருளாகிறது?

நம் நாட்டில் அண்ணாமலை யுனிவர்சிட்டி ஏற்படும் முன்பு பச்சையப்பன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மக்களை இவன் பச்சையப்பன் காலேஜ் பி.ஏ. என்று ஏளனம் செய்வார்கள். பிறகு அண்ணாமலை சர்வகலா சாலை ஏற்பட்ட பிறகு பச்சையப்பன் கல்லூரியை விட்டு விட்டு இவன் அண்ணாமலை யுனிவர்சிட்டி பி.ஏ. என்று சமீப காலம் வரை ஏளனம் செய்து வந்தார்கள்.

ஏனென்றால், முன்பெல்லாம் அரசாங்க காலேஜும், கிருஸ்துவர் காலேஜும்தான் நாட்டில் இருந்து வந்தது; அவற்றில் பார்ப்பனருக்கும் கிருஸ்துவர்களுக்கும்தான் 100க்கு 90 பேர்களுக்கு இடம் கிடைக்கும். நம் பிள்ளை களுக்கு கல்தாதான் கிடைக்கும்.

அப்போதெல்லாம் பச்சையப்பன் காலேஜ் இருந்ததால் நம் பிள்ளைகளுக்கு 100க்கு 50 இடமாவது கிடைத்து வந்தது. பிறகு அண்ணாமலை சர்வகலாசாலையில் நம் பிள்ளைகளுக்கு சிறிது தாராளமாய் இடம் கிடைத்து வந்தது. ஆகவே நம் பிள்ளைகள் அதிகமாகச் சேர்ந்து படிக்க முடிந்ததாலேயே பார்ப்பனரின் ஆத்திரமானது இந்தப்படி இழிவாய்ச் சொல்லி படித்த மரியாதையைக் குறைத்து வந்தார்கள்; இப்போது அந்தக் கூச்சல் குறைந்துவிட்டது.

கல்வி பற்றி தரம் பேசுவது மோசடியே

ஆகவே கல்வியைத் தரமுடையதாக்குவதும், தரமற்றதாக்குவதும் பார்ப்பனருடைய நோட்டத்தில் பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்தக் கட்டுப்பாடான அயோக்கியத்தனத்தை நமது இரட்சகர் காமராஜர்தான், - இப்படிக் கூறுவது தங்களுக்குத்தான் கல்வி உரிமை யானது; மற்றவர்கள் படிப்பது நம் வாழ்வுக்கு ஆபத்தானது என்று கருதும் அயோக்கியர்கள் கருதிச் செய்யும் மோசடி வேலை - என்று சொன்னார். அதற்குப் பிறகும் நமது அரசாங்கம், நமது கல்வி, தரம் குறைந்த கல்வி ஆகிவிட்டது என்று கருதினால் அது நமது பொல்லாத வாய்ப்புத்தான். நிற்க. இன்று யார்தானாகட்டும் கல்வித் தரம் குறைந்து விட்டது என்று சொல்ல என்ன காரணம்? என்ன ஆதாரம் காட்டுகிறார்கள்? அல்லது எதைக்கொண்டு தரக்குறைவு பேசுகிறார்கள்?

தரக்குறைவு எப்படி ஏற்படும்?

பள்ளிக்கூடங்கள், காலேஜுகள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது போலவே தான் பார்ப்பனர்கள், கிறிஸ்து வர்கள் நிர்வாகத்தில் இன்றும் இருந்து வருகின்றன. ஆசிரியர்கள், ஹெட்மாஸ்டர்கள் (Headmasters), புரஃபசர்கள் (Professors), செனட்டர்கள் (Senators), சிண்டிகேட்டர்கள் (Syndicaters), வைஸ் சான்ஸ்லர்கள் (Vice Chancellores), பரீட்சை செய்பவர்கள் (Examiners),  டெக்ஸ்ட்புக் எழுதுபவர்கள் (Text Book Writers) பலர் 100க்கு 50க்கு மேற்பட்டவர்கள் தகுதி திறமை பெற்ற, பழைய காலப் படிப்பு பட்டம் பெற்ற பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். மற்றும் கல்வி தரமாய் இருந்த காலத்தில் கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் செய்து வந்த ஏற்பாடுகளில் எதில் மாறுதல் ஏற்பட்டு விட்டது?

ஆசிரியர் தகுதியைக் குறைத்துவிட்டார்களா? பாடத் திட்டத்தை மாற்றி விட்டார்களா? பரீட்சையாளர்களை மாற்றி விட்டார்களா? பரீட்சைக் கேள்விகளின் தன்மையை மாற்றி விட்டார்களா? அல்லது பரீட்சையில் தேறவேண்டிய அளவு மார்க் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களா?

பரீட்சை பேப்பர்களைத் திருத்தும் நபர்களின் யோக்கியதையையோ அவர்களது நாணயத்தையோ குறைத்து விட்டார்களா? கல்வி அதிகாரிகளின் யோக்கிய தாம்சத்தைக் குறைத்து விட்டார்களா?

கல்லூரிகளின் கவனிப்பு 

குறைக்கப்பட்டு விட்டதா?

யுனிவர்சிட்டிகளின் (Universities) யோக்கியம் நாணயம் குறைந்துவிட்டதா? சிண்டிகேட் யோக் கியதை கெட்டு விட்டதா? மற்றும் எந்த விதத்தில் எந்த காரியத்தால் என்ன மாறுதலால் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று கூறுபவன் யோக்கியனாகவோ, நாணயஸ்தனாகவோ, மானமுள்ளவனாகவோ இருந்தால் எடுத்துக்காட்ட வேண்டாமா?

சர்டிஃபிகேட் பெற 

யோக்கியதை என்ன?

அரசாங்கத்தின் ஏற்பாட்டுப்படி படிப்பின் யோக்கியதை பரீட்சையில் பாஸ் செய்து சர்டிபிஃகேட் (Certificate)  பெறுவதுதானா? அல்லது பாஸ் செய்தாலும் இத்தனை மார்க் வாங்க வேண்டுமென்பதா?

ஆகவே படிப்பு திறமையானதாக இருந்த காலத்தில் படிப்புக்காக செய் திருந்த ஏற்பாடுகளில், நிபந்தனைகளில் நிர்வாகங்களில் எது எதில் குறைக்கப்பட்டு விட்டது? என்று கேட்கிறேன். அல்லது படிப்பை ஆதாரமாக, அளவாகக் கொண்டு கொடுக்கப்பட்ட உத்யோகங்களில் மார்க் குறைவு காரணமாக எந்த உத்யோகஸ்தனால் என்ன கேடு ஏற்பட்டது? என்று கேட்கிறேன்.

பார்ப்பன உத்யோகஸ்தர்களின் 

யோக்கியதை தெரியாதா?

சீமைக்குப் போய் அய்.சி.எஸ். பாஸ் செய்து திறமை பெற்று வந்த கெட்டிக்கார அய்.சி.எஸ்.களில் பார்ப்பனர்களில் தலா 3 பேர் நாணயக் குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள். மற்றும் பலர் தண்டிக்கப்படும் பதவியில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவர்கள் படிப்பில் தரம் குறைந்தவர்கள் அல்ல, பரீட்சையில் குறைந்த அளவு மார்க் வாங்கி பாஸ் செய்தவர்களுமல்ல.

மற்றும் பெரிய படிப்பு, மிக மிக கெட்டிக்காரர் என்று பெயர் கொடுக்கப்பட்டு அய்க்கோர்ட் சீப் ஜட்ஜ்(High Court Chief Judge)   பதவி கொடுக்கப்பட்ட தகுதி, திறமை பெற்ற பார்ப்பனர் ஒருவர், தனது பிறந்த தேதியை பொய் தேதி கொடுத்து அரசாங்கத்தை மோசடி செய்த பார்ப்பனர் தகுதி திறமையில் குறைந்தவரா? என்று கேட்கிறேன்.

தகுதி - திறமை தமிழர்க்கு 

மட்டும்தான் தேவையா?

அண்மையில் சென்னை அய்க்கோர்ட்டில் பப்ளிக் பிராசிக்யூட்டராக (High Court Public Prosecutor) நியமிக்கப்பட்ட திரு.V.P. ராமன் அவர்கள் அய்க்கோர்ட்டில் தொழில் நடத்தும் வக்கீல்களில், குறிப்பாக கிரிமினல் வக்கீல்களில் எத்தனையாவது வரிசை தகுதி திறமை உடையவர் என்று கேட்கிறேன்?

மற்றும் அய்க்கோர்ட்டில் முன்பு சர்க்கார் வக்கீலாக இருந்த திரு.அழகிரிசாமி அவர்களுக்கு சர்க்கார் வக்கீல் வேலை  (கவர்மெண்ட் பிளீடர்) கொடுத்தபோது 100 (நூற்று)க்கணக்கான வக்கீல்கள் தகுதி, திறமை பற்றிக் கூப்பாடு போட்டு ஒரே கூச்சலாக ஊளையிட்ட வக்கீல்கள் இந்த அய்க்கோர்ட் ஜட்ஜைப் பற்றியோ, இந்த பப்ளிக் பிராசிக்யூட்டரைப் பற்றியோ தகுதி, திறமை, நாணயம் பற்றியோ யார் யார் பேசுகிறார்கள்; கேட்டார்கள்? என்று கேட்கிறேன்.

தகுதி திறமை அறிய வரம்பு என்ன?

மற்றும் இந்த தகுதி, திறமை பேசும் யோக்கியர்கள் கல்வியில் தகுதி திறமை பேசுவது; கேட்பது உத்தி யோகத்தில் திறமையாய் இருக்கத் தகுந்த தகுதியான கல்வி இருக்க வேண்டியது அவசியம் என்று கேட்கிறார்களா? அல்லது ஒரு மனிதன் இன்ன அளவு கல்வி கற்றால்தான் கல்வி கற்றவன் என்று சொல்லவேண்டுமென்ற பொது நன்மையைக் குறிவைத்துக் கேட்கிறார்களா என்று கேட்கிறேன்.

உத்யோகம் ஒதுக்குகையில் 

தகுதி கருதப்படுகிறதா?

உத்யோகத் திறமைக்காகக் கேட்பதாக சொல்லப் படுமானால் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள் என்பதற்காகவென்று எல்லாவிதமான உத்யோகங்களுக்கும் நீதி, நிர்வாக, தொழில்துறை ஆகிய உத்யோகங்களுக்கும் கல்வியின் அந்தஸ்தைக் குறைத்தும், பாஸ் செய்தால் போதும் மார்க்கைப் பற்றிக் கவலை இல்லையென்றும், வயதைப் பற்றிக் கவலை இல்லை என்றும் திட்டமிட்டு சற்றேறக்குறைய மொத்த எண்ணிக்கையில் 100க்கு 40 வீதம் ஒதுக்கி வைத்துக் கொடுத்துக் கொண்டும் வரப்படுகிறதே (இது கூட பள்ளிக்கூடச் சேர்க்கையில்தானேயொழிய, உத்தியோகத்தில் இம்முறை கடைப்பிடிக்கப்படாத நிலையே இருக்கிறதென்பதையும் நாம் மறந்து விட முடியாது) இதற்குத் தகுதி, திறமை எங்கே போயிற்று?

தமிழர் நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டதுண்டா?

இவர்களது நிர்வாகங்களில் எதில் ஓட்டை, திறமைக் குறைவு, தகுதிக் குறைவு, நாணயக் குறைவு, ஒழுக்கக்குறைவு ஏற்பட்டு விட்டது? என்று கேட்கிறேன்.

ஆகவே, பார்ப்பனர் கூப்பாடு போடும் தகுதி - திறமை என்பது எவ்வளவு மோசடி, எவ்வளவு அயோக்கியத்தனம், எவ்வளவு இழி தன்மைகொண்ட மானம் கெட்டதனம் என்று கேட்கிறேன். கல்வியில் தகுதி திறமை என்பதில், முதலில் கல்வி நம் மக்களுக்கு எதற்கெதற்காக வேண்டும் என்பதில் சிந்திக்க வேண்டும்.

பிறகு கல்வி எதற்கு வேண்டுமோ அதற்கு இப்போதிருக்கும் கல்வியின் தகுதி திறமை போதுமா? போதாதா? என்று பார்க்க வேண்டும்.

இந்த இரண்டிலும் விஷயம் தெரிந்து கொள்ளாத, ஒரு முடிவுக்கு வராத மக்கள் கல்வியில் தகுதி - திறமை பேசுவது முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்று தான் சொல்லுவேன்.

கல்வியின் உபயோகம் யாது?

இன்றையக் கல்வி உபயோகமற்றது; அறிவுக்கு ஏற்றதல்ல, உத்யோகத்திற்குத் தான் பயன்படக்கூடியது என்பதாக சுமார் 50-60 வருஷங்களாக பல கல்வி மாநாடுகளில், மகாகனம் சீனிவாச சாஸ்திரி உட்பட பல பார்ப்பன பிரின்ஸ்பால்களும், ஹெட்மாஸ்டர்களும், பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர்கள், பெரிய மனிதர்கள் என்பவர்களும் சொல்லி வந்ததும், சொல்லிவருவதும் எனக்குத் தெரியும்.

தனிப்பட்ட நோக்கங்கள்

1921இல் காந்தியார், ஆங்கிலக் கல்வி, அடிமைகளை உற்பத்தி செய்யும் கல்வி; வெள்ளையன் தன் ஆட்சிக்கு கூலிகளைச் சேர்ப்பதற்காகக் கொடுக்கும் கல்வி; இதை பகிஷ்கரியுங்கள் என்று சொன்னதன் பின், காங்கிரஸ் கல்வியைப் பகிஷ்கரித்து தேசியப்பள்ளிக் கூடங்கள் ஏற்படச் செய்தது.

மற்றும் காந்தியார் வார்தா கல்வித் திட்டம் வகுத்தார்.

மற்றும் காங்கிரஸ் ஆட்சி ஆதாரக் கல்வித் திட்டம் வகுத்தது.

மற்றும் இராஜாஜி ஆட்சியில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களுக்கு கல்வி எதற்கு? அவனவன் படிக்க வேண்டிய கல்வி, அவனவன் ஜாதித் தொழில்தான் என்று திட்டம் வகுத்தார்.

நம்மை தற்குறிகளாகவே வைக்கின்ற சூழ்ச்சி

இந்த தகுதி - திறமை பேசும் யோக்கியர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னூற்றாண்டு ஆதிக்கத்தில், தாங்கள் மாத்திரம் 100க்கு 100ம் படித்தவர்களாகி, தமிழர்களாகிய நம்மை 100க்கு 10 பேர்களுக்கு மேல் எழுத, படிக்க, கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாகக் கூட செய்யாமல், தற்குறிகளாகவே, வைத்திருந்ததுடன் நம்மை கீழ் மக்களாக பாமர மக்களாக வைத்திருப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்த யோக்கியர்கள், நாம் 100க்கு 40 பேர் படித்தவர்களானவுடன் இன்று கல்வியில் தகுதி - திறமை குறைந்து போய் விட்டது என்றால் இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

முதலாவது அறிவுள்ள மனிதனானால், யோக்கியமான மனிதனானால் ஒரு காரியம் வேண்டுமானால் அது எதற்காக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

கல்வியின் தேவையும் தகுதி வரம்பும்

இப்போது கல்வி எதற்காகத் தேவை. மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் புத்தகம் படிப்பதற்கும், உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கு உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி பெறவே கல்வி வேண்டும். மற்றபடி தொழில் துறையில் தொழில் செய்ய, வைத்தியம், எஞ்சினியரிங், விஞ்ஞானம், கணிதம் முதலிய துறைகளுக்கு அவை சம்பந்தமான கல்வி வேண்டும்.

இவற்றிற்கு அரசாங்கம் உச்ச அளவு திட்டம் வகுத்து, படிப்பித்து, பரீட்சை செய்து முத்திரை குத்தி விடுகிறது. மற்றபடி கல்வி எதற்கு வேண்டும் - வேண்டியதற்கு தகுதி, திறமைக்கு அளவுகோல் என்ன வகுத்திருக்கிறது? - வைத்திருக்கிறது? என்று கேட்கிறேன்.

ஒரு கலெக்டர் வேலைக்கு என்ன கல்வி வேண்டும்? அதற்கு என்ன தகுதி திறமை வேண்டும்? கலெக்டர் வேலைகள், வெள்ளைக்காரன் தன் இனத்தானுக்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே அய்.சி.எஸ். பரீட்சை பாஸ் செய்ய வேண்டுமென்று சொன்னான். இப்பவும் அவன் சொன்னதை நாம் எல்லோரும் கண்டித்தோம். என்ன சொல்லிக் கண்டித்தோம் அவன் (வெள்ளையன்) அயோக்கியன், ஜாதி உணர்ச்சி கொண்டவன், தங்கள் ஜாதியாரிடமே ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிறான். சுயநலக்காரன் அவனை ஒழித்தாக வேண்டும் என்று சொன்னோம்.

அப்படிப்பட்ட பதவிகளில் சில எலும்புத் துண்டு களை நமக்கும் வீசி எறிந்தவுடன் அது பெரிதும் பார்ப் பனர்களுக்கே கிடைப்பதாயிருந்து தமிழர்களுக்கு கிடைக்க முடியாததாய் ஆனவுடன் பார்ப்பனர் (காங்கிரஸ்) அதற்கும் பணிந்து விட்டார்கள்.

பார்ப்பனரே பதவிக்கு வர சூழ்ச்சி

அவனை (அப்படிப்பட்ட வெள்ளையனை) பின்பற்றிய இந்த பார்ப்பனர் அய்.ஏ.எஸ். என்பதாக, அய்.பி.எஸ். என்பதாக கல்வியில் சில திட்டங்களை வகுத்துக் கொண்டு அதை பெரிதும் பார்ப்பனர்களுக்கே வரும்படி செய்து கொண்டு நம்மை உனக்குத் தகுதி இல்லை! திறமையில்லை என்று சொல்லி நம்மை ஒதுக்கத் தகுதி திறமை என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது அய்.ஏ.எஸ். பட்டம் பெற்ற பார்ப்பானுக்கும், அந்தப் பட்டமில்லாத பி.ஏ. படித்து ரெவின்யூ இலாகாவில் கிளர்க் ஆகி, ரெவின்யூ இன்ஸ்பெக்டராகி, ஜப்டி தாசில்தாராகி, தாசில்தாராகி, ஜுனியர் சிரஸ்தாராகி, டிப்டி கலெக்டராகி, சர்வே லேண்ட் ரிக்கார்டு, பாஸ் செய்து கலெக்டருக்கு பி.ஏ. (உதவியாளர் (PA)) ஆக இருக்கின்ற 50 ஆண்டு உலக அனுபவமும் வெறும் 22 ஆண்டு ரெவின்யூ இலாகா அனுபோகஸ்வர்களையும் விட இன்று அய்.ஏ.எஸ். படித்து வரும் பச்சகானா இளம் பசங்கள் (பச்சகானா என்றால் சிறு பசங்கள்) அதுவும் 28, 29, 30 வயதுப் பசங்கள் எந்த விதத்தில் கலெக்டர் பதவிகளுக்கு உரிய தகுதியும், திறமையும் உடையவர்கள். கல்வி அனுபவம் உடைய அவர்கள் ஆகிவிடுவார்கள்? போலீசிலும் அப்படியே கேட்கிறேன். ஹைகோர்ட், சுப்ரீம் அய்கோர்ட் ஜட்ஜுகளைப் பற்றியும் அப்படியே கேட்கிறேன்.

25 ஆண்டு சிவில் அனுபவம் பெற்ற ஜில்லா ஜட்ஜ் ஜில்லா ஜட்ஜாகவே ரிட்டையராகி விடுகிறான், பித்தலாட்டத்திலும், புரட்டிலும் பெயர் பெற்ற, மனசாட்சியே இல்லாதவன் தொழில்வாதத்தில் நீதி, நேர்மை, யோக்கியம் அற்ற ஒரு வக்கீல், திடீரென்று ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட் ஜட்ஜாகி விடுகிறான் இதில் நீதிக்கு தகுதி, திறமை அனுபவம் என்ன இருக்கிறது?

வக்கீல் எந்த புத்தியைக் கொண்டு வாதாடுகிறானோ அந்த புத்தியைக் கொண்டு தானே ஜட்ஜ்மெண்ட் எழுதுவான்?  முன்சீஃப் ஆகி இருந்து ஜட்ஜாகிறவன் நீதியில் ஒரு பதிவிரதை போல வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்! வக்கீலாயிருந்து ஜட்ஜ் பதவிக்கு வருகிறவன் குச்சிக்காரிபோல் வாழ்க்கை நடத்தி பதவிக்கு வருகிறான்!

நம்மைச் சூத்திரர்களாகவே நீடிக்க வைக்கும் ஆயுதமே தகுதி - திறமை

ஆகவே இந்த இன்றைய தகுதி - திறமை பார்ப்பான் பதவிக்கு வரவேண்டும்; மற்றவர்கள் அடிமைகளாகவே, சூத்திரர்களாகவே இருக்க வேண்டுமென்பதற்காகவே அயோக்கியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இராமபாணம் போன்றதல்லாமல் வேறு எதற்காக இந்த தகுதி - திறமை கண்டுபிடிக்கப்பட்டது? என்று கேட்கிறேன்.

இப்போது திரு. கக்கன் மந்திரியாய் இருக்கிறார், திரு.மன்றாடியார் மந்திரியாய் இருக்கிறார், திரு.காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கிறார், இவர்கள் நிர்வாகத்தில் எதில், என்ன, ஓட்டை? என்று சொல்லுங்களேன் பார்ப்போம்!

100க்கு நூறு பேரும் எழுதப் படிக்கச் செய்வதே நம் இலக்கு

நமக்கு - எனக்கு, நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி, திறமை, வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல. எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நம் மக்கள் பட்டப் படிப்பில் பார்ப்பனர், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் பரீட்சை பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும். தகுதி - திறமைக் குறைவு என்று பேசுவதாலும், கண்டுபிடிப்பதாலும் பொதுவான உத்யோகங்களுக்கு அதனால் எந்த விதமான குறைவோ, குற்றமோ ஏற்பட்டு விடாது. ஏற்பட்டு விடுவதுமில்லை, ஒழுக்கத்துக்கும் நாணயத்திற்கும் தகுதி - திறமை சம்பந்தமில்லை.

உதாரணமாக ஒரு அய்.ஏ.எஸ். படிக்காத திரு.காளிதாஸ் நாயுடுவைவிட ஒரு அய்.ஏ.எஸ். படித்த திரு.வேதநாராயணன் கலெக்டர் வேலையில் எந்த விதத்தில் அதிகம் தகுதி, திறமை, ஒழுக்கம், நாணயம், அனுபவம் உடையவராவார்?

இன்ன இன்ன உத்தியோகத்திற்கு இன்னின்ன பட்டம் பாஸ் செய்த தகுதி வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, மேலும் தகுதி - திறமை என எந்த ஏற்பாட்டின்படி குறை சொல்லப்படுகிறது?

தகுதிக்குக் குறிப்பிட்ட அளவு பாஸ் சர்ட்டிஃபிகேட்டும் திறமைக்கு, கை, கால், கண், காது, மூளை சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதைத் தவிர, வேறு என்ன வேண்டும்? இதைத் தவிர வேறு என்ன இல்லாவிட்டால் குறிப்பிட்ட எந்த உத்தியோகம் பார்க்க முடியாது? என்றுதான் பார்க்க வேண்டும்.

இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் நான் சொல்லவில்லை. படியேறி விட்டோம், உச்சத்திலிருக்கிறோம் என்று கருதிக்கொண்டு தகுதி - திறமை பேசும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் தான் சொல்லுகிறேன்.

- தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், 1966, பக்கம் 91 - 95


செவ்வாய், 2 மே, 2023

தொழிலாளர் துயரம் தீர....

  

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழி லாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திர சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத் துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல் லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு சொத்தோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர் களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாராயிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் - நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் - இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள். 

ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர் களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகத்தர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையேயாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர்களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண் டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர்களைக் குறைத்து தான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப்பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

“சுயராஜ்யத்திற்கு” என்றும் “சுதேசி”க்கு என்றும் “பொது பாஷை”க்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ளக் காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியு மென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.08.1932

தேவை சமூக சீர்திருத்தம் - தந்தை பெரியார்

  

3

இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப்படுகின்றார்கள் இன்னார் கஷ்டப் படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற் கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார நெருக்கடியால் இன்னது செய்வ தென்று தோன்றாமல் திக்குமுக்காடுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண் ணூற்றொன்பது பேர் பரம ஏழைகள் என்பது தெரிந்த விஷயம். இத்தகைய ஏழை மக்கள் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும் படுந்துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று யாராலும் குறித்துரைக்க முடியாது. இந்த நாட்டில் பிழைப்பில்லாமல் பெண்டு பிள் ளைகள், உற்றார் உறவினர், எல்லோரையும் விட்டு விட்டு கடல் கடந்து அந்நிய நாடு சென்று கூலி வேலை செய்யும் மக்களில் இந்தியரே அதிகமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கூலிகளுக்குக்கூட அந்நிய நாடுகளிலும் பிழைப்பு இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் பெண்டு பிள்ளைகளுடன் வறுமை யின் கொடுமை யினால் பல பிணிகளுக்கும் ஆளாகி இரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். நாட்டின் தலைவர்கள் என்பவர்களும் பணக் காரர்களும், படிப்பாளிகளும் இத்தகைய ஏழை மக்களின் துயரைப் போக்க ஒரு வழியும் செய்யக் கவலை யெடுத்துக் கொள்ளக் காணோம்.

வெள்ளைக்காரர்களின் அரசாட்சியையொழித்து இந்தியர்களுடைய சுயராஜ்யத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு “காங்கிரஸ்” சட்டமறுப்பு இயக் கத்தை வருஷக் கணக்காக நடத்திக் கொண்டு வருகிறது. சுயராஜ்ய ஆவேசங் கொண்ட வாலிபர்களும், நடுத்தர வய துள்ளவர்களும், காங்கிரசின் பேராலும், சட்ட மறுப்பின் பேராலும் ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். சட்ட மறுப்பின் பெயரால் இவர்கள் செய்யும் காரியங்கள் இன்னவையென்பது வாசகர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. இந்தச் சட்ட மறுப்பால் அரசாங்கத்திற்கும் கஷ்டமும், நஷ்டமும் உண்டாவதைப் பற்றி, நமக்குக் கவலையில்லை. ஆனால், நமது பொது ஜனங்களுக்கும் பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சட்ட மறுப்பு இயக்கம் உண்டாக்கிக் கொண்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சட்ட மறுப்பு இயக்கத்தை அடக்கும் பொருட்டு அரசாங்கத்தார் எடுத்துக் கொண் டிருக்கும் முயற்சியினாலும் பொது ஜனங் களுக்குக் கஷ்டம் உண்டாகாமற் போகவில்லை. 

சட்ட மறுப்புக் கைதிகளாக ஆயிரக் கணக்கான மக்களைச் சிறையிலடைத்துக் கொண்டு அவர்களுக்குச் சோறு போட்டு வருகிறார்கள். இன்னும் சட்ட மறுப்பைச் சமாளிக்கும் விசேஷ போலீசாரையும் மற்றும் பல உத்தியோகஸ்தர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே இவை போன்ற காரியங்களுக்குச் செலவாகும் பணமெல்லாம் பொது மக்கள் தலையிலேயே விடிகின்றது. இதன்மூலம் ஏழைகள் படும் துயரை அள விட்டுக் கூற முடியுமா? இது நிற்க,

படித்த கூட்டத்தினர்க்கு ஏழைமக்களிடம் எள்ளளவும் அனுதாபமிருப்பதில்லை. அவர்கள் எப்பொழு தும் பட்டம் பதவி முதலியவைகளைப் பெற்று அச்செல்வாக்கைக் கொண்டு ஏழைமக்களின் இரத்தத்தை உறிஞ்சி, தாங்கள் மாத்திரம் சவுக்கியமாக வாழ்வதிலேயே குறிப்பாய் இருப்பவர்கள். இவர்களைப் போலவேதான் பணக்காரர்களும் ஏழை மக்கள் பால் சிறிதும் இரக்கமில்லாமல் தமது நன் மைக்கான காரியங்களிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றவர்களாயிருக்கிறார்கள். இந்தப் படித்தவர்களுடைய தயவும் பணக் காரர்களுடைய தயவும் இன்றேல் அரசாங்கமும் நாட்டில் தங்கள் விருப்பப்படி ஆண்டு கொண்டிருக்க முடியாது. ஆகையால் இவ்விரு கூட்டத்தாரையும் திருப்தி செய்விக்க வேண்டிய நிர்ப்பந்தம் எப்பொழுதுமே அரசாங்கத்திற்கு உண்டு. ஆகையால் அரசாங்கத்தார், படித்த வர்கள், பணக்காரர்கள் ஆகியவர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் மேலும் மேலும் வளர்ச்சியடைவதற்குத் தகுந்த முறையில் ‘சுயராஜ்யம்’ என்னும் பெயரினால் அரசியல் சீர்திருத்தம் வழங்கி வருகின்றனர். இந்தச் சீர் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் லாபங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் விஷயமாக படித்தவர்களுக்குள்ளும், பணக்காரர்களுக் குள்ளும் உண்டாகியிருக்கும் கட்சிகள் பல. இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறும் பொருட்டு செய்யும் ஆர்ப் பாட்டங்கள் பல. பிராமணர் கட்சி, அல்லாதார் கட்சி, முஸ்லிம் கட்சி, சீக்கியர் கட்சி, தாழ்த்தப் பட்டோர் கட்சி, கிறிஸ்தவர் கட்சி என வகுப்பின் பேராலும் மதத்தின் பேராலும் உண்டாகியிருக் கும் கட்சிகள் பல. இக்கட்சிகளில் பிராமணரும் காங்கிரஸ் பிராமணர், மிதவாத பிராமணர், சுதேசி பிராமணர், சனாதன தருமப் பிராமணர் எனப் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பிராமணரல்லாதார்க்குள்ளும் இதுபோலவே, தேசிய பார்ப்பனரல்லாதார், சுயேச்சை பார்ப்பனரல்லாதார் எனப் பல வகைக் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லீம்களுக்குள்ளேயும், மவுலானா ஷௌகத் அலி கட்சி, சர். முகமது இக்பால் கட்சி, மவுலானா ஹசரத் மோகினி கட்சி, தேசிய முஸ்லிம் கட்சி எனப் பலபிரிவுகளிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்குள் திருவாளர்கள் அம்பேத்கர், சீனிவாசன் கட்சி, திருவாளர்கள் மூஞ்சே-ராஜா ஒப்பந்தக் கட்சி எனப் பிரிவுகளிருக்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு வகுப்புக் கட்சிக்குள்ளும் உட்பிரிவு கட்சிகள் பல இருந்து வருகின்றன. 

இப்பிரிவுகளும் கட்சிகளும் தோன்றியிருப்பதன் நோக்கம், சீர்திருத்தத்தில் பட்டம் பதவிபெறுவதையன்றி வேறில்லையென்பதில் அய்யமில்லை. இந்தக் கட்சிகளில் ஒன்றேனும் அரசியல் திட்டத்தில் மதப் பாதுகாப்பும், பணக்கார நிலச்சுவான்தார் பாதுகாப்பும் இருக்கக் கூடாது என்பதுப் பற்றி போராடாத ஒரு காரணத்தைக் கொண்டே இவையெல்லாம், படித்தவர்களின் நன்மைக்காகவும், பணக்காரர் களின் ஆதிக்கத்திற் காகவும் சிருஷ்டிக்கப்பட்ட கட்சிகளேயொழிய ஏழைமக்களின் நன்மைக் காகச் சிருஷ்டிக்கப்பட்டவைகள் அல்லவென் பதை உணரலாம்.

இன்னும் அரசியல் காரணமாகவும், மதம் காரணமாகவும் தேசத்தில் ஒரு வகுப்போடு ஒரு வகுப்பும், ஒரு மதத்தோடு ஒரு மதமும் சதா கலகம் விளைத்துக் கொண்டிருப்பதைத் தடுப் பதற்கான முயற்சிகளை எந்த கட்சியினரும் செய்ய முன் வரவில்லை. இவ்விஷயத்தில் யாரும் கவலை கொண்டிருக்கிறார்கள் என்று கூடச் சொல்ல முடியவில்லை. உதாரணமாக, இப்பொழுது பம்பாய் நகரத்தில் நடைபெறும் இந்து முஸ்லீம் கலக சம்பந்தமான செய்திகள் நமது மனத்தைக் கலக்குகின்றன. அங்கு இந்துக்களிலும், முஸ்லீம்களிலும் நிரபராதிகள் படும் துன்பத்தைக் கேட்கும் எவரும் இரத்தக் கண்ணீர் வடியாமலிரார். கடைகள் கொள்ளை போகின்றன. தீக்கு இரையாக்கப் படுகின்றன. பலர் கொல்லப் படுகிறார்கள். எண்ணற்றவர்கள் காயமடைகின்றார்கள். அபலைகளான பெண் மக்களும் கூட அவமானமும் அடியும் படகிறார்களென்றால் இதை விட இன்னும் வேறு என்ன வேண்டும்? மசூதிகளும் கோயில்களும் தாக்கப்படுகின்றன. இவைகள் தாக்கப்படுவதில் நமக்கு சிறிதும் கவலையில்லை. இதன்மூலம் இன்னும் கலகம் வலுத்து வருகிறதென்பதை பற்றியே கவலைப்படுகின் றோம். உண்மையில் இக்கலகம் உண்டாவதற்கு முதலில் அரசியல் காரணமாக இருந்தாலும் வரவர இக்கலகம் மதச் சண்டையாகவே முற்றிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே உண்மையில் இது போன்ற வகுப்புக் கலகங்களும், மதச் சண்டைகளும் ஒழிய வேண்டுமானால் மதப்பாதுகாப் பும், ஜாதி நாகரிகப் பாதுகாப்பும் நிலச்சுவான்தாரர் பணக்காரர் களுக்குப் பாதுகாப்பும் உள்ள அரசியல் சீர்திருத்தத்தால் ஒழி யுமா? என்றுதான் கேட்கிறோம். ஏழை மக்களின் வறுமையைப் போக்குவதற்கு முயலாமலும் கவலை கொள்ளாமலும் ஜாதி மதச் சண்டைகளை ஒழித்துச் சமாதானத்தை உண்டாக்க வழி தேடாமலும் இருந்து கொண்டு, வீணே “அய்க்கிய ஆட்சி” “மாகாண  சுயாட்சி” “குடியேற்ற நாட்டு ஆட்சி” “சுயராஜ்யம்” என்று பட்டம் பதவிகளுக்காக வேண்டிக் கூச்சலிடும் அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு என்ன நன்மை உண்டாகுமென்று கேட்கிறோம்.

ஆகையால் பொது ஜனங்கள் எந்த அரசியல் கட்சிக்காரர்களை நம்பினாலும் நன்மையடையப் போவதில்லை என்பது நிச்சயம். ஜாதிப் பிரிவுகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஏழை பணக்காரத் தன்மை களுக்கும் காரணமாக இருக்கும் மதத்திற்கும் ஆதரவளிக்கும் எக்கட்சியினாலும் நாட்டுக்குக் கடுகளவும் நன்மை செய்ய முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றோம். மதமும் பாது காப்பும் நிலைத்து நிற்கும் வரையிலும் வகுப்புச் சண்டைகளும், மதச் சண்டைகளும் ஒழியப் போவது இல்லை என்பது நிச்சயம். ஆகையால் முதலில் மதத்தையும் அதன் மூலம் உண்டான மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டியதே உண்மையான தேசாபிமானிகளின் கடமை யாகும். இதை விட்டுவிட்டு வீணாக ‘சுயராஜ்யம்’ ‘சுதந்திரம்’ ‘விடுதலை’, ‘சமத்துவம்’ என்று கூச்சலிடுவதெல்லாம் பொதுஜனங்களை ஏமாற்றும் பொருட்டே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கின்றோம்.

குடிஅரசு - தலையங்கம் - 10.07.1932