ஞாயிறு, 20 ஜூலை, 2025

சமதர்மவாதிகள் நாஸ்திகர்களே -தந்தை பெரியார்


 தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என் றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங் கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக் கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின தாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த் தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொது வுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

உயர்வு தாழ்வு இல்லை

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதா பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ் வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத் துக்கு முதல் படியாகும்.

அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக் கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளா தாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

பேதம் ஒழிய வேண்டும்

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக் காமல் அடக்கி வருவதுடன் பொருளா தார பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன் னால்தான் உண்மையாகக் கஷ்டப் படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண் டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக் கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள் கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்தி கர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

புனிதமானவையா?

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டிய தில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப் பட்டதாக – கடவுளால் கற்பிக்கப்பட்டதாக – கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த மத சாஸ்திரங்கள் வேத மாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர் களுக்கு மிகப் புனிதானதும் மேலானது மான புஸ்தகம் என்று கொள்ளப்படு கின்றது.

மகமதியர்கள் கொரானை மதிப்பதை விட கிறிஸ்த வர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங் களும் சொல்லப்பட்டிருக் கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

எப்படி ஒழிக்க முடியும்

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந் தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்தி கனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங் காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது. இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப் படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமா னால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.

கடவுள் கொடுத்ததா?

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப் படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்து கின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

உழைப்புச் சுரண்டல்

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ் வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட் தென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர் களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கை களையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

அக்கிரமம்

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடு வதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?

அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங் கோன்மைக் காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப் பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.

சொல்ல முடியுமா?

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச் சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபி ஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்க மாய் யோக்கியமாய் நடக்கிறார்களா?

கடவுளுக்காகவே சன்யாசியாய், குரு வாய், சங்கராச் சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக் கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச்  சொல் லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக் கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக் கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல் லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ் திகர்கள் என்று சொல்லப்பட வேண்டி யவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக்காமல் அடக்கி வருவதுடன் பொருளா தார பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும்.

1935 செப்டம்பர் தேவக்கோட்டையில் முதல் வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை, 2.12.1951)

- விடுதலை, 25.05.25

விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வருவதே! -தந்தை பெரியார்

 


* தந்தை பெரியார்

சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடுகளைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.

இடையூறுகளைத் தகர்த்தெறிந்து

ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக்கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் – அடைகின்றார்கள் அடைய முயற்சிக்கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும் மதத்தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத்தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள். சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவாதவர்களை காவல்  காக்கப் போட்டார்கள். அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்கு வரவுக்கும் மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி, பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாதவர்களுக்கு படிப்பு  முதலாகி யவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவுபடுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு  சவுகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள்? யார்  கேட்பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.  இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்டவர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?  முதலாவது உங்களைக் கேட்கிறேன். நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள் கின்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல் கின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண்டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெனில், இன்னும்  அநேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.

யோசியுங்கள்

சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருது கின்றீர்களா? இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?  இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்கு வதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது. ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.  அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின்றார்கள்.

பொறுப்புடன்

முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா. இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப்போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக் குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல் கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல் களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்தமானங்களும்   உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களேயானால் வந்து விட்டது. அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள். அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன்.

மிகவும் அநீதி

நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன். எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.  ஆண் பெண் சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.

பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள். அதுவும் நமது நாட்டில் மிகவும் மோசமாய் நடத்துகிறார்கள். அந்த ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். 

இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது.  ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாய கர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.  உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கலியாணம் செய்து கொள்ளுவதே அடிமைப் பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக் கியனாகவில்லை.  ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்படவில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல் கின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டமில் லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வர வேண்டும், பயப்படக்கூடாது.

பெண் விடுதலை

பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்டபடி  கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள். இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட் டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத் தனைக்கத்தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்த வர்களாவீர்கள். எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல்வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற்காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.

வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.

(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கு அடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 08.02.1931

- விடுதலை நாளேடு,20.7.25

மதத்தின் பேரால் பாமர மக்களை ஏமாற்றாதீர்! கோயில் சொத்துகளை கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடுங்கள்!

 


தந்தை பெரியார்

நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட் டத்தார் அனைவரும், நமது இயக்கத்தை மறைமுகமாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத்தின் ஒரு உரோமங்கூட அசைக்கப்படவில்லை என்பதை நாம் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ் வியக்கம் ஒவ்வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிறதென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும்.

மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன என்னும் விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இவ்வியக்கத்தின் பெருமையும் இதை எதிர்ப்பவர்களின் சிறுமையும் விளங்காமற் போகாது. ஆகையால் அவ்விஷயமாகக் கொஞ்சம் கூற விரும்பு கின்றோம்.

அரசியல் புரட்டுகள்

இன்று நமது இயக்கத்தைப் பற்றி, மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப் படையாகவும் எதிர்த்துப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையாக இருப்பவர்கள் கீழ்க்காணும் கூட்டத்தினரே யாவார்கள் அவர்கள். அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள், புத்தக வியாபாரிகள், புராண பத்திரிகைக்காரர்கள், கோயில் தருமகர்த்தாக்கள், மடத்தலைவர்கள் முதலியவர்கள்,

இவர்களில் முதலில் அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுவோம். நமது இயக்கந் தோன்றிய நாள் முதல், நாம் அரசியல்வாதிகளின் புரட்டுக்களையும், சூழ்ச்சி களையும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம் ‘சுயராஜ்யம்’ என்பதும், ‘சத்தியாக்கிரகம்’ என்பதும், ஆகிய வார்த்தை களெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஒட்டுப் பறிப்பதற்காகக் கூறும் தந்திர வார்த்தைகள் என்று கூறி வருகிறோம். மக்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் ஒழிவதற்கு முன், ஜாதியினாலும், மதத்தினாலும் மனிதனை மனிதன் அடிமையாகவும், மிருகங்கள் போலவும் நடத்துகின்ற நிலை மாறுவதற்குமுன் இந்நிலைமையை கொஞ்சங் கூட மாற்றுவதற்கு முயற்சியும் செய்யாமல் ‘சுயராஜ்யத்’திற்கும் பாடுபடுகிறோம் என்று கூறுவது சுத்த அயோக் கியத்தனத்தைத்தவிர வேறல்ல என்றே கூறி வருகிறோம். ஆகையால், அரசியலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டி ருக்கும் கூட்டத்தார் நமது இயக்கத்தை எதிர்ப்பதும் இதைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணுவதும் இயல்பேயாகும். இவ்வாறு, செய்வதன் நோக்கம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.

இரண்டாவது, பண்டிதக் கூட்டத்தார், ஏன் நமது இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம். நாம் குறிப்பிடும் பண்டிதர்கள் என்ப வர்கள் புராணங்களையும் இராமாயண பாரதக் கதை களையும், வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளை படித்துவிட்டு மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப் பட்டவைகள் தான் உண்மை. அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு. அவை களை மீறி நடந்தாலோ அல்லது அவைகளை நம்பா விட் டாலோ, ‘பாவம்’ ‘நரகம்’ முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களேயாவார்கள். இப்படிப் பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் நாம் ‘பண்டிதர்கள்’ என்று குறிப்பிடுகின்றோம். இப்பண்டிதர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப் பாகும். அவர்கள் புராணப் பிரசங்கம் செய்வதன் மூலமும், வருணாசிரம தருமப் பிரசங்கம் செய்வதன் மூலமும் ஜனங்களிடம் காசு பறித்து வந்தார்கள். சுயமரியாதை இயக்கப் பிரசாரத்தால் பொய்ப் புராணங்களுக்கும், அர்த்தமற்ற வருணாசிரம தர்மங்களுக்கும் ஆட்டங் கண்டு விட்டபடியால், இவைகளை வயிற்றுப் பிழைப்பாக வைத் துக் கொண்டிருந்த ‘பண்டிதர்கள்’ பிழைப்புக்கும், கவுரவத் திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இக்கூட்டத் தார் இவ்வியக்கத்திற்கு விரோதமாக இருப்பது ஆச் சரியமல்ல.

கோயில்களின் சொத்துகளை யெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைக் கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச் செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வாறாகி விட்டால், பரம்பரையாகக் கோயில்களுக்குத் தருமகர்த்தாக்களாக இருந்து கொண்டு அவைகளின் செல்வங்களை அனுபவித்துவரும் கூட்டத்தாரின்  சுக வாழ்விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.

மதத்தின் பெயரால்

இனி மூன்றாவதாக, புரோகிதர்களை எடுத்துக் கொள் வோம். புரோகிதர்கள் என்பவர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி, பல சடங்குகளைப் பாமர மக்களின் தலையிற் சுமத்தி, அவைகளின் மூலம் பொருள் பறித்து ஜீவனம் பண்ணும் சோம்பேறிக் கூட்டத்தாரேயாவார்கள், இக்கூட் டத்தாரின் கையிலேயே உலக மக்கள் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாகவும் சிக்கித் துன்புற்று அடிமையாகக் கிடந்து வந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய சீர் திருத்தவாதிகள் எல்லோரும் முதலில் புரோகிதர்களின் ஏமாற்றல்களை ஒழிக்கவே முயன்றிருக்கின்றனர். இம் முயற்சி காரணமாகப் பல, தேசங்களில் புரோகிதர்களின் ஆதிக்கங்கள் அழிந்து விட்டன. ஆனால், நமது நாட்டில் மாத்திரம் இன்னும் புரோகித ஆதிக்கம். அழியவேயில்லை, நமது நாட்டில் இந்த புரோகித ஆதிக்கம் இந்து மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும், முசுலீம் மார்க்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் நமது இயக்கம் ஆரம்ப முதலே புரோகிதத்தையும், புரோகிதர்களையும் பலமாகக் கண்டித்து அவர்களின் சூழ்ச்சிகளை வெளிப் படுத்தி வருகிறது. இதன் பயனாக, இந்துக்களில் அநேகர் இப்பொழுது புரோகிதத்தை ஒழித்தும் புரோகிதர்களைப் பகிஷ்கரித்தும் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முசுலீம்களிலும் முல்லாக்களின் ஆதிக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ‘பஞ்சா’ வணக்கம், சமாதி வணக்கம் ‘கூடு’ எடுத்தல் முதலிய மார்க் கத்திற்கு விரோதமான காரியங்களையும் ஒழிக்க வேண்டும் என்று கிளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. முற்றும் புரோகிதர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்ற ‘ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத’த்திலும் பல இடங்களில் புரோகிதர்களைப் பகிஷ்கரிக்கும் வேலை ஆரம்பித்து விட்டது. இதனால், ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள், அவர்கள் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும், சுய மரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். இவ்வாறு புரோகிதர்களின் சோம்பேறிப் பிழைப்புக்கு ஆபத்து ஏற்பட்ட காரணத் தினாலேயே அவர்கள் நமது இயக்கத்தை எதிர்த்துப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் அய்யமில்லை.

ஏன் எதிர்க்கிறார்கள்?

இனி நான்காவதாக, புத்தக வியாபாரிகளில் சிலர் நம்மை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம்; இவர்கள் புராணக்கதைகளாகிய, பெரியபுராணம், திருவிளையாடல் முதலியவைகளையும், தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலியபுத்தகங் களையும் அச்சிட்டு பாடப் புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் ஒரு ரூபாய் புத்தகத்தை அய்ந்து ரூபாய் விலை வைத்து விற்றும் பணம் சம்பாதிக்கின்றவர்கள். இந்தப் புராண புத்தக வியாபாரிகள் சைவத்தை வளர்ப்பதாகவும் வைணவத்தை வளர்ப்ப தாகவும், தமிழை வளர்ப்பதாகவும் கூறிப் பணம் சம்பாதித் திருப்பவர்கள். நமது இயக்கம் தோன்றியபின் இத்தகைய புத்தகங்களின் மதிப்பும் விற்பனையும் குறைந்து விட்டதால், இவர்கள் வியாபாரமும் குறைந்து விட்டது. ஆகையால் இந்தப் புராணப் புத்தக விளம்பர வியாபாரக் கூட்டத்தார் நம்மைப் பற்றி தப்புப் பிரசாரம் பண்ணுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

அடுத்தபடி அய்ந்தாவதாக, நம்மை எதிர்க்கும் பத்திரிகைக்காரர்கள் யார்? என்பதைப் பார்ப்போம். ‘சமயபோதனை’ ‘சன்மார்க்க போதனை’ நல்லொழுக்க போதனை என்னும் பெயர்களால் சைவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் வைணவமதப் பிரசாரம் பண்ணும் பத்திரிகாசிரியர்களும் கிறிஸ்தவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் இன்னும் தேசியப் பத்திரிகை என்று பெயர் வைத்துக் கொண்டு மருந்து வியாபாரிகளும் புராணப் புத்தக வியாபாரிகளும் செய்யும் ‘கேட்லாக்’ பத்திரிகைக்காரர்ளும் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்பு போகிறதே என்பதைத் தவிர, வேறு என்னவா யிருக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.

இனி, ஆறாவதாக, கோயில் தருமகர்த்தாக்கள் ஏன் நம்மை எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் உண்மையும் விளங்காமல் போகாது. நமது இயக்கப் பிரசாரம் காரணமாக வரவர கோயில்களுக்குப் போகும் ஜனங்களும் குறைந்து வருகிறார்கள். கோயில் உண்டிகளில் விழும் பணமும் குறைந்து வருகிறது. அன்றியும் நாம் கோயில்களின் சொத்துகளையெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைக் கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச் செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வாறாகி விட்டால், பரம்பரை யாகக் கோயில்களுக்குத் தரும கர்த்தாக்களாக இருந்து கொண்டு அவைகளின் செல்வங்களை அனுபவித்து வரும் கூட்டத்தாரின் சுக வாழ்விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.

இனி, அடுத்தபடி ஏழாவதாக, மடாதிபதிகள் நமது இயக்கத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்தக்கூட்டத்தார், ஏராளமான சொத்துக் களை வைத்துக் கொண்டுஅவைகளை நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் தங்கள் தங்கள் சுக வாழ்வுக்கே செலவு செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய சொத்துக்களோ தேச மக்களுடைய சொத்துக்கள் என்பதில் அய்ய மில்லை. அன்றியும் இவர்கள் “மடாதிபதிகள்” என்று பெயர் வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் மதமேயாகும். ஆகை யினால் மதத்தையும் அழிக்க வேண்டும் மதத்தின் பேரால் வீணாகச் செலவழித்து வரும் மடாதிபதிகள் சொத்துக்கள் போன்றவைகளையெல் லாம் தேச நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறோம், இதனால் இந்த மடங்களின் கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றார்கள்.

பாமர மக்களின் அறியாமை

இனி எட்டாவதாக, நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ, சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தைச் சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள், இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றவர்கள். ஆனால், நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வயிற்றுப் பிழைப்யே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள். நமது இயக்கம் பரவுவதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும் குறைய ஆரம்பித்து வருகிறது ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குச் “சீன்”களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப் பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண் டியிருக்கிறது. அப்படியும் சரியானப்படி பணம் வசூல் ஆவதில்லை. ஆகையால், இவர்களும் இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில், மதத்தினால் பாமர மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகையால் நாடகக்காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை. இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாசிரம தருமத்திற்கும் புராணங்களுக்கும் பரிந்து  பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கறை உண்டாகக் காரணமென்ன? என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டிருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாசிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்றவர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிக் கின்றவர்கள். ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை.

ஆகையால், இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தை களுக்கு ஏமாறாமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும், புராணப்பிரசங்கிகளின் பேச்சையும், புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம் சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும் அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமை யாகும். மதத்திற்கு ‘வக்காலத்து வாங்கிப்’ பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப் போவதில்லையென்றும், இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிட போவ தில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத் தாரையும் மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுத் தொழிலை மேற்கொள்ளாமல் வேறு கவுரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.09.1932

- விடுதலை நாளேடு,13.7.25

பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்


இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமேயாகும். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.

பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந்தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனை யற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.

பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளைஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்படவும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாததாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத்தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.

வயிற்றுப் பிழைப்பு

சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப்பட்டவர்களை தேர்தல் சம யத்தில் பார்க்கலாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர்களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப் பட்ட காரியத்துக்குப் பயன்படுத்த மாட்டான்.

பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்து களை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி – உண்மையைக் கூறி – குறைப்பாடுகளைக் கூறி – உண்மை தேவைகளைக் கூறி மக்களைத் தன்வயப்படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.

சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக் களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங் களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள் வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.

விட்டு விலகாமல்

எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச் சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட் டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதியாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.

அடுக்கு அடுக்காகப் பேச வேண்டு மென்றும், அலங்காரமாய்ப் பேச வேண்டு மென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்கு கின்றனர்.

இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.

சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப்பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டி னால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து  உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

மக்கள் ஆதரவு

பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சா ளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப் பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.

தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.

தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.

ஆபாசப் பேச்சு

ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப்பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.

சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்ப டுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத்தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள்கைக்கோ அல்லது அக்கொள் கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அதுவரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விடமாட்டார்கள்.

அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க்கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம்.

மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவுடனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத்தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச் சாளியாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை – சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங்கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாள னும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். எதிர்ப்பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட அய்யோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அதுவாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டிலிருந்து கொண்டே எழுதிக் கொண்டிருப்ப வன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடிய வன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட்டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.

பெயர் கெட்டு விடும்

ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வருபவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளை யாட்டிற்காகவும், தனக்குக் கெட்டிக்காரப் பட்டம் வர வேண்டும் என்பதற்காக வும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.

அப்படிப் பயன்படுத்தினால் அவரு டைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத் தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதை யும் வெகுவாகக் குறைந்துவிடும்.

பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்கா ரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச்சாளிக்கு இருக்கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடை யாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.

பொறுப்புடன்

அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண்டும் என்பதற் காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக்காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தரவேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.

சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறிமுகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக் கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவு மாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்காவிட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.

ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழ குங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார்.

– ‘விடுதலை’, 6.11.1949

 விடுதலை’, 06.07..2025

வியாழன், 17 ஜூலை, 2025

தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வழங்கப்பட்ட பல்வேறு பொருள்கள்

தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் முன்னிலையில் எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தங்கம் இதர பொருள்கள் வழங்கப்பட்டன

ஆசிரியருக்கு திருச்செங்கோட்டில் எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. இதில் 103 வயது நிறைந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் ஆத்தூர் தங்கவேலு, பொத்தனூர் க.சண்முகம் போன்றோர் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். ஆசிரியர் அவர்களுக்கு இவ்வாறு எடைக்கு எடை நாணயம், வெள்ளி, தானியம், தங்கம் உள்ளிட்ட இதர பொருள்களை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், பெரியார் உலகத்திற்கும் வழங்கிவிடுவார்.

தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இன்றும், என்றும் ஆசிரியர் பயணிக்கிறார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை வெள்ளி

கட்டுரை, ஞாயிறு மலர்

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம்

துலாபாரம் கண்ட தொண்டு பழம்
தந்தை பெரியார்!!

வணக்கம் நண்பர்களே!

பல்வேறு காலகட்டங்களில் தந்தை பெரியார் அவர்களுக்கு அவரது தொண்டர்கள் அன்பால் பாசத்தால் பகுத்தறிவினால் அவருக்கு வழங்கிய அன்பு பரிசுகள்….

3.11.57 தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி

24.9.63 அய்யாவின் 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடியில் எடைக்கு எடை நவதானியங்கள்.

5.10.63 தஞ்சை சில்லறை வெற்றிலை வியாபாரிகளால் 35 கவுளி வெற்றிலை, ஆறு இலைக்கட்டு வழங்கப்பட்டது.

24.09.63 அன்று புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய் துவரை, கொத்துக் கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயிறு கோதுமை, அரிசி, ரூபாய் 21 கொண்ட பண முடிப்பு, கழக கொடி போட்ட 3/4 பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, அரிசி, உளுந்து, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச் சோளம், எருமை மாடு,  1000 செங்கல்,  விறகு 5 எடை (லோடு).

10.6.64 பெருவளப்பூரில் எடைக்கு எடை மிளகாய் .

11.9.64 எடப்பாடியில் எடைக்கு எடை எண்ணெய்.

3.10.64. மஞ்சள் மாநகராம் நமது ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள்

17.10.64 திருச்செங்கோட்டில் எடைக்கு எடை  துவரம்பருப்பு .

21.10.64 திருவள்ளூர் எடைக்கு எடை காய்கறிகள் அன்பளிப்பு

25.10.64. கரூரில் பெரியாரின்  எடைக்கு ஒன்றரை பங்கு பெட்சீட்

15.11.64 பெங்களூரில் எடைக்கு எடை திராட்சைப்பழம்

16.11.04 பெங்களூரில் எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள்

1.12.64 திருவாரூரில் எடைக்கு எடை அரிசி

10.12.64 பெரியாரின் எடைக்கு நிகராக பால் வழங்கப்பட்டது

13.12.64 திருப்பத்தூர் எடைக்கு எடை இரண்டு காசு நாணயங்கள்

14.12.64 திருக்கழுக்குன்றம் எடைக்கு எடை சர்க்கரை அன்பளிப்பு

10.1.65 குளித்தலையில் எடைக்கு எடை பெட்ரோல் வழங்கப்பட்டது

16.1.65 சிதம்பரத்தில் எடைக்கு எடை காப்பிக் கொட்டை வழங்குதல்

18.1.65 பண்ருட்டியில் எடைக்கு எடை பிஸ்கட் வழங்கப்பட்டது

19.1.65 அரசாங்க நல்லூரில் எடைக்கு எடை மணிலா (பாமாயில்) எண்ணெய் வழங்கப்பட்டது

21.1.65 குடியாத்தத்தில் எடைக்கு எடை கைத்தறி நூல் வழங்கப்பட்டது.

22.1.65 செங்கம் –  எடைக்கு எடை நெல் வழங்கியது.

23.1.65 அனந்தபுரம் எடைக்கு எடை நெல்

1.5.65 வள்ளியூரில் பெரியாரின் எடைக்கு இரு மடங்கு வாழைக்காய்.

2.5.65 தூத்துக்குடி எடைக்கு எடை பருப்பு, மற்றும் எடைக்கு எடை உப்பு.

16.2.70 அலங்காநல்லூர் எடைக்கு எடை சர்க்கரை பரிசளிக்கப் பட்டது.

21.9.70 பெண்ணாடம் எடைக்கு எடை நெல் வெங்காயம் உப்பு வழங்கப்பட்டது

8.7.72 இளந்தங்குழி – எடைக்கு எடை நெல் வழங்கப்பட்டது

தொடர்ந்து பேசுவோம். நன்றி வணக்கம்

அன்புடன்,

– பெரியசாமி பி என் எம்.