தோழர்களே,
இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ள வில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.
தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தவர் யார்?
2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவதாரங்கொண்டு கொன்றது யார்?
3. திராவிட சூரபத்மனை முருகனாக வந்து கொன்றது யார்?
4. திராவிட இரணியனை நரசிம்ம ரூபம் கொண்டு கொன்றது யார்?
5. கம்சனைக் கிருட்டிணனாக வந்து கொன்றது யார்?
6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?
7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி இவைகளைச் சுட்டுத் தின்று சுராபானம் அருந்தியது யார்?
11. வருணாசிரம தருமத்தைப் பிறப்பித்தவன் யார்?
12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
13. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
15. உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார்?
16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட்டு கொடுப்பவன் யார்?
17. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?
19. திராவிடன் கட்டிய சத்திர மானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?
20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியவர் யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில் சாய்ந்து சாப்பிடுவது யார்?
22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணியது யார்?
23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
25. திராவிடன் ஆரியப்பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்?
27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதி வைத்தவன் யார்?
28. திராவிட சோதரி சூர்ப்பநகையை மானபங்கம் செய்தவன் யார்?
29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுக்குக் கூட்டி வைத்தது யார்?
30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?
31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப் பட்ட மளித்தது யார்?
32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?
35. கடவுளைத் தரிசிக்க தரகனாக இருப்பவன் யார்?
36. ஆரிய சமாஜம், ராஷ்டீரிய சேவாசங்கம், இந்து மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?
37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
41. பெண்ணை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
42. தமிழ்நாடு வெறுத்த இராஜாஜியை வங்காளக் கவர்னராக்கியது யார்? இன்று கவர்னர் ஜெனரலாக்கியது யார்?
43. கதர்வேட்டி கட்டிக் காங்கிரசில் தலைமைப் பதவி
யிலிருப்பவர் யார்?
44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சம் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
47. மதவெறி பிடித்தலையும், மடையனும் முட்டாளும் யார்?
48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடை செய்தது யார்?
50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?
53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன்தாரியாயும் இருப்பவன் யார்?
54. தாசில் வந்தால் கொம்பு ராஜினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?
55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
57. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?
59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
60. ஜாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்தும் கை வாளேந்தும் என்றவன் யார்?
61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்து விட்டது யார்?
64. காந்தியாருக்கு ராம்தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?
66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?
67. காந்தியாருக்கு நிதி திரட்டி ஏப்பமிடுவது யார்?
68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?
69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவர் யார்?
70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக்
கூடாதென்பவர் யார்?
71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?
72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?
73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?
74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்திரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?
75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?
79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலை வைத்த கூட்டம் எது?
82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
85. சந்திர குப்தனுக்கு சாம்ராஜ்யம் கிடைக்கும்படி செய்தது யார்?
86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
88. வல்லாள மகாராசாவின் மனைவியை பெண்டாளக் கேட்டது யார்?
89. அசோக வம்சத்தாரை அழித்தவன் யார்?
90. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?
91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?
93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?
94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
95. பல காமாந்தகாரக் கடவுளர்களை உண்டு பண்ணியது யார்?
96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?
98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைகுட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
99. எவ்விதத் தொடர்புமின்றி சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
- குடிஅரசு - துணுக்குகள் - 22.01.1949
-விடுதலை,20.11.16
ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.
மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.
அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.
‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,
¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.
¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.
¨ அவன், ஏர் உழுதால் பாவம்!
¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!
¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!
¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.
¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!
¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.
¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.
--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!
¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.
இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!
இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.
மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.
_----01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை
தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.
ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.
சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.
இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாகவேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.
நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக்காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.
ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்கவேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.
நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.
ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படுகின்றது.
மகமதியர்கள் குரானை மதிப்பதைவிட கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.
ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும், உயர்வு- தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப் படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?
அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்ட கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.
இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.
நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக் கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டுக்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?
ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?
மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?
அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்?
அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?
தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.
சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக் காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப் பட்ட கடவுளைப்பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.
இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.
கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?
கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?
ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.
1935 செப்டம்பர் தேவக்கோட்டையில் முதல் வாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(விடுதலை, 2.12.51)
விடுதலை,6.11.16