செவ்வாய், 28 மார்ச், 2017

இந்தியா இந்துக்கள் என்ற பெயர்

"இன்றைக்கு 200-ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்றபெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூறமுடியுமா?

கூறமுடியுமானால் அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஓர் ஆதாரமாவது காட்ட முடியுமா?

ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே!

நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! "

- தந்தை பெரியார்

[குடிஅரசு, 08.05.1948]

ஞாயிறு, 26 மார்ச், 2017

பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் 23.3.1931 அன்று ‘குடிஅரசில்’ தந்தை பெரியார் எழுதியது என்ன? இதோ!

 

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை.  அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை.  அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களைவும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.

இவை ஒரு புறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜபிரதிநிதி திரு.இர்வின் பிரபுவை பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு.காந்தியவர்களைப் புகழ்வதும் பகத்சிங்கை தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடு அல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடை பெறுகின்றன.  இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள்  திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவதும் திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தி அவர்களை ஒரு பெரிய மகான் என்றும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் வெள்ளைக்காரர் அறிய விளம்பரம் செய் வதுமான காரியங்களும் நடைபெற்றன.

ஆனால், இப்போது வெகுசீக்கிரத்தில் அதே மக்களால் காந்தியம் வீழ்க, காங் கிரஸ் அழிக, காந்தி ஒழிக என்கின்ற கூச்சல் களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன.

இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல், விஷயமாய் பொது ஜனங் களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவதொரு கொள்கை யாருக்காவது உண்டா? என்று சந்தேகிக்க வேண் டியதாகவும் இருக்கின்றது.  எது எப்படி யிருந்த போதிலும் திரு. காந்தி அவர்களின் உப்புச்சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடு அல்லாமல். தேசத்தின் முற்போக்குக்கும் கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும், எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம்.  நாம் மாத்திரம் அல்லாமல் திரு. காந்தி அவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்குக் காரணமே பதக்சிங் போன்ற வர்கள் காரியங்களை கெடுப்பதற்கும் ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் இருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களின் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார் களும் திரு. காந்தி அவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார். சமதர்மக் கொள்கைகள் ஒழிக்கவே இக்காரியங்களை செய்கின்றார்.  திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஆகாயம் முட்ட கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார்கள்.  ஆனால், நமது தேசிய வீரர்கள் தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலா பலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயம் கூறிக் கொண்டு பாறையில்  முட்டிக் கொள்வது போலவும். தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடினார்கள்.  அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் வாகைமாலை சூடி திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்படுவதைப் பார்த்து விட்டு காந்தியம் வீழ்க காங்கிரஸ் அழிக காந்தி ஒழிக என்று கூப்பாடு போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பகத்சிங் அவர்கள் இந்தமாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும், பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதும் என்கின்ற சுயநலமக் களும் உள்ள நாட்டில் வெகுகாலம் உயிருடன் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர் களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர்தம் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது. பகத்சிங்கிற்கு மெத்த சாந்தி என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கட மையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல.  ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்தவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும்  பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றேச் சொல்லுவோம்.  ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்ற முடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம்.  அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர் கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்து இருக்க வேண்டிய தென்று நாம் சொல்லு வதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடி யாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியா வுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மை யாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும்.  ஏனெனில் நாமறிந்த வரை திரு. பகத்சிங் கிற்கு சமதர்மமும், பொது உடைமையும் தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க் கண்ட வாக்கியம் காணப்படுகிறது.

அதாவது : பொது உடைமைகட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுதானிருக்கும்; எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது, அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும் என்று குறிப்பிட்டிருக் கிறார்.  அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்ப திலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக் கையுடைவர்  என்றும் கருதிக் கொண்டி ருக்கின்றோம்.  ஆகவே இந்தக் கொள்கை யானது எந்தச் சட்டத்தின்படியும் குற்ற மாக்கக் கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லையென்றும் சொல்லுவோம்.  ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின்றோம்.  அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது தனி தேசத்தானிட மாவது துவேஷம் இல்லாமலும், எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும், துன்பம் உண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள் கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்.  ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ. பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.  இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியி ருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதிலும் அடங்கியிருகின்றது. தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதான் ஆக வேண்டுமோ.  அதுபோலவேத்தான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாய் இருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத்தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும்.  ஆகவே இந்த தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை பொது உடைமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்த கொள்கைகள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள். ஆதலால் இக்கொள்கைகளை நியாய மானவை என்றும் அவசியமானவை என் றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தியம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே யில்லை.  ஆனால் அந்தக் கொள்கைக் காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே. என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாய் இருக்கின்றது.  திரு. காந்தி அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணா சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத் திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம்.  ஆனால், அந்த உண்மை இன்றுதான் மக் களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும், துணிவையும் அடைந்திருக்கின்றார்கள்.  இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும்.  திரு. பகத்சிங் தூக்கி லிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந் திருக்காது. அன்றியும் பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத் திற்கும், இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவோ நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது.  சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்!  பாராட்டு கின்றோம்!! பாராட்டுகின்றோம்!!!  இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகா ணத்திற்கு 4-பேர் வீதமாவது தூக்கி லிட வேண்டுமென்று மனமார வேண்டுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 29.03.1931

-விடுதலை,26.3.17

சனி, 25 மார்ச், 2017

இந்நாட்டு சமதர்மத்தின் முதல் படி


தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப் பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒரு விதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக் கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத் துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு தாழ்வு பேதா பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடு களில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ் வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொரு ளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேத வாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராயபேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக் காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண் டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன் னால்தான் உண்மையாகக் கஷ்டப் படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக் கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்கவேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போது மானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படு கின்றது.

மகமதியர்கள் குரானை மதிப்பதை விட கிறிஸ்த வர்கள் பைபிளை மதிப்பதை விட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிராமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என் றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி யென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப் படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வ மும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண் டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்ற வர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள் ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும்பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால் மன வலிமையினால் சம்பவங் களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர் களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கை களையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்க ளுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களு டையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங் களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல் லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடு வதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?

அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவு ளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட் டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப்பட்ட கடவு ளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லா விட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குரு வாய், சங்கராச் சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத் தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல் லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டி யவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

1935 செப்டம்பர் முதல் வாரத்தில்  தேவக்கோட்டையில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (‘விடுதலை', 2.12.1951).
-,விடுதலை,19.3.17

புதன், 15 மார்ச், 2017

பெண்களுக்குத் தொழிற்கல்வி கொடுக்க வேண்டும்



 

- தந்தை பெரியார்

இந்த வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பத்தில் நடைபெறும் ஒன்றாகும். இதுவரையிலும் நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சி, ஒரு ஜாதிக்கு நாம் கீழான மக்கள் - கீழானவர்கள் என்கின்ற முறையை அடிப் படையாகக் கொண்டு நடத்தி வைத்தோம். இப்போது நாம் கீழ் மக்களல்ல. ஆணுக்குப் பெண் அடிமையல்ல. ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. பெண் சுதந்திர-முடையவள் என்பதை நிலைநிறுத்தும் வகையில், இம்முறை திருமணமானது தோற்றுவிக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வருகிறது! இதில் பல காரியங்கள் மதத்திற்கு, சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு மாறாக இருப்பதோடு இதுவரை இருந்த இழிவான நிலையை மாற்றக்கூடியதாகவும் இருக்கின்றது. மாற்றம் ஏற்படுவதென்றால் சிறப்பான காரியங்களைச் செய்துதானாக வேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதுவரை இருந்த ஆட்சி அனைத்தும் நம்மை அடிமை யாகவே கருதி நடத்தப்பட்டு வந்ததேயாகும். இப்போதுள்ள ஆட்சியானது நம்மை மக்களாக மதித்து வருகின்ற ஆட்சி என்பதோடு, நாமெல்லாம் அடிமைகள் அல்ல மனிதர்கள் என்பதை உணர்ந்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியானதால், இதுவரை சட்டப்படிச் செல்லுபடியற்ற முறையாக இருந்த இதை இன்றைய அரசு சட்டப்படிச் செல்லும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இது சட்டப்படிச் செல்லாதிருந்த காலத்திலேயே பல்லாயிரக்கணக்கில் மக்கள் இம்முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. இப்போதும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்-கிறவர்கள் தான், இன்றைக்கும் பழைய முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் பார்ப்பனருக்கு அடிமைகளல்ல - சூத்திரர்களல்ல என்று கருதுகின்றவர்கள் அனைவரும் இப்புதிய - மாறுபாடான முறையினையே பின்பற்றி நடத்தி வருகின்றனர்.

தாய்மார்களே! தோழர்களே! நாம் நன்றாகச் சிந்திப் போமானால், தமிழர்களாகிய நமக்கு இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை முறையென்றோ, விவாகம் என்றோ, திருமணம் என்றோ, ஒரு முறை இருந்ததே இல்லை. இன்றையத் தினம் நமக்கு நீதியாக இருக்கும். மனுதர்ம முறையில் சூத்திரனுக்குத் திருமண முறையில்லை என்றிருக்கிறது. இதுவரை நடைபெற்ற பல புரட்டுகளின் காரணமாகக் கடந்த 20, 30 வருஷ காலமாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள மனுதர்மத்தில் தான் சூத்திரனுக்குத் திருமண முறை உண்டு என்றிருக்கின்றது. பழைய 25 வருடத்திற்கு முன் அச்சிடப்பட்ட எல்லா மனு தர்மத்திலும் சதிபதியாக வாழும் உரிமை சூத்திரனுக்கு இல்லையென்றே இருக்கிறது. இதற்குக் காரணம் நம் பெண்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டியவர்கள்; சூத்திரச்சிகள். எனவே அவர்களுக்குத் திருமண உரிமை இல்லை என்பதேயாகும்.

இம்முறை தவிர்த்து இதுவரை நம்மில் நடைபெற்று வந்த திருமண முறையும் நம்நாட்டிற்கு உரிய முறை இல்லை. பார்ப்பன நாட்டிலிருந்து வந்ததேயாகும். திருமணம் என்கின்ற மன்றல் என்பது மறையோர் தேசத்திலிருந்து வந்தது _- இங்கு புகுத்தப்பட்டது என்பதனைத் தொல்காப்பியத்திலேயே குறிப்பிடப்-பட்டிருக்கிறது. அதாவது, “மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்’’ என்கிற சூத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதுவும் பார்ப்பனரிடம் ஒழுக்கக் கேடும், பொய்யும் புகுந்த பின்னர், பார்ப்பானே சடங்குகளை உண்டாக்கினான் என்பதும் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் இதனை விளக்கியதோடு இப்படிப் பார்ப்பனருக்காக _- மேல்ஜாதிக்காரனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு ஆன காலமும்  உண்டு என்பதை, “மேலோர்  மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே’’ என்கின்ற சூத்திரத்தின் மூலம் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம் நான் பாமர மக்களுக்காகச் சொல்லவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் புரியவும் புரியாது. எப்படியோ நடந்தால் சரி என்றுதான் கருதுவார்கள். பின் யாருக்காக இதைச் சொல்கிறேனென்றால் நம்மிடையே இருக்கிற படித்த _ பட்டம் பெற்ற முட்டாள் களுக்காகவே சொல்-கின்றேன்.

நமது புலவர்கள் எல்லாம் பெருமையாக -_ சிறந்த இலக்கியமாகக் கருதி பரப்பி வருகின்றார்களே, எதற்கெடுத்தாலும் பயன் படுத்துகின்றார்களே திருக்குறள். மனுதர்மத்தில் எப்படிப் பார்ப்பானுக்கும், சூத்திரனுக்கும் பேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, அதைவிட மேலேயே பெண்களுக்கும், ஆண்களுக்கும் அதில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. பெண் நிரந்தர அடிமையாகக் கணவனுக்குத் தொண்டு செய்யும் ஏவலாளாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தோழர்களே! பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற அடிமைகளாக இருக்க வேண்டும். சூத்திரர்கள் அறிவு பெறக் கூடாது. பாமரர்களாகவே இருக்க வேண்டும்; ஜாதி இழிவு காக்கப்பட வேண்டும் என்கின்ற மூன்று காரியங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்ததுதான் _ - புரோகித வைதிகத் திருமணங்களாகும்.

ஆனால், சுயமரியாதைத் திருமணங்கள் பெண்களைச் சம உரிமையுடையவர்களாக்கவும், மக்கள் அறிவோடு நடக்க வேண்டுமென்ப தற்காகவும், மக்கள் அனைவரும் சமம், ஜாதியின் காரணமாக உயர்வு, தாழ்வு இல்லை என்பதை வலியுறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டதேயாகும். இதன் காரணமாகப் பெண்கள் விடுதலை பெற்று சுதந்திரமுடையவர் களானதோடு, அதுவரை பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கணவன் - தகப்பன் சொத்தில் உரிமை, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை - மணவிலக்குப் பெறும் உரிமை, விதவா, விவாக உரிமை, ஆண்களைப் போன்று சகலத் துறைகளிலும் போட்டியிடும் உரிமை, கல்வி உரிமை முதலியவை அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளன.

பொதுவாக இந்துக்கள் என்பவர்கள் திருமணம், ஜாதி உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ இல்லாவிட்டாலும், அவர்கள் சமுதாயத்தில் அதுவரை நடைபெற்று வந்த பழக்க வழக்கப்படி நடைபெற வேண்டும். அதுதான் சட்டப்படிச் செல்லுமென்பது இந்து லாவாகும். அதனால்தான் இப்போது இங்கு நடைபெற்ற இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகவே மதிக்கப்பட்டுக் கருதப்பட்டு வந்தது.

நம் நாட்டில் பெண்கள் விடுதலைக்காக இதுவரை - சரித்திரக் காலம் முதல் எவனுமே பாடுபடவில்லை. நம் இலக்கியங்கள் அத்தனையும் பெண் அடிமையை வலியுறுத்து வதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்குச் சம உரிமை, சுதந்திரம் கொடுக்கக்கூடிய, அறிவு கொடுக்கக்கூடிய இலக்கியம் என்று எதுவுமே கிடையாது. நாம் பூரணமாக சுதந்தரம் அடைய இன்னும் பல தடைகள் இருக்கின்றன. நாம் வளர்ச்சியடைய வேண்டியதும் நிறைய இருக்கின்றன என்றாலும், நம் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பவர்கள் நம் பெண்களே யாவார்கள்.

நம் பெண்கள் இன்னமும் சமுதாயத்திற்குப் பெரும் பாரமாக இருக்கிறார்களே ஒழிய, சமுதாய வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடியவர்களாக இல்லை. ஏனில்லை யென்றால், நாம் அவர்களுக்குப் போதிய அறிவை, கல்வியைக் கொடுக்காததாலே யாகும்.  பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்றுச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமானால் பெற்றோர்கள் அவர்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்கள் வாழ்வை அவர்களே நடத்திக் கொள்ளும் படியான தொழிலை அவர்களுக்கு பயில்விக்க வேண்டும். அவர்களாக முன்வருகிற வரை அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமையினை அவர்களுக்கே கொடுத்து விட வேண்டும். மேல் நாடுகளிலெல்லாம் இப்படித் தான் நடக்கின்றன. எந்தப் பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கிடையாது. அவர்களாகப் பார்த்துத்தான் செய்து கொள்வார்கள்.

வெள்ளைக்காரன் இங்கு வருகிறவரை நம் நாட்டில் 8 வயது, 9 வயதில் திருமணங்கள் நடைபெற்று வந்தன. வெள்ளைக்காரன் வந்த பின்தான் இக்கொடுமையை நிறுத்தினான். இம்முறையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் கோயிலுக்கே போகக் கூடாது; குழவிக் கல்லைக் கும்பிடக் கூடாது, புராண - இதிகாசங்களில் வரும் எந்த விழாக்களையும் கொண்டாடக் கூடாது; சினிமாவிற்குப் போகவே கூடாது. சினிமாவால் ஏற்பட்ட கேட்டால் - உணர்ச்சியால் 10 வயதாவதற்குள் பெண்கள் ஆளாகி விடுகின்றனர். காரணம், உணர்ச்சிப் பெருக்காலேயே யாகும். ஆடம்பரமாக இருக்கக் கூடாது; சிக்கனமாகச் செலவிட வேண்டும். பிற மக்களுக்கு நம்மாலான உதவியினைச் செய்ய வேண்டும். இன்னொரு வரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்கா மலிருப்பதே ஆண்மையாகும். பிறருக்கு நம்மாலான உதவியைச் செய்வதே பெருமையாகும். குழந்தைகள் பெறாமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் ஒன்று, இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதனை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்காகப் பிறரிடம் போய்ப் பல்லைக்காட்டிக் கெஞ்சாத வகையில் நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இம்முறையில் ஏற்பாடு செய்த மணமக்களின் பெற்றோர்களையும், சுற்றத்தாரையும் பாராட்டுகின்றேன்.

(19.1.1969 அன்று திருச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள்

ஆற்றிய அறிவுரை)

 ‘விடுதலை’ 23.1.1969

-உண்மை,1-15.3.17

திங்கள், 13 மார்ச், 2017

எது கடவுள்? எது மதம்? - தந்தை பெரியார்

தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.

ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்யவேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும், சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்ப தற்கும், ஒருவரையொருவர் உயர்வு -தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.

நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.

மதம்

இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமிகளையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள்களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.

அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச்சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக்கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.

எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.

(தந்தை பெரியார் அவர்கள்

17 வருஷத்திற்கு முன் (1928) பேசியது)

‘குடிஅரசு' சொற்பொழிவு - 09.06.1945

-விடுதலை,12.3.17