வெள்ளி, 12 மே, 2017

தேவர்களின் முறை - சித்திரபுத்திரன் -

10.03.1929 - குடிஅரசிலிருந்து...

லண்டன் மாநகரமாகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணு வானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கின்றார்:-

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கே.நடராஜன், சி. ராஜகோபாலாச்சாரி, வி.எ. சீனி வாச சாஸ்திரி, எ. சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கிட்ட ரமண சாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், டி.ரங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே. ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அநேக பூதேவர்கள் போய், கால்மாட்டில் நின்று கொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு :- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே! பூதேவர் களே! எங்கு வந்தீர்கள்?

பூதேவர்கள் :- ஆபத்பாந்தவா! அனாதரட்சகா! தங்களிடம்தான் வந்தோம்.

மகாவிஷ்ணு :- என்ன விசேஷம்?

பூதேவர்கள் :- தேவர்களுக்கு ஏதேனும் இடுக்கண் வந்தால் அதைத் தடுக்கத் தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவேதங்களிடம் வந்தோம்.

ம.வி.:- என்ன விசேஷம்?

பூ.தே :- மகாப்பிரபு! பழையபடி ராட்சதர்களுடைய ஆதிக்கம் வலுத்து விட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா?  இறப்பதா? என ஊஞ்சலாடிக் கொண்டிருக் கின்றது! இந்தச் சமயம் தாங்கள் அருள்புரியவில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய்விடும்! பூலோகமே இல்லையானால் மகாவிஷ்ணுவாகிய தங்கள் பாடு கூட திண்டாட்டமாய்விடும்.

தங்களை வணங்கவோ, தங்களுக்குப் பூஜை, ஆராதனைகள் உற்சவம் முதலிய வைகள் செய்யவோ கூட யாரும் இருக்க மாட்டார்கள்! வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன? ஒழிந்தென்ன? எனவே இந்தச்சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாட்சித்தருள வேண்டும்.

ம.வி.:- என்ன! என்ன!! உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்!

பூ.தே.:- பிரபுவே! முன்யுகங்களில் தேவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக் கின்றது!

ம.வி. :- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்!

பூ.தே:- எப்படியோ வந்துவிட்டது! பெரிய உபத்திரவ மாயிருக்கின்றது! ஒவ்வொரு யுகங்களிலும், தேவர் களுக்கு இடர்கள் செய்ய அசுரர்களாகவும், அரக்கர் களாகவும் ராட்சதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும் போது பகவானாகிய தாங்கள் தான் பல அவதாரங்களாக வெளிக் கிளம்பி, இராட்சதர்களை யெல்லாம் அழித்து எங்களையும் எங்கள் உயர்வாகிய வேதங்களையும் உத்தியோகங் களாகிய யாகத்தையும் காத்தருளி வருகிறீர்கள்!

ம.வி:- ஆம்! அது உண்மைதான்!

பூ.தே:- பிரவுவே! இந்த யுகத்திலும். அதுபோலவே ஒரு ராட்சதன் தோன்றிவிட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோகமாகிய யாகத்திலும், வேதத்திலும் கையை வைத்து அவைகளை யெல்லாம் அடியோடு ஒழிக்கப்பார்க்கிறான்!

ம.வி :- அப்படிப்பட்ட ராட்சதன் யார்?

பூ.தே.:- பிரபுவே! அவன்தான் சுயமரியாதை என்று சொல் லப்பட்ட இராட்சதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம்விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ, கவலையீனமாய் இருந்து விடாதீர்கள்! நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்து போவது நிச்சயம். ஏனென்றால் எங்களை ஒழித்தால்தான்தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவு செய்து தங்களை ஒழிப்பதற்காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்!

ம.வி.:- அப்படியா! அப்பேர்ப்பட்ட ராட்சதனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பூ.தே.:- அவன் மகா தவசிரேஷ்டன்! பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மூலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான்! அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயுதங்களுக்குப் பயந்து கொண்டு சில்லறை தேவதைகளும், தங்கள் பரிவாரங்களும் கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிகள் இல்லை! ரிஷிகள் இல்லை!

ம.வி. :- அப்படியா! அவன் செய்யும் கொடுமை என்ன?

பூ.தே:- மதம் பொய் என்கிறான்; வேதம் பொய் என்கின்றான்! புராணம் பொய் என்கின்றான். பராசர மிருதி பொய்யாம்! மனுதர்ம சாதிரம் பொய்யாம்!! எல்லாம் பொய் என்கின்றான்! ராமாயணம் பொய்யாம்! பாரதம் பொய்யாம்!  திருவிளையாடல் புராணம் பொய்யாம்! பெரியபுராணம் கூட பொய்யாம்!  தேவர்களைக் கண்டதார்? விஷ்ணுவைக் கண்டதார்? சிவனைக் கண்டதார்? எல்லோரும் பொய் என்கின்றான்! இருக்கின்றதாக அகச்சான்று, புறச்சான்று காட்டினாலோ காட்டுகின்றவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள், அன்னக்காவடிகள் என்கிறான். அவனுடைய உபத்திரவத்தினால் புராணங்களே விற்பனை ஆவதில்லை! காலட்சேபங்களே நடைபெறுவதில்லை! இவைகள் போனாலும் போகட்டும்!  எங்கள் யாகங்கள் நடைபெறுவதில்லை! அவனால் எங்களுக்கு வெகு நஷ்டமாயிருக்கின்றது!

ம.வி.:- அப்படியா, சொல்லுகின்றான்?

பூ.தே.:- ஆமாம் பகவானே!

ம.வி:- இன்னம் என்ன செய்கிறான்?

பூ.தே.:- நாள் பொய் என்கின்றான்! திதி பொய் என்கிறான்! சடங்கு பொய் என்கின்றான்! தேர்பொய், திருவிழா பொய் என்கிறான்!

ம.வி.:- சரி; இவ்வளவையும் பொய் என்கின்றானா?

பூ.தே:- ஆம் பிரபு! மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே புதகக் கடைக்காரன் பட்டினி! குருமார்கள் பட்டினி! புராணக் கடைக்காரன் பட்டினி! புராணப் பிரசங்க பண்டிதன் பட்டினி, புரோகிதன் பட்டினி, அர்ச்சகன் பட்டினி சமயப் பிரச்சாரகன் பட்டினி, நல்ல ஆங்கிலம் படித்த சாதிரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும் படியாகிவிட்டது! இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி மண்வெட்டி வயிறு வளர்க்கச்

சொல்லுகிறான்; கொடுமை! கொடுமை!! சகிக்க முடியவில்லை!!

ம.வி.:- நமது கடவுள் தன்மையைப் பற்றி என்ன சொல்லுகின்றான்? அதையாவது ஒப்புக் கொள்ளுகின்றானா? இல்லையா?

பூ.தே.:- கடவுளைப் பற்றிச் சொன்னால் எனக்கு அவசியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா? இல்லையா? என்றால் நான் அதைப்பற்றிக்கவலைப்படுவதே கிடையாது! என்கின்றான். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதைப்பற்றி உனக்கென்ன கவலை?என்கின்றான்!

ம.வி.:- பின்னை, அவன் எதைத்தான் ஒப்புக் கொள்ளுகின்றான்?

பூ.தே:- அவன் மனிதனுக்கு மனிதன் அன்பு இரக்கம், உதவி, ஒழுக்கம், இவற்றைத்தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை என்கின்றான்!

ம.வி.:-அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக் கொள்ளுகிறதா?

பூ.தே:- ஒப்புக் கொள்ளுகிறதே! இதுதானே ஆச்சரியமாயிருக்கின்றது! ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்தச் சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய் போகிறதே, ஆபத்தாய் இருக்கிறது!

ம.வி.:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே!

பூ.தே:- நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம்! எங்கள் ஆயுதங்களாக அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்தே சில ஆட்களைக் கைப்பற்றி, அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங்களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் கூலிக்குப் பிடித்த ஆயுதங்களும், எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டது!

ம.வி.:- அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதந்தான் என்ன?

பூ.தே.:- குடிஅரசு, திராவிடன், குமரன், நாடார்குலமித்திரன், தமிழன், விவநேசன், சிங்கப்பூர் முன்னேற்றம், சுயமரியாதைத் தொண்டன் முதலிய அநேக ஆயுதங்களின் வலிமை எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்கவைத்துவிட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும், உறை இல்லாமல் வெளியே தலைநீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல் பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரிந்து பார்த்தும், வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்து விட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பற்ற வேண்டும்! தங்கள் பரிவாரங்களான சைமன் கமிஷன் என்னும் உபதேவர்களை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்து விட்டோம் அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

ம.வி.:- இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்?

பூ.தே.:- தங்களிடமிருந்து சில பாணங்களைக் கேட்க வந்திருக்கின்றோம்.

ம.வி.:- என்ன பாணம்?

பூ.தே:- 124-ஏ, 153ஏ, ஆகிய பாணங்கள் வேண்டும்.

ம.வி.:- ஏன் 144- பாணம் வேண்டாமா?

பூ.தே.:- 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும், அவைகள் அவனிடம் போய், போய் அவன் பாதத்தில் விழுந்து நமகாரம் செய்துவிட்டு வந்தவிட்டதோடு மாத்திரமல்லாமல் திரும்பிவந்து எய்தவர்கள் மீதும்கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

ம.வி.:- சரி, நாம் நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம். அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியது போல் செய்வோம்!

பூ.தே:- பிரபுவே! தங்கள் தூதர்கள் யார்? தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்துவிட்டால் நாங்கள் ஜாக்கிரதையாயிருக்கஅனுகூலமாயிருக்கும்.

ம.வி.:- நமது தூதர்கள் சைமன் கமிஷனர்கள் அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.

பூ.தே:- நாங்கள் அறியாத புத்தியினால், தங்கள் தூதர்களை ஆதியில் அலட்சிய மாய்க் கருதிவிட்டோம். அதனால் வந்த வினைப் பகுதிஎன்றுகூடச் சொல்லலாம்! ஆனாலும் இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங்களுக்குக்கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே!

ம.வி.:- நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை! மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்து விடுங்கள்!

பூ.தே:- அப்படியே ஆகட்டும், பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பற்றுங்கள்! இல்லாவிட்டால். தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு பேருக்குமே ஆபத்து வந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங்கள்.

ம.வி.:- நம்மைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் காரியத்தை நீங்கள் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி போய் வாருங்கள்

-விடுதலை,12.5.17

செவ்வாய், 9 மே, 2017

ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!


- தந்தை பெரியார் கணிப்பு

அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் நாஸ்திகர்கள்தான்; நாஸ்திகனாக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.

நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாம் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். இதுபோலல்லாமல் தைரியமாக அம்பேத்கர் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்.

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்தமதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

டாக்டர் அம்பேத்கர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்து மதத்தை ஒத்துக்கொள்வதில்லை. அவர் காந்தியைப்பற்றிச் சொல்லும் போது ‘காந்தி ஒரு பச்சை இந்து. மனுதர்ம முறை, வருணாசிரம முறையைப் பாதுகாக்க நினைப்பவர். அவர் ஆதித்திராவிட மக்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்று கடுமையாகத் தாக்கி வருணாசிரம ஆதார சுலோகங்களையெல்லாம்கூட எடுத்துப்போட்டு, காந்தி பச்சை இந்துவாக இருப்பதால்தான் அவர் புத்தி இப்படிப் போகிறது என்று எழுதினார்.

1930_35லேயே ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர் தீவிரக் கருத்துள்ளவராக இருந்தார்; ஜாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (“ஜாத்மத்தோடகமண்டல்’’ என்று கருதுகிறேன்.) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் ஜாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமையுரையாக (ணீபீபீக்ஷீமீss) 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு ஜாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் ‘உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்’ என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஜாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல. ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை (சிலீணீஜீtமீக்ஷீ) நீக்கிவிடவேண்டும் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழியவேண்டும்’ என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப்பேசாமல் வேறு எதைப்பேசுவது? ஆகையால், அதை நீக்கமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர் “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்: தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்’’ என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி “ஜாதியை ஒழிக்கும் வழி’’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார்.

நாம் இராமாயணத்தைப்பற்றி வாயால் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதாவது 1932 லேயே அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு சிவராஜ்தான் தலைவர், இதெல்லாம் குடியரசில் இருக்கிறது.

அவர் ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கீதையைப்பற்றிப் பேசும்போது, கீதை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்றே பேசினார். அப்போது சி. பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இதென்ன அக்ரமம்; வெறும் அம்பேத்கர் பேசியிருந்தால்கூடக் கவலையில்லை; ஒரு கவுன்சில் மெம்பராக இருக்கிற அம்பேத்கர் அதுவும் சென்னையில் வந்து, கீதை பைத்தியக்காரனின் உளறல் என்று பேசுவதென்றால் அக்ரமம் என்றெல்லாம் கூச்சல் போட்டார்கள்.

நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். அந்த மாநாட்டுக்கு, சண்முகஞ் செட்டியார் வரவேற்புரை அளித்தார். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயக்கர் வந்திருந்தார். அவர் ஏதோ நம்மைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம் ஆகப்போகிறேன் என்று சொன்னார். நானும் ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். தயவுசெய்து அவசரப்பட்டுச் சேர்ந்துவிடாதீர்கள். குறைந்தது 1 லட்சம் பேராவதுகூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லா விட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கைவைக்கக் கூடாத மதம் (றிமீக்ஷீயீமீநீt ஸிமீறீவீரீவீஷீஸீ) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கைவைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது, உதைக்க வந்தால்கூட சிபாரிசுக்காவது ஆள்வேண்டாமா? என்று சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக்கூடா தென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார்.

என்றாலும் அவர் ஏற்கெனவே புத்தர்தான்.

நாங்கள் உலக புத்தர் மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பர்மாவில் சந்தித்தேன். புத்தர் மாநாட்டில் நான் பேசுவதாக ப்ரோகிராமில் (நிகழ்ச்சி நிரல்) போட்டிருந்தார்கள். ஆனால், எனக்குச் சொல்லவில்லை. நான் போனேன். பிறகு என்னமோ வேறொருவரை பேசச் சொல்லிவிட்டார்கள் அப்போது அம்பேத்கர் என்னிடம் இன்றைக்குக் கையெழுத்துப்போட்டு புத்தமதத்தில் சேர்ந்துவிடுவோம், என்று சொன்னார்.

அதோடு தைரியமாக இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் இனிமேல் ராமன், கிருஷ்ணன், சிவன், இந்திரன் முதலியவைகளைக் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. அவதாரங்கள் என்பவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வணக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஜாதிமுறையில், இன்னும் மோட்சம் நரகம் இவற்றை நம்பு-வதில்லை; சடங்கு, திதி - திவசங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையில்லை. இனிமேல் இவைகளைச் செய்யமாட்டேன். இதுபோல இன்று நாம் எதை எதைக் கண்டிக்கிறோமோ, ஒத்துக்கொள்வதில்லையோ, அதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கர் மக்களுக்கு வழி காட்டுபவர். ஜாதிமதக் குறைபாடுகளை மனதில்பட்டதைத் தைரியமாக எடுத்துக் கூறிவந்தார். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; இந்தியா பூராவும் விளம்பரம் பெற்றவர். அவர் தமது மக்களுக்குப் பௌத்த மதத்திற்குப் போகும்படி வழி காட்டியிருக்கிறார். இங்கு பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக்கொடுத்தார்.

அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

(26.10.1956இல் வேலூர் நகராட்சி மன்றத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (‘விடுதலை’ -7.12.1956)

 -உண்மை,1-15.4.17


மனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான், பக்தி செலுத்துகிறான்?

தந்தை பெரியார்



உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது? ஏன் செய்ய வேண்டியதாகிறது?

இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும்.

முதலாவதாக மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? தானாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? அல்லது மனிதனுக்குக் குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும் கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்-கள் அல்ல. எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்-காரர்-கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல.

இதற்குக் காரணம் என்ன? கடவுள் நம்பிக்கை-யும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும், தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்-களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.

மேற்கண்ட கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம். இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம், வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்; அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால் பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது. இவற்றிலும் ``கீழ்நிலை'' அறிவில் இருப்பவர்-களுக்கு ஒருவிதமாகவும், ``மேல்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்-படுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்?

கடவுளைப்பற்றி, கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள் எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும், மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே, ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன. உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும் சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி (நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள் தோன்றுவ-தில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்-களையும் முட்டாள்கள் என்றும் பேராசைக்-காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்!

கடவுள் என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால் அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள் ஏற்பட்டுவிட்டன!

எந்த ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத கடவுள், பகுத்தறிவுள்ள _ - சிந்தனையுள்ள _- சுதந்திரமுள்ள தனக்கு வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை _- வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்-கொள்ள _- தனக்கு வரும் கேடுகளைத் தவிர்த்துக்-கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன்.

கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்-கள் என்ன பதில் சமாதானம் சொல்ல முடியும்.

மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்-போல், மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல முடியாதே!

தேசப்பற்று என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள் பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பன-வற்றை-யெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும், மடையர்களாக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும் இல்லை.

கடவுள் பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு எதற்காக தேவை?

இவற்றால் இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்?

மற்றும் கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும் சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.

உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது? பணக்காரன் ஏது? பாட்டாளி மகன் ஏது? (பிராமணன்) ஏது? பட்டினி கிடப்பவன் ஏது? வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது?

இவ்வளவு கொடுமைகளை _- பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம் இல்லாமல் முட்டாள்தனமாக _- பித்தலாட்டத்தனமாக _- மோசமாக ``கடவுளை நம்பு, கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால், இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும்-கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?

ஆகவே, கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். இனி இப்புரட்டுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம், (‘விடுதலை’, 7.10.1968)

-

ஞாயிறு, 7 மே, 2017

சீர்திருத்தப்பிரசங்கம்

 

தோழர்களே!

சுயமரியாதைக் கல்யாணம் என்பது சில புதிய முறை களைக் கொண்ட ஒருவித சீர்திருத்த திருமணமேயாகும்.

சனாதன திருமணத்துக்கும், சீர்திருத்தத் திருமணத்துக்கும் என்ன பிரமாத வித்தியாசங் கள் இருக்கின்றன என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

சனாதனத் திருமணம் - வைதிகத் திருமணம் - சாஸ்திரியத் திருமணம் என்ப வைகள் எல்லாம், இப்போது எவருடைய முயற்சியும் விருப்பமும் இல்லாமலே நாளுக்கு நாள் தானா கவே மாறிக் கொண்டு வருகின்றன. ஒரு நாள் கல்யாணம் இப்பொ ழுது பெருத்த நாகரிகமாய்ப் போய்விட்டது.

கலப்பு மணம் என்பது பெரியதொரு சீர்திருத்தமாய் பாவிக்கப்பட்டு விட்டது. சட்டம், சமூகம், சாஸ்திரம், மதம் எல்லாம் வரவர நாகரிகத் திருமணத்தையும், சீர்திருத்தத் திருமணத்தையும் அனுமதித்து விட்டது. ஆதலால் அதைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டிய அவசியமிருப்பதாய்த் தெரியவில்லை.

நாயுடு மாப்பிள்ளையும், வேளாளப் பெண்ணுமாய் போய்ச் சேர்ந்து விவாகம் செய்து கொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம் என்பதில் சேர்ந்ததாகும். இதனால் மனுதர்ம சாஸ்திரம் பழக்கம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.

ஆனால், பார்ப்பனப் பெண்ணும், வேளாள மாப்பிளையும், பார்ப்பனப் பெண்ணும் நாயுடு மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும் துலுக்க மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், குஜராத்தி சேட் மாப்பிள்ளையும், பார்ப்பனப் பெண்ணும், வெள்ளைக்கார மாப்பிள்ளையும் இப்படி மதக் கலப்பின கீழ் மேல் ஜாதி கலப்புமான - மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோத மான திருமணங்கள் பெரிய இடங்களில் எல்லாம் எவ்வளவோ நடந்தாகி விட்டது.

இந்தத் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் எந்தச் சாதியை சேர்ந்தவர்கள் என்று மனுதர்ம சாஸ்திரத்தையோ, வருணசங் கிரகத்தையோ பார்ப்போமானால் அவர்கள் சண்டாள ஜாதியை விட கீழான ஜாதிகளாய் மதிக்கப்படுவதைக் காணலாம்.

அப்படிப்பட்ட தாழ்வான நிபந்தனைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கற்றவர்கள் செல்வவான்கள். மேல் ஜாதிக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்கின்ற வர்களே துணிந்து நடக்கிறார்கள் என்றால் சமஜாதி கல்யாண மாகிய வேளாளன்-நாயுடு, ரெட்டி-நாயுடு கலப்பு மணம் என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை.

கல்யாணம் என்றால் என்ன?

திருமண விஷயங்களில் ஜாதி, மதம், சடங்கு, சாஸ்திரம் ஆகியவைகளைப் பார்க் கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன்பு, கல்யாணம் என்றால் என்ன என் பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பாமர ஜனங்கள் கல்யாணம் என்பதை வீட்டு வேலைக்கு ஒரு ஆள் (வேலைக் காரியை) வைப்பது போலவே கருது கிறார்கள். புருஷனும் அப்படியே கருது கிறான். புருஷன் வீட்டாரும் அதுபோலவே தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டு வருவதாகவே கருதுகிறார்கள். இது மாத்திரமா! பெண் வீட்டாரும் தங்கள் பெண்ணை வீட்டு வேலைக்கே தயார் செய்து விற்றுக் கொடுக் கிறார்கள். பெண்ணும் தான் ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போவதாக கருதுகிறாள்.

பெண்ணின் கடமையும், சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, வீடு வாசல் கூட்டி மெழுகி சுத்தம் செய்வது, இதுகளோடு பிள்ளையையும் பெற்றுக் கொண்டு அதையும் வளர்ப்பது ஆகியவைகளையே முக்கியமாகக் கொண்டதாக இருக்கிறது. மதமும், சாஸ்திரங்களும் கல்யாணத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்த்தால் பெண் சுதந்திர மற்றவள், அவள் காவலில் வைக்கப்பட வேண்டியவள் என்பது ஒருபுறமிருக்க, கல்யாணம் செய்வதானது மனிதன், புத் என்னும் நரகத்துக்கு போகாமல் இருப்பதற்கு ஆக ஒரு பெண்ணை பெறுவ தற்கு ஆகவும், பெற்றோர்களுக்கு இறுதிக் கடன் திதி முதலியவைகள் செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகின்றன. ஆகவே, கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நுகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவுமே ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண் ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதை பெரும் பாலோர் சிந்திப்பதே இல்லை.

இக்கல்யாணம் பொருத்தம் பார்க்க வேண்டிய பொறுப்பு மணமக்களுக்கே உண்டு என்பதையும் கருதுவதே இல்லை. கல்யாணம் மணமக்கள் எத்தனத்தினாலேயே ஆக வேண் டியது என்பதையும் ஒப்புக் கொள்ளுவதே இல்லை.

கல்யாணம் என்றால் அது தெய்வீகமானது. தெய்வ எத்தன மானது, தெய்வமே பொருத்தி வைக்க வேண்டியது என்று கருதுவதும், கல்யாணத்தில் எப்படிப்பட்ட பொருத் தம் பொருந்தாப் பொருத்தமானாலும், அதனால் எப்படிப்பட்ட துன்பமும், தொல்லையும் அனுபவமானதும் கண் கூடான பிரத்தியட்ச அனுபவமாய் இருந்தாலும் அதைத் தெய்வ எத்தனம், தெய்வ சித்தம் என்கின்ற பெயரால் அனுபவிப்பதும் அந்தப்படி நினைத்து திருப்தியடைவதுமாய் இருக்கின்றது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் மணமக்கள் கல் யாணத்தினால் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்பதற் காகவே, கல்யாணத்தில் சீர்திருத்தம் அல்லது முறையில் மாறுதல் என்பது அவசியம் வேண்டும் என்கிறோம்.

கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமே ஒழிய, அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக் கூடாதென்பதே எங்களது ஆசை.

நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே, ஒருவனுடைய சொத் தாகவே கருதுகிறோம் என்பதோடு, பெண் ஜாதியை நமது போகப் பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிரும், மனமும் இருப்பதாகக் கருது வதில்லை. இது இன்று உலக சித்தாந்தமா யிருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பெண் ஜாதியாய் இல்லாத கல்யாணமில்லாத பொண்ணுக்கு மாத்திரம் சுதந்திரம் என்பது சிறிதாவது உண்டு என்று சொல்லலாமே தவிர, மற்ற படி கல்யாணமான பெண்கள் என்றால் அடிமைகளாகவே மதிக்கப் படுகிறார்கள்.

உதாரணமாக நமது சக்கரவர்த்தி திருமகனாரான இளவரசர் நேற்றைய தினம் தன்னை ஒருவர் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு அவர், ஒரு பெண்ணை அடிமையாக்க எனக்கு இஷ்ட மில்லாததால் நான் கல்யாணத்தை விரும்ப வில்லை என்று சொல்லியிருக்கிறார். இதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கிற தென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் தேய்தல் அடைந்து கொண்டே வருகின்றது.

தாயின் குணம், தாயின் தன்மை பெரிதும் பிள்ளைக்கு பிறவியிலேயே வருகின்றது என்பதை யார் மறுக்க முடியும். மக்களின் குணம் 100க்கு 90 பாகம் சரீர அமைப்பை பொறுத் ததேயாகும். சரீர அமைப்புக்கு தாய் தகப்பன் சரீர அமைப்பை பெரும் பாகம் காரணமாகும். ஆகையால் இந்த அடிமைப் பெண், சுதந்திர உணர்ச்சியுள்ள பிள்ளையைப் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கல்வி, அறிவு, செல்வம் ஆகியவைகள் இல்லாத தாயானவள் நல்ல தாராள புத்தியும், சமத்துவ ஞானமும், திருப்தி ஆன மனமும் உள்ள பிள்ளைகளை எப்படி பெற முடியும்? என்பதை உணர்ந்தோமேயானால் மனித சமுகம் சுதந்திரமாக கவலையற்று திருப்தியாய் ஏன் வாழவில்லை என்ப தற்குத் தானாகவே காரணம் விளங்கும்.

ஒழுக்கம்

மற்றும் வாழ்க்கையில், ஒழுக்கத்தில் புருஷனுக்கு வேறு சட்டம், பெண்ணுக்கு வேறு சட்டம் வைத்திருக்கிறோம்.

ஆனால், ஒழுக்கத்தைப் பற்றி சதா பேசுகிறோம் - ஒழுக்கம் என்பதை எழுத்தில், சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்ப்பதே இல்லை. விபசாரித்தனம் என்பதை எவ்வளவு கண்டிக்கிறோம் - அதற்கு எவ் வளவோ நிபந்தனைகள் நிர்ப்பந்தங்கள் சட்ட மூலமாய் - சமுக மூலமாய் - சாஸ்திர மூலமாய் - இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக் கிறோம். அப்படி எல்லாம் இருந்தும் அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை. ஆண் விபசாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்குப் பெயர் பலக் குறைவு  என்று சொல்லி விடுகிறோம். பெண் விபசாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத் தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந் தால்தான் விபசார மாகுமே தவிர, ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து விபசாரம் செய்து விட முடியாது. அதை யாரும் விபசாரமென்று சொல்ல மாட்டார்கள்.

ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலே தான் உலகில் பெரிதும் விபசாரம் இருந்து வருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது. அன்றியும் இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத் தாலும், சமூகத்தாலும், நிபந்தனையாலும் வெறுக்கப்பட்ட விபசாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வசாதாரணமாய் இருந்து வருகின்றது? இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக் கிறார்களா?

ஒவ்வொருவரும் விபசார தோஷத்துக்கு ஆளாகிவிட்டே மற்றவர்களை குறை கூறுகிறார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சில் கையை வைத்து குழந்தை பருவம் முதல் தாங்கள் நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தால் விளங்கும். நம்முடைய கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியவைகள்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய பெண்ஜாதிமார் களைக்கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்க வில்லை. ஏன் இப்படி இருக்க வேண் டும்? விபசாரம் மக்களுக்கு இயற்கையா என்று பாருங்கள். ஒரு நாளும் அல்லவே அல்ல. செயற்கை குணங் களாலேயே விபசாரம் நடக்கின்றன அதாவது கல்யாணங்களே பெரிதும் விபசாரத்துக்கு சமானமானவையாகும்.

விபசாரம் என்றால் என்ன?

தனக்கு இஷ்டமில்லாமல், காதல் இல்லா மல், பணம், காசு, சொத்து, வேறுவித நிர்ப்பந்தம் ஆகியவைகளுக்கு ஆக இணங்குவதே விபசாரம் ஆகும். நமது மணமக்கள் பெரும் பாலோர் தாய் தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்து விட்டார்களே என்பதற்காகவே இணங்கி இருக்கின்றார்கள். மற்றும் பலர் தங்களுக்குள் வேற்றுமை உணர்ச்சியும், (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்து கொள்ள முடிய வில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பது போல் இருக்கிறார்கள். இது போன்றவைகள் எல்லாம் நிர்ப்பந்த விபசாரங்களேயாகும். மற்றும் பலர் செல்வத்தையே பிரதான மாய்க் கருதி இன்ப உணர்ச்சியை பறி கொடுத்து இணங்கி இருக்கிறார்கள்.  இதுபோன்றவை காசு, பணம், சொத்து களுக்காகச் செய்யப் படும் விபசாரங்களேயாகும். இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபசாரத் தன்மைகள் தான் ஆகட்டும் ஏன் ஏற்பட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். பால்ய மணங்களை ஒழித்து காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சம உரிமை ஆகி யவைகள் ஒரு சமூகத்தில் இருக்குமானால் இன்றுள்ள விபசாரங்களில் 100-க்கு 90 பாகம் மறைந்து போகும் என்றே சொல்லுவேன். அதோடு பெண் மக்களை நன்றாக படிக்க வைத்து, அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையையும் வழங்கி விடுவோமேயானால் விபசாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித் துப் பாருங்கள்.

விதவைத்தனம்

விதவைத்தன்மையே தான் விபசாரம் என்கின்ற பிள்ளையை பெறுகிறது. பிறகு ஆண் எப்படி வேண்டுமானா லும் திரியலாம். எவ்வளவு பெண் ஜாதிகளை வேண்டு மானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே விபசாரம் என்னும் (அந்தப்) பிள்ளையை வளர்க்கின்றது.

கல்யாண ரத்து இல்லை என்கின்ற முறையானது விப சாரத்தை நீடுழி வாழச் செய்கின்றது.  இவற்றிற்கு எல்லாம் பரிகாரம் செய்யாமல் விபசாரத்தைப் பற்றிப் பேசுவது என்பது பயனற்ற காரியமேயாகும்.

விதவை தன்மை என்பது நமது நாட்டில் மிக்க கொடு மையான முறையில் இருந்து வருகின்றது. இதை எந்தச் சீர்த்திருத்த வாதியும் கவனிப்பதே இல்லை. விதவைகள் வாழ்க்கை ஒரு சிறைக் கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்ப்பந்தம் ஒவ் வொரு விதவைக்கும் இருந்து வருகின்றது. எப்படி ஒரு கைதியானவன் சிறைக்கூட விதியை மீற வேண்டும் என்கின்ற ஆசைக்கும், அவசியத்துக்கும் உள்ளாகிறானோ, அதுபோலவே தான் ஒவ்வொரு விதவையும் விதவைச் சட்டத்தைமீற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளா கிக் கஷ்டப்படுகிறாள். இந்தக் கொடுமை ஒரு நிரபராதியான பெண் ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்டால் இதற்கு என்ன மறுமொழி இருக்கிறது? இந்த 20ஆவது நூற்றாண்டில் தலைவிதி என்றும், கடவுள் செயல் என்றும் சொல்லி மக்களை ஏய்க்க முடியுமா?

விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாய் இருந்தால், பார்ப்பனர்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில் தெரு தெப்பக் குளத்தில் தினம் ஒரு குழந்தை எப்படி மிதக்க முடியும்? ஊர்கள் தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடை புறம் போக்குகளும், கள்ளி மேடும், சுள்ளி மேடும், ஊரணிகளும் எப்படிப் பிள்ளைகளை பெற முடியும்?

ஆகவே மனித சமுகத்துக்கு கடுகளவாவது புத்தியும், நேர்மையும் இருக்கின்றது என்று சொல்லப்பட வேண்டுமா னால் இந்த விதவைக் கொடுமை முதலில் ஒழிக்க ப்பட்டாக வேண்டாமா? இந்தக் கொடுமை பகுத்தறிவுள்ள மனித சமுகத்தில் இருக்கிறது என்றால் பகுத்தறிவுக்கு இழிவு கற்பிக்க இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றேன்.

அதோடு கல்யாண ரத்து என்கின்ற ஒரு முறையும் ஏற் படுத்தியாக வேண்டும். ஏனெனில், கல்யாணத்துக்கு இட மில்லாத காரணத்தினாலே ஆண்கள் மனைவிமார் களிடத்தில் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளாமல் மிருகத்தனமாக நடக்கத் தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் மனைவி மார்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை யானால் மறுபடியும் மணம் செய்து கொள்ளுகிறார்கள்.

மணமில்லாமல் வைப்பு முறையிலும் வேறு ஸ்திரிகளை சேர்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். மற்றும் தங்களுக்கு இஷ்ட மானபடியெல்லாம் நடந்து கொண்டு பெண்களை இம்சிக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் தைரியம் வந்ததற்குக் காரணம் ஆண்கள் எப்படி நடந்து கொண்டாலும் மனைவிமார்களுக்கு ஜீவ னாம்சம் கேட்கும் பாத்தியம் தவிர, வேறு எவ்வித உரிமையும் இல்லாததேயாகும்.

பெண்களுக்கு தங்கள் புருஷன் பிடிக்கவில்லையானால் சகித்துக் கொண்டு தலைவிதி என்பதாகச் சொல்லி திருப்தி யுடன் இருக்க வேண்டியதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. குரூர குணமுள்ள புருஷன், குடிகாரப் புருஷன், குஷ்டரோகியான புருஷன் முதலிய எப்படிபட்டவனாய் இருந்தாலும் அவனுடைய கொடுமைகளை சகித்துக் கொண்டு அவனுடன்கூட வாழ வேண்டியிருக்கிறது. இது ஜீவகாருண் யமாகுமா என்று கேட்கின்றேன்.

எனவே தோழர்களே!

சமுக வாழ்க்கையில் முக்கியமாக ஆண் பெண் தன்மை யில் செய்ய வேண்டிய சீர்திருத் தம் எவ்வளவு இருக்கிறது என்று பாருங்கள். இவைகளைப் பற்றி எந்தத் தலைவர்களாவது, மகாத்மாக்களாவது, எந்த சர்க்காராவது கவனிக்கிறதா?

பெண்களுக்கு சொத்துரிமையும் இல்லை; கல்வி வசதியும் இல்லை - இதுவும் மிகவும் கொடுமையான காரியமேயாகும். பெண்கள் சொத்துரிமை விஷயத்தில் இந்து மதக் கொள்கை மிகவும் அக்கிரமமான தாகும். பெண்கள் எப்போதும் சொத்துரிமை சர்வ சுதந்திரமாய் அனுபவிக்க மார்க்க மில்லை. விபசாரியாய்ப் போன பெண், தேவடியாத் தொழில் செய்யும் பெண் ஆகியவர்களுக்கே இந்து சமுகத்தில் சொத்துரிமை இருக்கிறது என்றால் இந்து சமுகத்தின் ஈனத் தன்மைக்கு, மடத் தன்மைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

ஒரு விதவை விபச்சாரியாய் போய் விட்டால் தான் புருஷன் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விதவை மறுமணம் செய்து கொண்டால் புருஷன் சொத்துக்களில் ஒரு சிறு தம்பிடி கூட அனுபவிக்க உரிமை இல்லை. புருஷனுடைய வாரிசுகள் அவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருந்தாலும் அனுபவிக்க லாம் என்பதாக இந்து லா கூறுகிறது.

கல்வி விஷயத்திலும் பெண்கள் கல்வியைப் பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்ளுவதில்லை. ஏதோ பெயருக்கு மாத் திரம் தான் பெண் கல்வி விஷயம் நடைபெறு கின்றன.  100க்கு ஒரு பெண்கூட படித்த பெண் இல்லாமல் இருக்கிறது இந்து சமுகம்.

கிறிஸ்துவப் பெண்கள் அனேகமாய் 100-க்கு 10, 20 பேர்கள் படித்திருக்கிறார்கள். முகம் மதிய பெண்களும், அப்படியே. பார்ர்ப்பன பெண்களோ 100க்கு 60, 70 பேர்கள் படித்திருக் கிறார்கள். மற்றப்படி இந்துப் பெண்கள் என்கின்றவர்கள் சராசரி 100க்கு ஒருவர் வீதம் கூட இல்லை.

பெண்களுக்கு அய்ஸ்கூல், மிடில் ஸ்கூல் முதலியவை ஒரு ஜில்லாவுக்கு ஒன்று இரண்டு கூட அதிசயமாய் இருக் கிறது. பெண்களுக்கு மேல் படிப்புக்கு சம்பளமில்லாமல் சொல்லி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரும் பெண் களை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். சுதந்திரகார னுக்கு பெண்களை தக்கவர்களாக இருக்கும்படியான தொழில் கல்வி ஆகியவைகள் தேடிக் கொடுக்க வேண்டியது பெற் றோர் கடமையாகும்.

இம்மாதிரியான காரியங்கள் கல்யாண விஷயத்திலும் பெண்கள் விஷயத்திலும் முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியி ருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள் ளுகிறேன். (கீழையூர், திருப்புவனம், திருச்சி ஆகிய இடங்களில் முறையே தோழர்கள் வேலு - தனபாக்கியம், நாராயணசாமி - அரங்க நாயகி, சக்கரபாணி - மீனாட்சி ஆகி யோருக்கு நடைபெற்ற திருமணங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்)

குடிஅரசு - சொற்பொழிவு - 16.06.1935

-விடுதலை,7.5.17