புதன், 28 மார்ச், 2018

வேடிக்கை சம்பாஷணை - சித்திரபுத்திரன் -


18.03.1928- குடிஅரசிலிருந்து.. 

குடித்தனக்காரன் : அய்யா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்குப் புண்ணியமாகும்.

சித்திரபுத்திரன் : அய்யய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடித்தனக்காரன்: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா.

சித்திரபுத்திரன்: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணாள் இருக் கின்றார்களா?

குடித்தனக்காரன் : ஆம் 4, 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்திரபுத்திரன் : அவர்கள் ஏதாவது உங்கள் வீதிப்பக்கம் வந்தார்களா?

குடித்தனக்காரன் : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொணா மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.
சித்திரபுத்திரன் : சரி, சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடித்தனக்காரன் : என்ன அய்யா எனக்குத் தெரியவில்லையே!

சித்திரபுத்திரன் : இது தெரியாதா உனக்குப் பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா?

குடித்தனக்காரன் : நான் கேட்டதில்லையே!

சித்திரபுத்திரன் : அட பைத்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகி றார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடித்தனக்காரன் : அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய்விட்டேன்.
சித்திரபுத்திரன் : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும், நெருப்பு, வயிற் றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித்தனக்காரன் : தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங் களேன்.

சித்திரபுத்திரன் : பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய் என்று சொல்லுகிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்ப தால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள், நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா விட்டால் முடியுமா?

குடித்தனக்காரன் : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது? இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவ தானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக்கிறதே.

சித்திரபுத்திரன் : பின்னை தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர் களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடித்தனக்காரன்: ஓ! ஹோ!! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல் கின்றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்கிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங் களய்யா?

மனிதச் சமுகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக் களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து மனிதச் சமுக ஒற்று மையைக் கெடுத்துப் பொது முன்னேற் றத்தையும் சுதந்திரத்தையும் தடுக்கும் படியான மதம் எதுவாயினும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு தான் வந்திருக்கிறது.

- தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 24.3.18

வெள்ளி, 23 மார்ச், 2018

யாகம்


13.05.1928- குடிஅரசிலிருந்து....

பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பான்மை யோருக்கும் வித்தியாசமிருப்பதாக பார்ப்பனர்களால் சொல்லப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடு வதில்லை என்பதும், பார்ப்பனரல்லாதார் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதுமேயாகும். மாமிசம் சாப்பிடு வதிலும் பதார்த்தத்தில் உள்ள குண தோஷங்களைப் பற்றி அதாவது காய்கறி களுக்கும் மாமிசத்திற்கும் உள்ள ருசி, குணம் முதலி யவைகளைப் பற்றிக் கூட அல்லாமல் ஒரு ஜீவனை வதைக்கின்றது கூடாது என்பதான ஜீவ இம்சையையே பிரதானமாகக் கருதி சொல்லப்படுகின்றது.

இதை உத்தேசித்தே ஆங்காங்கு ஜீவகாருண்ய பிரச்சாரமும், கொலை மறுத்தல் பிரச்சாரமும், புலால் உண்ணாமை பிரச்சாரமும், எவ்வளவோ செய்யப் பட்டு வருகின்றன.

இப்படியிருக்க, இந்த நாளில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும் ஜீவன்களை வதைத்துக் கொன்று தின்பதானது மோட்சத்திற்காக செய்யப்படும் காரியமாய் பாவிக்கப்படுகின்றது. என்னே நமது அறிவீனம்! மாமிசம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பாவமா புண்ணியமா? அவசியமா இல்லையா? என்பதைப் பற்றிய விவகாரத்தை நாம் இந்த வியாசத்தில் வைத்துக் கொள்ளவில்லை.

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க என்கின்ற கொள்கையை மதமாக உடையவர்களும், ராமன் நன்றாக வெந்த நல்ல நல்ல மாமிசமாகப் பார்த்து பொறுக்கி எடுத்து சீதைக்குக் கொடுத்தான் என்கின்ற புராணத்தைக் கும்பிடுவதை மதமாகக் கொண்ட வர்களும், எச்சில் மாமிசத்தை, அதாவது தான் கடித்துத் தின்று ருசி பார்த்து பின்பு சிவனுக்குப் படைத்து அதனால் மோட்சமடைந்த பக்தர்களைப் பாடி மோட்சமடைவதை மதமாகக் கொண்டவர்களும், ஆடும், கோழியும், பன்றியும், எருமைக்கிடாவும் அடுக்கடுக்காகக் கொன்று பூசை செய்ய வேண்டிய கடவுளைக் கும்பிடுவதை மதமாகக் கொண்டவர் களும், வீணாகப் போவது மனிதனின் பசிக்குதவுவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்பவர்களும், தண்ணீரைக் காய்ச்சி சாப்பிட்டால் அதிலுள்ள பல ஜீவன்கள் சாகின்றனவாத லால் காய்ச்சாமல் சாப்பிட வேண்டு மென்றும், விளக்குவைத்தால் அதில் பல பூச்சிகள் வந்து விழுந்து சாகுமாதலால் இருட்டில் இருக்க வேண்டுமென்றும், மூச்சு விட்டு சுவாசம் உள்ளே இழுத்தால் பல பூச்சிகள் உள்ளே போய் இறந்து போகுமாதலால் வாயையும் மூக்கையும் துணியில் மூடிக் கொள்ள வேண்டு மென்றும் சொல்லுகின்ற வர்களும் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுவது சரியா தப்பா என்பதை சுலபத்தில் முடித்துவிட முடியாது.

ஆனால் வேதத்தின் பேரால் கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஆடுகளை வதைத்துக் கொன்றது சரியா? என்பதுதான் இவ்வியாசத்தின் கருத்தாகும். கசாப்புக் கடைக்காரனோ அல்லது வேறு கீழ்த்தரக் கடவுள்களோ ஜீவன்களை ஒரேவெட்டாக ஒரு வினாடியில் வெட்டிவிடச் செய்கின்றார்கள். ஹிம்சை என்பதை அச்சீவன்கள் ஒரு சிறிதும் அனுபவிப்பதற் கில்லாமல் திடீரென்று வெட்டி விடுகின்றார்கள். ஆனால் யாகத்தின் பேரால் உயர்ந்த வகுப்பு பார்ப்ப னர்கள் உயர்ந்த வகுப்பு கடவுளுக்கு மோட்சத்திற்காக உண்ணுவதற்கு பலி கொடுப்பதற்காக செய்யும் கொலையில் மேல் கண்டபடியாவது வெட்டாமல் உயிருடன் விரையை நசுக்கியும் தோலை உரித்தும் வேண்டிய அவயவங்களை உயிருடனிருக்கும் போதே அறுத்தெடுப்பதும் என்றால் எவ்வளவு கொலை பாதகம் - சித்திரவதை - கடுஞ்சித்தம் என்பதை கவனித்துப் பார்க்கவேண்டும் என்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஒரு ஜீவகாருண்ய சங்கமாவது, கொலைமறுத்தல் கூட்டமாவது, சிவனடியார் திருக் கூட்டத்தாராவது இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது இதுவரை பேசினவர்கள் அல்லர். மதமும் கடவுளும் சுயராஜ்யமும் எப்படி புரட்டின் மீதே கட்டப்பட்டிருக்கின்றதோ அது போலவே ஜீவகாருண்யமும் கட்டப்பட்டிருக் கின்றதேயொழிய உண்மையான தத்துவத்தின் பேரில் இல்லை. இதுதான் இப்படி புரட்டு இயக்கம் என்றால், ஜீவஹிம்சை நிவாரண சங்கத்தார் அதாவது ஷி.றி. சி.கி (ஷிஷீநீவீமீtஹ் யீஷீக்ஷீ றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ சிக்ஷீuமீறீtஹ் tஷீ கிஸீவீனீணீறீs) சங்கத்தார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. அவர்கள் இந்த யாகத்தின் பேரால் கொலை பாதகம் செய்த பார்ப்பனர்களை ஷி.றி. சி.கி சட்டப்படி நடவடிக்கை நடத்தி ஏன் தண்டித் திருக்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

மதத்தின் பேராலும் சுவாமியின் பேராலும் செய்யும் காரியங்கள் குற்றமல்ல என்று சொல்வார் களானால், நமது சுவாமிகள் எல்லாவித பாவத்திற்கும் காரண பூதமாகவும் உடந்தையாகவும் இருக்கின்றது என்பதில் என்ன சந்தேகம்? பார்ப் பனர்கள் எது செய்தாலும் அது மோட்சத்திற்கும் சுயராஜ்யத்திற்கு மாக ஆய் விடுகின்றது. அதே காரியங்களை நம்ம வர்கள் செய்வது தேசத் துரோகம், தெய்வத் துரோக மும் ஆய்விடுகின்றது. 
 
- விடுதலை நாளேடு, 23.3.18

செவ்வாய், 20 மார்ச், 2018

உரிமையும் பொறுப்பும்



வீட்டுக்கொரு சுற்றுச்சுவர்போல நாட்டுக்கொரு எல்லைகட்டி, நாட்டுச் செல்வம் நாட்டிலேயே சுழலும் படியாக வழிசெய்யட்டும்! நாட்டு மக்கள் தாம்பிறந்த நாட்டில், உரிமையுள்ள தாய் நாட்டில் தாம் வாழ ஒரு மார்க்கமில்லையே என்று தவிக்கும் தவிப்படங்க வழி வகுக்கட்டும்! உழைப்பவர் யார், யாருண்டோ அவர்களுக்கெல்லாம் உல்லாச வாழ்வுக்கு நாட்டில் இடம் உண்டு என்கிற பிரகடனத்தை விடுக்கட்டும்!

இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக் குறைவும், யோக் கியக்கேடும் மலிந்து விட்டன. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது? எந்த மாதிரியான வேஷம் போட்டால் எப்படியெல்லாம் சுரண்ட முடியும்? என்கிற போக்கும், எந்த அயோக்கிய வேலைகளையும் செய்யலாம் என்கிற துணிச்சலும் பொதுவாகச் சமுதாயத்தில் வலுவாக வளர்ந்திருக்கின்றன. சட்டங்களுக்கு ஒரு மதிப்போ, சமுதாய ஒழுங்குக்கு ஒரு மரியா தையோ இன்று நம் நாட்டில் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லிவிடலாம்.

சமுதாயத்தின் உட்புறத்தில் உள்ள இந்த ஊழல்களின் வாடையே வெளிப்புறத்தில் களவு, கொலை என்கிற பெயரால் வீசுகிறது. இப்போது சமீப காலமாய்த் தமிழ் நாடெங்கும் நடந்து கொண்டு வரும் களவுகளையும், கொலைகளையும் கணக்கிட்டுக் கூட்டினால் எந்தத் திராவிடனும் வேதனை அடையாமல் இருக்க முடியாது. விசித்திரமான திருட்டுகள்! விதவிதமான கொலைகள்! அறியாமையை நிலை நிறுத்தி வைத்து அதை அழகு பார்த்து வரும் இந்த நாட்டில் கொண்டு வந்த மதுவிலக்கினால் ஆயிரக்கணக்கான கொலைகள் குறைந்துவிட்டன என்று ஒரு புறம் கணக்கிட்டாலும், இன்று அந்த ஆயிரக்கணக்கான கொலைகள் என்ற கணக்கையும் மிஞ்சிவிட்டது, நாட்டில் அன்றாடம் நடந்து வருகிற தற்கொலைகள்.

அடிமை நாடாக இருந்த காலம் என்று சொல்லப்படும் ஆகஸ்டு 15க்கு முன்னால், நாட்டில் நடந்து வந்த களவுகள் எத்தனையோ, அவை, இன்று ஒன்று பத்தாக வளர்ந்திருக்கின்றன.

இல்லாமையினால் - எப்படியோ பிழைக்க வேண்டும் என்கிற ஏக்கத்தினால் தனி மனித னாகவோ, சிலர் சேர்ந்தோ நடத்தியதுதான் முன்பு பெரும்பாலான திருட்டுகளுக்குக் காரணம் என்றும், அவைகளில் அநேகமாக எல்லாவற்றுக் கும் தடயங்கள் அகப்பட்டு, குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனர் என்றும் சொல்லக்கூடிய நிலையி ருந்தது. இன்று பெருகிவரும் திருட்டுக்களையும், அவைகளில் பலவற்றுக்குத் துப்புக் கிடைக்கவில்லை என்பதையும் எண்ணினால், கட்டுப்பாடாக அங் கங்கே உள்ள ஒரு பெருங் கும்பல் இத்துறையில் ஈடுபட்டிருக்க வேண்டுமோ என்றுதான் எவரும் எண்ண வேண்டியதாயிருக்கிறது.

சுதந்திரம் புகுந்த ஆகஸ்ட்டுக்கு முன்னால், இந்த நாட்டில் வருஷவாரியாக நடந்த களவு, கொலைகளின் எண்ணிக்கையையும், பின் னால் நடந்திருக்கும் களவு, கொலைகளின் எண்ணிக் கையையும், அவ்விருவகையின் தரத்தையும் அர சாங்கம் வெளிப்படுத்துமானால், அது நிச்சயமாக எவருக்கும் திகைப்பையேயுண்டு பண்ணும்.

இந்த நிலை விரைவில் மாறாவிட்டால், மாறுவதற்காக வழிவகையைச் செய்யாவிட்டால், அயோக்கியத்தனம் செய்யாத - களவு செய் யாத - கொலைபுரியாத மனிதன் என்ன ஒரு மனிதனா? என்கிற நிலைக்குத்தான் சமுதா யத்தைக் கொண்டுபோய் வைப்பதாய் முடியும். கள்ள வியாபாரம் செய்யாத ஒரு வியாபாரி, இந்த நாளில், எப்படி ஒரு வியாபாரி என்று தலையெடுக்க முடியவில்லையோ; பொய், பித்தலாட்டம் பேசாத - செய்யாத வக்கீல், எந்தக் காலத்திலும், எப்படி ஒரு வக்கீல் என்று மதிக்கப்படுவதில்லையோ; லஞ்சம், லைசென்ஸ், சிபாரிசு என்று இல்லாத ஒரு காங்கிரஸ்காரர், இந்த நாளில் எப்படி ஒரு காங்கிரஸ் வீரர் - தியாகி என்று புகழப்படுவதில்லையோ, இவைகளைப்போலவே, அயோக்கியத்தனம் செய்யாதவன் அறிவற்றவன் என்று இழித்துப் பழித்துப் பேசும்படியான நிலை ஏற்பட்டுவிடுமானால் இன்றைய நடப்பில், அது ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலை வளரவேண்டியதுதானா? இந்தப் போக்குத்தான் நாட்டுச் சமுதாய மக்களுக்கு - அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டுமா? இதை எண்ணி எண்ணி நாம் கவலைப்படுகிறோம். இதற்குப் பரிகாரம் என்ன? இந்த ஊழலுக்கு அடிப்படை என்ன? இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில் எங்கே கை வைக்கவேண்டும்? என்பவைகளில் கருத்தைச் செலுத்தி, நாம், மக்களுக்கு - இன்றைய ஆளவந்தார்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வருகிறோம். ஆனால், இதில் கவலை காட்ட வேண்டிய பொறுப்பிலுள்ள, அரசியலை நடத்தும் ஆளவந்தவர்கள் - அவர்களை ஆட்டிப் படைப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? களவும், கொலைகளும் கண்ணுக்குத் தெரியவில்லையா? காதுக்கு எட்டவில்லையா? அல்லது அவை சர்வ சாதாரணமென்று நினைக்கிறார்களா? சமுதாயத் தில் ஊழல் என்றால், மக்களே திருந்தவேண்டுமே தவிர, வேறு எப்படி அது சாத்தியப்படும் என்று கேட்கிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைவர்கள். மக்களுக்கு உரிமையுணர்ச்சி வந்துவிட்டது; ஆனால், பொறுப்புணர்ச்சி வேண்டாமா? என்று இதை விளக்குகிறார்கள் அவர்கள்.

பொறுப்புணர்ச்சி இல்லை என்று கண்டு பிடிக்கும் இவர்கள், பொறுப்புணர்ச்சியை மக்கள் கொள்வதற்குச் செய்திருக்கும் வழி என்ன? வந்து விட்டது உரிமையுணர்ச்சி என்று வாய் கூசாமல் சொல்லுகிறோமே, உண்மையாகவே மக்களி டையே உரிமையுணர்ச்சி பிரதிபலிக்கிறதா? உரிமையை மேலும் மேலும் இழந்து வருகிறோம் என்கிற உணர்ச்சி பிரதிபலிக்கிறதா என்பதை ஏன் எண்ணிப் பார்க்கக்கூடாது? சமுதாய ஊழலுக்குக் காரணம், சமுதாயத்திலுள்ள தனித்தனி மக்களே என்று சண்டமாருதமாகப் பொழிந்து தள்ளும் இவர்கள், சமுதாயத்தின் வழி காட்டியாக - சமுதாயத்தை நடத்திச் செல்பவர்களாக உள்ள நம்முடைய தாறுமாறான போக்கே - நம்முடைய இழி நடத்தையே சமுதாயத்தில் எதிரொலிக்கிறது என்று ஏன் கண்ணியமாக ஒப்புக்கொண்டு, அதற்கான பரிகாரம் ஏன் செய்யக்கூடாது?

பொறுப்பு என்பதே உரிமையின் மீது தானே! உரிமையுள்ள இடத்தில் பொறுப்பை உரக்கக் கூவித்தானா அழைத்து வரவேண்டும்? உரிமையுணர்ச்சி வந்து விட்டது, பொறுப்புணர்ச்சி வரவில்லை என்கிறவர்கள், உண்மையாகவே உரிமையுணர்வு எது என்றே அறியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது உண்மையைத் திரித்துக் கூறும் உலுத்தர்களாக இருக்கவேண்டும் - ஏன்?

உரிமையும் பொறுப்பும் ஒன்றோடொன்று இணைந்தவை; இணைந்தவை மட்டுமல்ல கலந்தவை! எங்கெங்கு உரிமையுண்டோ அங்கெல் லாம் அந்த உரிமையின் முழுப் பகுதியிலும் பொறுப்புணர்ச்சி பற்றிப் படர்ந்திருப்பதையே ஒவ்வொருவரும் காணுகிறோம். பொறுப்புணர்ச்சி இல்லை என்றால் அங்கு உரிமையுணர்ச்சி இல்லை என்பதுதான் தெளிவு. மக்கள் பொறுப் புணர்ச்சி உடையவர்களாக - சமுதாயத்தின் அங்கத் தினர்களாகிய நாம் செய்யும் ஒவ்வொன்றும், சமுதாயத்தையே பாதிக்கும் என்கிற பொறுப்பை யுடையவர்களாக இல்லை என்றால், நம் சமுதாயம் நம் நாடு என்கிற உரிமையுணர்வு நிச்சயமாக மக்களுக்கு இல்லை என்பதுதானே அதற்கு உண்மை.

இந்த உரிமையுணர்வை மக்கள் கொள்ளும்படி இன்றைய ஆளவந்தார்கள் செய்திருக்கும் ஏற்பாடு என்ன? ஆளவந்தவர்களின் மூலபலமான காங்கிரஸ் இத்துறையில் சாதித்திருப்பது என்ன? சாதிக்கப்போவது என்ன?

நாள் முழுவதும் பாடுபடுகிற பாட்டாளிக்குப் பாட்டின் பலனிலே பங்குண்டு, அவன் நடை பிணமாய் வாழ்வதற்கு என்றிருக்கும் நிலைமாறி, பாடுபட்டுக்கிடைக்கும் பலனை பாடுபடுபவனே அடைவான் என்கிற நிலை வந்துவிட்டதா? அந்த நிலைக்கான அடிப்படை போடப்பட்டிருக்கிறது என்றாவது, பாடுபடுபவன் இன்றைய நிலையில் எதிர்பார்க்கத்தான் முடியுமா? நிலைமை இப்படி இருக்கும்போது அதாவது உரிமையுணர்வுக்கே இடமில்லாதபோது பொறுப்புணர்வைப் பற்றிப் பேசுவதினால் ஏதாவது பயன் உண்டாகிவிடுமா? உரிமையில் செலுத்தப்படும் மற்றவர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படாதவரை, ஆதிக்கத்தில் அடங்கி நிற்கும் உழைப்பாளர்களிடத்தில் உரிமை யில் ஒரு பொறுப்பை எப்படித்தான் எதிர்பார்க்க முடியும். ஆம்! வீட்டுக்கொரு சுற்றுச்சுவர்போல நாட்டுக்கொரு எல்லைகட்டி, நாட்டுச் செல்வம் நாட்டிலேயே சுழலும் படியாக வழிசெய்யட்டும்! நாட்டு மக்கள் தாம்பிறந்த நாட்டில், உரிமை யுள்ள தாய் நாட்டில், தாம் வாழ ஒரு மார்க்க மில்லையே என்று தவிக்கும் தவிப்படங்க வழி வகுக்கட்டும்! உழைப்பவர் யார், யாருண்டோ அவர்களுக்கெல்லாம் உல்லாச வாழ்வுக்கு நாட்டில் இடம் உண்டு என்கிற பிரகடனத்தை விடுக்கட்டும்! மக்களின் மொழி, கலை, நாகரிகம், முதலியவற்றில் மக்களுக்கே, முழு உரிமையும் என்கிற பேச்சை நடத்தையில் காட்ட முன்வரட்டும்! மக்கள் மக்களாகவே மதிக்கப்படுவர், மக்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை என்கிற நம்பிக் கையையூட்டட்டும்! இதுதான் இன்று திராவிடர் கழகம் கூறுவது, வேண்டுவது. முழக்கமிடுவது!

இந்த உரிமையுணர்வு மக்களுக்கு ஊட்டப் படாதவரை, சமுதாயத்தில் ஒரு ஒழுங்கையோ, சமுதாய மக்களிடம் நாணயத்தையோ, நல்ல நடத்தையையோ, பொறுப்பான செயல்களையோ எப்படி எதிர்பார்க்க முடியும் என்று நாம் கேட்கிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 19.02.1949

-  விடுதலை நாளேடு, 19.3.18

திங்கள், 19 மார்ச், 2018

கடவுள், மதம், ஜாதி இவை சம்பந்தமான ஆதாரம்



தென்னாட்டில் வாழும் திராவிட மக்களாகிய -_ தமிழர்களாகிய நமக்குக் கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை; இவை சம்பந்தமான ஆதாரம் இல்லை. ஆனால், கடவுள் விஷயத்தில் அன்பே கடவுள் என்று ஏகாரம் கொடுத்துக் கூறுகிறோம்.

மத விஷயத்தில் சைவம் _- வைணவம் ஆகிய இரண்டு மதங்களைக் கூறிக் கொள்ளுகிறோம். இம்மதங்களுக்கு மூலக் கருத்து சிவன், விஷ்ணு என்கிற இரண்டு கடவுள்களைக் குறிப்பாய் வைத்து இம்மதங்களைக் கருதிக்கொண்டு இருக்கிறோம்.

நமக்குப் பிறவியினால் ஜாதிப் பிரிவு, ஜாதி பேதம் இல்லை என்கின்றோம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஜாதியின்பாற்பட்டவர் களாகவே இருக்கிறோம்.

நமக்கு உண்மையில் கடவுள், மதம், ஜாதி சம்பந்தமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், தேவாரம், திருவாசகம், நாலாயிர பிரபந்தம் முதலியவற்றை ஆதாரமாக - தமிழர்களின் வேதங்களாக - மறைகளாகக் கொள்ளுகிறோம்.

இந்த ஆதாரங்கள் சிவனையும், விஷ்ணுவையும் கடவுள்களாகக் கற்பித்த புராணங்களில் உள்ள வெறும் புளுகு _- மூடநம்பிக்கை. அதாவது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவர முடியாத, கண்மூடித்தனமாக நம்பியே தீர வேண்டியதான, குழந்தைகளுக்குப் பாட்டிமார் சொல்லும் பூச்சாண்டிக் கதைகள் போன்ற கற்பனைகளை நம்பி ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். நம்மில் பாமர மக்கள் மாத்திரம் அல்லாமல், விஞ்ஞானப் பயிற்சி பெற்ற புலவர்கள், ஆராய்ச்சி அறிவு பெற்ற புலவர்கள், இலக்கிய அறிவு பெற்ற புலவர்கள், பொதுவாகக் கல்வி அறிவு, உலக ஞான அறிவு பெற்ற புலவர்கள் வரையிலும் கூட இந்தத்  தரம் உள்ள ‘அறிஞர்’களாகவே இருக்கிறார்கள்.

கடவுளை ஒப்புக் கொண்டால், மதத்தை ஒப்புக் கொண்டாக வேண்டும். மதத்தை ஒப்புக் கொண்டால், ஜாதியை ஒப்புக் கொள்ள வேண்டும். இவற்றை ஒப்புக் கொண்டால், இவற்றுக்கு ஏற்ற ஆதாரங்களை ஒப்புக் கொண்டு ஆக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம்.

‘பொல்லாத வாய்ப்பின் மேல் வாய்ப்பு ஏற்பட்டது’ போல, நமக்கு ஏற்பட்ட ஆட்சி முறையும், இவற்றைப் பாதுகாத்து வலியுறுத்தி நம் பிடரியின் மேல் ஏற்றும் தன்மையாகவே இருந்து வருகிறது. இதற்கு ஏற்றவண்ணமே நம் நாட்டில் இருக்கிற -_ ஏற்படுகிற சமய, சமுதாய, அரசியல் துறை ‘பொதுநலத் தொண்டர்கள்’ என்பவர்களும் இவற்றை எதிர்க்கவோ, விலக்கவோ கூடாத துணிவற்று வாழ வேண்டியவர்களாகவே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.

திராவிடர் கழகத்தார்கள் இத்துறைகளில் எதிர்ப்புக் காட்டியும், விளக்கம் சொல்லியும் தொண்டு ஆற்றிவருகிறார்கள் என்றாலும், அவர்களுக்குப் போதிய ஆதரவளிக்க நாட்டில் மக்கள் தகுதி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. திராவிடர் கழகக் கொள்கைகளை ஆதரிக்க பாமர மக்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அவர்கள் ஆதரவு முருங்கை மரம் போன்று பயன்படும் தன்மையாக இருந்து வருகின்றது.

பாமர மக்கள் நம்ப முடியாதவர்கள். அவர்கள் உள்ளத்தில் நம் கொள்கைகளைப் புகுத்த மாத்திரம் நாம் முயற்சிப்பது பொருத்தமாகுமே தவிர, அவர்களுடைய ஆதரவைப் பெறுவது என்பது அசாத்தியமான காரியம் என்றே கருத வேண்டி இருக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நம் பிறவி எதிரி பார்ப்பனர் பத்திரிகைகள் இந்த நாட்டில் நடமாடுகிற அளவில் 10இல் ஒரு பாகமாவது, அந்தப் பாமர மக்களுக்கும் படித்த மக்களுக்குமாக பெரும் கஷ்ட நஷ்டத்தோடு நடந்து வரும் பத்திரிகை, மக்களிடத்தில் பரவ வேண்டாமோ! இல்லையே? அதன் காரணம் என்ன என்றால், பாமர மக்களின் தன்மை அவ்வளவுதான் என்பதேயாகும்.

“படித்தவர்கள்’’ என்றால் பாமர மக்கள் அல்லாதவர்கள் என்பதல்ல அதன் கருத்து. படித்தும் அறிவு இல்லாத பாமரர் என்பதுதான் கருத்து.

நாம் “படித்தவர்கள்தான்’’. படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்று கருதி விட்டால், அந்தக் கருத்து படியாத மக்கள் என்பவர்களுக்குப் பெரும் கேடு செய்ததாகவே முடிந்து விடும். நம் மக்கள் பெரிதும் அறிவு_-இனநலம் பெற முடியாமல் செய்யப்பட பரம்பரையாக ஆனவர்கள் ஆனதால், இன்றைய நிலைக்கு இனியும் இரண்டொரு தலைமுறை ஆகித் தீர வேண்டிய நிலையில் பெரிதும் இருக்கிறார்கள். அதனால்தான் நம் படித்த மக்கள் என்பவர்களுக்கும் முக்கியமாய் இருக்க வேண்டிய அறிவு இல்லாமல் மக்களையும், பாமர மக்கள் குறிப்பிலேயே சேர்க்க வேண்டி இருக்கிறது. (ஏனென்றால், இவர்களது தாய், தந்தையர்களைக் கவனித்தால் சிறிது விளங்கும்).

எனக்கு ‘முன்ஜென்மம், முற்பிறப்பு, அவற்றின் விதி’ என்பனவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால் பரம்பரையில், அதற்கேற்ற உடல் _- உள் உறுப்பு _- இவற்றின் தன்மை ஆகியவற்றின் அமைப்பில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என் தகப்பனாரின் குணம் என்னிடம் இருக்கக் காண்கின்றேன். என் தகப்பனாரின் அங்க அடையாளம் ஒன்று இரண்டு என்னிடம் இருக்கக் காண்கின்றேன். இந்தப்படிப் பலரிடம் காண்கின்றேன். ஏன், ஆடு, மாடு, நாய் முதலியவற்றிடமும் காண்கின்றேன். மாம்பழக் கொட்டை போட்டால் மாமரம் முளைக்கிறது மாத்திரமல்லாமல், அதன் புளிப்பு, இனிப்பு நிறம் கூட மூலமரத்தின் தன்மையை ஒத்தே இருக்கின்றது. இரண்டு தலைமுறைக்கு முந்திய பெற்றோர் குணமும், உருவச் சாயலும் மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர் கின்றது. ஆதலால், பரம்பரை மறைந்து விடுவது என்பது எளிதில் முடியாதது. வள்ளுவர் ‘ஊழ் முந்துறும்’ என்று சொன்ன ஊழின் கருத்து இதுவே தான். ஆதலால், நமக்கு ஊழ் மறைய பெரும்பாலோருக்கு 2, 3 தலை முறைகளாவது தேவை இருக்கிறது.

மற்றும் அறிவில்லாதவர்களுக்கு அவர்கள் எவ்வளவு படித்தாலும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவர்களுக்குச் சுயநலமே முந்துறும். பிறநலம், இனநலம் என்பவற்றைச் சுயநலமாகக் கருதும் தன்மை உள்ளவர்களைத் தான் அறிவாளிகள் என்றும், நல்வழி கண்டுபிடித்தவர்கள் என்றும் சொல்லத்தகும்.

ஆதலால்தான் நமக்கு கற்றவர்கள், செல்வர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவு இல்லை என்பது மாத்திரமல்லாமல், கல்லாத பாமர மக்கள் ஆதரவு இல்லை என்றாலும், நம் கருத்து - முயற்சி வெற்றி பெறவில்லை என்று சொல்ல முடியாது. அதற்கு உதாரணம் நாம், நம் கழகம், நம் பத்திரிகைப் பிரசுரங்கள் ஆகியவை இன்னும் உயிரோடிருப்பதேயாகும்.  இவற்றோடு நமது முயற்சிகள் சிறிதும் தளராதிருப்பதேயாகும்.

மற்றும் நமது சமுதாய வாழ்வில் சுற்றுச் சூழலில் கல்வியில், இன நலமோ, பிற நலமோ பெறத் தக்க வாய்ப்பு இல்லை. நமக்குள் இனப் பிரிவு வெட்கப்படத்தக்க தன்மையில் இருந்தாலும் அதன் பேராலும் சுயநலமடையும் அளவுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.

இதற்கு இப்படிப்பட்ட மக்கள் மீதே குற்றம் சொல்ல முடியாதபடி இனஉணர்ச்சி நம்மில் இருப்பதால், மக்கள் இந்த இன உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் சொல்லலாம்.
நிற்க.

எடுத்துக் கொண்ட விஷயமாகிய கடவுள், மதம், ஜாதி ஆதாரம் ஆகிய விஷயங்களுக்குச் செல்லுகிறேன். “கடவுள் என்றாலே அறிவைப் பயன்படுத்தக்  கூடாதது’’ என்று தான் பொருள். ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “கடவுள்கள் என்றாலே காரண - காரியம், ஆதி _- அந்தம், இறப்பு _ பிறப்பு கூற முடியாதது மாத்திரமல்லாமல், கேட்கவே முடியாதது என்ற தத்துவமுடையது. ஆதலால் கடவுளுக்கு இவை கேட்பது நாத்திகமாகும்’’ என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால், கடவுளைக் கற்பிப்பவர்கள், “உலகத் தோற்றத்திற்குக் காரண காரியம் வேண்டாமா? அதுதான், உலகுக்குக் காரணகாரியமாக இருப்பது கடவுள்’’ என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ போகட்டும் என்றாலும், தமிழர்களாகிய நமக்குக் கடவுள் உண்டா? கடவுள் ‘இலட்சணத்திற்கு’ உட்பட்ட கடவுளை யாவது நாம் கொண்டு இருக்கிறோமா? சிவனும், விஷ்ணுவும் கடவுள் ஆனவர்களா கடவுள் தன்மை அல்லது கடவுள் இலட்சணம் கொண்டவர்களா என்பதைக் கூட “இயற்கையை வணங்கினார்’’ என்கின்ற தமிழன் சிந்திப்பதில்லை என்றால், தமிழன் இன்னமும் பகுத்தறிவு பெற்ற மனிதப் பரம்பரைக்கு வரவில்லை என்றுதானே அர்த்தம்?

சிவனையும், விஷ்ணுவையும் உருவகப்படுத்தி இருக்கும் தன்மை கடுகளவாவது மனிதத் தன்மைக்கு ஏற்றதா என்று தமிழர்களில் யார் சிந்திக்கிறார்கள்? அதுபோலவே, மதம் விஷயத்திலும் எதற்காக மதம் என்பதைத் தமிழர்களில் தெரிந்து கொண்டவர்கள் யாரும் எனக்குத் தென்படவில்லை. உலகின் மதங்கள் பல இருந்தாலும் அவை அந்தந்த மத மக்களை ஈடேற்றவும், ஒழுங்குபடுத்தவும், ஒற்றுமை, கட்டுப்பாடு, சகோதர உணர்ச்சி ஏற்படவும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காகவே இருந்தும் வருகிறது. இக்கருத்துகளில் சிறிதாவது வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், நம் மதம்?

‘விடுதலை’ நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
-‘விடுதலை’  2.2.1959

- உண்மை இதழ், 1-15.1.18