தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
திங்கள், 28 டிசம்பர், 2020
பெரியார் புத்தகங்களின் PDF
சனி, 26 டிசம்பர், 2020
முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
தந்தை பெரியார்
மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப்பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக்கொண்டு வருகிறோம்.
சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம். அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள் இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணிவாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழைமக்கள், கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், வொயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங்களை குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது. இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன்வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபாவளிக்கு முன் சில நாட்கள், தீபாவளிக்குப் பின் சில நாட்கள், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்கள் எவ்வளவு?
இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை, சரியாய் 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்து விட்டது. இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும் மதத்தின் முக்கிய பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது வரும் கேடான பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பது தான்.
இந்தக் கார்த்திகைத் தீபப்பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர் வீரசைவர், மர்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாகக் கார்த்திகை நட்சத்திர தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூஜைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீஸ்வரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக் கணக்காகவும், இலட்சக்கணக்காகவும், ஆகும்போது பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா? (இதில் எவ்வாறு பொருள் வீணக்கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்! தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தங்கிக்கிடக்கும் பட்டாசுகளுக்குச் செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.)
வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும், எண்ணற்ற 100, 1000, 10000, 1000000கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு! கார்த்திகைப் பண்டிகைக்காக திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப்பானை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு? இவ்வாறு பல வகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்.
(இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்க வழக் கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!) கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-
ஒரு சமயம் அக்னி தேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதை அறிந்து அவன் மனைவி சுவாகாதேவி என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படுவான் என்று என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவங்கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாம். இந்த நட்சத்திர பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி குழந்தையாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார்களாம்! என்பது ஒருகதை.
இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்; பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவைமட்டும் அல்லாமல் இயற்கைப் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூட நம்பிக்கையை உண்டாக்கும் துர்போதனை ஒன்று. ஆகவே இவற்றை ஆராயும்போது இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்டவிதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்
இனி, கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:- ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச்சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம். ஆகையால் அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு, வானத்திற்கும் பூமிக்குமாக நின்றாராம். உடனே சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம், அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக் கடவுள், “ஏ, பிரம்ம விஷ்ணுகளே! இந்த ஜோதியின் அடி முடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர்’’ என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவம்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன் தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க; அது நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம். உடனே பிரம்மன் நான் சிவனுடைய முடியைப்பார்த்து விட்டதாக சிவனிடத்தில் எனக்காக சாட்சி சொல்லுகிறாயா என்று கேட்க,அதுவும் சம்மதிக்க, இருவரும், பரமசிவனிடம் வந்து முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்ததாம். அதுகண்ட சிவன் கோபங்கொண்டு, இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக்கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம், பரமசிவனும் அதற்குச் சம்மதித்து ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப்புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.
இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியார்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களைவிட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டிச் சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப்புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை. இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல இவ்வாறு மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற்காரணமாக இருப்பதை அறியலாம். இந்தக்கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்குள்ளேயே சண்டை வந்தது ஒரு விந்தை! இதுபோலவே ஆராய்ந் தால் பரிகாசத்திற்கும் வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அனேகம் செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டு பக்தியும், மூட நம்பிக்கையும்; முட்டாள் தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?
-22.11.1931
- ‘குடிஅரசு’ - தலையங்கத்திலிருந்து...
- உண்மை இதழ் 1- 16 .12 .19
வெள்ளி, 25 டிசம்பர், 2020
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த 1948ஆம் ஆண்டிலேயே குழு
உங்களுக்குத் தெரியுமா?
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த 1948ஆம் ஆண்டிலேயே - அன்றைய முதல்வர் ஓமந்தூரார் ஒரு குழு அமைத்தார் என்பதும் பின்னால் வந்த ஆச்சாரியார் அத்திட்டத்தைக் கைவிட்டார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
- உண்மை இதழ் 16 -31. 12 .19
நான் யார்?
தந்தை பெரியார்
“அன்புள்ள திராவிட மந்திரிமார்களே நான் யார்? உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள் உத்தியோகம் பதவிபற்றி பொறாமைப் படுகிறவனா? அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா?
இதுவரை, என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா?
உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா? எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?
டாக்டர் சி. ராஜகோபாலாச்சாரியாருக்கு நாளைக்கு கருப்புக் கொடி பிடிக்கச் செய்ய வேண்டியவனாக நான் ஆனாலும் அவரிடத்தில் சொந்தத்தில் சிறிதாவது வெறுப்போ துவேஷமோ அல்லது -அன்புக்குறைவோ மதிப்புக் குறைவோ எனக்கு உண்டு என்று அவராவது வேறுயாராவது சொல்ல முடியுமா? தவிர, 1911ஆவது வருஷம் வரை நான் மைனர், ஒரு முரடன், 1911இல் என் தகப்பனார் செத்தது முதல், அதாவது 1911 முதல் 1920ஆம் ஆண்டு வரையில் நான்,
1.தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்ட்
2.ஆனரரி மாஜிஸ்டிரேட்
3.கோ-ஆப்ரேடிவ் அர்பன் பாங்கிச் செக்ரட்டரி
4.தாலுகா போர்டு மெம்பர்
5.ஜில்லா போர்டு மெம்பர்
6.914இல் ஈரோட்டில் நடந்த கோவை ஜில்லா காங்கிரசு கான்பிரன்சுக்கு செக்ரட்டரி
7.ஆனரரி வார் ரிக்ரூட்டிங் ஆபீசர்
8.மகாஜன ஸ்கூல் செக்ரட்டரி
9.ஈரோடு ரீடிங் ரூம் செக்ரட்டரி
10. ஈரோடு முனிசிபல் வாட்டர் கீம் செக்ரட்டரி
11.வார் கமிட்டி செக்ரட்டரி
12.வார்பண்ட் கலெக்ஷன் கமிட்டி பிரசிடெண்ட்
13.ஓல்ட் பாய்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட்
14.எ.அய்.சேம்பர் ஆப் காமர்ஸ் சப்கமிட்டி மெம்பர்
15.வருஷம், 900 ரூ. இன்கம் டாக்ஸ் (1920இல்) அந்தக் காலத்தில் கொடுத்து வந்த வியாபாரி.
16.கடைசியாக முனிசிபல் சேர்மன் ஆகவும் இருந்தவன்.
17.ஈரோடு வாட்டர் வர்க்ஸ் வேலை முடிந்து திறப்பு விழா ஆற்றியதற்கு சர்க்காரில் எனக்கு சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் சிபாரிசு செய்த ராவ்பகதூர் பட்டத்தை மறுத்துவிட்டு, காங்கிரசு சேவைக்கு ஆக என்று இவ்வளவு பதவிகளையும் ராஜினாமா கொடுத்து, சிலவற்றை ஏற்க மறுத்து, சன்யாசி வேஷம் கொண்டு ஆச்சாரியார், வரதராஜுலு நாயுடு விருப்பப்படி காங்கிரசில் சேர்ந்தவன்.
18.இவைகளை ராஜினாமா கொடுத்தபிறகு கூட சர்க்கார் இன்கம் டாக்ஸ் _- அப்பீல் கமிட்டி மெம்பராக எண்ணைவித்து, கயிறு வியாபாரிகள் அப்பீலுக்கு தனி அப்பீல் அதிகாரியாக நியமித்தார்கள். இதற்கு தினம் 100 ரூபா. படி - 1 1/2 முதல் வகுப்புப்படி.
19.காங்கிரசுக்கு வந்த உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியானவன்.
20.அடுத்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவன் ஆனவன்.
21.தமிழ்நாடு காதி, வஸ்திராலய பவுண்டர் துவக்கியவன் ஆகவும் 5 வருசத்துக்கு தலைவனாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சுமார் 40 கதர் கடையும், 30 ஆயிரம் முதல் 100000 ரூ. வரை மாதம் கதர் உற்பத்தியும் செய்யும்படி ஏற்பாடு செய்தவன்.
22.1924இல் நான் பார்ப்பனியம் - பார்ப்பன ஆட்சி பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி 1926 முதல் 1936 வரை ஜஸ்டிஸ் மந்திரிகள் நண்பனாக இருந்தவன். அக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் பாடுபட்டவன்.
23.இவ்வளவு சம்பந்தத்திலும் பாட்டிலும் யாரிடமிருந்தாவது ஒரு சின்னக்காசு வரும்படியோ, பட்டமோ எனக்காவது எனக்கு வேண்டியவர்களுக்காவது, என் குடும்பத்துக்காவது ஒரு சிபாரிசோ பதவி லாபமோ ஏதாவது பெற்றவனா? ஆசைப்பட்டவனா?
24.நான் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்பும்கூட காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தில் கதரைத் தவிர மற்றவைகளுக்கு ஆக உழைத்தவனே தவிர, எதையாவது எதிர்த்தவனா?
25.இந்தி விஷயத்திலும்கூட இந்தி பள்ளிக்கூடம் தென் இந்தியாவில் 1922இல் முதல் முதல் துவக்கத்திற்கு இலவச இடம், 15 மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுத்து வந்ததோடு அதன் பண்டுக்கும் உதவி செய்து பெருந் தொகை வசூலித்துக் கொடுத்து உதவிசெய்தவன்.
26.அன்றியும் காங்கிரஸ் திட்டத்தில் பார்ப்பன ஆதிக்கம் தவிர, மற்றபடி நான் எதற்கு விரோதி?
27.இன்று தானாகட்டும், எனது அரசியல் கொள்கை என்பதுகூட திராவிடநாடு வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து அரசியலிலும் பொருளாதாரத்திலும் பிரிந்து பர்மா, சிலோன் போல ஒரு தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி காங்கிரஸ் அரசியல் கொள்கையில் திட்டத்தில் நான் எதற்கு விரோதி?
28.இந்தத் திட்டத்திலும் என்னிடம் ஏதாவது இரகசியமுறை இருக்கிறதா?
29.திராவிட நாடு தனியாய் பிரிந்தால் மந்திரிமார்களே! பெரிய அரசியல்வாதிகளே!! திராவிட நாட்டுக்கு என்ன கெடுதி ஏற்படக் கூடும்? என்று இதுவரை நீங்களாவது சொன்னீர்களா?
இவை நிற்க, இனி எனது சமுதாயத் திட்டம் தானாகட்டும் வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டுமென்பதும், பார்ப்பன சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும் எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும் சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன்மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும் சலுகையும் இருக்கக் கூடாது என்பதும் தானே?
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப் பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகை கொடுத்து கூடியவரையில் சம சமுதாயமாக்கப்பட வேண்டுமென்பதும் தானே?
சமயத் துறையில் புராணக் கடவுள்கள் பிரச்சாரமும், விக்கிரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோவில், மடம், வர்ணமுறை, தர்மம் என்பவைகள் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, சேர்ப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும்,
தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும், இல்லாமல் நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமை உணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதும்தானே ஒழிய, மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?
கல்வியில் தானாகட்டும், 100க்கு 90 திராவிட மக்கள் கைநாட்டுத் தற்குறிகளாய் இருக்க, இதைச் சரிபடுத்தாமல் (அய்ஸ்கூல், உயர்தரப்பள்ளியும் காலேஜ், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கி கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்யக் கூடாது என்பதைத் தவிர, கல்விக்கு நான் எந்த விதத்தில் என்ன கெடுதி செய்கிறேன்?
நமக்கு அரசியலுக்கோ, சமய சமுதாய இயலுக்கோ, வேறு கலை இயலுக்கோ ஆள்கள் வேண்டுமானால் வேண்டிய அளவுக்கு கிராண்டு காலர் ஷிப், டைபண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படி செய்து வேலை வாங்கலாம் என்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட்டில் பிரபுக்களுக்கு மாத்திரம் கிடைக்கும்படி கலைகளுக்கு, உயர்ந்த கல்விக்கு ஏழைகள் பணம் ஏன் செலவு செய்யவேண்டும்?
என்பவை போன்ற கருத்தன்னியில் மற்றபடி நாம் எந்த விதத்தில் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவனாக இருக்கிறேன்? அன்றியும் என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத்காரத்தைத் தூண்டும் சொல்லையோ செய்கையையோ ஜாடையையோ கண்டீர்களா?
அல்லது என் பேச்சால், எழுத்தால், செய்கையால் எங்காவது என்றாவது பலாத்காரம், கலகம், குழப்பம் ஏற்பட்டதா? சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையை கண்டீர்களா? குழப்பம் கலவரம் உண்டாகும் ஜாடையையோ அனுபவத்தையோ கண்டீர்களா?
ஆதலால், இந்திப் போராட்டத்தை ஒடுக்குவது என்கிற சாக்கை வைத்துக்கொண்டு என் முயற்சியை, என் தொண்டை நீங்கள் அழித்து விடுவது என்று முடிவு செய்து கொண்டீர்களானால் அதை உங்கள் இஷ்டத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எனது தொண்டுக்கும் முயற்சிக்கும் இந்தி ஒழிப்பது என்பது மாத்திரமே காரணமல்ல என்பதை உணர்ந்து அடக்குமுறை துவக்குங்கள். என் முயற்சி, தொண்டு எல்லாமுமே நியாயமானது; அவை வெற்றி பெற வேண்டும் என்பதேயாகும். அதற்கு நீங்கள் எந்த வித தடங்கலும் குந்தகமும் செய்யக் கூடாது என்பதற்கேயாகும்.
உங்கள் எண்ணத்தை, நடத்தையை நீங்கள் பதவிக்கு வந்த இந்த சுமார் ஒரு ஆண்டாக நான் கவனித்து வருகிறேன். என் விஷயத்தில் இதுவரை பார்ப்பன ஆதிக்க மந்திரிகளால் செய்யப்படாத, காரியங்களை நீங்கள் செய்தீர்கள். அவர்கள் அனுமதித்து வந்த காரியங்களை நீங்கள் தடுத்தீர்கள். அவர் காட்டிய சலுகையைக்கூட நீங்கள் காட்ட மறுக்கிறீர்கள்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் பதவிப் பித்து அல்லது பயங்காளித்தனம்தானே? இல்லாவிட்டால் நான் என்ன அயோக்கியனா? சமுதாயத்துக்கு, அரசியலுக்கு ஆபத்தானவனா? என்னமோ செய்யுங்கள்!
- “குடிஅரசு” - கட்டுரை - 21.8.1948
- உண்மை இதழ் 16 -31. 12. 19
உலகிற்கே ஒளிதரும் சுயமரியாதைச் சூரியன் பெரியார்!
தந்தை பெரியார் அவர்களை கடவுள் மறுப்பாளர், ஆரிய பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற அளவில் சுருக்கி, குறுக்கிக்காட்டும் செயலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் சூழ்ச்சிக்காரர்கள்.
ஆனால், பெரியார் உலகம் உய்ய உரிய வழிகளைச் சொன்ன ஒப்பற்ற சுயசிந்தனையாளர். அதனால் அவர்தம் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
அவரின் உலகளாவிய சிந்தனைகள் சிலவற்றை தொகுத்து நோக்கின் இவ்வுண்மையை எளிதில் அறியலாம்.
உலக நோக்கில் உயரிய சிந்தனைகள் :
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி (அமைதி) வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.
(“குடிஅரசு’’ 07.08.1938)
நான் உலகமே நாத்திக (பகுத்தறிவு) மயமாக வேண்டும் என்பதற்காகவே உயிர் வாழ்பவன்.
(“விடுதலை’’, 02.09.1967)
மனிதன், உலகில் தன் சுயமரியாதையை,-தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.
(“விடுதலை’’, 20.9.1962)
மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும், மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும். மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும், அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்குக் கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்?
(“விடுதலை’’, 18.10.1957)
உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழவேண்டுமானால் பிச்சை கொடுப்பதும், பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.
(“குடிஅரசு’’ 21.4.1945)
வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
(“குடிஅரசு’’ 4.5.1930)
ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தக் காலத்திலும் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது கிடையாது என்பதை வரலாறு கூறும். சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்; மக்களும் சமுதாயச் சீர்திருத்தம் அடைந்துதான் வருவர்.
(“விடுதலை’’, 16.10.1958)
சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை - மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்துவிட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை- ஜாதியற்ற, உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்க வேண்டும்.
(“விடுதலை’’, 15.5.1962)
உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான், மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிக மிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக்கொண்டு, கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.
(“விடுதலை’’, 22.5.1961)
இன்றைய உலக நிலை-அதாவது மக்களுக்கு உள்ள தொல்லைகள், துயரங்கள், மக்களை மக்கள் ஏய்த்து வஞ்சித்தல் ஆகியன ஒழித்து, மக்களுக்குச் சாந்தியும் திருப்தியும் ஏற்பட வேண்டுமானால், பொதுவுடைமைத் தத்துவ ஆட்சி ஏற்பட்டே ஆக வேண்டும். இதில் ராசிக்கு (சமாதானத்துக்கு) இடமே இல்லை. ஆனால், நம் முயற்சியில், பாமர மக்களுக்கு இம்சையும், நாச வேலையும் சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.
(“விடுதலை’’, 5.5.1950)
நிலம் முழுவதும் ஏராளமாக ஒரு மனிதன் வசம் தேக்கப்பட்டிருக்கக் கூடாது. அனைவருக்கும் அவரவர்கள் அளவுக்குப் பிரித்துக் கொடுக்கும் காலம் வரும். அந்தப்படியான காலத்தை விரைவில் ஏற்படுத்த நம்மால் முடியாவிட்டாலும் நாம் வழிகாட்டிகளாயிருக்க வேண்டும்.
(திராவிட விவசாய தொழிலாளர் கழகம் ஏன்? 16)
கவலையற்ற-பேதமற்ற நிலை ஏற்படவேண்டுமானால், யாவரும் ஒரு நிலையில் இருக்கத்தக்க சமதர்ம நிலை உருவாக வேண்டும். இந்தச் சமதர்ம நிலை உருவாவதற்கு முதலில் சொத்துரிமையை ஒழித்தாக வேண்டும். உடைமைகள் எல்லாம் பொதுவாக ஆக்கப்பட வேண்டும்.
(பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, 16)
பாட்டாளிகளின் கவலையும் தொல்லையும் தொலைய வேண்டுமானால், முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும்.
(“விடுதலை’’, 7.4.1950)
பொது உடைமைக் கொள்கையின் கடைசி லட்சியம் _ உலகம் பூராவும் ஒரு குடும்பம், உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்;-உலகத்தில் உள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; -குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்பதேயாகும்.
(“குடிஅரசு’’ 10.9.1933)
ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையே மனித சமுதாயத்தில் இல்லாதிருக்குமாறு செய்வதேயொழிய, அங்கொருவனுக்கும் இங்கொருவனுக்கும் பிச்சைச் சோறு போட்டுச் சோம்பேறியாக்குவதல்ல.
(“விடுதலை’’, 22.4.1950)
அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதைப் பற்றியதல்ல. நமது மக்களுக்கு எந்தமாதிரியான ஆட்சிமுறை இருக்கவேண்டும் என்பதைப் பற்றியதே ஆகும்.
(“குடிஅரசு’’ 26.2.1928)
ஒரு தேசத்தை, அல்லது ஒரு சமூகத்தை ஒருவர் ஆட்சி புரிவது என்பது அந்தத் தேசத்து மக்களின் நன்மைக்காகவே ஒழிய, ஆட்சி புரிவோரின் நன்மைக்காக அல்ல.
மக்களுக்கு நாணயமாக, நடுநிலையாகத் தொண்டாற்றுவதும், தயவு தாட்சண்யம், அனுதாபம், ஆகியவைகளுடன் மக்களிடம் நடந்துகொள்வதும் அதிகாரிகளின் கடமையாகும்.
(“விடுதலை’’, 25.1.1947)
தொண்டறச் சிந்தனைகள் :
தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள்-பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.
(“விடுதலை’’, 17.08.1961)
ஒருவன், தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரிகம். அதற்கேற்ற வகையில் நமது உழைப்பு பயன்பட வேண்டும்.
(“விடுதலை’’, 04.05.1962)
வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது; நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.
(“குடிஅரசு’’, 19.1.1936)
ஜனநாயக வாழ்வு என்பது பண்பட்ட மக்களிடையே இருக்க வேண்டியதாகும்.
(“விடுதலை’’, 10.7.1969)
புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது, மாற்றி அமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல், மதம் ஆகிய துறைகளில் பெரிய தலைகீழ் மாற்றம் செய்தாக வேண்டும்.
(“விடுதலை’’, 25.5.1961)
எந்த நாடும் முதலில் சமூகச் சீர்திருத்தமும் சமூக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூறமுடியாது.
(“குடிஅரசு’’, 26.2.1928)
அடிக்கடி கட்சி மாறிக் கொண்டும் மந்திரி சபைகளைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்தும் அராஜகம் விளைவித்துவரும் நிலையில், இந்த நாடு சுதந்திரத்துக்கோ சனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
(“விடுதலை’’, 15.2.1968)
உலக வாழ்வில் மற்றொருவனுக்கு இம்சையின்றி, பிறருக்கு எப்படி உபயோகப்படுவது என்பதையே முக்கியக் கொள்கையாகக் கொண்டு உழைப்பவனுக்கு, வேறு மதம் வேண்டியதில்லை.
(“குடிஅரசு’’, 14.4.1928)
இவை போன்று உலக மக்கள் வாழ்வதற்கான, பகுத்தறிவு அடிப்படையிலான சிந்தனைகளை வழங்கிய பெரியார், உழைப்பது கேவலம் அல்ல என்ற அரிய சிந்தனையை தன்னையே எடுத்துக்காட்டி கூறியுள்ளார்.
“நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் (சுமையால்) வேதனைப்பட்டிருப்பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் வேதனைப்பட்டதில்லை’’ என்றார்.
சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருதவேண்டும்.
(“விடுதலை’’, 2.7.1962)
பொதுக் காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால் அவர், தன் சொந்த கவுரவத்திற்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.
(“அறிவுப் பேழை’’, 1976)
ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவதுபோல், உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல் நினைக்கும்படியும், அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.
(“விடுதலை’’, 12.1.1958)
அறம் என்றால், மக்களுக்குத் தம்மாலான நல்லனவற்றைச் செய்வதுதான், அதுதான் உண்மையான தொண்டு. இதனை விடுத்து, இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்லவேண்டும் என்று கருதியோ, மற்ற முட்டாள்தனமான காரியங்களுக்கோ தொண்டு செய்வதனால் உண்மையான இன்பம் கிட்டாது.
(“விடுதலை’’, 16.8.1961)
பொதுத் தொண்டில் நம்முடைய வேலைக்கு உறைகல்லாக உபயோகப்படுவதே, பிறருடைய தூற்றுதலைச் சகிப்பதுதான்.
(“விடுதலை’’, 31.3.1950)
பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை.
(“விடுதலை’’, 20.9.1962)
சேவை என்பது கூலியை உத்தேசித்தோ தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.
(“குடிஅரசு’’ 17.11.1940)
எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும் ஏச்சு வந்தாலும் எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசி வரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.
(“விடுதலை’’, 6.1.1958)
ஒரு சமூகமென்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழைகள் இல்லாமலும், மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூகச் சீர்திருத்த வேலையாகும்.
(“குடிஅரசு’’, 30.1.1927)
பொருளாதாரச் சிந்தனைகள் :
நம் பொருளாதார ஏற்றத்தாழ்விற்குக் காரணமே கடவுள், மதம், சாத்திரம்தான். எப்படி என்பீர்கள்? நீ எப்படிப் பணக்காரன் ஆனாய் என்று ஒருவனைக் கேட்டால், அவன் என்ன சொல்லுகின்றான்? எனது சாமர்த்தியத்தால் சம்பாதித்தேன் என்று சொல்வது கிடையாது. கடவுள் அருளால் கிடைத்தது என்கிறான், லட்சுமி கடாட்சம் என்கிறான். அதை மற்றவனும் நம்புகிறான்.
(“விடுதலை’’, 6.10.1968)
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதில் இறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டி. இத்யாதி போட்டிகள் அவனது ஊக்கத்தை எல்லாம் கொள்ளை கொண்டு விடுகின்றன.
(“குடிஅரசு’’, 8.3.1936)
இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றிக் கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் திருமணம் போன்ற நிமிட காரியத்துக்காக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்காக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப்படலாமா?
(“விடுதலை’’, 6.10.1962)
செல்வம் என்பது உலகின் பொதுச் சொத்து. அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச் சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.
(“விடுதலை’’, 17.3.1965)
லேவாதேவி என்பது ஒரு கொடுமையான தொழிலேயாகும். அதற்கு வேறு பெயர் சொல்ல வேண்டுமானால் சட்டப்படி கொடுமைப்படுத்திக் கொள்ளையடிப்பதேயாகும்.
(“குடிஅரசு’’, 27.8.1933)
எனக்கு முதலாவது, இன இழிவு நீக்கம் முக்கியம். அடுத்தது, பொருளாதார பேதம் நீக்கம். ஏனென்றால் இந்நாட்டு நிலைமை அது.
(திராவிட விவசாய தொழிலாளர் கழகம் ஏன்? 13)
சர்க்காரின் வரவு _ செலவுத் திட்டம், குடும்பத்தினர் செய்வது போன்றதல்ல. குடும்பத்தினர் வரவுக்குத் தக்கப்படி செலவுத் திட்டம் வகுக்க வேண்டும். சர்க்காரோ மக்கள் நலத்துக்குத் தேவைப்பட்டவைகளைக் கணக்குப் பார்த்து அதற்கேற்ப வருவாய் தேடும் வகையில் வரிகளை நிர்ணயித்துத் திட்டம் அமைக்க வேண்டும்
(“விடுதலை’’, 12.2.1963)
சகல தொழிற்சாலைகளும், சகல தொழிற்சாலை நிருவாகமும், தபால், தந்தி, ரயில், குளம், ஏரி, வாய்க்கால் நிருவாகம் போன்று சர்க்காருடையதாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய, தனிப்பட்ட முதலாளி ஒருவன்கூட நம் நாட்டில் இருக்கக் கூடாது. எந்தத் தனிப்பட்ட மனிதனும் நமக்குக் கூலி அளப்பவனாய் இருக்கக்கூடாது.
(“விடுதலை’’, 11.12.1947)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம்பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
(“குடிஅரசு’’, 26.12.1937)
சொத்துரிமை:
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.
(“விடுதலை’’, 11.12.1967)
மனிதனுக்குச் சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஓர் அளவுக்கு உண்மைதான். ஆனால், அதற்குச் சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல.
(“குடிஅரசு’’, 8.3.1936)
கல்வி சார் சிந்தனைகள் :
கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
(“விடுதலை’’, 11.9.1955)
ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
(“குடிஅரசு’’, 1.5.1927)
சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்க வேண்டும்.
(“விடுதலை’’, 21.7.1961)
நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்படவேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.
(“குடிஅரசு’’, 22.8.1937)
மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயே புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(“விடுதலை’’, 17.3.1968)
மொழி சார்ந்த சிந்தனைகள் :
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயபற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 169)
குணத்திற்காகவும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது மொழி, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, என்னுடையது பழமையானது என்பதற்காகவோ ஒன்றை நான் பாராட்டுவதில்லை.
நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.
(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்; 204,-205)
எனது நாடு எனது இலட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அதுபோலவே, எனது மொழி என்பதானது எனது இலட்சியத்திற்கு, -என்னுடைய மக்கள் முற்போக்கு அடைவதற்கு மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.
(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 205)
மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால் நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல் தான் எதிர்க்கிறேனே யொழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
(‘தமிழும் தமிழரும்’ 7ஆம் பதிப்பு, பக்: 205)
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன்மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.
(பெரியார் 99-ஆம் பிறந்த நாள் மலர், பக்: 63)
மொழியின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும், அவை எளிதில் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும், கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பதைப் பொறுத்ததே ஒழிய வேறில்லை.
(“குடிஅரசு’’, 20.1.1935)
திருமணம் பற்றிய புரட்சி சிந்தனைகள் :
கணவன்_-மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான்; இதில் ஒருவருக்கொருவர் அடிமை_ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.
(“விடுதலை’’, 12.2.1968)
ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.
(“குடிஅரசு’’, 21.7.1945)
ஆண்-_பெண் சமத்துவமாய்ப் பாவிக்கப்பட்டுச் சமத்துவமாய் நடத்தப்படுவதாக இருந்தால்தான் வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமணக் காரியங்கள் இருக்க வேண்டுமே ஒழிய, அப்படி இல்லாவிட்டால் பெண்கள் திருமணம் இல்லாமல் தனித்து வாழ்வதே மேல். எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்?
(“குடிஅரசு’’, 13.12.1936)
ஆணும், பெண்ணும் பதிவாளர் அலுவலகத்துக்குப் போய், வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லிக் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்திற்கு அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு.
(“குடிஅரசு’’, 7.6.1936)
மணமுறைக்குப் பழைமையைத் தேடித் திரிய வேண்டியதில்லை. கால நிலைக்கும் சமுதாய நிலைக்கும் அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய, ஒரு காலத்து முறைகளே எக்காலத்திற்குமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
(“விடுதலை’’, 30.10.1940)
சீர்திருத்தக்காரர்கள் :
சீர்திருத்தங்கள் - மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், உயிர்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமையவேண்டும்.
(“குடிஅரசு’’, 9.12.1928)
சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக்கொள்ளுதலே யாகும்.
(“விடுதலை’’, 29.1.1956)
சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதே சீர்திருத்தத்திற்கு உண்மையான பாதையாகும்.
(“விடுதலை’’, 23.3.1958)
இழிவின் மூலகாரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்து, அவ்விழிவு பின்சந்ததிக்கும் என்றென்றும் திரும்பி வரமுடியாதபடி பரிகாரம் தேடுவதுதான் உண்மையான சீர்திருத்தவாதியின் கடமை.
(“விடுதலை’’, 28.2.1965)
சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், ஜாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.
(“குடிஅரசு’’, 23.6.1935)
கூட்டுறவு:
கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும்.
(“குடிஅரசு’’ 12.11.1933)
நாம் செலவழிப்பதில் வகைதொகையற்ற முறையில் வீண் செலவு செய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம்தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அதோ கதியாகிவிடுமென்பது நிச்சயம்.
(“குடிஅரசு’’, 12.11.1933)
மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டுவாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத் திட்டங்களை நிறைவேற்ற தனி, மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது
(“விடுதலை’’, 13.1.1961)
கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம் நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக _ -குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.
(“விடுதலை’’, 24.4.1961)
ஓழுக்கம் :
சமுதாயக் கூட்டு ஒழுக்கம், பச்சாதாபம், நாணயம், நன்றி, நம்பிக்கை முதலியவை மக்களிடையில் பழக்கத்தில் இருக்கவேண்டும். நலம் செய்ய முந்தவேண்டும்; நல்லதை எண்ண வேண்டும்; கெடுதியை எதிர்க்க வேண்டும்; பாதுகாப்பு இல்லாத சமயத்தில் பிறர் பொருளைக் கவராமல் தூய்மையாக நடந்து கொள்ளவேண்டும்.
(தத்துவ விளக்கம், 19)
அறிவு எவ்வளவோ வளர்ச்சிபெற்று இருக்கிறது என்றாலும், மனித வாழ்வு மிகமிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும் புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்துவிடக்கூடாது.
(“விடுதலை’’, 20.6.1956)
உண்மையான ஒழுக்கம், நாணயம் வேண்டுமானால், தேவை குறைய வேண்டும்; அவசியம் குறைய வேண்டும். தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக் கேடும் ஒழுக்கக்கேடும் வளர்ந்துகொண்டுதான் போகும்.
(“விடுதலை’’, 22.7.1969)
மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல், அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும்
(“விடுதலை’’, 30.7.1969)
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
(“குடிஅரசு’’, 22.12.1929)
பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லுவதை விட, தன்னிடத்து அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
(“விடுதலை’’, 20.11.1958)
மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.
(“விடுதலை’’, 20.3.1956)
பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில் தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.
(“விடுதலை’’, 20.2.1968)
மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் ஒழுக்கம்.
(“விடுதலை’’, 7.2.1961)
அறிவியல்:
இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.
(“குடிஅரசு’’, 13.8.1933)
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
(“குடிஅரசு’’, 30.1.1936)
மேலே காட்டிய பெரியாரின் சிந்தனைகள் ஒரு நாட்டிற்கோ ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவை அல்ல.அவை, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஆழமாய் உள்ளத்தில் கொள்ளவேண்டிய அரிய கருத்தாகும். தனக்குத் தேவையான பொருள்களை ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்வதுகூட மரியாதைக் குறைவு, கேவலம் என்று எண்ணி, அதை வேறு ஒருவர் எடுத்து வரவேண்டும் என்ற உளநிலை உலகில் பலருக்கு உள்ளது. பெருமையும், கேவலமும் இது போன்றவற்றில் இல்லை. உழைப்பது பெருமைக்குரியதேயன்றி, கேவலமானதல்ல என்பதை உலக மக்கள் உணரும்படி உரைத்தவர் பெரியார்.
இவ்வாறு உலக மக்களுக்குரிய உயரிய முற்போக்குச் சிந்தனைகளை 75ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிய பெரியார் என்பதாலேதான் உலகத் தலைவராய் அவரை உலக மக்கள் ஏற்றுப் போற்றுகின்றனர்.
எனவே, பெரியார் தமிழர்களுக்கோ, திராவிட இனத்துக்கோ மட்டும் தலைவர் அல்ல. அவர் உலக மக்களுக்கான உயரிய தலைவர்! அவரின் சிந்தனைச் சுடர், உலக மக்களுக்கு என்றென்றும் ஒளி காட்டும்!
வாழ்க பெரியார்!
- மஞ்சை வசந்தன்
- உண்மை இதழ் 16 -31 .12 .19
புதன், 23 டிசம்பர், 2020
திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது
தந்தை பெரியார்
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்!
மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை_மனுதர்மத்தை_அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.
மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருதமுடிகிறது.
திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச்செய்ய, அக்கொள்கை களிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.
உதாரணமாக மனுதர்மம்_வருணாசிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்_பிராமணன், க்ஷத்திரியன் வைசியன், சூத்திரன்_உண்டு என்று உபதேசிக்கிறது.
பிராஹ்மண க்ஷத்திரியே வைஸ்த: த்ரயோவர்ணாத் விஜரதய; சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்:
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள்; நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி. இவனுக்கு உபநயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் என்கிறது மனுதர்மம்.
திருக்குறள்_மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள்: 972)
மனுதர்மம் _ மாம்சம், மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்யவேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தரவேண்டும் என்கிறது.
மத்யம் மாம்ஸம் சமீனம் சமுத்ரா, மைதுனமேவச: ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர் மோக்ஷதா ஹியுகே யுகே.
கள், இறைச்சி, மீன், சமுத்ரா, மைதுனம் இவ்வைந்தும் மோட்சத்திற்குச் சாதனங்கள்.
திருக்குறள்_ஜீவ இம்சையே கூடாது, மாம்சம் சாப்பிடக் கூடாது, யாகம் கூடாது என்கிறது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (குறள்: 260)
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள்: 259)
மனுதர்மம் _ பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்கிறது.
அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம்; ஸம்ப்ர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி
ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப் போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனுமாகமாட்டான்.
ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு : கர்மஸமாதிசத்?
எதேஷமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனஸயய
பொறாமையன்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளை இட்டிருக்கிறார்.
திருக்குறள் _ ஒழுக்கம் உண்டானால்தான் பார்ப்பான் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம்; ஒழுக்கமற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன் என்கிறது.
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள்: 134)
மனுதர்மம் _ ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுக போகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது.
விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத்: நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்யயனாஹிச
சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாகப் படைக்கப் பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.
திருக்குறள் _ ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழியவேண்டும் என்கிறது.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக இவ்வுலகியற்றி யான் (குறள்: 1062)
மனுதர்மத்தில் _ பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல ஜாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாசிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.
வேதத்தில் 180 ஜாதிகள் கூறப்பட்டிருக்கின்றன. மனுஸ்மிருதியிலும் சூத்திரரினும் தாழ்ந்த ஜாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் _ ஓர் இடத்தில் கூட பிராமணன், சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப் பட்டிருக்கிறது _ வர்ணாசிரம தர்ம வாசனையே கிடையாது.
இப்படி அநேக கருத்துகள் ஆரிய தர்மத்துக்கு மாறாகக் கூறப்பட்டிருக்கின்றன. சுருங்கக் கூறினால் _ புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறள் செய்திருக்கிறது. புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால்தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற் காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது. நமது தலைவரின் (லட்சுமிரதன் பாரதி) தந்தையாரான தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ தமிழர் வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறுவார்களானால், பல அறிவுக்கியைந்த அற்புதங்கள் வெளிப்படும். அவரைப் போன்ற அறிஞர்கள் பேசக் கேட்டுத்தான் எனக்கும் திருக்குறளின் பெருமை தெரிய வந்தது.
என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியா விட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென்பதையும், அதன் மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
- உண்மை இதழ் 16-30 .11 .19
சுப்பிரமணியனது பிறப்பு
விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-
1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார்.
பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரமதேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற, அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்தது’’ என்று தலைப்பெயர் கொண்ட 36ஆவது சருக்கத்திலும் “குமாரசாமி உற்பத்தி’’ என்கின்ற 37ஆவது சருக்கத்திலும் காணப்படுகின்றது.
இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையைப் பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப் பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவற்றைக்கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவரும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள்.
பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.
குறிப்பு:-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே, வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேற்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில், கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன் மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது’’ என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை.
இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.
அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.
கந்தப்புராணமோ, மேல்கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.
ஆகவே சுப்பிரமணியன் என்றும், சண்முகன் என்றும், கார்த்திகேயன் என்றும், ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
( தந்தை பெரியார் - ‘குடிஅரசு’ - 2.9.1928)