திங்கள், 29 மே, 2023

அரசியல் வேறு - சமூக இயல் வேறல்ல இரண்டுமே சமூக முன்னேற்றத்திற்கே! - தந்தை பெரியார்

 

 24

கனவான்களே!

அரசியலும் சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களைப் பத்திரிகை மூலம் தெரிந் திருப்பீர்கள். அதாவது, அரசியல் வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டு தனித்தனி இயல்கள் கிடை யாது. இவ்விரண்டும் வேறுவேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக இயல் என் றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன் னேற்றத்திற்குத் தானேயல்லாமல் வேற காரியத்திற்கல்ல. எனவே, ஒரு நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று வைத்துக்கொண்டு அரசியல் என்றால் அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக இயல் என்றாலும் அரசியல் முன் னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மையுடையது. நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறுவேறாக காணப்படுவதின் காரணம் உண்மையான அரசியல் தொண்டும் உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல் வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏய்த்து, சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம் நாட்டு பெரும்பாலும் படித்தவர்கள் என்போர்களானப் பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்து விட்டு உத்தியோகம் சம்பாதிக்கப்பாடுபடுவது அரசி யலாகவும், ஆங்கிலம் படிக்காமல் ஆரியம் படித்துவிட்டு வயிறு வளர்க்க புரோகிதத் தொழிலைப் பரப்புவது சமூக இயலாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்விரண்டு காரியங்களும் நாட்டு முன்னேற்றத்திற்கான அரசியலும் ஆகாது, சமூக இயலும் ஆய்விடாது.

உதாரணமாக, காந்தியார் அரசியலில் அதாவது காங்கிரசில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரசியல் என்பதின் பேரால் அவர் ஏற்படுத்தின திட்டமாகிய நிர்மாணத் திட்டத்தையும் பகிஷ்கார திட்டத்தையும் கவனித்துப் பார்த்தால் என்ன என்ன விஷயம் சேர்ந்தால் அரசியல் ஆகும் என்பது புலப்படும்.

அதாவது நிர்மாணத் திட்டத்தின் எல்லா மக்கள் வயிற்றுக்கும் பிழைப்பும் பணமும் சம்பாதிக்க பொருளியல் ஆன கதரும், எல்லோரும் சமத்துவமடைய தீண்டாமை விலக்கு என்னும் சமத்துவ இயலும் மனிதர்களின் ஒழுக்கம் சீர்படுத்துவதற்காக மதுவிலக்கு என்னும் ஒழுக்க இயலும் எல்லா மதஸ்தர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் சகிப்புத் தன்மை யாகவும் இருக்கவேண்டும் என்பதாக இந்து முஸ்லீம் ஒற்றுமை என்னும் பரஸ்பர அன்பு இயலும் ஆகிய இவைகள் சேர்ந்ததை நிர்மாணத் திட்டமாகவும், ஆட்சி சம்பந்தப்பட்டவரை, அதை ஒழுங்குப்படுத்தி அதை மேற்கண்ட நிர்மாண திட்டத்திற்கு அனுகூலமாய் ஆட்சி புரியும்படி செய்வதற்காக மட்டும் அனுகூலமாய் இருக்கும்படிச் செய்ய, அதுவரையில் அதனோடு கூடுமான வழிகளிலெல்லாம் ஒத்துழைக்காமலிருக்க வேண்டுமென்பதாகக் கொண்டு, அரசாங்கத்துள் நமக்குள்ள ஒவ்வொரு சம்பந்தத்திலிருந்தும் விலகுவ தற்காகப் பகிஷ்காரத் திட்டம் என்பதாகவும் ஏற்பாடு செய்திருந்ததே ஒழிய வேறில்லை.

மற்றபடி நமது நாட்டு பழையகால சரித்திரத்தில் இம்மாதிரி அரசியல் என்பதாக ஒன்று இருந்ததாகவே காணமுடியாது. மக்களுக்கும் அரசர்களுக்கும் அபிப்பிராய பேதமோ, அரசாங்க சுதந்திரத்திற்கு என்பதாக மக்கள் அரசாங்கத்துடன் போராடியதாகவோ, அதற்காக ஒரு இயக்கம் இருந்ததாகவோ எந்த இடத்திலும் காணமுடியாது. சரித்திரத்தில் பார்க்கும் அரச தர்பாரில் அரசன் மக்களுக்காக வாழ்ந்து வந்ததும், மக்கள் அரசருக்கு முடிசூட்டினதுமாக காணப்படுமே ஒழிய வேறில்லை. அது ஒரு தனி ஜாதியாகவோ அல்லது ஒரு தனி வகுப்பாகவோ இருந்ததாகக்கூட காணமுடியாது. ஏதாவது ஒரு இடத்தில் குடிகள் அரசனிடம் முறையிட்டதாக பார்ப்போமானால், அது காட்டு மிருகங்கள் வந்து வேளாண் மைகளை அழித்த தற்காகவும், வேறு ஏதோ திருடர்களோ ராட்சதர்களோ வந்து குடிகளை இம்சித்ததாகவும் காணப்படுமே ஒழிய வேறு ஆட்சி முறையைப்பற்றி குற்றம் காணவே முடியாது. இப்பொழுது நமது கண்களுக்கு நமது நாடு ஆட்சிமுறை குற்றம் சொல்லப்படுவதாய்க் காண்ப தெல்லாம் மேல்காட்டிய நிர்மாணத் திட்டத்தில் நமக்குள்ள குற்றங்களே ஒழிய ஆட்சிக்குற்றமே அல்ல. ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பரஸ்பர அன்பும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி மனிதத் தன் மைக்கு விரோதமாய் வாழும்போது, எப்படியானாலும் அந்நியன் யாராவது ஒருவன் உள்ளே பிரவேசித்து ஆதிக்கம் பெற்றுக் கொள்ளத்தான் முடியுமே ஒழிய வீணாய்க் கிடக்க முடியவே  முடியாது. இந்த நிலையில் வந்த கொடுமையான ஆட்சி முறையானது இந்நிலைகள் சரிப்படுத்தப் பட்டாலொழிய ஒழிக்கப்படவே முடியாது என்பதை கண்டிப் பாய்க் கவனத்தில் வைக்க வேண்டும். ஏதாவது ஒரு கொடுமையை ஒழிக்க வேண்டுமானால் அக்கொடுமைக்கு உள்ள ஆஸ்பதமான காரியம் எதுவோ அதை ஒழித் தால்தான் அக்கொடுமை வளராமலிருக்க முடியுமேயல்லாமல் மேலுக்கு மேலாகப் பார்ப்பதால் அது அடியோடு ஒழிக் கப்படவே மாட்டாது. உதாரணமாக நமக்கு தலைவலி ஏற்பட்டிருக்குமானால், அத்தலைவலி வருவதற்கு நமது சரீரத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறு என்ன? அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? எந்தமாதிரி பத்தியமா யிருக்கவேண்டும்? என்னமாதிரி மருந்து சாப்பிடவேண்டும்? என்பதாகக் கவனித்துக் கண்டு பிடித்து அந்தப் படி நடந்துவரவேண்டுமேயல்லாமல் அப்போதைக்கப் போது ஒரு பத்துப் போடவோ அல்லது ஒரு தைலத்தைப் பூசவோ செய்தால் எப்படி வியாதி போகும் என்பதைக்  கவனித்துப் பார்க்க வேண்டும். அரசியல் என்கிற பேரால் இதுசமயம் நமது நாட்டில் ஒரு கூட்டத்தாரால் நடத்தப்பட்டுவரும் ஒருவித கிளர்ச்சி சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர நாட்டுக்கோ நாட்டிலுள்ள மக்களுக்கோ பொதுவாக அதில் ஒருவித நன்மையும் இல்லாததோடு நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய தீவினையை உண்டாக்கி வருவதாகவே இருக்கிறது.

முதலாவது, நமக்குள் ஒருவித ஒற்றுமையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அதற்காகவே பாடுபடவேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ளவைகளை யெல்லாம் ஒழிக்கவேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பது ஒரு தேசத்தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை, ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை, அதாவது இங்கு கூடியுள்ள பெரும்பான்மைகளைப் பொறுத்த வரை, ஒரு மதஸ்தர் (இந்துக்கள்) என்பவர்களுக் குள்ளாகவே அநேகவிதமான கொடுமையும் ஒற்றுமைக் குறைவும் இருந்துவருகிறது. இந்துமதத் தத்துவமே நமது நாட்டை இந்த தாழ்ந்த கதிக்குக் கொண்டு வந்தது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். மக்கள் அறிவையும் ஆற்ற லையும் அன்பையும் மனித தர்மத்தையும் நமது மதம் என்று சொல்லுவதே அழித்துக் கொண்டு வருகிறது.

முதலாவதாக, நமது நாட்டில் மக்களைப் பிறவி யிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று ஒன்று சேரவிடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனா யிருந்தாலும் ஒரு வகுப்பு தாய்வயிற்றில் பிறந்ததற்காக  மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழவேண்டியவர்கள் என்றும், ஆக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே மற்றொருவன் எவ் வளவு யோக்கியனாயிருந்தாலும் வேறு ஒரு வகுப்பு தாய் தகப்பனுக்குப் பிறந்ததினாலேயே அவன் தாழ்ந்த வனென்றும் தொடக்கூடாதவன், பார்க்கக் கூடாதவன், கிட்டவரக்கூடாதவன், அவனவன் பக்தி செலுத்தும் தெய்வத்தைக்கூட பார்க்கக்கூடாதவன் என்றும், பொதுத் தெருவில் நடக்கக்கூடாதவன் என்றும், தடுக்கிறது. இந்தக்கொடுமையும் முட்டாள்தனமும் கொண்ட ஆணவம் நமது நாட்டில்தான் இருக்கிறதே தவிர வேறு நாட்டில் கண்டிப்பாய் இம்மாதிரி பிறவி தோஷம் கற்பிக்கிறதே கிடையாது. இது மனிதனோடு மாத்திரமல்லாமல் கடவுள்கள் என்ற சொல்லப் படுபவைகளுக்கும் இத்தோஷம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டு பழந்தமிழ் சரித்திரங்களில் இம்மாதிரி கொடுமையும் மூடத்தனமும் கொண்ட விஷயங்கள் மருந்துக்குக்கூட காணப்படுவதில்லை. 1. நமது நாட்டுக்கு, அயல்நாடுகளில் இருந்து வந்து குடியேறின ஒரு கூட்டத்தாரால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்த மதம் நம்மை இந்த இழிநிலைக்குக் கொண்டுவந்து விட்டது. பிறப்பினால் உயர்வு தாழ்வு வகுக்கும் தன்மையான வருணம், ஆசிரமம், தர்மம், ஜாதி, பிராமணன், சத்திரியன், சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் முதலிய வார்த்தைகள் தமிழ் மொழிகளே அல்ல. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பாகுபாடு இருந்ததும் இல்லை. தமிழ் நாட்டிற்கு இப்பேர்ப்பட்ட பாகுபாடுகள் எந்த விதத்திலும் வேண்டியதும் இல்லை. அது எந்த விதத்திலும் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. இந்த இடத்தில் காந்தியாரின் அபிப்பிராயம்கூட மறுக்க வேண்டியதாகவே இருக் கிறது. பிராமணன் என்பதாக ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ, ஒரு மனிதனோ தனியே இருக்கவேண்டும் என்பதின் அவசியம் என்ன? ஜனசேவை செய்வது பிராமணர்களுடைய தர்மம் என்றும், அதற்காகவே அவர்கள் பிறவியிலேயே பிராமணர்களாகப் பிறந்திருக் கிறார்கள் என்றும் காந்தியார் சொல்லுகிறார். ஜனசேவை என்பது ஒரு ஜாதிக்கோ ஒரு மனிதனுக்கோ சொந்த மானதல்ல. 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக் கொருவன் உதவி, உபகாரம், சேவை முதலியவைகள் செய்யவேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனி தனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கிவைத்த நேரங்களிலெல்லாம் ஜனசேவை செய்த வனாகிறான். ஒரு மனிதன் ஒரு பொதுக்கிணறு வெட் டினால், வெட்டிவைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித்தால், சுகாதார விஷயத்தில் வீதி கூட்டினால், கூட்டுவித்தால், இன்னும் இதுபோன்ற காரியங்கள் செய்தால் ஜனசேவை செய்தவனாகிறான். இது ஒரே வர்ணத்திற்கு அல்லது ஜாதிக்கு வகுப்புக்கு  என்பதாக பிரித்து வைக்க வேண் டும். எப்படி பிரித்து வைக்க முடியும். மற்றவர்களுக்கு ஏன் அந்த பாத்தியம் அவரவர் சவுகரியப்படி செய்ய விடக்கூடாது. தவிர, நாட்டையாள்வது சத்திரியனுக்கு உரிய தர்மம் என்று சொல்லுவோமானால் ஒரு மாட்டை ஒரு மனிதன் தான் ஆளமுடியும். ஒரு வருணமோ, ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ ஆளமுடியாது. அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டிற்கு ஒரே ஒரு சத்திரியன் தான் இருக்க முடியும். நாட்டை ஆளுகிறவனுடைய ஜாதி யெல்லாம் சத்திரிய ஜாதி ஆகிவிட்டால் உலகத்தில் ஆட்சிபுரியாத ஜாதியே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஜாதியோ வகுப்போ உலகம் பூராவையோ அல்லது ஒரு பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டுதான் இருக்கின்றது. 

ஆகவே, எல்லோரையுமே சத்திரியர் வர்ணத்தில் தான் சேர்க்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் காந்தியார் மைசூரில் சொன்னதுபோல் எளியவர் களைக் காப்பது சத்திரியனுடைய தர்மம் என்பதாகப் பார்த்தாலும் எளியவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தனி வருணமோ ஜாதியோ எதற்காக வேண்டும். எப்படி இருக்க முடியும். பிறவி சத்திரிய வர்ணத்தில் எளிய வர்கள் இருக்க மாட்டார்கள், அன்றியும் மற்றவர்கள் எளியவர்களைக் காக்கக்கூடாதா? மனிதனானவன் அவனவன் வாழ்வில் எளியவர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு நேரமோ, செய்கையோ ஒதுக்கி வைத்துக் கொண்டு செய்தால் அது எளியவர்களைக் காத்ததாகாதா. இப்படியே பிறவி வைசிய வருணத்திற்கு என்ன தர்மம் கட்டுப்பட்டது என்றால், வைசியர்கள் வியாபாரம் செய்தல் வைசியர்கள் தர்மம் என்று ஒரு பக்கமும், மாடுமேய்த்தல் வைசியர் தர்மம் என்று மற்றொரு பக்கத் திலும், உழவு செய்தல் வைசிய தர்மம் என்று மற்றொரு பக்கத்திலுமாக ஆரிய நூல்களில் உளறிக் கொட்டி இருக்கிறாரே அதைப்பற்றி நமக்குக் கவலையில்லா விட்டாலும் இந்த தொழிலுக்கு ஒரு தனி பிறப்பு வருணம் எதற்காக ஒதுக்கி வைக்கவேண்டும். இவைகளை எப்படி ஒதுக்கிவைக்க முடியும். மற்றவர் ஏன் செய்யக்கூடாது.

அதுபோலவே சூத்திரர் என்பவர் களுக்கும் என்ன என்னமோ தர்மம் சொல்லுவதானாலும் குறிப்பாய் அடிமைத் தனத்தையும், பிராமண வர்ணத்தானுக்கு வைப்பாட்டி மகன் என்கிற தத்துவத்தையும் தான் சொல்லுகிறது. இதில் எதை காந்தியார் ஒப்புக் கொள்வதானாலும், இந்தக் காரியத்திற்கும் ஒரு தனி வருணம் எதற்கு என்றும், இந்தக் காரியங்கள் மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது என்றும், மற்றவர் செய்யாமல் இருக்க முடியுமா என்றும்தான் கேட்கிறோம். இப்படிப் பட்ட ஆபாசங்களை நம்ம தலையில் சுமத்தி யோக்கியன், அயோக்கியன் அடையாளம் தெரிவதற்கில்லாமல் மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தி இருக்கிற மதக் கொடுமையாலே தான் நமது நாட்டிற்குச் சுபாவமாகவே விடுதலை கெட்டிருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல என்று பொருள்படும்படிக்கும் மற்றும் இது போலவே கடவுள், பக்தி, கோவில், சடங்கு முதலிய விஷயங்களில் நம்முடைய மூடகொள்கைகளையும், பார்ப்பனர்கள் கொடுமையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவைகள் ஒழிவதுதான் சுயராஜ்யம் அளிக்கவல்லது என்றும், இதுவே அரசியல் என்பது என்றும், இதைத்தவிர வேறு விஷயங்களை அரசியல் என்றும் சுயராஜ்யம் என்றும் உரிமை என்றும் தேசியமென்றும் பேசுவதெல்லாம் வீண் புரட்டு என்றும், குறிப்புக் காட்டினார். 

- விருதுப்பட்டியில் தந்தை பெரியார் 

ஈ.வெ.ரா.   குடிஅரசு - சொற்பொழிவு -  28.08.1927

திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும்

 தந்தை பெரியார் 


பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! 

இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

பெருமைப்படுகிறேன் 

தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் - முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப்பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது, கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண்ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண்கிறேன்.  

இஷ்டமில்லை என்றாலும்...

சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகிலஇந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி.வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. 

“வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்டமில்லை. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன்” என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.

உங்களுக்குப் புரியாதுதான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர்களிடம் நான் சொன்னேன், "நமது குழந்தைகள் இருக்கின்றன; நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப்படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக்குழந்தை தீயில் குதித்துவிட்டு, அய்யயோ சுடுதே! சுடுதே!! என்று அலறும்போது, பெற்றெடுத்த தாயோ, தகப்பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறாயிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லை யல்லவா? அதேபோன்று வேலை நிறுத்தம் கூடாதென்று கடைசி நேரம்வரை நான் ஒவ்வொரு வேலைநிறுத்தக் காலங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூடக் கெட்ட பெயர் சூட்டப்பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலைநிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிக கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்து வந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அனைத்து இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென்பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர் கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும்" என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக் கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.

பத்திரிகைகளின் மோசடி

சில நாள்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். "என்னையா! முன்பு தாங்கள் எடுத்துக் கொண்ட செய்தி வெளியிடவேயில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அபிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே" என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்; "நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத்தார்கள்போலும். ஆகவே தான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட் டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும்" என்றனர்.

நம் தொண்டின் முக்கியம்

இதை ஏன் கூறுகிறேன் என்றால், சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், 

அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப்பெற அவர்களி டத்திலே வீண்படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

தொழிலாளரின் குறைகள்

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசியலிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படு வோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரி வினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். 

எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டு ழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொது வாக நம்நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.

ஆரியச் சூழ்ச்சி

நம் நாட்டுக்கு கி.மு.2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இராமாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கி வரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்கும். ஆதலால் திராவிடம் என்ற உணர்ச்சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்துவரலாயினர். 

ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர் தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ சிறிதும் கிடையாது. ஆரியக் கலாசாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதையே அவர்களது முழுமுயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?

உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சியிருக்கிறதா? நமது மக்களைப்பார்த்தால் டேய்! “தமிழ் மனுசா” என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில்  பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக்கிறார்கள்.

அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டிலிருந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்தும் கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி-மதம்-கடவுள்-புராணம்-இதிகாசம் பேரால் தங்களுக்குத் தனிச்சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.

திராவிடர் உணர்ச்சி வலுத்தால்...

 இன்றுகூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து “நீ என்னையா பிராமணனா” என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், “நான் பிராமணனல்ல” என்று கூறுவானேயன்றி “நானும் திராவிடன்தான்” என்று கூற முன்வரமாட்டார்களே ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.

எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கையல்ல; பார்ப்பனியத்தை அறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தம் தவறுதலைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால் அது தமக்குத் தாமே அழிவு தேடிக்கொள்வதாக முடியும். 

பார்ப்பனர்களுக்கு தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும்வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்றபின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? 

அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண்டுமா? ஜாதியின் பேரால் பதவியின் பேரால் சோம்பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே! இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல், உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந்தாலும் பயன் என்ன?

சமுதாய அமைப்பு

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.

சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டாரச் சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. 

நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

வாலிபர் பங்கு

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்குவதில் தீவிரப்பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக்கொள்கைக்கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்திசெய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

எச்சரிக்கை!

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். 

என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

நாம் வழிகாட்டுவோம்

நம்மை வேண்டுமானால், காங்கிரஸ்காரரோ, மதவாதிகளோ அவர்கள் மேடையில் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவேண்டும். ஏனென்றால் நம்மிடம் ஒன்றும் ஒளிவுமறைவு கிடையாது. அரசியல் லாபத்துக்காக இயக்கத்தை நடத்துபவர்களல்ல நாம்; எனவே, தோழர்களே! எதிர்காலத்தில் நமக்குப் பொறுப்பு அதிகமிருப்பதால், திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், உழைப்பாளிகளுக்கு உள்ளபடியே உரிமை ஏற்படவும் பாடுபட வாலிபர்கள் முன்வரவேண்டும். பார்ப்பனத் தோழர்களும் கால நிலையை அறிந்து, மனமாற்றம் அடைந்து திராவிட நாட்டின் நலனுக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அதுவே திராவிடர் இயக்கத்தின் கொள்கையாகும். இனிப்பொதுத் தொண்டில் மக்களிடையே ஒரு சிறிதும் துவேஷ உணர்ச்சி கூடாது. கனம் ஆச்சாரியாரும் நானும் சந்தித்த வாய்ப்பு இதற்கு வழிகாட்டியாகவும், அனுகூலமாகவும் இருக்குமென்பதே எனது எண்ணமாகும். 

(குறிப்பு : 22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய பேருரை.)

குடிஅரசு - சொற்பொழிவு - 28.05.1949

செவ்வாய், 9 மே, 2023

நமது நாடு மனுதர்மம் ஆண்ட நாடு; ஆளும் நாடு

 

 டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்ட அமைப்பின் இடத்தை மனுதர்மம் பிடிக்க முயலும் நாடு;

அதில் உள்ள மனுதர்மம் என்பது சமூக அநீதி மட்டுமல்ல;

பொருளாதார அநீதி மட்டுமல்ல;

அரசியல் அநீதி மட்டுமல்ல -

அதற்கும் கீழான மோசமான  நிலையில்

மனித உரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் -

கொடுமையான கொடுமைகள் பாதிப்பும் ஆகும்.

வர்க்கம் என்பது மேலை நாடுகளில் தனி;

வருணம் கிடையாது

(இப்போது சில நாடுகளில் தொற்று நோய் போல் புலம் பெயர்ந்து  வந்தும் குடியேறியவர்களும் பரப்பும் நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது.)

ஆனால்

இந்தியாவில் -

மனுதர்மப்படி நடக்கும் ஆட்சியில்,

ஜாதி தர்மம் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது.

ஒருவன் பொருள் சேர்க்கவோ சம்பாதிக்கவோ கூட உரிமையற்றவனாக்கிய நாடுஅவன் சேர்த்த பணத்தை வன்முறையால் பயன்படுத்திக் கூட உயர்ஜாதியான் பறித்துக் கொள்ளலாம் என்பதே தர்மம்.

கீழேவுள்ள மனுதர்ம வாக்கியங்களே இதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

சூத்திரனுக்கு தர்மம் - பணி செய்வதே!

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதனால் அவனுக்கு தானம் முதலியவை யுண்டென்று தோன்றுகிறது.

சம்பளம் கொடுத்தும்கொடுக்காமலும் வேலைவாங்கலாம்...

பிராமணன் சம்பளம் கொடுத்தேனுங் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.

ஏனெனில்அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா!

சூத்திரன் யஜமானால் வேலையினின்று நீங்கப்பட்டிருந்தாலும் அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது.

இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன்தான் நீக்குவான்?

ஆதலால்அவன் மறுமைக்காகவும்பிராமண சிசுருஷை செய்ய வேண்டியது.

சூத்திரன் என்றால் பெருமையா?

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,

பக்தியினால் வேலை செய்கிறவன்,

தன்னுடைய தேவடியாள் மகன்,

விலைக்கு வாங்கப்பட்டவன்,

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்,

குற்றத்திற்காக வேலை செய்கிறவன்,

எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

 

சூத்திரனுக்கு எதுவும் சொந்தமில்லை

மனையாள் பிள்ளை வேலைக்காரன்இவர்களுக்கு பொருளில் சுவாதீனமில்லைஇவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவை அவர்களின் எஜமானையே சாரும்.

அதாவது எஜமான உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாதென்று கருத்து.

சூத்திரன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழு வகைத் தொழிலாளியான சூத்திரடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்.

யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

பிராமணனையே தொழ வேண்டும்

சூத்திரன் சுவர்கத்திற்காவதுஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவதுபிராமணனையே தொழ வேண்டும்இவன் பிராமணனையடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.

ஆதலால்பிராமணனை உபசரிப்பதே சூத்திரனுக்கு எல்லாத் தொழிலையும் விட மேலான தருமமென்றும்மற்றவையெல்லாம் பயனில்லாதவை யென்றும் கரும காண்டத்திற்கு சொல்லியிருக்கிறதுஆனால்இங்கு அவனுக்குப் பிராமண சிசுருஷையை துதி செய்த விஷயமேயன்றி மற்றதை நிந்திக்கிற விஷயமன்று.

பிராமணனும் தனக்கு வேலை செய்கிற சூத்திரன் சக்தியையும் அவன் செய்யும் பணிவுடைமையையும் அவன் காப்பாற்ற வேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவனத்திற்குத் தக்கபடி கூலியேற்படுத்த வேண்டும்.

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கப்படக்கூடாது.

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குபயோகமானதை விட மிகவுமதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாதுஅப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்.

மேலே காட்டியவைபொருளாதாரத்தில் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கீழ்ஜாதியான் ஆட்பட மூலகாரணமே - வர்ணாசிரம தர்மப்படியேதான்வர்க்கத்தை கூட வருணம்தான் நிர்ணயிக்க முக்கியக் காரணியாக இருந்தது என்பது விளங்குகிறது அல்லவா?

நூல்தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுதி 1

.பழநிசாமிதெ.புதுப்பட்டி