செவ்வாய், 29 அக்டோபர், 2024

நாகரிகம் – தந்தை பெரியார்

 

மார்ச் 16-31

நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் இவை மாறுபட்டிருக்கிறது என்று கூற முடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க் கொண்டிருக்கிறது.

நம்முடைய பெண்கள் முன்பு பெரும்பாலும் ரவிக்கை அணிவதில்லை. அணிவதிலும் பல்வேறு மாறுபாடுகளை, முறை மாற்றிக் கொண்டே வருவதைக் காண்கிறோம். மேல்நாட்டிலும் பெண்கள் தெருக்கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள்.

இடை சிறுத்துக் காணும்படி தொம்பைக் கூடுபோன்ற பாவாடையுடன் கூடிய கவுன்கள் அணிந்து வந்தார்கள். பணக்காரப் பெண்கள் தங்கள் நீண்ட அங்கிகளை பின்னால் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணியாட்களை நியமித்துக் கொண்டிருந்தனர். அது அக்காலத்திய நாகரிமாகத் தோன்றியது இன்றோ ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண்கள் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். இதையும் நாகரிகம் என்றுதான் கருதுகிறோம்.

நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும்பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்று பற்றுக்களை விட்டுவிட்டு சுயேச்சையாகச் சீர் தூக்கிப் பார்த்தால்தான் நன்றாக விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.

***.

நாகரிகம் என்பது நிலைமைக்கும், தேசத்திற்கும் காலப்போக்குக்கும் தக்கவாறு விளங்குவதாகும். மாறிக் கொண்டே வருவதாகும். காலதேச வர்த்தமான பழக்கத்தையொட்டி நாகரிகம் காணப்படுகிறது. காலப் பேச்சானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும், புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.

மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டீர்கள். எது நாகரிகமென்று கருதுகிறோமோ, அது பெருத்த அஜீரணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கிறது.

ஒரு விஷயமானது, வாய்ப்பேச்சு சாமர்த்தியத்தினால் செலாவணியாகி விடக் கூடும். அது மெய்யோபொய்யோ, சரியோதப்போ எப்படியும் இருக்கலாம். வருங்காலத்தில் உடல் உழைப்புக் குறைத்து வரும் நிலையேற்பட்டே தீரும். அதுவே நாகரிகமாகக் கருதப்படும்.

நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? பல கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடையக் கூடும்.

நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால், இன்றோ அவைகளை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன்வந்து விட்டோம்.

***

தோழர்களே, நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது, நாம் அனுபவ முதிர்ச்சியால் முற்போக்கு ஆகிக் கொண்டு, வந்து கொண்டேயிருக்கிறோம் என்பதாகும். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம்.

உதாரணமாக, வியாபாரிகளை மக்கள் சமூகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியினரென்றும், லேவா தேவிக்காரர்களை மனித சமூக நாச கர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கிறோம்.

***

நம்மிடையேயுள்ள ஜாதி அபிமானம், சொந்தக்காரர்கள் என்ற அபிமானம், மொழிப் பற்று, தேசப்பற்று எல்லாம் நம் அறிவை மழுங்கச் செய்கின்றன. இந்த அபிமானம், – பற்று எல்லாம்  தொலையாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் சரியான முடிவு காண்பது அரிது. நமது முடிவு நியாயமானது, சரியானது என்று கொள்ள முடியாது.

காந்தியார் மேனாடு சென்றபோது பிடிவாதமாக முழங்கால் அளவுக்கு ஒரே ஆடையணிந்திருந்தார். நன்கு ஆடையணியாமல் குளிரில் விறைத்துப் போகும்படி (கேவலம் இந்திய தர்மம் என்ற எண்ணத்துக்கா) இங்கிலாந்தில் கஷ்ட வாசம் செய்தார். இது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? அறிவுக்கு ஒத்த செய்கையெனச் சொல்ல முடியுமா? எல்லோரையும் அவ்வாறு இருக்கச் செய்ய முடியுமா? செய்தாலும் சரியாகுமா?

உலகில் புதிய புதிய எண்ணங்களும், செய்கைகளும் மலர்ந்த வண்ணம் உள்ளன. நிகழுகின்றன. நீங்களும் காலப் போக்கில் உரிய பலனை வீணாக்காமல் அனுபவிக்கத் தவறக் கூடாது. பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு சிந்தித்து ஜன சமுதாய நன்மை எது என்று தேடி அதற்காகப் பாடுபட முன்வாருங்கள். உங்களுடைய இந்த முயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.

வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு மெய்வருத்தக் கூலி தரும் என்பதை உணர்ந்து சொல்லியும், செய்தும் வருகிறார்கள். ஆகவே, நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு மக்களின் விடுதலைக்கு ஆன வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட முன்வர வேண்டும்.

தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும். நாகரிகம் சமுதாயத்தின் பொதுவான முன்னேற்ற நிலை என்று கொள்க. இது கால விஞ்ஞான அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் முன்னேறிக் கொண்டும் மாறுபட்டுக் கொண்டும் இருப்பதாகும். மக்கள் வாழ்க்கை இன்பமயமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.

(1933-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இந்தியாவில் காணப்படும் இன்றைய நாகரிகம் என்ற பொருள் பற்றி ஆற்றிய உரையிலிருந்து- விடுதலை 9.2.1964).

திங்கள், 28 அக்டோபர், 2024

அயல்நாட்டாரும் மதிக்கும் அரும்பெருந்தலைவர் பெரியார்! – – கவிஞர் கண்ணதாசன்

 


செப்டம்பர் 16-30


(சிதம்பரம் கார் அளிப்பு விழாவில் கண்ணதாசன் பேசியதன் விவரம்)

இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.

ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்கும் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் தந்தை பெரியாரின் குரல்தான்.

 

முதல் குரல்

நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்கு கூட்டமென்றால் மக்கள் திரளாக கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றி பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாட்களில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனி வரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற்குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.

தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு, பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப் பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான். நேற்று மதுரையில் பேசிய நேரு, சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றி பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.

காதல் கதை பேசிய தலைவர்

இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல் வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரசில் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்து கொண்டே வந்தது. ஆச்சாரியார், காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம் என்ற துணிச்சலால்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.

தீண்டாமைக்கு தீ

அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாம-லிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார். தண்ணீர் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் சேவை பார்ப்பவனை சாமி என்று அழைத்தனர் அப்போது. ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார்.

பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாயச் சீர்த்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்கு துணிச்சலைத் தந்தது. அய்யா அவர்கள் அரசியலைப் பற்றி ஒருவரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கித்தனம் என்று கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துக்களை சொல்பவர் ஐயா ஒருவர்தான்.

தி.மு.க. பிறந்த நேரத்தல் எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாக இருக்கிறது. ஐயாவின் கொள்கை தான் எங்களின் கொள்கையும் என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில் கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.

முழக்கமும்; மயக்கமும்

சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கிவைத்து பிளப்பது எந்நாளோ? பெண்  கேட்டு, சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம் என்று பாடியவர்கள், திருச்சியில் கூடி தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம் என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன்பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவர் துணிவு

மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐகோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும் போது இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணிநேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போது கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.

கொடி எரித்த கோ!

வீரம், குருதி,  என்றெல்லாம் ஒருநாள் கூட பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!

15 பேர் மாண்டனர்

சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர்: 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர்; போர்க்களம் சென்ற திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.

அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப் பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு திராவிடா! மாண்டாயா? என அழுவதையும் பார்க்கிறோம். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தலைவன் அவனே!

எதிர்த்தவர் பகுதியில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை. தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வரும் போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.

உண்மையான தொண்டன்

பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீறமுடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது எனப்பேசி முடித்தார்.

நன்றி: தென்றல், 21.10.1961

சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது ஏன்?

செப்டம்பர் 16-30

எனக்குச் சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டு இருந்திருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல  தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை யென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை.

நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் அங்குள்ள ஜாதியார், பொழங்கக்கூடாத ஜாதிக்காரர்கள், அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக்குடியென்று சொல்லியனுப்புவார்கள்.

எங்கள் வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு, பணம் பெருகி அப்பொழுது தான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித்திருந்த காலம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி ( நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப் பற்றி) அதிகமான கவலை கிடையாது. சீச்சீ இனி அப்படிச் செய்யாதே என்று சொல்லிவிடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும். என் தாயார் ஏதோ முழுகிவிட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது.  இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற்குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால், என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன்தான் அதிகம், அதனாலே நான் முரடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளைகளுடன் கூடித்திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப் பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.

விதண்டாவாதம்

கடைசியாக நான் அப்பள்ளிக்குப்போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அதுவும் 2 வருடத்திலேயே (10,12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு, எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது.

இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர்களுக்கும், (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும், அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து, மறுத்துச் சொல்ல ஆரம்பித்து, விதண்டாவாதக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேர வேலையாகவும், அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும், எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்து விட்டது.

நான் புராணங்களையோ, வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்ததில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இருசமய சம்பந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதாசர்வகாலம் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப் பட்டு வந்தது. இதனால் எனக்கு சமய சம்பந்தமான புராண சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும், அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பலகேள்வி களுக்கு பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு என்னை ஒரு கெட்டிக்காரப் பேச்சுக் காரன் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும், நம்பிக்கை-யில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.

அனுபவத்திற்கு முரண்

ஆனால், சுற்றுச்சார்புதான் (Association and Sorrounding)  ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம் கொள்கை ஆகிய வைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது.

ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு, சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.
தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவனாகவும் நான் ஆக்கப்பட்டு விட்டேன்.

எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும், அதிக கவலையாகவுமே செய்து வருவேன்.

தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்-களை முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக        வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத! சாகும்வரை சுதந்திர  உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்த நிலை எதுவோ அதுவே மேல் கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக்கொண்டிருப்பதால்) அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

வேலை அவசியம்

ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மத கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமுகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ, அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமுகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சுமசரீரத்திற்கும் கூட மோட்சமும் முக்தியும் கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலையில்லாமலும், அநுபவமில்லாமலும் மோட்சம், முத்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால், ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டி இருந்து தீரவேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.

நிஷ்காமிய கர்மம் யாது? (பயன் எதிர்பாரா பணிகள்)

இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி, காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் ,  நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப்படுவது முன்னுக்குப்பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில், நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர்பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே ஒரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக வேண்டி செய்வது என்பது அர்த்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப் பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தை கொடுத்து சலிப்பாக வேலை  செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

மனிதத் தன்மை, மனித உரிமை போதித்த பெரியாரைப் பாராட்டுவதைவிட மகிழ்ச்சி வேறில்லை எம்.ஜி.ஆர். உணர்ச்சியுரை

 


அக்டோபர் 16-31

‘குடிஅரசு’ மூலமே பகுத்தறிவு, அரசியல், சீர்திருத்த இயல் படித்தறிந்தேன்.
கலைஞர்களுக்கு மதிப்பைத் தேடித்தந்தவரும் அய்யாவே!
தவறு செய்தால் துணிந்து கண்டித்து திருத்துவார்

கொள்கைக்கே வெற்றி!

கொள்கையை எந்தெந்த வகையில் யார் யார் எப்படி எப்படி ஏற்கிறார்களோ, எந்த எந்த நிலையில் அதனைத் தனது உடைமையாக்கிக் கொள்கிறார்களோ, அதைப் பொறுத்துத்தான், அவர்களுடைய செயல்களும் வெற்றிகரமாக முடியுமென்பதைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்வேறு நடைமுறைகளிலே கண்டு அனுபவித்திருக்கிறோம்.

அய்யா அவர்களைப் பாராட்டிப் பேச எனக்கு வயதுமில்லை; தகுதியும் இல்லை; அனுபவமும் இல்லை; ஆனால் எங்களுக்கு அய்யா அவர்கள் தந்த கொள்கை இணைப்பு இருக்கிறதே அதனால் நிச்சயமாகப் பாராட்டத் தகுதி படைத்தவன்.

மனிதத் தன்மையை நாட்டுக்கு அளித்தவர் அய்யா

மனிதனாக வாழ்வதற்குச் சில கொள்கைகள் தேவை. மனிதன் என்று சொல்வதற்குரிய தகுதியைப் பெற வேண்டுமானால் என்னைப் பொறுத்த வரையில், நல்ல கொள்கைகள் வேண்டும்; நல்ல பண்பு வேண்டும்; அவையடக்கம் வேண்டும்; நாட்டுப் பற்று வேண்டும்; மொழிப் பற்று வேண்டும்; பகுத்தறிவு வேண்டும். இவை அத்தனையையும் இந்த நாட்டுக்குத் தந்தவர் அய்யா அவர்கள்தான்.

அய்யாவைப் பாராட்டுவதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறில்லை

என் வாழ்க்கையில் நான் இரண்டு தலைவர்களைப் பெற்றிருக்கிறேன். ஒருவர் கலைவாணர் அவர்களும், இன்னொருவர் அறிஞர் அண்ணா அவர்களும். இவர்கள் இருவரையும் எனக்குத் தந்தவர் அய்யா அவர்கள்தான். இவரைப் பாராட்டுவதைவிட எனக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு செயலோ, நிலையோ இருக்க முடியாது. இதனை நான் மனப்பூர்வமாகக் கூறுகிறேன். நான் சமுதாய நிலையிலே அறிஞர் அண்ணா அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ளேன். கலையிலே, கலைத்துறையிலே என் பணியைச் செவ்வனே நான் செய்வதற்குக் கலைவாணர் அவர்களைத் தலைவராகக் கொண்டிருக்கிறேன்.

‘குடிஅரசு’ தந்த பகுத்தறிவுக் கொள்கை

கலைவாணர் அவர்களை, 1935_36ஆம் ஆண்டில் நாடகக் கம்பெனியிலிருந்து வெளிவந்து மனித சமுதாயத்திலே எப்படிப் பழக வேண்டும் என்ற பண்புகூட தெரியாத அந்த நேரத்தில், முதல்முறையாக சந்தித்தபோது, என்னிடத்தில், “நீ பத்திரிகைப் படிக்க வேண்டும். அதுவும் சாதாரணப் பத்திரிகை படித்தால் போதாது. உன்னை மனிதனாக்கக் கூடிய பத்திரிகை படி என்று சொல்லி ‘குடிஅரசு’ப் பத்திரிகையைத்தான் எனக்கு அறிமுகப்-படுத்தினார்.

1936ஆம் ஆண்டு, அய்யா அவர்களின் சீடனாகியுள்ள கலைவாணர் அவர்கள் எனக்கும் அந்த வழியைக் காட்டினார். நான் கலை உலகிலே நாடகத் துறையிலிருந்து சினிமாத் துறையிலே பிரவேசித்த நேரம். அந்த முதல் நேரத்திலேயே, நான் தெரிந்து கொண்ட, தெரிந்து கொள்ள வாய்ப்பு பெற்ற கருத்துக்கள் எவையென்றால் அய்யா அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான்.

ஆனால், அதனால் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. நான் அதைப் படித்த மூன்றாவது நாளே நான் என் அன்னையிடம் சண்டைக்கும் போய்விட்டேன். “ஏன் இந்த நாட்டில் விதவா விவாகங் கூடாது? ஏன் இந்த நாட்டிலே தீண்டாமை இருக்க வேண்டும்?’’ என்று சண்டைக்குப் போய்விட்டேன். என்னுடைய தாய் தீண்டாமையை அறவே எதிர்ப்பவர். அந்த வழியிலேயே அவர் வளர்ந்தவர்.

மனித உரிமை தேடித்தந்தவர் அய்யாவே

என் அன்னையை நான் கடவுளாக மதிப்பவன். ஆனால், முதன்முறையாக என் அன்னையை எதிர்த்தது அய்யா அவர்களின் பத்திரிகையைப் படித்துவிட்டுத்தான். இதைப்போன்ற பல்வேறு செயல்களை, கருத்துக்களை, மக்கள் மனதிலே பதியச் செய்து, இன்றைய தினம் தாழ்த்தப்பட்ட நிலையிலே உள்ள தமிழக மக்கள், திராவிட மக்கள், நானும் மனிதன்தான்; நானும் வாழத் தகுதி உள்ளவன்தான்; எனக்கும் வாழத் தகுதி இருக்கிறது; உரிமை இருக்கிறது என்பதைத் திறமையோடு, துணிவோடு, தைரியத்தோடு ஏன் அகம்பாவத்தோடு கூடச் சொல்லத் துணிந்த நிலையை அய்யா அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

 அரசியல் – சீர்திருத்தஇயல் இண்டும் படித்தறிந்தேன்

இன்னொரு பக்கத்திலே அரசியல், சமுதாய சீர்திருத்தம் படித்தேன். கலைவாணர் அவர்களின் அறிவுரைப்படி. ஆனால், செயல்பட எனக்கு நேரமில்லை; வாய்ப்புங் கிட்டவில்லை. நான் காங்கிரசிலே அங்கத்தினராக இருந்த-போதுகூட எனக்கு அந்த வாய்ப்புக் கிட்ட-வில்லை. நான் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தகுதியைப் பெற்றேனோ என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், வாய்ப்புக் கிட்டவேயில்லை.

ஆனால், பிறகு அறிஞர் அண்ணா அவர்களுடைய “பணத்தோட்டம்’’ என்ற புத்தகத்தை படித்தபிறகு கதர் வேண்டுமா? வேண்டாமா? விஞ்ஞானரீதியில் மக்கள் வாழ வேண்டுமென்று சொல்லுகிற நேரத்தில்கூட கதரை ஆதரித்து பிறகுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கத்தினன் ஆனேன்.

எனக்கு கிடைத்த அறிவுரை

நான் பலமுறை அண்ணா அவர்களிடம் பேசியதுண்டு. அய்யா அவர்களைப் பற்றி அவர் சொல்லும்போதெல்லாம் ஒரே ஒரு எச்சரிக்கையை, நான் கவலைப்படும் நேரத்தில் சொல்வதுண்டு.

“நீ அய்யா அவர்களைப் பார். அவருடைய துணிவை நீ பெற வேண்டும். என்ன நினைக்கிறாயோ நீ அதைச்சொல். அதனால் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ள நீ தயாராகி விடு. நீ மனிதனாகி விடுவாய்’’
என்பதுதான் அறிஞர் அண்ணா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.

அந்த வகையிலே நான் செயல்படும்போது எனக்கு எதிர்ப்பு வந்தபோது எனக்குத் துன்பம் வரும்போது, தொல்லை வரும்போது நான் பலமுறை அய்யா அவர்களை நினைத்ததுண்டு. நான் அதை ஏற்பதிலே கூடத் தவறில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மேடையிலே கூற விரும்புகிறேன். காரணம் மனிதன் துணிந்து வாழ்ந்து தீரவேண்டிய காலமிது.

எதிர்ப்பில் வளர்ந்தது பெரியார் சமுதாய சீர்திருத்தம்

சமுதாயத்தில் இன்றைய தினம் சீர்திருத்தக் கொள்கைகளைப் பேசுவதற்கு மேடையிலே வருகின்றவர்களுக்கு மலர் மாலை கிடைக்கின்றது. ஒருவேளை பொன்னாடையும் கிடைக்கும். ஆனால், அய்யா அவர்கள் சொல்ல நேர்ந்த காலத்தில் என்ன துன்பங்களை ஏற்றிருக்கிறார்கள் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும்;  புரிந்தவர்களுக்குப் புரியும், மறந்தவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

ஓர் உதாரணம் நான் இதே சென்னையில் ஒற்றைவாடைக் கொட்டகையில், 1943 என்று நினைக்கிறேன். ஒரு நாடகத்தில் சீர்திருத்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். வேறு குற்றம் செய்யவில்லை. அந்தக் கதாநாயகன், பதிவுத் திருமணங்கூட அல்ல, சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும், அதுதான் நீதியே தவிர நியாயமே தவிர, மற்றபடி புரோகிதர் திருமணம் கூடாது என்று சொல்லுகிற கதாபாத்திரம். அதுவும் எங்கே சொல்லுகிறானென்றால் ஒரே ஒரு காட்சியிலே அதற்கு எனக்கு கிடைத்த அவமரி யாதைகள், தொல்லைகள் அநேகம். நான் அனுபவித்தேன் மேடையில்.

கலைஞர்களுக்கு மதிப்பு தேடித்தந்தவர் அய்யா

ஏ! கலைஞனே! நீயும் மக்கள் மத்தியில் ஒருவன்தான். மக்களுக்காகத் தொண்டு செய்யக் கடமைப்பட்ட ஒருவன்தான். மக்களுக்குச் சொல்லுகிற கருத்துக்களை நீ கடைப்பிடித்தாக வேண்டிய மனிதனாக இருக்க வேண்டியவன் என்பதையெல்லாம் எடுத்துக் காட்டி _ கூத்தாடிகள் என்று கேலி பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கலைஞர்களிடமிருந்து, பணத்தையும், உழைப்பையும், சூழ்நிலைக்கேற்ப வசதிகளையும் பெற்றுக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அந்தக் கலைஞனைக் கூத்தாடிகள் என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலெல்லாம் மக்கள் மத்தியிலே கொண்டு வந்து நிறுத்தி, “கலைஞனைப் பார்! அவனும் உங்களில் ஒரு மனிதன்தான்’’ என்று கலைஞர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தித் தந்தவர் அய்யா அவர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கலைவாணர் அவர்கள் சிறைப்பட்டபோது முதல் முறையாக அய்யா அவர்களுடைய பத்திரிகையில், “அய்யோ கிருஷ்ணா! உனக்கா 14 ஆண்டு கடின காவல் தண்டனை’’ என்ற தலைப்பிலே தலையங்கம் எழுதிய முதல் பத்திரிகையும், முடிவான பத்திரிகையும் அதுதான். கிரிமினல் கேசிலே தண்டனை அடைந்த ஒரு கைதியைப் பற்றித் துணிந்து அனுதாபத்தோடு மக்கள் மத்தியிலே சொல்லத் துணிவு பெற்றவர்கள் அய்யா ஒருவர்தான் என்றால் அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்ற அறிஞர் அண்ணா அவர்களின் வழியிலே இருக்கின்ற நாங்கள் அய்யா அவர்களைப் பாராட்டுவதைத் தவிர வேறு எந்த வேலையைச் செய்யப் போகிறேன்.

எங்களுக்கு சுயஉணர்வு ஊட்டியவரை நாங்கள்தான் பாராட்ட உரிமை உண்டு

எங்களுக்குத் தந்திருக்கிற சுயமரியாதை, எங்களுக்குத் தந்திருக்கிற சுயஉணர்வு எங்களுக்குத் தந்திருக்கிற பகுத்தறிவுக் கொள்கை, எங்களுக்குத் தந்திருக்கிற வாழும் வகையுரிமை இவைகளைத் தெரிந்து கொண்டிருக்கிற நாங்கள் எங்களை வாழவைக்க வேண்டுமென்பதற்காக இத்தனை ஆண்டுக்காலம் உழைத்து ஓடாகி என்று சொல்லும் அளவுக்குத் தன்னை வயதாக்கிக் கொண்டு இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்லவரை, பெரியவரை, அய்யா அவர்களை நாங்கள் பாராட்டித்தான் தீர வேண்டும். அதுவும் குறிப்பாக சொல்லுகிறேன். நாங்கள்-தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால், எங்களுக்குத்தான் உரிமை அதிகமாகக் கூடும். நண்பர் வீரமணி அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் உடனிருக்கிறோம்; அவர்களை பாராட்டுவதிலே எங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமிருக்கிறதென்று. உண்மை! ஆனால், எங்களுக்கு உரிமை இருக்கிறது.

எங்கிருந்தாலும் பாராட்டுவோம்

நாங்கள் தூரத்திலிருந்தாலும், எங்கிருந்தாலும் உரிமையோடு பாராட்டியே தீருவோம். நாங்கள், பாராட்டுவோர்களை வாழ்த்துவோம். பாராட்டாதவர்களை இழுத்து வந்து பாராட்டச் செய்வோம். எங்களை அழைக்கவில்லை. நாங்கள் வரவில்லை என்று சொல்வதோடு என் பேச்சை நிறுத்திக்கொள்ள நான் தயாராயில்லை. எனக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணத்தால் அய்யா அவர்களைப் பாராட்டும் நிலையை நான் பெறவில்லை; அவ்வளவுதான். இன்றைய தினம் அழைக்கப் பெற்றேன்; வந்தேன்; பாராட்டுகிறேன்; மகிழ்கிறேன்; பாராட்டுச் சொற்களைக் கேட்கிறேன்; பூரிப்படைகிறேன்; ஒருவேளை எனக்கு இன்னும் 25 வயது குறைந்து போய்விடுமோ என்று எதிர்பார்க்கிறேன்.

என் எதிர்கால உழைப்பு அய்யா அவர் களிடமே உள்ளது

காரணம் மனிதன் வாழத்தான் பிறந்திருக்கிறான் என்ற அய்யா அவர்கள், வாழத் தகுதியோடு வாழ அவனுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்ன அய்யா அவர்கள்; உன் மொழியைக் காத்து, நாட்டைக் காத்து, உன் பண்பைக் காத்து, உன் பகுத்தறிவுக் கெள்கையால் நாட்டை வாழ வை என்று சொன்ன அய்யா அவர்கள் இன்றைய தினம் இந்த அளவுக்குப் பாராட்டப்படுகின்றவர் என்றால் நாங்கள் எப்படிப் பெருமைப் படாமலிருக்க முடியும்? என்னுடைய கடமை எவ்வளவோ இருக்கிறது அய்யா அவர்களுக்கு! சூழ்நிலை எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்து என்னுடைய உழைப்பும், என் உண்மையான பகுத்தறிவுக் கொள்கையும் நிச்சயமாக அமையும், எதிர்காலம் அய்யா அவர்களிடத்தில்தான்; இப்போதே அய்யா அவர்களிடந்தான்.

பெரியார் கொள்கை வீரர்

நினைத்துப் பார்க்கிறோம். காங்கிரசில் அய்யா அவர்கள் இருந்தபொழுது காங்கிரசுக்காக என்னென்ன உழைத்தார். சொல்லலாம். இந்த காலத்தில் 5,000 கொடுப்பது, 15,000 கொடுப்பது, 20,000 கொடுப்பது ஒருவேளை சர்வ சாதாரணமாக இருக்கலாம், அல்லது கடமை என்ற பேரில் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், அய்யா அவர்கள் பகுத்தறிவுக் கொள்கை தேவை என்று அவர் உணர்ந்த நேரத்தில் தன்னுடைய தோட்டத்திலே இருந்த தென்னை மரங்களை வெட்டியெறிந்தா ரென்றால் அந்த ஆர்வத்தை, கொள்கையை எப்படிப் போற்றாமலிருக்க முடியும். எந்த ஒரு மனிதனுக்கும் மற்றவர் வீட்டிலே இருந்தால் இடிக்கலாம் என்று சொல்வோமே தவிர, தன் வீட்டில் இடிபாடு ஏற்பட வேண்டும் என்று விரும்புபவன் யாருமே இருக்க முடியாது. வளர்த்த தென்னையை வெட்டுவது என்றால், அதுவும் கொள்கைக்காக, லட்சியத்திற்காக தன்னுடைய உள்ளத் திருப்திக்காக செய்கிறார் என்றால், செய்தார் என்றால், அப்படிப்பட்ட தலைவரை எப்படிப் பாராட்டாமலிருக்க முடியும். அவரிடம் எப்படி இந்த நாடு தன்னுடைய எதிர்காலத்தை ஒப்படைக்காம லிருக்க முடியும்? சிலர் சிலகாலம் இருக்கலாம்; ஒரு வேளை பலகாலமிருக்கலாம். ஆனால், நமக்கு எப்பொழுதுமிருக்க வேண்டியவர் சிலர் இருந்தே தீரவேண்டும். அவர்களிலே ஒருவர்தான் அய்யா அவர்கள். அவரும் நமக்குக் கிடைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் வாழட்டும்; வாழட்டும் என்று கூறி எனது பாராட்டுரையை முடிக்கின்றேன்.

(21.11.1964  தந்தை பெரியாருக்கு
நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆற்றிய உரை
விடுதலை : 01.12.1964)