திங்கள், 21 ஏப்ரல், 2025

பொங்கல் வாழ்த்தும் குறள் வாழ்த்தும்

 

தந்தை பெரியார்

விடுதலை தாளேடு
தலையங்கம்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றது மான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென்ன செய்வது? என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டி கையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக் கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும், பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண்டாடி வரு கிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

தலையங்கம்

450 பொங்கல் வாழ்த்து

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டு மானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத் திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)
இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத் தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர் களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண் டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண் டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளி யையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.

தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண் டாடி இருப்பது பற்றியும், அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றி யறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது – பொங்கல் பண்டிகை யினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு – ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக் குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமி ழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள் ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் கால மும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரி யர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு – தமிழர்களுக்கு இழிவும் ஏற்படு வதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவ தானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.
இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல் லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படி செய்து விட் டார்கள்.

உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன் – ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும். தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாத வனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கி யனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளி யாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் – கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்து விட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப் பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை – தமிழர் சமுதாயத்தை இழிவி லிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன் னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினு டையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமா யணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களு டைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங் கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டு விட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள் ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை – கடைத் தன் மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு வருவதற்குக் குறளைத் தூண்டுகோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

எனது பொங்கல் பரிசு!

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மானமுள்ள, அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் – திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங் களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.

ஆகவே இந்த ஆண்டு – பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரி யோர்களால் கொடுத்து வரப்பட்டதேயாகும். அது போல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவை போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந் தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை – கீதை, இராமாயணம், பாரதம் ஆகிய வைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை – குறள் ஒன்றையே கொடுக் கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங் கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக் கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக் கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக்கையை தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்ட வேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து – கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும் நூல் களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.
உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன் – ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும். தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும் தான். அதாவது,

1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.
2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலி யவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.
3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமி ழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.
பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.
பொங்குக பொங்கல்!
பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

(‘விடுதலை’ 19.01.1949)

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

தமிழ் வருஷப் பிறப்பு


விடுதலை நாளேடு
தமிழ்நாடு, திராவிடர் கழகம்
- பழகுமுகாம் 2025 -

தந்தை பெரியார்

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை
ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவைகள் இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும்.
சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப்பற்றி வெளியான வியாசம் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்குமுன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.
இப்போது இன்னும் சிறிது நாட்களுக்குள் வருஷப்பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட “தமிழ்” வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.

சிந்தித்துப் பாருங்கள்
இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப்படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ளதாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால் தமிழனுக்கும், “நாதியற்ற தமிழனுக்கு” என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்றுதான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமுகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவதில்லை.
கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழிசெயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

“ஆ பயன் அய்ந்து” என்று சொல்லிக்கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை ‘விடுதலை’ எழுதிவிட்டு 1500ரூ செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக் காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.
மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்துகொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

ஆபாசக் கதைகள்
ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று “நம் இலக்கண, இலக்கியங்”களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர்களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதாரமாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண்டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண்டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.
நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? ‘தமிழ்’ வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை
நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காம இச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் “நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்?” என்றாராம். அதற்கு நாரதர் “ஒன்றும் இல்லை” என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் “சும்மா சொல்லும்” என்றாராம். நாரதர், “எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன்” என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இதுதானா பிரமாதம் இன்று இரவு “எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்கு போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்றாராம். உடனே நாரத பிரம்பம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக்கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீடு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக்கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக்கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.

ஆணுக்கும் ஆணுக்கும்
அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரே என்று கருதி போலும், “பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டேன்” என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு “ஸ்ரீமதி நாரத அம்மாளை” அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். “இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பகவான் கீரிடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக்கொண்டு “எங்களுக்கு என்ன கதி?” என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

சூடு சொரணை வேண்டாமா?
ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழனுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.
ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரியையோ, கொல்லத்தையோ, விக்கிரமாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு “சனியனை”யோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

குடிஅரசு – கட்டுரை – 08.04.1944

வியாழன், 20 மார்ச், 2025

கொளத்தூரில் ரூ.211 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

சென்னை, பிப்.28 சென்னை, பெரியார் நகரில் ரூ.210.80 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.2.2025) திறந்து வைத்தார். மேலும், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மய்யங்களையும் திறந்துவைத்தார்.


விரிவாக்கம்

சென்னை கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்க பெரியார் நகரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி தரை மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய மருத்துவமனையைக் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக 3 தளங் களுடன் விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

பெரியார் அரசு மருத்துவமனை

பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு கடந்த பிப்.23-ம் தேதி ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டி ஆணையிட்டார். மொத்தம் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதி களுடன் ரூ.210.80 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இப்புதிய மருத்துவமனை, தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், 2-வது தளத்தில் முழு உடல் பரிசோதனை கூடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவுகள் உள்ளன.

560 படுக்கைகள்
3-ஆவது தளத்தில் பிரசவ வார்டு, மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு வார்டு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு, 4-ஆவது தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, மய்ய ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, 5-ஆவது தளத்தில் இருதயவியல் பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், தோல் நோய் வார்டு, கேத் லேப், 6-வதுதளத்தில் சிறுநீரகவியல், ரத்தக்குழாய் சிறப்பு சிகிச்சை வார்டுகள், சிறுநீரகக் கற்களுக்கான ESWL சிகிச்சை, புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, நிர்வாக அலுவலகம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

47 சேவை மய்யங்கள்

இந்த மருத்துவமனைக்கு 102 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 79 மருத்துவம் சாராபணியாளர்கள், 20 அமைச்சுப் பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மய்யம்’ உட்கோட்ட அளவில் 9 மய்யங்களும், வட்டார அளவில் 38 மய்யங்களும் முதலமைச்சரால் திறக்கப் பட்டன.
மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.2.24 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, 72 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 19 மார்ச், 2025

ஹிந்தி வந்து விட்டது இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியதுதான் (1948)


விடுதலை நாளேடு
பெரியார் கல்வி நிறுவனங்கள்

 தந்தை பெரியார்

தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக்கக் கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும், காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு இந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரம் அல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும், அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த இந்தியைக் கட்டாயமாக நுழைக்க முயன்றதுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும், அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது இந்தியைப் புகுத்திவிட்டுதான் மறு காரியம் பார்ப்பது என்கிற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ, கெஞ்சிக் கொள்வதாலோ, சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கிற நிலைமை காணப்படுகிறது.

முயற்சி எல்லாம் பாழாய் விட்டது

இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்பந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லை என்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளைச் சொல்லிக் கொள்ளப் பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.

இனி செய்ய வேண்டியது என்ன?

இனித் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்கு முன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்குப் பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேட்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய்க் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்குச் சமாதானம் தெரிந்த பிறகு மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு, ஒரு யோசனை சொல்வதினாலோ, ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு விதப் பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.

அலட்சியத்துக்குக் காரணம்

தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் தமிழ் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ, வீரமோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்குப் பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைமைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்றுத் தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தான் ஆதாரங்கள் காட்டலாமே ஒழியப் பிரத்தியட்ச அல்லது சமீப சரித்திரச் சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டுச் சூத்திரராக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.

50 வருஷகால வாழ்வு

இவை தவிர, நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான். தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.

தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களில் சமீபகால சரித்திரமும், வாழ்க்கைக் குறிப்புகளும், தற்கால நிலையும், அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மாமணியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர், உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர், நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காணமுடியாதது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள, பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, ஒரு தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்குப் பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் – பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களைத் தாழ்த்தி அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனர்க்கு அடிமையாய், ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

மாபெரும் விரோதி

ஆகவே இவையும், இவை போன்ற இன்னும் பல காரணங்களும், ஏராளமாய் இருக்கும் போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை. வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் ‘எம’னாய் ‘உளைமாந்தையாய்’ இருக்கும் இந்தி பாஷையைப் பார்ப்பனர்கள் கட்டாயமாகத் தமிழ் மக்களுள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படித் தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்.
கனம் ஆச்சாரியார் பார்ப்பனராயிருந்தாலும், இந்தியை ஒரு தமிழ்மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி, பெருங்குடி மக்கள் சமுகத்தைச் சேர்ந்த குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு, அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.

ஆச்சாரியார் மூர்க்க பலம்

மற்றும் கனம் ஆச்சாரியார், என்னும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமுகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும் படி சூத்திரர்களாக ஆக்க இந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்” “நன்று, நன்று” “நடத்து, நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனைத் தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமுகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ் மக்களுக்குப் பிடித்தமில்லாத – தமிழ் மக்களுக்குக் கேடு சூழும் படியான இந்தியைக் கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.
ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக் கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.
இதனால் எந்தத் தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்தியைத் தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களைத் திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலைமையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும், நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் வேண்டுபவர்

உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் இரத்தம் ஓடும் வாலிபர்களே இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.
எப்படிப்பட்ட பார்ப்பனத் தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.
பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது. இரண்டி லொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாகப் பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும், ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும். ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத்தக்கதாகும்.
அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்.
காலம் அடுத்து விட்டது

கோடை விடுமுறை முடிந்த உடன் இந்தி கட்டாயப் பாட முறை அமலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொரு வரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும், அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும். தோழர்கள் எஸ்.எஸ்.பாரதியார். உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

சிறை புகுவது அற்ப விஷயம்

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்குச் சிறை செல்லுவது என்பது மிகச் சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதி விடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாளச் சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராக இருந்தால் போதாதா? என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3ஆம் தரக்காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும், அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிறக்கமற்ற மரத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவிளைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்தவேண்டும்.
இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் அய்யமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை இந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” நான் தயார்” நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்குத் தயார்” உயிரை விடத் தயார்” என்பதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி, பகல் பட்டினி கிடக்கவும், தொலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனைச் சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம்

பெரியோர்களே! முன் மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்குப் புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு பொதுநலத் தொண்டுக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள். அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை

தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா, இறப்பதா? என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும், பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள். நடந்தது நடந்து விட்டது. அதைப் பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும், உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தைத் தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்

பொதுத் தமிழ் மக்களுக்கு ஒரு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாசிரமப் புரோகிதர் ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைபட்டுக் கிடந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களும், நாமும், நமது பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சிப் போராக, முயற்சியாகக் கருதுங்கள். உங்கள் சவுகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவு களையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களைப் போருக்குக் கச்சைக் கட்டி விரட்டி அடியுங்கள்.

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது! கிடைக்காது! ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே, தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 08.05.1938

ஹிந்திப் போர் (!938)

 

விடுதலை நாளேடு
கட்டுரை, தந்தை பெரியார்

இந்திப் போர் ஆரம்பமாகி விட்டது. இந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப் படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும், மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திரபோஸ் இந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று, இந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் சி.டி. நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்குத் தோழர் சி.டி. நாயகம் ஏற்கனவே பதிலனுப்பிவிட்டதாகவும் காங்கிரஸ் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.

தோழர் சி.டி. நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்து இந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டு மென்றும், இது விஷயமாக ஒரு முடிவு ஏற்படும் வரை இந்தி கட்டாய பாட விஷயமாக எதுவும் செய்யக் கூடாதென்று கனம் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் காங்கிரஸ் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இது விஷயமாக நமக்கு இன்று வரை இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியிடமிருந்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை, எனவே பிரஸ்தாப விஷயமாக நாம் எதுவும் கூறமுடியவில்லை. தோழர் சுபாஷ்போஸ் மெய்யாகவே தோழர் சி.டி. நாயகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தால் சென்னை காங்கிரஸ் சர்க்கார் இந்தி எதிர்ப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? என்ற சந்தேகமும் நமக்கு உண்டாகிறது.

காங்கிரஸ் ராஜ்ஜியத்திலே சர்வ ஜனங்களுக்கும் பூரணமான பிரஜா, சுதந்திரங்கள் – இருந்து வரும் என காங்கிரஸ்காரர்கள் விளம்பரம் செய்தனர்; செய்கின்றனர். ஆனால், அவர்களது பிரஜா சுதந்திரம் எத்தன்மையது என்பதை சென்னை மெயிலைப் போலவே நம்மாலும் உணர முடியவில்லை. ஒருக்கால் அவர்கள் கூறும் பிரஜா சுதந்திரம் காங்கிரஸ்காரருக்கு மட்டும்தான் உண்டா? சமீபத்தில் சென்னையில் கிராம்பு மறியல் நடைபெற்றது. மாகாண காங்கிரஸ் தலைவர் ஆதரவிலேயே அந்த மறியல் போர் நடைபெற்றது. விவசாய மந்திரி கனம் முனுசாமிப் பிள்ளையும் அந்த மறியல் போரைக் கண்ணுற்றார். ஆனால், அந்த மறியல்காரர்மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, காங்கிரஸ் சர்க்கார் பிரஜா சுதந்திரத்துக்கு வழங்கியிருக்கும் பொருள் நமக்கு மர்மமாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போர் அனாவசியமாகவும், அக்கிரமமாகவும் தொடங்கப் பட்டதல்ல. காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியே நிர்ணயம் செய்யுமெனச் சொல்லப்படுகிறது. பொது பாஷை ஒரு அகில இந்தியப் பிரச்சினை.

சென்னை மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. தேசிய பொது பாஷையைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் இதுகாறும் முடிவு செய்யவே இல்லை. ஹரிபுரா காங்கிரசிலும் கூடத் தேசிய பொதுப்பாஷை விஷயம் பரிசீலனை செய்யப்படவில்லை. சென்ற பொதுத் தேர்தலுக்கு முன், தேசிய பொது பாஷையைப் பற்றிக் காங்கிரஸ்காரர் ஒரு வார்த்தையாவது பேசவுமில்லை. எனவே திடும்பிரவேசமாய் இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தப் போவது நேர்மையே அல்ல.

இது பல இந்தி எதிர்ப்பு மகாநாட்டு முடிவுகள் மூலம் சென்னை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திக்கு தென்நாட்டில் இருந்து வரும் எதிர்ப்பின் வன்மை காங்கிரஸ் சர்க்காருக்குத் தெரியாததுமல்ல. இந்தி கட்டாயப் பாட விஷயமாக சென்னை முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச் சாரியாரும், கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்பராயனும் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு வந்திருப்பதே இந்தி எதிர்ப்பின் வன்மையை சென்னை காங்கிரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. ஈரோடு பொதுக் கூட்டத்தில் கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் பேசுகையில் இந்தியில் பரீட்சை நடத்தப் போவதில்லையென்று கூறினார்.
சென்னை மாகாணம் முழுவதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாகக் கூறிய கனம் முதல்மந்திரி 125 பள்ளிக்கூடங்களிலே பரிட்சார்த்தமாக இந்தியை கட்டாயப் பாடமாக்கப் போவதாகவும், இந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர் களும் மற்ற பாடங்களில் போதிய அளவுக்கு மார்க்கு வாங்கியிருந்தால் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றும் இப்பொழுது கூறுகிறார்.
கல்வி மந்திரி இந்தியில் பரீட்சையே நடத்தப்பட மாட்டாது என்று கூறி இருக்கையில் இந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என கனம் முதல் மந்திரியார் கூறுவதின் மர்மம் என்ன? இதனால் இந்தி விஷயமாக பிரதம மந்திரிக்கோ, கல்வி மந்திரிக்கோ திடமான கொள்கை இல்லை என்பது விளங்கவில்லையா? சென்னை மாகாண மாணவ மாணவிகளின் ஷேமத்தைப் பாதிக்கக் கூடிய கல்வி விஷயத்தில் இம்மாதிரி வழவழாக் கொள்கையைக் காங்கிரஸ் மந்திரிகள் பின்பற்றுவது நேர்மையாகுமா? தென்னாட்டு மக்களில் 100க்கு 93 பேர் எழுத்து வாசனை இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய் மொழிப் பயிற்சியிலேயே சென்னை மாகாணம் இவ்வளவு மோசமாக இருந்து வருகையில் இந்தி கட்டாய பாடத்தைச் சென்னை மாகாண சிறுவர், சிறுமியர் தலையில் ஏற்றுவது என்ன நீதி? சென்னை மாகாணக் கல்வி இன்மையைப் போக்க சென்னை பிரதம மந்திரி ஏன் முயற்சி செய்யவில்லை? கல்வி இன்மையைப் போக்க வேண்டியதல்லவா பொறுப்புடைய ஒரு மந்திரியின் முதல் வேலை.

அய்க்கிய மாகாணத்திலே கல்வியின்மையைப் போக்க 10 லட்ச ருபாய் ஒதுக்கி வைத்து வேலைகள் நடைபெற்று வருவதை சென்னைப் பிரதம மந்திரி அறியாரா? கல்வி விஷயத்தில் அய்க்கிய மாகாண மந்திரி ஒரு விதமாகவும், சென்னை மாகாண மந்திரி வேறு விதமாகவும் நடப்பது காங்கிரஸ் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறதா? முக்கியமான விஷயங்களில் காங்கிரஸ் மாகாணங்கள் எல்லாம் ஒரே மாதிரிக் கொள்கையையே பின்பற்றும் எனக் கூறப்படுவது சென்னை மாகாணத்துக்கு மட்டும் பொருந்தாதா? எப்படிப் பார்த்தாலும் சரி, சென்னை முதல் மந்திரியார் போக்கு ஆதரிக்கக் கூடியதே அல்ல. ஆகவே, சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் முடிவுகளை நிறைவேற்றி வைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே நிர்வாகக் கமிட்டியார் கட்டளைப்படி நடக்கத் தென்னாட்டார் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 05.06.1938

தந்தை பெரியாரும் தமிழ் மொழியும்! (தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியது ஏன்?)

 

தந்தை பெரியாரும் தமிழ் மொழியும்!

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினார் என்பதுதான்.

நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், “தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியுள்ளார்” எனப் பேசினார்.
உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன?
பெரியார் கூறியது என்ன?

தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
“இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் ஜாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் இல்லாததை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்” என்கிறார் கவிஞர் கலி. பூங்குன்றன்.
பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

இருப்பினும், மேடைகளில் ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் பிரச்சாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள்.
தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக கவிஞர் கலி. பூங்குன்றன் கூறுகிறார்.
மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர்.

தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை
பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை மனிதப் பற்றே தன்னுடையது என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். “எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, ஜாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
“மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்” என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

“தமிழ் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்” எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘மொழி – எழுத்து’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை:
‘‘தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.”

”நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது.”

பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்?

“பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1938களில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது.
அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்,” என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கவிஞர் கலி. பூங்குன்றன்.
மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன்.
தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடு களை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தி யுள்ளார்.

தமிழ் மொழியில் சீர்திருத்தம்

தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த செய்தியாளர் ப. திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, “தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்” எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன்.
“தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும்” என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை மாநிலம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து

பெரியார் கூறியது என்ன?
ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது ஹிந்தி எதிர்ப்பை 1926ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1926 நாளிட்ட ‘குடிஅரசுவில்’ ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். ‘தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்’ என்பது தான் ‘சித்திரபுத்திரன்’ எனும் புனைப் பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு” என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார்.
“இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத் தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?” என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: பி.பி.சி. தமிழ்