திங்கள், 13 நவம்பர், 2017

கற்பு, விபசாரம் எனும் புரட்டு

26.10.1930 -குடிஅரசிலிருந்து...

விபசாரி மகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. ஆனால் எந்த சமயத்தில் ஆண்கள் கோபித் துக் கொள்ளுகின்றார்களென்றால் தங்கள் மனைவிகள் வைப்பாட்டிகள், குத்தகை தாசிகள் விபசாரம் செய்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும், அவமான மேற்பட்டு விட்டதாக பதறு கிறார்கள். 

மற்றும் தங்கள் பெண்களைத் தங்களு டைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுய நலத்திற்காக விபசாரத்திற்கு விட இணங்கு கிறான் என்றோ பெண்ணை அடக்க முடி யாமல் ஊர்மேல் விட்டு விட்டான் என்றோ சொல்லுகின்றபோது அதிகமாய்க் கோபித்துக் கொள்ளுகின்றார்கள். 

ஆகவே இந்த அனுபவங்களையும் கொண்டு மேலே காட்டியபடி அதாவது விபசாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய வஸ்து  என்றும் கருதியிருக்கின்றார்கள் - என்பது இன்னும் தெளிவாய் விளங்கும்.

நிற்க, அது அதாவது விபசாரம் என்னும் வார்த்தையை வழக்கத்தில் ஏன் பெண்களை மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன் படுத்தப்பட வில்லை? யென்று கவனிப் போமானால் அதிலிருந்து மற்றொரு உண் மையும் புலப்படும். அதென்ன வென்றால் விபசாரம் என்று சொல்லப்படுவது சுபாவத்தில் உண்மைக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும். 

எது போலென்றால் எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறை யும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகு மென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண் களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும், சாதாரண மாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த் தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததே யாகும். 

ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த் தையும் சிறிதும் பொருத்தமற்றதே யாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப் பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தை யின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண் களுக்கும் பெண் களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வள வையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோத மாகவும் விபசாரத்திற்கு அநுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப் பற்று, நடப்புப் பற்று, பிறப்புப்பற்று என் பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசை களையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு, பரிசுத்தமான உண்மையைக் காணு வானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூழ்ச்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும்.
-விடுதலை நாளேடு,11.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக