செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கருப்பு சட்டை ஏன்?


*- தந்தை பெரியார் -*

இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.
நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும்.

நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். 

அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம்.

கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை
பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?
நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக் காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.
இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

*ஆதாரம் : "குடிஅரசு" இதழ் - 05.06.1948*

*நன்றி : "விடுதலை" ஞாயிறு மலர்  06.09.2014* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக