திங்கள், 25 மே, 2020

விகடன்" விஷமம் - பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு இழைக்கும் கொடுமை

"விகடன்" விஷமம்

       தந்தை பெரியார்

17.10.37ந் தேதி "விகட"னின் தலையங்கத்தில் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் ஒரு வியாசம் காணப்படுகிறது. 
அதில் ஹிந்தியை முதல், இரண்டாவது, மூன்றாவது பாரம் வரைக்கும் வைக்கப் போகிறபடியால் அதற்கு மேல் சமஸ்கிருதம் இஷ்டபாடமாக வைக்கலாம் என்றும்,
இங்கிலீஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும்,
சீநிவாச சாஸ்திரியார் ஒருவரேதான் இங்கிலீஷ்காரரைப் போல பேசத் தெரிந்தவர் என்றும்,
ஆதலால் இங்கிலீஷ் அப்படி பேசத்தெரிய முயற்சி செய்வது பயன்படாது என்றும்,
இங்கிலீஷையும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும்,
தமிழ் கற்றுக்கொடுக்க தோழர் உ.வே. சாமிநாதய்யர்தான் தகுதியானவரென்றும் அவர்தான் தற்கால கொள்கையை தமிழில் புகுத்தாமல் நூலிலுள்ள இன்பத்தை மாத்திரம் நுகரும்படி செய்வார் என்றும்,
சமஸ்கிருதமே உலகத்து நாகரீகத்துக்கு எல்லாம் அடிப்படையான பாஷை என்றும், அதை படிக்க பள்ளிக்கூடங்களில் வசதியும் தூண்டுதலும் வேண்டுமென்றும்,
டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருந்து இதை உணர்ந்து இருப்பது பாக்கியம் என்றும் மற்றும் பல விஷயங்களும் "வாழிய செந்தமிழ்" என்னும் தலைப்பில் இருக்கின்றன.

இந்த தலையங்கத்தை கசக்கிப்பிழிந்தால் இங்கிலீசுக்கு சாஸ்திரியாரே கெட்டிக்காரர், தமிழுக்கு சாமிநாதய்யரே கெட்டிக்காரர், பாஷைகளில் சமஸ்கிருதமே சிறந்தது என்பதும் ஹிந்தி கட்டாயம் 3-ம் பாரம் வரை படித்தாக வேண்டும்; பிறகு சமஸ்கிருதம் சுலபமாய் வந்து விடும்; தமிழ் கற்றுக்கொடுக்கும் போது தமிழர்களின் நிலை, கொள்கை ஆகியவைகளைப் புகுத்தக்கூடாது; இங்கிலீஷ் பிரதானமல்ல; அது படித்ததால் பல கேடுகள் வந்து விட்டன என்பதும் இந்த அபிப்பிராயத்துக்கு மரியாதை கொடுத்து தக்கது செய்ய டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருக்க ஒப்புக்கொண்டது தமிழ் நாட்டின் பாக்கியம் என்பதுந்தான் சாரமாகும்.

இதற்கு பெயர்தான் வாழிய செந்தமிழாம். இந்த விஷயங்களை எழுதுகிறவர்கள் புத்திசாலிகளா அல்லது இதையும் படிக்க இருக்கும் மக்கள் மடையர்களா என்பதுதான் தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினையாகும்.

டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்து விட்டு அவரிடம் என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கலாம், அவர் எதற்கும் தமது கையெழுத்தைக்கூட யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் அனுமதித்துவிடுவார்.

சாஸ்திரியாருக்கு இவ்வளவு விளம்பரம் கொடுத்திருப்பது எதற்கு? பத்திரிக்கைகள் தோழர் சாஸ்திரியார் பிரிட்டிஷாரின் கூலிப் பிரசாரகராய் உலகம் சுற்றி பிரிட்டிஷை புகழ்ந்து  
பிரசாரம் செய்து பட்டம் பணம் சம்பாதித்துக் கொண்டதல்லாமல் இதுவரை இந்தியாவுக்கு அவரால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று யாராவது சொல்லமுடியுமா? அல்லது எந்த பார்ப்பனப் பத்திரிகையாவது உறுதி செய்ய முடியுமா?

தோழர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழ் பழைய ஏட்டுப் பிரதிகளைக் கைப்பற்றி தமிழ் உணர்ச்சி இல்லாமல் வடமொழி கருத்துக் களையும் ஆரியர் கொள்கைகளையும் உட்புகுத்தி புத்தக ரூபமாக்கி புத்தகம் அச்சுப்போட தமிழர்களிடம் பணம் பெற்று புத்தகம் விற்ற பணத்தை தனது முதலாக்கி பணக்காரராகி பட்டம் பரிவட்டம் பெற்றதல்லாமல் தமிழுக்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட இலக்கியம் இன்னது, இலக்கணம் இன்னது அல்லது வெளிப்படையாய்க் கட்டிய சொந்த கருத்து அமைந்த நூல் இன்னது என்று ஏதாவது எடுத்துக் காட்ட முடியுமா?

மற்றும் சமஸ்கிருதம் இவ்வளவு உயர்ந்தது என்று சொல்லுகிற இப்பார்ப்பனர்கள் அப்பாஷை இலக்கிய இலக்கணங்களால் காட்டு மிராண்டித்தன காலத்திய  கற்பனைக் கதைகளும் பார்ப்பனர்களே கடவுள் - கடவுளே பார்ப்பனர்கள் என்கின்ற வஞ்சக விஷம உணர்ச்சிகளும் மக்கள் அறிவை அடக்கி காட்டு மிராண்டித்தனத்துக்கு கொண்டு போகும் அடிமைப் புத்தி கற்பிப்பும் அல்லாமல், சமஸ்கிருதத்தில் அரசியல், சமூக இயல், பொருளியல், கல்வி இயல், அறிவியல், ஒழுக்க இயல் ஆகியவற்றிற்கு யோக்கியமான - நாகரிகமான கருத்துக்களோ பயன்படக்கூடிய பொருள்களோ ஏதாவது இருக்கிறது என்பதாக யாராவது சொல்ல முடியுமா?

ஆகவே இவ்வளவு மோசமாயும் நம் சமூகத்துக்கே கேடாகவும் இருக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டு "விகடன்" கையாளும் மாதிரியைப் பார்த்தால் பார்ப்பன பிரசார சூழ்ச்சி அதில் எவ்வளவு இருக்கிறது என்பது நன்றாய் மக்களுக்கு விளங்கிடும்.

கடைசியாக பார்ப்பனரின் கருத்து மக்கள் இங்கிலீஷ் படித்தே சுதந்தரமும் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெறும் உணர்ச்சி பெற்று விடுவதால், அதை ஒழித்துவிட்டு ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தி தமிழுக்கும் தாங்களே வாத்தியார்களாகி விட்டால் தமிழர்களை பழையபடி சூத்திரர்களாக்கி தாசி மக்களாக்கி விடலாம் என்கின்ற எண்ணமும் சூழ்ச்சியும் அல்லாமல் வேறு இல்லை என்பதும் விளங்கிவிடும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.10.1937

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக