- தந்தை பெரியார்
டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணியில் தாங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இருந்தால், தாங்கள் முதல் முதலாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற கருத்து தங்களுக்கு எப்படித் தோன்றியது என்று கூறினால் பரவாயில்லை.
பெரியார்: எனக்குச் சின்ன வயசிலேயே ரொம்பச் செல்லப் பிள்ளை மாதிரி எல்லோரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அதிலே எனக்குக் கொஞ்சம் ரொம்ப வேகமாக கருத்துகளெல்லாம் தோன்றும். அது தப்பு, இது தப்புன்னு கருத்துகளெல்லாம் எனக்குத் தோனும். அதை நான் சாதாரணமா, தைரியமா வெளியிடுவேன். அந்த முறையிலே மத சம்பந்தமா, இலக்கிய சம்பந்தமா, அது அது சம்பந்தப்பட்டவங்ககிட்ட வாதாடி வாதாடி ஒரு மாதிரி, பொதுவா சொன்னா, ஒரு வாயாடி என்ற நிலைமைக்குப் பேரு வர்றபடி வாதாடிட்டு இருந்தேன். அதே போக்குலேதான் ஜனங்களண்டைப் பழகும்போது இந்தப் புள்ளைக் குட்டி அதிகமா பெத்துக்கிட்டு இருக்கிறவங்க படற கஷ்டம். நம்ம கிட்ட வந்து முறையிடுற முறை; புருஷன் - பெண்ஜாதி சண்டை போட்டுக்கிட்டு வர்ற கலவரம் இவற்றையெல்லாம் நான் சீரியஸா கவனிக்குறபோது இந்தப் புள்ளைங்களாலே பெரிய தொல்லைப்படறாங்க. இயற்கையா இருக்கிற தொல்லை தவிர, புள்ளைக் குட்டிங்களாலும் வேற தொல்லைப் படறாங்கன்னு கண்டேன்.
வேடிக்கையா சொல்றேன். குடிஅரசு ஆபீசிற்கு எதிர்த்தாப்பலே ஒரு வீடு. குடித்தனக்காரர் வீடு. அவங்க நம்ம ஜாதியில்லை. எங்களுக்கும் அவங்களுக்கும் ஒரு மாதிரியான முறை. அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான்னு கூப்பிடுவோம். அந்த முறையிலே எதிர்த்த வீட்டுக்காரன் ஒருத்தன், அவன் எனக்கு மாப்பிள்ளையா வேணும். அவன் மனைவிக்கு நான் அண்ணனா வேணும். இந்த மாதிரி இருக்கும். அவனுக்கு நாலு குழந்தை. கைக் குழந்தை ஒண்ணு. அந்த நிலையில அவன் கோவம் வந்து பெண்டாட்டியைப் போட்டு அடிச்சுப்புட்டான்.
அப்போ நான் இங்கிருந்து சிபாரிசுக்குப் போய், என்னடா! இந்த மாதிரி பண்றியே, கொள்றியே? குழந்தை குட்டிகளுக்கு இந்த மாதிரிப் பண்ணுறியே? அப்படின்னு ரொம்பக் கடினமாகக் கேட்டதுக்கு, இதைப் பத்தி எல்லாம் நீ கேக்காதேங்கிற அளவுக்கு வந்திட்டான். அந்தக் கோவத்தினாலே, அந்தம்மா அழுதுப்புட்டுச் சொல்றபோது ஒரு வார்த்தைச் சொன்னா. இந்த மாதிரி இவருகிட்டே இன்றைக்கு, நேத்திக்கல்ல, நான் படற அவஸ்தை; கொஞ்ச நாளாவே ஒதை தின்னு தின்னு எனக்கு ரொம்ப வேதனையா போச்சு; அதனாலே போயி எங்காவது ஆத்தில - குளத்தில இறங்கிடலாம்னு முடிவு; இவற்றை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணட்டும்? நான் ஒருத்தி விழறதா இருந்தா இதுங்க கதி என்னவாகும்? இல்லாட்டா இவைகளையும் தள்ளிப் போட்டுல்ல நான் விழவேணும். இந்தக் கொலைக்கு நான் ஏன் பாகப்படணும்னு இந்த ஆளுகிட்ட உதை தின்னுக்கிட்டிருக்கேன். இல்லாட்டா நான் போய் விழுந்திடுவேன், ஆத்திலே அப்படின்னு அவள் சொன்னாள்.
வாய்த் துடுக்கு முறையிலே சரி ஏன் இப்படிப் பெத்தே நீ? உன்னை யாரு இவ்வளவு பெத்துக்கச் சொன்னா? பெத்துக்கிட்டியே வேதனைப்படறியே அப்படின்னேன்.
அப்ப அந்த அம்மா பேச்சோட பேச்சா அது நம்ம செயலில்லே, அது பகவான் செயல்; அப்படிப் பண்ணிட்டது; நான் என்ன பண்ணட்டும்? அப்படின்னு சொன்னா. அப்பதான் அந்தப் பகவான் செயலைக் கண்டிச்சுப் போட்டு நான் அன்னிக்கே வந்து எழுதியிருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பெத்துக்கிட்டு சங்கடப்படறாங்க. இப்படி கிணத்துல விழுந்துட துணிஞ்ச பொம்பளைகூட - இந்தப் புள்ளைகளை வெச்சுக்கிட்டு, எப்படி நான் விழுகிறது. இதையும் போட்டுட்டு விழுகிறதுன்னா, எனக்கு இதா இருக்குதேன்னு விசனப்படறான்னு வேடிக்கையா அப்ப வந்ததுதான்.
வந்ததுக்கப்புறம் நாம சீரியஸா எழுதிட்டு இருந்தமா. பிரிட்டிஷ் நியூஸிலே வந்தது இந்தச் சங்கதி, இங்கிலீஷ் பத்திரிகையிலே! அதை எடுத்துத்தான் எழுதிக்கிட்டிருக்கேன். நம்ம கருத்துக்குச் சரியா இருந்தது. அப்ப எங்கிட்ட இருக்கிற கிளார்க் ஒருத்தர் கொஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சவர். அவருகிட்டே சொன்னேன். இதை மொழிபெயர்த்திடலாம்னு. அதைத்தான் முதல் முதல்லே செய்தோம். அப்படியே எண்ணம் வளர்ந்து போச்சு.
எனக்கு முதல் மனைவியாயிருந்த நாகம்மை கல்யாணமாகி கொஞ்ச வருஷம் ஆனவுடனே ஒரு குழந்தை பொறந்து செத்துப் போச்சு. இந்தக் குழந்தையை நான் பார்க்கவும் இல்லை. அய்ந்து மாதம் ஆச்சு. அய்ந்து மாசமா நான் அதைப் பார்க்கக்கூட இல்லை. எனக்கு அவ்வளவுதான். மறுபடியும் அந்தம்மாகிட்டே சொன்னேன்.
எனக்குக் குழந்தை இல்லேன்ற பேச்சே நாம வைச்சுக்கக் கூடாது இங்கே; அப்படி இப்படின்னு அந்தம்மா கெஞ்சுவாங்க. ஒரு புள்ளை மாத்திரம் இருக்கட்டும். வேறு இல்லாட்டி போகட்டும். நம்ம குடும்பத்துக்கு ஒன்னுன்னா நூறு புள்ளை நாம எடுத்து வளர்த்துடலாம்னு சொன்னேன்.
அதனாலேயே ரெண்டு, மூணு புள்ளை வளர்த்தேன். அதுக்கு நான் ரொம்பவும் உபதேசம் பண்ணினேன். நம்மளுக்குக் குழந்தை வேண்டாம்னு. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்தது. அந்தக் குழந்தை பெக்கறது ஒரு நியூசென்ஸ்னு எனக்குப் பட்டது. என்னை ராமேஸ்வரத்துக் கெல்லாம் கூட்டிக்கிட்டுத்தான் வந்தாங்க. குழந்தைக்காக, ஆமா எங்க ஊரிலேகூட கணபதி, அரச மரம், வேப்ப மரம், கல்யாண மரம் இதெல்லாம் பண்ணிருக்காங்க. எனக்குப் புள்ளே வேண்டாம்னு அப்படி பழகிச்சு, அது என்னவோ பிராக்டிகலா ரொம்ப வளர்ந்து போச்சு அந்த எண்ணம்.
[8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரையாடியதன் தொகுப்பிலிருந்து.... (விடுதலை 9.3.1970.)].
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக