திங்கள், 15 நவம்பர், 2021

பெண்கள் வழங்கிய பெரியார் பட்டம்

தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் 1938 நவம்பர் 13 .

1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச்சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு மீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தப்பட்டது.*

*ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் ஈ.வெ. ராமசாமி “பெரியார்” என்று அழைக்கப்பட காரணம். “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது.” என்பதே அந்த தீர்மானம்.*

*அன்று முதல் இன்றுவரை எல்லோறாலும், “தந்தை பெரியார்” என்றே அழைக்கப்படுகிறார் ஈ.வெ. ராமசாமி.*

*இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஏராளமான மகளிர் பங்கேற்க இம்மாநாடு பெரும் உந்து சக்தியாக விளங்கியது. இந்த மாநாட்டில் ஆற்றிய உரையை குற்றச்சாட்டாக கொண்டுதான் தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.*

*குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 டிசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 டிசம்பர், 1927 பிறகு குடிஅரசு இதழில் நாயக்கர் பட்டம் எடுக்கப்பட்டது. அவ்வாறாக, ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், ‘நாயக்கர்’ என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ.வெ. இராமசாமிப் பெரியார்‘ என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளை.*

*பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் என்பதையும் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக