தந்தை பெரியார்
தோழர்களே!
நேரம் அதிகமாகி விட்டது. நமது ஊருக்கு இந்த மாதிரி இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டிப் பேசியது இதுவே முதல் தடவை என நினைக்கிறேன்.
இந்த நடு இரவில் இத்தனை ஆயிரம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத் துடனும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் மிகுந்த ஆச்சரியமாகவே இருக்கிறது. வெளி யூர்களிலிருந்து பல தலைவர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்கள் பேச்சு களைக் கேட்கவே இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய தலைவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள்.
முன் பேசிய சைபுல் இஸ்லாம் ஆசிரியர் மவுல்வி அகமது சயித் சாயபு, தோழர் மலங்கு அகமது பாஷா சாயபு அவர் களும், மவுலானா சாபுடீன் சாயபு அவர் களும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமைக் காகவும் மிகவும் பாடுபட்டு வருகிறார்கள். இதுசமயம் எது எது அவசியமாகப் பேச வேண்டுமோ அவைகளையெல்லாம் எனக்கு முன் பேசியவர்கள் பேசிவிட்டார்கள். இருந்தா லும் நான் சிறிது பேச விரும்புகிறேன்.
இங்கு நபிகள் நாயகம் அவர்கள் பிறப்பைப் பற்றியும், அவர் சேவையைப் பற்றியும் மிக அருமையாகப் பேசப் பட்டது. எனக்கு முன் பேசியவர்கள் முஸ்லிம் மதம் கத்திமுனையால் பரப்பப்பட்டது என்று எதிரிகள் கூறி வருவது தப்பு என்ப தற்குப் பல சமாதானங்கள் கூறினார்கள். மகமதிய மதம் கத்தி முனையால் பரப்பப்பட்டதா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
மற்ற மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா?
இன்று ஒவ்வொரு மார்க்கத்தினுடைய சரித்திரமும் அந்தந்த மதங்கள் வாளாயுதம் இல்லாமல் வளர்ந்ததாகக் கூறவில்லை. ஏன் அதிக தூரம் போகவேண்டும்? இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். அது அன்பினால் பரப்பப் பட்டதா? சன்மார்க்கத்தால் பரப்பப்பட்டதா? ஜீவகாருண் யத்தால் பரப்பப்பட்டதா?
அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மதுரையில் வருடா வருடம் நடைபெற்றுவரும் திரு விழாவைப் பாருங்கள். அங்கு 8,000 சமணர்களைக் கழுவேற்றியதையே காட்டப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது? அன்பையா? ஜீவ காருண்யத்தையா? சன்மார்க்கத்தையா?
இனி வைணவ மதத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மதக்காரர்கள் மற்ற கோயில்களை இடித்துக் கொள்ளை அடித்தே அவர்கள் கோயில்களைக் கட்டினார்கள் எனப் பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்குச் சீரங்கம் கோவிலே உதாரணமாகும்.
இப்படியெல்லாம் இருக்க ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை ஏன் பரிகசிக்க வேண்டும்?
இன்று அகராதிகளைப் புரட்டிப் பாருங்கள்.
துலுக்கர் என்றால் மிலேச்சர் என்றும், துலுக்க பாஷை என்றால் மிலேச்ச பாஷை என்றும், துருக்கி என்றால் முரடர் என்றும் எழுதி இருக்கிறது. இதுவெல்லாம் மகமதியரை இழிவு செய்ததாகாதா?
தோழர் மலங்கு அகமது சாயபு அவர்கள் கூறியதுபோல் இன்று நாட்டில் மக்களை எத்தனை பிரிவுகள் செய்து இழிவுபடுத்தி இருக்கிறார்கள்?
பிராமணன் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவனென்றும், சத்திரியன் புஜத்தில் பிறந்தவனென்றும், வைசியன் தொடை யில் பிறந்தவனென்றும், சூத்திரன் பாதத்தில் பிறந்தவனென் றும், அவன் மேலே கூறப்பட்ட ஜாதியார்களுக்கு அடிமை வேலை செய்யவே பிறந்திருக்கிறான் என்றும் இழிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்த இழிவைப் பற்றிப் பிரசாரம் செய்தால் 153ஆம் செக்ஷனை பிரயோகம் செய்து பிரசாரத்தைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
இதுவுமில்லாமல் நமது பிரசாரத்தை ஒழிக்க ஒரு புதுமார்க்கம் தேடி இருக் கிறார்கள். அது என்னவென்றால், சென்ற வாரம் சிம்லாவில் கூடிய உள்நாட்டு மந்திரிகள் கூட்டத்தில் வகுப்பு துவேஷமாகப் பேசுவதையும், எழுது வதையும் தடுக்கக் கடுமையான முறைகளைக் கையாள வேண்டுமென்பதாகும்.
ஒரு புது மார்க்கம்
இதுபற்றித் தோழர் அ. பொன்னம்பலனார் அவர்கள் மிக விளக்கமாகப் பேசினார்கள். வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் என்ற புத்தகத்தினால் வகுப்பு துவேஷம் ஏற்படவில்லையா? வந்தேமாத ரத்தால் வகுப்பு துவேஷம் ஏற்பட வில்லையா? இந்தியை கட்டாயப் பாடமாகச் செய்வது வகுப்பு துவேஷமாகாதா?
இந்த மாதிரி வகுப்புத் துவேஷங்கள் வரும்படி காரியங்கள் செய்வதும், அதைத் தடுக்கப் புறப்படுபவர்களை வகுப்புத் துவேஷிகள் என்றும், அவர்களை அடக்க வேண்டுமென்றும், அவர்கள் பத்திரிகைகளை முடக்க வேண்டுமென்றும் சட்டம் செய்தால் வகுப்புத் துவேஷம் இன்னும் அதிகமாக வளருமா? நீங்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
தங்களுக்குப் பிரியமில்லாத இந்தியை கட்டாயப் பாடமாக வைப்பதால் தாங்கள் படிக்க முடியாது என்று கூறியதற்காகச் சுமார் 1001 பேர்களை சிறையில் அடைத்து வைத்துக் கஷ்டப்படுத்துவது எதைக் காட்டுகிறது? இது வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புவதாகாதா?
கஷ்டப்படும் மக்கள் யோசிப்பதென்ன?
இந்த நாட்டிலுள்ள 35 கோடி மக்களில் 9 கோடி மக்களை முஸ்லிம்களென்றும், 6 கோடிப் பேர்களை தீண்டாதாரர் களாகவும், 20 கோடிப் பேர்களை சூத்திரர்களாகவும் பிரித்து அடிமையாக்கி அவர்களைக் கஷ்டப்படுத்துவதை எடுத்துக் கூறினால் இது வகுப்பு துவேஷமா? இப்படியெல்லாம் வகுப்புத் துவேஷம் என்ற பேரால் ஒரு சாராரின் பிரசாரத்தை அடக்க முயல்வதைப் பார்த்தால் இது மனிதத்தன்மை ராஜ்ஜியமா? கொடுங்கோன்மை ராஜ்ஜியமா என்று கஷ்டப்படும் வகுப்பினர் யோசிக்கின்றனர். சுயராஜ்ஜியம் என்ற பெயரால் ஒரு கூட்டத்தார் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வருவதை மக்களிடம் எடுத்துக் கூறினால் இது வகுப்புத் துவேஷம், இதை ஒழிக்க வேண்டுமென்று கூறும் இந்த மந்திரிசபையை ஒழிக்க மக்கள் ஒன்று சேர மாட் டார்களா என்று கேட்கிறேன். மற்றும் வகுப்புவாதமாக எழுதும் பத்திரிகைகளை அடக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபற்றி 'விடுதலை' பத்திரிகையில் எழுதியிருப் பதைப் பார்த் தால் நன்கு விளங்கும்.
பத்திரிகைகளை அடக்கினால்....?
வகுப்புத் துவேஷம் என்ற பேரால் வகுப்புத் துவே ஷத்தை அடக்கிச் சமாதானம் நிலவப் பாடுபடும் பத்திரிகையை அடக்க முயன்றால் நாட்டில் வகுப்புக் கலவரங்கள் அதிகமாகி பனங் காய்கள் உருளுவது போல் மக்கள் தலைகள் உருளும் எனப் பயப்படுகிறேன்.
இம்மாதிரி சம்பவங்கள் நிகழ வேண்டுமென்று மந்திரி சபையார் விரும்புகிறார்களா? மற்றும், முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர்களான ஜனாப் ஜின்னா அவர்களையும், ஜனாப் கலிபுல்லா சாயபு அவர்களையும், மற்ற தலை வர்களையும் வகுப்புவாதிகளென்றும், தேசத் துரோகி களென்றும், உத்தியோக வேட்டைக்காரர்களென்றும், தாழ்த்தப்பட்டோர்களின் தலைவர்களான தோழர்கள் டாக்டர் அம்பேத்கர், எம்.சி.ராஜா, என். சிவராஜ், ஆர். சீனிவாசன் முதலாகிய தலைவர்களையும் இழிவாகவும், கேவலமாகப் பேசுவதும், பார்ப்பனரல்லாப் பெருங்குடி மக்களின் தலைவர்களையும் கேவலமாகப் பேசுவதும் இழிவாகப் பேசுவதுமான காரியங்களை ஒரு கூட்டத்தார் செய்து வந்தால் அந்தந்த வகுப்பார்களுக்கு ஆத்திர முண்டாகுமா - உண்டாகாதா என்று கேட்கிறேன். இந்த மாதிரி விஷ யங்கள் ஒழிய வேண்டுமென்று கூறினால் இது வகுப்புத் துவேஷமா?
(31.05.1939 அன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
'குடிஅரசு' - சொற்பொழிவு - 11.06.1939