பஞ்சமர் - பெயர்ச்சொல்!
அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.
சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்தவர்களா?
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தமிழ் வார்த்தைகளல்ல
பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.
சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.
அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி ‘சூத்திரர்’ என்பதற்கு ஆதாரப்படி ‘தாசிமகன்’ என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
கொடுமையான குணங்கள்
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.
நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், “இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்”, இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
எத்தகைய இழிவு
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா ‘தேவடியாள் மகன்’, ‘வைப்பாட்டி மகன்’, அடிமையென்று அர்த்தம் கொண்ட ‘சூத்திரன்’ என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.
இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் ‘தேவடியாள் மகன்’ என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் ‘வைப்பாட்டி மக’னெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு “இந்துக்கள்” என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியா வின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
ஒழிய வேண்டும்
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் “கள்” உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.
எது குற்றம்
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
எது கொடுமை
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா?
தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
‘குடிஅரசு’ - 7.6.1925, 21.6.1925, 28.6.1925
நூல்:- “பெரியார் களஞ்சியம், குடிஅரசு” தொகுதி -1 பக்கம் 31-36
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக