செவ்வாய், 31 டிசம்பர், 2024

மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

 


மனிதன் முன்னேற்றத்திற்கு கடவுள் கொள்கையே தடை !- தந்தை பெரியார்

2024 அக்டோபர் 1-15 பெரியார் பேசுகிறார்

நான் பேசும் விஷயம் உங்கள் மனதிற்குத் திருப்தியாய் இருக்காது. ஆனாலும் உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று நான் பேச வரவில்லை. ஆனால், இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகின்றேன்.

இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம்; கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு, வாசல், வேலை, வியாபாரம் முதலியவைகளை விட்டுவிட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள்; பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது?

இந்தக் காவடி தூக்கிக்கொண்டு கண்டபடி குதிப்பதிலும், உளறுவதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதை அந்நிய மதக்காரனோ, அந்நிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தப்படி ஆடினால் நாம் என்ன சொல்லுவோம்? நமது அறிவுக்கும், நாகரிகத்திற்கும் இதுதானா அடையாளம்?

எத்தனை வருஷ காலமாக இந்தப்படி மூடக் கொள்கையில் ஈடுபட்டு வருகிறோம்? என்ன பலனைக் கண்டோம்? மனிதனுக்கு முற்போக்கே கிடையாதா? 2,000, 3,000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாறவில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருகப் பிராயக்காரன் என்று காட்டுவதுடன், நமது பணம் எவ்வளவு செலவாகின்றது? நமது நேரமும், ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள்.

கடவுளைப் பற்றிய எண்ணங்களும், பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான். கடவுளைப் பற்றி அதிகமாய் அறிந்தவன் சகலமும் கடவுள் செயல் – அவனின்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகின்றான். மனிதனுடைய முற்போக்கையும், அவனது கஷ்டத்தையும், கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும் இந்த எண்ணங்கள் தடைப்படுத்துகின்றன.

பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும் கல்வி அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்துப் பாடுபட்டும் பட்டினியாயும், போதிய ஆகாரமும் வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும்.
இதுபோலவே பாடுபடாத சோம்பேறிகள் கோடீசுவரர்கள் ஆகவும், தலைமுறை தலைமுறை
யாய் பிரபுக்களாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள்தான் காரணம்.

இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும், சோம்பேறிக்கும் (பார்ப்பானுக்கும்)தான் அனுகூலம் தொழி
லாளிக்கும், கூலிக்காரனுக்கும் பண்ணையாளுக்கும் கெடுதியே ஆகும்.

ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்திற்கும் கடவுளும், தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லி விடுவாரேயாகில், அவர்கள் எப்படி தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்? அவன் தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான் என்று பார்த்து அவைகளைத் தடுக்க வேண்டும். இந்தக் காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது. ஏனென்றால் கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறான். ஆகையால், அவைகளைத் தங்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லாத் தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும், அது ஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளைச் சிருஷ்டித்து அதைப் பிரச்சாரம் செய்ய பாதிரிகளை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள்.

இந்தப் புரட்டுகளை உலகில் வெகு பேர் அறிந்திருந்தாலும் ரஷியா தேசத்தார்கள்தான் முதன்முதலில் இதை அழித்து நிர்த்தூளியாக்கிப் பணக்காரத் தன்மையையும் பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப் போலவே பணக்காரருடையவும் பார்ப்பனர் (பாதிரி)களுடையவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும். மதப்புரட்டும் என்பதை உணர்ந்து, அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எல்லோரும் சமமாய் வாழ்கின்றார்கள். அங்கு சோம்பேறியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபட வேண்டியது; அதன் பயனை எல்லோரும் சமமாய் அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடுபட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.

ஆனால், இன்று இங்கு “கடவுள் செயலால்” இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1,000 ஏக்கர் 10,000 ஏக்கர், பூமிகூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர் இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை. ஆனால், விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்கிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஒரு படி போதாதா – இரண்டு படி போதாதா? என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பதுபோல் அரைத்துணி கொடுக்கிறான். வீடு வேண்டுமானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சைக் கொடுப்பதுபோல் கொடுக்கிறான்.

ஆனால், மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடிவீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, விஸ்கி, நாடகம், சினிமா, தாலுகா, ஜில்லா போர்டு மெம்பர், பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன் ஆகியவைகளுக்குப் பதினாயிரக்கணக்காக வாரிச் செலவு செய்து ராஜபோகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய் இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும் இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கிறேன்.

கடவுள் புரட்டு ஒழிந்தாலொழிய, இந்த மிராசுதாரர்கள் ஒழிய மாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும், ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்களும் ஒழியாது.

ஆகையால், இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும், அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன்படி நடவுங்கள்.

(09.02.1933 அன்று சென்னிமலையில் பேசியது – ‘குடிஅரசு’)

நான் ஒரு சமத்துவத் தொண்டன்

 

தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24

டிசம்பர் 16-31 2018

நான் ஒரு சமத்துவத் தொண்டன்

தந்தை பெரியார்

நான் சமுதாயச் சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். ஜாதி அமைப்பை ஒழிக்க, “கடவுள், மதம்’’ மற்றும் அவை சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும், ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளை சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா?

நானோ என் பிரச்சாரத்தில், கடவுளே இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்-படுத்தி, இழிவுப்படுத்தி _ செய்கையாலும் காட்டிக் கொண்டே,- நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில், எனது 92ஆ-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை-யில் பட்டது என்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிக் “கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி’’ நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.

இந்த நிலையில் எனது 92ஆ-வது வாழ்நாள் முடிந்து 93ஆ-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக் கொண்டு இருப்பானா? என்று, எந்த _ எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கைப் பக்தனும் நினைத்து _ அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்-தாலும் கடவுளாவது வெங்காயமாவது என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பதுதான் என் கருத்து. அதனாலேயே என் 93ஆ-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

மக்களிடையே மாறுதல்

சென்ற என் 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில், “என் 91ஆ-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச்சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம்’’ என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கிறேன்.

கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயங்களால் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கிறேன். இந்த நிலைதான் என் உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணமாகும்.’’

சலிப்பை நீக்கிய ஆட்சி

இந்தப்படி எழுதிய நான் முந்திய ஓர் ஆண்டில் எனக்கு மனச்சலிப்பு ஏற்பட்டு, “நான் ஏன் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று’’ என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும், திரு. காமராஜர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகம் ஊட்டினர்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்கள் ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையும், உற்சாகமும் அடைந்தேன்.

சாதி முறையின் மூலபலம்?

உண்மையில் என் தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நம் நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது. ஏன் எனில் ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.

இப்போதும் சொல்லுவேன்: நாகரித்திற்காகச் சிலர் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும்.

மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து ஜாதியை நிலைநிறுத்துவதுதான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவையாகும்.

உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நம் மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் என் உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நம் தி.மு.க. தேர்தலையும் (பொதுத்தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.

ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பு இல்லை

அதாவது, “கடவுளைச் செருப்பால் அடித்ததாக’’ 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம்-, சுதந்திரா இயக்கம்,- ஜனசங்க இயக்கம் முதலிய ஜாதி துவேஷமற்ற, தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு _230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றிபெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து _ அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி, நமது ஜாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகி விட்டது.

எனது திட்டம்

இந்த நிலையில் நான் நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது எல்லாம் கோவில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல் மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமலும் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

மற்றும் நான் நினைக்கின்றேன், அண்மையில் ஒரு மாநாடு கூட்டி கோவில்களுக்குப் போகின்றவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் செய்யலாமா என்று யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்-கின்றேன்.

இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.

(தந்தை பெரியார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு வழங்கிய செய்தி)

ஒழுக்கம் உண்டாக கடவுளைப் புறக்கணி !- தந்தை பெரியார்

 

ஒழுக்கம் உண்டாக கடவுளைப் புறக்கணி !- தந்தை பெரியார்

2024 நவம்பர் 1-15 பெரியார் பேசுகிறார்

ஒரு குழவிக் கல்லுக்கு 1000 மனைவிகள் இருக்கலாம். 10,000 தாசிகளும் இருக்க லாம்; இருந்தாலும் அதைத் தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார்(ராஜாஜி) அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் ராமபிரானின்தந்தை தசரதருக்கோ ஒன்றல்ல ஆயிரமல்ல 60 ஆயிரம் மனைவியர்கள் இருந்தாலும் இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும்.

கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10 ஆயிரம் மனைவியர்! 1 லட்சம் வைப்பாட்டிகள்.இவ்வளவு மோசமாக இருந்தாலும் கிருஷ்ணனு டைய நடத்தை, இதற்காக கீதை படிப்பவர் யாரும் வெட்கப்பட மாட்டார்கள். ஏன்? அவர்களெல்லாம் மகான்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! நம்மவர் தொழும் கடவுள்களில் 100இல் 90க்கு இரண்டு மனைவிகளுக்கு குறையாமல் இருக்கும். இரண்டு மனைவி போதாமல் தாசி வீட்டிற்கு வேறு அழைத்துச் செல்லப்படும். இருந்தாலும் கடவுள்கள் பூஜிக்கப்
பட வேண்டியவைகள்; கடவுளைத் தொழும் அன்பர்கள் எப்படி ஒழுக்கமாக இருப்பார்கள்?

இத்தகைய ஒழுக்கக்கேடான கடவுளைத் தொழுகிறோமே என்கிற நினைப்பாவது எப்போதாயினும் தோன்றுகிறதா உங்களுக்கு? மதமும், கடவுளும் ஒழுக்கத்தைக் கொடுக்க உண்டாக்கப்பட்டனவா அல்லது உள்ள ஒழுக்கத்தையும் கெடுக்க உண்டாக்கப்பட்டனவா? இதைக்கூட உணராது, மிருக வாழ்க்கை வாழ்ந்து
வருகிறீர்களே! இது நலமா? எனவே, திராவிடத் தோழர்களே, உங்களுக்கு ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், நீங்கள் மனிதத் தன்மை பெற வேண்டுமானால், சாஸ்திர, புராண, சம்பிரதாயங்களிலும், மதத்திலும் உங்களுக்குள்ள பற்றுதலை, பக்தியை நீங்கள் உடனே விட்டொழியுங்கள்! இன்று நடைமுறையில் இருந்து வரும் கடவுளும், மதமும், சாஸ்திரமும், சட்டமும், அவற்றின் வழிவந்த சம்பிரதாயமும் உங்களை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும் ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவை.
மோட்ச லோகங்களும் நரக லோகங்களும் உங்களை ஏமாற்றவும், பயமுறுத்தவும் உண்டாக்கப்பட்டவை. எனவே, அவற்றை நம்பி மோசம் போகாதீர்கள். மந்திரிகள் என்னதான் ஆரிய அடிமைகளாகி இவற்றிற்காகப் பிரச்சாரம் செய்தாலும், மந்திரிகளாயிற்றே என்று அவர்கள் கூற்றை நீங்கள் நம்பிவிடாதீர்கள்! இது மிகமிகப் பரிதாபகரமான காலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்திற்கு எப்படிச் செல்வது என்று ஆராய்ச்சி செய்துவரும் இந்தக் காலத்தில் நாம், காட்டுமிராண்டி காலக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சற்றே ஊன்றிப்பாருங்கள். சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பையுண்டாக்கியக் காலத்தில் தோன்றிய இந்தக் கடவுள்
களும், மதங்களும், சாஸ்திரங்களும், வேதங்களும் இன்றைக்கும் பயன்படக்கூடிய தன்மையுடையவைகளா என்பதையும் இவற்றால் நமது முன்னேற்றம் எவ்வளவு காலமாக தடைப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் பாருங்கள்!உண்மையான கடவுள் பக்தி உடைய ஒருவரையாவது உன்னால் காட்ட முடியுமா? என்னதான் சிவ, சிவ, சிவ என்று ஓதி வந்தாலும்,ராமா, ராமாவென்று ராமபஜனை செய்து வந்தாலும்,எவனும் சிவனை நம்பியோ, ராமனை நம்பியோ நோய் வரும்போது டாக்டரை அழைக்காமல் இருப்பதில்லையே! பழைமை பழைமை என்று யாரும் மோட்டார் வண்டி ஏறாமல் இருப்பதில்லையே! 1000 மைல் வேகத்தில் ஆகாய விமானம் பறக்கும் காலம் இது. 6000 மைலுக்கப்பால் உள்ளவனோடு அருகிலிருப்பது போன்றே சம்பாஷித்து வரக்கூடிய காலம் இது.

இவற்றிற்கெல்லாம் தவம் செய்ய வேண்டியதில்லை; தேங்காய் உடைக்க வேண்டியதில்லை; மந்திரமும் ஜபிக்க வேண்டியதில்லையே! எந்தச் சாதாரண பிச்சைக்காரன்கூட இந்தச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! இப்படிப்பட்ட இந்தக் காலத்தில் நீ கல்லைக் கடவுளென்று பிரச்சாரம் செய்து வருகிறாயே! நாங்கள் செய்கின்ற முன்னேற்ற முயற்சியை எல்லாம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் மடமையைப் பரப்புவதன் மூலமும் கெடுத்து வருகிறாயே! மக்களை எப்படி அறிவாளிகளாக்குவது என்பது பற்றிச் சிறிதும் கவலை இல்லாது உனது பேருக்காகவும், புகழுக்காகவும் அவர்களை மேலும் மடையர்களாக்கி வருகிறாயே! இது நியாயமா?

இதுபோன்ற அறிவு விளக்கப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வதில் பெருமையடைவதை விட்டு, இவள் வந்தாள், பாடினாள்; அவள் வந்தாள், ஆடினாள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறாயே! இது உனக்கு ஏற்குமா? மானமுள்ள ஒரு சிலராவது (தோழர் ஷண்முகம் அவர்களைப் போல) இம்மாதிரி சீர்திருத்தக் காரியங்கள் செய்ய முன்வர வேண்டாமா? பயனற்றக் காரியங்களை விட்டொழித்துப் பயனுள்ள முற்போக்கான காரியங்களைச் செய்தல் அவசியமல்லவா!

தோழர்களே, நான் யாரையும் இம்மாதிரிதான் செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக் கொண்டு ஆலோசித்துப் பாருங்கள். உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால் தயவு செய்து அருள்கூர்ந்து நான் கூறுவதை செவிமடுத்துக் கேளுங்கள். முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்! நெருப்பென்பதே என்னவென்று தெரியாத காலத்தில், சிக்கி முக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்துக் கடவுள்தான்! அந்தக் காலத்து எடிசன் (Edison) தான் – அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்துவிட்ட பிறகு எவனாவது சிக்கி முக்கிக் கல்லைத் தேடிக்கொண்டு திரிவானா- நெருப்புண்டாக்க? எவனாவது திரிகிறானா? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் மதிக்கும்.

அக்காலத்திய புத்தி எவ்வளவு? – இக்காலத்திய புத்தி எவ்வளவு? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாமா? அக்காலத்தில் எது பெருமையாகப் பேசப்பட்டதோ அதையே இக்காலத்திலும் பெருமையாகப் பேச முடியுமா? பலூனில் பறந்த முதல் மனிதனின் பெருமை அன்று எவ்வளவோ இருந்தது; இன்று எவ்வளவாக இருக்கிறது? கிராமபோனுக்கு அன்றிருந்த பெருமை எவ்வளவு? ரேடியோ வந்த பிறகு அதற்குள்ள பெருமை எவ்வளவு? இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இதேபோல் ஒரு காலத்திய கடவுள் எப்படி இக்காலத்திற்கு உதவும் – இக்காலத்திற்குப் பயன்படும்? நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாக சிலருக்குத் தோன்றுகிறது. அடுத்த 20 வருடத்தில் என்னையே பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்! மாறுதலுக்கு வளைந்து கொடாத மனிதன் மாளவேண்டியதுதானே!

இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றி பெற்றவர்களே கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள், நமது வாத்தியங்கள், நமது உடைகள், நமது ஆபரணங்கள் இவை எல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டுவிட்டன. 20 வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள்? இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்? இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே! இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது அல்லது எல்லோர் வீட்டிலுமே 16ஆவது நாள் காரியம் நடந்ததா? அல்லது சர்க்கார் தான் குடுமி வைத்திருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டதா? இல்லையே!

இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு போட்டா பூச்சுகள் மறையும்படி செய்யப்பட்டன? இல்லையே!

(17.10.1948 அன்று திருவொற்றியூரில் நடந்த சுயமரியாதை திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – ‘குடியரசு’ 24.10.1948).

திங்கள், 30 டிசம்பர், 2024

வைக்கம் போராட்டம் என்றால் என்ன? என்பது பற்றி தந்தை பெரியாரே பேசியது.

 

வைக்கம் – நூற்றாண்டு வெற்றி விழா – ஒரு பார்வை

விடுதலை நாளேடு
கட்டுரை, தந்தை பெரியார்

தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்ற நூற்றாண்டு விழா கேரளா வைக்கம் நகரில் கடந்த 12ஆம் தேதி – தமிழ்நாடு அரசு – கேரள அரசு இணைந்து வரலாற்றில் என்றென்றும் வைர ஒளி வீசும் விழாவாக நடத்தப்பட்டது. அதன் சிறப்பை விளக்குமுன், வைக்கம் போராட்டம் என்றால் என்ன? என்பது பற்றி தந்தை பெரியாரே கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணப் பிரச்சாரக் கூடத்தில் பேசியதன் ஒரு பகுதியை முன்னுரையாக தருகிறோம்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ,பி.எல்., படித்த ஒரு வக்கீல் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார். வழக்கு விசாரணைக்கான கோர்ட் இடம் ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஓர் இடம். இராஜாவின் பிறந்தநாள் விழாவிற்கு அந்த இராஜாவுடைய கொட்டாரத் தில் (அரண்மனையில்) எல்லா பாகத்திலும் பந்தல் போடப்பட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் ஆகிவிட்டது. இந்த மாதவன் வக்கீல் ஒரு கேசில் ஆஜராக அங்கே போகவேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. அங்கே இந்த வக்கீல் ஈழவ (‘நாடார்’) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக்கூடாது என்று தடுத்தார்கள்.

நமது சீர்திருத்தத் திட்டங்கள்
அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்! கலப்பு மணம், சமபந்தி போஜனம், எல்லோரும் பள்ளிக்கூடத்தில் படிக்கவேண்டும் – என்பன போன்ற கருத்துகளில் தீவிர நம்பிக்கைக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துத்தான் காந்தியாரும் அதை நிர்மாணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். அந்தக் காலத்தில் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ்கட்சிக்காரர்கள் நல்லபடி வெளியாக்கி வெளுத்து வாங்குவார்கள். ரோட்டிலே பார்ப்பனர்கள் அப்போது தைரியமாகத் தனியே நடக்கக்கூடமுடியாது. டி.எம்.நாயரும், தியாகராயரும், ஜஸ்டிஸ் கட்சியும் ஜனங்களிடத்தில் தீவிரமாகப் பிரச் சாரம் செய்து பார்ப்பனரல்லாதாரின் ஆதரவைத்திரட்டி ஆட்சியைப் பெற்று ஆண்டு கொண்டிருந்தது. பார்ப்ப னர்கள் அவர்களைக் கண்டு நடுங்குவார்களே? பார்ப்பனர் களுக்கு மேடையே இல்லாமல் போன காலம் அது!

பார்ப்பனர் குள்ளநரித் தந்திரம்
அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் எங்களுக்கு ஆட்சி வேண்டாம், அதிகாரம் வேண்டாம், சட்டசபை வேண்டாம் என்று குள்ளநரித் தந்திரம் செய்து மக்களை வசப்படுத்த சதிசெய்துக் கொண்டு இருந்த காலம். அந்தக் காலத்தில்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு வஞ்சக மனத்தோடு பித்தலாட்டக் கருத்துக் கொண்ட “தீண்டாமை விலக்கு” என்பதைத் தங்கள் திட்டத்தில் காந்தி சேர்த்தார்.

வைக்கம் போர்க்களமாயிற்று
இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்த புரத்து ஈழவ சமுதாய தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்ற முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால் அந்த ஊரில்தான் ஊர்நடுவில் கோயிலும் அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும் கோயில் மதில்கள் சுற்றிலும் தெருக்கள் பிரகாரம் எல்லாமும் இருக்கும்.

தீண்டாமைக் கொடுமை
அந்த வீதிகளில் கீழ்ஜாதிக்காரர்களான அவர்ணஸ் தர்கள் எல்லோரும் ஆயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத்திலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது; மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும் 4 ஃபர்லாங்கு தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில் கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர்ரோட்டுக்குப் போகவேண்டும். ஆயித்தக்காரர் தீண்டப்படாதவர்களைப் போலவேத்தான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.
இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்ற கோயில்கள் பக்கமும் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
வைக்கத்தில் கோவிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆஃபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ இன்ஸ்பெக்டர்களையோ குமாஸ்தாக்களையோ மாற்றுவதனாலுங்கூட கீழ்ஜாதியார்களை அங்கு மாற்றமாட்டார்கள். ஏனென்றால் அந்த போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுகள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ஜாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ஜாதிக் கூலிகள் அங்கு செல்ல முடியாது.போராட்டமும் கைதும்

சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே. மாதவன், ஜார்ஜ் ஜோஸஃப் முதலியவர்களைப் போல் சுமார் 19 பேரை ராஜா அரஸ்ட் செய்யும்படி உத்தரவிட்டு அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தினசரி ஒருவர் வீதம் கைது செய்து அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள். அப்போது இராஜாவிடம் மிஸ்டர் பிட் என்ற ஒரு வெள்ளைக்காரர் போலீஸ் அய்.ஜி.யாக இருந்தார். அவர் இந்த சத்தியாக்கிரகத்தை வெகு சாமர்த்தியமாகவும் ரொம்பவும் ஜாக்கிரதையாகவும் சமாளித்தார். இந்த பத்தொன்பது பேரைப்பிடித்து உள்ளே போட்டுவிட்டவுடன் அடுத்து சத்தியாகிரகத்தில் ஈடுபட யாரும் ஆள் கிடைக்கவில்லை. அதோடு அதுவும் நின்றுவிடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசஃபும், கேசவமேனனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப் பினார்கள். நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கணும்; இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும் பெரிய காரியம் கெட்டுப் போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம். உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்கவேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள். எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால் தீண்டாமையைப் பற்றி பேசுவதில் நான் கெட்டிக்காரன், கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர். நான் அப்போது சுற்றுப்பிரயாணத்தில் இருந்தேன்.
ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீ டைரக்ட் செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணபுரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக் கொண்டிருந்த போது என் கைக்குக் கிடைத்தது.திடீர் பயணம் போருக்கு!

உடனே மீதி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன். வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய் சத்தியாக் கிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டைக் கட்டிவிட்டேன். திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் நான் வரும் வரைத் தலைமைப் பதவி ஏற்றுக்கொள்ளும் படி ஒரு லெட்டர் எழுதிவிட்டு இந்த சந்தர்ப்பம் ஒரு நல்லவாய்ப்பு – இதைவிட்டால் இந்த மாதிரி அருமையான வேலை செய்ய வேறு வாய்ப்புக் கிடைக்காது என்று எழுதி விட்டு 2 பேரைக் கூட்டிக்கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.

எதிர்பாராத வரவேற்பு
வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்துகொண்டு, போலீஸ் கமிஷ்னர் பிட்., இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் போலீஸ்காரர் சுப்ரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும்போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள் எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித்தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வரவேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும் ஏன் மகாராஜா அப்படி செய்தார் என்றால், அதற்கு 3-மாதத்திற்கு முன்பு இந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து ஒருநாள் ஈரோட்டிலே தங்கிவிட்டு அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப் போவது வழக்கம். அப்படி ஈரோட்டிலே தங்கும்போது அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜாவின் சிப்பந்திகள் தங்கும் இடம் எங்கள் சத்திரத்திலும், மகாராஜா எங்கள் பங்களாவிலும்தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன்வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர்களாகவும் நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

எனது தீவிரப் பிரச்சாரம்
சத்தியாக்கிரகத்தை தொடர்ந்து நடத்தவந்த என்னை மகாராஜா சார்பில் இந்த பெரிய அதிகாரிகளே வரவேற்கிறார்கள் என்று கண்டதும் அப்பக்கத்திய பாமரமக்களுக்கு ஒரே குஷாலாக ஆகிவிட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலுங்கூட நான் பல இடங்களிலும் சென்று பொதுக்கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன்; காரசாரமாகப் பேசினேன்! கீழ்ஜாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப்போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனை போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடிவிட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5-6 நாள் வரை சும்மாதான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்கமுடியவில்லை.தடைச் சட்டத்தை மீறினோம்

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர் அய்யங்கார் அவர் முயற்சியால் பி.சி.26-இன்படி தடையுத்தரவு போட்டார். அந்த நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது, நானும் சட்டம் மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசினேன். என்னுடன் (தற்போது காங்கிரஸ்காரராக இருக்கும்) திரு. அய்யா முத்து அவர்களும் மற்றும் இருவரும் சட்டம் மீறினோம், எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங்காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலிலே வைத்தார்கள்! அதற்குப் பிறகு எனது முதல் மனைவியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் எனது தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகிவந்து அதேமாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

கிளர்ச்சிக்குப் பெருத்த ஆதரவு
நான் வெளியே வருவதற்குள் இந்தக் கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது; மளமள வென்று ஆட்களும் வந்துசேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதியிலும் சென்று சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.
ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருந்தது! வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும், ஜாதிக்கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து அதற்கு தங்கள் எதிர்ப்பையும் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50, 60, 100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.பெரியபந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள். தேங்காயும் மற்ற காய்கறிகளும் மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கல்யாணவீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்!

பார்ப்பனர் நடுங்கிவிட்டனர்
திரு. இராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலேயே போய் ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதைவிட்டுவிட்டு நீ இங்கு வந்து விட்டுவிட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ்.சீனிவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச்சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.

பஞ்சாபியர் ஆதரவு
பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆட்களையும் இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந் தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்தியாருக்கு எழுதினார்கள்.
காந்தியார் எதிர்த்தது
உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதிவிட்டார்கள்.
காந்தியார் எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்துவன் எல்லாம் போய் விட்டார்கள். அது போலவே தீவிரமாக இதில் ஈடுபட்டுமுன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜூக்கும் இராஜ கோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். “இந்து மதசார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு” என்றார்.

போரை நீடிக்க எங்கள் உறுதி
அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்; “நான் என் சுயமரியாதையை விட்டு விட்டு இருக்கமாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள்” என்றார் தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ்போர்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்.பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்) அவர்களும் என்னுட னேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள் என்றாலும், காந்தியார் சத்தியாக்கிரகத்திற்கு விரோதமாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.
காந்தியார் எதிர்த்தும் போர் தொடர்ந்தது
அந்தச் சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்துதான் பணத்திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தியார் கட்டளைக்கு விரோதமாகவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத் தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து ஜெயிலில் போட்டுவிட்டனர். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலேஇருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்காரயாகம் என்ற ஒன்றை வெகுதடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன். என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? இந்தப்பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான்; “மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்து மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார்” என்றான்.

அதாவது இராஜா செத்துப்போனார் என்று சொன்னான். அவ்வளவுதான் மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக்கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

இராணியின் சமாதான முயற்சியும் பார்ப்பனர் சூதும்
இராணியும் கூப்பிட்டு எங்களோடு சமாதானம் பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி, திரு. இராஜகோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினார். இராஜகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்துவிடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியாரின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக்காட்டவேண்டுமென்று தந்திரம் செய்து காந்தியாருக்குக் கடிதம் எழுதினார். எனக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை; எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக்கொண்டேன்.

சமரசப் பேச்சு
காந்தியாரும் புறப்பட்டு வந்தார். இராணியோடு காந்தியாரும் பேசினார் (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியாரை இதில் புகுத்தினார்கள்.)
இராணி காந்தியாரோடு பேசியபோது இராணி தெரிவித் தார்கள்; ‘நாங்கள் ரோடுகளைத் திறந்து விட்டுவிடுகிறோம். ஆனால் அதைவிட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமைவேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம்’ என்றார்கள். உடனே காந்தியார் டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து இராணி சொன்னதைச் சொல்லி “என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது” என்றார். நான் சொன்னேன்; Public ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக்கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்கமாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் இலட்சியமாக இல்லாவிட்டாலும், எனது இலட்சியம் அதுதானே (கோயில் நுழைவு)? அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் இராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள் ‘இப்போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால் தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப் படலாம்’ என்று சொல்லுங்கள்” என்று சொன்னேன்.
அதை காந்தியார் இராணியிடம் சொன்னவுடன் இராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------

காங்கிரசில் சேர்ந்தது ஏன்?: பிரச்சார கூட்டத்தில் தந்தை பெரியார் ருசிகர பேச்சு

அந்தக் காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் களுக்கு மிகவும் வேண்டியவனாகத்தான் இருந்தேன். என்னை நிரம்பவும் மதிப்பார்கள். காரணம் நான் எல்லாப் பதவிகளிலும் இருந்து வந்தவன், திரு.இராஜ கோபாலாச் சாரியாரே வந்து சமுதாய சீர்த்திருத்தம் தான் நமக்கு வேண்டும்; அது காந்தியாரால்தான் முடியும் என்று சொல்லி என்னை காந்தியாரின் சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் பதவியை இராஜிநாமாக் கொடுத்து வெளியேறி காங்கிரசில் சேர்க்கப்பட்டுவிட்டேன். சென்ற பிறகு தமிழன் ஒருவனுக்காகவது அதுவரை கிடைத்திருக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர், தலைவர் இடத்தில் உட்காரவைத்தார்கள்.
ஏனென்றால் திரு.வி.க. சாதாரணமாக ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்துவந்தவர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் ‘பிரபஞ்ச மித்திரன்’ வாரப்பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றிவிடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ.சிதம்பரனார் ஒருவர்.அவர் பாவம் எல்லாவற்றையும் விட்டு நொடிந்துபோய் கஸ்தூரி ரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். அதனால் “சிறிது வசதி உள்ளவன் பெரிய வியாபாரி – பல பதவிகளை விட்டு வந்தவன்” என்கிற முறையில் இராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார்.

உண்மையாகவே நானும் அதை நம்பி அவரிடம் மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நாங்கள் மேடை தேடிக் கொடுத்து விட்டோம்! அப்போதே நான், “நாம் தொட்டால் தீட்டுப் பட்டுவிடும் என்கிற சாமி நமக்கு எதற்கு? அதை எடுத்து ரோடுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற்றிலே தூக்கிப்போட்டு வேட்டித் துவைக்கப்போடணும்” இப்படித்தான் பேசுவேன். டாக்டர் வரதராஜுலு, கல்யாணசுந்தரனார், சிதம்பரனார், நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத் தான் முன்னே தள்ளுவார்கள்! என்னைப் பார்த்து பதவி வேட்டைக்காரன் என்று எவரும் சொல்லமுடியாது என்பதால் பார்ப்பனர்களும் நான் என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டுதான் இருப்பார்கள்.
பக்குவப்படுத்திவிட்டோம்
ஜாதி, மதம், கடவுள் துறையில் இப்பொழுது சொல்லுவதெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவதை “நாயக்கர் உங்களுடையது ரொம்ப Strong dose” என்று சொல்லுவார். நான் சொல்லுவேன்; ‘நீங்க என்னங்க இந்த மடப்பசங்களுக்கு Strong என்ன லேசு என்ன’ என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன். அவரும் வேறுவழி இல்லாததால் சிரித்துக் கொள்வார். அந்தமாதிரி முறையில் நாட்டை பார்ப்பனர் கைக்குப் போகும் படியான அளவுக்கு பக்குவப் படுத்திவிட்டோம்.

– நூல்: ‘தீண்டாமையை ஒழித்தது யார்?’ திராவிடர் கழக (இயக்க) வரலாறு – பக்கம் 14-24


சுயராஜ்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னேனா? (சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி – 1)

 

சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி – 1

Published December 27, 2024, விடுதலை நாளேடு
பகுத்தறிவுக் களஞ்சியம்

சுதேசமித்திரன் பத்திரிகை “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விரோதமாய் தஞ்சையில் சுயராஜ்யக் கட்சியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சியாரும் இதரர்களும் கோருகிற சுயராஜ்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னாராம் என்றும், காங்கிரஸ்காரர் இப்படிச் சொல்வது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல் சிறீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சியிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராஜ்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத் தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்வார்கள்.

இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது.தஞ்சையில், நமக்கு வேண்டிய சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும், வேண்டாத சுயராஜ்யம் என்ன என்பதைப் பற்றியும் கதர் தீண்டாமையைப் பற்றி பேசும் பொழுது 2,3 மணி நேரம் விபரமாய் பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சுக்களைக் கிரமமாய் எடுத்துப் போடாமல் அவர் பேசிய பேச்சிலுள்ள எழுத்துகளைப் பிரித்து தனக்கு வேண்டியபடி வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு தங்கள் ஜாதி புத்தியை காட்டியிருக்கிறது.

நாட்டில் தரித்திரம் ஒழிவதும்

சுயராஜ்யம் வேண்டாமென்று இந்தியாவில் ஒரு கட்சியும் சொல்ல வில்லை. சுயராஜ்யம் என்பது என்ன என்பதுதான் இப்போது தகராறி லிருக்கிறது. பிராமணர்கள் படிப்பதும் சர்க்காரில் உத்தியோகம் உண்டாக்கு வதும், தம்பிக்கும், மகனுக்கும், தங்கள் கூட்டத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதித்து கொடுப்பதும்தான் சுயராஜ்யம் என்று சிலரும் சில கட்சிக்காரரும் நினைக்கிறார்கள். ஏழைகள் வயிறாறச் சாப்பிடுவதும், நாட்டில் கைத் தொழில்கள் ஓங்கித் தொழிலாளர் பிழைப்பதும், நாட்டில் தரித்திரம் ஒழிவதும், மனிதர் எல்லோரும் சமம் என்ற உணர்ச்சியில் சுயமரியாதையுடன் வாழ்வதும்தான் சுயராஜ்யம் என்று மகாத்மா உள்பட சிலர் நினைக்கிறார்கள். அதைத்தான் நாம் தேடுகிறோம். இரண்டாவதாக, சுயராஜ்யம், சுயராஜ்யக் கட்சியாரால் வருமானால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று மகாத்மா சொல்வது உண்மைதான். ஆனால் சுயராஜ்யக் கட்சியார் திட்டத்தில் இவ்வித சுயராஜ்யம் வருமென்கிற நம்பிக்கை எனக்கில்லை. அதனால்தான் நான் அதில் சேரவில்லை என்கிறார். இந்த இரண்டாவது பாகத்தை விட்டுவிட்டு முதல் பாகத்தை மாத்திரம் தங்கள் பத்திரிகைகளில் எழுதி ஏமாற்றப் பார்த்தால் யார் ஒப்புவார்கள். இதைப்பற்றி விவரமாக அடுத்த வாரம் எழுதுவோம்.

– குடிஅரசு – துணைத் தலையங்கம் – 25.10.1925

புதன், 18 டிசம்பர், 2024

தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டின் பேருரை – தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு – 9.12.1973