- தந்தை பெரியார்
- “பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந்தருளி யிருக்கும் பிரதிநிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!
இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன் மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக, யாருக்கும் விளங்கும் படியும், ஒவ்வொருவர் மனமும் உடனே காரியத்தில் இறங்கும் படியான உணர்ச்சி ஏற்படும்படியும், நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந்திருக்காத, அநேக அருமையான விஷயங்களை எல்லாம் பேசினார்கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம் – ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்லவண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிராயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது.
இழிவு நிலை மாற வேண்டும்
தோழர்களே! நான் இந்த மாநாடு கூட்டி இருப்பதன் நோக்கம் போராட்டத்தை உத்தேசித்து அல்ல; அல்லது இந்த ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்கிற எண்ணத்தை உத்தேசித்து அல்ல; மனித சமுதாயமாகிய நம் சமுதாயத்திலே ஈனப்பிறவிகளாக, அசிங்கமான கருத்தில் இன்னொரு ஜாதியனுக்கு, அதிலும் நம் நாட்டில் பிழைக்க வந்த ஒரு சிறு கூட்டத்தானுக்கும் அடிமைகளாக, தாசி மக்களாக இருந்து வருவதே ஆட்சியின் தன்மை, என்கிற இழி வான நிலைமையிலே இருந்து மாற வேண்டும் என்று கேட்கிறோம். இது இயற்கை!
இப்போது, நண்பர் நமது கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர் வேலையாரும் பண்ணலாம் என்று தீர்மானம் பண்ணியுங்கூட, இந்த அரசாங்கம் செய்த சட்டம் செல்லாது என்று பண்ணி, நமது இழிநிலையைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தி விட்டதனாலே, நமக்கு ஆத்திரம் கொஞ்சம் அதிகமாகிப் போயிற்று. அதனாலே உணர்ச்சி வந்தது. மாநாடு போட்டோம் இது ஒரு திருப்திகரமான மாநாடு. நமது ஆசைப்படி எல்லாமே நல்ல வண்ணம் நடந்து இருக்கிறது. இப்போது நல்ல தீர்மானங்களைப் போட்டு விட்டோம். அழகுக்காகத் தீர்மானம் போடவில்லை; கண்டிப்பாக இழிவு தீர வேணும், இது போகாவிட்டால் நம் கதி என்ன ஆகும் என்கிற நிலைமையிலே இந்தத் தீர்மானங்களைச் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரு பொறுப்புக் கொடுத்திருக்கிறார்கள்; எப்போது செய்கிறது என்கிறதைப் பற்றித் தலைவர் சொல்லுவார் என்று!
கிளர்ச்சியில் இறங்கத் திட்டம்
முதலாவதாக நான் தெரியப்படுத்திக் கொள் ளுகிறேன். மாநாடு முடிந்தவுடனே தீர்மானங்கள் மந்திரிகள், குடி அரசுத் தலைவர், இந்தியப் பிரதம மந்திரி இந்திரா அம்மாள் அவர்களுக்கும், மற்றும் பார்லிமென்ட் மெம்பர்களுக்கோ, நம் அரசாங்கத்துக்கோ, இன்னும் யார் யாருக்கோ அனுப்பி, அவர்கள் நம் சேதிகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஆதரவான பதிலை அனுப்பி வைக்க வேணும் என்று கேட்கப் போகிறோம். அது வந்த பிறகு, நம் மக்களுக்கு அனுகூலமாக இல்லாவிட்டால், கிளர்ச்சியில் இறங்குவது என்று திட்டம் போட்டு இருக்கிறோம். பெரிய காரியந்தான்!
தோழர்களே! நான் நினைக்கிறேன்; இவ்வளவு பெரிய காரியத்திற்கு நிபந்தனை போட, கொஞ்சம் வாய்தா கொடுத்துதான் ஆக வேண்டும். வருகிற ஜனவரி மாதம் குடியரசு நாளாகிய 26ஆம் தேதி வரைக்கும் வாய்தா கொடுக்கலாம். 45 நாள் இருக் கிறது; போதும். நமக்கும் பிரச்சாரம் பண்ண நாள் வேண்டியதுதான். அதற்குள்ளே நம் மக்களுக்கு உணர்ச்சி மறந்து போகாது. ஆதரவு அதிகமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
அரசியல் சட்டம் என்பது ஒரு மனுதர்ம சாஸ்திரம்
அன்றைய முதற்கொண்டே நாம் சொல்லி வருகிறோம். இது சுதந்தரநாள் அல்ல, துக்க நாள் மோசடி, நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள் என்று. அதே போல், பிற்பாடு டாக்டர் அம்பேத்கரே ரொம்ப வருத்தப்பட்ட மாதிரி, அரசியல் சட்டமும் ஒரு மோசடி. அது ஒரு மனு தர்ம சாஸ்திரம். பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற காரியம் என்றெல்லாம் நான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். யார் கவனிக்கிறார்கள்? அரசியல் வந்துவிட்டது என்றாலே, அவனவன் ஓட்டுக்கும், பதவிக்கும், மந்திரி வேலைக்கும் கவலையோடு இருந்தானே தவிர, சமுதாயத் துறையிலே நமக்கு இந்தக் கேடு இருக்கிறது என்று இன்றைக்கு யாருக்குக் கவலை இருக்கிறது.?
இன்றைக்கு நான் சொல்லுவேன் – நமது முன்னேற்றக் கழகத்துக்காரர் சரியாக இருக்கிறார் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில பேருக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏதோ அவர்கள் பதவி பட்டம் அது இது அந்த மாதிரி ஆகிப்போயிற்று நிலைமை. இந்த அரசியல் அவ்வளவு கீழ்த்தரமாகிப் போனதனாலே, அதிலே பிரவேசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்படுவதற்கு இல் லாமல் – அது மூலமாக ஒரு பரி காரமும் செய்கிறதற்கு இல்லை. இப்போது நாம்தான் ஏதோ கத்திக் கொண்டிருக்கிறோம். நமக்கும் அவ்வப்போது சரி பண்ணிக் கொள் ளத்தான் முடிகிறதே தவிர, நிரந்தரமாய் இல்லை. மந்திரிமார்களிலேயும் சில பேருக்கெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. சில பேர் பதவியை விட்டு வந்து விடுகிறேன் என்று கூடச் சொன் னார்கள். நண்பர்கள், போகட்டும்!
கடைசிப் போராட்டம்
அநேகமாக நான் சொல்லுகிறேன், பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று இதை வைத்துக் கொள்ளணும். இதிலே வெற்றி பெறவில்லையானால், அப்புறம் நமக்கு வாய்ப்பே இல்லை! இப்போது. எப்படி இதை அடக்குகிறது. அழிக்கிறது என்று அவர்கள் ரொம்பத் திட்டம் போடுவார்கள். நாம் எவ்வளவு உறைப்பாக, துணிச்சலாக, கஷ்டத்தை ஏற்றுக்கொள்கிற தியாக உணர்ச்சியோடு இருக்கிறோமோ அதைப் பொறுத்துதான் இதற்கு ஏற்படுகிற மதிப்பு இருக்குமே தவிர, சும்மா வேஷத்தினாலே மதிப்பு ஏற்படும் என்று நினைக்க முடியாது. அந்த மாதிரி உணர்ச்சியோடு நமக்கு இதிலே வாய்ப்பு வந்து சாதாரணமான முறையிலே இதற்கு அடக்கு முறை வருகிறது என்றால், நமக்கு வெற்றியைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை.
பெண்கள் அதிகமாகப் பங்கேற்க வேண்டும்
நாம் கூடுமான வரைக்கும் பெண்களை இதிலே பூற வைக்கணும். ஆண்கள் தான் ரொம்பபேர் வர முடியும்; இருந்தாலும், ஆயிரம் பேர் போனார்கள் என்றால் அதிலே பெண்கள் 100 பேர் இருக்கணும். கிளர்ச்சிக்கு அது ரொம்பத் தூண்டுகோலாய் இருக்கும். பிடிக்கப் பிடிக்க அடுத்த அணி வந்து கொண்டே இருக்கவேணும்.
இயக்கத்துக்கு இறங்குகிறவர்கள், மன்னிக்கணும், ரொம்ப ஒழுக்கமாக இருக்கணும், இந்த கிளர்ச்சிக்கு ஒரு கவுரவம் இருக்க வேணும். நாணயம் இருக்க வேணும். பார்க்கிறவன் எல்லாம் கூட இதை மதிக்கணும். அதிலே ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாருக்கும் தொந்தரவு எதுவும் இல்லை
அடுத்து நம் மக்கள் எடுத்துக் கொள்கிற முயற்சி எந்த விதமான விரோத உணர்ச்சி அல்ல, குரோத உணர்ச்சி அல்ல, யார் பேரிலேயும் வருத்தம் இல்லை; நம் காரியத்துக்காகத்தான் நாம் செய்கிறோம் என்கிற மாதிரிதான் நடத்தை, காரியம் எல்லாம் இருக்க வேணும், மனதிலேயே வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ என்கிற எண்ணமே இருக்கக்கூடாது. நமக்கு ஞாயம் இருக்கிறது. செய்கிறோம். மக்களும் தாராள மனப்பான்மையோடு இருக்கிறார்கள் – அரிசி, பணம், கேட்டதற்கு மேலேயே கிடைக்கிறது. இதை ஒரு தொந்தரவாக யாரும் நினைக்கிறவர்கள் இல்லை ; ஒருவர் கூட இல்லை . மனதிலே நினைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒன்றும் தப்புப் பண்ணவில்லை. முன்னாடியே செய்திருக்க வேண்டிய காரியத்தைத்தான் இப்போது செய்கிறோம். இதைச் செய்யாததனாலே இன்னும் இழிவிலே இருக்கிறோம் என்கிற தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் புதி தாகச் சொல்லவில்லை. நமது தோழர்கள் எல்லா ரும் சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறேன்.
தவறு அவர்களுடையது!
இந்தப் பார்ப்பனப் பத்திரிக்கைக்காரர்களும் தங்களின் சுய நலத்தை உத்தேசித்தாவது யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டியது. இன்னமும் இப்படியே இருக்க வேணும் என்று அவர்கள் நினைத்தார்களானால், அது அவர்கள் தப்புத்தான். நாளா வட்டத்திலே அப்படியே போய்விடும் என்று கருத வேண்டாம் என்று – விஷயங்களை எல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்லி, நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இப்போது நேரம் இரவு 8 மணி ஆகிறது. முடிக்கிறேன் நான். தயவு செய்து நீங்கள் எல்லாம் நன்றாக, மனதிலே உற்சாகமாக, எங்களுக்கு உற்சாகம் ஏற்படும்படியான மாதிரியிலே, நீங்கள் மற்றும் தினம் அங்கங்கே நடைபெறும் காரியங்களிலிருந்து, இதற்கு ஒரு நல்ல நேரம் என்று கருதிச் செய்யணும். வேறே ஒன்றும் நான் அதிகமாகச் சொல்லவில்லை .
மற்றபடி, நீங்கள் இவ்வளவு நேரம் காது கொடுத்ததற்கும், இரண்டு நாளாக நீங்கள் உங்களுடைய வேலைவெட்டி எல்லாம் விட்டுவிட்டு வந்து உற்சாகமூட்டி இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், மற்றும் பொது மக்கள் இதற்கு ஆதரவாய் என்னென்ன உதவி பண்ணவேணுமோ அவைகளை எல்லாம்செய்ததற்கும், தோழர்கள் சிலர் நம் இயக்கத்திற்காக ரொம்ப உற்சாகமாகப் பணியாற்றி உதவி செய்ததற்கும், நான் அவர்களுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறேன். அதிகமாகச் சொல்லவில்லை, வணக்கம்”
(9.12.1973 அன்று நடந்த தமிழர் சமுதாய
இழிவு ஒழிப்பு மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய இறுதிப் பேரூரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக