திருச்சி,ஜூன் 12- பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயருக்கு பதிலாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கல்லூரியின் இந்நாள் மற்றும் மேனாள் மாணவர்கள், பெருமகிழ்வுடன் அதற்கான படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அக்கல்லூரியின் மேனாள் மாணவரான ரஞ்சித் சேகுவேரா குறிப்பிடுகையில், நான் பயின்ற கல்லூரியின் பெயர் மாற்றம் - பெரியார் ஈ.வெ.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயருக்கு பதிலாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன், பின்னூட்டப்பதிவில், "தோழர் அந்தக் கல்லூரி, கல்லூரி சுற்றி பல ஏக்கர் நிலங்களும் பெரியாரின் தனிப்பட்ட சொத்துக்கள் அவற்றை இலவசமாக அரசுக்கு வழங்கினார். அதற்காக அந்த கல்லூரிக்கு அவர் பெயர் வைக்காமல் வேறு யாரு பேரு வைக்கணும்?" என்றும் பதிலுரையில் வினவியுள்ளார்.
அக்கல்லூரியின் மேனாள் மாணவர்களில் ஒருவரான தஞ்சைத் தமிழன் என்பவர் பதிவில், "நான் இந்தக் கல்லூரியில்தான் 1970-1972இல் முதுகலைப் பட்டத்திற்குப் படித்தேன்..அப்போதே இந்தக் கோரிக்கையை வைத்தோம். இப்போது நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முல்லைஅக்ரோ என்பவர் பதிவில், இதுதான் திராவிடர் கழகத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தைபெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்நாள் மேனாள் மாணவர்கள் பெருமகிழ்வுடன் வரவேற்று மேலும் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக