செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தீபாவளி தமிழர் விழாவா?

தந்தை பெரியார்

தீ பாவளிப் பண்டிகையைக் கொண்டாடு வது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. "மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


ஆரியரின் இறக்குமதியே தீபாவளி

 வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு தம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மத வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம் மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக பண்டிகை, விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங் களாலும் வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவ மும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட.. இந்த மடமை மிக்க ஆசிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறு தலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்தினளத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனு பவமும் இல்லாத சில இளைஞர்கள்(மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களே யானால்; எப்படி - யார் எவ்வளவு அறிவையும் தன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழு வதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள் கிறார்கள்!

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லையே!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சித்தனையின்றி நடந்து கொள்வ தென்றால் தீபாவாளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும் மடமைக்கும், மான மற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக்கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட் அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமை யையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் -பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) 

1.ஒரு காலத்தில் ஒரு அகரன் உலகத்தைப் பாயாகச் கருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4 ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! 

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, "கங்காஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்பதும், நாம் 'ஆமாம்' என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

1-15.11.2005. உண்மை இதழ்

எல்லாக் காலத்துக்கும்... தந்தை பெரியார் - கவிஞர் கனிமொழி

நான் சிந்திக்கத் துவங்கியதே தந்தை பெரியாரின் எழுத்துகளைப் படித்துத்தான். தமிழ்ப் பெண்கள் மீது கலாச்சாரத்தின் பெயரால் வீசப்பட்ட பூமாலைகளைக் கழற்றி வீசச் சொன்னர்.

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெரியார் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரது பல கருத்துகள் நவீனமானவை. பொருத்தமானதும், எல்லாக் காலத்துக்கும் வளமையானதும் கூட.

பெரியாரின் கருத்துகள் அடிப்படை மனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் நோக்கியவை. ஆனால் இன்று அவரது சிந்தனைகள் ஓர் ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படும்போது மேலும் செழுமை ஏறும். சாதியும் மதமும் தன் கோர முகத்தைக் காட்டிய காலத்திலேயே தன் சிந்தனைகளால் அதை உடைத்துப் போட்டவர் நம் பெரியார்!

- கவிஞர் கனிமொழி

(ஆனந்த விகடனில். 23.10.2005)

- உண்மை இதழ், 1-15.11.2005

சனி, 7 பிப்ரவரி, 2026

சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி

ரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமை களையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக்கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டுபிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சியாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே நிரூபிக்கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்பதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297, 298 – வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது, எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர்களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப்பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும் என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கருத்தை சுதேசமித்திரன் பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞானமுள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் சிறீமான். எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பும் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை இன்னும் ஜெயிலில் போடாமல் வெளியில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொகெட் ஜெனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார் என்று கேட்டார். இதே கருத்தைத் தான் சிறீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி சிறீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது என்று கேட்டார். சுயராஜ்ஜியா, சுதேசமித்திரன், பிராமணன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் கேள்வி முறை இல்லையா? இப்படி அக்கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப் பற்றி கவனிப்பதில்லையா என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படாவிட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கைகளையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத் தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப் படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமையான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால்,

வஞ்சகர்களால் செய்யப்படும் சட்டங்களுக்கு அடங்கி விடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையே யாகும்.

சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல என்பதையும், பல பெரி யோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்?

எவ்வளவோ பிரத்தியட்ச ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும் போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர் புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும் போது, அஸ்திவாரத்திலிருந்தே அண்டப் புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்? சோம்பேறித்தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டு யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படி மக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை   தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது.

வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப் பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது. எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும். அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் ஏற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை சிறீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(‘குடிஅரசு’ – கட்டுரை – 07.08.1927)

- விடுதலை நாளேடு,1.2.26

திராவிடர்-ஏன்? - தந்தை பெரியார்-

 


தாய்மார்களே தோழர்களே!


நாம் இந்த நாட்டில் உரிமை உடைய மக்களாயிருந்தும் சந்தாயத்தில் இழிந்தவர்களாகவும் பொருளாதாரத்தில் தாழ்த்தப் பட்டவர்களாகவும் இருந்து வருகிறோம்! இதை மாற்றவேண்டிய முயற்சிகள் பல நடத்தும், நம் நிலையியே சிறிதும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தோம். முன்னேற்றம் அடைத்துள்ள நாட்டாரைப் பார்த்தோம். அதன்படி எந்த ஒரு நாட்டு மக்களும் அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உளர்ச்சியையும், ஒற்றுமை மனப் பான்மையையும் உண்டாக்க கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச் சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது. அதே சமயத்தில் நம் நிலையைச் சிந்தித்துப் பார்த்தபோது இந்து: இந்தியர்; இந்தியா' என்று நமக்குப் புரியாத சொற்களை - நமக்குச் சம்பந்தமில்லாத மொழிகளைச் சொல்லிக் கொண்டு வந்தோமே தவிர, உண்மையான ஒன்றுமை ஏற்படத்தக்க முறையைக் கையாள வேண்டுமே என்ற சிந்தனை நம் தலைவர்களுக்குள் ஏற்படவே இல்லை. நமது நாடு என்பதன் பெயராலோ, அல்லது சமுதாயம் என்பதன் பெயராலோ. அன்றிச் சமயம் அல்லது கொள்கை என்பதன் பெயராலோ தம் மக்களுக்குள்ளே ஒரு பொது உணர்ச்சி இல்லை. அத்தகைய மக்கள் எதைக் கொண்டு முன்னேற்றமடைய முடியும்?


ஆரியர்களும்,முஸ்லிம்களும் நம்மோடு வாழ்ந்துவருபவர்கள் தாம். ஆனால், அவர்களுடைய முன்னேற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகிறது. சமயத்தின் பெயராய் முஸ்லிம்களும், இனத்தின் பெயரால் ஆரியர்களும் ஒன்றுபட்டு விட்டனர். உலகம் பூராவிலுள்ள முஸ்லிம்கள் ஒரே சமூகம் என்ற உணர்ச்சியும் இமயம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள 'பிராமணர்கள்' ஒன்று என்ற உணர்ச்சியும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.


திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை 'திராவிடர்' என்றும்; 'இந்தியா' இந்தியர்: 'இந்து' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்து என்று வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள். இதிகாசங்கன், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ் வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம்.


நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட குழச்சியே 'இந்து' என்பதாகும். இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவற்றில்கூட 'இந்தியா' என்பதோ 'இந்து' என்பதோ, இந்தியர்' என்பதோ காணப்படவில்லை.


500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மை குறித்துத் 'திராவிடர்' என்றே எழுதப்பட்டி ருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்த்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம். அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும் அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக்கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே இந்து என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா. இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.


பார்ப்பனரல்லாதார் என்று நம்மைநாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும். நாம் திராவிடர்; எதிரிகள், வேண்டுபானால் 'திராவிடால்லாதார்' என்று சொல்லிக் கொள்ளட்டுமே!


சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்து வரும் பழம் பண்டிதர்கள் இயயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்துபோகட்டும்: அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?


தமிழர்களாகிய நாம், "திராவிட நாடு திராவிட்ருக்கே' வேண்டுமென்பதில் முனைத்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக் காரன் தன்ணையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்துகொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இளம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து தம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும். 


(வால்குடியில், 23.5.1944-ல் சொற்பொழிவு - குடியரசு 3.6.1944)


- விடுதலை நாளேடு 29.11.1991