ஞாயிறு, 17 மே, 2015

உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமு மாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந் திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற் கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (
நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது

-விடுதலை,24.4.15

வியாழன், 14 மே, 2015

இந்து என்றால் என்ன? - தந்தை பெரியார்


பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!
கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று  கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.
பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும், செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு மதிக்கிறேன். மக்களும்  எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.
நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக்கூடாது என்பதைக் கொள்கை யாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.
நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.
இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது.  ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.
அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு  அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.
இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.
இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பதுதானே.
இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.
அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.
அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!
உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.
அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.
மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.
தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.
காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.
நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.
தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.
பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.
இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?
இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.
29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).
-விடுதலை, 26.4.15

கொடிது கொடிது

புதன், 13 மே, 2015

தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகள் ஊரின் நடுவே அமைத்திட வேண்டும்

- தந்தை பெரியார்

டாக்டர் அம்பேத்கர் பிறந்ததின விழாவில், டாக்டர் அம்பேத்கர் அவர் களை நாம் பாராட்டுவது மட்டும் போதாது; அவரின் தொண்டினைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கை யினைப் பின் பற்றவேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் பேரறிஞர். செயற்கரிய செய்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு யாரும் செய்ய முடியாத தொண்டு ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களுடைய எண் ணிக்கை எவ்வளவோ அத்துணை விகிதத்தில் கல்வி,  உத்தியோகப் பதவி களைப் பெற்றுத் தந்தவர் ஆவார்.
உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்லுவதில் அவருக்கு ஈடு யாரும் இல்லை. சிறந்த படிப்பாளி. தம் மனதில் பட்ட கருத்துகளைத் துணிந்து கூறி வந்தவர். எதிர்ப்புக்காகத் தம் கொள் கையில் இருந்து பின் வாங்காதவர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எண்ணிக் கைக்குத் தகுந்தாற்போல சலுகைகள் கிடைத்தது அவரின் தொண்டு காரண மாக என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இங்கு அரிஜன நல மாணவர் முன் னேற்றக் கழகம் என்று துவக்கியுள் ளார்கள்.
அதில் எனக்கு ஓர் அதிருப்தி என்ன வென்றால், அரிஜனம் என்ற பெயரை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது; காந்தி வைத்த பெயர் இது. அரிஜனம் என்றால் கடவுள் சாதி; விஷ்ணுவின் ஜனங்கள் என்று பெயர் வைத்தார்.
அதற்கு முன் உங்களுக்குச் சங்கர சாதி என்று பெயர் இருந்தது. அது சிவ னுக்குச் சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் காந்தி, விஷ்ணுவுக்குச் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அரிஜனங்கள் என்று பெயர் வைத்தார்.
நாங்கள் தான் கண்டித்து எழுதி னோம். நீங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப் பட்ட மக்கள். உங்களைத் தாழ்த்தியது இந்த விஷ்ணு, சிவன் முதலிய கட வுள்கள் தான். எனவே, இந்தப் பெயரை ஏற்கக்கூடாது என்று எழுதினேன்.
இதனை ஒரு சமுதாய முன்னேற்ற ஸ்தாபனமாக வைத்துப் பாடுபட வேண் டும். இன்றைக்குச் சமுதாய முன்னேற் றத்துக்குப் பாடுபடுகின்றேன் என்று பலர் பல சங்கங்கள் வைத்து உள்ளார்கள். அதில் ஈடுபட்டு உள்ளவர்கள் தாங்கள் முன்னேறப் பார்க்கின்றார்களே ஒழிய, சமுதாய முன் னேற்றத்தில் அக்கறை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், அரசியலில் ஈடுபட்டவர் களாக இருக்கின்றதனால் ஓட்டுக்காக, பதவிக்காகக் காரியம் ஆற்றுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே, நீங்கள் அரிஜன மாணவர் நல முன்னேற்றக் கழகம் என்பதை விட்டு விட்டுத் தாழ்த்தப்பட்டோர் மாணவர் நலமுன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பேர் கூட நான் முயற்சி பண்ணி வைத்தது.
அதற்கு முன்பு பின் தங்கிய வகுப்பார், தாழ்ந்த வகுப்பார் என்றுதான் இருந்தது. நான் தான் கூறினேன், எழுதினேன். எப்படிப் பின் தங்கிய வகுப்பார் என்ப வர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படுகின்றதோ, அதுபோலத் தாழ்ந்த வகுப்பார்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கவேண்டும் என்று. நீங்களாகத் தாழ்ந்தவர்கள் அல்லவே. மேல் சாதிக்காரர் களால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட் டவர்கள்தானே, ஆகவே தாழ்த்தப்பட் டோர் என்றே நீங்கள் போடவேண்டுமே ஒழிய அரிசனங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
உங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக - இழிமக்களாக ஆக்கியது கடவுள் காரண மாகத்தானே! நாங்கள் கடவுளின் ஜனங்கள் என்பதை ஒத்துக் கொண்டு  நான் ஏன் இழிமகன், தாழ்த்தப்பட்ட மகன் என்று கேட்டால் என்ன நியாயம்?
இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள்.
முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தி யாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.
அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களாகிய நீங்கள் குடிசை வீட்டில் குடி இருந்தாலும் ஊருக்கு நடுவில் இருப்பதையே பெரிதாகக் கருத வேண்டுமே ஒழிய, ஊருக்கு  வெளியே கட்டிக் கொடுக்கக் கூடிய வீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
காரணம், இந்த முறை மேலும் உங்களை ஒதுக்கி வைக்கத்தானே உதவுகின்றது.
தோழர்களே, இன்றைக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்குத் தமிழகத்தில் கூட தீண் டாமை, தொல்லைகள் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது.
தொல்லைகள், கொடுமைகள் நடந்து கொண்டு தான் வருகின்றன.
பார்ப்பான் மட்டும் அல்லவே; பார்ப் பனர் அல்லாத மக்களும் கூட முட்டாள் தனமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில இடங்களில் கொடுமை இழைக்கின்றார்கள்.
முட்டாள்தனமாக இப்படிச் செய்கின் றார்கள். பார்ப்பான் அவனைச் சூத்திரன் என்றால் நான் எப்படி சூத்திரன் என்று கேட்கின்றவன், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறமுடியும்? தாழ்த்தப்பட்ட  மக்கள் படித்துவிட்டு வெள்ளையும், சள்ளையுமாக வெளியே போவதைப் பார்த்து ஆத்திரப்படுவது முட்டாள்தனம் ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருக்கக்கூடாது. உங்களை இந்தத் தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவுளும், மதமும் தான் என்பதை உணர வேண்டும்.
நீங்கள் உங்கள் அறிவையே பிரதான மாக நம்ப வேண்டும். உங்களை ஈடேற் றுவது உங்கள் அறிவே தவிர கடவுளும், மதமும் அல்ல.
உங்கள் முன்னேற்றத்திற்காக அரசாங் கம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. இவற்றை முழுமையும் பயன் படுத்திக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். இந்த அரசாங்கமானபடியால் இதன் ஆட்சிக் காலத்திலேயே  நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் உண்டு. மற்றவர் ஆட்சியில் இந்த அளவு உங்களுக்குச் சலுகை கிடைக்காது.
மேல்சாதி என்று கருதிக் கொண்டு இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத மக்களுக் கும் கூறுவேன். நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மனிதர்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று  கருதவேண்டும். அவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும். அவர்கள்  முன்னேற உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சாதி இழிவு மட்டும் அல்ல, உங்களுக்கும் இருக்கின்ற சாதி இழிவும் ஒழியும். சாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படவும் வழி பிறக்கும்.
23.6.1972 அன்று நொய்யலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(விடுதலை,  3.7.1972)

தந்தை பெரியார் உலகமயமாகிறார்

தந்தை பெரியார் உலகமயமாகிறார்
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் சிந்தனைப் பரிமாற்றம்

நியூயார்க், ஏப்.19_ அமெரிக்கா _ நியூயார்க் அருகில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தந்தை பெரி யார்பற்றிய சிந்தனைகள் பரிமாறிக் கொள்ளப்பட் டன.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலே அமைந் துள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் உலகப் புகழ் பெற்றது.அங்கு பாபாசாகேப் அம்பேத்கர் பயின்ற சட்டக்கல்லூரிக்கு அடுத்துள்ள அரங்கில் ஏப்ரல்  10,11 ஆம் நாட் களில் ஒரு மாநாடு நடந் தது. அதன் தலைப்பே புது மையானது. சாமியில்லாத சாவு.  ஞிஹ்வீஸீரீ ஷ்வீலீஷீ ஞிமீடஹ் பேராசிரியர் பால்கர்ட்சு நிறுவிய அறிவியல் மனித நேய அமைப்பின் ஏற்பாட் டில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்றும், கலந்து கொண்டும் இந்த மாநாடு நடைபெற்றது.
பலருக்கு வாழ்வின் கடைசி நாட்கள் வரும் என்று தெரிந்ததும் நம்பிக் கையின்மையும், அச்சமும் வந்து விடுகின்றன. அவர் களைக் கடவுள் என்ன காப்பாற்றவா போகின்றார்?
கடவுள் ,மத நம்பிக்கை யில்லாமல் வாழ்வின் முடிவை எப்படி எதிர் கொள்வது என்பதைப் பற்றியும் அதில் மருத்துவ மனைகள்,அங்கு ஆறுதல் சொல்லும் ஆர்வலர்கள் ,சட்ட திட்டங்கள் பற்றி யும் கட்டுரைகள் வாசிக் கப்பட்டன.
மக்களுக்குச் சாவதற்கு உரிமை உள்ளதா? அமெ ரிக்காவின் அய்ந்து மாநி லங்களில் உள்ளது. இரண்டு மருத்துவர்கள் தனித்தனியே பரிசோதித்து கடும் நோயாலும், வலியா லும் துன்பப்படுவோர் 6 மாதங்களில் இறந்து விடு வார்கள் என்று சான்றிதழ் தந்து, அதை உறவினர் களும் ஏற்றுக்கொண்டு 15 நாட்கள் கழித்து அவர்கள் வாழ்வை அவர்களே முடித்துக்கொள்ள உரிமை உள்ளது. இது பற்றி விளக் கமாக விவாதிக்கப்பட்டது .அய்ரோப்பிய நாடுகளிலும் இது போல் உள்ளது.
தற்கொலைக்கு எதி ரான மனிதநேயக் கருத் துக்கள் ஆராயப்பட்டன. மனித உடல் உறுப்புக்கள் நன்கொடையும் அதில் மட்டும் மத,இன வேறு பாடுகள் இல்லாமல் பெற்றுக் கொள்வதையும் பற்றி ஒரு கருப்பினப் பெண் உணர்ச்சியுடன் பேசினார் . உடல் உறுப்புக் கள் பெரிய வணிகமாகி விட்டதை அலசினார்.
தந்தை பெரியார் பற்றி நன்கு அறிந்தவரும் பெரி யார் பன்னாட்டமைப்பின் நிகழ்வில் பங்கேற்றுமுள்ள   மார்க்ரெட் டவுணி அம்மையார் கல்லறையா?  மரியாதையா ? என்ற தலைப்பில் இறப்பில் மனிதநேயம் தழைத் தோங்க  வேண்டும், உடல் நன்கொடை பெருக வேண்டும் என்று எடுத்து ரைத்தார் .அந்த நிகழ்விற்கு நடுவராக இருந்த சோம. இளங்கோவன் அவர்கள் பெரியார் பற்றியும்  நமது தோழர்களின் குருதிக் கொடை உடல் நன்கொடை பற்றியும் விளக்கினார்.
கனடாவிலிருந்து  மனநல மருத்துவர் ராபர்ட் லூயிசு எப்படி மதவாத ஆறுதல் அளிப்போர் (றிணீஷீக்ஷீ) நிறுவனமே அவரை அழைத்து மத நம் பிக்கையில்லாதவர்களுக்கு ஆறுதல் கூறும் வழி முறைகள் பற்றிப் பேச்சு சொல்லியுள்ளனர் என்று எடுத்துரைத்தார் .அங்கு பகுத்தறிவு பல முனை களில் அமைதியாக வெற்றி பெற்று வருவதைப் பற்றிப் பெருமைப் பட்டார். மத நம்பிக்கையில்லாதவர்கட்கு உள்ள உரிமைகள்    செயல்படுத் தப்படுவதை உரைத்தார்.
தொலைக்காட்சிகளில்  பல நிகழ்ச்சிகள் நடத்தி யுள்ளவரும், ஒரு மில் லியன் டாலர் பந்தயத்தைப் பல ஆண்டுகளாக மத வாதிகளிடம் வைத்துள்ள ஜேம்ஸ் லேண்டி நிறு வனத் தலைவராகவும் இருந்த டி ஜே கிராத்தியை அறிமுகப் படுத்திய மருத் துவர் சரோ இளங்கோவன் தந்தை பெரியாரின் படத்தைக் காண்பித்து, எப்படி பல ஆண்டு களுக்கு முன்னேயே நூறாண்டுகள் வாழலாம், அறிஞர்கள் மனிதன் எளிமையாக இறப்பதற்கு ஆராய்ச்சி செய்வார்கள் என்று சொன்னதை எடுத் துச் சொன்னார்.
இனி வரும் உலகம் ஆங்கில நூலும் அங்கு விற்கப்பட் டது .நீண்ட வாழ்வு பற்றி சொற்பொழிவாற்றிய கிரோத்தி என்னென்ன ஏமாற்று வேலைகள் நடக்கின்றன ,உண்மை யான ஆராய்ச்சிகள் எவை என்றெல்லாம் எடுத் துரைத்தார் .
சமுதாயத் தொண்டர் களும் வழக்குரைஞர்களும், எப்படி ஒரு நாத்திகர் இறந்ததும் அவருடைய கருத்துக்கு எதிராக மத வாத, மூடப்பழக்கத்துடன் இறுதி நிகழ்ச்சி நடத்து கின்றனர்,அதைத் தடுக்க எப்படி நாம் உயிருடன் உள்ள போதே உறவினர் களையும், நண்பர்களையும் உடன் வைத்துப் பேசி எழுத்திலும் வைக்க வேண் டும் என்று காண்பித்தனர் . நமது பகுத்தறிவு வாதிகள் செய்வது போன்றே இருந் தது. பல மனித நேய அமைப்புக்கள் பங்கேற்றன.
பல பேராசிரியர்களும், ஒருவர் மூன்று முனைவர் பட்டம் பெற்றவர் ,மருத் துவ, சட்ட, சமுதாய மேதைகளும் பங்கேற்று கேள்வி பதில்கள் சிறப்பாக இருந்தன.
தந்தை பெரியார் கொள்கை,  உலகை மாற்றும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
தகவல்: சோம.இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
-விடுதலை19.4.15 பக்கம்-1

திங்கள், 11 மே, 2015

வெற்றி நம்முடையது தான்


வெற்றிநம்முடையதுதான்
ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள்
நம் கழகச் சார்பாக சென்ற மாதம் இரு கூட்டங்கள் நடந்தன. அதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 1. சென்னை மந்திரிசபை அமைப்பு 2. இங்கிலாந்து தூது கோஷ்டி தோல்வி 3. மதுரை கலவரம் முதலிய காரியங் களாகும். மந்திரி சபை அமைப்பு பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்குள் எவ்வளவு கோளாறுகள் இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
ஆனால் அதில் ஆந்திரர், தமிழர் என் கின்ற பாஷை உணர்ச்சியும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்பு பேத உணர்ச்சியும், அந்நிய மாகாணத்தார் பிரவேசம் கூடாது என்கின்ற மாகாண உணர்ச்சியும், யார் முதல் மந்திரி, யார் சாதாரண மந்திரி என்ற பதவி வேட்டைப் போராட்டமும், காங்கிரசுசார் இதுவரை குறை சொல்லி வந்த மற்ற கட்சிகள் நடத்தையையே சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். காங்கிரகாரர்கள் அல் லாமல் தேவர்களே வந்து மந்திரி சபை நடத்தினாலும் இந்தப் போராட்டங்கள் நடந்துதான் தீரும்.
இது அரசியலுக்கு இயற்கையே ஆகும். ஏனெனில் அர சியல் என்பது வடிகட்டிய சுயநலம், பித்தலாட்டம். ஆகவே எந்தப் பித்தலாட் டமும், ஏன், தெய்வீகமும் சில நாள் களுக்குத்தான் செல்லும். இது எப்படி இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த மந்திரிசபையினால் நல்லது கிடைப்பதை நன்றியோடு பெற இருக்கிறோம். கேடு ஏற்பட்டால் போராடவும் பின்வாங்கப் போவதில்லை. போருக்குத் தயாராகவே இருக்கிறோம்.
இந்தி வந்தால் அனுமதிப்போம் என்று நான் சொன்னதாகச் சொல்லு கிறார்கள். அது தவறு. அதைவிட முக்கிய வேலை இருக்கிறது. வந்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக் கிறார்கள். ஏற்படுத்தி விட்டு விட்டோம் என்றுதான் சொன்னேன். மற்றும் நம் பேச்சுக்களில் பார்ப்பனர்களைக் குறை கூறியதாக சில பார்ப்பனர்கள் பேசிக் கொண்டார்களாம்.
அதுவும் தவறு, நாம் அவர்களைக் குறை கூறுவதே இல்லை. நம் குறைகளைப் பற்றிப் பேசினால் அது அவர்களைக் குறைகூறுவதாகக் கருது கிறார்கள். அக்குறைகள் நீங்கும்படி சட்டம் ஏற்பட்டால் ஒழிய அல்லது அவர்கள் திருத்திக் கொண்டால் ஒழிய இந்த நிலைமை இன்னும் அதிகமாகுமே தவிர, குறையப் போவதில்லை.
ஆதலால் குறையையும் காரணங்களையும் சொல் லுகிறோம். இது அவர்களைத் திட்டு வதாகாது. அவர்களையும் அதாவது, பார்ப்பனர்களையும், நம்மையும் பார்த் தால் நமக்கு இருந்துவரும் குறையும், இழிவும், அசவுகரியமும் எவ்வளவு இருக்கின்றன? இதை  அவர்களில் யார் சிந்திக்கிறார்கள்? தங்களைக் குறை கூறுவதாய்க் கருதும் பார்ப்பன சமுகம் இதற்காக என்ன செய்தது? என்ன செய் கிறது? அவர்கள் எப்போதும் அதி காரத்தில் இருப்பவர்கள், மதத்தில் பெரியவர்கள், ஆதலால் அந்த அதிகாரத்தை, மதத்தைக் கொண்டு நம்மை எவ்வளவு பாரபட்சமாகவும், இழிவாகவும் நடத்துகிறார்கள். அவர்கள் பத்திரிகை ஆதிக்கக்காரர்கள்.
அப்பத் திரிகைகளைக் கொண்டும் நம்மக்களை, நம் இயக்கத்தை எவ்வளவு கொடுமை யாக நடத்தி இழித்துக் கூறி நம்மைத் தலையெடுக்க விடாமல் எவ்வளவு வன்நெஞ்சமாய் அக்கிரமம் செய் கிறார்கள்? நம்மையும், நம் தலைவர் களையும், நம் ஸ்தாபனங்களையும் இழிவு படுத்திக் கடும் பழி சுமத்தி நாடெல்லாம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். மற்ற மாகாணத்தார் நம்மை இழிவாய்க் கருதுகிறார்கள்.
சென்னை மந்திரி சபை அமைப்பில் பிரகாசம் - ராஜகோபாலாச் சாரி கட்சி சண்டை இருந்தாலும், பிரகாசம் அவர்கள் மீது ஆச்சாரியார் கும்பலுக்கு எவ்வளவுதான் அசூயையும் ஆத்திரமும் இருந்தாலும், கட்சித் தலைவர் தேர்தலில் ஆச்சாரியார் கட்சியார், பிரகாசம் தலைவராக வரும்படியாகத்தான் நடந்து கொண்டார்களே தவிர, முத்துரங்க முதலியார் தலைவராக வருவது பார்ப்பனர் களுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
ஆச்சாரியார் கூட்டம் உண்மையில் பிரகாசம் கூடாது என்று நினைத்து இருந் தால் அவர் தலைவராக ஆகி இருக்க முடியாது. எனவே பார்ப்பனர்களுக்குள் தங்கள் தங்கள் தனிப்பட்ட காரியம் வரும்போது தான் தங்களுக்குள் போட் டியே ஒழிய, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போட்டி வரும்போது பார்ப்பனர் யாவரும் ஒன்றுதான், நாம் தான் தனிப்பட்ட நமக்கு இல்லாவிட்டால் பார்ப்பனரே வரட்டும் என்று விபீஷணர்களாக நடப்பவர்களாக இருந்து வருகிறோம்.
இன்றும் பார்ப்பன மந்திரிகள் 5 பேர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும் ஒருவர் வரலாம். முக்கியமான இலாகாக்கள் பணம் கொழிக்கும் இலாகாக்கள் யாவும் அவர்கள் இடமே தஞ்சமடைந்துவிட்டன. வெறுந்தப் பட்டைகள்தான் நம்மவர்கள் இடம் அளிக் கப்பட்டு இருக்கின்றன. இப்படி இருந்தாலும் மந்திரி சபையில் காங்கிரசில் துவேஷப் புகை புகைந்து கொண்டிருக்கிறது.
இனி அடுத்தாற்போல் பிரிட்டிஷ் மந்திரி தூதுகோஷ்டி விஷயம். இது தோல்வி அடைந்ததில் அதிசயமென்ன? காங்கிரசு காரர்கள் (ஆரியர்கள்) ஒரு நாளும் பிரிட் டிஷாரை வெளியேற விடமாட்டார்கள். பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியா முஸ்லிம் ராஜ்ஜியமாகிவிடும் என்கின்ற பயம் வடநாட்டுத் தலைவர்களுக்கு (ஆரியர் களுக்கு) உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே ஜாதி, கட்டுப்பாடுடைய ஜாதியாரா வார்கள். அவர்கள் தவிர்த்த இந்தியர்கள் பல ஜாதி, கட்டுப்பாடு இல்லாத விபீஷ ணர்கள் ஜாதி, ஆதலால் கட்டுப்பாடுடைய ஒரு ஜாதிதான் அவர்கள் யாராய் இருந் தாலும் எவ்வளவு சில தொகையினரானா லும் இந்தியாவை ஆளமுடியும். அதனால் தான் காங்கிரசார் வெள்ளையனை வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்கிறேன்.
ஆனால் வெள்ளையனே வெளியேறு என்று அவர்கள் மக்களை ஏமாற்றப் பித்தலாட்டத்தைச் சொல்லிக் கொண்டே வெள்ளையனோடு ஒப்பந்தம் பேசிக் கொண்டு மேல் ஜாதியாரும், பணக்காரர் களும் ஆன ஆரியர்கள் நன்றாக வாழ வழி செய்து கொள்வார்கள். இதனால்தான் தூது கோஷ்டி தோல்வி என்ற நடிப்பை நடத்தினார்களே ஒழிய உண்மையில் தோல்வி இல்லை. அது வெற்றி பெற்றிருந் தால் முஸ்லிம்களுக்குப் பகுதி ஆதிக்கம் வந்துவிடும். இதற்கு, வருணாசிரமத்திற்கும் பணக்காரர்களுக்கும் பரம பக்தரான காந்தியார் சம்மதிப்பாரா? ஆகவே, தூது கோஷ்டி தோல்வி என்பது ஆரியருக்கு வெற்றியேயாகும். இனி அடுத்தாற்போல் மதுரை சம்பவ விஷயம்.
மதுரை சம்பவம் நமக்கு மொத்தத்தில் கணக்குப் பார்த்தால் சிலர் அடிபட்டாலும் பலனில் லாபமே தவிர நட்டமில்லை. நமது இயக்கமும் கருப்புச்சட்டைப் படை அமைப்பும், இந்தியா முழுவதும் பரவி விட்டது.
நமது கொள்கைகளும் இந்தியா வெங்கும் தெரிந்து விட்டன. இது எதிர் பாராமல் நமக்குக் கிடைத்த லாபமாகும். இதில் பார்ப்பனர்கள் ஏமாந்து போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். நம்மில் பலருக்கு அடி உண்டு. நல்ல நஷ்டமும் உண்டு. போனால் போகட்டும். இலாபம் எவ்வளவு பெரிது பாருங்கள். உருவக் கடவுள் பேரால் அவர்கள் அடிக்கும் கொள்ளைபற்றியும் ஜாதிக் கொடுமைப் பற்றியும் நமது அப்பிராயம் என்ன? கருப்புச் சட்டைப்படை நோக்கமென்ன? திராவிடர் கழகக் கொள்கை என்ன? என்பவை ஒருவாறு இந்தியா பூராவும் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் இப்படி செய்யாதிருந்தால் இந்தக் கொள்கை பரவுவது லேசான காரியமல்ல. இதைப் பரப்புவதற்கு ஒரு சிலர் அடி உதை பட்டால் இழிவு அல்ல.
இதற்கு ஆகவேதான் 2000 ஆண்டு களுக்கு முன்பே புத்தர், கிறிஸ்துநாதர், முகமது நபி ஆகிய சீர்திருத்தக்காரர்கள் பாடு பட்டார்கள். ஆனால், அது நம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இப்போது அதையே தான் நாம் செய்கிறோம். அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களைப் போலவே நமக்கும் கஷ்ட நஷ்டம் வந்துதான் தீரும். அதற்குப் பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட அந்தக் காட்டுமிராண்டி காலத்தில் அவர்கள் இந்தியா தவிர, மற்ற நாடுகளில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் இந்த விஞ்ஞான காலத்தில் அதே கொள்கை களில் அதுவும் அக்கொள்கைகளில் உலகத் தில் 200 கோடி மக்கள் இருக்கும்போது நாம் ஏன் வெற்றி பெற முடியாது? மதுரை சமணர்களைக் கழுவேற்றின ஊரல்லவா? அதை ஆதரித்துக் கழுவேற்றினவர்களுக்கு முக்தி கொடுத்த சிவன் உறையும் ஊரல் லவா? அது இப்போது சிலரை கல்லால் தடியால் அடித்து, மடியில் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு, போய் கொட்ட கைக்குத் தீ வைப்பது மதுரைக்கு எப்படி இழிவாகும்? ஆதலால் மதுரை சம்பவம் பற்றி நாம் அதிசயப்படவோ குறைகூறவோ இடமில்லை.
ஏசு, கோவில்களைக் கள்ளர்குகை என்றார், புத்தர் பார்ப்பனியத்திற்கு அஸ்தி வாரத்தில் வெடி வைத்தார், முகமது நபி விக்கிரகங்களை, கடவுளை பரிகாசம் செய்யும் சின்னம் ஆதலால் கண்ட கண்ட பக்கம் அதை வெறுங்கள் என்றார், காந்தியார் கோவில்களை குச்சுக்காரிகள் விடுதி என்றார். மற்றும் பல பெரியார்கள் கல்லிலும், மரத்திலும், செம்பிலும், காரை யிலும் சித்திரத்திலும் கடவுள் இருப்பாரா மடையர்களே என்றார்கள். இதைவிடவா நாம் சொல்லுகிறோம்? இவ்வளவு கூட நாம் சொல்லுவதில்லையே, இப்படியெல்லாமும் நாம் செய்வதில்லையே, அப்படி இருக்க இந்தப் பார்ப்பனர்கள் பழி சுமத்தி நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள். மதுரை காலித் தனத்திற்கு அஸ்திவாரம், பிறப்பிடம் தோழர் வைத்திய நாதய்யர் என்கின்ற ஒரு பார்ப் பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும் என்பதாக அப்போதே மக்கள் என்னிடம் சொன்னார்கள். நான் முதலில் நம்ப வில்லை.
பிறகு அவரே அவரது தந்திர மான நடத்தையில் அதை வெளியாக்கிக் கொண்டு விட்டார். பிறகும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. இந்தப் பார்ப்பனர், பார்ப்பனரில் யோக்கியர் என்று சொல்லப்படுபவர். இவர் சங்கதி இப்படி யானால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். மதுரையில் நான் நம் தொண்டர்களை அடக்கிவிட்டதால் நமக்கு அடிவிழ நேரிட்டதென்றும், விட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்றும் நம்பிள் ளைகள் என் மீது குற்றம் சொல்லு கிறார்கள். நான் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இன்னும் சிலர் இரு பக்கத்திலும் செத்திருப்பார்கள். இதனால் நமக்கு என்ன லாபம்? நம்மவர்கள்தானே இருபக்கமும் அடிபட்டு சாகவேண்டி இருக்கும். ஆதலாலேயே நான் எங்கு சென்றாலும் நம்மவர்களை அடக்குவதும், பலாத்காரம் கூடாது என்பதும் ஆகுமே தவிர பயத்தால் அல்ல. காங்கிரசாரானா லும், கம்யூனிட்ஸ் ஆனாலும் அவர்களில் நம்மவர்கள் என்றால் நாம் சற்று அடங்கி மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமாகும். இனி எந்தக் கட்சி ஆனாலும் நம்மவர்களுக்குள் சண்டை, கலகம், வசவு கூடாது.
கருப்புச் சட்டை படைக்கு இது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். அவர்களி டம் சிநேகம் கொள்ளுங்கள். இந்த புத்தி இல்லாததாலேயே பொது எதிரியை மறந்து அவனுக்கு மானங்கெட்ட அடிமையாகி விட்டோம். இதைத்தான் மதுரையில் முதல்நாள் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன்.
இப்போது மந்திரிசபை பார்ப்பன ஆதிக்கமாகிவிட்டது. சர்க்கார் காரியா லயம் பெரிதும் ஏற்கனவே பார்ப்பன அக்கிரகாரம், வெளி அய்.சி.எ. அதிகாரிகள், ஜட்ஜுகள், பெரிதும் பார்ப்பனர்கள். நம்ம வர்களிலும் பலர் அவர்கள் அடிமைகள், பத்திரிகைகளும் யாவும் அவர்களுடைய தும் அவர்களது ஆதிக்கத்தில் இருப்பது மாகும். நம் மந்திரிகள், நம் அதிகாரிகள் யாராவது (திராவிடர்கள்) இருந்தால் அவர்கள் சக்தி அற்றவர்கள், ஆதரவற்ற வர்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள் ளவே பாததீர்த்தம் அருந்த வேண்டிய வர்கள். இந்த நிலையில் நாம் இப்போது நான் செய்வதற்கு மேல் என்ன செய்ய முடியும்? இருக்கும் சக்தியையும், முஸ்தீபு சாதனங்களையும் வைத்துக் கொண்டு எவ்வளவு செய்யமுடியுமோ அதற்கு மேலேயே செய்வேனே ஒழிய விட்டுக் கொடுத்துவிடமாட்டேன். மாணவர்கள், இளைஞர்கள் சில பெரியார்களிடத்தில் எனக்கு உள்ள நம்பிக்கையையும் அவர் களுக்கு என்னிடத்தில் உள்ள அன்பையும் கொண்டு நம் முக்கிய குறைபாடுகளை நீக்கி நமக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படவே நான் திட்டம் வைத்திருக்கிறேன்.
அது நடைபெற வெற்றிபெற நீங்கள் கட்டுப் பாடாக, குயுக்தி இல்லாமல், உங்கள் சவு கரியத்திற்கு ஆக காரியங்களையே கெடுக்கப் பார்க்காமல் எனக்கு உதவி செய்யுங்கள், பொறுமையாய், கண்ணிய மாய், ஒழுக்கமாய், ஒழுங்கு முறைப்படி நடந்து கொள்ளுங்கள், வெற்றி நம்முடையதுதான். சந்தேகமில்லை.
(26.05.1946 அன்று தேதி ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் தோழர் குகநாதன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் துவக்கப்பட்டது. 5000 மக்கள் வரை வந்து இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி வரை சொற்பொழிவுகள் நடந் தன. அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு )
குடிஅரசு -  சொற்பொழிவு - 15.06.1946