ஞாயிறு, 5 ஜூலை, 2015

பன்னீர் செல்வம் நாள்- தந்தை பெரியார்

      



தோழர்களே! பன்னீர்செல்வம் நினைவுநாள் என ஒரு நாளை நாம் கொண்டாடுகிறோம். எத்தனையோ பேர் தினம் சாகிறார்கள். ஏதோ இரண் டொருவர் களுக்குத்தான் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப்போனவர் களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமார்த்தியம் முதலியவைகளைப் பற்றியோ  எவருக்கும் நாம் நினைவுநாள் கொண் டாடுவதில்லை. இவை காரணமாக நாம் எவரையும் போற்றுவதில்லை, துதிப் பதுமில்லை; பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத் தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டு மானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவை ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவு என்பவையெல்லாம் இவை களை உத்தேசித்ததல்ல.
மற்றெதற்கு ஆக என்றால் மனிதர் களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருந்து மறைந்த மனிதர்களுக்கு ஆக இரங்கி அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி மற்றவர்களையும் மனிதர் களாக ஆகுங்கள் என்பதற்கு ஆகவே யாகும்.
அப்படியானால் செத்துப்போன மற்றவர்களும் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல் லவா என்று கேட்பீர்கள். அவர்களை யெல்லாம் மனிதர்கள் என்று சொல்லு கிறோமே ஒழிய, மற்ற ஜீவப்பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனி தர்கள் என்று சொல்வதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல; நடப்பிலும் நடப்பால் ஏற் படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.
உலகிலுள்ள எல்லா ஜீவப்பிராணி களுக்கும் மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.
ஜீவன் என்றால்?
ஜீவன் என்றால் பிறத்தல், தன் நல னுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக் குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங் களைப் பார்த்தால் செத்த மனிதர்களும் இருக்கும் மனிதர்களும் முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி பேரும் அதற்கும் மேற்பட்ட எண் ணிக்கை உடையவர்களும் மேற்கண்ட குணங்களுடைய ஜீவப்பிராணி என் பதில் சேர்ந்தவர்களாக ஆகாமல் அவை களில் நின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்படவேண்டிய மனிதத்தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?
ஜீவன் என்றால் சுய   உணர்ச்சி என்றுதான் கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இந்தத் தன்மையை உடையவர் களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களி டம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.
மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்வது மனிதனை ஜீவப் பிராணிகளிடம் இருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ஜீவத்தன்மை எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ, அவற்றிற்கெல் லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால் அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.
தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள்; மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள்; ஆடு, கோழி களால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள்; நாய்களால் காக்கப்படுகிறார்கள்; கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடை கிறார்கள். இப்படி எத்தனையோவற்றால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித் தான் மனித ஜீவனும் பல வழிகளில் பல காரணங்களால் வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்பட லாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிட மாட்டான்.
எதனால் மனிதன் உயர்ந்தவன்?
மற்றபடி எதனால் மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாக லாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவு சொன்னேன்.
ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட் சியம் செய்து,
அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது நலத்தையும், தன் மேன்மையையும் பற்றிய கவலையும், தனது மேல் வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து மனித சமுதாய வாழ்வில் மேன்மைக்காக பணியாற்றவே மற்ற ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி, எண்ணும் தன்மை, தொண் டாற்றும் சக்தி ஆகியவை இருக்கிறது என்று கருதித் தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ் வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறு பட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனா வான். மனிதஉரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்கு ஆகத்தான் இருக்கலாமே ஒழிய வேறு ஒன்றுக்காக இருக்க முடியாது.
ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளதாக இருந்தாலும் அதனால் மனிதன் மேன்மை யானவனாகவோ, மதிக்கத் தகுந்தவனா கவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல் பூண்டுகளுக்கு நறுமணம் உண்டு. சில ஜந் துக்களின் மலங்களுக்கும் நறுமணமுண்டு, அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்று கிறோமா?
அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கி றோமா? அல்லது தெய்வங்கள் என்பவர் களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை, மடாதிபதி களை மதிக்கிறோமா? இவர்களையெல் லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள். மற்றவர்கள் ஏன் மதிப் பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோல்தான். தன் தன் நலத்துக்குத் தன் தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப் பட்டதாயிலும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழியப் போற்றக்கூடியதாகாது. அப்படியல் லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிற வன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் மதிக்காமல் இருக்கலாம். அவமதிக்கலாம். அது பொதுவாய் மதிக்காததாகாது.
ஆகவே, நாம் நினைவு நாள் கொண் டாடும் மக்களை உண்மையான மனிதர் களாய்க் கருதி அவர்களது மனிதத் தன் மையை மதித்து மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டும் என்கின்ற ஆசைக்காக எடுத்துக்காட்டுக்காக, பிரசாரத்துக்காகக் கொண்டாடுகிறோம்.
நம் பன்னீர்செல்வம்
நம் மறைந்த பன்னீர்செல்வம் அப்படிப் பட்ட கொண்டாடவேண்டிய குழுவில் சேர்க்கப்பட வேண்டியவர் என்றே சொல் லலாம். அவர் நம் இனத்திற்குத் தன்னல மின்றிப் பல தொண்டாற்றினார். இன்னும் பல தொண்டாற்ற ஆவலாய் இருந்தார். அவர் நமக்காகத் தம்மை ஒப்படைத்தார்.
அவர் நம் இயக்கத்தில் ஓர் உண்மை யான பின்பற்றுகிறவராக இருந்தார்; தலை வருக்கு அடங்கி இருப்பதுதான் ஓர் இயக் கத்துக்கு, ஒரு கட்சிக்குச் சரியான கட்டுப் பாடு என்று பலதடவை பொது மேடை களில் பேசி அதுபோல் நடந்து வந்தார்.
இன்று சிலர் தாங்கள் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்கு முறைக்கும் விரோதமாக நடந்து கொண்டு கட்சியில் கட்டுப்பாடு இல்லை என்றும், அதேசமயத்தில் தலைவர் சர்வாதி காரியாய் இருந்து கட்டுப்பாட்டைக் குலைக் கிறார்கள் என்றும் பேசி கலவரம் செய்து வருவதைப் பார்க்கிறோம். அந்தக் குணம் நம் பன்னீர் செல்வத்தினிடம் இல்லை. சிலர் தலைவர் என்பதற்கும், சர்வாதிகாரம் என்பதற்கும் பொருள் விளங்காமல் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் இயக்கம் அல்லது ஒரு ஸ்தாபனமாய் இருந்தால் அதில் உள்ள எல்லோருக்கும் தங்கள் இஷ்டப்படி பேசவும் நடக்கவும் உரிமை உண்டு என்பது பொருத்தமாகாது. நீ சர்வாதிகாரம் செய்கிறாய் என்று இங்கு (தஞ்சையில்) ஒரு கேள்வித்தாள் எனக்குக் கொடுக்கிறார்கள். இதற்குச் சமாதானம் சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.
இயக்கத்தின் - ஸ்தாபனத்தின் கொள் கைத் திட்டம் ஆகியவைகளைப் பற்றிச் சர்ச்சை செய்யும் போதும், தீர்மானிக்க விவாதிக்கும் போதும், பேசும்போதும் அதில் (இயக்கத்தில்) உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை இருக்கும். அது முடிந்த பிறகு அதற்கு அடங்கி இருப்பதுதான் கட்டுப்பாடாகும். அதை மீறினவர்கள், குறை கூறுகிறவர்கள் செய்கையும் பேச்சும் கட்டுப்பாட்டுக்கு மாறுபட்ட காரியமாகும்.
ஒரு முதலாளி (எஜமான்) கீழ்இருந்து காரியம் பார்ப்பவர்களுக்கும், ஒரு இயக்கத்தில் ஒரு தலைவன் பின்னிருந்து பின்பற்றுகிறவர்களுக்கும் சுதந்திரம் இருக்க முடியாது. கொள்கைத் திட்டம் முடிந்து விட்டால் பேசாமல் பின்பற்ற வேண்டியது தான். அது தனக்குப் பிடிக்காவிட்டால் வெளியேறிவிட வேண்டியதுதான். வெளி யேறித் தனித்து வாழ முடியாவிட்டால் எதிர்த்துக்கொண்டு இருப்பதைச் சிலர் தங்கள் சமத்து என்று கருதுகிறார்கள். இதனால் இயக்கத்துக்குத் தொல்லை கொடுத்து தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதாகச் சிலர் கருதுகிறார்கள். அது அறியாமை என்பது மாத்திரமல்லாமல் தங்கள் நிலை தாழ்வடைவதையும் அறியாத வர்களாகிறார்கள்.
நம் இயக்கம் ஏதோ சிலர் மாத்திரம் சேர்ந்து தன்னலம் அடையும் (லிமிடெட்) கூட்டுக் கம்பெனியாய் இருந்தால் மாத் திரமே ஒவ்வொரு கூட்டாளியும் உரிமை கொண்டாடலாம். பலரது (பொது) நலனுக்கு என்று சிலர் பொது நலம் கருதி வந்ததாகச் சொல்லிக் கொண்டுவந்து சேர்ந்து அதில் தங்கள் நலனுக்குத் தக்கபடி நடைமுறை இல்லையானால் கலகம் செய்வது என்பதும், அப்படிக் கலகம் செய்து கொண்டு ஸ்தாபனத்தையும், தலை வரையும் கட்டுப்பாடு இல்லை; ஒழுங்கு இல்லை; சர்வாதிகாரம் நடக்கிறது என்பதும் வெறுக்கத்தக்கது என்பதோடு முடியாதது மாகும்.
யுத்தத்தில் சேர்ந்த யுத்த வீரன் ஊதிய மில்லாமல் சேவை செய்பவனானாலும் தளகர்த்தனைவிட அதிகம் தெரிந்தவனா னாலும் யுத்தக் காரியத்தில் தளகர்த்தன் சொல்வதைக் கேளாமல் தளகர்த்தன் சொல்வதைக் தவறு சொல்லிக் கொண்டி ருந்தால் அது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா என்று பாருங்கள். யுத்தத்தில் சேரும்போது யோசித்தே சேர வேண்டும். அல்லது தளகர்த்தன் இன்னான் என்று தெரிந்த உடன் இவன் கீழ் நம்மால் தொண்டாற்ற முடியுமா என்று சிந்தித்துத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இரண்டும் இல்லாமல் தளகர்த்தனை ஏமாற்றி அதிகாரம், கலவரம் செய்து பயன டைந்து விடலாம் என்று கருதி உடுப்பைப் போட்டுக்கொண்டு முன்னணியில் நின்று சலாம் செய்து விட்டு யுத்த முறை தனக்குக் கஷ்டமாய் இருக்கிறது என்று தெரிந்த உடன் தளகர்த்தனை, சர்வாதிகாரியாய் இருக்கிறான், கட்டுப்பாடில்லாதவனாய் இருக்கிறான் என்றால், இப்படிப்பட்ட வர்கள் தன்னைத்தான் ஏமாற்றிக் கொண் டவர்களாவார்கள். இது சாதாரண மக்க ளுக்கும் புரிந்திருக்க வேண்டிய காரியம். ஆசை நேர்மை அறியாது என்பதற்கு ஒப்பாக இப்படிப்பட்டவர்கள் காரியங்கள் இருக்கின்றன. என்றாலும் மற்றவர்கள் நடைமுறைகளை, திட்டங்களை, கொள் கைளை உணர்ந்து தம்மால் கூடுமானால் ஒத்துழைக்கவும், கூடாவிட்டால் விலகிக் கொள்ளவும் பழகிக்கொள்ளவேண்டும்.
தற்கால அரசியல்
மந்திரி பதவி சீக்கிரம் ஏற்படும் என் கின்ற உணர்ச்சியே சிலர் கலவரம் செய்யக் காரணமாகிவிட்டது. முதுகில் ஒரு கையும், காலில் ஒரு கண்ணும் முளைத்தாலும் முளைக்கலாம், சண்டை முடியுமுன் மந்திரி பதவி ஏற்படப் போவதில்லை; ஏற்பட்டா லும் வங்காளம், சிந்து முதலியவை போல் சிரிப்பாய்ச் சிரிக்க வேண்டித்தான் இருக் கும்; நமக்கு ஒன்றும் பலன் இருக்காது. ஆனால், அதனால் நமக்குச் சரியான வேலையும் உற்சாகமும் இருக்கும். சாப்ரூ கமிட்டி என்பது ஒரு ஜாலவித்தையாகும். அறியா மக்கள் அதை மந்திரம், குட்டிச் சாத்தான் வேலை என்பார்கள். அறிந்த வர்கள் அது ஜாலவித்தை என்பார்கள்.
எல்லாக் கட்சி மாநாடாக இருந்து பிறகு அது கட்சி இல்லாதார் மாநாடாகி சாப் ரூவின் தனி முயற்சி ஆகி காந்தி - ஆச்சாரி கூட்டுச் சூழ்ச்சி ஆசீர்வாதம் பெற்றதாகி இப்போது சந்தி சிரிக்கும் தந்திரமாக ஆகி விட்டது. அதைப்பற்றி நமக்குக் கவலை வேண்டியதில்லை.
சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுப் பிரதிநிதி
சென்பிரான்சிஸ்கோ மாநாட்டுக்குச் சர். இராமசாமி முதலியார் பிரதிநிதியாய்ப் போவது தகுதி இல்லை என்று பார்ப் பனர்கள் சொல்லுகிறார்கள். அவர்களது அடிமை தேசியவாதிகளும் ஆமாம் போடு கிறார்கள். சர். ராமசாமிக்குப் பூணூல் இல் லாததால்தான் தகுதி இல்லை என்று சொல் லுகிறார்களே தவிர வேறு அவரைவிட கெட்டிக்காரர், விஷயம் தெரிந்தவர் யார் என்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கவில்லை! இவர்கள் குட்டு வெளியாய்விடும் என்று கருதித்தான் தேசியவாதிகள் ஆட்சேபிக்கிறார்கள். திராவிட நாடு வேண்டாம், பாகிஸ்தான் வேண்டாம் என்று சொல்லி நான் காங் கிரசுக்காரனுமல்ல என்று சொன்னால் சென்பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பப்பட லாம் என்று கருதி சிலர் கரணம் போட்டும் பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் அடைந் தார்கள். (மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ் நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சை, கும்பகோணம் முதலிய பல இடங்களில் நடந்த பன்னீர்செல்வம் நினைவு நாள் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகளின் தொகுப்பு)
- குடிஅரசு - சொற்பொழிவு - 14.04.1945

சோதிடம் - தந்தை பெரியார்



இந்தியாவில் இந்துக்கள் என்ப வர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல் லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண் டெனல், இவை முத லாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத் தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம்.
சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங் களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத் திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகிய வைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.
அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென் பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.
இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930

இந்து மதமும், கடவுளும் தான் சாதியைக் காத்து வருகின்றன

                         

  - தந்தை பெரியார்


நாம் இங்கு எடுத்துப் பேச வேண்டியது திராவிடர் கழகத்தின் கொள்கையாகும். நமக்கு இருக்கும் சாதி இழிவு ஒழிய வேண்டும்; காட்டு மிராண்டித் தனம் ஒழிய வேண்டும் என்பதேயாகும். இந்தச்சாதி இழிவு ஒழிக்க வேண்டிய கவலை வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. இந்த நாட்டில் ஆளும் கட்சி காங்கிரஸ். அதற்கு இந்தச் சாதி இருக்கவேண்டும் என்பதுதான் கொள்கை. ஆளுங் கட்சிக்கே இப்படி என்றால், மற்ற கண்ணீர்த் துளி, சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி எல்லாவற் றிற்கும் சாதி ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து இருக்கப் போகின்றது? ஒரு கட்சிக்காரனும் சாதி ஒழிய வேண்டும் என்று கூறவே மாட் டான், காங்கிரஸ் பார்ப்பனரின் அனு கூலத்துக்காக உள்ளது. மற்றக் கட்சிக் காரன்கள் அத்தனை பேர்களும் தேவடி யாள் மகன் என்கின்ற இழிபிறவிகளின் லிஸ்டில் உள்ளவர்கள்தான். கண்ணீர்த் துளியில் எல்லோருமே அந்த லிஸ்டில் உள்ளவர்கள் தான். மற்றக்கட்சிகளும் அப்படியே. ஏதோ ராஜாஜியின் சுதந் தராக் கட்சியில் மட்டும் சரி பகுதி பார்ப்பன ஆட்கள் இருப்பார்கள்.
காங்கிரஸ் நம்மை ஆளும் கட்சியாக, பார்ப்பான் பாதுகாவலுக்காக உள்ளதாக இருந்தாலும், முதன்மந்திரியாக இருந்து ஆளுபவர் காமராசர் அவர்கள் - இந்த சாதி இழிவு ஒழியவும் நமக்குக் கல்வி யிலும் உத்தியோகத்திலும் இருந்துவரும் குறைபாடுகளை ஒழிக்கப் பாடுபட்டு வருகின்றார்.
காங்கிரசில் சாதி ஒழிய வேண்டும் என்று திட்டம் இல்லாவிட்டாலும், காமராசர் அவர்களது முயற்சியால், ஏதோ ஒருவாறு சாதி ஒழிந்தே தீரும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை சாதி ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிந்தால்தான் முடியும் என்பதாகும். இஸ்லாம் மதம் என்றால் சாதி வித்தியாசம் கிடையாது. கிறிஸ்தவம் மதம் என்றால் அவர்களுக்கும் சாதி இல்லை. ஏதோ இந்த நாட்டில்தான் இந்நாட்டுக்கு தக்கவாறு பாதிரிகளின் போக்கினால் இங்கு பறை கிறிஸ்தவன், பார்ப்பார கிறிஸ்தவன் இருக்கின்றான்.  வெள்ளைக் காரனில் சாதியில்லை. பறை வெள்ளைக்காரன், பாப்பார வெள்ளைக் காரன் கிடையாது, முஸ்லிமிலும் பறை முஸ்லிம், பார்ப்பார முஸ்லிம் கிடையாது.
அதுபோலவே, நாமும் ஏன் சாதி யொழிந்த சமுதாயமாகக் கூடாது? ஏன் இழிசாதியாக இருக்கின்றோம் என்றால், நம் கடவுள் காரணமாகத்தான். முஸ்லிம்களின் கடவுளின் பேரால்சாதி கிடையாது. கிறிஸ்த வனிலும் கடவுளின் பேரால் சாதி கிடை யாது. நமக்குத்தான் மத அடிப்படையில் சாதி இருக்கின்றது.
நமது கடவுளும் மதமும் ஒழியாத வரை சாதி ஒழியாது. முஸ்லிமுக்குச் சாதி இல்லை என்றால் கடவுள்களை எல்லாம் உடைத்த வர்கள் ஆவர்.
நாம் ஏன் இழிபிறவியாக, கக்கூஸ் எடுப் பவர்களாக, சிரைப்பவர்களாக? வெளுப்ப வர்களாக இருக்கின்றோம் என்றால் எதன் காரணமாக! சாதியின் காரணமாகத்தானே?
நமக்கு மானம் வெட்கம் இருக்குமா னால், நம்மை இழி பிறவியாக வைத்து இருக்கும், நாம் தொட்டால் செத்துப் போகும் என்று கூறும் சாமியைக் கும்பிடுவார்களா?
நாம் தொட்டால் செத்துவிடும் என்று கூறுகின்ற கோவிலுக்குச் சென்று ஏன் மானம் கெடுகின்றாய்? என்றுதான் கேட்கின்றோம்.
கோயிலுக்குப் போகாததினாலேயோ, கல்லைக் கும்பிடாத தினாலேயோ, நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆகிவிட மாட்டீர்கள். கோயிலில் என்ன இருக்கின் றது? குழவிக் கல்லுதானே இருக்கின்றது? அங்கு என்ன வாழுகின்றது? படுத்துக் கிடக்கும் குழவிக்கல்லை நிமிர்த்தி வைத் தால் அதுதான் சாமியா?
இப்படியே நாம் கோயிலுக்குப் போய்க் கொண்டும், கல்லைக் கும்பிட்டுக் கொண் டும் இருந்தால், நாம் எப்போது சாதி இழிவு ஒழிந்தவர்களாக ஆவது?
பரம்பரை இழிவு நீங்குவதெப்போ?
பறையன் சக்கிலி இன்று நேற்றா இருக்கின்றான்? ராமாயணம் பாரதம் மற்ற மற்ற புராணங்களில் எல்லாம் உள்ளது. இந்த இழிவு நீங்க வேண்டாமா? எனவே மாரி யாத்தாள் முதற்கொண்டு எந்தக் கடவு ளையும் கும்பிடக்கூடாது. கடவுள் எல்லாம் சாதிக்காக செய்துவைக்கப்பட்டதாகும்.
பேருக்குத்தான் மனிதன் சாமி சாமி என்று கட்டிக்கொண்டு அழுகின்றானே ஒழிய, ஒருவன்கூட உண்மையில் சாமியை நம்புவது இல்லை - ராத்திரியில் எல்லாரும் வீட்டுக்குத் தாழ்போடுகின்றான் - ஏன் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று போடாமல் இருப்பதில்லை.
இரண்டு ரூபாய்பணம் இருந்தாலும் பெட்டியில் வைத்து, இரண்டு தடவை பூட்டை இழுத்து இழுத்துப் பார்ப்பானே ஒழிய, கடவுளே பார்த்துக் கொள்வார் என்று இருப்பதில்லை.
பண்டார சன்னதி சங்கராச்சாரி முதல் எவரும் சாமிக்கும் பயப்படுவதில்லை. கொட்டை கட்டிக்கொண்டு பட்டை போட் டுக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம், உள்ளே அயோக்கியர்களாகவே இருப் பார்களே ஒழிய, ஒழுக்கத்தைப் பார்க் கவே முடியாது.
நடுவில் திருடன் பூட்டை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்து சாமியின் பெண்டாட்டியினுடைய நகைகளையும் புடவையையும் அவிழ்த்துக்கொண்டு அம்மன் சாமியையும் குப்புறத்தள்ளி விட்டு போகின்றவனை, இந்தச் சாமி என்ன செய்கின்றது? தன்மனைவியின் சேலையை இழுத்து அவிழ்ப்பவனை நிறுத்தி தன் மனைவியின் மானத்தைக் காக்காத கடவுளா உனக்கு உதவப் போகின்றது?
அதுபோலவே நம் மதமும் ஒழிய வேண்டும்; நமக்கு என்ன மதம் அழு கின்றது? சாம்பல் அடித்துக் கொள்வதும், செம்மண் பட்டையும் சுண்ணாம்புப் பட்டையும் அடித்துக் கொள்ளு வதைவிட வேறு என்ன உள்ளது? என்று எடுத்துரைத்தார்கள். மேலும் பேசுகை யில் நமது காட்டுமிராண்டித்தனமும் சாதி இழிவும் நீங்க நாம் கைக்கொள்ள வேண்டிய காரியங்கள் பற்றியும் முதல மைச்சர் காமராசர் ஆட்சி இன்னும் 10 ஆண்டாவது நிலைத்து இருக்க வேண்டி யது பற்றியும், அவர் கல்வி, உத்தியோகம் முதலியவற்றால் நமக்கு ஆற்றி வரும் நன்மைகள் பற்றியும் விளக்கிப் பேசி னார்கள்.
திருச்சியில் 13.11.1960 இல்  தந்தை பெரியார் ஆற்றிய  உரை (விடுதலை,18.11.1960)


ஞாயிறு, 05 ஜூலை 2015  ,விடுதலை

வியாழன், 2 ஜூலை, 2015

தமிழும்,தமிழர் முன்னேற்றமும்




தந்தை பெரியார்
தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.
மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.
உதாரணமாக மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத் திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?
இனிப் பள்ளிக் கூடப் பிள்ளை களுக்குத் தமிழ் இலக்கியத் துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மததத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப் பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ் சியங்களும் அல்லாமல் வேறு இலக் கியங்கள் காணப்படுகின்றனவா? பண்டி தர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம் தானே அதிகமாயி ருக்கின்றது?
மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால், இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ் பியர் வேண்டும் என்பானாம். தமிழன் எதைக் கேட்பது?
இந்தியா வேண்டுமா? கம்பராமா யணம் வேண்டுமா? என்றால், உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.
மேல் நாட்டில் தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறி வாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.
மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்த மின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால்  நுற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.
கீழ்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக் கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள், சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக் கும் பொதுவான இலக்கியம், ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும்மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக் கியம் ஆகியவை மூலம்தான், ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத் திரமல்லாமல், அதைக் கையாளும் மக் களும் ஞானமுடையவர்களா வார்கள்.
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக் கிறதாகச் சொல்லுகிறார்களே இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது! தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரி யாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக் களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
தமிழ் மொழியின் பெருமை பரம சிவனுடைய படைப்பினால் வந்த தென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லிவிடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதினிடை விடுத்த தாலும், முதலை உண்ட பாலனை அழைத்த தாலும் எலும்பைப் பெண்ணாக்கின தாலும், தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத் தான் பயன்படும்.
பரமசிவனுக்கு உகந்த மொழி தமிழ் என்றால் - வைண வனும், முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இன்று தமிழ் நாட்டில் வந்து, தமிழ் கற்று, வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்கள் தானே, இந்தி பாஷை இந்தியப் பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள்? கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்திமயமாக வேண்டும் என்கிறார்களே. காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்.
தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா லோர்க்கு இதைப் பற்றி சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல் வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் கோபத்துக்கும் பயந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ் கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ்மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்ப தில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள்தான் சத்தம் போடுகிறார்கள்.
ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜ்கள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரி களும் பாடுபடுகின்றார்களே! நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல் வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.
தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ்மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக் கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்ப தில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதர வளிப்பது மில்லை. தற்கால நிலைக்குத் தமிழ் போதியதாகவும் சவுகரியமுள்ள தாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்?
மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன.
எழுத்துக் களில் எவ்வளவு மாறுதல் செய்து வரு கிறார்கள்! ரஷ்யாவில் சில பழைய எழுத் துக்களை எடுத்துவிட்டார்கள். புதிய எழுத் துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய ஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்து விட்டு ஆங்கில எழுத்துக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றி கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண் டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்.
தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ ராவது, அம்முயற்சிக்கு ஆதரவளித்த வர்கள் அல்ல.
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் தகுதி உள்ள வேறு எவரும் வெளிவராவிட்டால் என்செய்வது?
ஆனாலும், நான் அம்முறை யிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே பல புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வ ளவோ செய்ய வேண்டி இருக்கிறது, இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப் பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத் தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு அதரவு அளித்தார்கள்.
எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றிய மையாதது. அதன் மூலம் தமிழ்மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.
தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானது மான பண்டிகைகள் கொண்டாடு வதை விட, இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக் கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல மாகத் திருநாள்களைப் பரப்ப வேண்டும்.
நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் - தீபாவளியும், மாரிப்பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்.
இந்தப் பண்டிகையால் தமிழர் முன்னேற முடியுமா? சுயமரியாதை உணர்வுகள் வந்திருந்தால் தான் முன்னேற முடியும்.
தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை,  (விடுதலை 28.6.1964)