புதன், 7 டிசம்பர், 2016

பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!


கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காரு வதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்!

கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலை வேறு!

முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறாதுழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை!

பிந்தியது, உயர்ந்தபட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலு பேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச் சவாரி செய்தாலும், உட்கார்ந்து செல்லும்போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறு வேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல. பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!

இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!

பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப்பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ்செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம்பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப்பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர்வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!

அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர்களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால், மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனையில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங்களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியதுதானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!

அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப்பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல்லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது!  யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர்களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! தோளோடு தோளிணைத்து நாட்டுக்குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்த மாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள். அப்போது பல தீர்மானங்களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட்டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவதாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண்டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்யவேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.

இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்பதினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்யவேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்தபடியாக, மாகாணத் திற்கு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளிலிருந்து தெரி கிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந் திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெருமான் அவர்கள். இந்தப் பெருமான்தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக் காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க்காரான, மாகாண மந்திரி சபையினருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந்தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!

ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரையாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார்களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப்படுகிறோம்! பார்ப்பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென்கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறை வேற்றியும் விடலாம்.

ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம் பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந்தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங்கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத்திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடுகின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித் திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லாதிருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்!

‘குடிஅரசு' - தலையங்கம், 26.02.1949
-வடுதலை,4.12.16

வியாழன், 1 டிசம்பர், 2016

சாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே


தந்தை பெரியார்

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால் தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறை பாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல் லாரும் சூத்திரர்கள்தானே, ராஜாக்கள் எல்லாரும் சூத்திரர்கள் தானே? பணம் மட்டும் சேர்ந்துவிட்டால் சூத்திரப் பட்டம் போய் விடுமா?
மனித சமுதாயத்தின்  மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை  ஒழிப்பதற் காகவும், மற்ற நாட்டு  மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமுதாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம்  மக்களுக்குள்ள இழிவு களைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத்துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே,  திராவிட மக் களுக்கு இழைத்த கேடுகளை  ஒழிக் கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரசார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.
அம்மாநாட்டிற்குத் தலைமை தாங் கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி. பி. மல்லலசேகரா) மாநாட் டைத் திறந்து வைத்தவர். எல்லா இந்திய தாழ்த்தப்பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம்பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப் போது இங்கு ஷெட்யூல்வகுப்பு ஸ்தாபன
சார்பாக மாலையிட்ட நண்பர்.
நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங் களை ஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்புமாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று கருதுகிறேன்.
ஜாதி ஒழிப்பு என்பதும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழிய வேண்டும் என்று ஏன் கூறுகி றோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்ட தாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கிவிடும்.
இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட் டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் அத்தனை ஜாதி களும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத் தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திர மான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும்.
இன் றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான். இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர் களும் இருக்கின்றனர்.
நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.
சில பார்ப்பன அடிமைகள் திராவி டர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள்.
பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல்லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப்படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்ம வனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப் படி முஸ்லிம் என்கிறான்.
பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட் டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.
ஆச்சாரியார் புதுக் கல்வித்திட் டத்தைக் கொண்டு வந்ததன் நோக்க மென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்திரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்றுமில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை.
வருணாசிரம முறைப்படி, நாம் படிக் கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்து விட்டோம். அந்தப்படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை சாமி என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் சாமி என்கிறார்கள். அதுவும் மாறிக் கொண்டு வருகிறது.
திராவிடர்களாகிய நாம் இங்குக் குடி புகுந்த அந்நியனை பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று என்று சொல் கிறோம். சர்க்காரால் (அரசால்) ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேரு வும் சென்னைப் பிரதமர் ஆச்சாரியாரும், பார்ப்பனரே வெளியேறு என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகி விடுமே என்று பயப்படுகிறார்கள்.
ஏன்? பார்ப்பானே வெளியேறு என்பதற்கும் வெள்ளையனே வெளியேறு என்பதற்கும் சிறிதும் வித்தியாச மில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக்காரனாம். உழைத்து உண்பவர்க ளாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல்ஜாதிக்காரனே வெளியேறு என்கி றோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்தி வந்தோம்.
வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித்தனமாக  ரயிலைக் கவிழ்த்துத் தண்ட வாளத்தைப் பிடுங்கினதாலே வெள் ளையன் இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதி காரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால் தான் இவனுங்களுக்குப் பாப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள் என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான்.
அதுவும் வெள் ளைக்காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி நம் நாட்டுக்கு அனுப்பிக் கொண் டிருந்தால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்துகொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு  மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான்.  பிரசி டெண்ட் (குடியரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம்.
ஒரு சாதாரண புரோகிதகுடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்கார னிடம் சாவிவாங்கியதும் சம்பளம்மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு  500க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா.
இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளை யடிக்கிறார்கள். சுகவாழ்வு வாழ்கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள் ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக் காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கி னார்கள். நாலணா தந்தியைப்  பனிரெண் டணா ஆக்கினார்கள்.
மைலுக்கு 3 காசு; 4காசு ரயில் சார்ஜ்  (கட்டணம்) 5-6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில்செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில் தான் செய்ய வேண்டும். 1/2 நாள் தான் படிக்கவேண்டுமாம்.
இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கி விட்டார்கள். ஆகையால்தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க் கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால் தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம்.
உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழு மைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும், என்று சொல்லு கின்ற ஒரு ஆள்-ஒரு கழகம் இருக்கிற தென்றால் திராவிடர் கழகமும் நாங்களும் தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர சாதி ஒழிய வேண்டும்.
என்று சொல்பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானா கட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தி யார் சாதியைக் காப்பாற்ற வேண்டும். அது நீடித்திருக்க வேண்டும். என் மூச்சே வருணாசிரமம் காப்பற்றப் படத்தான்
என்று தானே சொன்னார்.
தீண்டாமை ஒரு வழக்கம் தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்துவிட்டதால் சக்கிலி வேறாய் விட் டானா? நமக்குத் தீண்டாமை இல்லை யென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய்விட்டதா?
டெல்லி ஆட்சியின் அரசமைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை ஜாதி  ஒழிக என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக்கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர் தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர்கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர் தான் அரசமைப்புச் சட்டகர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார் களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் சலுகைகொடு என்றுதான் கேட்டார்.
உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்துவிட்டான். அவர்களின் விகிதாசாரப் படி 100க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன் என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டி களைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான்தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப் பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம்.
எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதைப்பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்ப தாகப் பித்தலாட்டம் செய்கிறான்.
தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப் பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! அராசங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளா திருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத் கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத் கருக்கு உயிர் மேல் கவலையில்லையென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந் தாலும் ஒன்றிரண்டு நன்மைகளாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத் துப்போட்டார் என்பதாக அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத் தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சிசெய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.
ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால் தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறை பாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர்களெல் லாரும் சூத்திரர்கள்தானே, ராஜாக்கள் எல்லாரும் சூத்திரர்கள் தானே? பணம் மட்டும் சேர்ந்துவிட்டால் சூத்திரப் பட்டம் போய் விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல் லாரும் சூத்திரர்கள்தானே.
பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே சூத்திரப் பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர்களெல்லரும் சூத்திரர்கள் தானே? சாதிஒழிய சூத்திரப்பட்டம் போக நாங்கள் தானே பாடுபடுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களி னால், புராணத்தினால், கடவுளால் ஏற் பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்.
தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லு கிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித் தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவ ராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள் தான் அவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.
தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு சூத்திரன் என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழியமுடியும்.
24-2-1954 ந் தேதியன்று  சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு: (விடுதலை 27-2-1954)
விடுதலை 31-5-15

சித்திரபுத்திரன் பேரேடு!


கேள்வி விடை
கே: கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது.
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது
கே: ஏன்?
வி: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை, பணம் கேட்பதில்லை, உத்தியோகம் கேட்பதில்லை, பதவி கேட்பதில்லை, பட்டம் கேட்பதில்லை. அதுமாத்திர மல்லாமல் அதில் சேர்ந்தவர்களெல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எது அதிகக் கெடுதி?
  • மக்களைக் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்கு கெடுதி என்று சொல்வதனால், கோவிலுக்குப் போகும்படி சொல்லு கின்ற வர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.
  • கோவிலை இடிக்கின்றவர்களை விட கோவில் கட்டுகின்றவர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.
  • கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.
  • -விடுதலை,15.5.15