திங்கள், 9 ஜனவரி, 2017

தந்தை பெரியார் பார்வையில் பொங்கல்!


-  தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன் மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,

“தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கை தான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்ப மடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது?’’

என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக் கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடை யில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண் டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகைகளைப் போற்றிக் கொண் டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

450 பொங்கல் வாழ்த்து

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு கூற வேண்டு மானால், இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத் திரம் 450-க்கு மேற்பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)

இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத் தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திர மல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்களை சேர்ந்தவர் களாகும். இந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண் டாடியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண் டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளி யையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளையும் வெறுத்து விலக்கி இருப்பது மகிழத் தக்கதாகும்.

தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண் டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக் கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மை யாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றி யறிவித்துக் கொள்ளக் கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன் வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந் ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது  - பொங்கல் பண்டிகை யினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலை பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர் களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக் குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை, கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமி ழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள் ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் கால மும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் தொடக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரி யர்க்கு உயர்வும் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு இழிவும் ஏற்படு வதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர் களுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வருவதானவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவை கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்மநூல், நெறி நூல் என்று சொல்லப்படுபவைகளாகும்.

இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும் ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர் களையும் அறிவற்ற தமிழ் மடையர்களை யும் பல தந்திரங்களால் மானம், அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலியவை சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத் தத்திலும் கலக்கும்படி செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாத வனுக்கு ஜட்ஜூ பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலிய வைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கி யனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளி யாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுபவன் - கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலைகுலைந்து கீழ்மைப் பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவி லிருந்தும் பிறவி அடிமைத் தன்மையிலிருந்தும், முன் னேற்றத் தடையிலிருந்தும் என்ன விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவது, அதற்காக தொண்டாற்றி மடிவது என் வாழ் நாளினு டையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமா யணம், கீதை, பாரதம் ஆகியவை களைத் தமிழர்களு டைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது முக்கிய, முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங் கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை, முதலியவை களுக்குப் பதிலாக ஒருநெறி, கலை, வழி காட்டுவதற்கு என்று குறளைக் காட்ட வேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

“குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழமாட்டானா? வாழ முடியாதா?’’ என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம்; ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால் ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக, கடை மனிதனாக ஆக்கப்பட்டு விட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள் ளும்படி செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவதற்கு ஒரு சாதனம் விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமி ழனுக்கு இருக்கும் இழிவை - கடைத் தன் மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும்  அறிவு வருவதற்குக் குறளைத் தூண்கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

எனது பொங்கல் பரிசு!

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்?  பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்கு ஆக வேண்டும்? என்பதை மனிதன் மான முள்ள, அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் - திராவிடன் சிந்திக்கட்டும் என்பது தான் எனது வேண்டுகோளும், ஆசையு மாகும். ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங் களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.

ஆகவே இந்த ஆண்டு - பொங்கல் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டதே யாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவை போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந் தார்கள். அப்படியே பாரதம், கீதை, இரா மாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாக கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும், குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்கு பதிலாகப் பொங்கலை யும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங்களை - கீதை, இராமாயணம், பாரதம் ஆகியவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச்செய்து விட்டு அதற்குப் பதிலாக அவை இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால் தமிழர்களுக்கு இப்பொங் கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக் கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது காணிக் கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு, அன்புக்கு, நம்பிக்கைக்கு “தட்சிணை’’ யாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக்கையை தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டுமானால் குறைந்த அளவு என்பால் அருளும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்ட வேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள்கூர்ந்து - கருணைகூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளி யாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்.

உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காண வேண்டுமானால் அவன் பார்ப் பனப் பத்திரிகையை வாங்காதவன்  -  ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத் திற்கும் முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.

தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப் பதற்கு பாரதம், இராமா யணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கிய காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்ப தற்குக் காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகை களேயாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங் கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும் தான். அதாவது,

1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி பொங்கல் விழாக் கொண் டாடுவது.

2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலி யவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்று படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.

3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமி ழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.

பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலையங்கம் பின்னால் எழுத இருக் கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதா வது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.

பொங்குக பொங்கல்!

பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!

(‘விடுதலை’ 19.01.1949)

-விடுதலை,8.1.17

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன்


உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல் வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லு வதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படு கின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதார மிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக் கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக் கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மை யை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந் தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படு கின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

-  குடிஅரசு - கட்டுரை 19.10.1930

தந்தை பெரியார் பொன்மொழி

மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

-விடுதலை,23.8.14

இந்தியா அடிமைப்பட காரணம்?

 

- சித்திரபுத்திரன்

கேள்வி : நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

பதில் : நமது மதமும் ஜாதியும்.

கேள்வி: நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடுபட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

பதில் : மதமும் ஜாதியும்.

கேள்வி : நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?

பதில் : வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்கு கிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

கேள்வி : எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?

பதில் : வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

கேள்வி: கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

பதில்: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

கேள்வி : மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.

கேள்வி : உண்மையான கற்பு எது?

பதில்: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

கேள்வி : போலிக் கற்பு என்றால் எது?

பதில்: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற் குப் பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

கேள்வி : மதம் என்றால் என்ன?

பதில்: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.

கேள்வி : தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப் படுகின்றது?

பதில்: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.

கேள்வி : பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

பதில்: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

கேள்வி : மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.

கேள்வி : பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?

பதில்: தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.

கேள்வி: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)

கேள்வி: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?

பதில்: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.

கேள்வி : பெரிய மூடன் யார்?

பதில்: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.

கேள்வி : ஒழுக்கம் என்பது என்ன?

பதில் : ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.

கேள்வி : சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

பதில்: மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத் துவதுதான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

கேள்வி: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

பதில்: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப் படுகிறது.

கேள்வி : ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பதில்: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.

கேள்வி : நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திர முள்ள ஜனசங்கை பெருகும்.

கேள்வி : நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?

பதில் : நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.

கேள்வி : இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

பதில் : இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.

கேள்வி : கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளு கிறார்கள்?

பதில்: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதிலும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமுமாகும்.

கேள்வி : பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?

பதில்: மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப் பனர்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம் பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.

கேள்வி : ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

பதில்: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

கேள்வி : பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.

பதில்:  அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

கேள்வி : பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?

பதில் : கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங் குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி : கடவுள் ஏன் காண முடியாதவராயிருக் கிறார்?

பதில் : அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.

கேள்வி : கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில் : ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

குடிஅரசு - கேள்வி பதில் - 15.01.1949

-விடுதலை,1.1.17