ஞாயிறு, 1 ஜனவரி, 2017

இந்தியா அடிமைப்பட காரணம்?

 

- சித்திரபுத்திரன்

கேள்வி : நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

பதில் : நமது மதமும் ஜாதியும்.

கேள்வி: நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடுபட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

பதில் : மதமும் ஜாதியும்.

கேள்வி : நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?

பதில் : வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்கு கிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

கேள்வி : எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?

பதில் : வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

கேள்வி: கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

பதில்: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

கேள்வி : மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.

கேள்வி : உண்மையான கற்பு எது?

பதில்: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

கேள்வி : போலிக் கற்பு என்றால் எது?

பதில்: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற் குப் பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

கேள்வி : மதம் என்றால் என்ன?

பதில்: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.

கேள்வி : தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள் களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப் படுகின்றது?

பதில்: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.

கேள்வி : பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

பதில்: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

கேள்வி : மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.

கேள்வி : பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?

பதில்: தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.

கேள்வி: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)

கேள்வி: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?

பதில்: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.

கேள்வி : பெரிய மூடன் யார்?

பதில்: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.

கேள்வி : ஒழுக்கம் என்பது என்ன?

பதில் : ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.

கேள்வி : சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

பதில்: மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத் துவதுதான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

கேள்வி: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

பதில்: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப் படுகிறது.

கேள்வி : ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பதில்: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.

கேள்வி : நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திர முள்ள ஜனசங்கை பெருகும்.

கேள்வி : நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?

பதில் : நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.

கேள்வி : இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

பதில் : இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.

கேள்வி : கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள் கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளு கிறார்கள்?

பதில்: கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதிலும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமுமாகும்.

கேள்வி : பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?

பதில்: மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப் பனர்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம் பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.

கேள்வி : ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

பதில்: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

கேள்வி : பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.

பதில்:  அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின் றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

கேள்வி : பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர் களுக்கு வழி என்ன?

பதில் : கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங் குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி : கடவுள் ஏன் காண முடியாதவராயிருக் கிறார்?

பதில் : அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.

கேள்வி : கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில் : ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

குடிஅரசு - கேள்வி பதில் - 15.01.1949

-விடுதலை,1.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக