வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம்! சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!

இந்தி மொழியில் மெச்சத்தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலையாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமும்தான். மனுதர்மமும் தெரியுமே, உங்களுக்கு? இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால் நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும் அவரது அய்யாவையுந்தான் குறிப்பிடவேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்கை அடிப்பது (உங்களுக்குத் தெரிந்தது) தான். வேறு ஆள்களைக் குறிப்பிடமுடியாது.

தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முக்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது. இந்தியில் கலையில்லை. காவியமில்லை, நீதிநூல் இல்லை, நீதிமான்களையும் தோற்றுவிக்கவில்லை. அம்மொழி மூலம் அறியக்கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை.

ஆகவே, 100க்கு 97 பேர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? காரணம் தெரியுமா? இங்குள்ள வைத்தியநாதய்யர், வரதாச்சாரியாரின் கோஷ்டியார் இத்திராவிட நாட்டின் கலைகளையும், கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து இந்நாட்டை, வடநாட்டுக்கு வால்நாடாக்கப் பார்க்கிறார்கள், அதுதான் மர்மமே ஒழிய, இந்தி தேசிய மொழி, ஆகவே எல்லோரும் படிக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம் முழுப் பித்தலாட்ட வார்த்தைகள், இந்தி தேசிய மொழியாயின் எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆகவேண்டும் என்று வெளிப் படையாகக் கண்டிப்பாகக் கூறி விடட்டுமே. 

இந்தி, சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே அது ஏன்? இந்தி தேசிய மொழியா? சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள்கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை அறியுங்கள்.

தேசியம் என்பது ஒரு பித்தலாட்டம்

தேசியம் என்பதெல்லாம் பித்தலாட்டங்கள், வடமொழியை நுழைத்து அதன் மூலம் வர்ணாஸ்ரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிடர்களை சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக்கொள்ள வைத்தியநாதய்யர், வரதாச்சாரிக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. 

நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக சண்டாளர்களாக, நமது கிருஸ்துவத் தோழர்களையும், முஸ்லீம் தோழர்களையும் மிலேச்சர்கள் ஆக வைத்திருக்க செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.

இந்த சூழ்ச்சிகளுக்கு நமது அமைச்சர்கள் விபீஷணர்களாக ஆகிவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இந்தி நுழைவால் உண்மைத் தமிழ் மக்களுக்கு எவ்விதப் பயனும் ஏற்படாது. கடுகளவு பயன்கூட ஏற்படாது. அதற்கு மாறாக எவ்வளவோ கேடுகள் வந்து சூழும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் போற்றிக் காப்பாற்றி வந்து இடைக்காலத்தில் கைவிட்டு தற்போது வெகு கஷ்டப்பட்டு பெற்று வளர்ந்துவரும் தமிழ்ப் பண்பு அடியோடு கெட்டுப்போகும், கன்னியாதானம் என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தது. மாங்கல்யதாரணம் என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டியிருந்தது? மற்றும் தேவையில்லாத சடங்குகள், புராண இதிகாச குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக்கடவுள் இவற்றின் மீதும் இருந்து மூடநம்பிக்கையையும், மூடப்பக்தியும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது?

முற்போக்கு மீண்டும் அழிவதா?

இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுவீர்களா? சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு திராவிடன் என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள் மறுபடி சூத்திரர்களாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் ஆரியக் கூட்டம், பார்ப்பனக் கூட்டம் வடநாட்டாரின் கூலிகளாகி அவர்களுக்கு வால் பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு தேசிய மொழி என்ற பேரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால், நம்மை, நம் நாட்டை வடநாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நான் அதற்கு இடம் கொடுக்கலாமா?

(17.07.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பாளர் மாநாட்டில் பெரியார் உரை)

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமை கொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை - அத்தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் - ஈனப்பிறவி ஆக்கினர். 

அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சடடம் செய்து கொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் -_ அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி _ அதன்மூலம் ஆரியர் கருத்துக்களைப் புகுத்தி - அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்கிறார்கள்.

ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துக்களை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறிவந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில் கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரிகளில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காக போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்ப்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துக்கள்தாம் வளர்ச்சியடையுமே யொழிய -_- ஆபாச அறிவுதான் வளர்ச்சி யடையுமேயொழிய _- பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப் படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய் விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில் -_ உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துக்களை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு) _ ‘விடுதலை’, 16.1.1950

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும்; சுரண்டமுடியும்; நம்மைக் கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக - விழிப்போடு காரியம் செய்துவருகிறார்கள்.

இல்லாவிட்டால், உலகம் பூராவும் சுற்றி வருகிற சசிவோத்தம சர்.சி.பி. இராமசாமி அய்யர், சமஸ்கிருதந்தான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்கவேண்டும் என்று பேசிவருவாரா? அதுமட்டுமா? தமிழைத் தாய்மொழி என்று கூறுகின்ற பார்ப்பனரைக் காணமுடிவதில்லையே! தப்பித் தவறி எங்காவது ஒன்று இரண்டு சுட்டிக்காட்டுவீர்களானால் அது வயிற்றுப்பிழைப்பைக் கருதி அப்படி உதட்டளவில் கூறிய பார்ப்பனனாக இருக்கும், அவ்வளவுதான்.

- தந்தை பெரியார், ‘விடுதலை’, 15.2.1960
-உண்மை இதழ், 1-15.9.17

செவ்வாய், 3 அக்டோபர், 2017

மக்களை 'மனிதத் தன்மை'யுள்ளவராக்க எந்த 'விலை' கொடுக்கவும் தயாராவோம்!



பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியயோர்களே! தோழர்களே! நான் விருதுநகருக்கு வந்து இரண்டாண்டுகளாகின்றன. இந்தக் குறள் மாநாட்டுக்கு வந்த எங்களை இங்கே அழைத்து கழக தோழர்கள் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். நான் வந்து சென்ற இந்த இரண்டாண்டு இடைக் காலத்தில் உங்கள் திராவிடர் கழகம் சம்பந்தமான கூட்டங்கள் பல நடந்திருக்கக் கூடும். எனவே நான் திராவிடர் கழகத்தைப் பற்றியும், அதன் கொள்கைகளைப் பற்றியும் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இந் நாட்டில் அநேக கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சில திட்டங்களை வகுத்துக் கொண்டு அதை மக்களிடம் சென்று, கூறி ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம் பதவிகள் வகிப்பதுமாகும். திராவிடர் கழகம் அவ்வித அரசியல் கட்சிகளில் சேர்ந்ததல்ல. அது ஒரு இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத் துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவ தென்பது இல்லாமல் மக்களிடம் சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்நிலைக்கு மக்களிடம் மனமாற்ற மடையும் வகையில் பிரசாரம் செய்வதுமாகும். மந்திரி களாவதோ அல்லது பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்குச் சீக் கிரத்தில் நல்லவர்களாகி விடலாம்; தேச பக்தர்களாக, தியாகிகளாக, தீரர்களாக ஆகிவிடக்கூடும். ஏனெனில் மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது ஓட்டு வாங்கும் நேரத்தில், என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ அவைகளை வாய் கூசாது பிர மாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்ச மேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளாமல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்.

ஆனால் இயக்கம் என்று சொல்லக் கூடிய தன்மையிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார் மக்களிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இதனால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக தேசத் துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம், மனிதத்தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக் கிறோமோ அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந் திருக்கிறோம். எனினும் நாங்கள் இதற்காக அஞ்சி ஒதுங்கிவிடவில்லை ஏன்? எங்களுக்கு மக்களின் பொய்யான ஆதரவு இன்றே கிடைத்து அதன் மூலம் அரசியல் ஆதிக்கம் பெற வேண்டுமென்ற எண்ணத்திலிருப்பவர்களல்ல. எனவேதான் எங்கள் மருந்து சற்று கடுமையாயினும் நிதானமாகவே அது நிரந்தரமான பலன் தரட்டும் என்று நானும் என்னைச் சார்ந்த தோழர்களும் பொதுப் பணியாற்றி வருகிறோம். இதுதான் திராவிட இயக்கத்திற்கு உள்ள முக்கிய பண்பாடாகும்.

திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து, மந்திரி பதவிகளில் அமர்ந்திருந்தால்கூட இன்றைய நிலையில் மக்களுக்கு ஒரு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவாரமில்லாத கட்டிடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளைப் பகுத்தறிவற்ற தன்மையை , மூடப்பழக்க வழக்கங்களை, வைதீக மனப்பான்மையை, ஜாதி மதவெறியை, அறவே ஒழித்து அனைவரையும் அறிவுள்ளவர்களாக்காத வரையில் எப்பேர்பட்ட ஆட்சியா யிருப்பினும் அது நீடித்து இருக்க முடியாது; நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லா விடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா? இதற்கு ஆதாரமாக நாம் கண்கூடாகக் கண்டு விட்டோமே. சுயராஜ்யம் வந்த பின்னர்தானே, சுயராஜ்யம் வாங்கித் தந்தவர் என்று எந்த கூட்டம் புகழ் பாடிற்றோ, அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் காந்தியாரைச் சுட்டுக் கொன்று விட்டான். அரசியல் அதிகாரம் கைக்கு வந்து அதற்கு அடிப்படையாக வேண்டிய அறிவுடைமை இல்லாததின் பலனல்லவா இது? எனவே தான் நமக்கு உண்மையான சுயராஜ்யம் வர இன்னும் சில ஆண்டுகள் காலதாமதம் ஆனாலும், மக்கள் பகுத்தறிவு பெற வேண்டுவதே முதலாவதான முக்கிய கடமை என்பதைத் திராவிடர் கழகம் வலி யுறுத்திக் கூறி பணியாற்றி வருகிறது.

திராவிடருக்கு முக்கியம் வேண்டுவது எது? திராவிடர் யார்? என்று கேட்கும் போது நாட்டை ஆண்ட நாகரிக மக்களாகிய திராவிடர்கள் இன்று சூத்திரர்களாய், பஞ்சமர்களாய், அடிமைகளாய் வாழும் நிலைக்கு வழிவகுத்துள்ள இதிகாசங்களும், கதைகளும், புராணங்களும் அறவே அழிக்கப்பட வேண்டும். மேல்ஜாதி, கீழ்ஜாதி, ஏழை, பணக்காரன், மோட்சம், தலைவிதி, என்பன போன்ற மூடக் கற்பனைகள் மனித சமுதாயத்திலிருந்து மறைய வேண்டும். பொதுவாக பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டு வாழும் இழி நிலை வெகு விரைவில் ஒழிக்கப்படவேண்டும்.

தவிர, திராவிடர் யார், ஆரியர் யார் என்பதை நான் ரத்தப் பரீட்சை அடிப்படையாகக் கொண்டு கூறவும் முன் வரவில்லை. ஆனால் திராவிட பெருமக்களாகிய நம்மை சூத்திரன், பஞ்சமன் என்றும், இங்கே பிழைப்புக்கு ஓடிவந்த அந்நியர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள் என்று சட்டமும் சாஸ்திரமும் கூறுகின்றன. இதனால் நமக்கென்ன. நஷ்டம் என்று சிலர் கேட்கக் கூடும் அந்த மேல்ஜாதிக்காரன் என்ற காரணத்தாலேயே பார்ப்பனர்களுக்குச் சமுதாயத்தில் தனிச் சலுகை. அவனுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே யில்லை. ஆனால், அதே சமயத்தில் அவர்களுக்குத்தான் உல்லாச சல்லாப வாழ்வு. 100-க்கு 99 பேர் அவர்கள் கல்வி கற்றுள்ளார்கள். நம்மில் 100-க்கு 10 பேர் கூட சரிவரக் கல்வி கற்கும் வசதியில்லை. இவைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களின் உயர் ஜாதி என்று கூறப்படும் தன்மையல்லவா? இவ்வநீதியை எங்களைத் தவிர வேறு யார் இதுவரை தட்டிக் கேட்டனர். கேட்கா விட்டாலும் எங்களுக்கு ஆதரவாகிலும் கொடுத்த வர்கள் யார்? இன்னுங் கூறுவேன்; எங்களைக் காட்டிக் கொடுத்து விபீஷணர்கள் போன்று அரசியல் ஆதிக்க வேட்டையாடும் சுயநலமிகள் தானே நமது சமுதாயத்தில் காணப்படுகின்றனர். எனவே திராவிடர் இயக்கம் மேற்கொண்டுள்ள தொண்டு மிகவும் மகத் தானதாகும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷிகள், மகான்கள் காலத்தில்கூட கவலைப் படாது விடுத்த பெரும் பிரச்னையைக் கழகம் மேற்கொண்டு பாடு பட்டு வருகிறது.

மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக் கின்றனரோ அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையேயன்றி, சர்க்காரைக் கவிழ்ப்பதோ, அன்றி அவர்களுடன் போட்டி போட்டு ஓட்டு வேட்டையாடுவதோ கழகக் கொள்கையல்ல. நான் இதைக் கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப் பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட சிலர் வேண்டு மென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தைப் பொய் யுரைகளைக் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக்காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப் படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?

1949ஆம் ஆண்டாகிய இந்த விஞ்ஞான காலத் திலுமா நாம் மடமைக்கு அடிமைப்பட்டிருப்பது என்று கேட்கிறேன். இதைப்பற்றி காங்கிரஸ் திராவிடருக்குச் சற்றேனும் கவலை வேண்டாமா? பார்ப்பானுக்கு நாம் இவ்வாறு அடிமைப்பட்டிருப்பது லாபமாகவும், கொண்டாட்டமாகவுமிருக்கலாம். சற்றேனும் தன்மான முள்ள திராவிடர்கள் நாம் ஏன் மற்றவனுக்கு அடிமைப் பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்துத் தானே தீருவார்கள். நாம் என்றைக்குத்தான் இந்த இழி நிலையிலிருந்து மீளுவது?

சுய ராஜ்யம் வந்த பின்னால் கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி, என்பவை மேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால் மக்களை முதலில் மனிதத் தன்மையுள்ள வர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாஸ்ரம வைதீகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பர்களே! இக் காரியங்களில் நாம் வெற்றிபெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாக இருக் கிறோம். ஏனெனில் நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாகவிருக்கிறார்கள். அச் செல்வாக்கு அவர்களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் நம்மிடையேயுள்ள சில ஆரிய அடிமைகளின் துரோகச் செயலென்றே கூறுவேன். எனினும் அச்செல்வாக்கைச் சிதறடிக்க நம்மால் முடியும். அந்த உறுதி எனக்குண்டு. குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகளில் அதைச் செய்து முடிப்பேன். எனினும் நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அந்த அதிக விலை என்பது என்ன? திராவி டர்களாகிய நாம் இந்துக்களல்ல என்று பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டுவதே யாகும். இந்து மதந்தான் ஜாதி மத பிரிவுகளை, வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்த சமுதாயத்தில் பல ஜாதி, பல கடவுள்கள் மலிந்து மக்களை மாக்களாக்கி விட்டது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்படவேண்டும். இவைகள் ஒழிந்த பின்னரே மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும். அந்நிலை உண்டாக்கப்படாதவரை நல்லாட்சி என்பது ஏட்டளவிலும், அதற்கு மாறான காட்டுமிராண்டித்தனமான ஆட்சியே நடைமுறையிலு மிருந்து வரும். இது உறுதி. எனது 35 ஆண்டின் பொதுநலத் தொண்டிலிருந்து காணப்படும் அனுபவம் வாயிலாக இதைக் கூறத் துணிந்தேனேயல்லாது கேவலம் வீம்புக்காக அல்ல என்பதை எனது காங்கிரஸ் திராவிடர்கள் இனியாவது கருத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

தோழர்களே. திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ள பொறுப்பான இக் காரியங்களுக்குக் காங்கிரஸ் திரா விடர்கள் ஆதரவு ஆதிக்கத்தில் நாங்கள் பங்கா கேட்கிறோம்? அல்லது அதற்காகவா இயக்கத்தை நடத்துகிறோம்? பின் எதற்காக காங்கிரஸ் திராவிடர் களுக்கும் - திராவிடர் கழகத்தினருக்கும் மனக்கசப்போ வேற்றுமையோ சண்டையோ இருக்க வேண்டும்? அவர்கள் சூத்திர-பஞ்சம பட்டத்தை சர்-திவான் பகதூர் பட்டம் போல ஏற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். நாம் அவ்விழி நிலையிலிருந்து உணர்வு பெறுங்கள் என்று கூறுகிறோம். இது ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த வகையில் காங்கிரசுக்குத் திராவிடர் கழகம் விரோதமாகும் என்று கேட்கிறேன்.

நான் கூறும் பஞ்சம-சூத்திரபட்டம் ஒழிந்தால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் காமராஜர், சிவசண்முகம் போன்றவர்களுக்கும் எங்களுக்கும் சேர்த்துத்தானே மனிதத் தன்மை உண்டாகப் போகிறது. நாங்கள் மட்டுமா சூத்திரப்பட்டமோ, பார்ப் பனீயமோ ஒழிவதால் பயனடையப் போகிறவர்கள்?

இன்னுங் கூறுவேன். பார்ப்பனர்கள் கூட ஓரளவுக்கு திருந்தி விடுவார்களே. மனிதத்தன்மையை மறைத்து, மடமையை வளர்த்து அதன் பேரால் வயிறு வளர்ப்பவர் களுக்குத் தவிர மற்றவர்களுக்குத் திராவிடர் கழகம் ஒரு போதும் விரோதமாயிருக்க முடியாதே. இதை இன்னும் தோழர் காமராஜர் போன்றவர்களே உணர வில்லையென்றால் நம்நாடு என்றுதான் உண்மையான விடுதலையடைய முடியும். இப்படியே நாம் காலமெல்லாம் கட்சிச் சண்டையிலேயே காலந்தள்ளவா பிறந்தோம்? நமது பிற்கால சந்ததியாகிலும் சற்று மான ரோஷமுடன் வாழவேண்டாமா? இதைச் சிந்தித்துப் பார்க்கச் சக்தி யற்றவர்கள் எங்கள் மீதா பாய்வது? எங்களையா காட்டிக் கொடுப்பது? கொஞ்சமேனும் நன்றியிருக்க வேண்டாமா? இவ் வநீதிகள் ஒழியும்வரை திராவிடர் இயக்கமும் இருந்தே தீரும்.

எப்படி இந்து மதமும், அதைச் சார்ந்துள்ள ஆபாசங்களும் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோமோ, அதேபோன்று அரசியலிலும், நம் நாடு தனியாகப் பிரிந்தாக வேண்டும். இல்லையேல் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருக்காலும் நிம்மதியான வாழ்வு கிட்டாது.

நம் நாட்டு வாணிபம் வடநாட்டான் ஆதிக்கத்தி லிருப்பதா? வெள்ளையர் ஆதிக்கம் ஒழிந்தது என்றால் அந்த இடத்தில் வடநாட்டானும், பார்ப்பானுமா உட்கார்ந்து சவாரி செய்வது?

சென்ற மாதம் நம் நாட்டுக்கு வந்து சென்ற கனம் பட்டேல் அவர்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டாரே, தென்னாட்டை நம்பியே நாங்களிருக்கிறோம்; நாட் டைப் பிரிக்கும் எண்ணம் வேண்டாம் என்று. மற்றவர் நன்மைக்காக நாம் மடிவதா? இதற்குப் பெயர் தேச பக்தியா? அடிமைப்புத்தியா? நம் மந்திரிகளுக்கோ சிறிதேனும் அரசியல் ஞானமேயில்லை. தங்களுக்குக் கிடைத்துள்ள பட்டங்களையும், பதவிகளையுமே பெரிதாகக் கருதி அதைக்காப்பாற்ற கோஷ்டி சண்டைகள் போட்டுக் கொள்வதற்கே காலமெல்லாம் சரியாய் விடுகிறது. அவர்கள் பகுத்தறிவு கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய எப்படி அவகாச மிருக்கப்போகிறது?

நான் 1938ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறேன் நம் நாட்டின் இயற்கை வளம் மற்ற நாடுகளை விட எவ்வளவு அதிகம் என்பதையும், அதன் காரணமாக நாம் தனித்து நின்று ஆட்சி செய்ய முடியுமென்றும், அவ்வித உண்மையான சுயராஜ்யம் கிடைத்தால், மேல்ஜாதி, கீழ்ஜாதி முதல் ஏழை, பணக்காரத்தன்மை வரை அடியோடு ஒழிக்கப்பட்ட சமதர்ம ஆட்சியாக செய்து விட முடியுமென்று. நமக்கு 1500 மைல் கடலோரமிருக்கிறது. நாம் பரம்பரை பரம்பரையாக கடல் கடந்து வாணிபம் செய்திருக் கிறோம். பேரறிஞர்களைப் பெற்றிருக்கிறோம். வீரமுடன் வாழ்ந்திருக் கிறோம். நீதி, நேர்மை, ஒழுக்கம், அறிவு, அன்பு ஆகியவை களை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு சீரும் சிறப்புடனுமிருந்திருக்கிறது. இவ்வித இயற்கை வளங் கொண்ட நாடு இன்று கஞ்சிக்கு, சோற்றுக்குக் காற்றாய்ப் பறப்பதா?

திரைகடலோடியும் திரவியந்தேடு என்று கூறியது நம் மூதாதையர்களா? அல்லது வடநாட்டவர்களும் பார்ப்பனர் களுமா என்று கேட்கிறேன். அவன் கடலில் பிரயாணம் செய்வதையே, பாபம் என்று தானே கூறியிருக்கிறான். அவர் களுக்குக் கடல் ஏது? மேல் நாடுகளிலிருந்து வரும் சாமான்கள் வட நாட்டு வழியாக வரும்வகையில் ஏற்பாடு செய்து கொண்டதால் இன்று எல்லா ஆதிக்கமும் அவர்களுக்கு?

நேராக நம் நாட்டுக்கு வரும் நிலையை உண் டாக்கி விட்டால் அவர்கள் ஆதிக்கத்துக்கு நாம் உட்பட்டிருப்பது ஒரு விநாடியில் ஒழிந்து விடாதா? இதைத்தானே திராவிடர் கழகம் கூறுகிறது? இதைத் தேசத்துரோகம் என்று சிறிதேனும் அரசியல் ஞானம் இருப்பவன் கூற முடியுமா? இதற்காக காங்கிரஸ் திராவிடர்கள் ஏன் பாடுபடக்கூடாது? ஏன் நம் நாடு அந்நியர்களால் சுரண்டப்பட வேண்டும்? இதை இளைஞர்களாவது கவனிக்க வேண்டாமா? இவைகளைச் சிந்திக்காமல் எங்களை விரோதி களாகக் கருதுவது சரியா?

நான் இன்று இம் மேடையில் மீண்டும் கூறுகிறேன். நாளைக்கே காங்கிரசில் தீர்மானம் போடட்டும், இனி இந்நாட்டில் பார்ப்பான், பறையன், சூத்திரன், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களிருக்காது; நம் நாடு எந்த அந்நியர்களின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு இருக்காது; திராவிட நாடு என்று கூற மனமில்லா விட்டாலும் தென் னாடு தனித்து நின்று அதன் அரசியலை நடத்தும் என்று. அதற்கடுத்த நாளே திராவிடர் கழகத்தைக் கலைத்து விடுகிறேன். எங்களுக்கு மேற்கூறிய கொள்கை தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது என்று உறுதி கூறுகிறேன்.

3.4.1949 அன்று விருதுநகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (விடுதலை 07.4.1949)
- விடுதலை 1.10.17

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை - சித்திரபுத்திரன் -



16-06-1929  - குடிஅரசிலிருந்து.. 


சைவன் - ஓய்! என்னங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர்?
பார்ப்பனன் - வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்கு சாகின்றோமோ. இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன்.

சைவன் - என்னங் காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர் இது என்ன, போக்கிரித்தனமா? அல்லவா?

பார்ப்பனன் - கோபித்துக் கொள்ளாதீர் அய்யா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வரும் ஒழிய விஷயம் புலப்படுவதான் கஷ்டம்.

சைவன் - என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய்! பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்தநாடு பாழாச்சுது!

பார்ப்பனன் - இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லாச்சுது. தவிரவும், இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைப் பேர்? சாப்பிடாதவர்கள் எத்தனையோப் பேர்? என்பது உமக்கு தெரியும்? 7 கோடி மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! 1 கோடி கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாதார் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள் சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள், மராட்டா சத்திரியர்கள், நாடார் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடு சத்திரியர், செங்குந்த சத்திரியர் ஆகியோர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

மேற்படி வகுப்பார்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக் கோட்டை தன வைசியர் வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; வேளாளர்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளா ளர்கள், வடுக வேளாளர்கள் நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலும் உள்ள சில வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ சவுராஸ் டிர பிராமணர்கள், விவ பிராமணர்கள், தேவாங்க பிராம ணர்கள், சாலிய பிராமணர்கள், கொங்கிணி பிராமணர்கள், கவுட பிராமணர்கள், காஷ்மீர் பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷ்ட்ட பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைகளை எல்லாம் சேர்த்தால் குறைந்தது 15 கோடிக்கு குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் 1 கோடி இருக்கலாமா என்பது சந்தேகம். 35 கோடியில் 1 கோடிக்கு அதாவது 100க்கு 3 பேராகலாம். 

தவிர, இந்தியர் தவிர உலக மக்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். எனவே மொத்த ஜனத்தொகையில் 100க்கு 99 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும் பார்ப்போம்.

சைவன் - என்னங்காணும்! பார்ப்பனர் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர் கதையெல்லாம் பேசுகிறீர்!

பார்ப்பனன் - சொல்லுவதைக் கவனமாய்க் கேளும் சைவரே வெறும் கோபம்! ஒரு காசுக்கு உதவாது அதெல்லாம் அந்தக் காலம்; இது அறிவு ஆராய்ச்சி சைன்சு காலம்; தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவ காருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறு இல்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100க்கு 99 பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களை பிறப்பித்து இருப்பார் என்று யோசித்து, யோசித்து மயங்கிக் கிடந்தேன். 

கடைசியாக திரு.சர்.ஜகதீச சந்திரபோஸ், மரம் செடி கொடி புல் பூண்டு ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும் நாடினாலும் முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன, என்பதைக் கண்டு பிடித்தபிறகுதான் சரி, எது ஜீவ காருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.

காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளை எடுக்கும் போதும் கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும்போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே ஒரு ஜீவனை தினம் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்குமேல் யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள் அதுவும் கணத்தில் முடிந்து போகும். ஆதலால்தான் காய்கறி கிழங்கு கீரையைவிட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். 

ஆதலால் ஓய்! சைவரே நான் உன்னைவிட குறைந்த ஜீவகாருண்யம் உடையவன் என்று எண்ணிவிடாதீர். தவிர, திரு.போஸ் காய் கறிகளுக்கு உயிர் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துதான் மாமிசம் சாப்பிடுகின் றார்கள் என்பதாகத் தெரிகின்றது. 

அன்றியும், வேதமும், மனுதர்ம சாஸ்திரமும், கண்ணப்ப நாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும் இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருப்பதோடு தலைமுறைக்கு மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா சைவரே?

சைவன் - ஓய்! ஓய்! பார்ப்பனரே சரி தான்! கடையைக் கட்டுங்காணும் உம் ஆராய்ச் சியையும், சைன்சையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும், கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சி சைன்சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டது. கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கைவைக்க வந்து விட்டது. இந்தப்பாழும் அறிவும் ஆராய்ச்சியும் சைன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால் இவை ஒழியதவம் கிடப்போம்போம், போம், பார்ப்பானே! போம் உம்மைப் பார்ப்பதற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவ வேண்டும்.

பார்ப்பான் - அய்யோ சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீச சந்திரபோஸ் இயற்கை ஆராய்ச்சியில் சுயமரியாதை இயக்கம் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவமும் உங்கள் ஜீவ காருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப் பார்த்ததற்கும் என் பேச்சுக்களைக் காதில் கேட்டதற்கும் மகாபாதகம் தீர்த்த குளத்தில் போய்க் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.
-விடுதலை,14.7.17

சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி

15, 20 வருஷத்திற்கு முன் ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக் கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத் தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப் பார்த்து, என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய் என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனரை ஓர் அறை செவுளில் அறைந்து, யாரடா சூத்திரன்? என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்த துண்டு.

- -தந்தை பெரியார், ஈரோடு - 7.12.1936

நூல்: உண்மை இந்து மதம்
-விடுதலை,1.9.17