வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம்! சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!

இந்தி மொழியில் மெச்சத்தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலையாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமும்தான். மனுதர்மமும் தெரியுமே, உங்களுக்கு? இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால் நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும் அவரது அய்யாவையுந்தான் குறிப்பிடவேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்கை அடிப்பது (உங்களுக்குத் தெரிந்தது) தான். வேறு ஆள்களைக் குறிப்பிடமுடியாது.

தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முக்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது. இந்தியில் கலையில்லை. காவியமில்லை, நீதிநூல் இல்லை, நீதிமான்களையும் தோற்றுவிக்கவில்லை. அம்மொழி மூலம் அறியக்கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை.

ஆகவே, 100க்கு 97 பேர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? காரணம் தெரியுமா? இங்குள்ள வைத்தியநாதய்யர், வரதாச்சாரியாரின் கோஷ்டியார் இத்திராவிட நாட்டின் கலைகளையும், கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து இந்நாட்டை, வடநாட்டுக்கு வால்நாடாக்கப் பார்க்கிறார்கள், அதுதான் மர்மமே ஒழிய, இந்தி தேசிய மொழி, ஆகவே எல்லோரும் படிக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம் முழுப் பித்தலாட்ட வார்த்தைகள், இந்தி தேசிய மொழியாயின் எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆகவேண்டும் என்று வெளிப் படையாகக் கண்டிப்பாகக் கூறி விடட்டுமே. 

இந்தி, சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே அது ஏன்? இந்தி தேசிய மொழியா? சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள்கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை அறியுங்கள்.

தேசியம் என்பது ஒரு பித்தலாட்டம்

தேசியம் என்பதெல்லாம் பித்தலாட்டங்கள், வடமொழியை நுழைத்து அதன் மூலம் வர்ணாஸ்ரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிடர்களை சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக்கொள்ள வைத்தியநாதய்யர், வரதாச்சாரிக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. 

நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக சண்டாளர்களாக, நமது கிருஸ்துவத் தோழர்களையும், முஸ்லீம் தோழர்களையும் மிலேச்சர்கள் ஆக வைத்திருக்க செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.

இந்த சூழ்ச்சிகளுக்கு நமது அமைச்சர்கள் விபீஷணர்களாக ஆகிவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இந்தி நுழைவால் உண்மைத் தமிழ் மக்களுக்கு எவ்விதப் பயனும் ஏற்படாது. கடுகளவு பயன்கூட ஏற்படாது. அதற்கு மாறாக எவ்வளவோ கேடுகள் வந்து சூழும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் போற்றிக் காப்பாற்றி வந்து இடைக்காலத்தில் கைவிட்டு தற்போது வெகு கஷ்டப்பட்டு பெற்று வளர்ந்துவரும் தமிழ்ப் பண்பு அடியோடு கெட்டுப்போகும், கன்னியாதானம் என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தது. மாங்கல்யதாரணம் என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டியிருந்தது? மற்றும் தேவையில்லாத சடங்குகள், புராண இதிகாச குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக்கடவுள் இவற்றின் மீதும் இருந்து மூடநம்பிக்கையையும், மூடப்பக்தியும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது?

முற்போக்கு மீண்டும் அழிவதா?

இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுவீர்களா? சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு திராவிடன் என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள் மறுபடி சூத்திரர்களாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் ஆரியக் கூட்டம், பார்ப்பனக் கூட்டம் வடநாட்டாரின் கூலிகளாகி அவர்களுக்கு வால் பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு தேசிய மொழி என்ற பேரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால், நம்மை, நம் நாட்டை வடநாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நான் அதற்கு இடம் கொடுக்கலாமா?

(17.07.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பாளர் மாநாட்டில் பெரியார் உரை)

ஆரியர்கள் நம்மை முதலில் எப்படி அடிமை கொண்டார்கள்? பலத்தில் யுத்தம் நடத்தி வெற்றிபெற்றதன் மூலம் அல்லவே! தந்திரமாக தமது புராண இதிகாசங்களைக் கலைகளாக்கி, அவற்றை நம் மக்களிடையே புகுத்தினார்கள். அவற்றின் தத்துவத்தை - அத்தத்துவக் கடவுள், அவற்றின் தர்மங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக் கொள்ளும்படிச் செய்தனர். அதில் அவர்கள் வெற்றிபெற்று, அதற்கேற்ப மனுநீதிச் சட்டம் வகுத்து, நம்மைக் கீழ்மக்கள் - ஈனப்பிறவி ஆக்கினர். 

அதாவது, மதத்தை முதலில் நம்மை ஒப்புக்கொள்ளச் செய்த பிறகு நம்மைக் கீழ்மக்கள் என்று கூறும் சடடம் செய்து கொண்டனர். இதை உணர்ந்து மதத்தைக் கண்டிக்க நாம் ஆரம்பித்ததும், வேறு வழியில் -_ அதாவது, தேசியத்தின் பேரால் இந்தியைப் புகுத்தி _ அதன்மூலம் ஆரியர் கருத்துக்களைப் புகுத்தி - அதன் வழி நம் அறிவைப் பாழாக்க நினைக்கின்றனர். நமது பிரச்சாரத்தின்மூலம் மக்கள் ஓர் அளவுக்கு ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறவும், அதை வெறுக்கவும் முற்பட்டிருக்கிறார்கள்.

ஆதலால், குழந்தைப் பருவத்திலேயே ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டி இந்தியை ஆரம்பப் படிப்பிலேயே புகுத்த முயற்சிக்கிறார்கள். மதத்தினால் புகுத்த முடியாமல்போன பித்தலாட்டக் கருத்துக்களை மொழியின் மூலம் புகுத்தச் சூழ்ச்சி செய்யப்படுகிறது. இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அதிக பேதமில்லை என்பதை இந்தி ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். மதம் செல்வாக்குடன் இருந்த சமயத்தில் நாம் சமஸ்கிருதம் படிக்கக்கூடாதென்றும் கூறிவந்தார்கள். திருப்பதி, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரிகளில், அதுவும் சர்க்கார் மானியத்தைக் கொண்டு நடைபெற்று வரும் இக்கல்லூரிகளில் கூட சமீபகாலம் வரை நம் மக்களுக்கு சமஸ்கிருதம் படிக்க வசதியளிக்கவில்லை.

நம் மக்களைக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வதேயில்லை. சர்க்கார் மானியம் அளிப்பதை நிறுத்திவிடுவதாகப் பயமுறுத்திய பிறகுதான் நம் பிள்ளைகளையும் அக்கல்லூரிகளில் சேர்க்க முற்பட்டார்கள். எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடினோமே ஒழிய, சமஸ்கிருதம் படிப்பதால் அறிவு விசாலம் அடையும் என்பதற்காக போராடவில்லை. நாம் இன்று சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றும், அது நம் திராவிடக் கலாச்சாரத்தை அடியோடு பாழ்ப்படுத்தி நிற்கும்மொழி என்றும், அதைப் படிப்பதால் மூட நம்பிக்கைக் கருத்துக்கள்தாம் வளர்ச்சியடையுமே யொழிய -_- ஆபாச அறிவுதான் வளர்ச்சி யடையுமேயொழிய _- பகுத்தறிவு வளராது என்றும் பிரச்சாரம் செய்வதன் பயனாக, சமஸ்கிருதத்தைக் கட்டாயப் படுத்தும் வாய்ப்பற்றவர்களாய்ப் போய் விட்டார்கள். மேலும், அது பேசும் பழக்கத்தில் -_ உரையாடும் பழக்கத்தில் இல்லாது போய் விட்டதால் அதைக் கற்கும்படி வற்புறுத்த இயலாமல் போய்விட்டது.

எனவே, சமஸ்கிருதத்தின் மூலம் புகுத்த முடியாமற்போன பித்தலாட்டக் கருத்துக்களை அதன் வழிமொழியான இந்தியின் மூலம் புகுத்த முற்பட்டிருக்கிறார்கள். அரசியல் ஆதிக்கத்தின் உதவியால் இந்தியைப் புகுத்துவதில் வெற்றி காணலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.

(தந்தை பெரியார், சென்னையில் 10.1.1950இல் சொற்பொழிவு) _ ‘விடுதலை’, 16.1.1950

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும்; சுரண்டமுடியும்; நம்மைக் கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக - விழிப்போடு காரியம் செய்துவருகிறார்கள்.

இல்லாவிட்டால், உலகம் பூராவும் சுற்றி வருகிற சசிவோத்தம சர்.சி.பி. இராமசாமி அய்யர், சமஸ்கிருதந்தான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்கவேண்டும் என்று பேசிவருவாரா? அதுமட்டுமா? தமிழைத் தாய்மொழி என்று கூறுகின்ற பார்ப்பனரைக் காணமுடிவதில்லையே! தப்பித் தவறி எங்காவது ஒன்று இரண்டு சுட்டிக்காட்டுவீர்களானால் அது வயிற்றுப்பிழைப்பைக் கருதி அப்படி உதட்டளவில் கூறிய பார்ப்பனனாக இருக்கும், அவ்வளவுதான்.

- தந்தை பெரியார், ‘விடுதலை’, 15.2.1960
-உண்மை இதழ், 1-15.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக