திங்கள், 16 ஜூலை, 2018

"பறையனை" உள்ளே விடாத கோயில்கள் இடிபடுமா?

தந்தை பெரியார்



தலைவரவர்களே, சகோதரர்களே, நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேச வேண்டியிருக்கும் என்று கருதவே யில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வர வேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு  முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்குகூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தார் அவர்கள்  சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேசவேண்டியவனாக இருக் கிறேன். இன்று  பேசவேண்டிய விஷயம் தற்கால இராஜ்ய நிலைமை என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ  இராஜீய திட்டசம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட  ஒரு அபிப்பிராயம் கொண்டி ருப்பவன். இராஜீய துறையில்  சிறிதுகாலம்  இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்ளை களில்  அதிருப்தி  கொண்டு  வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமுகத் துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட  நான் இராஜீய நிலை மையைப் பற்றி என்ன பேச முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். சகோதரர்களே, இன்றைய நிலை மையில் நான் இராஜீயத்துறை கொள்கைகளில் மாத்திரம் அபிப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜீய விஷயம் என்பதையே நாணயமானதல்ல என்று கருதுவதோடு  இந்தியநாட்டின் விடுதலைக்கு இன்று இரா ஜீயத்துறை அவ்வளவு முக்கியமான தல்லவென்றும்,  மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்கவேண்டியது என்றும் கருதுகின்றவன், நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல்வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர  அரசியல் வேலையல்ல.

ஏனெனில், சமுகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத்தனத்தின் கொடுமை எவ்வளவு? இவை களுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையைக் கொஞ்சமும் பெரிதாகக் கருதி  லட்சியம்  செய்யமாட்டா னென்றே  கருதுகிறேன். உங்களில் யார் எப்படி  நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மதசம்பந்தமான சமுக சம்பந்தமான, அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து, மானமிழந்து  இழி ஜாதியாய் வாழ்கின்றோமேயொழிய  அரசியல் அடிமைத்தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம் நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்ப வில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருத வில்லை அதிகாரத்தை ஆசைப்படவில்லை.

என்னுடைய நாட்டு மனிதன்  ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருத வேண்டும், அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான்  ஆசைப்படு கின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான்  என்னை வருத்துகின்றது.  நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது.  இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட  இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப்பற்றி கவனிப்போம். அதை யொழிப்போம். இல்லாவிட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக் கின்றார்களோ அவற்றையொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு  விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு 'அரசியல் அரசியல்' என்றால் என்ன அருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக் குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப்பாருங்கள்.

'அரசியலைப்பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை, அன்னியனை ஒழிக்க வேண்டாமா? என்று சிலர் கேட்கிறார்கள், இதிலும்  உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருத வில்லை. ஏனென்றால், யார்  அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப்பாருங்கள்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் தொடவேண்டா மென்பவனும், கிட்ட வந்தாலே கண்ணில் தென் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால்  என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட் டாலும்  பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம் தான்'  என்று சொல்லுகின்றவன் அந்நியனா? என்பதை  யோசித்துப் பாருங்கள்.

நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்துவருகின்றார்கள். கல்விவாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திர மில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு  யார்  என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்கள். இவர்கள் முன்  எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ  புரட்டுகள்  நடக்கின்றன. இதைப்பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்றவேண்டியதே  நமது முதல் வேலையாயிருக்க வேண்டும், என்பதை யாருமே  கவனிப்பதில்லை. எந்த தலைவருமே  நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால்  நமக்கு  எப்போது விடுதலை கிடைக்க கூடும்?  என்பதை யோசித்துப்பாருங்கள்.

பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக் கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது.  அதை நிறுத்த  வேண்டாமா? என்கிறார்கள் மற்றொரு  கூட்ட அரசியல்  கூட்டத்தார். இதையும் என் னால் லட்சியம் செய்யவோ ஒப்புக் கொள்ளவோ, முடிய வில்லை. ஏனென்றால் பொருள்  நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்து பாருங்கள்.

நமது நாட்டில் சமுகத் துறையிலேயே, பிறவிலேயே பொரு ளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட் டிருக்கின்றது.

உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங் களுக்குத்தான்  பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக் குட்பட்ட அடிமை உரிமைதானே  இருந்து  வருகின்றது?  முற்கூறிய கூட்டங்களுக்குப் பொருளாதார  உரிமை  என்பது  பிறவிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது  என்ப துடன்  மற்ற வர்கள்  அதற்கு  அருகரல்லாமல் இருக்கும் படியான நிர்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, ஒரு இட்டிலிக்கடைப்பார்ப்பானுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாகவரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன்  மகன்  மந்திரி ஆகலாம்.  ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட்ஜட்ஜாக வரமுடியுமா?  யோசித்துப் பாருங்கள். ஜாதியின்  பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரி வானது இம் மாதிரி சிலருக்கு நன்மையையும் சிலருக்குத் தீமையையும் செய்துவருகின்றது,  வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனி  மேல்  இந்தப்படி செய்யாமல் இருக்க நமது ' அரசியல் சுயராஜ்யத்தில்' எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த  முறைமையைக்காப்பாற்றவும் திட்டம்  போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக்கொள்ள முடியும்?

இன்றைய தினம் இந்த திருச்செங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதா யிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப்போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ் வளவு மோசமாயிருந்தாலும் 'சாமி சாமி' என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமுக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப்பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?

ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும்  தொழி லாளிகளையும் கீழ் ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும் கொடுமைப்படுத்தி தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங் களையும் கவனித்து, அவர்களை அவர்களுடையக் கஷ் டங்களில் இருந்து  விடுதலை  செய்யமுடியாத அரசியல்  திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன். மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிகளுக்குமல்லவா அது பயன் படும். தொழிலாளிகளுக்கு  எவ்வளவு கூலிகொடுப்பது  என்பதை  யோசிப்பது தான்  அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு  லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம்  போடுகிறார்களா? பாருங்கள்.

நமது  மக்களின்  இழிவும், அடிமைத்தனமும், பொருளா தாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின்  பயனாய் இருந்து வருகின்றதா?  அல்லது  இல்லையா? என்று பாருங்கள். பணக்கார ஜமீன்தாரனும், பணக்கார பிரபுவும் தங்கள்  பணங்களை இந்நாட்டில் என்ன  செய்கிறார்கள்?  என்று சற்று கவனித்துப் பாருங்கள்? மதத்தின் பயனாய் ஏற்பட்ட  முட்டாள் தனத்தின் காரண மாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவிலின்  பேரால்  பாழாகின்ற பணம் இவ்வள வென்று உங்களுக்குத் தெரி யாதா?   பணம்  சேரச்சேர  மண்ணால் கட்டின  கோவிலை இடித்து கல்லால் கட்டுகின்றான். பிறகு  சலவைக்கல்லால் கட்டுகின்றான், சித்திர வேலை செய்கின்றான், பிறகு வெள்ளியிலும் தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூட மக்களைக்கொண்ட  நாட்டிற்குப் பணம் மிச்சமாவதால்  என்ன லாபம்?

பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால்தான் அந்த பணம் நாட்டின்  நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் பிழைப்பதற்காகப் பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித்துப்பாருங்கள்.

 

மற்றொரு கூட்டத்தார் 'நமக்குச் சமத்துவம் வேண்டியதற்காக சுயராஜ்யம் வேண்டு'மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறிவற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன், பார்ப்பனனும், பறையனும் இருக்கும்  நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின் இருக்கும்படிக் காப்பாற்றபட வேண்டிய நாட்டின் மக்களுக்குச் சமத்துவம் சம்பாதிப்பது என்பது  புரட்டா?  அல்லது நாணயமானதா என்று யோசித்துப் பாருங்கள். வீண்வாய் பேச்சில் வெட்டிப் பேச்சில், மயங்குகின்ற  பாமர மக்களைக்கூட்டுவித்துப் பேசிவிடுவதினாலேயே எந்தக் காரியமும் நடந்து விடாது. எப்படியானாலும்  ஒரு காலத்தில் வெளியாய்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடு தலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டுமானால் பயன் படத்தக்க  நாணயமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும் வரவேண்டுமென்று கேட்கப்படும், சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும், இருக்க மாட்டானா?  என்று கேட்கின்றேன், பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா?  என்று கேட்கின்றேன். சாமிகளின் பேரால் நடைபெறும் வீண்செலவுகள் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கிறேன். இன்றைய தினம்  ஜாதிகளின்  பேரால்  இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல்  இருந்து கொண்டு  குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன்  என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?  இந்த வித்தியாசங்களிருக்கும் சுயராஜ்யத்துக்கும் இப்போது இருக்கும்  அந்நிய ராஜியத் திற்கும்  என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள் மதமூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசியலிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களா யிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அந்நியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.

நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம்  முதல்  இதுவரை  சமுக சம்பந்தமான  முற்போக்கு  ஏதாவது ஏற்பட்டி ருக்கின்றதா? என்று  பாருங்கள். சமுக முற்போக்கு  சீர்திருத்தம்  என்பவை ஏற்பட  தீவிர முயற்சி  செய்யப்படும் போதெல்லாம் அரசியல்  என்பது குறுக்கிட்டு தடைக்கல்லாய் இருந்து  வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை  ஏற்பட் டிருக்கின்றது?  என்று  சொல்லுங்கள் பார்ப்போம்.  இவ் வளவு  விழிப்பான இந்தக் காலத்திலும்  அரசியல்  தலை வர்கள்  வருணாசிரம  பாதுகாப்பும்  மத நடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டுதானே இன்று சுயராஜ்யம் வேண்டுமென்கிறார்கள். சுயராஜ்ஜியமும் வாங்கப் போயு மிருக்கிறார்கள். எந்தத் தலைவராவது சுயராஜ்ஜியத்தில் வருணாசிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப்படும் மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ் - மேல்  நிலைமை ஆகியவைகள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா?  சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப் பாருங்கள்.

வருணாசிரமமும் மதக்கொடுமையும் ஒழிய வேண்டு மென்கிற நான் எப்படி  இந்த அரசியலைச் சுயராஜ்ஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலைமையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா?  என்று ஆராய்ந்து  பாருங்கள். அப்படியிருக்க சுயராஜ்ஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும்  மானமும் இருந்தால்  அதில் சேரக்கூடுமா?  என்று  யோசித்துப் பாருங்கள்.

நண்பர்களே! நான் இதுவரை  பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோஅதிருப்திக்கோ இடமிருக்ககூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதைப் பேசவேண்டுமே  ஒழிய, கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப் பத்திற்குத் தகுந்தபடி என்று  பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக  இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள்  கண்டிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால்  என் அபிப் பிராயம் என்கிற முறையில் வெளியிட  எனக்குள்ள  பாத்தியதையில் உங்களுக்கு ஆட்சேபமிருக்கா தென்று கருதியே பேசினேனேயொழிய வேறில்லை.

ஆகவே  தாங்கள் நான் சொன்னதையும் இனியும்  கனவான்கள் பலர் சொல்லப் போவதையும் தயவு செய்து  ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப் பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே  கேட்டுக் கொள்ளு கின்றேன்.

(01.09.1931-ந் தேதி தற்கால இராஜிய நிலை என்பதைப்பற்றி திருச்சªங்கோட்டில் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 06-09-1931

- விடுதலை நாளேடு, 15.7.18

புதன், 11 ஜூலை, 2018

எல்லாம் பழைய ஆதிக்கம் செலுத்தவே

**தந்தை பெரியார்**



நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்ததன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மை களை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணாசிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும், இருந்த பார்ப்பனர்களுடைய கௌரவமும் குறையத் தொடங்கி விட்டதென்பதும் உண்மையாகும். ஆகையால் அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோகத்தின் செல்வாக்காலும், மற்றும் பல பொது இயக்கங்களின் பேராலும், தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானி களாகவும் செய்து கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள், இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு  கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறுபல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்கின்றார்கள்.
நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாகக் கருதுவதற்குக் காரணமாக  இருந்த 'மதம்', 'வேதம்' 'புராணம்', 'ஸ்ருதி', 'கடவுள்', 'ஆன்மா', 'மோட்சம்', 'நரகம்', 'பாவம்', 'புண்ணியம்', முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழைய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள், காங்கிரசின் பெயரால், 'மகாத்மா' 'பாரதமாதா' 'அவதாரம்' கதர் 'ஹிந்தி' 'கொடியேற்ற வணக்கம்' 'ஜெயந்தி' விழாக்கள் முதலியவைகளைக்கொண்டு பாமர மக்களின் மனத்தில் பழய வருணாசிரம தருமத்தையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்குவதோடுமட்டும அல்லாமல், 'பிராமண சபை' 'சனாதன தரும சபை' 'தருமரட்சணசபை' 'வேதோத் தாரண சங்கம்' 'அத்வைத சபை' 'ஹிந்து மத சபா' முதலிய சங்கங்களை அமைத்துக் கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து, அவர்களை வைதிக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த மாதிரியான வைதிக சபைக்காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டுகிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர்களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும், தீர்மானங்களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமணரல்லாதார் ஏமாறாமல் இருக்கவும், பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது, என்கின்ற இந்தக்காரணத்திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாகக் கூறுகிறோம்.
பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை அறிய வேண்டுமனால், சென்ற 23-11-31ல் கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமண சபையின் இரண்டாவது வருடக் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களாகவும், வக்கீல் தொழில் செய்பவர் களாகவும் அரசாங்க உத்தியோகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தியாயர்களாக வும், ஒன்றுந் தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப் பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளைக் கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற 26-11-1931ந் தேதி வெளியான 'தமிழ்நாடு' பத்திரிகையில் காணப்படுகிறது.)
"நவ நாகரிகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமணனையும், குடிக்கும் பிராமணனையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்ச மாய்த் தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஓர்விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை நான் அறிவேன்."
"கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதிதிராவிடர்களைக் கோயில் களுக்குள் பிரவேசிக்கக்கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால் ஆதிதிராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்துவரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதிகர்கள் பிள்ளைகள்கூட அய்.சி.எஸ். முதலான பரீட்சைகளுக்குச் சீமைக்குச் செல்லு கிறார்கள். அதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம்?" என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார்.
இவர் பேசியிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப்படவேண்டியதில்லை. இந்த நிலைமையைச் சீர்த்திருத்திப் பழைய வைதிக நிலைமைக்கு மறுபடியும் பார்ப்பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற்கூறியபடி 'ஒழுக்கம்' கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப்பார்ப் பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களைச் 'சூத்திரர்களாக' மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழியவேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு 'ஒழுக்கங் கெட்டவர்'களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வரமாட்டான் என்பதை நாம் அறிவோம். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு. காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய், முதலியவர்களைக் கப்பலேறிச்சென்று வந்தவர்கள்  என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடை நீக்கப்பட்டு அப்பார்ப்பனரல்லாதாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதிகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் 'இந்து மதம் அழிந்துவிட்டது' என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப்பிளக்கும் அல்லவா? அன்றியும், இதே சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது 'உலககுரு' என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற 'சங்கராச்சாரியார்' அவரை 'ஆசீர்வதித்து' பாராட்டினாரே. இதுபோலவே 'சூத்திரர்கள்' என்கின்றவர்களிடத்தில் பேசினால் 'பாவம்' என்ற கொள்கையையுடைய சங்கராச் சாரியாரும் மற்றும் வைதிகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர்களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப் பனர்களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர் களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார்கள்- பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல் லையே, ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிரா யத்தை வேறு எந்தப் பார்ப்பனரும் ஒப்புக்கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.
மற்றொரு பார்ப்பனர் 'ஆங்கிலப்படிப்பினால் தான் பார்ப்பனீயம் கெட்டது' என்று பேசியதற்குப் பதிலாக 'நான் ஆங்கிலக்கல்வி கற்றவனே, ஆனால் என்னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக்கிறதாய் நான் சொல்ல முடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்குச் சமகிருதக் கல்வியைப்புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்' என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர் பேசி யிருக்கிறார். இதிலிருந்து படித்த பார்ப்பனர்களும், உத்தியோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்ன தான் கெட்டாலும் தங்கள் பிராமணியக் கொள்கைகளைத்தாம் விட்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுவதேயில்லை யென்பது விளங்கும், அவர்கள் வருணச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள் என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. மற்றும் "பிராமணியம் ஒருநாளும் அழியாது. அது எந்தக் காலத்திலும் நிலைபெற்றிருக்கும் சக்தியை உடைய தாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிராமணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந்தார்கள். இப்பொழுது இது புதிதல்ல" என்று ஒருவரும்?
"நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை நாம் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பக் கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்குப் போதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப் போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சாரதா சட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன்ஜாக்கிரதையுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்" என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர்.
இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப்பனர்கள் பிரசாரங்கள் செய்து கொண்டு வருவதிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. "அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாசிரம தருமராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்" என்பது தான். இந்த வகையில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ்செய்யும் பார்ப்பனர்களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள்  ஆதிக்கம் அழியாமல் இருப்பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும் தேசத்தில் நிலைபெற்றுப் பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்குமே பல துறைகளிலும் இருந்து உழைக்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் காரணத்திற்காகவே தான், மதசம்பந்தமான 'அவதாரபுருஷர்கள்' எனறு அவர்களாலேயே கொண் டாடப் படுகின்ற 'ஆழ்வார்கள்' 'நாயன்மார்கள்' 'பக்தர்கள்' முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற வித்தியாசத்தை மனத்திற்கொண்டு பார்ப்பனரல்லாத 'ஆழ்வார்'களுக்கும், 'நாயன்மார்'களுக்கும் 'பக்தர்'களுக்கும் பெருமை கொடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்திருக்கும் திரு.காந்தியை, 'மகாத்மா'வாகவும் 'அவதார' புருஷராகவும் கொண்டாடு கின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசை, போற்றுகின்றனர். இன்றேல், திரு காந்தியை மூலையில் தூக்கிப்போட்டு விட்டுக் காங் கிரசையும் ஒழித்து விட அவர்கள் முயற்சி செய்யப் பின்வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.
மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல் களோ, இலக்கியங்களோ இல்லாததும், வருணாசிரம தருமத்தைப் போதிக்கும், துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை முதலிய நூல்கள் உள்ளதுமாகிய இந்தி மொழியைப் பிரசாரம் செய்கின்றனர்.  சனாதன தர்மத்தைப் போதிக்கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்தி செய்யவேண்டு மென்று பேசுகின்றனர்.
இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிறநாட்டு நாகரிகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரச்சாரஞ் செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறோம்.
இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதிக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
சென்ற சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தைக் கண்டிக்க முன்வந்த, திரு.எம்.கே. ஆச்சாரியார், "கோயில் பிரவேசஞ் செய்ய விரும்பு கிறவர்கள், மத பக்தியினால், சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்லவேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்றனர்.ஆகையால் அதைத் தடுக்க வேண்டும்" என்ற அபிப் பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது, மததர்மம் அழியாமல் காப்பாற்றப்பட  வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காணலாம். 'மத தர்மத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கலாம்' என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக் கொண்டி ருக்கிறார். இதிலிருந்து மத தர்மம், ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணியம் அழியாமல் நிலைக்கும் என்பது தான் அவர் கருத்து என்பதை அறியலாம்.
ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப்படும் போது, எல்லாவகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார் கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக்கூடாது என்பதற்கும் அந்தப் பாழும்மத தர்மந்தானே காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, திரு.ஆச்சாரியார் கூறும்மத தர்மத்தையும், பிராமண சபையார் பிரசாரம் செய்யும் மத தர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக்கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றே கூறுகின்றோம்.
ஆகையால், பார்ப்பனர்கள் செய்யும், எல்லாப் பிரச் சாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன்மூலம் வருணாசிரம தருமத்தையும், பார்ப்பனியத்தையும் காப் பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.
'குடிஅரசு' - தலையங்கம் - 29.11.1931
-  விடுதலை நாளேடு, 8.7.18

வெள்ளி, 6 ஜூலை, 2018

அர்ச்சனை பண்ணும் பார்ப்பானுக்கும்

பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் உரையாடல்27.12.1931 - குடிஅரசிலிருந்து

வந்ததே மோசம்

(உற்றுக்கேட்டவன்)

பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊரு மொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?

அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்து விடும். நீவண்னா மணக்குறாயோ, நானா வது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத் துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.

ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.

அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத் திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.

ப-பா:- ஆனால் நானும் அங்கு வரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?

அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக் காரன். கைவீச்சு ஜாதிதான், வா நீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.

ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டு விட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.

அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன்.  அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?

ப-பா:- சரி போகலாம்.

அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட் டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.

ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன?

அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக் கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட் டிருக்கு.

ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.

அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித் தனமாய் பேசினாரே என்ன சொல்வது?

ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித் தனம்?

அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப் போவேணும் என்று பேசியிருக்கிறான்.

ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண் டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனி யாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசி யத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதை யைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.

அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பன ரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.

ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்ச மாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.

அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிரா யத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப் படக்கூடாது.

பிறகு இவ்விருவரும் குளித்துக் கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.

தன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலி ருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். தப்புத் தவறு செய் தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். தவறு செய்வது மனித சுபாவம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ச் சியைக் கெடுக்கக்கூடாது. மன்னித்து வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

-  விடுதலை நாளேடு, 6.7.18

ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்

13.09.1931 - குடியரசிலிருந்து...

இந்தியாவில் ஒரு புருஷனுக்குப் பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரண மாகவும், அவ்வழக்கம் சமுகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர் களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனால், ஒருவித சீர்திருத்தக் காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்காரதேசத்தை, அவர்களது நாகரிகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள்.  அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண் டாட்டி கட்டின சாமியையும்  கும்பிடுவார்கள். அதற்கு கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கும்பாபிசேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சகவாசமும் செய்திருப் பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள். ஆனால், வாயில் மாத்திரம் இரண்டு பெண் டாட்டிகளைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக்கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப்பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரிகத்தைக் தாங்களும் வாயினால் பேசுவதின் மூலம் தங்களை நாகரீகக்காரர் என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகவே, இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும் போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டி களுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம்முறையை இஷ்டப்படு பவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.  புருஷன் பெண் சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண்சாதி என்பவர் களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத் தில் நமது அபிப்பிராய மாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒரு புறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்த வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2,3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2,3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவி யாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இதுதவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள திபெத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது. ஒரு பெண்ணுக்கு நான்கு, அய்ந்து புருஷர்கள் கணவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டைச் சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இப்படியிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க  நல்ல குணங்களும். நாணயங்களும் இருந்து வருகின்றதாம். இதை திபெத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரெஞ்சு மாதாகிய திருமதி. லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப்பற்றி வியக்கமாக எழுதுகிறார். (இந்த விபரம் 9-9-31 தேதி நவசக்தியில் காணலாம்.)

ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்று தான் சொல்லவேண்டும். எந்தப்பழக்கவழக்கம் சீர்த்திருத்தம் என்றாலும் நம்நாடு--நம்மதம்--நம்ஜாதி--நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது?  என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச்செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கிறார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது?  எப்படி இருக்கின்றது? என்பவைகளைப்பற்றி கவனிப் பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன? இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப்படுகின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பதுபோன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோகிடையவேகிடையாது என்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. இந்தக் காரணமேதான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடுதலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டி ருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக்காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவகுண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தைமறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமுக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

-  விடுதலை நாளேடு, 6.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை  - சித்திரபுத்திரன் -

10.05.1931  - குடிஅரசிலிருந்து...

அர்ச்சகர்: என்ன ஜோசியரே கோவிலுக்கு முன் போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: என்ன காரணம்?

அர்ச்சகர்: இந்த இழவு எடுத்த சுயமரியாதைதான்!

ஜோசியர்: சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை. பூதம் இல்லை என்று  சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போக கூடாது  என்று பிரச்சாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர்:  இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை இன்னமும் ஆயிரம்  தடவை  சாமி  இல்லை பூதம்  இல்லை என்று சொல்லட்டும். கோவிலை வேண் டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால்  நமக்கு ஒன்றும்  கெட்டுப் போகாது.

ஜோசியர்: மற்றென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்: கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றிக் கண்டபடி பேசி அதை நிறுத்தி விட்டார்கள் அல்லவா  அதனால் தான்.

ஜோசியர்: இதற்கும் பக்திக்கும் சம்பந்தமென்ன? இதனால்   எல்லாம் மக்களுக்கும் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்ச்சகர்: கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்?  கடவுள்தான் எங்கும் நிறைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வரவேண்டுமா?

ஜோசியர்: மற்றெததற்காக வருகின்றீர்கள்?

அர்ச்சகர்: இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு  வருகின்றார்கள்.

1. தன்னை பக்திமான்  என்று பிறர் மதிக்க வேண்டும்

2. அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண்களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும்  இரண்டாவது விஷயத்திற்கு தான் அதிகப் பேர்  வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வழிகள்  சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபல முடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய்   வராவிட்டால்  குடும்பப் பெண்களும் வருவதில்லை.  ஆக இப்படிப்பட்ட இரண்டு  கூட்டம் வந்தால்தானே.  காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு  ஆகியவைகள் கிடைக்கும் ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில்  என்ன பிரயோசனம்?   கோவில் சம்பளமாகிய  மாதம் 1-12-0 ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?

ஜோசியர்: அப்படியா சங்கதி? அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ?

அர்ச்சகர்: என்ன வழி?

ஜோசியர்: நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி,நன்றாய் அலங்கரித்து தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்ச்சகர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை,புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சௌகரியம், வீடு,வாசல், கட்டில், படுக்கை முதலிய சவுகரியம் ஆகியவைகள் வேண்டாமா?  இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது? நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து  சரிபண்ணி  அதுவும் இரகசியம் என்றும் அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 பெற்றுக்கொண்டு கஷ்ட மில்லாமல்,  நஷ்டமில்லாமல்  சம்பாதிப்பது நலமா? அப்படிக் கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோசியர்: என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது.

அர்ச்சகர்:  உங்களுக்கு  என்ன வந்தது?

ஜோசியர்: இப்போது  எந்தத்தேவடியா மகன்  நம்மிடம்  ஜோசியம் பார்க்க வரு கின்றான்?  பிள்ளைக்கும்,  பெண்ணுக்கும்  பார்க்கின்ற  வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.

அர்ச்சகர்: ஏன்?

ஜோசியர்: என்ன அதுகளே பெண்ணும் மாப்பிள்ளையுமே  பொறுத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்ச்சகர்: இருந்தாலும் இப்ப கிரகதோஷம் பார்க்கவாவது  வருவார்களே.

ஜோசியர்:  அதாவது வந்தாலும் பரவாயில்லை.  அதற்குதான் எங்கு வருகின்றார்கள்? திருட்டுத் தேவடியா பிள்ளை  காயலா தலைவலி வந்தால் உடனே  டாக்டர்கள்  இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம்  வருவதேயில்லை. நம்மை கண்டால்  சிரிக்கின்றார்கள் . என்னடா என்றுக் கேட்டால்  சுயமரியாதையடா  என்கின்றார்கள்.

அர்ச்சகர்:  சரி. இவ்வளவு ஆனதுக்கு அப்புறம்  எனக்கு ஒன்று தோன்றுகின்றது.

ஜோசியர்: என்ன?

அர்ச்சகர்: நாமும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ள மெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது. எப்படி என்றால்  இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான்  அதாவது நானும் சுயமரியாதைக் காரன் என்று சொல்லிக்கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கிறார்களே அதுபோல.

ஜோசியர்: அது நல்ல வழிதான். நம்முடைய பெரியவாள் பௌத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள்.  ஆனால், இந்தச் சுயமரியாதை பயல்கள் (சுயமரியாதைக் காரர்கள்) இது தெரிந்து தான் பு.ம. பயல்களை (புராண மரியாதைக் காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள்.

அர்ச்சகர்: அதுவும் அப்படியா? அப்படியானால் இந்தப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும்  இந்த  சு.ம காரர்கள் நாசமாய், நிர்மூலமாய்ப் போகட்டும், நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து  கொள்ளுவோம்.

-  விடுதலை நாளேடு, 29.6.18