தந்தை பெரியாரை பற்றியும்,அவர் தொடங்கிய இயக்கம்,கொள்கை,கருத்துகள் மற்றும் கட்டுரைகள் இடம்பெறும்.
புதன், 22 ஜூலை, 2026
கம்யூனிஸ்ட் தோழர்களின் பார்வைக்கு...
ஞாயிறு, 12 ஜூலை, 2026
ஒரே நாடு, ஒரே மொழி?

தந்தை பெரியார்
மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து, இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும், இந்துஸ்தானி தெரிந்தவர்களுக்குக் கூட மவுலானா (பண்டித) இந்துஸ்தானி புரியவில்லை என்றும் கூறியதாகவும், இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்; இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப், சிப் என்று பேசாமலிருங்கள்; இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும், நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமா? என்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய்தியும், இந்துஸ்தானி யில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான் மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்னதாகவும், அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும், சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.
இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல் லப்படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும், திராவிடர்களை அவமதிப்பதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும், நாம் நெடுநாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும், நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை – ஆணவத்திற்கு அடங்கி அடிமைகளாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை – உணர்ந்து அனுபவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம். முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவதெல்லாம் இந்துஸ்தானி யில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகு, தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால், அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவமாகத்தான் இருக்க முடியுமா? என்றும், உன்னுடைய உரிமைக்கு என்னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையா? என்றும் கேட்கின்றோம். மேலும், தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும், நியாயமும், இருக்கிறதோ அந்த உரிமையும், நியாயமும், ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகு மென்றும், அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்? எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான், முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும். இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.
ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம் என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ அப்பொழுதுதான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும்.
ஆனால், நாட்டின் பல சிக்கல்களை அறுத்து, முடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறிவாளிகள், ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல், தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால், இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும், வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால், மாணவர்கள் ஸ்தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும், அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான் மையைக் காட்டவில்லையா? எனவும், இந்தப் போக்குத் தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும், நம் திராவிடத் தேசியத் தோழர்களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.
பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில், இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும், இந்த நிலை மையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழி? என் றால், சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டு விடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலை வர்களால், தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.
இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழி களையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், பலவேறு மொழிகளும், நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்து, குணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவை, ஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச் சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும், பல முறை விளக்கி வந்திருக்கிறோம். கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தை களுடன் சிறை புகுந்து, இருவரை உயிர்ப்பலி கொடுத்து, உலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்து, அதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.
திராவிடர்கள் இந்தி, இந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள், பகுத்தறிவுவாதிகள். இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்பு? மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிர, எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்விக சக்தியோ, வேறு மகாத்தியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் – ஒப்புக் கொள்ளாதவர்கள் – பகுத்தறிவுவாதிகள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?
இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும், எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.
இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும், ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும், வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையே, இந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?
“எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தன. அவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியா. இதைக் கண்டு நான் பெருமையடைகிறேன்” என்கிறார் தோழர் ஜவஹர்லால். அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர்களைச் சூத்திரர்களாக்கி, தேவடியாள் பிள்ளைகளாகச் செய்து, சமுதாயத்தில் தாழ்வுறச் செய்து, ஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கி, கல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்து, பார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும், மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங்கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமுமின்றி, வஞ்சகத்தை வீரம் என்றும், தந்திரத்தை அறிவுடைமை என்றும் கருதச் செய்து, காரண காரியத்தைக் கண்டறியும் சக்தியை, இழக்க செய்துவிட்டது என்பதையும்; அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான் இந்த நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.
இந்தியா ஒரு நாடு என்பதையும், அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் – பகுத்தறிவு வாதிகள் – ஒப்புக் கொள்ளாததை, எந்த அறிவுடையவனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றது. விளங்கிக் கொள்ள மறுப்பவர் களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிர, மற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.
ஒட்டி வாழ முடியாத – வாழுவதற்கான இயல்பில்லாத – ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம், என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ, அப்பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும், அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும், காந்தி நாடு, காந்தி மதம் என்பதைக் கைகொண்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பினால்தான், ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்; பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும், அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும், பொது மொழியாக்குவதுதான் எளிது என்பதையும், உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையுடைய தேசிய வாதிகள் என்பார்கள், விரைந்து தெளிவடைய வேண்டியனவாகும்.
ஜாதி பேதமற்ற – மத உணர்ச்சிக்கும் இடமில்லாத – சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும், மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான், சமதர்ம வீரர் ஜவஹர், ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப் பட்டு வருகிறது என்பதையும், காந்தியார் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போது, இந்தியாவை ஒரு நாடு என்பதும், இதற்கு இந்துஸ்தானியோ, இன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும், வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியே யாகும். இம்முயற்சி, திராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என் பதை, இப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 28.02.1948
-விடுதலை நாளேடு, 12.07.26
செவ்வாய், 7 ஜூலை, 2026
தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும்

தந்தை பெரியார்
சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள், மூலமாகவும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
விஷமப் பிரச்சாரம்
இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட்டத்தவருள் பெரும்பாலோர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு அம்மன் காசோ செலவழிக்காத ‘‘தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரச்சாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு விவகாரங்களில் நீதியை எடுத்துச் சொல்லுவதற்கு என்று ஏற்பட்டிருக்கும் நியாயவாதிகள் எனப்படும் வக்கீல்களின் நாணயம் எவ்வளவோ, அதைவிட மோசமான யோக்கி யதையுடையவர்கள் என்றே சொல்லவேண்டும். அதாவது வக்கீல்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்லும் வாதத்தில் எவ்வளவு மனச்சாட்சி உண்டோ, அதைவிட மோசமான மனசாட்சியும் வக்கீல்களுக்கு அந்த வாதங்களில் எவ்வளவு கவலை (தங்களது வரும்படியைப் பொறுத்தவரையில் மாத்திரம்) உண்டோ அதைவிட மோசமான (பிரசங்கம் நடக்க வேண்டிய அளவையும் பத்திரிகை செலவாகும் அளவையும் புத்தகம் விற்கும் அளவையும் பொறுத்த வரையில் மாத்திரம்) கவலை உடையவர்கள் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் நாம் காட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே நமது அபிப்பிராயம் .
எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனாலும் சில பத்திரிகைக்காரர்களையும், சில பண்டிதர்களையும் சில புத்தகக் கடைக்காரர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் இதன் யோக்கியதை தானாகவே விளங்கிவிடும்.
அதாவது எப்படி தேசியத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும் தேசத் துரோகமானதென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அதுபோலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற அபிப்பிராயங்கள் சரியானதல்ல வென்றும் மத விரோதமானதென்றும் நாஸ்திக மென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
சம்பந்தம் உண்டா?
அப்படி இருப்பதிலும் பொதுவாக மக்கள் ஏமாறும்படி பேசுவதும் எழுதுவது மாயிருக்கின்றார்களே ஒழிய விவகாரத்தை எதிர்ப்பதில் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கட்சியை நிலைநிறுத்த வலியுறுத்துகிறவர்களாகவும் இல்லை. உதாரணமாக இக்கூட்டத்தவர்களின் மனப்பான்மையையும் வாழ்க்கையையும் அறிந்த உங்களுக்கு, இவர்களது வார்த்தைக்கும் எழுத்துக்கும், மனிதத் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை ஒருவாறு அறியலாம். அது எப்படியோ இருந்துபோகட்டும் என்றாலும் இந்த சைவமும் வைணவமும் சமயாச்சாரிகளும் மக்களுக்கு எதற்காக வேண்டும் என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். தேசமோ மக்களோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அறிவும் ‘சயன்ஸ்’ என்று சொல்லும் படியான விஞ்ஞானத் தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைந்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முதலில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இவைகளில் முன்னேற்ற மடைந்த தேசமும் மக்களுந்தான் இதுவரையில் உண்மையில் முன்னேறி வந்திருக்கின்றார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாசகர்கள் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தெரிய வேண்டிய அவசியமிருக்குமானால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளைச் சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் தானாக விளங்கும். எனவே மேல்கண்ட அறிவு, ஆற்றல், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஏற்றதாக நமது மதமோ மதாச்சாரியர்களோ அல்லது சாமிகளோ இருக்கின்றனவா என்பதைத் தனியே இருந்து பாரபட்சம் விருப்புவெறுப்பு இல்லாமல் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
நமது மதமென்பதோ வேதமென்பதோ சாமிகள்
என்பதோ சமீப காலத்தில் ஏற்பட்டதாகச் சொல் வதற்கில்லை. யுகம், சதுர்யுகம், மகாயுகம், கல்பம் என்பவைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு சரித்திர ஆராய்ச்சிப்படிப் பார்த்தாலும் 5000, 6000 வருஷகாலத்திற்கு குறையாதது என்று சொல்ல இடமிருக்கின்ற தென்பதில் ஆராய்ச்சிக்காரர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை. உலகத்தில் தோன்றி இப்போது ஜீவனுடனிருக்கும்மற்ற சமயங்கள் எல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்டதாகவே இருக்கிறது அப்படி இருக்க நம் தேசம் மாத்திரம் இன்னிலையில் இருக்கக் காரணமென்ன என்பதற்கு மேல் கண்ட சமயவாதிகள் என்னபதில் சொல்லுகின்றார்கள்?
யாருக்கு நன்மை
மற்றும் சமயத்தையே ஆதாரமாகக் கொண்ட ராமன், கிருஷ்ணன் போன்ற விஷ்ணு அவதார அரசர்களும், மீனாட்சி சொக்கலிங்கர் போன்ற சிவ அவதார அரசர்களும், மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற தெய்வத் தன்மை தாண்டவ மாடிய அரசர்களும் ஆண்ட காலத்தைவிட இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி அரசாங்கமோ எந்த விதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிறு உதாரணம் சொல்லக்கூடுமோ என்று கேட்கின்றோம்.
எனவே ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலை, குலைந்து வருவதையும் தேசம் அடிமைப்பட்டு வருவதையும் தொடர்ச்சியாக கேட்டுப் பார்த்தும் வந்தும் கொஞ்சமாவது அறிவு என்பதை உபயோகப்படுத்தி இதன் காரணங்கள் என்ன என்பதை கவனிக்காமலும் அக்கம் பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு ஒரு சிறிதும் திரும்பிப் பாராமலும் மக்களை பாழும் சமயம், சமயாச்சாரி சாமி என்பதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன நன்மை விளையக்கூடும் என்று கேட்கின்றோம்.
சாமியின் மூலமும் சமயத்தின் மூலமும் சமயாச்சாரிகளின் நடத்தையின் மூலமும் மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்பிக்கலாம் என்று யாராவது சொல்ல வருவார்களேயானால் அவற்றை யெல்லாம் விட்டு விட்டு நேரே ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலன்களையும் கற்பிப்பதால் என்ன நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.
இதுகால பரியந்தம் அதாவது குறைந்தது 5000 வருஷ காலம் இந்த வேலையைச் செய்து பார்த்தாய் விட்டதல்லவா? இனி ஏன் புதுமுறையைக் கண்டுபிடிக்கக் கூடாது. சாதாரணமாக வைத்திய சிகிச்சையில், வியாதிக்கு தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு அது ஜீரணக்கருவி மூலம் ஜீரணிக்கச் செய்து சக்கையை மலத்தின்மூலம் கழித்து சத்தை இரத்தத்தோடு கலக்கும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட மருந்தின் உண்மையான சத்தை எடுத்து நேரே ரத்தத்தில் சேர்த்து வேலை செய்யும்படி (இன்ஜெக்ஷன்) செய்வது போல ஒழுக்கங்களையே கற்பிப்பதில் என்ன நஷ்டம் என்று கேட் கின்றோம். ஒரு சமயம் அந்த தொழில் பழகாத சில வைத்தியர்களுக்கு வேறு தொழில் கற்றுக் கொள்ளும்வரையில் வயிற்றுப் பிழைப்புக்கு கஷ்டமாயிருக்கலாம். இதற்காக மக்கள் வியாதியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்த்தால் சிலரது வயிற்றுப்பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. நிற்க.
ஆதாரம் இல்லை
பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டத்தினர்களின் யோக்கியதையையும் உண்மையையும் அறியாமல், நாம் ஏதோ சற்று அளவுக்கு மீறி சற்றுவேகமாய்ப் போவதாக கருதுகிறார்கள் போல் தெரியவருகின்றது. ஆனால் அவர்கள் அப்படி கருதுவதற்கு ஆதாரமோ நியாயமோ ஒன்றும் எடுத்துக்காட்டாமல் ‘இருந்தாலும் இவ்வளவு கடினமாக போகலாமா’ என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் நாமும் அவற்றை ஒரு சிறிதும் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் நேற்றுவரை அமிதவாதிகளாக இருந்தவர்கள் அந்தக் கொள்கையுடனேயே நம்மால் மிதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களாகி விட்டார்கள். காரணம் என்னவென்றால் நாம் அவர்களைவிட சற்று வேகமாய்ப் போவதாக ஜனங்கள் நினைப்பதுதான்.
இதே முறையில் வெகு சீக்கிரத்தில் நாமும் மிதவாதிகள் என்று கருதப்படக்கூடியவர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு.
நம்மைவிட வேகமாகப் போகக் கூடியவாலிபர்கள் முளைப்பதை வளருவதை நாம் நேரிலேயே பார்க்கின் றோம்.
உதாரணமாக எவ்வளவு கொடுமையை அனுபவிப்ப தானாலும் பலாத்காரம் என்றால் இன்னமும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துச் சொல்லி மெய்ப்பித்துப் பார்க்கலாம். முடியாவிட்டால் இன்னமும் பொறுக்கலாம் என்கின்ற எண்ணமே தோன்றுகிறது.
எச்சரிக்கை
மக்களின் சுதந்திரத்திற்கும் அறிவிற்கும் சுயமரியா தைக்கும் உலகம் போகின்ற போக்கில் நாம் இருக்கும் நிலை எவ்வளவு பிற்பட்டது என்பதையும் நமது போக்கு அசைவற்றதும் நிதானமுமானது என்பதையும் யாராவது கவலையுடன் சிந்தித்துப் பார்த்தால், கடுகளவு கவலை இருந்தாலும் மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும் அவர்கள் கதைகளும் நம்மை ஒரு சிறிதும் தடைப்படுத்தவே மாட்டா என்றே துணிந்து சொல்லுவோம். ஆனால் அவற்றில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் தங்கள் வாழ்வும் அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்று தான் சொல்லவேண்டும்.ஆதலால் பொதுமக்கள் இனிதான் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
– குடிஅரசு – தலையங்கம் – 30.09.1928
-விடுதலை நாளேடு, 21.6.26
பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்
கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.
கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.
கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்ன என்று வேலைக் கொடுக்கிறார்கள்? கடவுள் சக்தி என்று எதைச் சொல்லுகிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயவம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அதுபோலவே கடவுள் இல்லை; கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதுவும் இல்லை என்று அறிந்தும் கூட, பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள்.
இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.
கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போல் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைக் காரன் என்றுதான் நினைத்துக் கொள்கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக்கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை.
தனக்கோ, தன் பிள்ளைக்குட்டி, தாய் தந்தைக்கோ சிறு நோய் வந்தாலும் உடனே டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்று கருதுவதில்லை. “அது வேறு விஷயம்; இது வேறு விஷயம்” என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்!
மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோவில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஒரு ஊர் கோவிலை பெரியதாகவும், மற்ற ஊர் கோவிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும், ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்தப் பேதம் சமுத்திரத்தில் கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.
150 கோடி மக்களால் மதிக்கப்படும் யேசு கிறிஸ்து, “கோயில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்குமிடம்” என்று சொன்னார்! அது மாத்திரமல்லாமல், சுமார் 40 கோடி மக்களால் மகாத்மா என்று கருதப்படும் காந்தி ‘கோயில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு’ என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரர்களில் யார் இதை நம்புகிறார்கள்? அனுசரிக்கிறார்கள்?
கக்கூசு எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக் கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது?
50 கோடி மக்கள் வாழும் நமது ‘இந்தியா’வை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோயில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத்தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்!
எவ்வளவு சொத்து பண விரயம் – நேர விரயம் – முயற்சி விரயம். படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட்டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு – ஆபாசம் இருந்து வருகின்றன!
இதற்குப் பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒரேயடியாக “கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதி கள் (நாத்திகர்கள்) என்று பிள்ளைகளுக்குப் பிரச்சாரங்களில், காலட் சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது” என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும், எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக் கூடாது; சேர்க்கக் கூடாது.
இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!
(பெரியார் எழுதிய தலையங்கம், ‘விடுதலை’ 20.10.1967)
-விடுதலை நாளேடு, 19.6.26
மனிதனே சிந்தித்துப் பார் - பெரியார்
கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன்.
இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மையுடைய வனாக ஆகவேண்டும்.
உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத்தக்கதாகும்.
கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும், சிக்கிமுக்கிக் கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும்,
கட்டை வண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.
பிறக்கும் மக்களில் 100-க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100-க்கு 75 பேர்கள் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினாலென்றே அறிகிறோம்.
கடவுள் நம்பிக்கைக்காரர்கள், இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்.
இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற் றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.
- முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?
- கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?
- அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?
- பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?
- அந்தப் பல கடவுள்களுக்கும் பெண்டு பிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?
- பிறகு பெண்டு, பிள்ளை, காதலிகளும் எப்படி கடவுள்கள் ஆனார்கள்?
- இவைகளுக்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?
- இவைகள் மனிதர்களுடன் மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?
- இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவைகளாக எப்படி ஆயிற்று?
- இவை ஒருபுறமிருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்குக் கடவுள் சக்தி எப்படி வந்தது?
- இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு – தாழ்வு எப்படி ஏற்பட்டன?
- இவைகளுக்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?
- உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றைப் பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும், உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற் றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?
மனிதனே சிந்தித்துப்பார்!
(பெரியார் எழுதிய தலையங்கம்,
‘விடுதலை’ 10.10.1967).
- விடுதலை நாளேடு, 19.6.26
