சனி, 3 நவம்பர், 2018

தலை விதி

20.11.1932 - குடிஅரசிலிருந்து...



கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலை மைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவது தான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப் படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,
ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப்படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.
இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலி ருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.
இவ்வளவு தானா?

இவ்வளவு மாத்திரம் தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசு தாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர் களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சபுத்திரர்களே!! நீங்கள் முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது வைத்து கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக்கிறீர்கள். இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டி ருக்கும் இச்சுக போகம் உங்களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலம் கடவுள் பக்தர்களான பாதிரிகுரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம் மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோட்சலோகத்திலும் சுலபமாக  இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்  என்பதேயாகும். ஆகவே தோழர்களே! இந்த காரணங்களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன  என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
- விடுதலை நாளேடு, 2.11.18

கடவுள்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


கடவுள் என்பது அர்த்தமும்  குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயி ருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன் னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை. பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படி யாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத் தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரச்சாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப்படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணரு வதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது. யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன் னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறு வதுமாய் இருப்பதோடல் லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது.

கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வசக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

ஒரு வேடிக்கை


இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், உடையதும் கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும், உரு வமும் இன்னதன்மை யென்று  குறிப்பிடக் கூடிய தன்மையும் இல்லாதது? மான ஒரு கடவுளை நிலை நிறுத்தவும் அதைப் பற்றி மக்கள் நம்பிக்கை  கொள்ளவும் கடவுளால் உண்டாக்கப்பட்ட மக்களிலேயே பலர் வக்காலத்துப் பெற்று கடவுளை நிருபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்க ஈனமான முறையிலும் எவ்வளவோ பாடு படவேண்டியிருப்பது மேயாகும்.

மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப் படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும் தங்களால் சொல்லப் படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்லுவதாகவும், நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள். அது மாத்திரமல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும், சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதாகவும் சொல்லுவதாகவும், எழுதுவ தாகவும் கருதுவதுடன், மற்றவர்கள் மீது துவேஷம், வெறுப்பும், விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி  நடவுங்கள் என்றும், தங்களுக்கு இன்ன இன்ன காரியங் களைச் செய்து கொடுங்கள் என்றும் கோரு கிறார்களேயல்லாமல் இவையெல்லாம் சர்வ வல்லமை உள்ள கடவுள் செயலால்தான் நடக்கின்றது. நடந்து விடும் என்ற நம்பிக் கையும் உறுதியும் தைரியமும் இல்லாத வர்களாகவே இருக்கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 2.11.18

வெள்ளி, 2 நவம்பர், 2018

ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக் கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்குக் காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம்.

அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடி யில் போய் ஒளிந்து கொண்டானாம்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்தி ரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்கு வதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து  விட்டாராம்.

அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக் குத்தான் நரகாசூரன் என்று பெயராம்.  இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம். நரகாசூரன், விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்ன புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை  எண்ணி வெட்கப் படுங்கள். ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?

சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என் றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?

கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசூ ரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?

அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக் காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?

அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டா ளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழி வானது நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தி யாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்காள விரிகுடாக்கடலும் தானா? இதை அந் நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவ மானத்தை உலகம் கொண் டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப் பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர் களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லு வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், பார்ப்பன அடிமை களான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.

இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங் களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தி யும், மனவேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண் டாடுவார்களா?

குடிஅரசு 31.10.1937
-  விடுதலை நாளேடு, 2.11.18

வியாழன், 1 நவம்பர், 2018

தீபாவளிப் பண்டிகையை உண்மையான தமிழ் மக்கள், திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண்டாடவோ கூடாது

தந்தை பெரியார்




படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்களிடம் அறிவாராய்ச்சியை எதிர் பார்க்க முடியுமா? - தந்தை பெரியார்

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக் கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டா டப் போகின்றீர்களா? என்பதுதான். நீங்கள் என்ன செய் யப் போகின்றீர்கள்? என்று கேட்பதின் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப் புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுக ளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடங் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே அல்லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அதுவிஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்?

இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர் களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காது களைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக் குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புரா ணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும், நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களா வீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரை யும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக் களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண் டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோ கப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அபரிமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கும் கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கின்றது என்பது மான விஷயங்களொரு புறமிருந்தாலும், மற்றும் இவை களுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்து வார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்தவிதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக்கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண் மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண் டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலி யவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறி வுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்த மான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண் டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும்? என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக் கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும், பட்ட ணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க் கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங் களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னை யில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மை யோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள்.

சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத் தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள்தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள்தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும், இவற்றில் தமிழ்ப்பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர் கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப் பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டுமென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என் கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச் சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப்பண்டிகை என்பதை உண்மையான தமிழ்மக்கள், திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண் டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு, 16.10.1938

- விடுதலை நாளேடு, 1.11.18