புதன், 20 மார்ச், 2019

நீங்கள் இன்ப வாழ்வு வாழ.....? -தந்தை பெரியார்

05.06.1948, குடிஅரசிலிருந்து... தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவ தையும், பார்ப்பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத் தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதுதான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவது தான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக் களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பன வற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவை யாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட்டத்தின் மூலம் பல உரிமைகள், சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்தி ருக்கின்றன. அவ்வுரிமைகளை அனுபவிக்க உங் களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டிருப் பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம்பரங்களுக்காக, அவ்வப்போது வெவ் வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத் தான் நீங்கள் ஆக நேரிடும். ஆகவே, அவ்விருப்பங் களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்.
- விடுதலை நாளேடு, 15.3.19

திங்கள், 18 மார்ச், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள் (1)

13.11.1948 - குடி அரசிலிருந்து...

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச் சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறை களையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?


ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரியநூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள் வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப் பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர் களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்


மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறுகிறன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்து ணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற் கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்தி ருக்கக் கூடியனவும் ஆன கருத்துக் களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக் குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத் திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு ராமாயணக் காலட்சேபமா?


நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டு மென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க் கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப் பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப்பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!


கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டி லேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும், எல்லோ ருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்தி ருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. திராவிடர்களை இழிமக்களென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மை யைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும் படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்


ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழி தன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற் பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற் பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படு கின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

தொடரும்..

 - விடுதலை நாளேடு, 15.3.19

செவ்வாய், 5 மார்ச், 2019

இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா?



28.02.1948  - குடிஅரசிலிருந்து...

வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக் காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - பாட்டாளி மகனுக்குத் துணை செய்ய முன்வராது. அதன் இயல்பும் அதுவல்ல.

நம் நாடும் எதிர்காலத்தில் அமைத்துக் கொள்ளப்போகும் அரசியல் முறை இது.

இன்று வரியால் பிழைக்கும் அரசியல் முறையில், பாட்டாளி மக்களையும், அவ்வரிக் கொடுமைக்கு ஆளாக்கும் போது கொடுமை! கொடுமை என்ற கூக்குரல் உண்மையொலி யோடு அடிவயிற்றிலிருந்து எழுந்து முழங்கப் படுவதைக் கேட்கிறோம். இக்கொடுமை தொலைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதாபிமானம் உள்ளவனும் நினைப்பான்.

இந்த நிலையோடு, இந்நாட்டில் பார்ப்பனர் களுக்குக் கொடுத்துவரும் வரிகளையும் சேர்த்து எண்ணும்போது, அரசாங்க வரிகொடு மைக்கு முன்னால் உஞ்சிவிருத்திக் கூட்டம் மக்கள் உழைப்பை உறிஞ்சிவரும் கொடுமை முதலில் ஒழிய வேண்டுமென்றே வஞ்சகம் - தன்னலம் இல்லாத எந்த அரசியல்வாதியும் எண்ண முடியும் - எண்ண வேண்டும்.

அரசாங்கத்திற்கு வரி கொடுப்பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் எண்ணிக்கை வரையறையும் இதற்குண்டு.

ஆனால், பார்ப்பானுக்கு வரி கொடுப் பவர்கள் எத்தகையவர்கள்? எத்தனை பேர்? தகுதியும் இல்லை; வரையறையும் இல்லை. இந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற வனாய் சூத்திர பட்டியலில் இருக்கும் எல்லோ ருமே எத்தகுதியுடையவர் களாய் இருந்தாலும் கொடுத்து வருகின்றார்கள் எப்படி?

1. குழந்தை பிறந்தால், அது பிறந்தவுடனே பார்ப்பனனுக்கு வரி (தட்சணை) கொடுக்க வேண்டும். இல்லையேல் குழந்தை நலமுடன் வளராது.

2. குழந்தை பிறந்த 16 ஆவது நாள் தீட்டுக்கழியும் சடங்கு. இந்தத் தீட்டைக் கழிக்க மந்திரத்தையும், தர்ப்பைப் புல்லையும் கொண்டு வருவான் பார்ப்பான். இதற்கு அவனுக்கு வரி.

3. குழந்தை பிறந்த சில நாள் கழித்துக் குழந்தைக்குப் பெயரிடல். பெயரைத் தேர்ந்தெடுத்தவர்கள் பெற்றோர்கள். இதை அவன் வாயால் அழைத்துப் போவதற்கு அவனுக்கு வரி.

4. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு முடிந்தால் அப்பொழுது ஆண்டுவிழா. இந்த விழாவிற்கும் அவனுக்கு வரி.

5. பிறகு அந்தக் குழந்தைக்கு உணவூட்டல். இந்த உணவூட்டுவதற்கும் பார்ப்பானுக்கு வரி.

6. குழந்தை ஆணாயிருந்தால், அக் குழந்தைக்குச் சிரைத்துக் குடுமி வைக்க வேண்டும். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

7. அய்ந்தாவது அல்லது ஏழாவது வயதில் குழந்தைக்கு அட்சராப்பியாசம். இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

8. பெண் குழந்தையாயிருந்தால் அது பருவமடைந்தவுடன் ருது சாந்தி. இதற்கும் பார்ப்பானுக்கு வரி.

9. எந்தக் குழந்தையாயிருந்தாலும் கலியாண மென்றால், பொருத்தம் பார்ப்பது, நாள் குறிப்பது, கலியாணம் செய்து வைப்பது, இருவரையும் படுக்கவைப்பது என்கிற பெயர்களால் இத்தனைக்கும் பார்ப்பானுக்கு வரி.

10. இறந்தால், இறந்த பிணத்தை அடக்கம் செய்ய, இருப்பவர்கள் பிணத்திற்காகப் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

11. இறந்தவர்களின் மகன் உயிரோடிருக்கும் வரை, ஒவ்வொரு ஆண்டும் திவசம் என்ற பெயரால் பார்ப்பானுக்கு வரி கொடுக்க வேண்டும்.

12. கிரகண நாளாயிருந்தால், கிரகணத் திற்கும், மாதாமாதம் அமாவாசைக்கும் பார்ப் பானுக்கு வரி.

13. இன்னும் கலப்பை கட்டுவது, விதைப் பது, அறுப்பது ஆகிய உழுதொழிலுக்கும், அவைகளுக்கு நாள் பார்த்துக் கொடுப்பதற்கும் பார்ப்பானுக்கு வரி.

இவை போன்ற - எந்த அரசாங்கமும் வாங்காத வரிகள் எல்லாம் பார்ப்பனியம் வாங்கிக் கொள்ள கொடுத்து வருகிறோம். எப்படி?

பார்ப்பான் காலில் விழுந்து, நான் கொடுக்கும் இது எவ்வளவு குறைவாயிருந்தாலும், அதைக் குறைவாகக் கருதாமல், பூரணமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிராத்திக்கின்றோம். இதற்குப் பார்ப்பான் காட்டும் நன்றி, முழங்கால் முட்டி அடிபட, விழுந்து விழுந்து எழுந்திருக்கச் செய்வதும், மாட்டு மூத்திரம், சாணிகளை மாகாத்மியமாக எண்ணிக் குடிக்கச் செய்வதும், தேவடியாள் பிள்ளை என்ற பட்டமும்.

இந்த வரிகள் கொடுக்க வேண்டுமா? பார்ப்பான் பழங்கதையும் சாஸ்திரத்தையும் காட்டிப் பணம் பிடுங்கத்தான் வேண்டுமா? நாங்கள் இழிவையேதான் அடைந்து வர வேண்டுமா? இதையெல்லாம் கேட்பதா வகுப்புத்துவேஷம்? உன் சொந்தப் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பின் நீ முடிவு கட்டு!

- விடுதலை நாளேடு, 2.3.19

நம்புவதற்கு ஆளிருந்தால் புளுகுவதற்கு பஞ்சமா?

07.02.1948 - குடிஅரசிலிருந்து...

காந்தியார் உயிர் நீத்த பின் அவரைப் பிழைக்க வைக்கத் தன்னால் முடியும் என்றும், எனவே தன்னை டில்லிக்கு அனுப்பி வைக்குமாறும், சென் னை பிரதமரிடம் ஒரு சாமியார் வேண்டினாராம். அதற்குப் பிரதம மந்திரி அவர்கள் உண்மையில் சாமியாருக்கு அவ்வளவு சக்தியிருக்குமானால் ஏன் சென்னையிலிருந்த வண்ணமே உயிர்ப்பிக்கலாமே என்று பதில் அளித்து விட்டார்.

பிறகு சாமியார் கவர்னரைக் கண்டு கேட்க அவர் தம்மால் நம்ப முடியவில்லை என்று சொல்லி விட்டார்.

ஆனாலும், சாமியார் முயற்சி குன்றவில் லையாம். டாக்டர் சுப்பராயன், டாக்டர் அழகப்ப செட்டியார் ஆகியவர்களை நம்பும்படி செய்து-ஏன்? அவர்களும் நம்பியே சாமியாரை விமானத்தில் டில்லிக்கு அழைத்துச் சென்றார்களாம்.

டில்லி சென்றார் சாமியார். காந்தியாரின் கை, கால்களைத் தொட்டார். ஆனால், அவர் உயிர் பெற்று எழவில்லை.

அத்துடனாவது சாமியார் புளுகு நின்றதா? என்றால், அதுதான் இல்லை. மேலும் புளுகினாராம், தொண்டையை அறுத்து ஒரு குளிகையைப் போட வேண்டும் என்று. அழைத்துச் சென்ற இரு பெரியார் களை யோசனை கேட்டி ருந்தால் அதுவும் செய்ய சொல்லியிருப்பார்களோ? என்னவோ? ஆனால், அங்குள்ளவர்கள் யாரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சாமியாரை வெளியேற்றி விட்டனர்.

பிழைக்க வைப்பதாகப் புளுகியவர் பிழைக்க வழியின்றி டில்லியிலேயே விடப்பட்டாராம், இங்கு கிடைத்தது போல் அங்கு இரண்டு பேர்வழிகள் அகப்படாமலா போவார்கள் என்ற நம்பிக்கை ஒரு சமயம் சாமியாருக்கு இருக்கலாம் அல்லவா?

- விடுதலை நாளேடு, 1.3.19

இது மூடநம்பிக்கை அல்ல!

14.08.1948 - குடிஅரசிலிருந்து...

எனக்குத் தெய்வீகம் என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற் பட்டதல்ல.

பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வரு பவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக் காட்டு கிறான். ஆதலால், நான் மூடநம்பிக்கையில், மகாத்மா தன்மையில் இதைப் பேசவில்லை. சத்திய நீதியில் பேசுகிறேன், எப்படி என்றால்,

இது நம் நாடு. வடநாட்டான் ஆதிக்கம் செலுத்து கிறான். சுரண்டுகிறான்.

நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டு மன்னர் சந்ததிகள். ஆரியன் ஆதிக்கம் கொண்டான். பிச் சைக்குப் புகுந்த ஆரியனுக்குப் பிறவி அடிமையாயிருக்கிறோம்.

தமிழ் நம் நாட்டு மொழி, இனமொழி. இந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றமொழி. வடமொழி - அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் நம் மனிதத்தன்மை, மானம், உரிமை பாழாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நம் உடன் பிறந்தவர்கள் விபீஷ ணர்களானது உண்மையில் மகாமகா இழிவு என்பது சத்தியம்.

இவைகளைத்தான் சத்தியமும், நீதியும் ஆகும் என்றேன்.

இவை தோல்வியுறாது!  தோல்வி உறாது! தோல்வி உற்றால்தான் நட்டம் என்ன? அந்தத் தோல்வியைக் கண்டிப்பாய் நாம் அனுபவிக்கமாட்டோம். நம்மைத் தோற் கடித்தவர்களும், தோல்வியைக் கண்டு சும்மா இருப்பவர்களும், தோல்வியைச் சகித்துக் கொண்டு உயிர் வாழுபவர்களுமேயாவார்கள், அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

- ஈ.வெ.ராமசாமி

- விடுதலை நாளேடு, 1.3.19

கடவுள் தர்பார் (2)

31.01.1948 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

கடவுள்: என்னடி பொறுமை ரூபி, கருணை ரூபி. அவர்கள் இங்கு குறைகளைத் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ள வந்திருக்கிறவர்கள். எங்கிருக்கிறார்கள் என்று சொன்னதைக் கேட்டாயோ? சுயராஜ்யத்தில் இருந்து வந்தார்களாம். சுயராஜ்யத்தில் இருப்பவர்களுக்கு இங்கு என்ன வேலை? என்னிடத்தில் எதற்குத் தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்வது? சுயராஜ்யம் என்றால் என்ன அர்த்தம் என்று உனக்குத் தெரியுமோ? இல்லையோ? சுயஆர்ஜ்ஜிதம் என்றால் என்ன? ஒருவன் தானாக சம்பாதித்தது என்றுதானே அர்த்தம். அது போல் சுயராஜ்யம் என்றால் என்ன? அது அவனுடைய ராஜ்யம் என்றுதானே அர்த்தம். அவர்களுடைய ராஜ்யத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றுதானே அர்த்தம். ஆகவே மகா ஜனங்களின் ராஜ்யத்தில் மகாஜனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், இந்த வெட்கங்கெட்ட பசங்கள் இங்கு என்னத்துக்கு வந்து கேள்வி கேட்பாடு இல்லையா என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுவது என்பது.

இந்தப் பயல்கள் நான் ஒருவன் இருக் கிறேன் என்பதாக நினைத்தார்களா? இந்த ராஜ்யம் என்னுடையது என்பதை மதித்தார் களா? என்னால் எதுவும் செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்டார்களா? இது கடவுள் ராஜ்யம், இது கடவுள் செயல், என்பதை நினைத்தார்களா? இப்படிப்பட்ட பயல்கள் உதைப்பட்டால், அடிபட்டால், சோத்துக்குத் திண்டாடினால், துணிக்குப் பறந்தால், பெண்டு பிள்ளைகளைக் கண்டவன் அடித்துக் கொண்டு போனால் எனக்கு என்ன? உனக்குத்தான் என்ன? கவலைப் படட்டும்! இன்னும் படட்டும்! சுயராஜ்யம் என்பதிலுள்ள சுயம் என்பது ஒழியும் வரை படட்டும்! நாசமாகட்டும்! எவன் ராஜ்யம் எப்படி போனால் எனக்கு என்ன கவலை?

மகாஜனங்கள்: சுவாமி! சுவாமி! இந்தச் சங்கதி இதுவரையில் எங்களுக்குத் தெரிய வில்லையே. பூலோகத்தில் எவனோ நாலு வயது சோத்துப் பிள்ளைகள் சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று கூப்பாடு போட்டான்களே என்று நாங்களும் தெரியாமல் கூப்பாடு போட்டு இந்தக்கதி ஆகி விட்டோம். இனி அது தங்களுடைய ராஜ்யம் தான். தாங்கள் தான் எங்களை ஆள வேண்டும். சுயராஜ்யம் என்பதே நாதீகத் தன்மை என்பதையும் முட்டாள் தனம் என்பதையும் இப்போது நாங்கள் நன்றாய் உணர்ந்து விட்டோம். எங்களைக் காப்பாற்றி அருள வேண்டும்.

கடவுள்: இது மாத்திரமா? உங்கள் நாஸ்திகத் தன்மைக்கு உதாரணம் இன்னும் எவ்வளவு அக்கிரமம் செய்கிறீர்கள்? சுயராஜ்யம் என்று சொல்லிக் கொண்டு உங்கள் இராஜ்யத்தில் நீங்கள் ஒருவொருக்கொருவர் உதைத்துக் கொண்டால் அமெரிக்காவுக்கு எதற்கு ஆகப் பிராது கொண்டு போவது.

அவன்களென்ன என்னைவிடப் பெரிய சக்தி வாய்ந்தவன்கள், இது எனக்கு எவ்வளவு அவமானமாக இருக்கிறது. நினைத்தால் கொதிக்கிறதே இரத்தம். நான் கல்லுப்போல் - ஏன் கல்லாகவே ஊருக்கு 100, 200 ஆயிரம் என்கின்ற கணக்கில் இருக்கிறேன். எனக்கு என்று தினம், மாதம், வருஷம் என்கின்ற கணக்கில் எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறீர்கள் தொட்டதற் கெல்லாம் பிரார்த்தனை, அர்ச்சனை, தொழுகை செய்கிறீர்கள். இந்தக் காரியத்துக்கு என்னைக் கொஞ்சம் கூட மதிக்காமல் நினைக்காமல் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதைச் சிறிது கூட தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாமல் ஓடுகிறீர்களே அமெரிக் காவுக்கு வெட்கமில்லை மானமில்லை, நீங்கள் ஆஸ்திகர்களா? கடைந்தெடுத்த நாஸ்திகர்கள் அல்லவா? மகா ஆணவம் பிடித்த அகங் காரிகளல்லவா? போங்கள்! என் முன் நில்லா தீர்கள்! உங்களைப் பார்க்கப் பார்க்கப் பதறு கிறது, கொதிக்கிறது, துடிக்கிறது, போங்கள் வெளியே! டேய் துவார பாலகா! டேய் நந்தி! டேய் கணங்களே! இந்தப் பசங்களை வெளியேற்றுங்கள்.

அம்மன்: சுவாமி! கோபித்துக் கொள் ளாதீர்கள். தாங்கள் சர்வ சக்தர், சர்வ தயாபரர். தாங்கள் கோபிக்கப்படாது. அவர்கள் நம்ம பிள்ளைகள் தானே.

கடவுள்: போடி, போடி! நம்ம சர்வ சக்திக்கும், சர்வ காரணத்துக்கும் ஆபத்து வருகிற போது என்ன பொறுமை என்ன மன்னிப்பு? நாம் மிஞ்சிய பிறகல்லவா மற்ற சங்கதிகள் போ, போ! உனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. தையல் சொற்கேளேல் தெரியுமா? நமக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டுவிட்டது. சிறிது சாந்தி வேண்டும்! போங்கள்! யாவரும் வெளியில்.......

(தர்பார் மண்டபக் கதவு அடைக்கப்பட்டு விட்டது)

 

பிராமணனும் சத்திரியனும்


06.03.1948 - குடிஅரசிலிருந்து...

10 வயதுள்ள பிராமணனும், 100 வய துள்ள சத்திரியனும் பிதா - புத்திரன் என்ற மரியாதையோடு நடக்கவேண்டும். அதாவது பிராமணனைப் பிதாவாகவும், சத்திரியனைப் பிராமணனுடைய புத்திர னாகவும் கருதவேண்டும்.

இந்த மனு நீதி சட்டமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்க, அதை நடை முறையில் நடத்தி வருகிற நமது திராவிட மந்திரிகள், அக்கிரகாரச் சிறுவரான அய்ந்து வயது அனந்தராமனுக்கு எப்படிச் சொந்தம்? என்ன முறை?

- விடுதலை நாளேடு, 1.3.19