செவ்வாய், 5 மார்ச், 2019

நம்புவதற்கு ஆளிருந்தால் புளுகுவதற்கு பஞ்சமா?

07.02.1948 - குடிஅரசிலிருந்து...

காந்தியார் உயிர் நீத்த பின் அவரைப் பிழைக்க வைக்கத் தன்னால் முடியும் என்றும், எனவே தன்னை டில்லிக்கு அனுப்பி வைக்குமாறும், சென் னை பிரதமரிடம் ஒரு சாமியார் வேண்டினாராம். அதற்குப் பிரதம மந்திரி அவர்கள் உண்மையில் சாமியாருக்கு அவ்வளவு சக்தியிருக்குமானால் ஏன் சென்னையிலிருந்த வண்ணமே உயிர்ப்பிக்கலாமே என்று பதில் அளித்து விட்டார்.

பிறகு சாமியார் கவர்னரைக் கண்டு கேட்க அவர் தம்மால் நம்ப முடியவில்லை என்று சொல்லி விட்டார்.

ஆனாலும், சாமியார் முயற்சி குன்றவில் லையாம். டாக்டர் சுப்பராயன், டாக்டர் அழகப்ப செட்டியார் ஆகியவர்களை நம்பும்படி செய்து-ஏன்? அவர்களும் நம்பியே சாமியாரை விமானத்தில் டில்லிக்கு அழைத்துச் சென்றார்களாம்.

டில்லி சென்றார் சாமியார். காந்தியாரின் கை, கால்களைத் தொட்டார். ஆனால், அவர் உயிர் பெற்று எழவில்லை.

அத்துடனாவது சாமியார் புளுகு நின்றதா? என்றால், அதுதான் இல்லை. மேலும் புளுகினாராம், தொண்டையை அறுத்து ஒரு குளிகையைப் போட வேண்டும் என்று. அழைத்துச் சென்ற இரு பெரியார் களை யோசனை கேட்டி ருந்தால் அதுவும் செய்ய சொல்லியிருப்பார்களோ? என்னவோ? ஆனால், அங்குள்ளவர்கள் யாரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சாமியாரை வெளியேற்றி விட்டனர்.

பிழைக்க வைப்பதாகப் புளுகியவர் பிழைக்க வழியின்றி டில்லியிலேயே விடப்பட்டாராம், இங்கு கிடைத்தது போல் அங்கு இரண்டு பேர்வழிகள் அகப்படாமலா போவார்கள் என்ற நம்பிக்கை ஒரு சமயம் சாமியாருக்கு இருக்கலாம் அல்லவா?

- விடுதலை நாளேடு, 1.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக