வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

மதப் பித்தும் மனிதாபிமானமும் – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு,
Published January 21, 2024

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந் தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்ப தாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங் களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும், துதிபாடுவதுமே சைவ, வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச் சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழி யில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத் தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்க ளுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படா மலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டு களை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியி லாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகால மாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தை களை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடு வதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கையு மற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ்வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச் சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள் பேரால் எழுதுவதற்குத் தைரியமற்று ஏதோ பல அனாம தேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக் கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழு துவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கட வுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அதுபோலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ண வத்தையும் விஷ் ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவ னையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழி வாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயி ரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுரா ணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகிய வைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற் கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதா கவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷ யங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லி யும் வருகின்றதோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத் தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாத வர்களின் கூற்று என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித்தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதையும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர் களைவிட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக் குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய் விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப் படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத் திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமா யணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக் குச் சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த் தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்னவென்றால் இராமாயணத்தைக் காட் டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராம னைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங் களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தை யேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல் களுடையவும், கடவுள்களுடையவும் ஆபா சங்கள் அதனதன் முறையில் தானாக வெளி வரும். இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இரா மாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரிசைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற் பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமா யிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.

சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லுவோம்.

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரி கையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலா வது மலர் அனுபந் தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:
தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற் றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவ ரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல் லியிருப்பதானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்.
அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறிய லாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.

கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்த போது அப்பெண்களின் ஸ்தனங்களி லிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படு கிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.
எனவே சைவர்கள் பூசும் விபூதியாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைணவர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ண னும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும் ஆண் குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர் கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங் களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டு வது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண் டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம் மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின் றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர் களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதா ரங்கள் என்பவைகளில் உள்ளவைகளா? உள்ளவை களானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரசாரமும் செய் யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள்.
உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர் களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறி வற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங் கள். முடியா விட்டால் சப்தத்திற்கும், எழுத்துக்கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 15.04.1928

ராமராஜ்ஜியம்” எப்படி இருக்கும்?

விடுதலை நாளேடு,
Published January 28, 2024

– தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் – நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும் ஏற்படுத்திவிடுவேன் என்பது பொருளாகப் பேசியிருந்ததை சுதேச மித்திரனில் உள்ளபடி ஜூலை 30ஆம் தேதி குடிஅரசில் எடுத்து எழுதி அதைப்பற்றிய நமது கருத்தையும் வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த வாரத்தில் (6.8.1939) தோழர் சத்தியமூர்த்தியார் ஸ்தாபிக்க முயற்சிக்கும் ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? அதன் கால ஒழுக்கம் என்ன? நீதி என்ன? என்பவைகளைப் பற்றியும் எழுதிவிட்டு அத்தலை யங்கத்தின் முடிவில் அவைகளுக்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் உள்ள வாசகங்களைப் பின்னால் எடுத்துக்காட்டுவோம் என்றும் எழுதி இருந்தோம்.

அது பல காரணங்களால் சென்ற வாரம் எழுதத் தவறிவிட்டதால் பல தோழர்கள் எதிர்பார்த்து ஏமாற்ற மடைந்ததாக எழுதி இவ்வாரம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனதுபற்றி சிலவற்றை மாத்திரம் இவ்வாரம் குறிப்பிடுகிறோம்.

ராமன் பிறப்புக்குக் காரணங்கள்

ராமாயண ஆரம்பத்திற்குக் காரணம் காட்டும் போதே ராவணேஸ்வரனால் துன்பமடைந்த தேவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்ததாகவும், மகாவிஷ்ணு அத்தவத்திற்கு இரங்கி, தான் தசரத ராஜனுக்கு மகனாகப் பிறந்து ராவணனைக் கொன்று பதினோராயிரம் வருஷம் அரசாண்டுவிட்டு, பிறகு தேவலோகத்திற்கு வருவதாக வாக்களித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மகாவிஷ்ணு அவதாரமெடுத்தற்குக் காரணம் ராவணனைக் கொல்வதற்கு மாத்திரம்தான் என்று இருக்குமானால் ராவணனை ஏன் கொல்லவேண்டும்? ராவணன் என்ன குற்றம் செய்தான்? என்பவைகளைப் பற்றி முதலில் ஆராயவேண்டியது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், மகாவிஷ்ணு ராமனாகப் பிறப்பதற்குக் காரணம் மற்றொன்று கூறப்பட்டிருக்கிறது. அதுதான் ராமாயண ஒழுக்கத்திற்குப் பொன்மதில் அரண் என்று சொல்லத்தக்கதாக இருக்கிறது.
அது என்னவெனில், மகாவிஷ்ணுவானவர் ஒருகாலத்தில் பிருகு மகரிஷியின் பத்தினியைக் கொன்று விட்டாராம். அதற்காக அந்த ரிஷி கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கி, “நீ என் மனைவியைக் கொன்றுவிட்ட கொலை பாதகனானதால் நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இழந்து சீரழிய வேண்டியது” என்று சபித்து விட்டாராம். அதனால் விஷ்ணு ராமனாகப் பிறந்து தனது மனைவியை இழந்து துன்பப்பட்டாராம். இது வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 51ஆம் சருக்கத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு மனிதனாகப் பிறந்தது மனைவியைப் பறிகொடுத்துத் தவித்ததற்கு ராமாயணத்தைவிடப் பழைமையானதும் முக்கியமானதுமென்று கருதப் படுவதாகிய கந்த புராணத்தில் மற்றொரு காரணம் கூறப்பட்டிருக்கிறது. அது என்னவெனில் மகாவிஷ்ணு வானவர் சலந்தராசுரன் மனைவியாகிய பிருந்தை என்பவள் சற்று அழகுடையவளாக இருந்ததால் அவளை எப்படியாவது சேரவேண்டுமென்று கருதிச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தாராம். ஆனால், அவ்வசுரன் இடம் கொடுக்காமல் காவல் இருந்ததால் முடியாமல் போய்க் கடைசியாக அவ்வசுரன் சாகும் படியாக ஆன பின்பு அவ்வசுரனுடைய உடலுக்குள் புகுந்துகொண்டு புருஷன் மாதிரியாகவே இருந்து பிருந்தையை அனுபவித்து வந்தாராம். சில நாட்கள் விஷ்ணுவிடம் அனுபவித்த பின்பே அந்த கற்புக்கரசி யாகிய பிருந்தை இவன் தன் புருஷனல்ல, மகாவிஷ்ணு என்று அறிந்து உடனே மகாவிஷ்ணுவை “ஓ விஷ் ணுவே! நீ என்னை எனது இஷ்டமில்லாமல் ஏமாற்றி வஞ்சித்துப் புணர்ந்துவிட்டதால் உன் மனைவியை ஒருவன் வஞ்சனையால் எடுத்துப் போகக்கடவது” என்று சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாய் மனிதராகப் பிறந்து மனைவியை இழந்து துன்பப் பட்டார் என்றும் மேல்படி கந்த புராணம் தக்க காண்டம் 23ஆம் அத்தியாயத்தில் இருக்கிறது.

மகாவிஷ்ணு ராமனாகப் பிறந்த பெருமைக்குக் காரணம் மேற்கண்ட இரண்டு மாத்திரமல்லாமல் 3ஆம் காரணமும் ஒன்று இருக்கிறது.
அதாவது, ஒரு பொல்லாத வேளையில் மகா விஷ்ணு மனித உடம்போடு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும், அதுசமயம் பிருகு ரிஷி முதலியவர்கள் அவரைக் காணச் சென்றதாகவும், வேறு சிலர் தன்னைப் பார்க்க வந்த சமயத்தில்கூட தான் புணர்ச்சியை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே அவர்களுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் கோபித்து விஷ்ணுவைப் பார்த்து “ஓ மானம், வெட்கம் இல்லாத விஷ்ணுவே! நீ இம்மாதிரி இழிவான காரியம் செய்ததற்காக நீ உன் மனைவியை இழந்து வருந்தக்கடவை” என்று சபித்ததாகவும் சொல்லப் படுகிறது.
இந்த உண்மை சிவரகசியம் மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலும், அது மூன்றாம் அம்சம், இரண்டாம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.

ஆகவே, ராமராஜ்ஜியத்தின் மூலபுருஷரும் கடவுள் அவதாரமாக வந்தவருமான ராமனின் பிறப் புக்கே இம்மாதிரியான காரணங்கள் இருக்குமானால் இந்த இப்படிப்பட்ட ராமனுடைய அல்லது கடவுளி னுடைய ஆட்சி ராஜ்ஜிய பாரம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ரிஷி ஜாதிகள் யோக்கியதை

ரிஷிகள் மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் அசுரர்களுடைய மனைவிகளைப் புணர்ந்த மாதிரியும் எடுத்துக் காட்டப்பட்டதில் இருந்தே ரிஷி ஜாதிகளின் யோக்கியதையும், அசுரர் ஜாதியினுடைய யோக்கி யதையும் நன்றாய்த் தெரிவதோடு கடவுள் ஜாதி களுடைய யோக்கியதையும் பளிங்குபோல் விளங்குகின்றது.
என்னவெனில், ரிஷி பத்தினியை அவள் புருஷ னுக்குத் தெரியாமல் மாத்திரம்தான் கலந்ததாகவும், ஆனால் ரிஷிபத்தினிகள் சம்மதித்து விஷ்ணுவுடன் கலந்து இன்பம் அனுபவித்ததாகவும் விளங்கும்படியாக இருக்கிறது. அசுரர்களு டைய மனைவிகளிடத்தில் அந்த ஜபம் செல்லவில்லை. புருஷன் சாகும்படியாக ஆனபின்பே அதுவும் புருஷன் போல் வேஷம் போட்டு அசுர ஸ்திரீயை ஏமாற்றித்தான் சேர முடிந்ததே ஒழிய மற்றபடி ரிஷி பத்தினிகள் மாதிரி சம்மதம் பெற்றுச் சேர முடியவில்லை. அன்றியும் ரிஷி பத்தினிகள் கற்பழிக் கப்பட்டதற்கு ரிஷிகளால் தான் மகாவிஷ்ணுக்கு சாபம் கொடுக்கப்பட்டதே தவிர, ரிஷி பத்தினியால் சாபம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அசுர ஸ்திரீகளோ வென்றால் தாங்களே விஷயம் தெரிந்த உடனே சாபம் கொடுத்து தண்டிக்கத் தக்க சக்தி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அன்றியும் கடவுள்ஜாதி ஸ்திரீயான திருமகள் அந்நிய புருஷர்கள் வந்து பார்க்கும்போதுகூட கலவி யில் இருந்து நீங்காமல் கலவிசெய்துகொண்டே இருக்கச் சம்மதித்து இருந் தாள் என்றால் அவர்களது தைரியத்தை மெச்ச வேண் டியதென்றாலும் அந்த ஜாதி எவ்வளவு இழிவுக்கும் சம் பந்தப்படக்கூடியது என்பது விளங்காமல் போகாது.

இந்த உண்மைகள் இயற்கைக்கு மாறானவை என்றாலும் எப்படியோ இருக்கட்டும் நடந்தததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் விவகரிக்க வரவில்லை.
பொதுவாகவே இராமா யணம் மாத்திரமல்லாமல் மற்றும் அதுபோன்ற – கடவுள் சம்பந்தமான சைவ, வைணவ புராணங்கள் பொய்யென்றும், அறிவுக்குப் பொருத்தமில்லாத இழிவான ஒழுக்க ஈனமான விஷ யங்கள் கொண்ட காட்டு மிராண்டிக் காலத்து கட்டுக் கதைகள் என்றும் சொல்லி வருகிறோம். ஆனதால் அவற்றின் உண்மையைப் பற்றியும் வாதாட விரும்ப வில்லை.

ஆனால், தோழர் சத்தியமூர்த்தியார் இப்படிப் பட்ட கதையில் உள்ள இப்படிப்பட்ட சம்பவங்களில் சிக்குண்டவனாகக் காட்டப்பட்டுள்ள ஒரு பாத்திர மாகிய ராமன் என்பவனுடைய பெயரால் இருந்து வரும் கதையில் உள்ள ஒழுக்கங்களையும், நீதி களையும் கொண்ட ஒரு ராஜ்ஜிய பாரத்தை – ராஜ நீதியை இந்தியர்களுக்கு என்பதில் வடநாட்டாருக்குச் சொல்வதைப் பற்றி நமக்கு இப்போது கவலை இல்லை. தென்னாட்டாருக்கு – திராவிடர்களுக்கு – தமிழ் நாட்ட வருக்கு – தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்போவதாகக் கூறுவதும் அதற்காகவே இந்தியையும் – சமஸ் கிருதத்தையும் தமிழ் மக்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதும் இந்தக் காரியத்திற்காகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்திய அரசாட்சிக்கு சர்வாதிகாரியாக ஆகவேண்டும் என்றும் ஆசைப் படுவதாகச் சொல்வதுமாயிருந்தால் அதைத் தமிழ் மக்கள் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறோம்.
ஆரியர் வேறு தமிழர் வேறு என்பதற்கும்; ஆரியநாடு வேறு தமிழ்நாடு வேறு என்பதற்கும் இந்த புராண இதிகாசக் கலைகளே போதாதா என்று கேட்கின்றோம்.
இந்தியாவென்பது எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தேசத்தையோ, ஒரு நாட்டையோ குறிப்பிடும் பெயராகாது என்று முன்னம் பல முறை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். குறிப்பாக இந்த நாட்டுக்குப் பரத கண்டம் என்றோ, பாரததேசம் என்றோ, பாரதத்தாய் என்றோ சொல்லுவது சிறிதும் பொருத்தமற்றது என்பதோடு ஒரு தமிழ் மகன் வாயில் தமிழ் நாட்டைப் பாரதநாடு அல்லது பாரததேசம் என்று சொல்லப் படுமானால், “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் அய்யப்படும்” என்ற திருவள்ளுவரின் திருவாக்குப்படி அப்படிப்பட்டவரது குலத்தைப்பற்றிச் சந்தேகப்பட வேண்டியதைத் தவிர வேறு பரிகாரமில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்மக்கள் திராவிட மக்கள் ஆண்ட நம் தமிழ் – திராவிட நாட்டை என்ன காரணத் திற்கு ஆக ஒருவன் பரதன் (ஆரியன்) ஆண்டதாகச் சொல்லி இதை பரதநாடு என்று சொல்லவேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழ் மகனையும் வேண்டிக்கொள்கிறோம்.

தமிழ் நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்த தமிழ் நாட்டிற்கு ஒரு ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர் மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக்கொள்ளுகிறோம்.

குடிஅரசு – தலையங்கம் – 20.08.1939

திங்கள், 8 ஜனவரி, 2024

ஒழிய வேண்டும் உயர்வு – தாழ்வுக் கொடுமை – தந்தை பெரியார்


புதன், 27 டிசம்பர், 2023

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?


புதன், 13 டிசம்பர், 2023

தீண்டாமை - வேதங்கள், சாஸ்திரங்கள் சொல்வதே தவிர,தமிழர்களைச் சார்ந்தது இல்லை - தந்தை பெரியார்


7

அருமை சகோதர, சகோதரிகளே!

நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னுடைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் ஆவலைத் திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை.

தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும்  வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங் களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

தீண்டாமை

தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை கடைப்பிடிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும்  சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக் கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிக்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. 

ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமோ, மனுஸ்மிருதியோ என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டினருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை.

உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோம்.  ஏன் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறோ மென்பதை பற்றி இப்பொழுது ஆராயத் தேவையில்லை. சூத்திரன் என்பது என்ன? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். 

சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப் பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப் பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. அப் பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம். அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய்த் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குரும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப் படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். 

இழி பெயர்

அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்த வர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும் ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுப விப்பதைப் பார்க்கிறோம். 

உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேற்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர் களோடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர்களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்துகொள்ளு வதையும், அதேமாதிரி சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்துகொள்வதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மை யாக நடத்தப்படு வதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள். நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரிய னிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத் திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் போகும் போது எப்படி பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு போகிறார்களோ அது போல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். 

இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவ ராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல். ‘இவர்கள்  இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்’,  கிட்டவரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். 

இதில் ஏது பெருமை?

இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடு மைகளை மாத்திரம் விலக்கவேண்டு மென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமை யையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம். இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப் பட்டுவிடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ!  நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான  நம்மையா இன்னும் எத்தனையோ உயர்குணங் களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா  தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்ற அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். 

இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் அல்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட்டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப் பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. 

இது எதைப் போலிருக்கிறதென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு ‘இந்துக்கள்’ என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியா வின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

எப்படி பாவமாகும்?

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயி ருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்ற முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக் கூடாது. பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமா யிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்;  அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டுமாமிசம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்;  மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி? என்றும் யோசியுங்கள். அவர்களை, நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக் கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழி யெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். 

அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய்க் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.

மாடு தின்பது முதலியவைகளால் எப்படி தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா?அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை, கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை  உயிருடன் வதைத்துக் கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?

யோக்கியதை ஏது?

‘கள்’ இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்வதும் எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவனும் தொடக்கூடியவன், தெருவில் நடக்க கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்?  உற்பத்தி செய்வதால் குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள்? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டி ருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடிய வர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்து வாரா? என்பதை நினையுங்கள். 

இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி  வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818-ஆவது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144,107,108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது?

மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப் பிரகாரம் கடந்தும் செல்லலாம். ஆனால் நமது சகோதரர் களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந் தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது. மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்து போகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ‘ரவுலட்’ சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம்  சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா?

- குடிஅரசு -  சொற்பொழிவு -  

07.06.1925 , 21.06.1925 , 28.06.1925 

-----

இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை கடைப்பிடிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும்  சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிக்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. 

இது என்ன கொடுமை! மனிதனை மனிதன் தொடக் கூடாதா? தந்தை பெரியார்


3

பஞ்சமர் - பெயர்ச்சொல்!

அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.

சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்தவர்களா?

தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.

தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ் வார்த்தைகளல்ல

பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.

சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.

அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி ‘சூத்திரர்’ என்பதற்கு ஆதாரப்படி ‘தாசிமகன்’ என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

கொடுமையான குணங்கள்

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.

நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், “இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும்”, இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.

எத்தகைய இழிவு

இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா ‘தேவடியாள் மகன்’, ‘வைப்பாட்டி மகன்’, அடிமையென்று அர்த்தம் கொண்ட ‘சூத்திரன்’ என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.

இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் ‘தேவடியாள் மகன்’ என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் ‘வைப்பாட்டி மக’னெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு “இந்துக்கள்” என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியா வின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

ஒழிய வேண்டும்

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் “கள்” உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.

எது குற்றம்

மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?

கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.

எது கொடுமை

இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? 

தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...

‘குடிஅரசு’ - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 
நூல்:- “பெரியார் களஞ்சியம், குடிஅரசு” தொகுதி -1 பக்கம் 31-36

உடலுழைப்பு திராவிடருக்கு உயர் வாழ்வு பார்ப்பனருக்கு இது என்ன நியாயம்?


5-16

– தந்தை பெரியார்

இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை? எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே! நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 1லு (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 1லு வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 1லு வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?

தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

பார்ப்பன மயம்

இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள் மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் – ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் – கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் – காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன். இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப் படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?

குலக் கல்வித் திட்டம்

இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் – செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண் டியின் மகன் பன்றி மேய்ப்பது ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் – அப்படியே அவர்களும் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச் சொல்லு கிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுவா முறை? மக்கள் யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டு மானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக் கொண்டு பேசவில்லை.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை – இலட்சியத்தை – ஒழித்துக்கட்டித் தம்முடைய இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக முயற்சி செய்கிறார். நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு – அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம்.

தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.

உடலுழைப்பு கேவலமா?

நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான் இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையொன்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்ஜாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!

தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் – இந்த நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் – திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.

வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 – 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000 ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!

யார் அந்நியர்கள்

இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம் மக்கள் தலை யெடுக்கவிடாமல் எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே! ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?

வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.

ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும் யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
உணர வேண்டும்

இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சிலர்தான் இதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன் என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள் பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா?

அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும். சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின் நன்மைக்கு ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன

உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் – என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.

நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது – நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?

பார்ப்பான் எதிலும்  பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும் பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்திய மூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம் எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும் என்றெல்லாம் சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.

இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக எதிர்க்கிறார்கள். நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப் பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளு பவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்? என்றைக்குத் தான் நம்முடைய இழிநிலைமை ஒழியும்? எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திரா விட மக்கள் இதை உணர வேண்டும்.

15-11-1953 இல் சென்னை வண்ணை நகரில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: (‘விடுதலை’ 17-11-1953)