சனி, 18 மே, 2024

உலகில் ஆஸ்திகம் என்பது இல்லாதிருக்குமானால் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? – தந்தை பெரியார்




Published April 7, 2024, விடுதலை நாளேடு

இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாத்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆத்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.

இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்காரணமாய் இருந்து சோம்பேறிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், முரடர்களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆத்திகமே” யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆத்திகம் என்பதாக ஒன்று இல்லாதிருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக் காரனுக்கு இடமேது? குருமார்கள், முல் லாக்கள், பாதிரிமார்கள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் பண்டாரசன்னதிகள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர் களுக்கு இடமேது? பிரபுக்கள் முதலாளிகள் லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமின்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது?

அன்றியும் இந்த ஆத்திகம் என்பது இல்லா திருக்குமானால் கீழ் ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவுபடுத்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு கொண்டு நடுநிலை என்னும் கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.
அன்றியும் இன்றைய ஆத்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேறிகளும் நயவஞ்சகர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கிறார்களா? என் பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
மேலும் இந்த ஆத்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத் திற்கு அணுவளவாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம் பரவுவதற்குக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவனிப்ப தென்பதில்லாமல் ஒரே அடியாய் “இது ரஷியப் பிரசாரம், போல்இவிக் பிரசாரம், இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உப யோகப்படுத்திக் கொண்டு அவர்களை வெறியர் களாக்கி அதனால் ஆத்திகத்தை நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள் பாமர மக்களும், ஏழை மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும் மூடர்களாகவே இருப் பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.

நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து பரவுகின்றது” என்று சொல்லிவிடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக ரஷியாவின் நாத்திக திட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.ழ

அதாவது “ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வரு ஷங்களுக்குள் கடவுள், மதம், கோயில் ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த 5 -வருஷ நாத்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லிமெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்சஇ என் பவர் பேசிய ஒரு விருந்துப் பேச்சில் குறிப்பிட்ட தென்னவென்றால்
1. முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்க ஆராதனைகளையும் இடங்களையும் மூடிவிடுவது.
2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்து விடுவது – மத சம்பந்தமான புத்தகங்கள் ஆதாரங்க ளெல்லாம் அழிக்கப் பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம், சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
3. மூன்றாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்தரவுக்கு கீழ்ப் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை ஸ்தலங்களையும் பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப்பாறும் மண்டபம், காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
5. அய்ந்தாவது வருஷத்தில் அதாவது 01-05-1937க்குள் கடவுளுக்கு வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது. என்பதாகும். இந்த காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அன்றியும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமுக விடுதலையும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையாய் வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின் றன. எப்படியெனில் ரஷியர்கள் கடவு ளையும் மதத்தையும் அழிக்கவேண்டும் என்று கருதியது இன்று நேற்றல்ல வெகு காலமாகவே கருதிவந்திருக்கிறார்கள்.

என்றைய தினம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏழை மக்களுக்கு, தொழிலாளிகளுக்கு தங்கள் கஷ்டத்தையும் இழிவையும் பசிக் கொடுமையையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணம் உதிக்கின்றதோ அன்றே கடவுளும் மதமும், ஒடித்தான் தீர வேண்டும், மறைந்துதான் ஆகவேண்டும்.

ஆகவே, ரஷிய ஜனங்கள் கொடுங்கோன்மை யாலும், முதலாளிகள் பிரபுக்கள்மார் ஆதிக்கத் தினாலும் அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்று கருதிய நிமிடமே கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் பாய்ந்து அவற்றின் பிடித்தத்தை மக்களிடையே இருந்து தளர்த்தி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது வெற்றி முரசொலி “கடவுளை ஒழிப்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும்” “மதத்தை ஒழிப்பது, உயர்வு தாழ்வை அழிப்பதாகும்” என்பதேயாகும்.

இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷிய மக்களின் உள்ளத்தில் கல்லின் மேலேழுதிய எழுத்துப்போல் பதியவைத்த பிறகு தான் கொடுங் கோன்மை வேறுடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளைகளுடனும் சுற்றங்களுடனும் மறைந்தொழிந்தது.

கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக் களுக்கு” ஆபத்து என்பது ரஷியாவில் ஓரளவுக்கு ருஜுப்படுத்தப்பட்டதை நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம் இந்தியாவில் ஆத்திகப் பிரசாரமும், மத பிரசாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான் ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது. இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான் அதாவது சக்கிரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், முதலாளி களாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரிகளாகவும் முல்லாக்களாக வும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.

மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள் யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது.
அதுவும் தூங்கும் போது கீழ் மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய் விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல் நிலைமை உயர்ந்து விட்டது.

ஆகவே, கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமூகத்திற்கு எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படகூடும். இந்தப்படி யான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப் படுத்தப் பட்ட ஏழைத் தொழிலாளி மக்கள் அதுவும் இந்தி யாவில் மாத்திரமல்லாமல் ரஷியா தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயிருப்பவர்கள் மேளதாளம் வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமையினாலும் – அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்கடித்து விட முடியாது.

உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமூகமும் எற்த மதத்தை ஏற்ற சமூகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதேயொழிய “ஆண்டவனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல் மனித சமூகம் உயர்வுதாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?
பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும், வேத பாட சாலைகள், யுனிவர் சிட்டிகள் மதராசாக்கள் கட்டி விட்டதினாலேயும், பத்திரிகைகாரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமையையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்” புகழ்ந்து கொண்டு “நாத்திகர்”களை வைவதி னாலேயும் ஏழை மக்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த ஆண்டவன் படைப்பில் இல்லாம லிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம். இந்த குறை களுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்” என்பதல்லாமல் வேறு என்ன பதில்? இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும் என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றி பல “லட்சக்கணக்கான” காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன. மார்க்கங்கள் தோன்றி ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்தனை கால கடவுள் – மத ஆட்சியிலும் மனித சமூகம் சீர்படவில்லை கவலை யல்லாமல் வயிற்றுக்கு ஆதாரமில்லை. மனிதனுக்கு மனிதன் அடிமைப் பட்டு உழைக் காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும் இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி அரை நிமிஷ மாவது உலகில் இருக்க அருகதை உண்டா? என்றுதான் கேட்கின்றோம்.

160 வருஷ காலம் இந்தியாவை பிரிட்டிஷார் ஏகபோக சர்வாதிகார சக்கரவர்த்தியாய் ஆண்டும் இந்தியாவில் 100க்கு 90 தற்குறிகளும், 100க்கு 97க்கு கீழ் ஜாதியாரும், மற்றும் தீண்டாத ஜாதியும், தெருவில் நடக்காத ஜாதியும் இன்னும் இந்தியாவில் இருப்பதினால் அவர்கள் இந்தியாவை ஆள ஒரு சிறிதும் யோக்கியதை கிடையாது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அவர்களை விரட்டி அடிக்க எப்படி பாடுபடுகின் றோமோ, அதுபோல் தான் ஏன்? இன்னும் அதற்கும் மேலாகத்தான் இந்தக் கடவுள்களையும், மார்க்கங் களையும் விரட்டி அடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் எப்படி எந்த மதமும் எந்த மார்க்கமும் மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது. இதுவரை பாவிக்கவும் இல்லை ஆக்கவும் இல்லை என்று சொல்லுகிறோமே அதுபோல் தான் இன்று உலகில் வேறு அந்த அரசும், ஆட்சியும் மக்களை சமமாக பாவிக்க வில்லை – நடத்த வில்லை என்று சொல்லி எப்படிப்பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை சமதர்ம ஆட்சியே வேண்டும் என்கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம்? என்பது நமக்கு விளங்க வில்லை. யாராவது “எங்கள் ஆண்டவன் கட்டளை, எங்கள் மார்க்க கொள்கை, எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்களானால் குஷா லாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்க காத்திருக் கிறோம். அவர்களோடு ஒன்றுபட கலர முன்னிற் கிறோம். அதில்லாமல் “இது போல்ஷவிக் பிரசாரம்”, “இது மனித சமுகத்திற்கு ஆபத்து”, “இது தேசியத்திற்கு ஆபத்து”, “இது சுயராஜ்ஜியத்திற்கு ஆபத்து”, “இது சட்டத்திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து என்கிறதான பூச்சாண்டிகளைக் கொண்டு ஏழைகள் பட்டினி கிடக்கின்றவர்கள் – கீழ்மைப்படுத்தப்பட்ட வர்கள் கண்களில் மிளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள் போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டாகிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டுமென்றுதான் சொல்லுவோம் – அவர்களுக்கு இதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.”

‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.12.1932

புதன், 15 மே, 2024

நீதி தாமதமாகவோ தவறாகவோ கூடாது – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published May 5, 2024

தந்தை பெரியார்

நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டுப் பார்ப் பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்குக் கொடுத்திருந் தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்றுசேர்த்து அவ்வாட்டத்திற்கு அனுகூலமான சாமான் களையும் ஆடவசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக்காக என்றும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு, சூது ஆடவருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்துவருவதுண்டு. சாதாரணமாக காலைமுதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக்கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன் காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதித்தவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும், சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவர்கள் அசலும் மேல்கொண்டு கால்ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள் மேல் கடன் விட்டிற்கும் தொகையா யிருக்கும். ஆனால் தோற்றபணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய்விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகை காரனுக்கும் சீட்டாட வசதி செய்து கொடுத்த சீட்டுமேஜைக்காரனுக்கும், அந்த இடம் தெரிந்து அங்குவந்து மிரட்டிய போலீஸ்காரனுக்கும் தான்போயி ருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது, இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படிபலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜெயித்தவர்களுக் குத் தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது. அதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர் களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும் ஆடவசதி செய்து கொடுத்து சீட்டுமேஜை வாங்கியவர்களுக்குச் சமான மாகிய வக்கீலுக்கு மிரட்டி காசுவாங்கும் போலீசுகாரனுக்குச் சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக் கும் தூணுகளுக்கும் போய் சேர்ந்துவிடுகிறதே தவிர உண்மையான விவகாரக் காரனுக்கு ஒன்றுமே மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி – ஜெயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜெயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அதுபோலவே பிரதி வாதியும் ஜெயித்தாலும்தோற்றாலும் அநியாயமாய் கெட்டுப்போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.
நியாயம் கிடைக்கும் தன்மை
வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்குக் கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரகாரனுக்குக் கைப்பணம் தீர்ந்துபோனபிறகுகூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட நியாயம் கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்த தாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார். இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின் அபிப்பிராயமே சட்டமாயி ருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜுகள் கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும். நீதி ஸ்தலங்கள் என்பவை வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப்ஜட்ஜு அப்பீல், ஹைக்கோர்ட் அப்பீல், புல்பெஞ்சு அப்பீல், லட்டர்ஸ்பேட்டெண்ட் அப்பீல், ரிவிஷன் பிரிவி கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக் காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமி ருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தலமுறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்கு முறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்ஜிய மடைந்துவிடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்துவிடலாம் என்பது போலவே ஆகும்.
கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து
பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் சர்க்காரும் பார்ப்பனரும் கூடிசெய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால தேசாபிமானம்

தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் பொது நல சேவை செய்பவர் என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும் நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கிய தாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கிய தாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன். இன்னஊரில் எடுக்கப்பட்டுவிட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஒட்டர் ஒரு சட்டசபை அபேட்சகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேட்சகரைப் பார்த்து நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்- கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம். ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை. ‘நீர் பொதுநலசேவைக்காரராக மாட்டீர் உமக்கு ஓட்டு செய்ய முடியாது’ என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேட்சகர் ‘நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர், நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட் இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு கோர்ட் வேண்டும். அதற்கு இந்த ஊர்தான் தகுதி’ என்று சொன்னாராம். இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேட்சகர் களுக்கும் எவ்வளவு தேசபத்தியும் பொதுநல சேவையும் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சட்டமென்பது தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்பந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலை தான் என்ன? இவ்வருஷம் சட்ட கலாசாலையில் (லாகாலேஜில்) படித்துதேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்து போனவக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோக மெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்று பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் நிரந்தர சப்- கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம். எந்தெந்த ஊரில் தற்காலசாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப்ஜட்ஜ் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜுகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜுகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது? “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து போய் விட்டது, ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்துமுட்டிக் கொள்கிறார்கள், இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது, ஆதலால் இக்கூட்டத்தை கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னும் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள், பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீட்சையை இன்னும் கொஞ்சம் அதிக செலவு கட்டணம் ஆக்குங்கள். நம்மை போல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்கமுடியாது . வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் 1வது கிரேடு வக்கீல் பரீட்சைகளையும் எடுத்தும்கூட பி.ஏ.பி.ஏல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னும் கொஞ்சம் செலவும் அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த செய்யமுடியாதா” என்பதாகிற இதுகள் தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறன்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே
வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வழக்கு களும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்குக் கோர்ட்டுகளே காரண மல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டு மென்றால் கள்ளுக்கடைகளையும், தாசி வீடுகளையும், மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளைக் குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம். கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக் கையும் குடிக்கும் அளவும் குறையும் என்று தான் தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில்நடக்கும் விபசாரத் தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்கு பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் நடக்கும் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அதுபோலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய் வரும் போக்குவரத்து வசதிகளுக்கு பதிலாக நான்குதரம் போய் வரும்படி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அதுபோலவே கோர்ட்டுகள் அதிகமாகவும் ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
பழைய நிலைமையும் புதிய நிலைமையும்
ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு சப்-ஜட்ஜுகோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம் உட்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜு கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜு வேண்டுமென்று பலரும்,இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள்.

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறியவேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும் படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4இல் ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது இந்த அளவுக்கு சுமார் ரு (கால்) முன்சீப் கோர்ட்டு அதிகமாகியிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டு களும் ஜில்லா ஜட்ஜு அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜுயும் 2 சப்ஜட்ஜுயும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலை உண்டாக்க தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள், சம்ப ளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11.30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்கு போய் விடுகிறார்கள். சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப்ஜட்ஜு கோர்ட்டு வேண்டு மென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது. இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க் கிறார்களாம்.
கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி
எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷபத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்துவிடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும், அசலூருக்குப்போய் விவகாரம் செய்வதில் சவுகரியமில்லாமல் தங்களுக் குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்து விடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டு விடும். அலட்சியமாகவும் அனாவசிய மாகவும் மறதியில் இருந்த வழக்கு களுக் கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ் வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழை மக்களுக்கு ஏற்பட்டுவிடும். முதலாவது வீட்டுவாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலிஆட்களின் கூலி அதிகமாய் விடும் ஜனங்களுக்குள் கட்டுப்பாடும், பெரியவர் சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படு வதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்றுப்பிழைப்புக் கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேசசேவையாயும் இதற்கு அனுகூலமாய் இருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம் எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாவும் போய்விட்டது. இந்த கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிகொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சவுகரியமோ யோக்கியதையோ அல்லது அவர்களையும் மனிதர்களாய்கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயதிபதியாருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிகொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும், தனி அறையில் இளைப் பாறுவதும், பங்கா வீசுவதும் பக்கத்தில் சேவகர்கள் கைகட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு, தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசுவாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காரு வதும் தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமாக போகபோக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு சாட்சிக்கு வருகிறவர் களைப்பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை, கோர்ட்டுகளில் விவகாரக் காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சவுகரியமில்லை. தங்க இடமில்லை. ஒதுங்க மார்க்கமில்லை. வாய்பேச மார்க்கமில்லை, கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதிஇருப்பதுபோல் பயந்து ஒடுங்கி நிற்கவும் ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத்திறந்தால் அங்குள்ள சேவகர்கள், ‘உஸ்’ ‘அஸ்’ என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும் ‘பேசாதே’ என்று மரியாதைஇல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ, பிரதிவாதி யாகவோ, சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணியமாதிரியாய் ஏதாவதுகாணப்படுகிறதா? அல்லா மலும் கோர்ட்டுகள் மெத்தைமீது சிலதும் சந்துகளில்சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தை சொல் லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத் திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்கவேணடும் எப்போதுநடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஜட்ஜு பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றையக் கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையல் நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கி விடுவார். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலை யிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கிவிடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நிற்க, சாட்சிக்கு உடம்பு சவுகரியமில்லா விட்டால் டாக்டர்களுக்கு ரூ. 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும் வேறு அவசர வேலை இருந்தால், ரூ. 20,30 கொடுத்து வயிற்றுகடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக் காரர்களாலா அல்லது வக்கீல்களாலா ஜட்ஜுகளாலா என்பதை பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜுகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பது விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப்பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் ‘அசல் அநியாயம்’ ,’அப்பீலில் அதுவே காயம்’ என்பதுபோல் ‘இதெல்லாம் சகஜம்தான்’ என்று சொல் வார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜு, சட்டமெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும் நாடு குட்டிச் சுவராகவும்தான் ஏற்படுமே அல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாக சுயராஜ்யம் பெறப்போவதில்லை என்பது உறுதி.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 06.03.1927

ஒரு விவகாரத்தை 3 வருடம் 4 வருடம் நீட்டி 25 வாய்தா 30 வாய்தா போடும் உபத்திரவங்கள்
அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணிவரையில்
நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும், சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று
தெரிந்தாலும் 5 மணிவரை வாய்தா எப்பொழுது என்பது தெரிவதற்காக காத்திருக்க
வேணடும். எப்போது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள்
கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்குக் கட்டும் சாட்சி
படி, போக வர செலவுமெனக்கெடு எவ்வளவு என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

ஞாயிறு, 12 மே, 2024

பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!


அண்ணல் அம்பேத்கர் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று

விடுதலை நாளேடு
Published April 14, 2024

பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!

பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கை களைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தார்கள்.
பெரியார் அவர்கள், “ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும், ஆங்கிலோ – இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்தானே, ஆனால் அவர்களுக்கே சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம் மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.

(‘குடிஅரசு’ 29.5.1949)

பாபாசாகேப் அவர்களும் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்து இதற்கெல்லாம் அடித்தளம் பார்ப்பனர்களே என்றும் நமக்கு சம்பந்தமில்லாத அன்னியர்கள் என்றும் கண்டறிந்தார்.

அவர், “இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை நிரந்தர அறியாமையிலும் வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள் அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்கு பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.

இந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாகக் கருதப்படுகின்றனர். பார்ப்பனர்களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் – இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்-நாட்டினர் போல்தான் தோன்றுவர்.
ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அது போலவே பார்ப்பான் அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர் களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியன் மட்டும் அல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்’’

(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன? நூலிலிருந்து)

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்னோடு கை குலுக்குகிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால், அடுத்த தெருவில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் தீட்டு என்கிறான். என்னைத் தொட்டுப் பேசுகிற வெள்ளைக்-காரன் அன்னியனா, பார்த்தால் தீட்டு என்கின்ற பார்ப்பான் அன்னியனா என்று பெரியார் கேட்டதும் பார்ப்பான் ஓர் அன்னியனே என்பது விளங்கும்.

தமிழ் வருஷப் பிறப்பு – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published April 14, 2024

ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவை இல்லாம லிருப்பது மிக மிக அதிசயமாகும்.

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை

சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்குமுன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப் பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது இன்னும் சிறிது நாட்களுக்குள் வருஷப் பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.
இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப் படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ள தாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.
ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவதில்லை.

கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

ஆ பயன் அய்ந்து என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக் காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.
மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்துகொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர் களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதார மாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண் டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண் டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.
நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை

நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொறிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்கு போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக் கொண்டி ருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக்கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக்கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.
அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண் டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு சிறீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணா யிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங் களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப் பிறப்பு கொண்டாடுகிறோம்.
இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக் கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழ னுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.
ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காறித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிர மாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனி யனையோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

  • “குடிஅரசு” – 08.04.1944

எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?


தந்தை பெரியார்

18

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவு என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்ததல்ல.

மற்றெதற்கு ஆக என்றால் மனிதர்களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருந்து மறைந்த மனிதர்களுக்கு ஆக இரங்கி அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்கு ஆகவே யாகும்.

அப்படியானால் செத்துப்போன மற்றவர்களும் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகிறோமே ஒழிய, மற்ற ஜீவப்பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்வதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவபேதம் அல்ல; நடப்பிலும் நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவப்பிராணிகளுக்கும் மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

ஜீவன் என்றால்?

ஜீவன் என்றால் பிறத்தல், தன் நலனுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக்குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங்களைப் பார்த்தால் செத்த மனிதர்களும் இருக்கும் மனிதர்களும் முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி பேரும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும் மேற்கண்ட குணங்களுடைய ஜீவப்பிராணி என்பதில் சேர்ந்தவர்களாக ஆகாமல் அவைகளில் நின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்படவேண்டிய மனிதத்தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?

ஜீவன் என்றால் சுய (self) உணர்ச்சி என்றுதான் கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இந்தத் தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்வது மனிதனை ஜீவப்பிராணிகளிடம் இருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ஜீவத்தன்மை எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ, அவற்றிற்கெல்லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால் அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.

தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள்; மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள்; ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள்; நாய்களால் காக்கப்படுகிறார்கள்; கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோவற்றால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித்தான் மனித ஜீவனும் பல வழிகளில் பல காரணங்களால் வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.

எதனால் மனிதன் உயர்ந்தவன்?

மற்றபடி எதனால் மனிதன் மற்ற ஜீவப்பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாகலாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவு சொன்னேன்.

ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து,

அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது நலத்தையும், தன் மேன்மையையும் பற்றிய கவலையும், தனது மேல் வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து மனித சமுதாய வாழ்வில் மேன்மைக்காக பணியாற்றவே மற்ற ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி, எண்ணும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கிறது என்று கருதித் தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். மனிதஉரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்கு ஆகத்தான் இருக்கலாமே ஒழிய வேறு ஒன்றுக்காக இருக்க முடியாது.

ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளதாக இருந்தாலும் அதனால் மனிதன் மேன்மையானவனாகவோ, மதிக்கத் தகுந்தவனாகவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல்பூண்டுகளுக்கு நறுமணம் உண்டு. சில ஜந்துக்களின் மலங்களுக்கும் நறுமணமுண்டு, அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்றுகிறோமா?

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை, மடாதிபதிகளை மதிக்கிறோமா? இவர்களையெல்லாம் அவரவர் களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள். மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன் அன்னதானப்பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோல்தான். தன் தன் நலத்துக்குத் தன் தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்டதாயிலும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழியப் போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் மதிக்காமல் இருக்கலாம். அவமதிக்கலாம். அது பொதுவாய் மதிக்காததாகாது.

(‘விடுதலை’ - 7.4.1950 - பக்கம் 2)


டாக்டர் நாயர் – தியாகராயர் – நான் – தந்தை பெரியார்



விடுதலை ஞாயிறு மலர்
Published September 23, 2023

டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளை ஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலு வலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இர யிலடியிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், ‘யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக் கின்றன?’ என்று கேட்கவும் தனக்குக் காவ லாக ஓர் இரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், வேறு நபர் தன்னுடன் இல்லாமையால் அவரிடமே தன் சாமான்களை ஒப்புவித்துவிட்டு வந்த தாகவும் தெரிவித்தார். ஓர் இரகசிய போலீஸ் அதிகாரி பின்பற்றும் அளவுக்கு தேசியவாதியாய் இருந்த அவர்தான் – பிறகு ‘தேசத் துரோகி’யாக்கப்பட்டார். ஆரம் பத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர். நானும் ஆரம்பத் தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்த வன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம்.

ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதி யாக இருந்தவர்தான். 1914இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரிய தரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற் றியவர்தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங் களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர் களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடி மைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல், இழிவு பற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள் தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்ற பிறகு தான் நாங்கள் ‘இராட்சதர் களா’க்கப்பட்டோம்.

பிறகுதான் அவர்கள் எங்களை விட்டு விட்டு வேறு விபீஷணர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்கள். உத்தியோகத்தில் நம் இனத்தவருக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான், காங்கிரஸ் ஸ்தாபனம் வேறுபக்கம் பார்க்க ஆரம்பித்தது. அதுவரை அது வெறும் உத்தியோகக் கோரிக்கை ஸ்தாபனமாகத் தான் இருந்து வந்தது.

காங்கிரசின் ஆரம்பகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இதன் உண்மை விளங் கும். அப்போதெல்லாம் காங்கிரஸ் மாநாடு களில் முதலாவதாக இராஜவிசுவாசப் பிரமாணத் தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பிய தற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடூழி காலம் இருக்கவேண்டுமென்று வாழ்த்துச் செய்யப்படும். சென்னையில் 1915இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி இராஜ விசுவாசத் தீர்மானம் காலை ஒருமுறையும், மாலையில் கவர்னர் விஜயத்தின்போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்துவருகிறது.

ஆகவே, வெள்ளையர் வழங்கிய உத்தி யோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம் பித்த பிறகுதான் – வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகுதான்- காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி, வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றே ஒழிய,  அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித் தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்துவந்தது என்பது கண்கூடு.

(திருச்சியில், 3.12.1950இல் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு  ‘விடுதலை’ 14.12.1950)

ஞாயிறு, 17 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனையல்ல… எல்லாருக்கும் எல்லாம் என்பதே! – தந்தை பெரியார்



விடுதலை நாளேடு
Published March 17, 2024

தலைவர் அவர்களே! மாணவர்களே!
இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண் கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்த மானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது. ஆனால், படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப் படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங் களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

திராவிடர் கழகம் ஏன்?

இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என் பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்க வேண்டியதா யிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகி யவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவி னையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடிய தென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் – திராவிடர் என்பது, திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர் களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மை களும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதி களுந் தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் நிலை ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவி டத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.

இதுகூட ஏன்?

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு – பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டு வருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போ கவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப் பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில் லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம், 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக் கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடு களும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர் களுக்குத்தான் (நமக்குத் தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒரு கூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் – திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென் பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசிய மில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யா மலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப் பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனு மதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலி ருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப் பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும்.

சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனி யாமல் அது திறக்கப் படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப் பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார (பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது… ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிரா மணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத் திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்ப வர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்து விட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவ மாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவ தால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத் தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்தி விசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப் பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட் டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக் கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டு விடாது. ஆரியத்தால் தீண்டப் படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக் குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய்விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரண மாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கி விடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப் பட்டதாகவோ அருத்தமா? இங்கு தான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன் னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை.

ஆதலால், ஆரம்பகாலத்தில் – பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின் பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையே யாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்திய வர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏங்கல்ஸ் ஆகிய வர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப் படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில் தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டு வருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறை களை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படியாவது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக் கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார்.

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில்
பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 14.07.1945