ஞாயிறு, 12 மே, 2024

எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?


தந்தை பெரியார்

18

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவு என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்ததல்ல.

மற்றெதற்கு ஆக என்றால் மனிதர்களாக மனிதத் தன்மை உடையவர்களாக இருந்து மறைந்த மனிதர்களுக்கு ஆக இரங்கி அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்கு ஆகவே யாகும்.

அப்படியானால் செத்துப்போன மற்றவர்களும் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகிறோமே ஒழிய, மற்ற ஜீவப்பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்வதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவபேதம் அல்ல; நடப்பிலும் நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவப்பிராணிகளுக்கும் மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

ஜீவன் என்றால்?

ஜீவன் என்றால் பிறத்தல், தன் நலனுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக்குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங்களைப் பார்த்தால் செத்த மனிதர்களும் இருக்கும் மனிதர்களும் முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி பேரும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும் மேற்கண்ட குணங்களுடைய ஜீவப்பிராணி என்பதில் சேர்ந்தவர்களாக ஆகாமல் அவைகளில் நின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்படவேண்டிய மனிதத்தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?

ஜீவன் என்றால் சுய (self) உணர்ச்சி என்றுதான் கருத்து. சுய உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இந்தத் தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்வது மனிதனை ஜீவப்பிராணிகளிடம் இருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ஜீவத்தன்மை எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ, அவற்றிற்கெல்லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால் அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.

தேன் ஈக்களால் மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள்; மாடுகளால் மக்கள் பால் சாப்பிடுகிறார்கள்; ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள்; நாய்களால் காக்கப்படுகிறார்கள்; கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோவற்றால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித்தான் மனித ஜீவனும் பல வழிகளில் பல காரணங்களால் வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான்.

எதனால் மனிதன் உயர்ந்தவன்?

மற்றபடி எதனால் மனிதன் மற்ற ஜீவப்பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாகலாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவு சொன்னேன்.

ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து,

அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது நலத்தையும், தன் மேன்மையையும் பற்றிய கவலையும், தனது மேல் வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து மனித சமுதாய வாழ்வில் மேன்மைக்காக பணியாற்றவே மற்ற ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி, எண்ணும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கிறது என்று கருதித் தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். மனிதஉரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்கு ஆகத்தான் இருக்கலாமே ஒழிய வேறு ஒன்றுக்காக இருக்க முடியாது.

ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளதாக இருந்தாலும் அதனால் மனிதன் மேன்மையானவனாகவோ, மதிக்கத் தகுந்தவனாகவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல்பூண்டுகளுக்கு நறுமணம் உண்டு. சில ஜந்துக்களின் மலங்களுக்கும் நறுமணமுண்டு, அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்றுகிறோமா?

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை, மடாதிபதிகளை மதிக்கிறோமா? இவர்களையெல்லாம் அவரவர் களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள். மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன் அன்னதானப்பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோல்தான். தன் தன் நலத்துக்குத் தன் தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்டதாயிலும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழியப் போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் மதிக்காமல் இருக்கலாம். அவமதிக்கலாம். அது பொதுவாய் மதிக்காததாகாது.

(‘விடுதலை’ - 7.4.1950 - பக்கம் 2)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக