சனி, 23 நவம்பர், 2024

சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!! -11

 தந்தை பெரியார் அறிவுரை

ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!!

விடுதலை நாளேடு



சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (11)

– கி.வீரமணி –

1925 இல் ஈரோட்டில் ‘குடிஅரசு‘ ஏட்டின்மூலம் சுயமரியாதை இயக்க கரு உருவாகி, வளர்ந்தது – காஞ்சி புரத்தில் அது பிறந்தது!
சுகப் பிரசவம் என்று கூற முடியாதபடி, இருந்தாலும், ஆயுதம் எடுக்காமலேயே பிரசவம் பார்த்து அழகிய குழந்தையை அந்தத் தாயே பெற்றெடுக்க, பெரியார் பெரும்படையான மருத்துவர்களும் உதவினார்கள்.
பிறந்த குழந்தை வளராது என்று ஜோஸ்யம் கூறிய வர்களும், ‘‘பிறந்த நேரம், சகுனம் சரியில்லை, அப்படியே வளர்ந்தாலும் பெற்றவர்கள் நீண்ட நாள் வாழமாட்டார்கள்; அவர்கள் உயிருக்கு ஆபத்து.
அதன் பிறகு அது பெற்றோர், வளர்ப்போர் இல்லாத ஆதரவற்ற அனாதையாகித் திரிந்து, தானே தன் முடிவைத் தேடிக் கொள்ளும் அற்பாயுசுக் குழந்தையாகவே இருக்கும் என்பது அதன் தலைவிதி’’ என்றார்கள்!
‘‘பிறந்தபோதே ‘பேய்’ பிடித்துக் கொண்ட இந்தக் குழந்தை சிறிது காலம் பேயாட்டம் ஆடி, சில ஆண்டுகளில் கேசம்முதல் பாதம்வரை எல்லாமே சபிக்கப்பட்டு, தானே தன் முடிவைத் தேடிக்கொள்ளும் – அதுவும் அது ‘ராட்சப் பேய்’’’ என்றனர்.
ஆனால், அந்தத் தாயும், குழந்தையும் கிடைத்ததை உண்டன, பகுத்தறிவு, பட்டறிவுப் பாலைப் பரிவுடன் ஊட்டிய அந்தத் தாயின் மடியில் வளர்ந்து, அனைவரின் பார்வையையும் ஈர்த்த குழந்தையாய் வளர்ந்தது.

சுவாசித்த காற்றோ சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவக் காற்று; அருந்திய சுயமரியாதைப் பாலோ பகுத்தறிவுப் பால்; பிறகு கண்டது கற்றுப் பண்டிதக் குழந்தையாக 4, 5 ஆண்டுகளிலேயே, விஞ்ஞான விசித்திரமாய் விய னுறு உலக அதிசயமாக வளர்ந்தோங்கியது. அற்பாயுசு என்றவர்கள், ‘‘அதன் ஆயுள் மட்டும் வளரவில்லை; அறிவும், பலமும், ஆதரவும் நாளும் வளர்ந்து நானிலத்தையும் வயப்படுத்தி வருகிறதே’’ என்று கவலையுற்றார்கள்!
அதன் கொள்கை எதிரிகள், தமக்குள்ளே ஓர் அச்சம் எ்னறாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘‘எல்லா ஆட்டமும் சில காலம்; அப்புறம் அதற்கு முடிவு தானாகவே ஏற்படும்’’ என்று தமக்குத்தாமே சமாதானம் கூறி, அதனை அழிக்க,
கூலி பெறவேண்டி கூலிகள் சிலரும்
காலித்தனம் செய்து ‘சடகோபம்’ பெற்றவர்கள் சிலரும்
பாதிக்கப்பட்ட ஆரிய – பார்ப்பன – வைதீக ஏடு களும், அமைப்புகளும் கச்சையை வரிந்து கட்டி, சவால்களுக்குமேல் சவால்களை விட்டனர்.

அச்சுயமரியாதை இயக்க வீரனோ புறநானூற்றுக் கள வீரனைப் போல, லட்சிய வீரனாகக் களம் காண ஆயத்தமானார்!
செங்கற்பட்டு நகரத்தில் ஒரு திருப்புமுனை மாநாடு. அதுதான் சுயமரியாதை இயக்கம் என்ற வீரச் சிறுவனின் முதல் மாநாடு – 1929 இல், 5 ஆண்டுகளில்!
பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் அந்த ஈரோட்டு பூகம்பத்தால் அதிர்ச்சி கண்டு நிலை குலைந்தா லும், நிம்மதி இழந்தாலும், நீண்டதோர் திட்டம் தீட்டி, இந்த இயக்கத்தை ஒழிக்க, புதுப்புது ஆயுதங்களைத் தேடினர்; தேடியும் வருகின்றனர்.
சுயமரியாதை இயக்க அடிநாள் வீரரும், பிரச்சாரப் பீரங்கியும் ஆன தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் கம்பீர மொழியில் சொல்வதானால், வைதிகம் அதன் ‘ரத, கஜ, துரக, பதாதி சேனை’களை அழைத்துத் தன் புறத்தே வைத்து அவதூறு அம்புகளை, அழிபழி ஈட்டிகளை அந்த சுயமரியாதைச் சூரர்கள்மீது ஏவிப் பார்த்தது.

ஏமாற்றம்தான் கிடைத்தது, வைதிகபுரிக்கு! மிஞ்சியது கடும் கோபமும், கொடும் ஆத்திரமும்தான் வருணாஸ்ரமக் கோட்டையாருக்கு!
சுயமரியாதை இயக்கத்தை நாஸ்திக இயக்கம் என்று அந்நாள் ஆஸ்திக சிரோன்மணிகள் அடையாளப்படுத்தி அவ்வியக்கத்தினரைத் தம் பக்கம் ஈர்க்கப் பிரச்சாரங்கள் மூலமும், தங்களது பத்திரிகை அஸ்திரங்களாலும் அவ்வியக்கத்தின்மீதும், அதன் சாதனைமீதும் ஏவிப் பார்த்தனர். அவை எஃகுக் கோட்டைக்கு முன், விழுந்தொடிந்து, வீணானதுதான் மிச்சம்.
அப்படி என்ன பெரிய ‘ஈரோட்டு பூகம்பம்’, அந்த செங்கற்பட்டு முதலாம் சுயமரியாதை மாகாண மாநாடு என்ற பகுத்தறிவுப் பொங்குமாங்கடலில் என்கிறீர்களா?
இதோ தந்தை பெரியார் அவர்களே அவரது நடை (எழுதுத்துகள்) மூலமே விளக்குகிறார் கேளுங்கள்.
நடந்த தடை ஓட்டங்களும், சந்தித்த எதிர்ப்பு, அவதூறு, பழிதூற்றல் முதலியனபற்றி (25.8.1929, ‘குடிஅரசு‘ தலையங்கத்தின் ஒரு முக்கிய பகுதி) தந்தை பெரியாரது கருத்துரைகள்!

‘‘சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும்.
இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுத லையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம்.
இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும்.
சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்ற லினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள் தனத்திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசீயக் கூட்டத்தார்கள் என்பவர்களும் சமய இயல்பில் வைதீகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும், இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெருமைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வியக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்றும், சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வ ளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக் கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்கப் பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரசாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.

இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேச மித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘நவ சக்தி’, ‘லோகோபகாரி’, ‘ஊழியன்’ முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப் பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்துக் கூறுவதும், கருத்துக்களை மாற்றிக் கூறுவதும், பொதுமக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.
மற்றும் பிரசாரம் செய்வதிலும், தேசீயத் தலைவர்கள், பிரசாரகர்கள் என்பவர்கள் எல்லோரும் ஒரே முகமாய் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு, குழந்தை, ஷாபி முகம்மது, அண்ணாமலை, குப்புசாமி, பாவலர் என்பவர்களும் மற்றும் தேசீயம் என்பதன் பேரால் நாட்டில் பாமர மக்களிடம் செல்வாக்குள்ள அனைவரும் அடியோடு பார்ப்பனக் கூட்டமும், காப்பிக்கடை தாசி வீடு வரையில், சட்ட சபை முதல் சந்து பொந்துகள் எல்லாம் சென்று சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் இதைக் கொல்வதற்கு “ஆண்டவன் அருள் கொண்டு துணிந்து விட்டோம்” என்றும், “கடவுள் துணை கொண்டு இறங்கிவிட்டோம்” என்றும், “கிருஷ்ண பகவானே துணை” என்றும் கர்சித்துக்கொண்டு தொண்டை கிழியப் பேசியும், பார்த்தார்கள்.

அவர்களுக்குள் வர்ணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகா நாடுகள் கூட்டி தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும் புராணப் பண்டிதர்கள், புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்தார்களும் தேசீய மேடையிலும், சமய மேடையிலும் “சுயமரியாதை இயக்கம் சமயத்தைப் பாழ்பண்ணி வருகின்றது, இதை ஒழிக்க வேண்டும்” என்று கூட்டங்கள் போட்டுக் கூவிப்பார்த்தார்கள்.
இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் இரகசியமாகச் செய்த இழிதகைப் பிரசாரத்திற்கு அளவே இல்லை.
என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும், செய்யப்பட்ட இழி பிரசாரத்திற்கும் அளவே இல்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும், குத்தி விடுவதாகவும், சுட்டு விடுவதாகவும், மற்றும் பலவிதமாய் அவமானப் படுத்துவதாகவும், கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கையெ ழுத்திட்ட கடிதங்களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவே இல்லை.
இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம் இன்றைய தினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசீயத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும், பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப் பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன், ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும் கசகசவென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது.

இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதா வது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால் இப்போது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும், அவற்றின் முடிவுகளையும் கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடந்த தேர்தல்கள் பெரிதும் “தேசீயத்திற்கும்” “ஆஸ்தி கத்திற்கும்” நல்ல தோல்வியைக் கொடுத்து, “தேசத்துரோகத்திற்கும்” “நாஸ்திகத்திற்கும்” நல்ல வெற்றி யைக் கொடுத்திருப்பதானது யாவரும் அறிந்ததாகும்.
அது மாத்திரமல்லாமல், தேசீயத்தின் பேராலும் ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தல்களுக்கு நிற்க ஆள்களே கிடைக்காமற் போனது. “நாஸ்திகத்தின்” செல்வாக்குக்கும் வெற்றிக்கும் ஒரு பரீட்சையாகும். “காங்கிரசே பெரிது” என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார் தேர்தலைப் பற்றித் தான் ஒன்றுமே கவனிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். “தேசமே பெரிது” என்ற கட்சித் தலைவர், வேலை போன திரு.வெங்கிட்டராம சாஸ்திரியார், வேலை போன மந்திரிகள் ஆகியவர்கள் இருக்குமிடமே தெரியவில்லை.

உத்தியோகமே பெரிது என்று பின்பற்றுவோர் இல்லாத குட்டி தேசீயக் கட்சி ஸ்தாபகரும் தானே தலை வருமான திரு.வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும் அய்யங்கார் மூலையில் அடங்கிய சந்தோஷத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாரே அல்லாமல், தன்னைப் பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக் கொள்ளுகின்றது என்பதைக் கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதை பார்க்கவோ, தனது கட்சியின் யோக்கியதை என்ன என்பதைப் பற்றி கவனிக்கவோ, சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றார்.
மற்றும் “சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர்’’ என்ற திரு.கல்யாண சுந்தர முதலியார் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்று மிரட்டுவதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து “நாஸ்திகக் கட்சிக்கு ஓட்டுச் செய்யாதீர்கள்” என்று சொல்லி பார்ப்பனர்களுக்கு சில ஓட்டுகளை வாங்கிக் கொடுத்துவிட்டதுடன் அவர் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.

மற்றபடி ஆஸ்திகக் கூலிகளோ வாங்கின பணம் சரிவர ஜீரணமாயிற்றா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் இனியும், பணம் பணம் என்று கூவிக்கொண்டு, கொடுக்கின்றாயா அல்லது எதிர்க்கட்சியில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று திரு.அய்யங்காரை மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில்
1. மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.
2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.
5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாத படி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது.
6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக் காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது.
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும்; மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின்றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும்; விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும்; கலப்பு மணம் செய்து கொள்ளலாம்; ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது.
8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9. கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செல வழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான காட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோத மான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.
12.“தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாத வர்”களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது; தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந்தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி, ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
மேலும் இவைகளும் அநேகமாக ‘சிபார்சு செய்வது’, ‘கேட்டுக் கொள்ளுவது’, ‘முயற்சிக்க வேண்டியது’ என்கின்ற அளவில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப்படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசீயத்திற்கும், காங்கிரசிற்கும் விரோதமானவை என்றும், எந்த யோக்கியமான தேசீயவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறைகூவி அழைக்கின்றோம்.
உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும்,

கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்றும், சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவினர்க்கு தெற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
எது எப்படி இருந்த போதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்கள் ஒழிதல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய்வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும், இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்பதும்; இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கிவருகின்றது.

அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கும் இவ்வி யக்க சம்பந்தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும், ஜில்லாக்கள் தோறும் தாலுக்காக்கள் தோறும் நடை பெறும் மகாநாடுகளும், அங்கு கூடும் கூட்டங்களும், அக்கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும், அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்கள்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்ற தென்பதைச் சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க, தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்ட கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக்காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்தது தானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம்.
பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாச மெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமுலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம்.
அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படுகின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

(‘குடி அரசு’ – தலையங்கம் – 25.08.1929)

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்துவதற்கான தந்தை பெரியாரின் முன்னோக்கும் காலவெள்ளத்தைக் கடந்து வலிமை வாய்ந்ததாக, அந்த இயக்கம் உலக இயக்கமாக நிலைப் பெற்றிருப்பதும்பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.

வியாழன், 21 நவம்பர், 2024

சிதம்பரத்தில் 96 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பார்ப்பனருக்கு தந்தை பெரியாரின் பதிலடிகள்!

 சிறப்புக் கட்டுரை

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

Published November 19, 2024, விடுதலை நாளேடு

சிதம்பரத்தில் 96 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பார்ப்பனருக்கு தந்தை பெரியாரின் பதிலடிகள்!

தஞ்சை வாலிப மகாநாட்டுக்கு வந்திருந்த ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கரை சிதம்பரம் வரவேண்டுமென்று சிதம்பரவாசிகள் சிலர் அழைக்க அவ்வழைப்புக்கு இணங்கி ஸ்ரீமான் நயக்கரும் அகஸ்மாத்தாய் தஞ்சை ஸ்டேஷனில் சந்திக்க நேர்ந்த ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளும், ஸ்ரீமான்கள் குஞ்சிதபாதம் பிள்ளை, ராமசாமி நாயக்கர், மு.லட்சுமண செட்டியார் ஆகியவர்களும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு ஸ்ரீமான் சிதம்பரம், ராமலிங்கம் பிள்ளை முதலிய பல கனவான்கள் வந்திருந்து வரவேற்று மாலையிட்டு ஸ்ரீஆறுமுக நாவலர் அவர்கள் மடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு பகல் 4 மணிக்கு நாவலர் மடத்திலிருந்து மேளவாத்தியங்களுடன் கடைத்தெரு வழியே பெருத்த ஜனக்கூட்டத்துடன் ஊர்வலமாக மீட்டிங் ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

வெகு சீக்கிரத்தில் சுமார் ஆயிரம் ஜனங்களுக்கு மேலாக கூடி விட்டார்கள். கூட்டத்திற்கு வக்கீல் ஸ்ரீராமய்யா நாயுடு அவர்களை அக்கிராசனம் வகிக்கும்படி பிேரரேபித்து ஆமோதிக்க கரகோஷத்தின் மீது ஸ்ரீமான் நாயுடு அக்கிராசனம் வகித்து ஸ்ரீ நாயக்கரை பேசும்படி கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீமான் நாயக்கர் மூன்றரை மணி நேரம் சுயமரியாதையைப் பற்றியும், அதற்கு இடையூறாயுள்ள மதம், பார்ப்பனீயம், அதன் கொள்கை என்பவைகளைப் பற்றியும் பேசினார்.

நாயக்கர் பேசி முடிந்து உட்கார்ந்ததும் ஸ்ரீமான்கள் முத்து கிருஷ்ண பிள்ளை, சங்க நாதம் செட்டியார், காப்பிக்கடை திரு.நாராயண அய்யங்கார் ஆகியோர்கள் சிறிது சிறிது நேரம் பேசினார்கள். அவர்கள் பேசியதற்கு மறுமொழி சொல்ல தமக்கு சிறிது சாவகாசம் கொடுக்க வேண்டுமென்று நாயக்கர் கேட்டுக்கொள்ள அக்கிராசனர் உத்திரவு கொடுத்தார். நாயக்கர் பிறகு பேசியதாவது:

எனக்கு முன்பேசிய மூன்று கனவான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண்டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக்கின்றது என்று சொன்னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணாசிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனியாய் பிரச்சாரம் செய்கின்றேன்.
ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட வில்லை என்கின்றார்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரிடம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணாசிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வதோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட பிறகு அவரை ‘மகாத்மா’ என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக் கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமுகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக் கைகளும் ஒழிய வேண்டியது தான்.

ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களில் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசினதற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன். யார் என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலை யில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன்.

ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோதமாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும்.
ஸ்ரீமான் திரு.நாராயணய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை” – என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து “நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா?” என்றார்.

உடனே ஸ்ரீமான் நாயக்கர், “ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன்” என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் – (பத்திரிகை நிருபர்) “அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்.

நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ – எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.
அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார். மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் “இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவது தானே’ என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்கு விரோதமான கொள்கை களை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மத மானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்பதானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண்டாமா? என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடியதா யிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக – வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரசார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது?

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவ தில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத் திற்கும், சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கை களும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு எனது வேலை சுலபமாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக் கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது.

“ராமராஜ்ய”மாகவோ, “பாண்டிய ராஜ்ய” மாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே’ பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற்றப் பட்டிருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.

சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட் டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை.

ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும்புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும். அதை வெளியிடும் தொண்டுதான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.

(25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரியாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை தந்து ஆற்றிய சொற்பொழிவு)

– ‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 04.03.1928

திங்கள், 18 நவம்பர், 2024

புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்



Published November 17, 2024
விடுதலை நாளேடு

கார்த்திகை தீபம்

தந்தை பெரியார்

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.
எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப் பண்டிகைகளில் உள்ள அபி மானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்தபாடில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல், அடிக்கடி அவற்றின் புரட்டுகளை வெளிப்படுத்தி வருவ தனால், நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.

சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையைப் பற்றி எழுதியிருந்தோம்.

பயன் என்ன?

அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டி கையால் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுங்கிப் புகையும் கரியுமாக ஆகிய வகையிலும் செலவாகியிருக்கும் என்பது மட்டுமல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி, ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடி புகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரம் அல்ல, தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்களின் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்மடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட

காரியங்கள் எவ்வளவு!

தீபாவளிக்கு முன் சில நாட்களும் தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட் டுகளிலும் வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத் தால், அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால்

தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு!

இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.

இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது.இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த் திகைத் தீபம் என்பதுதான்.

இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்தி கைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீண் செலவு

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

தீபாவளிக்காக வரவழைத்து விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!
கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப் பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண் ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!

இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக் கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்!

இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதை இரண்டு. அவைகளில் ஒன்று:

மூட நம்பிக்கை

ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகா தேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைதான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவ தாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதை யெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை.

இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபச்சாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்வீகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று. ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.

இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:

புராணப் புரட்டு

ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம். உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம். அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டி ருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரம சிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங் களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.

உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல் லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ் வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம்.
இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை. இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாச கங்களும், தோத்திரங்களும் இல்லை.

இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக் கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக் குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறிய லாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேக செய்திகள் அமைந்திருப் பதைக் காணலாம்.

இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகை யினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?

இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண் டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்க வில்லை.

வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப் பார்களா?
குருட்டு எண்ணம்

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாது – தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள்,அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடா விட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டி ருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர் களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சி யெடுத்துக் கொண்டார்களா?

இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங் களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங் களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமம், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?

“குடிஅரசு” 22-11-193

வெள்ளி, 8 நவம்பர், 2024

புராணப் புரட்டை புரிந்து கொள்ளுங்கள் பணச் செலவும், நேரச் செலவும் செய்யாதீர்கள்! (தீபாவளிப் பண்டிகை)

 


விடுதலை நாளேடு

தந்தை பெரியார்

படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்களிடம் அறிவாராய்ச்சியை எதிர் பார்க்க முடியுமா? – தந்தை பெரியார்

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக் கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டா டப் போகின்றீர்களா? என்பதுதான். நீங்கள் என்ன செய் யப் போகின்றீர்கள்? என்று கேட்பதின் தத்துவமாகும்.

சுயமரியாதை உணர்ச்சி

நண்பர்களே! சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப் புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுக ளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடங் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே அல்லாமல், உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அதுவிஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்?
இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர் களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணப் புரட்டு

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காது களைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக் குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புரா ணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!
இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும், நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களா வீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவ தால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக் களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண் டாடப் போகின்றீர்கள்.

வீண் செலவு

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோ கப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அபரிமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கும் கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கின்றது என்பது மான விஷயங்களொரு புறமிருந்தாலும், மற்றும் இவை களுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்து வார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்தவிதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக்கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண் மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண் டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலி யவை பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறி வுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒப்புக் கொள்ள முடியுமா?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்த மான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண் டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிரசண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும்? என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக் கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட, பட்டணங் களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும், பட்ட ணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க் கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங் களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னை யில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மை யோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள்.
கண்மூடி வழக்கங்கள்
சாதாரணமாக மூடபக்தியாலும் குருட்டுப் பழக்கத் தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ்நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள்தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள்தோறும் கதா காலட்சேபங்களும் நடைபெறுவதையும், இவற்றில் தமிழ்ப்பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர் கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு, தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப் பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டுமென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என் கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச் சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப்பண்டிகை என்பதை உண்மையான தமிழ்மக்கள், திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண் டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

– குடிஅரசு, 16.10.1938

தீபாவளி

தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா? என்று கேட்கின்றேன் தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவ தாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள்! விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப் பண்டிகையை உத் தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்; தன் னிடம் ரூபாய் இல்லா விட்டாலும் கடன் வாங்குகின்றான்.கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு? தவிர சுத்த முட்டாள்தனமான பட்டாசுக்கொளுத்துவது எவ்வளவு? மற்றும், இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமை யாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடு வதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக ‘இனாம் இனாம்’ என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், செலவாகின்றது என்று கணக்குப்பாருங்கள்.

இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேட்கின்றேன். துலாஸ்தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்தானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப் படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப் படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசிப் பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டுவிட்டு பார்ப்பானுக்குச் சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய்கின்றோம். காவேரியைப் பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?
– குடிஅரசு – சொற்பொழிவு – 20.10.1929