திங்கள், 17 மார்ச், 2025

பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

 மதிப்பிற்குரிய தலைவரவர்களே! மணமக்களே! பெற்றோர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நம் பெண்மக்கள் பற்றி பெண்மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர் களுக்குமாக சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப்போன்ற – நம் சமுதாயத்தைப் போன்ற – தாழ்த்தப்பட்ட அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை. ஆகையால் பெண்கள் பற்றிப் பேசுகிறேன்.

சரி பாதி
பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவமுதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்து, பலவிதத்தும் பேத உணர்ச்சியே அற்று, ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக பொம்மைகளாக்கி பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதை பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக்கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்து கொண்டு அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி திருப்தியும் பெருமையும் அடையச்செய்ய வேண்டியதான ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள், எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது – அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய, அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள் – பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

என்ன நியாயம்
இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்.

இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்கு ஆகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும் நகையாலும் தானே! பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்கும் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாத படியாய் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம், மந்திரம் போடுவதாலும், பூச்சுப்பூசி பத்துப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதி அல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டு போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீரவேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால் கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

மாற வேண்டும்
நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்தவர் படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும், கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்; பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்திசெய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

பெண்கள் பெருமை, வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப்பற்றி அய்ம்பது வரி இருந்தால் அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி திறமைபற்றி ஒரு அய்ந்துவரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்கிறேன்.

சொத்தில் உரிமை
பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டனரா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை அணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை துணி மணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது “கட்டின” வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப்பொருள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

நல்ல கற்புடை பெண்களுக்கு உதாரணம் “மற்றொருவர் உள்ளம் புகாள்” என்பது திராவிட மரபு நூல்களின் கூற்று. அதாவது ஒரு பெண் இயற்கையில் கற்புடையவளாயிருந்தால் தன் கணவன் தவிர மற்றவர்கள் நினைவுக்குக்கூட ஆளாகமாட்டாள், “பிறர்நெஞ்சு புகாள்” என்பதாகும். நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அவர்கள் கவனத்தை நம்மீது திரும்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம் உழைப்பு நம் வாழ்க்கைப் பயன் முதலியவைகளைச் செலவழிக்கிறோம். இது ஏன்? எதற்காக என்று சிந்திக்காததால் அதைத்தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

இதுவா தொண்டு
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை. நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழா பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதைகளையும் அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர் சண்முகம் செட்டியார், சர் குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள் பெண்கள் எங்கே எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷாப்பு கடைகள் ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள், உருவங்கள் போலல்லாமல் நாட்டுக்கு – மனித சமுதாயத்திற்கு – பெண் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன். இவர்களே இப்படியிருந்தால் மற்ற பாமர மக்கள் தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தை போட்டுப் பூட்டித் தானே வைப்பார்கள்?

ஒரு பீகம் அமீருதின் அம்மையார் முஸ்லிம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? என்று கேட்கிறேன். இந்த பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை, தமக்கையர் பிறந்தார்கள். இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க இவர்களுக்கு இருக்கும் புத்தித்திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும்? இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு – சமூகத்திற்கு நட்டமா இல்லையா என்று கேட்கிறேன். பெண்கள் படிப்பு என்பது சுத்த முட்டாள்தனமான முயற்சியாகவே பெரிதும் இருக்கிறது.

படிக்க வையுங்கள்
“பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச்செலவு; நாட்டு வரிப்பணத்தின் வீண்” என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள். இந்த கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய் தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் கற்றுக் கொடுத்து அவற்றில் வெற்றியாய்த் தேறவைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்) அதை ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்த பின்பு – அதாவது திருமணம் ஆன பின்பு அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன். புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால் “இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா” என்று மாமி கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.

ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஓர் அட்வர்டைஸ்மென்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டது தானே என்கிறேன். அது போல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக்கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில் எந்த அறிஞர்களும், சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல் எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.

இது நாகரிகமா?
நான் சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை, கையில் பிடித்துக்கொண்டு ஒரு குழந்தை, இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படி ஒரு குழந்தையைவிட்டு இப்படியாக படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் வட்டங்களுக்கு வந்து நடுவிலிருந்துகொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையூறும், தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும், சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமூகத்தில் படித்த பெண்கள், படித்தவர்கள் வீட்டுப் பெண்கள் என்கிறவர்கள் இடையில் இருக்கத்தக்கதா? என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலை உயர்ந்த துணிகள். குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும் ஆபாசம் இவை ஏன்?

நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கிக் குழந்தை பிறந்த உடன் அதை எடுத்து அந்த வட்டியில் ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக்கொள்ளச் செய்தால் அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க்கின்றான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகிறான்? ஆகையால் குழந்தையை ஆள்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் ஆள்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப்போல உயர்ந்த வேலை பார்க்கவேண்டும். சர் ஏ. ராமசாமி முதலியார் தங்கை சர்.ஏ. லட்சுமணசாமி முதலியார் போல் ஆக வேண்டும். சர் சண்முகம் தங்கை ஆர்.கே. வெங்கிடாசலம் செட்டியார் போல ஆகவேண்டும். குமாரராஜா தங்கை இராமநாதன் செட்டியார்போல், சிதம்பரம் செட்டியார் போல் ஆகவேண்டும். பொம்மைகளாக, நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக ஆகக்கூடாது என்கின்றேன்.

பெண்களால் முடியும்
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம், அணிந்து கொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.

நம் பெண்கள் நாட்டுக்கு, சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம் இந்த பாழாய்ப் போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத்தொண்டு, முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக்கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.

டீசென்சி—சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத்தகுந்த பேஷன், நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் (Simple) சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் சொல்லுவேன்.
நம்நாட்டுப் பெண்கள், மேல்நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை ஊக்கம் உடையவர்கள் ஆவார்கள். நம் சீதோஷ்ண நிலை அப்படிப்பட்டது. அப்படி இருக்க ஒரு ருக்குமணி, ஒரு விஜயலட்சுமி என்கின்ற பார்ப்பனப் பெண்கள் தானா பொது வாழ்வில் ஈடுபடத்தக்கவர்களாக, மந்திரிகளாக ஆகவேண்டும்? ஏன் நம்மவர்கள் ஏராளமாக வெளியில் வரக்கூடாது? இவர்களைத் தடுப்பது சீலை, நகை, துணி அலங்கார வேஷம் அல்லாமல் வேறு என்ன?

ஆண்களைப் போல் உடை
எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதமாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்கவேண்டும். பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப்பொருளாக ஆக்கப்படாது அவர்கள் புது உலகைச் சித்திரிக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.

(15.9.1946 அன்று திருப்பத்தூரில் (வட ஆர்க்காடு) நடைபெற்ற சுலோச்சனா—சம்பத் மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை 21.9.1946 “குடிஅரசு” இதழில் வெளியானது)

வெள்ளி, 14 மார்ச், 2025

அறிவின் பயன்

 


விடுதலை நாளேடு

'பகுத்தறிவு' என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படும்.
மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனானாலும், மற்ற ஜீவன்களின் உயிர் போலவே மனிதனுடைய உயிரும் ஒரு உயிரேயானாலும், மற்ற ஜீவன்களுக்குக் குறிப்பிடவும் சரீரதத்துவம், ஜீவ தத்துவம் போலவே மனிதனுக்கும் உடையது என்றாலும், பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரம் உண்டு என்று சொல்லப் படுவதனாலே தான் மனிதன் மற்றவை ஜீவப்பிராணிகளை விட வேறு பட்டவனாகவும் மேலானவனாகவும் உலக வழக்கில் மதிக்கப்படுகிறான்.

இப்படி மதிக்கப்படுவது சரியா தவறா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனா யிருப்பதன் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் தரப்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூடச் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், இதைச் சரியென்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்குச் சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்வது. நியாயமாகாது என்றாலும் பிரத்தியட்சத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது.

ஆகவே, இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்தாமல், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக்கொண்டாலும், மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது.

மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக் கொண்டு, மனித ஜென்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது 'சாகரம்', 'துக்கம்' என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.

இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகின்றன என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கு பகுத்தறிவைச் சுதந்திரத்தோடும், துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.
இந்தப்படி சுதந்திரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதும் பயன்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக் கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும். என்றாலும் அதிலிருந்து விடுதலை பெற முடியாது என்று தீர்மானித்துவிடக்கூடாது.

இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தும், தன்னைச் சூழ்ந்து, தனக்குள் புகுத்தப்பட்டும் இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கி விட்டுத் தனியாகச் சுதந்திர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக் கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில் முக்கிய மானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன் ஜென்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களேயாகும்.

இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு சந்தோஷமும், திருப்தியும், அடையும் பேரை எவனும் அடையவே முடியாது. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும், திருப்தியுமான வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே “பகுத்தறிவு” உலகில் உலவி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் ஆசைப்படுகின்றேன்.

('பகுத்தறிவு' மே மாத இதழ் 1, 1935)

இதுவும் “கடவுள் சித்த”மோ? (பொருளாதார சிந்தனை)

 


விடுதலை நாளேடு
பகுத்தறிவுக் களஞ்சியம்

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் "கடவுள் சித்தமாக" இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய்ப் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால் இது யாருடையது செயல் என்று ஆஸ்திகர்கள் சொல்ல வார்களோ தெரியவில்லை!

பொருளாதார நிபுணர்கள் அடங்கிய நாடாகவும், உலக பொருளாதார சாஸ்திரம் கற்பிக்கின்றவர்களைக் கொண்ட நாடாகவும் உள்ள அய்ரோப்பா, அமெரிக்கா நாடுகள் இன்று மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவது ஒரு பக்கமும், போதிய ஆதாரமில்லாமல் பட்டினி கிடப்பது என்பது மற்றொரு பக்கமாக இருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்தப்படி இவர் கஷ்டப்படுவது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் உணவுக்கேற்ற விளை பொருட்களை நெருப்பிலும், பூமியிலும், சமுத்திரத்திலும் கொட்டி நாசமாக்கி வருகிறார்களாம். இதைப் பற்றி “தமிழ்நேசன்” என்னும் பத்திரிகையில் சில குறிப்புகள் காணப்படுவதைக் கீழே குறிப்பிடுகின்றோம்:

நாட்டில் ஏராளமான உணவுப் பொருட்கள் மலிந்து கிடக்கையில் அநேகர் பட்டினியால் வாடுவதேன்? வேலை யின்றித் தவிப்பதேன்? பெரிய செல்வாதார நிபுணர்களடங்கிய இங்கிலாந்தில் அரசாங்கத்தாரிடம் பிச்சை வாங்கிப் பிழைக்க லட்சக்கணக்கான மக்கள் இருக்க வேண்டுவதேன்?

அதிகமான உற்பத்தி உள்ளது. ஜனங்களுடைய தேவைக்கு மேல் ஆகாரப் பொருட்கள் அதிகமாய்க் குவிந்து கிடக்கையில் அவற்றிற்கெதிரில் கணக்கில்லா ஜனங்கள் ஆகாரத்தைப் பார்த்துக் கொண்டே பட்டினியால் வாடு கின்றனர்.

இது மாத்திரமா? இந்தப் பொருட்கள் அதிகமாய் விளைந்து விட்டனவென்று அவற்றை அழிக்கவும் செய்கிறார்கள். ஏன்? அவற்றை உற்பத்தி செய்தவர் கட்குப் போதிய விலை கிடைக்கவில்லை.

“கடவுளால்” அளிக்கப்பட்ட விளை பொருட்களை அழிக்க முற்படுவது என்றால், மனிதரின் போக்கை என்னவென்று சொல்வது? முதலாளிமார்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. அவ்வாறு அழித்து வந்திருப்பதன் கணக்கைப் பாருங்கள்.

அமெரிக்காவில் (அய்க்கிய நாடுகள்)

புளோரிடாப் பகுதியில் காரட் கிழங்கு உற்பத்தி முழுவதையும் பூமியில் புதைத்து விட்டனர்.
ஆண் பன்றிகள் 6,200,000, பெண் பன்றிகள் 20,000 ஆகிய இவைகளை அழித்து விட்டனர்.
ஈஜிப்ட் என்னும் எகிப்து தேசத்தில் ஏராளமான பருத்தியை அழித்து விட்டார்கள்.
கனடாவில் ஏராளமான கோதுமையை அடுப்பெரித்து விட்டனர்.
பிரேசிலில் 270 லட்சம் மூட்டை காப்பியை அழித்து விட்டனர்.

சிலியில் 225,000 ஆடுகள், டச்சு – கிழக்கிந்திய நாடுகளில் பல நூறு டன் கறுவாச் சாமான் அழித்து விட்டார்கள்.
அலாஸ்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் முதலிய நாடுகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மறுபடியும் கடலில் போட்டு விட்டனர்.

இவற்றை ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் கொடுத்துத வலகாதா?

அமெரிக்காவில் விவசாயப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்று ஏராளமான காணிக்காரர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துப் பயிர் செய்யாது அமெரிக்க அரசாங்கத்தார் செய்திருக்கிறார்கள்.

பிரான்ஸ் தேசத்தில் நூல் நூற்கும் தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைவதற்காக 40,000 கதிர்களை அரசாங்கத்தார் தீயிலிட்டுள்ளனர்.
செல்வ நூல் சாஸ்திரத்தின் பேரால் சொல்லிய அக்கிரமங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆகாரச் சாமான்களை அழிக்கக் கூடாதென்று பிரஞ்சுப் பார்லிமெண்டு சபை 1932-ம் வருஷம் ஜனவரி மாதம் 19-ந் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்றுப் போயிற்று. எனவே, இவ்விதக் காரியங்களுக்கெல்லாம் காரணம் யார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
ஆனால், பஞ்சமும், பட்டினியும் கடவுளால் ஏற்படுகின்றன என்று மதக் குருக்கள் மக்களுக்குப் போதிக்கிறார்கள். இதில் இருக்கும் நாணயத்தை உணரவே விடுகின்றோம்.

('நாஸ்திகன்' என்ற
தந்தை பெரியார் எழுதியது,
'குடிஅரசு' 27.1.1935)

செவ்வாய், 4 மார்ச், 2025

எழுத்தாளர் சாவியும் , மணியனும் ஆனந்தவிகடனுக்காகப் பெரியாரைக் கண்ட நேர்காணல்.

#மீள்பதிவு

⚖️👇👇👇👇⚖️

இது எழுத்தாளர் #சாவியும் , 
#மணியனும் 
#ஆனந்தவிகடனுக்காகப்
 #பெரியாரைக்
 கண்ட  நேர்காணல்.

சற்றே நீண்ட பதிவு.
ஆனால் மிக விரிவான 
நிகழ்வுகளைப் பெரியார் 
நினைவுகூர்கிறார்
                ☆☆☆☆☆

+#பெரியார் #பேசுகிறார்
"சாவி"

+திருச்சி #பெரியார் #மாளிகைக்குள் 
காலடி எடுத்துவைக்கும்போதே, 
எங்கள் பார்வையில் 
பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், 
''ஐயா உள்ளேதான் இருக்கார். 
நீங்க வரப்போறீங்கனு 
சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' 
என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

+உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு 
அமர்ந்திருந்த #பெரியாரைப் பார்த்ததும், 
''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.
''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' 
எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.

+சாதாரண வெள்ளைப் பனியன். 
நாலு முழம் வேட்டி. வயிற்றின் 
நடுப் பாதியில் வேட்டியின் இரு 
முனைகளையும் பனியனுக்கு 
மேல் கட்டியிருக்கிறார். 

+அந்த முனைகள் இரண்டும் 
அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் 
கைகள் தாமாகவே அவற்றை 
இறுக்கிவிடுகின்றன. 

+நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே 
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, 
சிற்சில சமயங்களில் பலமாகக் 
குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. 

+ #பெரியாரின் பேச்சு எதனாலும் 
தடைபடவே இல்லை.
''#ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''
''தெரியுமே. #வாசன் #அவங்களை 
எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். 
நான் ' #குடியரசு’ பத்திரிகை 
ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி 
சந்திச்சுக்குவோம். 

+' #கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் 
என்கிட்டேதான் கதர் போர்டிலே 
#கிளார்க்கா இருந்தார். ரொம்ப 
#யோக்யமானவரு. 
கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், 
நான்தான் #திருவிக-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 

+' #நவசக்தி’யிலே சேர்ந்து 
கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. 
அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''

+'' #ராஜாஜியோடு தங்களுக்குப் 
பழக்கம் ஏற்பட்டது எப்போது?''

+''அதுவா? அந்தக் காலத்துலே 
ஈரோட்லே பி.வி. #நரசிம்மய்யர்னு 
எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் 
ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே 
நான் சேர்மனா இருந்தப்போ, 
குடியானவங்க வழக்கெல்லாம் 
என்கிட்டே நிறைய வரும். 
அந்த கேஸ் எல்லாம் அவருக்கு 
அனுப்புவேன். #யாருக்கு? 
#நரசிம்மய்யருக்கு. 

+நான் சேர்மனா வர்றது சில 
பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே 
எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. 

+சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி 
எலெக்ஷன்ல #ஜெயிச்சதும் 
நேராப் போயி #சேர்ல #உட்கார்ந்துட 
#முடியாது. #கலெக்டர் சிபாரிசு 
செய்யணும்னு வெச்சிருந்தாங்க. 

+அந்தச் சமயத்துலே #சர் #பி. #ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் 
பத்தி நல்லாத் தெரியுமானதாலே, 
பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை #சேர்மனாக்கிட்டார்.''

+''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் 
பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் 
போட்ட ஆசாமி யார்?''

+'' #சீனிவாச #முதலின்னு ஒரு வக்கீல். 
ஒரு #நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, 
முன்னுக்குக் கொண்டாருவோம்னு 
நான்தான் அவரை முன்னுக்குக் 
கொண்டுவந்தேன். 

+ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். 

+அப்ப #ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி )
சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார 
வக்கீல்னு சொல்வாங்க. 

+அதனாலே என்கிட்டே வர்ற 
கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். 
அந்தப் பழக்கத்துலே அவர் வரப்போக 
இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வ
ருவார். அவரும் அப்ப #சேலத்துலே #சேர்மன்.''

+''எந்த வருஷம். அது?''

+'' *தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு (1919) ஞாபகம்...''

+'' #வரதராஜுலு #நாயுடு கேஸ் 
சம்பந்தமா அவர் மதுரைக்குப் 
போறப்ப நீங்களும் கூடப் போறது 
உண்டு இல்லையா?''

+''ஆமா; போயிருக்கேன்.
 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு 
காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் 
விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து 
பொதுப் பணி செய்யலாம்’னார்.  #வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். 

+அப்ப காங்கிரஸ் #சத்தியமூர்த்தி 'குரூப்’ 
கையிலே இருந்தது. அமிர்தசரஸ் 
காங்கிரஸின்போது காங்கிரஸ் 
பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் 
பிரிஞ்சுட்டது. 

+சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், 
திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.

+நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே 
அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு 
அப்புறம்தான். அதுவரைக்கும் 
ராஜகோபாலச்சாரியும் நானும் 
நண்பர்கள்தான். அப்புறம்தான் 
சேர்ந்து வேலை செஞ்சோம்.''

+''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''

+''எங்க நட்பு வளர்ந்தது. 
காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். 
நான் கோவை ஜில்லா 
காங்கிரஸ் காரியதரிசி. 
அப்பவெல்லாம் செகரெட்டரிதான்;
 பிரசிடென்ட் கிடையாது. 

+தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. 
அப்பவும் நான்தான் செகரெட்டரி.''

+''ஆமாம்; ராஜாஜி உங்களை 
எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''

+'' #ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''

+''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''

+''இருந்தாங்க... 
#திரு.வி.க-வும் #வரதராஜுலு 
நாயுடுவும் இருந்தாங்க. 
எங்க மூணு பேரையும்தான் 
எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே 
பேச விடுவாங்க. 

+வரதராஜுலு நாயுடு பேச்சில் #வசவு 
இருக்கும். 
#திரு.வி.க. பேச்சு #தித்திப்பா 
இருக்கும். #நல்ல #தமிழ் பேசுவார். 
என் பேச்சில் #பாயின்ட் இருக்கும். 
பாயின்ட்டாப் பேசி #கன்வின்ஸ் பண்ணுவேன். 

+நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி 
எல்லாம் எழுந்து பேசுவாங்க...''

+''இந்த '#பிராமின் - #நான்பிராமின்’ 
தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''

+''எப்படி வந்தது வினைன்னா - 
#வவேசு.#ஐயரால் வந்தது. 
சேரன்மாதேவியில் 'நேஷனல் 
காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, 
வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச்
 சொன்னாங்க. 

+பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ 
அதுக்குப் பேர். அந்த #குருகுலத்துக்கு 
எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. 

+சிங்கப்பூர், மலேயாவில் 
இருந்தெல்லாம்
 பணம் வசூல் செஞ்சாங்க. 
"தமிழ்நாடு காங்கிரஸ் 
கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. 

+நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் 
கமிட்டி செகரெட்டரி. 
ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். 
வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு 
இருபதாயிரம் வேணும்னார். 

+நான், 'முதல்லே பத்தாயிரம் 
இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு 
சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''
வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே 
பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''

+''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''

+''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே 
காரியம் நடந்துட்டுதே!''

+''என்ன ஆச்சு?''

+''முதல் மந்திரியாயிருந்தாரே 
#ஓபிஆர். #ரெட்டியார்...''

+''ஆமாம்...''

+''அவர் #மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே 
அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம்.
 'குருகுலத்துலே #பார்ப்பனப் 
பிள்ளைங்களையும் #எங்களையும் 
#வித்தியாசமா நடத்துறாங்க. 
அவங்களுக்கு #இலைபோட்டு சாப்பாடு. 
எங்களுக்கு #பிளேட். 

+அவங்களுக்கு #உப்புமா, எங்களுக்கு 
#பழையசோறு. அவங்க #உள்ளே 
படுக்கணும். நாங்க #வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. 
எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். 

+அவ்வளவுதான். #ஜாதிவேற்றுமையை 
வளர்க்கிற குருகுலத்துக்கு 
இனி பணம் கிடையாதுன்னுட்டேன். 
அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் 
தெரியப்படுத்தினேன். 

+அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் 
கூப்பிட்டு விசாரிச்சாரு. 
'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட 
நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''

+''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''

+''என்ன சொன்னாரு! 
'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் 
ஒரு #வைதீகசென்டர். அதனாலே 
அந்த இடத்துல அப்படி நடக்க 
வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். 

+அப்ப ரெண்டு ஜாயின்ட் 
செகரெட்டரிங்க. 
கே.எஸ்.சுப்பிரமணியம்னு 
கடையத்துக்காரர் ஒருத்தர். 
அவர் ஒரு செகரெட்டரி. 

+வ.வே.சு.ஐயர், எனக்குத் 
தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை 
வாங்கிட்டுப் போயிட்டார். 

+அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் 
கழிச்சுத்தான் இந்த சங்கதி 
அம்பலத்துக்கு வந்தது.''

+''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''

+''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே #தந்திரமா கையெழுத்து 
வாங்கிட்டுப் போயிட்டார்.''

+''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''

+''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். 
அப்புறம் எங்கே போனாரோ? 
ஆசாமி திரும்பி வரலே.
ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் 
புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. 

+அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? 
அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு #சேரன்மாதேவி #குருகுலப் #போராட்டம்னு பேர். 

+டாக்டர் வரதராஜலு நாயுடு, 
திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் 
எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. 
வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''

+''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''

+''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... 
#வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் 
கொள்கைக்கு விரோதமா 
#வகுப்புஉணர்ச்சியைத் தூண்டுற 
மாதிரி நடந்துக்கிறார்னு 
அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி 
ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 

+எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு #ராஜாஜி #தீர்மானத்தைத் #தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. 

+நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''

(''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.
இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.
நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்)

+''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் (சாவி) கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

+''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். #புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -
(உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன)

+''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு #ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? 

+கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. 

+அந்த #மோர், அந்தத் #தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

( இதற்குப் பின் பதிவு இல்லை).

ஒளிவுமறைவற்ற நடுநிலயான இந்தப்பதிவில் நுணுக்கமான செய்தி என்னவென்றால்.
1. பிராமணர்கள் பலர் பெரியாரின் நண்பர்கள்.
2. அவர் வெறுத்தது "பிராமணீயத்தை" பிராமணர்களை அல்ல.
3.பிராமணரல்லாதவர்கள் (சீனிவாச முதலி, கடையம் கே.எஸ் சுப்பிரமணியம் ) இவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்.

+பெரியாரின் நேர்மையை வாழ்த்தி வணங்குவோம்.

                 ✍️ #தொகுப்புப் பதிவு✍️

⚖️ #துலாக்கோல்/17.01.2025⚖️

இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்

 

இந்து என்றால் என்ன? – தந்தை பெரியார்

விடுதலை நாளேடு
தந்தை பெரியார்

பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் – அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் – சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் – உற்சவங்கள் கொண்டாடினார்கள்.

பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளை யும், செய்யாத சங்கதிகளையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர் களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படு கின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் – பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனுமதிக்கிறேன். மக்களும் எனது தொண்டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகையில் பணம் பல பொருள்கள் முதலி யனவும் அளிக்கின்றீர்கள்.

நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக் கூடாது என்பதைக் கொள்கையாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள் கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன் னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டு களைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத்திரன் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளு கின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் தானே!

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை – எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட்டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த் தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப் பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல்லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.

இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பது தானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே – எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக – சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.

இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கடவுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத்தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள – யோக்கிய முடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசியல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே – பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.

தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன – நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாச வேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன்றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக்களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் – பார்ப்பனர் அல்லாதவர்களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட்ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார்களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளிலும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின்றதா? அடி யோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973
அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).


குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா, நேற்றா? அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது?

 

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்

விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக் காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சியைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை யும், மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிர கத்தைச் சடுதியில் ஆரம்பிக்கும்படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டுமானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப் பூர்த்தியாக ஒப்புக்கொள்கிறோம். நமது நாட்டில் ஆசார சீர்த்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் செலவழித்த காலம், பொருள் எவ்வளவு?

நாடு அடைந்த பலன் என்ன?
இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றித் தன்தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த பலன் என்ன? நாட்டில் மதிக்கத்தகுந்த ஒவ்வொரு பெரியாரும் ஆசாரத் திருத்தம் ஏற்படவேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் யாவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், வைதிகப்பிடிவாதங்கள் ஒழிய வேண்டும் அதில்லாவிட்டால் விடுதலையில்லை, சுயராஜ்ய மில்லை என்பதாக பேசியும், எழுதியும் இருக்கிறார்கள், இதை நாடு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் குறிப்பு காட்டி இருக்கிறார்கள். அநேக மகாநாடுகளில் இதைப்பற்றிய தீர்மானங்களை ஏகமனதாய் நிறைவேற்றியும் இருக்கிறார்கள் இவற்றைச் செய்த பெரியார்கள் மக்களால் மதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

ஆனால் அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது?
இன்றுவரை ஒரு காரியமும் இல்லையே, இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா, நேற்றா? ஆயிரக்கணக்கான வருஷங்களாய்பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப் படுகிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன? என்று மறுபடியும் கேட்கிறோம்.
ராமாயணத்தில் குகனுடன் ராமர் சரிசமமாய் உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள்,
பாரதத்தில் விதுரன் வீட்டில் கிருஷ்ணன் சாப் பிட்டார் என்கிறார்கள்.
பாகவதத்தில் திருப்பாணர் ஆழ்வாரானார் என்கிறார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் நந்தனார் அறுபத்தி மூவரில் ஒருவராகி நாயனாராயிருக்கிறார் என்கிறார்கள்.
இவ்விருவரும் கோயில்களில் பூஜிக்கப்படு கிறார்கள் என்கிறார்கள். பெரிய புராணத்தில் ஜாதி யில்லை என்று சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.

உமாபதி சிவம் பெத்தான் சாம்பானுக்கு முக்தி கொடுத்ததாய் சொல்லுகிறார்கள்.
கபிலர், பார்ப்பனனுக்கும் பறையனுக்கும் வித்தி யாசமில்லை என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.
அவ்வை ‘ஜாதி யிரண்டொழிய வேறில்லை’ என்று சொன்னார் என்கிறார்கள்.
திருவள்ளுவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்னதாகச் சொல்லுகிறார்கள்.
இராமலிங்க சுவாமிகள் ‘ஜாதி குலம் பேசும் சகடர்கள்’ என்று பாடியதாகச் சொல்லுகிறார்கள்.
திருநாவுக்கரசு நாயனார் “சாத்திரம் பல பேசும் சளுக்கர்காள், கோத்திரமும் குலமுங்கொண்டென் செய்வீர்கள்” என்று கேட்டதாகச் சொல்கிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் ஆதாரமும் காட்டுகிறார்கள்.

மதாச்சாரியார்கள் என்போர்களான ராமானுஜர், ஜாதி வித்தியாசமில்லை என்று சொல்லி பறையர்களை யெல்லாம் பிடித்து, நாமம்போட்டு, பூணூல் போட்டு பஞ்சகச்சம் கட்டச்செய்து அய்யராக்கினதாகச் சொல்லுகிறார்கள்.
சங்கராச்சாரியார் தீண்டாமை இல்லை என்று சொன்னதோடு பறையனது காலில் விழுந்து மன் னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல்லுகிறார்கள்.
இந்து மதத்திலேயே தீண்டாமை இல்லை என் கிறார்கள்
மகமதியம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம், பாரசீகம், சீக்கியம், ஆரிய சமாஜம் பிரமசமாஜம் முதலிய மதங்களிலெல்லாம் தீண்டாமை இல்லை என்கிறார்கள்.
அறிவாளிகளான தயானந்த சரஸ்வதி ராஜாராம் மோகன்ராய்,, விவேகானந்தா, ராமதீர்த்தா, ராம கிருஷ்ண பரம அம்சர், ஜோதிராவ் பூலே,. ரவிந்தரநாத் டாகூர், காந்தி முதலிய மகாத்மாக்கள் தீண்டாமை இல்லை என்று சொன்னதாகச் சொல்லுகிறார்கள் எங்கும், எதிலும் தீண்டாமையே!

இவைகள் தவிர வேதத்தில் தீண்டாமை இல்லை, கீதையில் தீண்டாமை இல்லை சைவத்தில் தீண்டாமை இல்லை, வைணவத்தில் தீண்டாமை இல்லை என்றும் சொல்கிறார்கள் இவ்வளவு மதங்களும், இவ்வளவு மதாச்சாரியர்களும், இவ்வளவு பெரியார்களும், இவ்வளவு ஆதாரங்களும் தீண்டாமை இல்லை என்று சொல்லியும், எழுதியுமிருந்தும் நமது நாட்டில் மாத்திரம் பிரத்தியட்சத்தில் தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள். தீண்டாமை மாத்திரம் என்று சொல்லமுடியுமா? தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை, கண்ணில் தென்படாமை முதலியவைகள் இருக்கிறதா இல் லையா? அதுவும் கோவில், குளம், பள்ளிக்கூடம், தெரு முதலிய இடங்களிலும் பூச்சி, புழு, நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கும், நடப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாம் கூட தீண்டாமை பேய் இருக்கிறதா இல்லையா? சோத்துக்கடை, காப்பிக் கடை, இரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா? இதற்காக எத்தனையோ காலமாய் எத்தனையோ பேர் பாடுபட்டும் முடியாமலிருக்கிறதா இல்லையா?

ஏன் இப்படி இருக்கிறது என்பவைகளை யோசித்துப்பாருங்கள். வாலிபர்களே உங்களைத்தான் கேட்கிறோம், தயவுசெய்து யோசித்துப் பாருங்கள், இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன்வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியவரும். எனவே, இதைப் போக் கடிக்க வேண்டாமா? வேண்டுமென்பீர்களானால் உங்கள் கையில் புஸ்தகம் கூடாது, நீங்கள் இது முடியும் பரியந்தம் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது கோவிலுக்குப் போகக்கூடாது ஏன் என்று கேட்பீர்களானால் நீங்கள் எவ்வளவு படித்தும், எவ்வளவு உத்தியோகம் பார்த்தும் எவ்வளவு பெரியமனிதனாகி எவ்வளவு பக்திமானாகி கடவுளோடு கடவுளாய் உறைந்துக்கொண்டிருந்தாலும் தீண்டாமையென்பது ஒருக்காலும் உங்களை விட்டுப்போய்விடாது.

பிள்ளைகளும் அப்படிதான் சாகுமா?
ஜஸ்டிஸ் கிருஷ்ணன் அய்கோர்ட் ஜட்ஜ் வேலை பார்த்தும் தீண்டாதவராய்த் தான் செத்தார். அவர் பிள்ளைக்குட்டிகள் இன்னமும் தீண்டாதவர்களாய்த்தான் இருக் கிறார்கள். மந்திரி முதலிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தீண்டாதார்களாகிய சூத்திரர்களாகத்தானிருக்கிறார்கள். பார்ப் பனரல்லாத மடாதிபதிகள், தம்பிரான்கள் எல்லாம் என்னதான் ஸ்ரீலஸ்ரீ பட்டமிருந்தாலும் சூத்திரர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள், மைசூர், புதுக்கோட்டை மகாராஜாக்களெல்லாம் சூத்திரர்களாய்தான் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியை உலகமெல்லாம் போற்றினாலும் அவரும் தீண்டாதார் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த நிலையில் நீங்கள் படித்து என்ன செய்யப் போகிறீர்கள் ? யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? நீங்கள் பாசானதாகவே வைத்துக் கொள்ளுங்கள். பெரிய உத்தியோகம் பார்த்துப் பணம் சம்பாதித்து அரசபோகம் அனுபவித்ததாகவே வைத்துக்கொள்ளுங்கள். சாகும்போது யாராய்ச் சாவீர்கள் என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள். குற்றமற்ற மனிதனாய்ப் பிறந்து இருந்தும், சூத்திரர்களாய் தீண்டாதவர்களாய் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்களாய் மிருகத்திலும் தாழ்ந்தவர்களாய் மனிதத் தன்மை அற்றவர்களாய், சுயமரியாதை இல்லாமல்தான் சாவீர்களா அல்லது வேறு விதமாய் சாவீர்களா? என்பதை நினைப்புக்குக் கொண்டுவாருங்கள். நீங்கள் எவ்வளவு பணந்தேடி வைத்திருந்தாலும் உங்கள் பிள்ளைகளும் குட்டிகளும் அப்படிதான் சாகுமா? வேறுவிதமாய்ச் சாகுமா?

என்பதை யோசித்துப் பாருங்கள்
எனவே, உங்கள் போக போக்கியமும், வாழ்வும், பணமும், பதவியும், பட்டமும் என்ன செய்வதற்கு ஒரு நாய்க்கு இருக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லையென்று ஒப்புக்கொள்ளுகிற நீங்கள், ஒரு பன்றிக்கிருக்கிற யோக்கியதை உங்களுக்கில்லை யென்று ஒப்புக்கொள்கிற நீங்கள் இதைப் பெறாமல் எதற்காக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான் படிப்பைவிட இதை முக்கியமாய்க் கவனியுங்கள் என்கிறோமேயொழிய வேறில்லை. முதலில் தீண்டாமையைவிட இழிவான சூத்திரத்தன்மையை ஒழிக்க முயலுங்கள், அதற்குத் தக்க விலை கொடுங்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்துவரும் அக்கிரமத்தை மேடைப் பேச்சினாலும், பத்திரிகைப் பிரசுரத்தினாலும், புராண உபதேசத்திலும் தீர்த்து விடலாம் என்று எண்ணுவது அறியாமையாகும். அதனால்தான் மேல்கண்ட இந்தப் பெரியோர்களின் உபதேசமும், கட்டளையும், பாடல்களும், படிப்பினைகளும் ஆதாரமும் ஒரு கூட்டத்தாரின் வயிறுவளர்ப்புக்கு உதவுகிற தேயல்லாமல் தீண்டாமையை அசைக்கக்கூட முடியவில்லை. தீண்டாமையிலிருந்து விலகுவதுதான் சுயராஜ்யம், அதுவேதான் விடுதலை. அதுவேதான் உரிமை. அதுவேதான் சுய மரியாதை என்பதை உணருங்கள்.

தியாகத்திற்குத் தயாராயிருங்கள்
விடுதலை சும்மா கிடைக்காது. உயிரைவிட வேண்டும். இரத்தம் சிந்தவேண்டும், வெட்டுப்பட வேண்டும். குத்துப்படவேண்டும். சுட்டுக் கொல்லப்பட வேண்டும், ஜெயிலில் சாகவேண்டும் இம்மாதிரி காரியமில்லாமல் உண்மையில் விடுதலை பெற்ற நாடு எது? ஜாதி எது? சுயமரியாதை பெற்ற சமுகம் எது? என்பதை யோசியுங்கள். இதற்குத் தயாரா யிருக்கிறீர்களா? இருக்கமுடியுமா என்று உங்கள் வீரமுள்ள பரிசுத்தமான மனதைக்கேளுங்கள், அது சம்மதங்கொடுத்தால் உடனே உங்கள் புஸ்தகத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சத்தியாக்கிரகத்தை நடத்த வாருங்கள். நாங்கள் வரத்தயாராயிருக்கிறோம் என்று எழுதுங்கள். இப்படி செய்வீர்களானால் இங்கு மாத்திரமல்லாமல், எங்குமே தீண்டாமை என்கிற வார்த்தையே இல்லாமல் செய்து விடுவீர்கள். சூத்திரத் தன்மை ஒழித்தவர்களா வீர்கள். வாலிபர் களாகிய உங்களால்தான் இந்த பெரிய காரியம் செய்ய முடியும். வாலிபர்களாகிய நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு மனிதத்தன்மை யையும், சுயமரியாதையையும், விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்க யோக் கியதையுடையவர்கள். எனவே, தியாகத்திற்கு அஹிம்சையும், குரோதமும் துவேஷமுமற்ற தியாகத்திற்குத் தயாராகுங்கள்.

– குடிஅரசு – தலையங்கம் – 25.9.1927

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் சிறீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்ட தற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்துவந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் ‘சூத்திராள்’ என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்டதாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
பல தனிப்பட்ட வாலிபர்களும், பெரியோர்களும் தங்களைச் சத்தியாக்கிரகிகளாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டும் தெரிவித்து மிருக்கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொழுது கேள்வியா யிருக்கின்றது.
மிகுதியும் சந்தோஷமே!
சமீபத்தில் சிறீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படுகின்றோம்.
ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர்களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்யவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதியென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்ட மாட்டேனென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கும்போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா என்று கேட்கின்றோம்.
– குடிஅரசு – கட்டுரை – 16.10.1927