செவ்வாய், 26 மே, 2015

இனியாவது புத்தி வருமா?(காங்கிரஸ் கோயில் நுழைவு குறித்து)



தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிர வேசம், என்னும் பேரில் காங்கிரசு செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில்களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவரையும் செல்லவிடக் கூடாதென்றும், சொல்லியும் எழுதியும் வந்தது யாவரும் அறிந்ததாகும்.
மற்றும் கோவில்களைக் கள்ளர் குகையென்று கிறிஸ்துவும், கோவில்கள் இடித்து நொறுக்கித் தள்ளப்பட வேண்டியது என்று முகம்மதுவும், கோவில்கள் விபசாரிகள் விடுதி என்று காந்தியும் சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.
தோழர் காந்தியார் கோவில்களை விபசார விடுதி என்று ஒரு சமயத்தில் சொல்லியிருந்தாலும், இப்பொழுது இரண்டொரு வருஷ காலமாய் அவ்விபசார விடுதிக்கு ஆள் பிடித்துவிடும் வேலையை விரயமாய் செய்து வந்த துடன் அதற்காகப் பத்து லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி வந்ததும் யாவரும் அறிந்ததாகும்.
தீண்டப்படாதாருக்கு அரசாங்கத்தார் அரசியலிலும், உத்தியோகத்திலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்த பிறகு அதை ஒழிக்கக் கருதிய காந்தியார்,
தீண்டாதாருக்கு நல்ல பிள்ளையாகக் கருதி அவர்களுக்குக் கோவில் பிரவேசம் ஏற்பாடு செய்து கொடுப்பதாய் வாக்கு கொடுத்ததாய் வாக்கு கொடுத்து அதற்காக ஒரு சட்டம் செய்யவேண்டும் என்று சட்டசபை அங்கத்தினர்களுக்கு உபதேசம் செய்து ஒரு மசோதாவும் கொண்டுவரக் கருதிச் செய்து அதை மற்ற மெம்பர்கள் ஆதரிக்கவேண்டுமென் றும் செய்வதாகவும் சொல்லி, அந்தப்படி ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதும் யாவரும் அறிந்ததாகும்!
அம்மசோதா பொதுஜன அபிப்பிராயத்துக்கு  சர்க் காரால் அனுப்பப்பட்ட சமயத்தில் காங்கிர தலைவர்கள் பண்டித மாளவியா முதற்கொண்டு ராஜன்,
சத்திய மூர்த்தி இறுதியாக உள்ளவர்கள் அம்மசோதா இந்து மதத்துக்கு விரோதம் என்று சிலரும், அதன் கருத்து ஒப்புக்கொள்ளப் படுவதாய் இருந்தாலும் சட்டம் செய்யக்கூடாது என்று சிலரும் அபிப்பிராயங்கள் கொடுத்து பிரசாரமும் செய்து வந்ததல்லாமல் கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை காந்தியாரையும் ஒப்பச் செய்து அம் மசோதாவின் தலையில் ஒரு அடி அடித்து அதை கசகசவென்று நசுக்கித் தள்ளிவிட்டார்கள். அவ்வறிக்கை சாரம் என்னவென்றால்,
தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசு எவ்வித அபிப்பிராயம் கொண்டிருந்த போதிலும் ஆலயப்பிரவேச விஷயத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. இந்துக்களல்லாதார் கலந்து ஓட்டு பெற்று மசோதா நிறைவேறுவதைக் காந்திஜியும், காங்கிரஸ்காரரும் விரும்பவில்லை.
2. மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்பந்தமான பழக்க வழக்கங்களையோ, சடங்குகளையோ தொடக் கூடாது.
3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு இப்போது எவ்வித அபிப்பிராயமும் கொடுக்கக் கூடாது. இதைப் பற்றி நன்றாய் தீர்க்காலோசனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதாகும்.
இதைக் கண்ட பின்பும் மாளவியா எதிர்க்கட்சி ஆரம் பித்ததைப் பார்த்த பிறகும் தோழர்கள் சத்தியமூர்த்தி,  ராஜன் முதலியோர்கள் சட்டம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பின்பும், சர்க்கார் இம் மசோதா விஷயத்தில் அலட்சியம் காட்ட ஆரம்பித்ததும், பொது ஜன அபிப்பிராயம் சாதகமாயில்லை என்று சொல்ல வேண்டியிருந்ததும்,
கடைசியாக இதை இந்து சமூகம் ஆதரிக்காததால் சர்க்கார் எதிர்க்க வேண்டியவர்களாகி விட்டார்கள் என்று சொன்னதும், ராஜபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தீண்டப்படாதாருக்கு மத விஷயங்களில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொன்னதும் ஆன காரியங்கள் அதிசயமான விஷயமாகாது.
காங்கிரசுத் தலைவர்கள் கருப்பு (திருட்டு) பாஷையில் பேசி னார்கள். சர்க்காரும் ராஜ்பகதூரும் வெள்ளையான பாஷை யில் பேசினார்கள் என்பதை விட இதில் பிரமாத வித்தியாச மெதுவும் இல்லை.
கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் சமாதான மானது, குதிரை கீழே தள்ளினதுமல்லாமல் புதைக்கக் குழியும் பறித்தது என்பது போல் இந்த அறிக்கை காந்தியாரின் சம்மதம் பெற்றதாகும் என்றும் சொல்லிவிட்டார்.
இதிலிருந்து காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை தீண்டாதார் விஷயத்தில் சமூக சீர் திருத்த விஷயத்தில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள நல்லதொரு சமயம் ஏற்பட்டது என்று தான் கருத வேண்டும்.
எனவே இனியாவது தீண்டப்படாதவர்களாகவும் தீண்டப் படாதவர்களாய்க் கருதப் படுபவர்களாகவும், தீண்டப்படாதார் என்று ஆதாரங்களிலும் சர்க்கார் தீர்ப்புகளிலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறவர்களாகவும், இருந்து வரும் மக்களுக்கு புத்தி வருமா?
அல்லது இன்னமும் காங்கிரசு காங்கிரசு காந்தி காந்தி என்று கட்டி அழுது ஈன ஜாதிக்காரர்கள் என்று உலகோர் கருதவும் கல் மேலெழுதவும் அனுகூலமாய் நடந்து கொள்வதையே கருமமாய் கருதுவார்களா? என்பதே நமது கேள்வி.
- பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

விடுதலை,16.5.15

ஞாயிறு, 17 மே, 2015

Discussion about the –‘Thali removal’- awareness activities

தாலி கலாச்சாரச் சின்னமா? அடிமைச் சின்னமா?


-  யாழ்மொழி

பெண்களுக்கெதிரான பல அடக்குமுறைகள் நிலவும் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில், திருமண அமைப்பு முறையில், பெண்கள் மீது சுமத்தப்படும் அடிமைச் சின்னங் களும் ஏராளமே! இந்தியா உட்பட பல நாடுகளில் திருமணத்திற்குப் பிறகுதன், பெயரின் பின் கணவன் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கமும், சில இடங் களில் பெண்களின் பெயரைக் கூட அழித்து கணவன் பெயரையே, திருமதி (Mrs.) என்ற அடைமொழி யோடு அழைக்கும் வழக்கமும் பெண் களுக்கு மட்டுமே உள்ளதுபோல், திருமணத்தின் போது, மங்கலநாண் என்றழைப்படும் தாலியும் பெண் ணுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிறது.
தாலி அணிவிப்பதற்கான காரணங்களும், ஒளிந்திருக்கும் பெண்ணடிமைத்தனமும், மூடநம்பிக்கைகளும்
1. பெண் திருமணமானவள் என்பதை மற்றவர்கள் அறிய
ஒரு பெண், தான் திருமணமானவள் என்பதை எதற்காக ஊருக்கே அறிவிக்க வேண்டும்? அது அவளின் தனிப்பட்ட விருப்பமே! ஒரு பெண், தான் திருமணமானவளா? ஆகா தவளா? என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்புப் பலகையாக தாலி இருக் குமேயானால், ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு சின்னம் இல்லை? என்ற கேள்வி இயல்பாகவே அனைவர் மனதிலும் எழும். அப்படியொரு சின்னம் ஆண்களுக்கன்றி பெண் களுக்கு மட்டுமே இருப்பதால் ஆண் களின் சொத்தாக, ஓர் உடைமைப் பொருளாக, ஒரு நிரந்தர அடிமை யாகப் பெண் பாவிக்கப்படுகிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது.
2. தாலி பெண்களின் பாதுகாப்பிற்கானது. தாலி பெண்ணுக்கு வேலி.
பெண் திருமணமானவள் என்பதன் அடையாளமாகத் தாலி இருப்பதால், சமூகத்தில் உள்ள மற்ற ஆண்கள் அப்பெண்ணுக்குத் தீங்கு இழைக் காமல் இருப்பதற்கு தாலி உதவுமாம்; எனவே தாலியே பெண்ணுக்கு வேலி யாம். இவ்விளக்கம் பகுத்தறிவோடு சிந்திக்கும் எவரையும் எள்ளி நகை யாடச் செய்யும். ஒரு பெண்ணுக்கு இன்னல் நேராமல் தடுக்க, ஆண் களுக்கு வக்கிர மனப்பான்மையைக் கொடுக்கும் சமூகக் கட்டமைப்பை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது தான் நிரந்தரத் தீர்வு. அது ஒரு நீண்ட பயணமாக இருக்குமென்றால், ஏராளமான தற்காப்புக் கலைகளைப் பெண்களுக்குப் பயிற்றுவிக்கலாம். தற்காப்பு சாதனங்களைப் பயன்படுத்த லாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு கயிறோ, சங்கிலியோ பெண் களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
3. கணவனின் நல்வாழ்விற்கும், நீண்ட ஆயுளுக்கும்
தாலி கணவனை நீண்ட நாள் வாழச் செய்யுமாம். இக்கருத்தும் பகுத்தறிவிற்கு முரணானது தான். எனினும், தன் மனைவி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று ஏன் ஒரு ஆண் நினைக்கக் கூடாது? எனவே, இதுவும்  பெண்களை ஆண்களின் நிரந்தர அடிமைகளாகச் சித்தரிக்க ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகும் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
4.திருமணமான பெண்கள் தாலி அணிய வேண்டும் என்பது நம் கலாச்சாரம்
சங்க இலக்கியங்களில் களவு மணம், காதல் மணம், உடன்போக்கு போன்றவை களே காணப்படுகின்றன. எனவே தமிழர் பண்பாட்டில், தாலி என்று ஒன்று இருந் திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பினால் நமக் குக் கிடைத்த அவலச் சின்னங்களில் ஒன்று தான் தாலியும்
பெண்கள் மீதான பல அடக்கு முறைகளுக்கு இச்சமூகம் கூறும் அபத்த மான காரணம் கலாச்சாரம் மகாராட்டி ரத்தில் புலேயின் துணைவியார் சாவித்ரி பெண் கல்வியை ஆதரித்த போதும், ராஜா ராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறுத லுக்கெதிராகக் குரல் கொடுத்த போதும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் தந்தை பெரியார் தேவதாசி முறையை எதிர்த்த போதும், கலாச்சாரம் என்னும் விலங்கு உடையத் தான் செய்தது. அதனை உடைத்தெறியாமல் எந்த முன்னேற்றமும் சாத்தியப்பட்டிருக்காது. ஏனெனில், கலாச் சாரம் என்ற பெயரில், பெண்களுக்கு ஆயிரம் பாடங்கள் இருக்கும் சமூகத்தில், ஆண்களுக்கென்று ஒரு பாடத்தைக் காண்பது கூட மிகவும் அரிதான ஒன்றே!! மேலே சுட்டிக் காட்டிய பாகுபாடு களோடு மட்டுமல்லாது, கணவன் இறந்த வுடன் தாலியை அறுத்து விதவை, அமங் கலி போன்ற இழிவான சொற்களைப் பெண்கள் மீது சுமத்தி, பொது நிகழ்வு களில் கூட பங்கேற்க அனுமதிக்காத இச்சமூகத்தில் விதவன் என்ற சொல்லோ அமங்கலன் என்ற சொல்லோ இல்லவே இல்லையே!  எனவே தாலி, பெண்களை அடிமைப்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற ஒன்றே ஒழிய வேறில்லை!
தாலி ஓர் அடிமைச் சின்னம்  பெரியாரின் சிந்தனைகள்
1925-இல் காங்கிரசிலிருந்து வெளி யேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தார் பெரியார். ஜாதி ஒழிப்பும், பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன. ஆணாதிக்கத்தை ஒழிக்க முனைந்த இயக்கமாதலால், பெண்களுக்கெதிராக பல ஒடுக்குமுறைகள் இருந்த போதிலும், எண்ணற்ற பெண்கள் அவ்வியக்கத்தில் இணைந்து தொண்டாற்றினர்.
அக்காலகட்டத்தில் பெண்ணுரிமைக் கென்று பெரியார் எழுப்பிய குரல்களில் சுயமரியாதைத் திருமணமும் ஒன்று. பெண்களை இழிபடுத்தும் தாலி, அலங் காரம் முதலானவற்றை ஒழித்து, சூத்திரர் களை இழிவுபடுத்தும் மந்திரங்களைச் சொல்லும் புரோகிதர்களை மறுத்து, ஆணும் பெண்ணும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக சுயமரி யாதைத் திருமண முறையை அறிமுகப் படுத்தினார் பெரியார். கணவன்  மனைவி என்ற சொற்கள் கூட எஜமான்  அடிமை என்ற தத்துவத்தைத் தான் நிலை நாட்டு கிறது என்பதனால், அவ்வடிமைச் சொற்களை ஒழித்து துணைவன்  துணைவி என்ற சம உரிமைச் சொற்களை அறிமுகப்படுத்தி, திருமணம் என்ற சொல்லையும் ஒழித்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்ற சொல்லை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பெரியார். அப்படிப்பட்ட பெண்ணுரிமைப் போராளி தாலியை ஏன் அடிமைச் சின்னம் என்கிறார்? பார்ப்போம்
மாட்டிற்குக் கயிறு, பெண்ணுக்குத் தாலி
கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை, தாலி என்னும் ஒரு கயிற் றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக கடிந்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத் துவது பேலவேதானாகும் பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து.  - [குடிஅரசு 11.05.1930]
தாலி ஒழிய வேண்டும்
கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரி மையை நிலைநாட்டுவதற்கும் பிறத்தி யான் அப்பெண்ணைக் காதலிக்கா திருப் பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன், ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்கா திருக்கும் பெருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா? அதற்காக கல்யாண காலத்தில்  ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியல்லாமல் பெண் களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததேர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.  -  [குடிஅரசு 11.05.1930]
தாலி = சுயமரியாதையற்ற தன்மை
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற் கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்த பாழும் தாலியே அறிகுறியாகும். புருசர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப் பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டி ருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட் டும். இல்லாவிட்டால் புருசர்கள் கழுத் திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.  [குடிஅரசு 13.07.1930]
மணமகனுக்கும் தாலி
கணவன் கழுத்திலும் தாலி கட்ட வேண்டும் என்று சொன்னதோடு, அவ் வண்ணமே சில திருமணங்களை நடத்தி யும் வைத்தார் பெரியார்.  மாநில சுயமரி யாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண் முகத்தின் மகளின் திருமணத்தில் மணப் பெண், மணமகனுக்குத் தாலி கட்டி, மரபுகளை உடைத்தெறிந்தார்
- [
குடியரசு 14.07.1935]
பெண்ணடிமையை உறுதி செய்யும் தாலி
பெண்ணடிமை என்பதை உறுதி செய்வது தான் தாலியாகும். எப்படி ஒரு அரையனா ஸ்டாம்பில் முத்திரை குத்தி னால் அதைத் திரும்பப் பயன்படுத்த முடி யாதோ, அப்படிப் போன்றது தான் பெண் களுக்குக் கட்டப்படும் தாலியுமாகும் [விடுதலை 27.01.1968]
நாய்க்கு லைசென்ஸ்! பெண்ணுக்குத் தாலி!
பெண்களுக்குத் தாலி கட்டுவது, நாய்களுக்கு முனிசிபாலிட்டி லைசென்ஸ் கட்டுவது போன்றது. [விடுதலை 30.07.1971]
தமிழகம். மக்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்றுவதற்காக மதங் களை எதிர்த்து, ஜாதிய, பாலின ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்னும் கோட் பாட்டை அறிமுகப்படுத்திய பெரியாரின் மண். அம்மண்ணில் சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான தாலி மறுப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. அது மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கக் காலத்திலியே ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவை மறுமணங்கள், பெற்ற குழந்தை களுடன் திருமணம், முதல் கணவரின் சம்மதத்துடன் திருமணம் என பல பண்பாட்டுப் புரட்சிகளை ஏற்படுத் தினார் பெரியார். ஏனெனில் சமதர்ம மக்களாக மாற்ற திருமணமும் ஒரு கருவியாக இருக்கும் என்று கருதினார்.
மதவாத, மனுதர்ம ஆட்சி
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த பின், மதவாத சக்திகளின் கை ஓங்கிற்று. மறைமுகமாக செயல்பட்டு வந்த இவை வெளிப்படையாக, மிகத் துணிச்சலாக, முழு வீச்சாக செயல் படத் தொடங்கியுள்ளன ; இந்தி யாவை இந்து நாடு என்று நிலைநாட்ட விழைகின்றன, இந்து மத அடிப் படைவாத சக்திகள். அதே போல, எழுத்துரிமைக்கெதிராகவும் பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றினர்.
தற்போது கருத்துரிமைக்கெதிராகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், புதிய தலைமுறை எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தாலி பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி வன்முறையில் ஈடுபட்டு அத்தொலைக்காட்சி நிறுவனத் தையும், ஊழியர்களையும் தாக்கியும், வெடிகுண்டு வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஏனென்றால் நடப்பது மனுதர்ம ஆட்சி! மனுதர்மத்தில் பெண்கள் கீழ்மக்கள், ஆண்களுக்கு அடங்கி பணிவிடை செய்ய வேண் டிய வேலைக்காரிகள். அவ்வடிமை இனம்  தாலி என்னும் மனுதர்மத்தில் வலியுறுத்தப்படும் திருமணச் சின்னம் எனக்கு ஓர் அடிமைச் சின்னம் தான்!!
என்று விவாதிப்பதை மனுதர்ம ஆட்சி யாளர்களின் ஆதரவு சக்திகளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அதன் வெளிப்பாடு தான் அவ்வன் முறை.
வரலாற்றுச் சிறப்புமிக்க விழா
தமிழகத்தில், பெரியார் மண்ணில், மதவாத சக்திகள் மனுதர்ம ஆட் சியை மீண்டும் கொண்டு வர முயல் வதை, பெரியார் இயக்கங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்காது என்பதை வலியுறுத்தும் வண்ணம், தாலி என்னும் அடிமைச் சின்னத்தை அகற்றுவதற்கென்றே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விழாவை திராவிடர் கழகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
எனவே, தாலி ஓர் அடிமைச் சின்னம், அது என்னை இழிபடுத்துகிறது, என்பதை உணர்ந்து, அவ்வடிமைத் தளையை அகற்றி, சுயமரியாதையோடு வாழ விரும்பும் பெண்கள் பெருமளவில், இவ் விழாவில் பங்கேற்க முன்வர வேண் டும். ஏனெனில்,
பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும்.நான் அடிமையாய்த் தான் இருப்பேன். நீ மாத்திரம் எனக்கு எஜமானாய் இருக்கக் கூடாது என்பதில் அர்த்தமேயில்லை.
- பெரியார் [குடிஅரசு 21.06.1931]
இப்படி ஒவ்வொரு அடிமை விலங்கையும் உடைத்தெறிய பெண்கள் முன்வந்தால் தான் பாலின சமத்துவம் இந்நூற்றாண்டிலாவது சாத்தியப்படும்.
 -விடுதலை,16.4.15

மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல

மாட்டிறைச்சி சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல

தந்தை பெரியார்

நான் இந்தப் பக்கத்தில் எப்போது வந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஏற் படுத்திக்கொண்டு எனக்குப் பெருமை அளிப்பதையே காரியமாகக் கொண்டு வருகிறார்கள்.  இந்தத் தடவை இப்படி கோழிப் பண்ணையைத் திறந்து வைக்கும் பணியினை அளித்துள்ளார்கள்.
கோழிப்பண்ணை என்று சொன் னாலே தானிய விவசாயம் போல இது வும் ஒரு உணவுப் பண்ட விவசாயம் ஆகும். மற்ற தானியம் காய்கறிகள், உணவுக்கு எப்படிப் பயன்படுகின்றதோ அதுபோலவே கோழியும் உணவுக்காகப் பயன்படுகின்றது. கோழி முட்டை இடு கின்றது. குஞ்சு பொரிப்பது எல்லாம் மனிதன் உணவுக்காகவே பயன்படு கின்றது.
இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்தி பொருள்கள் ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றது. மனிதன் ஒருவனைத் தவிர, அனேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத் தான் பயன்படுகின்றது ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன அப்படி ஒன்றை ஒன்று தின்று வாழ்வது ஏன் என்று சொல்லத் தெரியாது.
சிலர் கடவுள் செயல் என்பார்கள். இது உண்மையாக இருக்குமானால் கடவுளைப்போல அயோக்கியன் வேறு இல்லை. கடவுளைக் கருணாமூர்த்தி தயாபரன் என்கின்றார்கள். ஆனால், தினம் தினம் லட்சக்கணக்கில் மாடு, பன்றி, ஆடு, கோழி, மீன் முதலியன கொல்லப்பட்டு தின்னப்படுகின்றன.
இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று ஆகிவிடுமே. எனவே, கடவுள் பற்றிய எண்ணம் கருத்து எல்லாம் பொய் யானதாகும். உலகப்பரப்பில் 350க்கு மேற்பட்ட கோடி மக்கள் உள்ளார்கள். இதல் 230 கோடி மக்கள் மாமிசம் சாப் பிடும் மக்கள் ஆவார்கள். இந்தியாவில் தான் 10, 15 கோடிகள் வாயளவில் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.
உண்மையாக மாமிசம் தின்னாத வர்கள் 2 கோடி கூட இருக்க மாட் டார்கள். நம் நாட்டில் கோழி சாப்பிடு வான் மீன் சாப்பிடுவான். மாடு சாப்பிட மாட்டேன் என்பான். மாடு சாப்பிடுவான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் என்பான் இப்படியே ஒவ்வொன்றை விட்டு வேறு ஒன்றை சாப்பிடக் கூடிய வர்களும் உள்ளார்கள்.
நம் நாட்டில் இந்துக்கள் என்னும் கூட்டத்தில் சிலர் மாடு தின்பது இல்லை சில கூட்டத்தார் சாப்பிடுகின்றார்கள். உலகில் எங்கும் மாடு சாப்பிடுகின் றார்கள். நமது நாட்டில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் மாடு சாப்பிடுகின்றார்கள் மற்றும் அநேக ஜாதியார் மாடு சாப்பிடு கின்றார்கள்.
நான் விடுதலை பொங்கல் மலரில் மக்களின் உணவு விஷயமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம்தான் சும்மா அதைவிட்டுவிட்டு பழக்கவழக்கத்தை உத்தேசித்து அதனை ஒதுக்குகின்றார்கள். அதிலும் மாடு தின்பதை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள்.
மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக்கொண்டு தானியங் களை உற்பத்திப் பண்ணுவதுபோல மாட்டுப்பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவை பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளேன்.
மேல்நாடுகளில் மாட்டை உணவுக்குத் தான் பயன்படுத்துகின்றார்கள். உழவுக்கு மாட்டைப் பயன்படுத்துவது கிடையாது. முன்பு குதிரையைத் தான் பயன்படுத்தி னார்கள். இன்று இயந்திரம் மூலம் உழவு செய்கின்றார்கள்!
மேல்நாட்டார் மனஉறுதியுடனும் சுறு சுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணம் ஆகும். நாம் சுத்த சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவுமுறைதான் ஆகும்.
சைனாக்காரனையும், மலாய்க்காரனை யும், ஜப்பானியனையும் எடுத்துக் கொண் டால் அவன் சாப்பிடாத மாமிசமே கிடை யாது. மாடு, பன்றி மட்டுமல்ல பாம்பு, பல்லி, ஓணான் முதலியவைகளையும் சாப்பிடு வான். அவன்கள் எல்லாம் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாக விளங்குகின் றார்கள்.
நாம் சக்தி குறைந்தவர்களாவும், மன உறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாக வும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவர்களாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாக சத்து அதிகம் இராது.
இதன் காரணமாகத்தான் தொழிலாளர் கள் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை முதலியன சாப்பிட்டு வந்தார்கள். அவர் களும் அரிசி சாப்பிட ஆரம்பித்து சோம் பேறியாகி விட்டார்கள்.
அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடிய வர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்றதல்ல.
அரிசி உணவு தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், வங்கம், பஞ்சாப்பில் ஒரு பகுதி இப்படி சில பாகத்தில்தான் சாப்பிடுகின் றார்கள். மற்ற பகுதி மக்கள் எல்லாம் கோதுமையே சாப்பிடுகிறார்கள். கோதுமை அரிசியைவிட சத்து அதிகம் உள்ளது.
அரிசி சோறு சாப்பிட குழம்பு பொறியல் ரசம் மோர் முதலியன வேண்டியுள்ளது. இதற்கு நேரமெனக்கேடு அதிகம் ஆகும். கோதுமை உணவுக்கு பக்குவமுறையும் கம்மி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கூட்டு ஒன்று தயார் செய்து கொள்ளுவான்.
நாம் நல்ல அளவு இன்று மாமிசம் சாப்பிடுகின்றவர்களாக இல்லை. ஏழை வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்டால் அதுவே அதிசயம். பணக்காரன் இரண்டு தடவை சாப்பிடுவான். சாப்பிடும் அளவும் மிகக் கொஞ்சம்  அரிசி சோறு மிகுதியாக வும், மாமிசம் கொஞ்சமாகவும் தான் இருக்கும். மேல் நாட்டில் உணவில் பெரும் அளவு மாமிசமும் குறைந்த அளவுதான் கோதுமையும் சேர்த்துக் கொள்ளுவான்.
நமது நாட்டில் கோழி மாமிசமானது ஆட்டுக்கறியைவிட அதிக விலையாக உள்ளது. ஆனால், மக்கள் சல்லிசில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மாட்டு மாமி சத்தை உண்ண மறுக்கின்றார்கள்.
தோழர்களே! பார்ப்பனர்கள் எல்லாம் மாடு எருமை தின்றவர்கள் ஆவர். இராமா யணம் பாரதம் மனுதர்மம் பார்த்தாலே தெரியும் யாராவது விருந்தாளி வந்தால் கன்றுக்குட்டியை அறுத்துத்தான் விருந்து வைத்ததாகக் காணலாம்.
பிறகு எப்படியோ, அதனை பார்ப்பான் விட்டு விட்டு சாப்பிடுகின்ற நம்மவர்களை கீழ்மக்கள் என்று கூறி விட்டான்.
30, 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே சிலர் மாடு சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச, உணவைத் தாராளமாக சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்க பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல.
அப்படியே பாவம் என்றாலும், கோழித் தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துக் கொண்டுதானே வருகின் றார்கள்.
மாடு சாப்பிடுவது அவமானம் உடையது அல்ல. கோழிப் பண்ணை வருமானம் கொடுக்கக் கூடியது. நல்ல சத்துள்ள உணவு அதன் முட்டை முதற்கொண்டு இன்று கிராக்கியாகி விட்டது. முட்டை விலை முன்பு டசன் 3 அணா விற்றது. இன்று ஒரு முட்டை 20 காசு, 25 காசு விற்கின்றது. ஏழை மக்கள் எப்படி வாங்கி தாராளமாக உண்ணமுடியும்?
அரிசி விலை இறங்கினால் பார்ப்பானுக் குத்தான் நல்லது. இப்படிப்பட்ட பண்டங் களுக்கு விலை இறங்கினால் நமக்கெல் லாம் நல்லது.
ஊருக்கு ஊர் 10 பண்ணைக்கு குறை வில்லாமல் கோழிப்பண்ணை ஏற்பட வேண்டும். 500க்கும் கம்மி இல்லாமல் ஒவ்வொரு பண்ணையிலும் முட்டை உற்பத்தியாகவேண்டும். உயர்ந்த ஜாதிக் கோழிகளை வாங்கிப் பெருக்க வேண்டும். அரசாங்கமும் தாராளமாக இம்மாதிரியான காரியங்களுக்கு உதவி செய்கின்றார்கள்.
இந்த நாட்டில் பார்ப்பான் உணவுக்கு ஆக போராட ஆள் உள்ளது. நமது உணவுக்குப் பாடுபட ஆள் இல்லை. நான் சொன்னால் அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று எண்ணுகின்றார்கள்.
மக்கள் தாராளமாக மாட்டுக்கறி முதலிய இறைச்சி சாப்பிட்டு பலசாலியாக ஆகவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.
21.1.64 அன்று மதுரை அனுமந்தபட்டி கோழிப்பண்ணை திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.
விடுதலை 03.02.1964

உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமு மாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந் திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற் கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (
நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது

-விடுதலை,24.4.15

வியாழன், 14 மே, 2015

இந்து என்றால் என்ன? - தந்தை பெரியார்


பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!
கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று  கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.
பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும், செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு மதிக்கிறேன். மக்களும்  எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.
நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக்கூடாது என்பதைக் கொள்கை யாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.
நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.
இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது.  ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.
அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு  அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.
இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.
இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பதுதானே.
இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.
அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.
அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!
உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.
அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.
மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.
தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.
காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.
நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.
தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.
பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.
இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?
இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.
29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 12.6.1973).
-விடுதலை, 26.4.15