ஞாயிறு, 17 மே, 2015

தாலி கலாச்சாரச் சின்னமா? அடிமைச் சின்னமா?


-  யாழ்மொழி

பெண்களுக்கெதிரான பல அடக்குமுறைகள் நிலவும் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில், திருமண அமைப்பு முறையில், பெண்கள் மீது சுமத்தப்படும் அடிமைச் சின்னங் களும் ஏராளமே! இந்தியா உட்பட பல நாடுகளில் திருமணத்திற்குப் பிறகுதன், பெயரின் பின் கணவன் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கமும், சில இடங் களில் பெண்களின் பெயரைக் கூட அழித்து கணவன் பெயரையே, திருமதி (Mrs.) என்ற அடைமொழி யோடு அழைக்கும் வழக்கமும் பெண் களுக்கு மட்டுமே உள்ளதுபோல், திருமணத்தின் போது, மங்கலநாண் என்றழைப்படும் தாலியும் பெண் ணுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிறது.
தாலி அணிவிப்பதற்கான காரணங்களும், ஒளிந்திருக்கும் பெண்ணடிமைத்தனமும், மூடநம்பிக்கைகளும்
1. பெண் திருமணமானவள் என்பதை மற்றவர்கள் அறிய
ஒரு பெண், தான் திருமணமானவள் என்பதை எதற்காக ஊருக்கே அறிவிக்க வேண்டும்? அது அவளின் தனிப்பட்ட விருப்பமே! ஒரு பெண், தான் திருமணமானவளா? ஆகா தவளா? என்பதை அறிவிக்கும் ஓர் அறிவிப்புப் பலகையாக தாலி இருக் குமேயானால், ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு சின்னம் இல்லை? என்ற கேள்வி இயல்பாகவே அனைவர் மனதிலும் எழும். அப்படியொரு சின்னம் ஆண்களுக்கன்றி பெண் களுக்கு மட்டுமே இருப்பதால் ஆண் களின் சொத்தாக, ஓர் உடைமைப் பொருளாக, ஒரு நிரந்தர அடிமை யாகப் பெண் பாவிக்கப்படுகிறாள் என்பதைத்தான் அது காட்டுகிறது.
2. தாலி பெண்களின் பாதுகாப்பிற்கானது. தாலி பெண்ணுக்கு வேலி.
பெண் திருமணமானவள் என்பதன் அடையாளமாகத் தாலி இருப்பதால், சமூகத்தில் உள்ள மற்ற ஆண்கள் அப்பெண்ணுக்குத் தீங்கு இழைக் காமல் இருப்பதற்கு தாலி உதவுமாம்; எனவே தாலியே பெண்ணுக்கு வேலி யாம். இவ்விளக்கம் பகுத்தறிவோடு சிந்திக்கும் எவரையும் எள்ளி நகை யாடச் செய்யும். ஒரு பெண்ணுக்கு இன்னல் நேராமல் தடுக்க, ஆண் களுக்கு வக்கிர மனப்பான்மையைக் கொடுக்கும் சமூகக் கட்டமைப்பை மாற்ற முயற்சிக்க வேண்டும். அது தான் நிரந்தரத் தீர்வு. அது ஒரு நீண்ட பயணமாக இருக்குமென்றால், ஏராளமான தற்காப்புக் கலைகளைப் பெண்களுக்குப் பயிற்றுவிக்கலாம். தற்காப்பு சாதனங்களைப் பயன்படுத்த லாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு கயிறோ, சங்கிலியோ பெண் களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
3. கணவனின் நல்வாழ்விற்கும், நீண்ட ஆயுளுக்கும்
தாலி கணவனை நீண்ட நாள் வாழச் செய்யுமாம். இக்கருத்தும் பகுத்தறிவிற்கு முரணானது தான். எனினும், தன் மனைவி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று ஏன் ஒரு ஆண் நினைக்கக் கூடாது? எனவே, இதுவும்  பெண்களை ஆண்களின் நிரந்தர அடிமைகளாகச் சித்தரிக்க ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகும் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
4.திருமணமான பெண்கள் தாலி அணிய வேண்டும் என்பது நம் கலாச்சாரம்
சங்க இலக்கியங்களில் களவு மணம், காதல் மணம், உடன்போக்கு போன்றவை களே காணப்படுகின்றன. எனவே தமிழர் பண்பாட்டில், தாலி என்று ஒன்று இருந் திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பினால் நமக் குக் கிடைத்த அவலச் சின்னங்களில் ஒன்று தான் தாலியும்
பெண்கள் மீதான பல அடக்கு முறைகளுக்கு இச்சமூகம் கூறும் அபத்த மான காரணம் கலாச்சாரம் மகாராட்டி ரத்தில் புலேயின் துணைவியார் சாவித்ரி பெண் கல்வியை ஆதரித்த போதும், ராஜா ராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறுத லுக்கெதிராகக் குரல் கொடுத்த போதும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் தந்தை பெரியார் தேவதாசி முறையை எதிர்த்த போதும், கலாச்சாரம் என்னும் விலங்கு உடையத் தான் செய்தது. அதனை உடைத்தெறியாமல் எந்த முன்னேற்றமும் சாத்தியப்பட்டிருக்காது. ஏனெனில், கலாச் சாரம் என்ற பெயரில், பெண்களுக்கு ஆயிரம் பாடங்கள் இருக்கும் சமூகத்தில், ஆண்களுக்கென்று ஒரு பாடத்தைக் காண்பது கூட மிகவும் அரிதான ஒன்றே!! மேலே சுட்டிக் காட்டிய பாகுபாடு களோடு மட்டுமல்லாது, கணவன் இறந்த வுடன் தாலியை அறுத்து விதவை, அமங் கலி போன்ற இழிவான சொற்களைப் பெண்கள் மீது சுமத்தி, பொது நிகழ்வு களில் கூட பங்கேற்க அனுமதிக்காத இச்சமூகத்தில் விதவன் என்ற சொல்லோ அமங்கலன் என்ற சொல்லோ இல்லவே இல்லையே!  எனவே தாலி, பெண்களை அடிமைப்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற ஒன்றே ஒழிய வேறில்லை!
தாலி ஓர் அடிமைச் சின்னம்  பெரியாரின் சிந்தனைகள்
1925-இல் காங்கிரசிலிருந்து வெளி யேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தார் பெரியார். ஜாதி ஒழிப்பும், பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன. ஆணாதிக்கத்தை ஒழிக்க முனைந்த இயக்கமாதலால், பெண்களுக்கெதிராக பல ஒடுக்குமுறைகள் இருந்த போதிலும், எண்ணற்ற பெண்கள் அவ்வியக்கத்தில் இணைந்து தொண்டாற்றினர்.
அக்காலகட்டத்தில் பெண்ணுரிமைக் கென்று பெரியார் எழுப்பிய குரல்களில் சுயமரியாதைத் திருமணமும் ஒன்று. பெண்களை இழிபடுத்தும் தாலி, அலங் காரம் முதலானவற்றை ஒழித்து, சூத்திரர் களை இழிவுபடுத்தும் மந்திரங்களைச் சொல்லும் புரோகிதர்களை மறுத்து, ஆணும் பெண்ணும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக சுயமரி யாதைத் திருமண முறையை அறிமுகப் படுத்தினார் பெரியார். கணவன்  மனைவி என்ற சொற்கள் கூட எஜமான்  அடிமை என்ற தத்துவத்தைத் தான் நிலை நாட்டு கிறது என்பதனால், அவ்வடிமைச் சொற்களை ஒழித்து துணைவன்  துணைவி என்ற சம உரிமைச் சொற்களை அறிமுகப்படுத்தி, திருமணம் என்ற சொல்லையும் ஒழித்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்ற சொல்லை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பெரியார். அப்படிப்பட்ட பெண்ணுரிமைப் போராளி தாலியை ஏன் அடிமைச் சின்னம் என்கிறார்? பார்ப்போம்
மாட்டிற்குக் கயிறு, பெண்ணுக்குத் தாலி
கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை, தாலி என்னும் ஒரு கயிற் றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக கடிந்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத் துவது பேலவேதானாகும் பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து.  - [குடிஅரசு 11.05.1930]
தாலி ஒழிய வேண்டும்
கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரி மையை நிலைநாட்டுவதற்கும் பிறத்தி யான் அப்பெண்ணைக் காதலிக்கா திருப் பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன், ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்கா திருக்கும் பெருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா? அதற்காக கல்யாண காலத்தில்  ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியல்லாமல் பெண் களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததேர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.  -  [குடிஅரசு 11.05.1930]
தாலி = சுயமரியாதையற்ற தன்மை
பெண்கள் மனிதத்தன்மை அற்றதற் கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்த பாழும் தாலியே அறிகுறியாகும். புருசர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப் பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டி ருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட் டும். இல்லாவிட்டால் புருசர்கள் கழுத் திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.  [குடிஅரசு 13.07.1930]
மணமகனுக்கும் தாலி
கணவன் கழுத்திலும் தாலி கட்ட வேண்டும் என்று சொன்னதோடு, அவ் வண்ணமே சில திருமணங்களை நடத்தி யும் வைத்தார் பெரியார்.  மாநில சுயமரி யாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண் முகத்தின் மகளின் திருமணத்தில் மணப் பெண், மணமகனுக்குத் தாலி கட்டி, மரபுகளை உடைத்தெறிந்தார்
- [
குடியரசு 14.07.1935]
பெண்ணடிமையை உறுதி செய்யும் தாலி
பெண்ணடிமை என்பதை உறுதி செய்வது தான் தாலியாகும். எப்படி ஒரு அரையனா ஸ்டாம்பில் முத்திரை குத்தி னால் அதைத் திரும்பப் பயன்படுத்த முடி யாதோ, அப்படிப் போன்றது தான் பெண் களுக்குக் கட்டப்படும் தாலியுமாகும் [விடுதலை 27.01.1968]
நாய்க்கு லைசென்ஸ்! பெண்ணுக்குத் தாலி!
பெண்களுக்குத் தாலி கட்டுவது, நாய்களுக்கு முனிசிபாலிட்டி லைசென்ஸ் கட்டுவது போன்றது. [விடுதலை 30.07.1971]
தமிழகம். மக்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்றுவதற்காக மதங் களை எதிர்த்து, ஜாதிய, பாலின ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்னும் கோட் பாட்டை அறிமுகப்படுத்திய பெரியாரின் மண். அம்மண்ணில் சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான தாலி மறுப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. அது மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கக் காலத்திலியே ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவை மறுமணங்கள், பெற்ற குழந்தை களுடன் திருமணம், முதல் கணவரின் சம்மதத்துடன் திருமணம் என பல பண்பாட்டுப் புரட்சிகளை ஏற்படுத் தினார் பெரியார். ஏனெனில் சமதர்ம மக்களாக மாற்ற திருமணமும் ஒரு கருவியாக இருக்கும் என்று கருதினார்.
மதவாத, மனுதர்ம ஆட்சி
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த பின், மதவாத சக்திகளின் கை ஓங்கிற்று. மறைமுகமாக செயல்பட்டு வந்த இவை வெளிப்படையாக, மிகத் துணிச்சலாக, முழு வீச்சாக செயல் படத் தொடங்கியுள்ளன ; இந்தி யாவை இந்து நாடு என்று நிலைநாட்ட விழைகின்றன, இந்து மத அடிப் படைவாத சக்திகள். அதே போல, எழுத்துரிமைக்கெதிராகவும் பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றினர்.
தற்போது கருத்துரிமைக்கெதிராகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், புதிய தலைமுறை எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தாலி பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி வன்முறையில் ஈடுபட்டு அத்தொலைக்காட்சி நிறுவனத் தையும், ஊழியர்களையும் தாக்கியும், வெடிகுண்டு வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஏனென்றால் நடப்பது மனுதர்ம ஆட்சி! மனுதர்மத்தில் பெண்கள் கீழ்மக்கள், ஆண்களுக்கு அடங்கி பணிவிடை செய்ய வேண் டிய வேலைக்காரிகள். அவ்வடிமை இனம்  தாலி என்னும் மனுதர்மத்தில் வலியுறுத்தப்படும் திருமணச் சின்னம் எனக்கு ஓர் அடிமைச் சின்னம் தான்!!
என்று விவாதிப்பதை மனுதர்ம ஆட்சி யாளர்களின் ஆதரவு சக்திகளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அதன் வெளிப்பாடு தான் அவ்வன் முறை.
வரலாற்றுச் சிறப்புமிக்க விழா
தமிழகத்தில், பெரியார் மண்ணில், மதவாத சக்திகள் மனுதர்ம ஆட் சியை மீண்டும் கொண்டு வர முயல் வதை, பெரியார் இயக்கங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்காது என்பதை வலியுறுத்தும் வண்ணம், தாலி என்னும் அடிமைச் சின்னத்தை அகற்றுவதற்கென்றே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விழாவை திராவிடர் கழகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
எனவே, தாலி ஓர் அடிமைச் சின்னம், அது என்னை இழிபடுத்துகிறது, என்பதை உணர்ந்து, அவ்வடிமைத் தளையை அகற்றி, சுயமரியாதையோடு வாழ விரும்பும் பெண்கள் பெருமளவில், இவ் விழாவில் பங்கேற்க முன்வர வேண் டும். ஏனெனில்,
பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும்.நான் அடிமையாய்த் தான் இருப்பேன். நீ மாத்திரம் எனக்கு எஜமானாய் இருக்கக் கூடாது என்பதில் அர்த்தமேயில்லை.
- பெரியார் [குடிஅரசு 21.06.1931]
இப்படி ஒவ்வொரு அடிமை விலங்கையும் உடைத்தெறிய பெண்கள் முன்வந்தால் தான் பாலின சமத்துவம் இந்நூற்றாண்டிலாவது சாத்தியப்படும்.
 -விடுதலை,16.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக